Saturday, January 30, 2016

ட்விட்டருக்கு புதுசா?

கோவை நண்பன் சிவா எழுதியது, பச்சபுள்ள என்ன பெயரில் ட்விட்டரில் இயங்கும் அவன் பிறரையும் தன்னைத்தானேயும் கலாய்ப்பதில் பெயர் பெற்றவன். 
அவன் புதியவர்களுக்காக எழுதிய ஒரு சுவாரஸ்யமான உபயோகமுள்ள ட்வீட் லாங்கர்   
நீயே புதுசுதானடா அப்புறம் நீ என்ன மத்தவங்களுக்கு சொல்றதுன்னெ நீங்க நெனைக்கலாம்,எப்பிடி ஒரு பொண்ணு மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியுமோ அதுமாறி புதுமுகங்களுக்கு வர்ர சந்தேகங்கள் இன்னொரு புதுமுகத்(நானே)துக்குத் தான் தெரியும். 


1.இங்க அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தைகள்..

சந்து - நீங்க நிக்குற எடம், 
டிஎல்- டைம்லைன் ட்வீட்ஸ் எல்லாம் தெரியுற எடம்,
பேவ் - ஸ்டார் பட்டன அமுக்கி நீங்க அப்புறமா பாக்குறதுக்காக எடுத்து வைக்கிறது
RT - ரீட்வீட், 
மென்சன் - ஒருத்தர் பேர போட்டு ட்வீட் போடுறது, 
டேக்- # போட்டு ட்வீட் போடுறது, கான்வோ - தொடர்ந்து போடப்படும் ட்வீட்,பதில் ட்வீட் அரட்டை, 
ட்ரெயின் - நெறையா பேர் இருக்குற கான்வோ, 
ரிப் - ***எனக்கே தெரியாது..அவ்வ்

2.மொதல்ல ஏன் நம்ம பாலோ பண்ணா பாலோபேக் பண்ணமாட்டேங்குறாங்கன்ற்துதான் உங்க முதல் வருத்தம்,ஏன் கோவமாக் கூட இருக்கும். அது ஏன்னு கேட்டா சொல்லுவாங்க எல்லாரையும் பாலோபேக் பண்ணா அவங்க டைம்லைன் குப்ப மாதிரி தெரியும், ட்வீட் யோசிக்க முடியாதுன்னு 

3.ஆனா உண்மையென்னன்னா எல்லாம் ஒரு மெதப்புதான், திமிருன்னுகூட வெச்சிக்கலாம், இவ்ளோ பேசுறியே நீ எல்லாரையும் பாலோபேக் பண்ணலியேன்னு கேட்டா மீண்டும் பாயிண்ட் நம்பர் 2 ஐ படிக்கவும்...

4. ஒருத்தர பாலோபேக் பண்ண வெய்க்குறத விட பாலோ மட்டும்பண்றதுதான் உங்களுக்கு நல்லது. எப்ப நீங்க வந்தாலும் அவிங்களோட நல்ல ட்வீட்ட ரசிக்கலாம், RT பண்ணி ரசிக்க வைக்கலாம் & அவங்க மொக்கையான ட்வீட் பார்த்துட்டு ஒரண்டை இழுக்கலாம், நீங்க போடுற மொக்கைத்தனமான ட்வீட் அவிங்களுக்கு தெரியாது. சோ எப்பிடிபார்த்தாலும் நீங்க safe தான்.

5. அப்புறம் யாரா இருந்தாலும் ஒரண்ட இழுக்கனும்னு முடிவு பண்ணிட்டா நாகரீகமா கமெண்ட் சொல்லனும், Bad words யூஸ் பண்ணக் கூடாது. சிரிக்கும்படியா கமெண்ட் இருந்தா இன்னும் சிறப்பு

நாலஞ்சி வாட்டி மென்சன் பண்ணியும் ரிப்ளை பண்ணலியா, தண்ணி தெளிச்சு உட்ருங்க இல்லன்னா அன்பாலோ பண்ணிடுங்க,மேக் இட் சிம்பிள்.

