போர்க் களத்தின் இறுதிக் காட்சி!
தமயந்தி
தீபாவளி முடிந்து சரியாக ஒரு வாரம்... 17-ம் தேதி... நான் ஒரு வேலைக்காக மதியம்

கிளம்பியபோது எதிர்வீட்டு, முன் வீட்டுக் காரர்கள் பரப்பரப்பாக இருந்தார்கள். ``வெளிய வாக்கா கிளம்புறீங்க… செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவுடுறாங்க… தண்ணி ஏறிடும்’’ என்று சொன்னார்கள். நான் அதை அத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.
எங்கள் வீட்டுக்குப் பின்புறம்தான் நூல் பிடித்தாற்போல் அடையாறு ஓடிக்கொண்டிருந்தது. நான் ஐந்து வருடங்களாக ஈக்காட்டுதாங்கலில்தான் வெவ்வேறு வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்தேன். ஆனாலும் அடையாற்றின் மீது தனி பிரேமமோ காதலோ ஒருபோதும் ஏற்பட்டது இல்லை. அதை வெகுகாலத்துக்கு `கூவம்’ என்றே நினைக்கவும் செய்திருக்கிறேன். ஓர் இயல்பான உரையாடலில் ஞாபகத்துக்கு வராத யாரோதான் அதை `அடையாறு’ எனச் சொன்னார்கள். மனதில் தாமிரபரணியின் தொப்புள்கொடி உலராததால் வேறு எந்த நீர்க்கிளையையும் நதி என ஏற்றுக்கொள்ள எனக்கு மனம் ஒப்பவில்லை.
நான் அவர்கள் சொன்னதை சரியாகக்கூட கவனிக்காமல் விறுவிறுவென நடந்தேன். அன்றைக்கு ஒரு கதை விவாதம். கிட்டத்தட்ட 5 மணிபோல செம்பரம்பாக்கம் ஏரியில் தணணீர் திறந்துவிட்டுவிட்டதாக நண்பர்கள் அழைத்துச் சொன்னார்கள். நான் வீட்டுக்கு போன் செய்தபோது, அங்கு மிகவும் பரபரப்பாக இருந்தது. ``எல்லா சாமானையும் மேல எடுத்து வைக்கணுமாம். தண்ணி வீட்டுக்குள்ள வந்துடுமாம்’’ என்றார்கள்.
என்னால் உடனே வீட்டுக்குப் போய்ச்சேர முடியவில்லை. வேளச்சேரியில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல் வர அன்று நான்கு மணி நேரமானது. அதற்குள் எங்கள் தெருமுனை வரை தண்ணீர். முதல் மாடியில் இருப்பவர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். நாங்கள் அருகில் இருக்கும் ஹோட்டலில் தங்கினோம். சரியாக இரண்டாவது நாள் தண்ணீர் இறங்கியது. வீடு கலைத்துப் போடப்பட்ட தாயக்கட்டை போலிருந்தது. கேஸ் சிலிண்டர், கதவைத் தள்ளி கழிப்பறையில் கிடந்தது. எல்லா மரச் சாமான்களும் தூக்கினால் பொடிப்பொடியாகப் போயின.

`இதுவும் கடந்து போகும்’ என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டைக் கழுவினோம். முதன்முறையாக அடையாற்றின் நீர் என் காலைத் தொட்டதை நான் உணர்ந்தது அப்போதுதான். நண்பர்களின் அன்பும் ஆதரவும் அடிப்படை வாழ்வுக்குத் தேவையான பொருட்களை மறுபடி வாங்க உதவின. மெள்ள மெள்ள பழைய மனநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம்.
டிசம்பர் 1-ம் தேதி மதியம். கடுமையான மழையில் ஒரு ஷூட்டிங்குக்குப் போயிருந்தேன். எங்களால் கத்திப்பாரா பக்கம் போக முடியவில்லை; பயங்கரமாகத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தி.நகர் வழியாக நாங்கள் போனபோது ஜி.என்.செட்டி ரோட்டில் நீந்தும் அளவுக்குத் தண்ணீர். அங்கு தண்ணீரில் நிற்கும் கார்களைத் தள்ளிவிட்டபடி சிலர் நின்றார்கள். நாங்கள் நின்ற இடத்தில் இருந்து பார்த்தபோது இங்கு நிற்கும் கார்களில் அவர்கள் மிக லாவகமாக கார் ஓனர்களுக்குத் தெரியாமல் சைலன்ஸரில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந் தார்கள். எங்கள் ஓட்டுநர் ``மழைல எப்படிலாம் பொழப்பைப் பாக்குறாங்க...’’ என்றார்.
