Wednesday, March 30, 2016

வறுமையை இதைவிட வலிமையாய் சொல்ல முடியுமா?

வறுமையை இதைவிட வலிமையாய் சொல்லி விட முடியமா என்ன? முகத்தில் பலமாக அறைகிறது இந்த கவிதை...  

"அழுது தொலைச்சிராதள்ளா
மானம் போயிரும்."
நொடிக்கொருதரம்
மகளை சத்தம் வெளியே வராமல்
அடக்கிக்கொண்டு
தானும் அழுகையை
ஜெயித்துக்கொண்டு
செத்துப்போன
சிசுவைத்துணியில்
சுற்றி
கழுத்து தொங்கிவிடாமல்
கவனமாக
வற்றிப்போன
மார்போடு அணைத்துக்கொண்டு
ஜெனரல் ஆஸ்பத்திரி
வாசலில்
டவுன் பஸ்ஸ¤க்காய்
அம்மாவும்
அப்பாவும்!கலாப்ரியா.

Sunday, March 20, 2016

உடல் எடையை குறைப்பது எப்படி?

தகவல் சொல்வதற்கு முன் சிறிய போரடிக்காத பிளாஷ்பேக் சொல்லி விடுகிறேன்.

என் பள்ளி, கல்லூரி காலங்களில் கிரிக்கெட் என்றால் போதும், சோறு தண்ணீர் எதுவும் தேவை இல்லை, வீட்டில் இருப்பவர்கள் மைதானத்திருக்கு வந்து திட்டினால் மட்டுமே சாப்பாடு ஞாபகம் வரும், இப்படி ஒல்லி பிச்சானாக இருக்கிறானே இவன் என மற்றவர்கள் கவலை பட்ட காலம் அது. அதன் பின், சரியான வேலை, நல்ல சம்பளம் கிடைத்து, ஐந்து, ஆறு வருடங்கள்  வேலை வீடென இருந்ததில், கொஞ்சம் கொஞ்சமாக எடை கூட ஆரம்பித்து, கார் வாங்கியதில் இருந்து, சொகுசு வாழ்க்கையில் சிக்கி, கொளுத்த பன்றி போல் உடம்பு மாறிவிட்டது.

அலுவலகத்தில் சாதாரணமாக பத்து மணிநேரத்திற்கு மேல் உக்கார்ந்தே வேலை பார்ப்பது, அளவுக்கு அதிகமான நொறுக்கு தீனிகள், விரைவு உணவுகள் என என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடையை ஏற்றி விட்டேன். காதல் திருமணம், வீட்டில் கையில் காலில் விழுந்து சம்மதம் வாங்கிய சந்தோஷத்தில், நான்கே மாதங்களில் மென்மேலும் பெரியதாக தொப்பையை வளர்த்து, கிட்டத்தட்ட செஞ்சுரியை தொடுமளவு எடை கூடிவிட்டேன்.    

அதன் பின் பைக்கில் 30 கிலோ மீட்டர் போனாலே முதுகு வலி, திடீரென சுவாச பிரச்னை வேறு, சோர்வாகவே உணர்ந்து கொண்டிருந்தேன், உடலின் இடர் என்னை முழுதும் தொந்தரவு செய்ய மருத்துவரை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "உடல் எடையை வாக்கிங்கோ, ஜாக்கிங்கோ போயாவது கண்டிப்பாக குறைத்தே தீருங்கள், இதற்காக பட்டினி கிடந்தது உடல் எடையை குறைக்க வேண்டாம், சரியான உடல் உழைப்பின் மூலமே குறைக்க வேண்டும், உடற்பயிற்சி செய்கிறேனென்று கண்டபடி உடலை வருத்தக்கூடாது,  இல்லையெனில் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்" என்று வாங்கிய காசுக்கு மேலாகவே புத்திமதி சொல்லி அனுப்பி விட்டார் . சரி உடல் எடையை குறைக்க வேண்டும் ஆனால் எப்படி? வாக்கிங், ஜாக்கிங்கிற்க்கு  நேரம் இல்லை,  இரவு பணி வேறு, தூங்கி எழவே காலை ஒன்பது ஆகும். என்ன செய்வதென்று ஏக குழப்பம்.

எப்படி என் எடையை குறைத்தேன்.

கடந்த வருடம் புதிய வீடு ஒன்றை emi மூலமாக வாங்கி இருந்தோம், எனது மனைவிக்கும் எனக்கும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தான் (இரவு 3 மணிக்கு) வேலை முடியும். மீண்டும் மதியதிற்க்கு மேல் திரும்பவும் வேலை. எங்கள் வீட்டின் அருகே CRPF எனப்படும் இராணுவ வீரர்கள் பயிற்சி பெரும் இடம் உண்டு, அந்த இடத்திற்கு செல்ல, உள்ளே ஒரு கிலோ மீட்டர் பாதை இருக்கும், சுற்றிலும் மரம், மயில்கள், முயல்கள் என அற்புதமாக இருக்கும், காலையில் எட்டு மணிவரை அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள், (அப்போது அங்கே வேறு நபர்கள் நடமாட அனுமதி கிடையாது) அதன் பின் அந்த சாலை இராணுவ மற்றும் பள்ளி வாகனங்கள் போய் வர மட்டுமே பயன்படுத்தப்படும். அதுவும் எப்போதாவது தான் வரும்.

ஒன்பது மணிக்கு வாக்கிங் போக ஆரம்பித்தோம், பக்கத்துக்கு வீட்டில் கேலி வேறு,(ஒலகத்திலேயே வாக்கிங் மத்தியானத்துல போற ஆளுக இவுக மட்டும் தான்) வரிசயாக மரங்கள் இருந்ததால் வெயில் உள்ளே வராது, முதல் நாள் ஒற்றை சுற்றுடன் முடிந்தது, நாளாக நாளாக அது நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் நீண்டுகொண்டே போனது. மெல்லிசை, தமிழ், ஆங்கில நாடகங்கள்,  கட்டுரைகள், சொற்பொழிவுகள் என ஒரு வார தேவைக்கான mp3யை வாரத்தில் ஒரு தடவை தரவிறக்கம் செய்து, கேட்டபடியோ, இது எதுவும் இல்லாவிட்டால் பேசியபடி நடப்போம், சிலசமயம் அலுவலக பேச்சு  போட்டிகளுக்கான (Toast master club) ஒத்திகைகளும் நடக்கும்.