6.அப்புறம் டிஎல்ல நடக்குற சண்டையப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா ஒரு கான்வோல இருக்கவங்கள வரிசையா பாலோ பண்ணுங்க, அப்பதான் அடுத்தவாட்டி புரியும். இல்லன்னா எவன் எவன அடிக்குறான்னு தெரியாமலேயே மண்டைய பிச்சிக்க வேண்டியிருக்கும்.

7.இன்னொரு முக்கியமான விசயம் உங்க ட்விட்டர் வருகையின் நோக்கம் என்னன்னு பார்த்துட்டு அதுக்கு ஏத்தாமாறி ஆளுங்கள பாலோவனும். சீரியஸ், காமெடி டைம்பாஸ், 18+ ட்வீட்ஸ் ன்னு நெறையா வெரைட்டில ட்விட்டர்ஸ் இருக்காங்க. ஒருத்தர் ட்வீட் உங்க டேஸ்ட்டுக்கு மேட்சாவுதோ அவங்க ப்ரொபைல் போயி அவங்க பாலோ பண்றவங்கள பூரா பேரையும் பாலோ பண்ணி உங்க டிஎல் பூரா உங்களுக்கு புடிச்சா மாத்தி வெச்சுக்கங்க. (நான் இங்க ஊரத் திருத்தனும், நாட்ட திருத்தனும்னெல்லாம்ட்விட்டர் வரல்ல, பொழுது போவனும் நாலுவிசயங்கள தெரிஞ்சுக்கனும்.நாலுபேர சிரிக்க வைக்கனும் அவ்ளோதான்)

8. அப்புறம் இன்னொன்னு நடிகர்களுக்காக சண்டை போடுறாங்களே ச்சை அப்டினு சொல்லி அவங்கள பாலோபண்ணாம உட்டீங்கன்னா மத்தநேரத்துல வர்ர அவங்க நல்ல ட்வீட்ஸெல்லாம் படிக்கமுடியாம போயிரும். நடுநிலையா இருந்து அவங்க போடுற சண்டைகள ரசிங்க. முடிஞ்சா RT பண்ணி இன்னும் வெறியேத்துங்க காசா பணமா?

09. முக்கியமான ஒன்னு பேவ் பண்றது- மூஞ்சிபுக் ஞாபகத்துல எல்லாத்தையும் பேவ் பண்ணாதீங்க அந்த ஊர்லதான் அதுக்குபேர் பஸ்ஸு இங்க குப்பலாரிதான், செம காண்ட்டாயிடுவாங்க. புடிச்சா RT பண்ணுங்க, புடிக்கலன்னா போயிட்டே இருங்க .

10.ட்வீட் எப்பிடி போடனும்னு சொல்லவே இல்லல்ல..அது தெரிஞ்சா சொல்லிர மாட்டனா??
சும்மா உங்களசுத்தி நடக்குறத எல்லாம் போடுங்க உங்க வீட்ல காபி கேவலமா இருந்திச்சி, காக்கா கத்திட்டே பறந்து போச்சி, நாயர் கடைல வடை நல்லாவே இல்ல அப்டி இப்டி பொலம்புங்க. எவன் கேப்பான்றேன்...நம் ட்விட்டர் நம் உரிமை..

####இதெல்லாம் தாண்டியும் ட்விட்டர் புடிக்கல அப்டின்னு சொன்னா உங்களுக்காகவே மூஞ்சிபுக்(பேஸ்புக்) காத்துகெடக்கு. போயி போட்டொவா அப்லோடி கொல்லுங்க. இங்க வந்து போட்டோவா போட்டு சாவடிக்காதீங்க..நன்றி வணக்கம்.