டிசம்பர் 1-ம் தேதி மதியம். கடுமையான மழையில் ஒரு ஷூட்டிங்குக்குப் போயிருந்தேன். எங்களால் கத்திப்பாரா பக்கம் போக முடியவில்லை; பயங்கரமாகத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தி.நகர் வழியாக நாங்கள் போனபோது ஜி.என்.செட்டி ரோட்டில் நீந்தும் அளவுக்குத் தண்ணீர். அங்கு தண்ணீரில் நிற்கும் கார்களைத் தள்ளிவிட்டபடி சிலர் நின்றார்கள். நாங்கள் நின்ற இடத்தில் இருந்து பார்த்தபோது இங்கு நிற்கும் கார்களில் அவர்கள் மிக லாவகமாக கார் ஓனர்களுக்குத் தெரியாமல் சைலன்ஸரில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந் தார்கள். எங்கள் ஓட்டுநர் ``மழைல எப்படிலாம் பொழப்பைப் பாக்குறாங்க...’’ என்றார்.
மழை சிலருக்கு வியாபாரமாகிப் போனதை கூட வந்த நண்பர்கள் பேசினபடியே வர, நாங்கள் கடுமையான மழையிலும் எங்கள் விவாதத்தைத் தொடர்ந்தபடி இருந்தோம். மறுபடி போன். ``செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடுறாங்க. இந்தத் தடவை 30,000 கன அடியாம்.’’ அடிவயிறு ஒருமுறை புரண்டது. எப்படியாவது உடனடியாக வீடு போய்ச் சேர வேண்டும் எனப் பறந்தேன். நண்பரின் கார் தண்ணீரில் மூழ்கி, பிரேக் பிடிக்கவில்லை. அவசரமாக கார் சேவைக்கும் ஆட்டோவுக்கும் அழைத்தோம். எல்லோரும் வெளிப்படையாகவே சென்னையின் எந்தப் பகுதிக்கும் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் வர மறுத்தார்கள். மனம் துவண்டபோது உடன் வந்த நண்பர் ``நாம ஃபோர்ட் ஸ்டேஷன் போயிட்டு, அங்கேயிருந்து கோடம்பாக்கம் போய், வடபழனி போய், மெட்ரோல ஈக்காட்டுத்தாங்கல் போயிடலாம்’’ என்று சொன்னார்.
அது சரியெனப்பட, வழியில் வந்த நண்பர் காரை மறித்து, பறக்கும் ரயில் நிலையத்துக்கு கொண்டுபோய் விடச் சொல்லி கேட்டோம். தீப்பெட்டி அடுக்கினாற்போல் சாலையெங்கும் கார்கள். அடைமழையில் உள்ளே ஓடினோம். ஃபோர்ட் ஸ்டேஷனில், ரயிலில் ஏறினால் எங்கள் படபடப்பைச் சத்தமாகப் பேசியதில் எதிரே உள்ளவர்... ``ஃபோர்ட்லருந்து கோடம்பாக்கம் போற ரயில்லாம் போகலைனு சொன்னாங்க... எதுக்கும் விசாரிச்சிக்கோங்க…’’ என்றார். மனதில் வீடு குறித்த பதற்றம் அதிகமானது. போனில் வெகு குறைவான சார்ஜ் மட்டுமே மிச்சமிருந்தது. போன் போட்டபோது எதிர்முனையில் என்னைக் காட்டிலும் அதிகமான பதற்றம். ``எங்க இருக்கே? பத்திரமா வா... தண்ணி வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சிட்டுது.’’
அவ்வளவுதான். துவண்டுபோய் கோட்டூர்புரத்தில் இறங்கி, எதிர்முனையில் வந்த ரயிலைப் பிடித்து இந்திரா நகர் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மத்திய கைலாஷ் போய் பேருந்தில் போய்விடலாம் என்ற எண்ணம். ரயில் நிலையப் படியில் இறங்கும்போது மழை வலுத்தது. ஒற்றைக் குடையை மீறி உடலெங்கும் நனைந்தது. எதிரே கண்ணில் எதுவும் தெரியாத அளவுக்கு மழை பெய்ய, ஒரு மூதாட்டி சாலையைக் கடக்கும்போது என்னைக் கைப்பிடித்து இழுத்து ``பாத்து போம்மா’’ என்றார். நிமிஷத்தில் கண்ணை சிரமப்பட்டுப் பார்த்தால், 10 அடி ஆழத்துக்கு மத்திய கைலாஷில் நடுச்சாலையில் பள்ளம். சுற்றிவைக்கப்பட்டிருந்த கம்பி, மழையில் கீழே விழுந்துகிடந்தது. ``பாத்து போ தாயீ…’’ என்ற அவரது குரல் இப்போது இந்த வரியைத் தட்டச்சு செய்யும்போதும் காதில் ஒலிக்கிறது.