நிற்க எனக்கும் என் மனைவிக்கும் EMI, Increment, சொந்தக்காரர்கள், பக்கத்துக்கு வீட்டு பிரச்னை, டேஷ், டேஷ் என உங்களைப்போலவே எல்லாம் இருக்கிறது                  
        காலையில் கம்மங்கூல் வீட்டிலேயே தயார் செய்து அதை மட்டும், மோர் மிளகாய், மற்றும் கீரை, அல்லது ஏதாவது ஒரு பொரியல் வகைகளுடன்  மட்டுமே சாப்பிடுவேன், 12 மணியளவில் ஏதாவது ஒரு பழம், மதியம் 2 மணிக்கு மேல் முழு சாப்பாடு, இடையில் கிரீன் டீ, அல்லது காபி (பால் இல்லாத) இரவில் மூன்று வகை பழங்கள் மற்றும் காய் (வாழை, ஆப்பிள் அல்லது நெல்லி, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, இது போல),. உடலுக்கு சக்தியை தரும் காய் கனிகளை எடுத்துக்கொண்டால் உடல் சொர்வடையாமலும், வேறு பிரச்சனைகள் வராமலும் இருக்கும்.

நொறுக்கு தீனிகளை அறவே நிறுத்தி விட்டேன், இதை நான் குறுகிய கால நோக்கமாகத் தான் செய்தேன். எனது உடல் எடை இந்த மூன்று மாதத்தில் 26 கிலோ குறைந்து விட்டது என நான் சொன்னால் நீங்கள் நம்பிதான்  தீர வேண்டும். எனது முகநூல் பக்கங்களில் இருக்கும் நண்பர்களுக்கு இதை போட்டோவுடன் வேறு நிரூபித்திருக்கிறேன். பழைய எல்லா தொந்தரவுகளும் முற்றிலும் இல்லை. மிக முக்கியமான ஒரு விஷயம் பக்கத்துக்கு வீட்டில் இருந்த கேலி கும்பல் எங்களுடன் வாக்கிங் வருவதற்காக தூது விட்டு கொண்டிருக்கிறார்கள். (மத்தியானத்துல, அதும் வெயில் காலத்துல  உங்களுக்கு எதுக்கு சிரமம்னு சொல்லி வச்சிருக்கேன்)  

இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் , கிடைக்கும் நேரத்தை பயன்படுத்துங்கள், உடல் எடை குறையும் என உறுதியாக நம்புங்கள், சரியான உணவு பழக்கமும், உடல் பயிற்சியும் செய்யுங்கள், ஒரு நல்ல மருத்துவரிடம் உங்கள் உடலுக்கு தேவையான உணவு பழக்கம் பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் ...
  
உணவு பழக்கத்தை மாற்றா விட்டாலும் கூட, தினமும் 40 நிமிடங்கள் நடப்பதன் மூலம் வருடத்திற்கு எட்டு கிலோ உங்களால் எடை குறைக்க முடியும்.

முயற்சி செய்யுங்கள், குறைப்பது சுலபம்தான்.

-அறிவுரை முடிந்தது- 

ரயில் எந்த பிளாட்பாரம் என சுலபமாக தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம்

ரயில் வரும் பிளாட்பாரம் அறிந்து கொள்வது சுலபமானதாக இல்லை,  அவசரமாக ரயில் பிடிக்க நேர்கையில் பதட்டத்தை அதிகரிக்கும் செயலாக இருந்தது.  இதற்கு ஒரு நல்ல தீர்வை ரயில்வே நிர்வாகம் தந்துள்ளது.
உங்கள் மொபைல் மூலமாகவே இனி நீங்கள் செல்ல வேண்டிய ரயிலின் பிளாட்பார்மை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் தொலைபேசியிலிருந்து AD என டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ரயில் எண்யை குறிப்பிட்டு, அடுத்ததாக நகரத்தின் குறீயீட்டு எண்ணை குறிப்பிட்டு, (உதாரணமாக சென்னை எனில் 044)  139க்கு எஸ் எம் எஸ் அனுப்பினால் போதுமானது. உங்கள் ரயில் எண் 12990 என்றால்,  சென்னையில் உங்கள் பிளாட்பார்ம் எனில் நீங்கள் AD 12990 044 என இருக்க வேண்டும்... 
உங்களுக்கான முழு தகவலையும் ரயில்வே நிர்வாகம் பதில் எஸ் எம் எஸ்ஸாக திருப்பி அனுப்பி வைக்கும்.

Saturday, March 19, 2016

இணையத்தில் சம்பாதிக்கும் வழி

99 சதவீதம்  இணையத்தில் "காசு சம்பாதிக்கலாம் வாங்க" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டுரை எழுதலாம் என எனக்கு தோன்றியது.

இணையத்தில் சம்பாதிக்கலாம் என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை. ஆனால் சரியான வழிமுறையை ஏதாவது ஒரு வலைத்தளம் சொல்கிறதா என்றால், ஏறக்குறைய இல்லை என்றே சொல்வேன்

முதலில் ஒன்றை தெளிவாக்கி கொள்ளுங்கள், எந்த நிறுவனம் உங்களிடம் காசு கேட்டு, வேலை தருவேன் என்று சொல்கிறதோ,
 தயவு செய்து அதை நம்ப வேண்டாம். ஏனைனில் சம்பாதிக்க வழியில்லாதவனின் ஆசையை தூண்டி அவனிடம் இருக்கும் கொஞ்ச பணத்தையும் பிடுங்குவதை விட கேடு கெட்ட செயல் வேறு என்னவாக இருக்க முடியும்.


உங்கள் ஆசைகளை தூண்டவோ, தவறுதலான வழி காட்டவோ எனக்கு விருப்பமில்லை, அது என் வேலையும் அல்ல. உங்களை வைத்து நான் பணம் சம்பாதிக்க போவதில்லை. வேறு லாப நோக்கமில்லை, இதனால் தமிழ் பேசும், படிக்கும் ஒரு சில நண்பர்களாவது வருமானம் பெற உதவ என்னாலான ஒரு சிறு முயற்சி மட்டுமே. இதை ஒரு விழிப்புணர்வு கட்டுரையாக பார்த்தல் நலம்.