அவனை ட்விட்டரில் பின் தொடர 
பச்சபுள்ள

Monday, January 25, 2016

தமிழக அரசின் 12ம் வகுப்புவரை மற்றும் CBSC பாட புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய

தமிழக அரசின் 12ம் வகுப்பு வரையான பள்ளி பாடப் புத்தகங்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழுள்ள லிங்க்கை click செய்யுங்கள்

Textbooks published by the Department of School Education  
தமிழக அரசின் கல்வி இலவச download இணையம்

CBSCக்கான ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து விதமான பாட புத்தகங்களையும் இணையம் வழியாக இலவசமாகவே இனி download செய்து கொள்ள இயலும், கீழ் காணும் இணைய தளம் இப்புத்தகங்களை வகுப்பு மற்றும் புத்தக , சாப்ட்டர்  வாரியாக பிரித்து வைத்திருக்கிறது. ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகளில் இவை கிடைக்கும்.  குறித்து வைத்து கொள்ளுங்கள் நிச்சம் உபயோகப் படும்,    

The service covers textbooks of all subjects published by NCERT for classes I to XII in Hindi, English and Urdu. The Entire book or individual chapters can be downloaded

இலவச புத்தக download வலைதளம்
இதை click செய்தால் அந்த வலைதளதிருக்கு செல்லலாம்உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?

04.12.1979-ல் பிறந்த சமஸ் எழுதிய மிக உபயோகமான கட்டுரை இது. இவரின் பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறார். தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது தி இந்துதமிழில் எழுதுகிறார், நல்ல நடைமொழி கொண்ட சமஸ் இதை நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார் கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை.

* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.

* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.

* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

      டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!
  சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
     
முக்கியமான 5 கட்டளைகள்:

      *மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம்உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள்.

      * வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 
     
 * பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி  இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.

      * சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.

      * குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ‘‘பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்’’ என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!

‘‘அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா...
‘‘ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!’’

‘‘ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?”
‘‘பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.’’

‘‘பலாத்காரம்னா என்னப்பா?”
‘‘கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.’’

‘‘மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு  வாங்குறீங்க?”
‘‘உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.’’

‘‘குழந்தை எப்படிப்பா பிறக்குது?”
‘‘அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.’’

அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்!

குட் டச் / பேட் டச்
     
     குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள்.


காதல்

      குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ‘‘வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்’’ என்பதுபோலப் பேசுங்கள்.

சுய இன்பம்

      ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.

ஆப்த வாக்கியம்

      ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ‘‘நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை’’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்!
டாக்டர் விகடன் ஜன.2013


(சமூக நலன் கருதி ஒரு வேண்டுகோள்: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து இதை உங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளுங்கள்...)

ஷோபிகா

எனது பக்கத்துக்கு வீட்டில் இருந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன் கடந்த 16ம் தேதி பொங்கலன்று குத்தி கொலை செய்யப்பட்டான், அவனுக்கு வயது 24, கொலை செய்த இருவரும் அவன் நண்பர்கள் அவர்களுக்கும் வயது 23, 24. பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நான்கு நாட்களுக்கு பரபரப்பான செய்தியை விற்று விட்டு இன்று அதை மறந்து போனது 

நிற்க,

அவை மறந்து போனது, அவன் காதல் திருமணம் செய்தவன் என்பதும், அவன் மனைவி ஷோபிகாவிற்க்கு அப்பா அம்மா இல்லை என்பதும், 45 நாட்களே ஆன ஒரு கைகுழந்தை இருக்கிறது என்பதும்

அனாதையாக வாழ்ந்த அவள், விக்கி எனும் நண்பன் காதலனாக மாறி, அவன்  மூலம் உறவுகளை பெற்றதும், அந்த உறவுகளும் அவளை ஏற்றுகொண்டதும், இதுவரை இல்லாமல் வாழ்வில் வசந்தம் வீச தொடங்கிய காலத்தில் திடீரென பொங்கல் விளையாட்டில் வந்த ஒரு சிறிய கோபமும், சிறிய சண்டையும் விக்கியின் உயிரை பணயம் வாங்கி இருக்க, மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே நிற்கிறாள், ஒரு கை குழந்தையுடன்       

இதுவரை நான் யாரையும் தப்பாக பேசியதுமில்லை, யாரையும் கெட்டு போக வேண்டுமென மனதாலும் நினைத்ததில்லை என்றும் எனக்கு ஏன் இப்படி நடந்து தொலைகிறது என்றும் கதறிய ஷோபிகாவை என்ன சொல்லி ஆறுதல் படுத்துவதேன்றே தெரியவில்லை.