அங்கிருந்த கோயிலில் நின்றபோதுதான் மனிதர்களின் பெரும் பதற்றத்தை முதன்முதலாக உணர்ந்தேன். யார் யாரையோ தேடியும் வீட்டுக்குச் செல்லும் பதற்றத்தோடும் மனிதர்கள் எல்லாத் திசைகளிலும் அந்தப் பெரும் மழையிலும் அலைந்தபடி இருந்தார்கள். மழையில் நிற்க முடியாமல் தி.நகர் பேருந்தில் போய் ஏறினோம். மெல்ல ஓர் எறும்பு ஊர்வதுபோல அது நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ராஜ்பவன் பக்கம் படகில் போவதுபோல பேருந்து ஆட, பக்கத்து ஸீட் பையன் ``கவர்னர் மாளிகைல தண்ணி கட்டக் கூடாதுன்னு ரோட்ல விட்டிருக்காங்கக்கா’’ என்றான்.
திடீரென ஹாஸ்டல்கள் மூடியதில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள் கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் போகின்றனவா எனப் பரிதவித்தார்கள். முன்னால் நின்ற கோயம்பேடு பேருந்தை நடந்து போயே பிடித்தோம். இரண்டு மணி நேரத்தில் அரை கிலோ மீட்டர் தாண்டினோம். முன் ஸீட்டில் இருந்தவர் தன்னிடமிருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொடுக்க, இதில் எதிலுமே சம்பந்தப்படாத மாதிரி இரு மாணவர்கள் காதல் லீலையில் இருந்தார்கள். கத்திப்பாரா பிரிட்ஜ் டிராஃபிக்கால் தி.நகர் பக்கம் பேருந்தைத் திருப்பி விட்டனர். இரவு 11 மணிக்கு தி.நகர், கோடம்பாக்கம் போய் வடபழனியில் எங்களை பேருந்து இறக்கிவிட்டது. எல்லாப் பெண்களின் செல்போனும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

வடபழனியில் மெட்ரோ பிடித்து, நான் ஈக்காட்டுத் தாங்கலில் இறங்கியபோது 12 மணி இருக்கும். அந்தப் படிகளில் இறங்க இறங்க மனமெங்கும் ஒரு பயம் கவ்வியது. வீடு என்னவாகியிருக்கும்? இறங்கினால் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ஸ்டேஷன் வாசலில் இடுப்பளவு தண்ணீர். பக்கத்தில் இருந்த ஹோட்டலில் ஒரே ஓர் அறை இருந்தது. அதுவும் கீழ்த்தளம். தரையில் கெண்டைக்கால் அளவுக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டில் நீர் வேகமாகப் புகுந்த சேதி தொலைபேசியில் வந்தது. சில நண்பர்கள் `வீட்டுக்கு வாங்க...’ என அழைத்த அன்பு, உயிர் வாழவைத்தது.
காலை விடிந்து மேல் தளத்தில் அறை கேட்டோம்.
`10 மணிவாக்கில் தருகிறோம்’ என்றார். வீட்டைப் போய் பார்த்துவிட்டு ஒரு காபி குடித்துவிட்டு வரலாம் என நினைத்தோம். எங்களால் மெயின்ரோட்டில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தைத் தாண்டிப் போகவே முடியவில்லை. `போகாதீங்க… சாமான்தானே... போகட்டும்…’ என்றார்கள். `அடையாறு பாலத்தின் மீது மிக ஆக்ரோஷமாக நீர் ஓடுகிறது’ என்றார்கள். ஈக்காட்டுத்தாங்கலுக்கும் மற்ற சென்னைப் பகுதிகளுக்குமான தொடர்பு முற்றிலுமாக அறுந்திருந்தது. உடனடியாக அங்கிருந்து வெளியேற நினைத்தோம். மாலை வரை பார்த்துவிட்டுப் போகலாம் என்று தோன்ற காபி குடித்துவிட்டு ஹோட்டலுக்குள் போன பத்தாவது நிமிடம் லாட்ஜுக்கு முன் இடுப்பளவு இருந்த நீர் பெருகி, சாலை முழுதும் நிறைந்து ஓடியது. அப்படியொரு வேகத்தில் ஆக்ரோஷமாக ஒரு நதி வெவ்வேறு கிளைகளாக வெடித்துச் சிதறுவதை 1992-ம் ஆண்டில் தாமிரபரணி வெள்ளத்தில்கூட நான் பார்த்தது இல்லை.