எனக்கு தெரிந்து தமிழில் இதுபோல் ஒரு விரிவான கட்டுரையை யாரும் இதுவரை எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.

Click செய்தால் காசு, Referral எனப்படும் ஆள் சேர்த்தால் காசு என்று நிறைய வலைதளங்கள் ஆசை கூறும், தயவு செய்து அதை கடந்து வாருங்கள், அதில் நிஜமாகவே உங்களுக்கேற்ற பணம் சம்பாதிக்க இயலாது.

Capthca Entry எனப்படும் டைப் செய்யும் வேளைகளில் காசு வரும், இங்கே (click here) குறிப்பிட்ட நிறுவனங்கள் காசு தருவதாய் வரும் செய்திகள் 80 சதவிகிதம் நம்பும்படி இருக்கின்றன, ஆதாரங்களை கூட காட்டுகின்றன, நன்றாக உற்று நோக்கினால், அது உங்கள் மாத data செலவுக்கு கூட போதுமானதாக இருக்காது. ஆதாலால் இதை எல்லாம் பெரிதாய் பில்ட் அப் செய்து சொல்லும் தமிழ், ஆங்கில வலைப்பூக்களை மன்னித்து தொலையுங்கள்.

Data entry யிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை? நிறுவனமாக நடத்தும் data entry வேலையை (mobile company form fillings) தவிர, தனியாக செய்து யாரும் காசு சம்பாதித்தார்கள் என்ற உண்மை செய்தியே கண்ணில் படவில்லை.  

அப்புறம் Forex  எனப்படும் சூதாட்டத்தை நம்பி இருக்கும் பணத்தையும் இழந்து விடாதீர்கள், அதற்க்கெல்லாம் நல்ல பயிற்சியும், நீண்ட முதலீடும் வேண்டும், தவிர இந்திய அரசு அதை ஆதரிப்பதில்லை.

நான் கூறும் வழிகள் நேர்மையானவையே, படித்த முடித்த பிறகு நீங்கள் உணரக்கூடும்.   


வழிமுறைகள்

வலைப்பூ (blog)

வலைப்பூவை வடிவமைப்பது சுலபம், மற்றும் விலை இல்லாதது. உங்களுக்கு எதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறதோ, அது சம்மந்தமாக எழுத தொடங்குங்கள், தினசரி நூறு பார்வையாளர்கள் வரும் தருணத்தில் கூகிள் விளம்பரம் (Ad-sense) தருகிறது, உங்களுக்கு தெரியுமா கூகிள் விளம்பரத்தில் வரும் வருவாயில் மட்டுமே அதன் நிறுவனத்தை நடத்துகிறது. தற்போது தமிழில் விளம்பரங்களை தருவதில்லை எனினும், பிற்காலத்தில் தர வாய்ப்பு இருக்கிறது, ஆதலால் ஆங்கிலத்தில் தற்போதைக்கு எழுதுங்கள். மிக நீண்ட அறிவு தேவை இல்லை, உங்களுக்கு தெரிந்ததை ஆங்கிலம் தெரிந்த ஒருவரை வைத்து சரி செய்து தர சொல்லுங்கள், ஒரே ஒரு நல்ல கட்டுரை கூட நன்கு சம்பாதித்து கொடுக்க கூடும். நீங்கள் படித்து கொண்டிருக்கும் எனது வலைதளத்தை கூட  தினசரி நூறு பேர் பார்க்கிறார்கள்.

உதாரணமாக இவரின் வலைப்பூவை http://www.labnol.org பாருங்கள், இந்தியாவில் அதிகம் இதன் மூலம் அதிகம் சம்பாதிக்கும் மனிதர்களில் ஒருவர்.

மற்ற வலைதளத்திற்கு வடிவமைப்பு செய்யலாம்  (theme desine) 

பல வலைதளங்களும், இணைய தளங்களும் வாடிக்கையாளர்களை கவர புது விதமான வடிவமைப்பை வேண்டி செலவு செய்கின்றன, உங்களுக்கு அதில் ஈடுபாடு இருந்தால் அதை செய்து கொடுக்கலாம்
வெப் டிசைன், சிஎஸ்எஸ், ஹச்டிஎம்எல், ஜாவா, அல்லது போட்டோஷாப் தெரிந்திருத்தல் அவசியம். இதை நிறைய வலைதளங்களே கற்று கொடுக்கின்றன, அல்லது பகுதிநேரமாக படித்தும் வேலை செய்யலாம்

வகுப்புகள் இணையத்தில் எடுக்கலாம் (Teach Online)

உங்களுக்கு எதாவது ஒரு பாடத்தில் நன்கு அறிவிருந்தால், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆசிரியராக மாற முடியும், skillshare , udemyபோன்ற இணைய தளங்கள் இதற்காகவே செயல்படுகின்றன.   நீங்கள் ஏதாவது பாடம் நடத்துவது போல இரண்டு மூன்று நிமிட வீடியோ வைத்திருந்தால் உங்களுக்கு முன் உரிமை வழங்குகிறார்கள்  
                  
புத்தகம் எழுதி விற்கலாம் (Write ebook)

 மிகுந்த அறிவு சார்ந்த புத்தகங்கள் எழுத வேண்டியது இல்லை, சமையல் உங்களுக்கு நன்றாக வருகிறது எனில் அதை பற்றி எழுதலாம், பேனா பென்சில் கொண்டெல்லாம் இல்லை, இணையத்தில் எழுதலாம். உபயோக குறிப்புகள், யோகா, விளையாட்டு சம்மந்தமாக எழுதி, நன்கு வடிவமைத்தால்    அமேசான், பிளிப்கர்ட் போன்ற இணைய தளங்கள் மூலமாகவே விற்க முடியும். உங்கள் புத்தகத்தை எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என இந்நிறுவனம்  pothi.com கற்று தருகிறது.

யூடுப் (YouTube)  

நல்ல வீடியோக்கள் சொந்தமாக எடுத்து கைவசம் இருந்தால் youtubeல் தரவேற்றி, அதை அதிகம்பேர் பார்க்கும் வகையில் இருந்தால் விளம்பர வருமானம் பெறலாம், சுற்றுலா, விளையாட்டு, சமையல், சிரிப்பு, குழந்தைகள் சுட்டி, எதிர்பாரா நிகழ்வுகள் என பல வகை உண்டு, பல புகைப்படங்களை திரட்டி கூட வரலாற்று கதை சொல்லலாம், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும், சப் டைட்டில் வைப்பதற்கும் இதில் இடம் உண்டு.