ஷோபிகா இப்போது அவர்கள் மாமனார் வீட்டிலேயே தங்கி உள்ளார், அவர்களும் கடைசி வரை பார்த்துக்கொள்ளும் மனம் படைத்தவர்கள் எனினும் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் ஷோபிகாவிற்க்கும், அந்த பிஞ்சு குழந்தைக்கும் ஏன் படைப்பு இப்படி ஒரு தண்டனை வழங்க வேண்டும் என்பது புரியவில்லை 

படிப்பை தொடர விரும்பும் அவளுக்கு எல்லா வித உதவியும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம், சிறிய தேவைகளை எங்களால் முடிந்த அளவு நிறைவேற்றுகிறோம் என்றும், உனக்கு ஒரு அக்கா நான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே என்றும் கூறி எனது மனைவி ஷோபிகாவை தேற்றி இருக்கிறாள் 
அவள் இனி செய்ய வேண்டியவைகளையும் கடக்க வேண்டிய தூரங்களையும் ஞாபக படுத்தி இருக்கிறாள், 

ஏற்கனவே இதே போன்ற ஒரு சூழ்நிலையில் பெரும் துயரை கடந்து, இரண்டு குழந்தைகளை வளர்த்து அவர்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்து, அவர்களை  வெற்றிபெற செய்த எனக்கு அம்மா முறையாக வேண்டிய சொந்தம் சென்னையில் வசிக்கிறார்கள், நான் ஒருமுறை அவர்களை அழைத்து வந்து பேச வைக்கலாம் என்றிருக்கிறேன்   

எல்லாவித கவலைகளையும், துயரங்களையும் ஆற்ற, காலத்தால் மட்டுமே இயலும்,  ஷோபிகாவும் அவள் குழந்தைக்குமான பிரார்த்தனைகள் எனது குடும்பத்தில் எப்போதும் உண்டு, மேலும் என் உடன் பிறவா தங்கைக்கு ஏதாவது செய்ய யோசிக்க வேண்டுமா என்ன? 

Sunday, January 24, 2016

கஜினி என்னும் கொடூரன்

சோமநாதர் கோவிலில் அவன் செய்த காரியம் அவனை எவ்வளவு கொடூரமான கீழ்தரம் மிக்க அரக்கன் என்பதை சொல்லும்

குழந்தை தேர்வில் தோற்றால் வரலாறு தெரியாதவர்களால் உதாரணமாக சொல்லப்படும் கஜினி முகமது இந்தியாவை நோக்கி 17 முறை போரிட்டு தோற்ற காமெடியன் அல்ல, இந்திய வளத்தை திருடி சென்ற,வெறி பிடித்த கொடூரமான கொலைகாரன், அவன் ஒருமுறை கூட அதில் தோற்றதில்லை, ஒவ்வொரு முறையும் வெற்றியே தான்.

சரியாக கிபி 1000ல் ஆப்கானிஸ்தானின் கஜினி எனும் ஊரிலிருந்து வந்த முகமது எனும் கொள்ளைக்காரன், கட்டட கலை, கோவில், சிற்பங்கள், இயற்கை வளங்கள், கலாசாரம், பொன், பொருட்கள்  நிரம்பிய பெரும் பணக்கார நாடான இந்தியாவை, வெறும் பாலைவனத்தையும், மண்ணையும் கொண்ட மற்ற நாட்டு மன்னர்கள் போல் அவனும் படையெடுத்து வந்ததில் ஆச்சர்யமில்லை
 மிக பெரும் குதிரை படையும், கோர தாண்டவமாடும் படை வீரர்களும், மிகுந்த புத்திசாலித்தனமாக திட்டமிடும் மந்திரிகளும் கஜினி முகமதுவின் பெரும் பலம்


குஜராத்தில் கடற்கரை ஓரம் இருந்த சிவன் கோவில் மிகுந்த புகழ் பெற்ற ஒன்று.  அப்போதே அதன் கர்ப்ப கிரகத்தில் சிவன் அந்தரத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் அமர்ந்திருக்கும்படி கட்டட வல்லுனர்கள் அமைத்திருந்தார்கள், அந்த கோவிலுக்குள் சுமார் பத்தாயிரம் கிராமங்கள் அடங்கும் என்றால் அதன் செல்வ செழிப்பு பற்றியும் புகழ் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