கிளம்பலாம் என உடைகளை எடுத்து வைப்பதற்குள் ஹோட்டல் கதவைச் சாத்தி விட்டார்கள். அது கண்ணாடிக் கதவு. உள்ளே தண்ணீர் பாய்ந்துவிடக் கூடாது என்பதால் நிர்வாகரீதியாகக் கதவைத் திறந்துவிட முடியாது என்ற தங்கள் முடிவில் மாற்றம் இல்லை என்று ஹோட்டல்காரர்கள் எங்களை வெளியே விட மறுத்தார்கள். மேல்தளத்தில் அறை போட்டுக் கொடுத்தார்கள். நாங்கள் மேலே தாழ்வார ஜன்னல் வழியாக உலகைப் பார்க்கத் தொடங்கின நிமிடம் நன்றாக நினைவுக்கு இருக்கிறது. ஃபிரிட்ஜ், ஸ்கூட்டர், மான் எல்லாமே தண்ணீரில் மிதந்தன.
எங்களைப் போன்ற தமிழ்நாட்டு சென்னை அகதிகள், தங்கள் கைக்குழந்தைகளோடு அந்த ஹோட்டலில் இருந்தார்கள். பயங்கரமாகப் பசிக்க ஆரம்பித்தது. கீழே ரிசப்ஷனில் ஏதோ வெடித்துச் சிதறும் ஓசை. நீர் தனது மாயக்கரங்களால் நிர்வாக முடிவை மதிக்காமல் கண்ணாடிக் கதவைச் சிதறடித்தது.
ஒருவர் மட்டும் எல்லோருக்குமான பசியை தணிக்க விரும்பி, அந்த கண்ணாடிச் சிதறல்களை மீறி கழுத்தளவு நீரில் போய் உணவு வாங்கி வந்தார். `நான்கு பஃப்ஸ்... 250 ரூபாய்’ என எங்களிடம் கொடுத்தார். நாங்கள் மூன்று பேரும் ஆளுக்கொன்று சாப்பிட, ஒன்று மீதம் இருந்தது. இரவுக்குள் தண்ணீர் இறங்கிவிடுமா என நண்பர்களிடம் கேட்கலாம் என நினைத்து போனை எடுத்தால் டவர் இல்லை.
ஒருவர் மட்டும் எல்லோருக்குமான பசியை தணிக்க விரும்பி, அந்த கண்ணாடிச் சிதறல்களை மீறி கழுத்தளவு நீரில் போய் உணவு வாங்கி வந்தார். `நான்கு பஃப்ஸ்... 250 ரூபாய்’ என எங்களிடம் கொடுத்தார். நாங்கள் மூன்று பேரும் ஆளுக்கொன்று சாப்பிட, ஒன்று மீதம் இருந்தது. இரவுக்குள் தண்ணீர் இறங்கிவிடுமா என நண்பர்களிடம் கேட்கலாம் என நினைத்து போனை எடுத்தால் டவர் இல்லை.
ஜெனரேட்டர் டீசல் நீ்ரில் கலந்து கரன்ட் இல்லை. தொலைக்காட்சி இல்லை. இப்போது தொலைத்தொடர்பு வசதியும் துண்டிக்கப்பட்டு விட்டது என மனம் எச்சரித்தது. கீழே சாலையைப் பார்த்தேன். இறங்க முடியாத அளவுக்கான வேகத்துடன் நீர் சுழன்றடித்தது. சிலர் எதிர்ப்பக்கத் தெருவில் வெள்ளக் காட்சிகளோடு செல்ஃபி எடுத்தார்கள். படகுகள் வந்தால் தப்பித்துவிடலாம் என எண்ணினோம். படகுகள் வந்தபோது கூக்குரலிட்டோம். அவர்கள் எதிர்முனைக்கு வந்துவிடுமாறு சைகை காட்டினார்கள். ஆழமாக ஓடும் எங்கள் பகுதிக்கு வர அவர்கள் யோசித்தார்கள்.