பல மொழிகள் தெரியுமா (Become a translator)

இரண்டு மொழிகளுக்கு மேல் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் மொழி மாற்றி தருவதற்கும் ஊதியம் உண்டு, நிமிட கணக்கில், மணி கணக்கில் கூட இதில் சம்பாரிக்க இயலும். உதாரணமாக இந்த translatorsbase வலைதளத்தை பாருங்கள்

சிறிய வேலைகள் (micro jobs)
www.mturk.com இது அமேசான் நடத்தும் ஒரு வேலை அளிக்கும் நிறுவனம், இதில் சிறியது முதல், பெரியது வரை பல வேலைகளும் அதற்கான பணமும்   இருக்கின்றன, உங்கள் திறமைக்கு தக்கவாறு தேர்ந்தெடுத்து கொள்ளும் வாய்ப்பை இந்நிறுவனம் தருகிறது.
இந்தியாவில் மிகப்பெரும் வணிக சந்தை செய்யும் அமேசான் தற்போது இந்தியர்களுக்கான இணைய  வேலைவாய்ப்பை நிறுத்தி விட்டது. விவரமாக இருக்கிறார்கள் அல்லவா?                 


வலைப்பூவில் நிறுவனத்திற்கு செல்ல செய்தல் (Affiliate marketing) 

ஒரு நல்ல வலைப்பூ வைத்திருக்கிறீர்கள் எனில், அதில் அதிகம் பார்வையாளர்கள் வருகிறார்கள் எனில், பெரிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு (ebay, flipkart, shopclues, etc) அவர்களின் விளம்பரத்தை உங்கள் வலைப்பூவில் வெளியிடலாம், உங்கள் வலைப்பூ வழியாக வரும் வாடிக்கையாளர் ஏதாவது பொருளை வாங்கினால் உங்களுக்கு கமிசன் தொகை கிடைக்கும்.

OLX, quikr உபயோகபடுத்துங்கள்

செலவே இல்லாமல் எந்த பொருட்களை வேண்டுமானாலும் இணையத்தில் விற்பனை செய்ய olx, quikr இன்ன பிற நிறுவனங்கள் உள்ளது உங்களுக்கு தெரிந்ததே. உங்களிடம் விற்பனை செய்ய பொருள் இருக்க வேண்டும் என்பதில்லை, இணையம் என்றல் என்னவென்றே தெரியாத பொருட்கள் தயாரிப்பவர்களை தொடர்பு கொண்டு உங்கள் பெயரில் விளம்பரபடுத்தி, ஒரு தொகை கமிசனாக அவரிடம் பெற்றுக்கொண்டு  விற்க இயலுமே, இதில் பழைய பொருள் புதிய பொருள், வீடு, நிலம், பைக், கார், மொபைல்  என எதுவும் விற்பது சாத்தியமே.

பிரீலன்சர் freelancer

உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது அல்லது ஏதாவது ஒரு துறையில் சிறந்த அனுபவம் இருக்கிறது எனில் freelancerஇல் விளம்பரம் செய்யலாம். இதுவும் கட்டணம் இல்லாத வேலை செய்வோரையும், வேலை கொடுப்போரையும் இணைக்கும் இணையதளம்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருதல் (kids studies) 

www.tutor.comwww.tutorvista.com மேற்கூறிய இரண்டு நிறுவனங்களும் குழந்தைகளுக்கு பாடம் கற்று கொடுக்க பணம் தருகின்றன, உங்களுக்கு போதிக்கும் திறமை இருந்தால் வீட்டிலிருந்தே இணையம் மூலமாக இதை செய்யலாம்.

புகைப்பட விற்பனை (Photographer)

நன்கு போட்டோ எடுக்கும் திறமை உங்களிடம் இருக்கிறதா? creativemarket.com
istockphoto.com இந்நிறுவனங்கள் உங்கள் புகைப்படங்களை விற்க உதவி புரிகிறது. உங்கள் புகை படங்களை அனுப்பி, அது விற்பனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டால் அதன் பிரிண்ட் நீங்கள் அனுப்பி வைத்தால் போதுமானது.

இன்னும் வலைதளங்களுக்கு எழுதுதல்(guest writter), உங்கள் இசை மற்றும் பாடல் திறமையை விற்றல், இணைய சர்வே பணிகள் (survey jobs), இணைய ஆராய்ச்சி , இணைய பகுப்பாய்வுசெய்தி சேகரிப்பு என பல வேலைகள் உள்ளன,

சரியான வேலையே தேர்ந்தெடுப்பது வரை மட்டுமே சிரமம், தேர்ந்தெடுத்து விட்டால் நிச்சயம் இணையம் உங்களின் திறமைக்கான வருமானத்தை தர காத்துகொண்டிருக்கிறது.

மேற்கூறிய வழிமுறைகளில் உங்களுக்கான ஏதாவது ஒன்று இருக்கும், எந்த வேலையாக இருந்தாலும் அதை தொடங்குவதற்கு முன் அந்த நிறுவனம் பற்றி இணையத்தில் review பார்க்க மறக்காதீர்கள், கொஞ்சம் முயற்சி செய்தால் நிச்சயம் இது சாத்தியம்.

இணையத்தில் சமூக வலைதலங்களுக்கு (facebook, watsapp, twitter, etc.,) கொடுக்கும் முக்கியத்துவத்தை இதற்கும் கொடுத்து தேடினால் நிச்சயம் உங்களுக்கான வேலை உறுதி.