மன்னர்களும், செல்வர்களும், பக்தர்களும் அளித்த செல்வம் சிறு மலையாகவே குவிந்து இருக்கும், ஆயிரக்கணக்கான தங்க விக்ரகங்களில் அணிய  தங்கம், வைரம், வைடூரியம்கள் என அது ஒரு ஆயிரம் திருப்பதிக்கு சமமாக இருக்கும்

அது தவிர தங்க காசுகள் குவித்து வைக்கபட்டிருக்கும், அர்ச்சகர்கள் மட்டும் ஆயிரம் பேர் இருப்பார்கள், விசேஷ காலங்களில் லட்ச கணக்கில் பக்தர்கள் கடலில் நீராடி கோவில் விழாவில் கலந்து கொள்வார்கள்

அப்படிப்பட்ட கோவிலுக்குள் தான் தன் வெறித்தனமான படை வீரர்களுடன் புகுந்தான் கஜினி, அது ஒரு எளிதான பெரிய கொள்ளையாக இருக்கும் என்ற நினைப்பிலேயே  உள் நுழைந்தான், ஆனால் ஆயுதங்கள் ஏதுமில்லாத ஆயிரக்கணக்கான மக்கள் அவனை தடுத்து நிறுத்தினர், இதை எதிர் பார்க்காத அவன் அனைவரையும் வெட்டி வீழ்த்துமாறு ஆணையிட்டான்

கோவிலையும் இறைவனையும் பொருட்களையும் காக்க அர்ச்சர்கர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என அவர்கள் வெட்ட வெட்ட மேலும் மேலும் கதறியபடி, அழுதுகொண்டு தடுக்க வந்து கொண்டே இருந்ததுதான் அவனுக்கு பெரும் அதிர்ச்சி

கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் மொத்தமாக அவன் கொன்று வீழ்த்தியது ஐம்பதாயிரம் பேரை,  அதன் பின் அவன் அந்த கோவிலையும் இடித்து தள்ளி விட்டு அதனை செல்வங்களையும் அள்ளி சென்றான் என்பதை வரலாற்றின் கொடுமையான செயலில் முதன்மையானது என வருத்தம் கொண்டு எழுதி இருப்பவர் அரபு நாட்டை சேர்ந்த தோல் பொருள் ஆராய்ச்சியாளர் அல்காஸ்வினி

  

Saturday, January 23, 2016

படிப்பதற்கு பள்ளி ஒன்றுதான் வழியா என்ன?

தன்னுடைய இரு பெண் குழந்தைகளும் படிக்கும் பள்ளி ஆண்டு விழாவுக்குச் செல்கிறார் இரு தந்தை. விழாவில் வகுப்பாசிரியை , குழந்தைகள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பது எப்படி என்று விளக்கி , காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு முடியும் ஒரு படிப்பு அட்டவணையை தருகிறார் 

ரோச் எனப்படும் அந்த குழந்தைகளின் தந்தை, அவர்  என்ன செய்தார் தெரியுமா 
5-ம் வகுப்பு படிக்கும் எஸ்தரையும் . 3-ம் வகுப்பு படிக்கும் ஜூடியையும்  அழைத்து  
"இனியும் நீங்கள் இப்படிபட்ட ஆசிரியைகளிடமும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வேண்டுமா என்ன?''
     