காத்திருக்கலாம். `அம்மா நிச்சயம் காலைக்குள் ஏற்பாடு செய்துவிடுவார்’ என நம்பினார் எங்களுடன் இருந்த கட்சிக்காரர்.

இருள் சீக்கிரமே பரவத் தொடங்கியது. மழை விட்டபாடில்லை. சீக்கிரமே தூங்கிப்போனோம். பசியில் அரைத்தூக்கம். சுற்றிலும் பாம்பும் தவளையும் போரிட்டுக்கொண்டதுபோல் சத்தங்கள். எழுந்து எழுந்து ஜன்னல் வழியே பார்க்கிறேன். நீர் ஏறிக்கொண்டே இருக்கிறது. மரணம் நீரில் நிகழக் கூடாதெனவும், மழைநாளில் நிகழக் கூடாதெனவும் நான் எழுதிய கதை ஒன்று நினைவுக்கு வந்தது.
எதிர் அறைக்காரர் ``மனைவிக்கு காய்ச்சல்... ஏதாச்சும் மாத்திரை இருக்குமா?’’ என்று அறை அறையாக இறைஞ்சிக்கொண்டிருந்தார். நான் என் பையைப் பார்த்தேன். மாற்றுக்கு ஒரே ஒரு குர்த்தா. இதுதான் வாழ்க்கையா? நிமிடத்தில் மாறி நிலையற்றதாக அடையாளப்படுத்துகிறதா இயற்கை?
ஒரு வினாடியில் எல்லாம் இழந்த ஒரு அசூயையான வெறுமை, மழையை, நதியை, இருளைக் காட்டிலும் என்னைப் பீடித்தது. ஜன்னலோரமாக நின்று பார்த்தபோது கண்ணீர் வடிந்து கன்னம் ஈரமாகியது. விடிந்தால் வெளிச்சம் வருமா என்று சூரியனுக்காகக் காத்திருந்தேன். காலையில் மழை விட்டிருந்தது. தண்ணீர் அரை அடி குறைந்திருந்தது. தலைக்கு மேல் ஹெலிகாப்டர் பறந்தது. கைகளை வேகமாக ஆட்டினோம். எந்த உணவுப் பொட்டலங் களும் எங்கள் மேல் வீசப்பட வில்லை. ஓர் அசாத்திய தீர்மானத்துடன் கீழே இறங்கினோம். மக்கள் மூட்டைகளை சுமந்தபடி அகதி தேசத்தின் சக்ரவர்த்திகள் போல நடந்து போனார்கள். தண்ணீரைக் கிழித்து பயத்துடன் நடந்தேன். எங்கள் தெருவில் இரண்டாவது தளம் வரை நீர் புகுந்துவிட்டதாகவும் நீரில் இறங்கிய ஒரு கணவன் மனைவி இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அசோக் நகரில் வயதான வரின் பிணம் ஒதுங்கிக்கிடப்பதாகச் சொன்னார்கள். தலை சுற்றியது. ஒரு காபி வாங்க, ஒரு மணி நேர க்யூவில் காத்திருக்க வேண்டியிருந்தது.
இங்கிருந்து வெளியேறும் ஒரே வழியாக மெட்ரோ தலைக்கு மேல் போய்க் கொண்டிருந்தது. அதில் பயணச்சீட்டு வாங்கவே ஒரு மணி நேரமானது. ஸ்டேஷன் வாசலில் பர்கர், சாண்ட்விச் சகலமும் சற்றே அதிக விலையில் விற்றார்கள். மெட்ரோ ரயிலில் ஏற மனிதர்கள் சந்தையில் விற்கப்படும் அகதிகள்போல போட்டி போட்டார்கள். ஒரே காலில் நின்று வடபழனி வந்து சேர்ந்தோம். கீழே கால் வைத்ததும் சிக்னல் வந்தது. தொடர்ந்து அழைப்புகள்... குறுந்தகவல்கள்... அன்றிரவு இரண்டு நாட்கள் கழித்துச் சாப்பிட்டோம். முதல் வாயில் கண்ணில் கண்ணீர் வந்தது.