வெளிநாட்டு நிறுவனத்தில் பணம் பெறுவது இவ்விணைய யுகத்தில் பெரிய காரியம் இல்லை, பெரும்பாலும் paypal, payza போன்ற இணைய வங்கிகள் மூலமாக பணம் பெற முடியும், இதில் கணக்கு தொடங்குவதும் பெரிய வித்தை இல்லை, உங்கள் mail id தான் அதன் வங்கி கணக்கே, அதற்காக பாதுகாப்பு இல்லை என கருதி விடாதீர்கள், மிக மிக பாதுகாப்பான தினசரி உலகம் முழுவதும் மிகபெரிய நினைத்தே பார்க்க முடியாத அளவு பண மாற்றம் நடக்கும் இணைய வங்கிகள் அவை. ஒரு சமூக வலைத்தள கணக்கு தொடங்குவது போல எளிதானது, உங்கள் வங்கியின் விபரத்தை (பெயர், வங்கி கணக்கு, முகவரி)    மேற்கூறிய இணைய வங்கிகளுடன் இணைத்தால் போதுமானது, குறிப்பிட்ட இணைய வங்கியின் தளத்திற்கு சென்றால் அங்கேயே விபரங்கள் கொடுக்க பட்டிருக்கும்.

பதினைந்திற்கும் மேற்பட்ட ஆங்கில இந்திய கட்டுரைகளை படித்த பின்னரே இதை எழுதி இருக்கிறேன், நான் எடுத்துகாட்டுடன் சொன்ன நிறுவனங்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி வருபவை. மீண்டும் ஞாபக படுத்துகிறேன், எந்த நிறுவனம் உங்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தாலும் அதை பற்றி முழுதும் விபரம் தெரிந்து கொண்டு பணி செய்யுங்கள்.  

சரியான முறையில் முயற்சி செய்யுங்கள், உங்களுக்கு ஏற்ற பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

இதை படித்த நண்பர்களுக்கு வேறு ஏதாவது தெரிந்திருக்கலாம், பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.                  Friday, March 18, 2016

நகை போராட்டம் மக்களுக்காகவா?

நகைக்கடை அடைப்புக்கு ஆதரவும் வேண்டாம்... ஆதங்கமும் படவேண்டாம்...  ஏதாவது வைபவம் வைத்துள்ளவர்களும் பதறவேண்டாம்..
வைபவம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து மாற்று வழியை யோசியுங்கள்...  நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டின் வளர்ச்சி என்கிறீர்களா?
2 லட்சத்துக்கு மேல் வாங்கினால் பான்கார்டு அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால்வரி அவர்களை கலங்கடித்து உள்ளது
எந்த வரியானாலும் பொதுமக்களாகிய நம் தலையில் கட்டிவிடும் இவர்கள் மக்களுக்காக போராடுகிறார்கள்?
அதெல்லாம் இல்லை...
நம்மிடம் வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு இவர்கள் ஏன் வலிக்க போகிறது?  அதற்க்காக போராடுவார்களா என்ன? 
நாம் கிராம் 10000 விற்றாலும் வாங்கத்தான் செய்வோம்.  1% அதிகமாக கலால் வரி போட்டாலும் வாங்கத்தான் போகிறோம். அது தானே உண்மை...
பின் எதற்காக இந்த புரட்சி போராட்டம்
மக்களுக்காகவா போராட்டம் ஆர்ப்பாட்டம் ரோட்டில் நடத்துகிறார்கள் என இனியும் நம்பினால் பிடியுங்கள் இனா வானா பட்டத்தை...
பிறகு?
அந்த 1 சதவீத கலால் வரி தான் ஆப்பாக மாறி விட்டது.
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி.  அதாவது நகை கடைகாரார்கள் எவ்வளவு இறக்குமதி செய்கிறார்களோ அதற்கு மட்டும் வரி. எவ்வளவு விற்பனை செய்கிறார்கள் என்று மத்திய அரசுக்கு தெரியாது,  அது மாநில அரசுக்கு தான் விற்பனை வரி (vat) மூலம் தெரியும்  அந்த விற்பனைக்கு மட்டும் வரி கட்ட பட்டிருக்கும். இதனால் எவ்வளவு இறக்குமதி செய்யப்பட்டதென மாநில அரசுக்கு தெரியாது
இங்கே தான் பிரச்சனையே..
10 கிலோ நகை வாங்கினால் விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்க வேண்டும்.
கலால் வரிவிதிப்பு மத்திய அரசு செய்வதால் 10 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட விபரம் ஏற்கனவே இருப்பதால் கடையில் 10 தங்கம் மட்டுமே விற்க முடியும்.
இறக்குமதி 10 கிலோவெனில் விற்பனை 12 கிலோவாகவோ 15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு கேள்வி கேட்க ஆரம்பிக்கும்..  அந்தப் பதட்டம்தான் முதல் காரணம்.
நீங்கள் நகை வாங்கிய ஏதாவது ஒரு பில்லை பாருங்கள்...  10 கிராம் நகைக்கு செய்கூலி சேதாரம் தனியாக கணக்கில் வந்திருக்காது.  அது செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்ந்து பில்லில்  வரும்.
எ.டு 10 கிராம் தங்கம் பிளஸ் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து 10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதற்கு vat போட பட்டிருக்கும். மாநில அரசுக்கு தேவை எவ்வளவு விற்பனை ஆகிறதோ அதற்கு தான் வரி.  இதுவரை இதனால் ஒரு இடரும் இல்லை.
ஆனால் கலால்வரியால் 11கிராம் விற்பனை என்று பில் செய்தால் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும்,  நமக்கு கொடுத்தது 10 கிராம் மட்டுமே, மீதி 1 கிராம் அவர்களிடம்தான் இருக்கும்.  சேதாரத்தின் தங்கம் அவர்களிடம் சேரச் சேர அவர்கள் வாங்கியதிற்க்கும் விற்றதற்க்கும் கடையில் இருக்கும் இருப்பு,  அவர்கள் இறக்குமதி செய்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்...  இதனால் தங்கம் பதுக்கல் என அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு முழு உரிமை உண்டு
அடுத்து தங்க கடத்தல்
இதுதான் பேரிடி
கருப்புபணம் உருவாக்குவதும், அதற்கு இவர்கள் உடந்தையாவதும் இங்குதான்.  இனி இது நடக்க வாய்ப்பில்லை என்பதே இவர்களின் பெரும் பயம்.
கடத்தி வரப்படும் 90 சதவீத தங்கம் பொதுமக்களிடமா இருக்கும்?  சிறிய குழந்தை கூட சரியான பதில் சொல்லும். அது நகைக்கடை முதலாளிகளிடம் தான் போகும் அல்லவா?
இது 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகைகளை கொள்ளை லாபத்திற்க்கு விற்பனை செய்யும் வியாபார தந்திரம்.
மத்திய அரசின் நேரடி பார்வைக்கு வந்துவிடும் போது கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில் மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது.
சேதார தங்கத்தை கூட  வாடிக்கையாளர்களுக்கு தரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். கடத்தி வரப்படும் தங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப் படும். நியாயமான லாபம் மட்டுமே கிடைக்கும்...  நியாயமான லாபத்தில் அந்த பரம ஏழைகளால் வாழ முடியுமா என்ன? ஹஹஹஹ...
புரிகிறதா புரட்சி போராட்டம்?

watsappஇல் வந்தது, நிறைய சொற்பிழைகளும் எழுத்து பிழைகளும் இருந்ததால் எடிட் செய்து  வெளியிட்டிருக்கிறேன். 