                             அப்புறம் நடந்த கதையை எஸ்தர், ஜூடி வார்த்தைகளாலேயே கேட்போம்:  "அப்பா இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. குழப்பமாக இருந்தது. ஆனால், பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலிருந்தபடியே படிக்கலாம் என்பதை நினைத்தபோது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. சரியென்று சொல்லிவிட்டோம். வீட்டிலிருந்து படிப்பது என்றால், வீட்டுக்கு ஆசிரியர் வருவதோ, அப்பா - அம்மாவே ஆசிரியர்களாக மாறுவதோ கிடையாது. பாடப் புத்தகங்களை வைத்துக்கொண்டு நாங்களாகவே படிக்க வேண்டும். சந்தேகம் கேட்டால் அப்பா விளக்குவார். அவ்வளவே.  ஆனால், அடிக்கடி நாங்கள் சந்தேகம் கேட்டதாக நினைவில்லை. போகப்போக படிக்கும் நேரம் தவிர்த்து நிறைய நேரம் இருப்பதை உணர்ந்தோம். அப்பாவிடம் சொன்னோம். அப்பா எங்களுடைய விருப்பத்தைக் கேட்டார். தற்காப்பு, யோகா, இசை, நீச்சல், வாகன ஓட்டுநர் பயிற்சி என்று எங்கள் விருப்பம்போல் வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தார். அதே நேரத்தில் வீட்டை அழகாகப் பராமரிக்கவும் சமையல் உள்ளிட்ட அடிப்படை வீட்டு வேலைகளைக் கச்சிதமாக செய்யவும் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டோம்.  இப்போது சமூகத்திலும் சரி; வீட்டிலும் சரி, எல்லாவற்றையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்கிறார்கள் எஸ்தர் - ஜூடி சகோதரிகள்.

                             
        விசேஷம் இதில் இல்லை. கதையை மேலே கேளுங்கள். தன்னுடைய 6 -ம் வகுப்பு படிப்போடு வீட்டுக்கு வந்த எஸ்தர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? 91 சதம். தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் 80 சதம். அதற்குப் பின், தன்னுடைய ஐ.ஏ.எஸ். கனவைக் குறிவைத்த அவர் அதற்கு முதல்கட்டமாக பி.எல். படிக்க தீர்மானித்தார்.சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். கூடவே ஒரு வழக்குரைஞரிடமும் பணிக்கு சேர்ந்தார். மூன்றாம் ஆண்டின் நிறைவில் கல்லூரி அளித்த பி.ஏ. சான்றிதழைக் கொண்டு தொலைநிலைக் கல்விமுறையில் எம்.ஏ. சேர்ந்தார். ஒரே நேரத்தில் எம்.ஏ., பி.எல். இரண்டையும் முடித்தார்.  இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், இரண்டு படிப்புகளிலும் முதல் வகுப்பில் அவர் தேறியதோடு, சட்டக் கல்லூரியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார் என்பது.

                              படிப்பை முடித்து வெளியே வந்த எஸ்தருக்கு 5 இலக்க ஊதியத்தில் நல்ல வேலை காத்திருந்தது. கொஞ்ச நாட்கள் வேலைக்குப் போனார். பின்னர், தன் அப்பாவிடம் ஒரு நாள் சொன்னார்: "அப்பா, நான் வேலையை விட்டுவிட்டு தொடர்ந்து படிக்க நினைக்கிறேன்.''
ரோச் நீங்களோ, நானோ அல்லவே. ஆகையால், வழக்கம்போல் அவர் சொன்னார்: "சரி. உன் விருப்பம்போல் செய்.''

                              இப்போது எஸ்தர் தன்னுடைய கனவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். அதிக நேரமில்லை. ஆகையால், இதே போன்ற ஒரு கிளைக் கதையை ஜூடிக்கும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் இப்போது ஊடகத் துறைக் கனவுக்குத் தன்னைத் தயாராக்கிக்கொண்டிருக்கிறார். நிற்க. நம் கதையின் நாயகன் ரோச்சிடம் கொஞ்சம் பேசுவோமா?

                              "என்னுடைய அம்மா, அப்பா இருவருமே ஆசிரியர்கள். ரொம்பவும் ஒழுக்கமான பிள்ளையாக என்னை வளர்க்க அவர்கள் நினைத்தார்கள். நானோ அதற்கு நேர் எதிராக வளர்ந்தேன். என்னை ஒளித்துவைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆமாம். எனக்கு சகல கெட்டப் பழக்கங்களும் இருந்தன. மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றது என்னுடைய பெற்றோருக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்கு பிறகுதான் முறையாக ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப் படிக்கவே நான் ஆரம்பித்தேன் (பின்னாட்களில் கல்லூரி வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்ததும் வெறிகொண்டு படிக்க ஆரம்பித்ததும் தனிக் கதை).