இங்கிருந்து வெளியேறும் ஒரே வழியாக மெட்ரோ தலைக்கு மேல் போய்க் கொண்டிருந்தது. அதில் பயணச்சீட்டு வாங்கவே ஒரு மணி நேரமானது. ஸ்டேஷன் வாசலில் பர்கர், சாண்ட்விச் சகலமும் சற்றே அதிக விலையில் விற்றார்கள். மெட்ரோ ரயிலில் ஏற மனிதர்கள் சந்தையில் விற்கப்படும் அகதிகள்போல போட்டி போட்டார்கள். ஒரே காலில் நின்று வடபழனி வந்து சேர்ந்தோம். கீழே கால் வைத்ததும் சிக்னல் வந்தது. தொடர்ந்து அழைப்புகள்... குறுந்தகவல்கள்... அன்றிரவு இரண்டு நாட்கள் கழித்துச் சாப்பிட்டோம். முதல் வாயில் கண்ணில் கண்ணீர் வந்தது.
அடுத்த நாள் தண்ணீர் வடிய, காசி தியேட்டர் பிரிட்ஜுக்கு கீழே அடையாறு அடங்கியிருந்தது... ஆக்ரோஷத்துடன். ராணுவம் வந்திருப்பதாகவும் அவர்கள்தான் பலரை படகுகளில் மீட்டதாகவும் சொன்னார்கள். ஜெயா தொலைக்காட்சி நிறுவன சுற்றுச்சுவர் விழாமல் இருக்க, பத்தாயிரத்துக்கும் மேல் மணல் மூட்டைகளைப் போட்டு பாதுகாப்பு அளித்திருந்தார்கள். அடுத்த தெருவிலேயே ஒரு பிணம் வெகு நேரம் எடுக்கப்படாமல் இருந்தது.
ஒரு போர்க்களத்தின் இறுதிக்காட்சியைப் போலவே எங்கள் இடம் இருந்தது. கார்கள் எங்கெங்கெல்லாமோ மோதிக்கிடந்தன. மரங்கள்... இறந்த மாடுகள்... மரணச் செய்திகள்... வீட்டை நோக்கி ஓடினேன். கதவை இடித்துத் திறந்தபோது இதயம் நின்று ஸ்தம்பித்தது. என் வீட்டுக்குள் எதுவுமே இல்லை. குடலைப் புரட்டும் ஒரு மயான வாடை மட்டுமே.
என்னைக் கடந்த ஒரு ராணுவ வீரர் என் கண்ணீரைப் பார்த்து ஆங்கிலத்தில் சொன்னார்... ``சொன்ன மாதிரி அது 35,000 கன அடி தண்ணீர் இல்லம்மா, 85,000-க்கும் மேல... செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடுற அதிகாரம் இன்ஜீனியர் களிடம் இல்லை. அது அரசியல்வாதிகள்கிட்ட இருக்கு. வெள்ளம்கிறது ஒரு அரசியல்... புரியுதா மகளே... முதல்லேயே ராணுவத்தை இறக்கியிருந்தா இத்தனை உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது.’’
ஐந்து தெரு தள்ளி வசிக்கும் அமைச்சர் வளர்மதி பதவியேற்கும்போது விட்ட ஒரு சொட்டுக் கண்ணீருடன்கூட தன் பகுதி மக்களுக்குத் தரிசனம் தரவில்லை என அடுத்த வீட்டுப் பையன் ஆதங்கத்தோடு போன வாரம் வாங்கிய ட்ரெட் மில்லைத் தூரப் போட்டார். பெட்ரோல் க்யூவை சரிசெய்யவோ, இப்போது தேவைக்கு இலவசங் களை அறிவிக்கவோ இல்லை என்றும் இலவசப் பேருந்துப் பயணம்கூட நீதிமன்ற உத்தரவு வழியேதான் செயல்படுத்தப்பட வேண்டியிருக்கிறது என்றும் புலம்பல்களோடு மனிதர்கள் அலைந்தார்கள்.
அரசின் கருணைப் பார்வை எள்ளளவும் விழாத பிண்டங்களாய், சமூக ஆர்வலர்களின் அதீத அன்பினால் உயிர் வாழும் கருவிகளாய், இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் பணமாய் இந்த இழப்பீட்டுத் தொகை முகமூடி போட்டு உலா வரும்போது அதை எதிர்பார்ப்புகளோடு வாங்கி விடக்கூடிய எளியோராக இந்த நிமிடம் உலாவி வருகிறார்கள்.
நிர்கதியாய் நண்பர்கள் வசிப்பி்டங்களில் தஞ்சம் புகுந்துள்ளேன் நான். அடையாறு தன் கரைக்குள் தஞ்சமடைந்துவிட்டது.
No comments:
Post a Comment