Tuesday, March 15, 2016

தெய்வப்பிழை சிறுகதை

ஊதா மூங்கில் இணையத்தில் தொடர்கதை மற்றும் சிறுகதை எழுதி வரும் நண்பன்... அவரின் ஒரு இணைய சிறுகதை 

திங்களுக்கு ஒருமுறை பூசாரி அருள் வந்து ஆடுவதாலையே பிரசித்தி பெற்று விட்டது அந்த கோவில். அருள் வரும் அந்த குறிப்பிட்ட நாட்களில் பூசாரி பெண்களின் நெற்றியில் குங்குமத் திலகமிடுவது வழக்கம். பூசாரி திலகமிட்டால் நல்லது எனவும், திலகமிடாமல் விட்டால் தீங்கு எனவும், அந்த கோவிலுக்கு வரும் பெண்கள் உறுதியாக நம்பினர்.

இன்று அத்தகைய அருள் வந்து ஆடக்கூடிய நாள் தான். கோவிலின் கர்ப்பக்கிருகம் முன், பெண்கள் கும்மாளாக நின்று கொண்டு இருந்தனர். கருவறையினுள் இருந்து மணியோசை வெளியேற தொடங்கியதும், பக்தி பரவசம் கொண்டனர். கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த இயந்திர மேள வாத்தியங்கள், ‘டம் டும்என ஒலிக்கத் தொடங்கியதும், தீச்சுடர் பொங்கும் பெரிய அளவு தட்டுடன் பூசாரி ஆடிக்கொண்டே கோவில் கருவறையை விட்டு வெளியே வந்தார்.

ஏய்’ ‘ஊய்’ ‘போன்ற சத்தங்களை கக்கியதும், உடலை சிலிர்த்து கொண்டு ஆடியதும், அவருக்கு அருள் வந்ததை உறுதி செய்தன. கருவறைக்கு முன், தடுப்பு கம்பிகளுக்கு நடுவே இருந்த அந்த காலி இடத்தில், அவரது அருள் நேர நடனம் அரங்கேறி கொண்டு இருந்தது.

முதலில் வெறி வந்தவர் போல் ஆடிக்கொண்டு இருந்தவர், நேரம் செல்ல செல்ல தளர்ச்சி அடைய ஆரம்பித்தார். பின் ஆட்டத்தின் வேகம் மெதுவாக குறையத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு வந்ததும், ஆடியபடியே அங்கு இருந்த பெண்களுக்கு திலகமிட தொடங்கினார்.

திலகமிட்டு கொண்ட பெண்கள், அவர் வைத்து இருந்த தட்டில் தட்சணைகளை இட, அத்தனை ஆட்டத்திலும் தட்சணைகள் தீயிடம் தஞ்சம் கொள்ளாதவாறு தடுத்து வந்தார். கும்பளலில் முதல் வரிசைக்கு பின்னால் இருந்தவர்கள், முன்வரிசைக்கு வர முயற்சித்து கொண்டு இருந்தனர். அதனால் கூட்டத்தில் ஒரே சலசலப்பாகவே இருந்தது.

திடீரென அந்த பூசாரி, ஒரு பெண்ணின் நெற்றியில் திலகமிடுவதற்கு பதிலாய், இருந்த திலகத்தை அழித்துவிட்டு சென்றார். திலகம் அழிந்த நிலையில் இருந்த பெண்ணை சுற்றி இருந்தவர்கள் அனைவரும், அப்பெண்ணை அதிர்ச்சியாக பார்த்தனர். காரணம், திலகத்தை அழித்துவிட்டு சென்றால், அவரது கணவரது உயிருக்கே ஆபத்து என்று அவர்கள் ஆணித்தனமாக நம்பினர்.

உடனே அங்க பல வார்த்தைகள் மோதியபடி ஒலிக்க தொடங்கின. முதல உன் புருசனை பத்திரமா இருக்க சொல்லுமா’, ‘உன் மாங்கல்யத்துக்கு ஆபத்து’, ‘அருள்வாக்கு முடிஞ்சதும் பூசாரிகிட்ட ஏதாவது பரிகாரம் இருக்கான்னு கேளுபோன்ற வார்த்தைகளே அவை.

அத்தனை வார்த்தைகளும் அப்பெண் காதில் இரைச்சலை கூட்டயது. அவைகளை தாங்கி கொள்ளாத அப்பெண் சற்று சத்தமாக, “ஐயோ…. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலைங்கஎனக்கூற, அங்கு இருந்த அனைவரும் கொஞ்சம் திகத்தனர்.

ஆனால், அவர்களை விட அதிகமாக திகைத்து போனது என்னவோ அந்த பூசாரி தான். இருப்பினும் ஆடலை நிறுத்தவில்லை. அவரது கருவிழிகள், கடற்ச்சுழலில் சிக்கிக்கொண்ட சிறு படகு போல வலம் வந்தது. திடீரென இல்லாத வலிமை வரவைத்து ஆத்தா……’ என அலறியபடி வேகமாக ஆடத்தொடங்கினார்.

அப்படி அவர் ஆடத்தொடங்கியதும், திகைப்பில் இருந்த பிற சிலரும் அவர் மீது அருள் பார்வை வீசத்தொடங்கினர்.