                              ஆனால், என்னுடைய இளமைப் பருவத்தை நான் நன்கு அனுபவித்தேன். அந்தப் பருவத்தில் எனக்கு கிடைத்த சுதந்திரமும் அனுபவங்களுமே என்னைப் பக்குவப்படுத்தின என்பதை உணர்ந்திருந்தேன்.    இந்நிலையில், என் பிள்ளைகள் படித்த பள்ளிக்கு ஆண்டு விழாவுக்கு சென்றபோது என்னிடம் மிகப் பெரிய கேள்வி எழுந்தது. என் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரமான வாழ்வை நான் தரப் போகிறேன் என்ற அந்தக் கேள்வி என்னை வெகுவாக அழுத்தியது. அதற்கு நான் தேடிக்கொண்ட பதிலே என் குழந்தைகள் இன்று அடைந்திருக்கும் நிலை. நம் சமூகத்தில் ஏராளமான கல்விக்கூடங்கள் இருக்கின்றன; ஏராளமான கல்விமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், எதுவொன்றும் குழந்தைகளுக்கானதாக இல்லை என்பதே நானறிந்த உண்மை. ஆகையால், கடைசியில் எனக்கு இந்த வழியைத் தவிர வேறு எதுவுமில்லாமல் போயிற்று. ஆனால், இது மிக எஎளிதான ஒன்றல்ல. பெற்றோர்கள் முழுமையாக பங்கேற்கும் ஒரு வாழ்க்கைமுறையில் மட்டுமே இது சாத்தியம். தன் வாழ்வை விருப்பப்படி வாழ்ந்துகொண்டு குழந்தைகளிடம் மட்டும் மிகையொழுக்கத்தை எதிர்பார்க்கும் வழமையான 'பெற்றோர் சர்வாதிகாரம்' இங்கு உதவாது. உங்கள் குழந்தைகள் மதிக்கத்தக்கவர்களாக வேண்டும் என்றால், அது உங்களிடமிருந்தே தொடங்க வேண்டும். அவர்கள் சிரிக்க வேண்டும் என்றால் நீங்கள் விகடகவியாக மாறித்தான் ஆக வேண்டும். பிள்ளைகள் விளையாடுவதற்காகவே திருச்சி நகரின் பிரதான இடத்திலிருந்த வீட்டிலிருந்து நகருக்கு வெளியே உள்ள இந்த விசாலமான வீட்டுக்கு குடியேறினோம். அவர்களிடம் கூடி விளையாடும் குழந்தைகளை ஈர்ப்பதற்காக மாடியில் அவர்களுக்கென்று ஒரு விளையாட்டுத் தளத்தை உருவாக்கினோம். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அனைவரும் கூடி விவாதித்து முடிவெடுத்தோம். பிள்ளைகளிடம் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. பிள்ளைகளும் எங்களிடம் எதையும் ஒளிக்கவில்லை'' சிரிக்கிறார் ரோச். ஓரப் பார்வையால் தம் தந்தையின் பேச்சை ரசித்துக்கொண்டிருக்கின்றனர் அவருடைய இரு பிள்ளைகளும்.
      

                             கதை கேட்பது என்றால் எல்லோருமே பிள்ளைகள்தான். கதை இன்னும் முடியவில்லை. உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள்தானே?!  

நன்றி சமஸ்., தினமணி 

ஊட்டி ரயில் பயணம்

நிறைய முறை காரிலும், பைக்கிலும் பஸ்சிலும் சென்று இருந்தாலும்முதன் முதலாக ரயிலில் செல்ல நேர்த்தது.

அப்படி என்ன ரயிலில் செல்லும் போது இருந்துவிட போகிறது என்ற எண்ணத்திலே தான் ரயில் ஏறினோம்.

முதல் வகுப்பு பதிவு செய்யப்பட்டு இருந்தது. முதல் வகுப்புக்கும் அடுத்துள்ள வகுப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

சரியாக 2.15 க்கு புறப்பட தொடங்கியது ரயில்

கொஞ்சமாக அழகில் என்னை கவர தொடங்கினாள் மலைகளின் ராணி

மலைகளின் ராணி என்று சும்மாவா சொன்னார்கள் வெள்ளையர்கள்.