- ஊதா மூங்கில்

இவரை ட்விட்டரில் பின் தொடர விரும்பினால் கீழுள்ள இவரது பெயரை click செய்யுங்கள் 
ஊதா மூங்கில்

Tuesday, March 8, 2016

மகளிர் தினம்

திரு ராஜா., காங்கிரஸில் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு சாதரண குடும்பத்தில் பிறந்து மக்களுக்காக போராடும் இளைஞர்.என் ட்விட்டர் நண்பன்... 
அவரின் மகளிர் தின கட்டுரை   

ஆணும்,பெண்ணும் சமம் என்பதே பகுத்தறிவு.
உடல் ரீதியாக ஆண் என்பவன் பெண்ணை விட சற்று வலிமையானாக இருந்தாலும், மனரீதியாக பெண் பெரும் வலிமை மிக்கவள்.
ஆண் அறிவியல் ரீதியாகவே ஒரு பெண்ணை
தாய்,சகோதரி,தோழி,காதலி,மனைவி என சார்ந்து வாழும் குணம் உடையவன்.
பெண் தன் பிரியங்களை வெளிக்காட்டும் தன்மை கொண்டவள்.
தன்னை சுற்றியுள்ளவர்களை காப்பதும்அவர்களை வாழவைப்பதும் அவளின் இயல்பு.
ஆணின் வெற்றிக்குபின் பெண்ணும், பெண்ணின் வெற்றிக்கு பின் ஆணும் 
இருப்பது அதிசயமல்ல, இயல்பு.
பெண்ணில்லாமல் ஆண் இல்லை, ஆண் இல்லாமல் பெண் இல்லை என்பது அடிப்படி விஞ்ஞானம்.
அறியாமையாமல் அடிமைபட்டுக்கிடந்த பெண் சமூகம் தற்பொழுது ஒவ்வொரு அடியாக தலைதூக்க தொடங்கியுள்ளது.
ஆணுக்கு இணையாக பெண்கள்
போட்டியிடும் அளவிற்கு அவர்கள் வளர்ந்து வருகிறார்.
அவர்களை நாம் கரம்பிடித்து தூக்கிவிட வேண்டும்.
சகபோட்டியாளராக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது.
தமிழ் சமூகத்தை பொருத்தளவில் பெண்கள் காட்சி பொருளல்ல. காவிய பெண்மணிகள்.
அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பெண்களின் திறமைகள் மதிக்கப்படவேண்டும்.
பாலியல் ரீதியாக மட்டுமே பெண்களை பார்பதை தவித்து,பெண்ணையும் தன்னைபோலவே மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
தனக்கு முன்னே செல்லும் பெண் சமூகத்தின் மீதான சீண்டல்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட மிருகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் கடமையும்கூட.
பெண்கள் சாதிக்கட்டும்
புதியதோர் சரித்திரம் படைக்கட்டும்.
நாம் ரசிக்க கற்றுக் கொள்வோம் பெண்களின் வெற்றியை...

#மகளிர்_தின_வாழ்த்துக்கள்

இவரை ட்விட்டரில் தொடர ராஜா ராக்கெட்

Friday, March 4, 2016

என்னய்யா தப்பு பண்ணாரு சரத்குமார் ?

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.
எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்.

உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா ?
.
என்னய்யா தப்பு பண்ணா
ரு சரத்குமார் ? என்ன தப்பு பண்ணாரு?
.
ஏதோ ஒரு கட்சி தலைவர்தானேன்ணு
.
பிரதமர் ஆகணும் என்கிற ஆசைல ஒரு அறிக்கை விட்டுடாரு.
.
அத தப்புன்னா, தப்புன்னு வாயால சொல்ல
வேண்டியதுதானே?
அதானேய்யா உலகவழக்கம்?
.
அத விட்டுட்டு கூட்டணியளிருந்தா  கழட்டி விடுறது?
.
எந்த கூட்டணியிலும் சேத்துக்க மாட்டங்குறது?
சேத்துகிட்டாலும் சீட்டே தரமாடங்குறது
.
சமக கட்சிக்காரனை அம்புட்டு பேரும்
ஒன்னா சேர்ந்து பேஸ்புக்லயும்
ட்வீட்டரிலும் தொவ தொவன்னு தொவைக்குறது!!
.
அட அடிச்சாக்கூட பரவாயில்லைய்யா. போற வர்ற சின்னப்பசங்களையெல்லாம்
கூப்பிட்டு இவன கலாய்ச்சு ஸ்டேட்டஸ் போட்டு பழகிக்குங்கடான்னு வேற
சொல்லிருக்கீங்க. பழகுறதுக்கு இது என்ன
பாடியா? இல்ல பள்ளிக்கூடமா?
.
ஏதோ அந்த பையனுக்கு மான ரோசம் இல்லாததால இத
பெருசா எடுத்துக்கல.
.
ஒன்னுகெடக்க ஒன்னு ஆகியிருந்தா அவன் கட்சிய யார் பாதுக்குறது?
.
இவ்வளவு ஏன், போன திமுக கவர்மென்ட்ல கூட
இதே மாதிரி கூட்டணியளிருந்து 
கழட்டி விட்டாங்க.
.
ஆனாலும் இப்ப போய்
கால்ல விழுந்தா கூட சேத்துக்குவாங்க?
.
அந்த நாகரிகம் இல்லயா உனக்கு?
.
ஏதோ நடிகர் சங்க பணத்த கொஞ்சோண்டு எடுத்து வீட்ல வச்சுருக்குறான்.
.
கேட்ட அத தரபோறான்
.
இதுக்கு போய் பலகோடி உழல்னா கேஸு போடுவ ?
.
வேணாம் எங்களுக்கும் அரசியல் தெரியும்
.
பண்ண வைக்காதிங்க
பாவம் நாங்க !!!


-வான்முகில் 

Thursday, March 3, 2016

பேயோன்

தனது சோகங்களை நகைச்சுவையாக மாற்றிவிடும், நான் படித்து சிரிக்கும் நல்ல எழுத்தாளர். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் இவரின் எழுத்துக்கள் தமிழின் முக்கிய பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருக்கின்றன 
அவரின் ஒரு கட்டுரை தொகுப்பில் இருந்து 
  
எல்லோரும்-சிரிக்குறாப்ல

பற்றவைத்துவிட்டு லைட்டரைப் பார்த்தேன். மஞ்சள் வண்ணம். நேற்று இளஞ்சிவப்பாக இருந்த ஞாபகம்.

கடைக்கார இளைஞனிடம் கேட்டேன்: தெனமும் லைட்டருக்கு பெயின்ட்டு மாத்துவீங்களோ? நேத்து வேற கலர்ல இருந்துது?”