அடுத்த 5 ஆவது நிமிடத்தில் அவளின் அழகில் மயங்கிய நான், மேட்டுபாளையம் வரும் வரை மீளவே முடியாத நிலைக்கு சென்று விட்டேன்.

மலைகளின் மொத்த அழகும், வனப்பும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும், உயர்ந்த மலை சிகரங்களும், நீண்ட தாழ்வான பள்ள தாக்குகளும் இலேசாக தூறல் போட தொடங்கிய வானமும், குகைகளும் பரவசத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

(208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்கள்)

மிக மிக மெதுவாக செல்லும் ரயிலின் (13 கி.மீ., வேகம்) வெளியே தெரியும் ஒவ்வொரு காட்சிகளும் கவிதை எழுத சொல்கிறது.

குளிரின் தாக்கம் தெரியா வண்ணம் வண்டி நிறுத்தும் இடங்களில்  தேநீர் மற்றும் சூடான பஜ்ஜிகள்

குழந்தைகளை மகிழ்விக்க குகைகள் மற்றும் குரங்குகள்.

ஒரு விதத்தில் ஆங்கிலேயனுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும், இவை எல்லாம் அவர்கள் காலத்தில் செயல் படுத்தபட்டவை

குகைகளை குடைந்து  பாதை போட்டதும், பாலங்கள் கட்டியதும், பெரிய பெரிய கற்கள் கொண்டு சீராக்கியதும், சாதரணமாக முடிந்திருக்கும் காரியங்கள் அல்ல

எத்தனை எத்தனை மனித மற்றும் மிருக உயிர்கள் பலி ஆக்கப்பட்டிருக்கும்? அது கண்ணில் நீர் வர வைக்கும் தனி கதை

ரயில் மேட்டுபாளையம் தொட 3 மணி நேரம் எடுத்து கொண்டது

அந்த 5 மணி நேரம் (7500 அடி)

முழுதாய்

நான் அனுபவித்து வாழ்ந்த

வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாத

நேரங்கள்….

நீங்கள் கண்டீப்பாக நேரம் கிடைக்கையில் அங்கே ரயிலில் சென்று வாருங்கள்,


மிக சிறப்பான வாழ்நாள் அனுபவம் கிடைக்க கூடும் என்னை போலவே…. 

Friday, January 22, 2016

தமிழ் இணையதளங்கள்

தமிழில் முக்கியமான செய்தி, தமிழ் அகராதி, வானொலி, தொலைக்காட்சி, மற்றும் இணைய இதழ்கள் ஆகியவற்றின் தொகுப்பு, ஏதேனும் சேர்த்த வேண்டி இருந்தால் தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்  

   
தமிழில் செய்திகள்
·         வெப்தமிழன்
·         தமிழ்நெட்
·         உதயன்
·         சுடர் ஒளி
·         தினக்குரல்
·         வீரகேசரி
·         அலைகள்
·         வெப் உலகம்
·         விகடன்
·         குமுதம்
·         தினகரன்
·         தினத்தந்தி
·         தினபூமி
·         மாலைமலர்
·         சுதந்திரன்
·         தினமணி
·         தினமலர்
·         விடுதலை
·         தமிழோசை
·         நிதர்சனம்
·         சங்கதி
·         வலம்புரி
தமிழ் அகராதி

தமிழ் வானொலிகள்
·         கலசம்
தமிழ் தொலைக்காட்சிகள்
·         ரீவி ஐ
·         தீபம்
இணைய இதழ்கள் 
·         ஆறாம்திணை
·         பதிவுகள்
·         தமிழ்.காம்
·         அப்புசாமி
·         சினி சவுத்
·         கல்கி
·         நெட் தமிழ்
·         ஈழம் வெப்
·         தமிழம்
·         தமிழ்மணம்
·         தமிழ்வாணன்
·         முத்தமிழ்
·         செந்தமிழ்

நன்றி வைரமுத்து வலை