புது லைட்டர் சார்என்றான் கடைக்காரன்.

கலக்குங்கஎன்றேன்.

விடுமுறை நாளின் காலை நேர அமைதியில் புகைக்கும் சிகரெட்டின் விலையைப் பொதுவில் குறிப்பிடுவது அசிங்கம். அது விலைமதிப்பற்றது. அங்கு இன்னும் நான்கு பேர் நின்றிருந்தார்கள். அவர்களும் அந்த அமைதியை ரசிப்பவர்களாகத் தென்பட்டார்கள்.

முதுகுக்குப் பின்னால் சன்னமாகக் கூட்டுச் சிரிப்பொலி கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நான்கு இளைஞர்களும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

புகைத்து முடித்ததைக் கீழே போட்டுவிட்டுக் கடைக்காரனிடம் விடைபெற்றுச் சில அடிகள் சென்ற பின்பு பெரிய சிரிப்புச் சத்தம். என் செவிச் செல்வம் கூர்மையடைந்தது, ஓர் உரையாடலைச் சேகரித்தது.

என்ன சோமு, லைட்டருக்கு பெயின்ட் அடிக்கிறியாமே? இது எப்பலேந்து?” என்றான் ஒரு ஆள்.

த்தா அந்தாளோட தெனமும் இதே பொளப்பாப் போச்சு. மனுசன சும்மா விடாம ஏதாச்சும் ஒளறிட்டே இருக்கணும்என்றான் கடைக்காரன். நான் அங்கு கண்ட ஒரு தெய்வாதீன மின்சாரப் பெட்டிக்குப் பின்னால் மறைந்து நின்று கேட்டேன்.

இன்னொரு ஆள் சொன்னான் – “அடி பின்னிருவாப்ல. ஏன் சோமு, ஃபர்ஸ்ட் டைம் என்னப் பாத்தப்ப நீங்க எந்த ஊரு’-ன்னு கேட்டாப்ல. தஞ்சாவூருங் சார்’-ன்னேன். அதுக்கு அந்தாளு ஓகோ, அந்தப் பேர்ல தமிழ்நாட்ல ஒரு மாவட்டம் இருக்கேஅப்டின்னாப்ல (எல்லோரும் சிரிப்பு). நான் ஆடிப்போயிட்டேன் (எல்லோரும் சிரிப்பு). அன்னிலேந்து டிஸ்டன்ஸ் மெய்ன்டைன் பண்ட்டுவரன் (எல்லோரும் சிரிப்பு).

மீண்டும் கடைக்காரன்: கேளு விசு, தீவாளியன்னைக்கு வந்தாப்ல. இந்தாள மதிச்சி தீவாளி வாழ்த்துக்கள் சார்’-ன்னேன், ‘, இருக்கட்டும், இருக்கட்டும்’-ன்றாப்ல (எல்லோரும் சிரிப்பு). பொறவு மறுநாள் வந்து தீவாளில்லாம் முடிஞ்சுதா?’-ன்னு இளிக்கிறாப்ல (எல்லோரும் சிரிப்பு). பண்டிகைக்கி விசாரிக்கிறாராம் (எல்லோரும் சிரிப்பு). யோவ், தீவாளி நேத்துய்யா! வாழ்த்து சொன்னா பதிலுக்கு வாழ்த்தணும்யா (எல்லோரும் சிரிப்பு)!

ங்கொய்யால யாருய்யா அந்தாளு?”

தெனமும் வருவாப்ல. ஒவ்வொரு சனிக்கெழமையும் மச்சான், ‘நாளக்கிக் கட இருக்கா?’-ன்னு வுடாம கேப்பாப்ல. நானும் பொறிம்யா எல்லா நாத்திக்கேமையும் கட உண்டு சார்’-னுவேன்.

ஆனா நாத்திக்கேம வர மாட்டாரு…”

வர மாட்டான்!

எல்லோரும் சிரித்தார்கள். இவர்கள் சொன்ன எல்லாமே எனக்கு நினைவிருந்ததால் விலகி நடக்கத் தொடங்கினேன்.

பார்ரா, நின்னு முளுசா கேட்டுப் போறாப்லஎன்றது ஒரு குரல். மீண்டும் அடக்கிக்கொண்ட சிரிப்புச் சத்தம்.

நான் வீட்டுக்கு வந்து சேர்ந்து ஐபேடில் ஒரு மின்னூலைப் பழக்க தோஷத்தில் எச்சில் தொட்டுப் புரட்டிக்கொண்டிருந்தபோது நினைவெல்லாம் அந்த உரையாடலில் இருந்தது. உரையாடல் முடிந்து அரை மணிநேரம் கழித்து அந்த சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது. கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தேன்.

மனைவி என் அறைக்கு வந்து என்னைப் பார்த்தார்.


தீவாளி வாழ்த்துக்கள் சார்!என்று அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தேன்.

இவரை பற்றி மேலும் அறிய கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள் 

பேயோனின் வலைதளம் காண  Payon
இவரை ட்விட்டரில் பின் தொடர பேயோன்

Wednesday, March 2, 2016

காற்று ஒருபோதும்

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள்காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை'
தேவதச்சன் 

உப்புநீர்ச் சமுத்திரம்

அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களை அது நீந்தி விட்டதாம்.
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்.
வேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை
லாகவாய்ப் பாய்ந்து கடந்து
சிரிப்பு கொப்புளிக்க திசை திரும்பியிருக்கிறதாம்.
கதவுகளற்ற அதன் அரண்மனையில்
சூரியனின் கூச்சம் கூட தரை வீழ்வதில்லை.
தன் ஒற்றை இறக்கையால் வானின் கூரைபிடித்து சுழற்றி
அதை ஓர் நீர்க் குட்டையில் எறிந்துவிடவும் முடியும்.
இப்பொழுதைய அதன் தாகமெல்லாம்
உப்புநீர்ச்சமுத்திரத்தை அப்படியே குடித்துவிடுவது.
நீண்ட நேரமாக கடலின் மேலே
நின்ற இடத்திலேயே சிறகை விரித்து நின்று
தலைகுப்புறப் பாய தயாராய் இருக்கிறது என்றாலும்

கடல் ஒன்றும் அதன் மீது கோபித்துக் கொள்வதில்லை
-குட்டி ரேவதி