Tuesday, December 31, 2019

மெல்பர்ன் உலாத்தல் அழகான வாழ்க்கை கதை

ட்விட்டரில் இருந்து கானா பிரபா

25 வருடங்களுக்கு முன் மெல்பர்னில் நான் வேலை பார்த்த எரிபொருள் நிரப்பு நிலையம். (அதன் படம் கீழே) 
அப்போது அதன் பெயர் Liberty Oil.
AVI என்ற இஸ்ரேலியர் தான் அதன் உரிமையாளர். 


திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை வேலை பார்ப்பேன். பின்னர் வீட்டுக்கு வந்து குளித்து விட்டுப் பல்கலைக்கழகம் போக வேண்டும். இப்படியாக நான்கு ஆண்டுகள் தூக்கமில்லா இரவுகள் வேலையோடு கழிந்தது இங்கே தான்.

ஒரேயொரு பீட்சா போன்ற உணவுவகை (meat pie) மட்டும் தான் வயிறை நிரப்பும். தேநீர் குடிப்பதற்குக் கூட சரியான நேரமிருக்காது. வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள். தனியனாகத் தான் இந்த நிலையத்தைப் பார்த்துக்கொண்டேன். பேச்சு துணைக்கு என்று கூட  யாருமில்லை.

நான் இங்கே  பணியிலிருக்கும் போது கூட எதிர்த்திசையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு முறை துப்பாக்கி முனையில் களவு போனது,

அந்தக் கடையில் வேலை செய்த சகோதரர்கள் கொள்ளையர் போன கையோடு எனக்கு அழைத்துப் பேசியதும், என் நெஞ்சம் படபடவென்று அடித்ததும் இப்பவும் நினைப்பிருக்கு.

கடவுள் புண்ணியத்தில் இங்கே வேலை பார்த்த அந்த நான்கு ஆண்டுகளும் இரவுக் கொள்ளையர்கள் யாரும் வரவில்லை

அதிகாலை இரண்டு மணிக்கு கண்ணைச் சுழற்றும். நித்திரை வரக்கூடாது என்பதற்காகவே வெளியில் அந்தக் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டே அனைத்து பெட்ரோல் பம்புகளையும் எண்ணெய் போக அழுத்தி அழுத்தித் துடைப்பேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு உள்ளே வந்து குளிர் பதன அறைக்குள் நின்று சோடாப் பாட்டில்களை அடுக்குவேன். பிறகு கடைக்குள் தரையைச் சுத்தம் செய்து நுரை கொண்டு கழுவித் துடைத்து விட்டு, தின்பண்டப் பெட்டிகளை அழகாக அடுக்கி வைப்பேன்.

வெளியிலே இருக்கும், பொது கழிவறையையும் அழுக்குப் போகக் கழுவி வைப்பேன். சில நேரம் மலக் கழிவுகள் வெளியே நிறைந்து கிடக்கும், மாதவிடாய் இரத்தம் ஊறிய கூடமாக இருக்கும். நீர் பாய்ச்சும் கருவியைக் கொண்டு கழுவி, மெல்லிய கையுறையை கைகளில் போட்டுக் கொண்டு அசுத்தம் போக முழுவதும் கழுவிப் பளீர் வெண்மை ஆக்கி விடுவேன்

இடைக்கிடை கார்ச் சத்தம் கேட்டால் போட்டது போட்டபடி போட்டு 
விட்டுக் கடைக்குள் போய்காசை வாங்கிப் பெட்டியில் போடுவேன்
பல சமயம் சில கார்க்காரர்கள் காசு கொடுக்காமல் ஓடி அநீதி செய்திருக்கிறார்கள்.

அந்த இளம் வயதில் எனக்கு இந்த வேலை போய் விடுமோ என்ற 
பயத்தில் என் சட்டைப்பையில் இருந்த காசைப் பணப் பெட்டியில் 
என்னை ஏமாற்றி ஓடிப்போன கார்க்காரர்களின்  கணக்காக வரவில் 
வைத்த சந்தர்ப்பங்கள் பல உண்டுஅதாவது எட்டு மணி நேர 
வேலையை இலவசமாகச் செய்து விட்டு  வருவேன்
இதெல்லாம் முதலாளிக்குத் தெரியாது.

பார்த்தீர்களா பிரபா எவ்வளவு அழகாகக் கடையைச் சுத்தம் செய்திருக்கிறார் 
நீங்களும் இருக்கிறீர்களே?” என்று என்னை பற்றி நான் அங்கு இல்லாத நேரம் கடையில் பணிபுரிந்த சக நண்பர்கள் முதலாளி சொன்னதாகச் 
சொல்லி என்னைத் திட்டியிருக்கிறார்கள். 

ஆனால் அந்தக் கஷ்டத்திலும் படித்து முடிக்க வேண்டும் என்ற 
வீறாப்போடு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்து 
கற்று முடித்தேன்.

இன்று 21 வருடங்கள் கழித்து முதன் முறையாக அந்தப் 
பழைய நிலையம் இருந்த இடத்துக்குப் போய்உள்ளே 
சிறிது நேரம் நின்றேன்

புதுப் பெயர்புது உரிமையாளர்புது வேலையாட்கள் 
ஒன்றுக்கு மூன்றாக

ஏனோ அவர்களிடம் எதுவும் பேசத் தோன்றவில்லை.




 

நான் முன்னர் சென்ற அதே பேருந்திற்க்கு காத்திருந்து, அதில் அமர்ந்து கொண்டே இவற்றை அசை போடுகிறேன். #மெல்பர்ன்_உலாத்தல்

By @kanapraba



Saturday, December 14, 2019

இஞ்சி ஏலக்காய் டீ

இஞ்சி ஒரு சிறிய  துண்டையும், இரண்டு ஏலக்காயையும் நன்றாக பொடித்து  தண்ணீர் ஊற்றி அதன் சாறு முழுவதும் உள்ளே இறங்கும் படி ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து  பின்  சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, அதன்பின்
 டீத்தூள் நுரை வரும் வரை கொதிக்க வைத்து கடைசியில்  பால் ஊற்றி அது பொங்கும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி வடி கட்டினால் அட்டகாசமான தேநீர் கிடைக்கிறது.
அதுவும் இந்த மழை நேரத்தில் அற்புதம். முயற்சி செய்து பாருங்கள் 


Monday, November 18, 2019

சுஜாதா ஜாதி

ஞாயிற்றுக்கிழமையானால் நான் தவறாமல் பார்ப்பது - ஹிண்டு பத்திரிகையின் 'மேட்ரிமோனியல்’ விளம்பரங்களை. எனக்குக் கல்யாண உத்தேசம் எதுவும் இல்லை. அது 37 வருடங்களுக்கு முன்னேயே நிகழ்ந்து, சண்டை போட சப்ஜெக்ட் தீர்ந்துபோய் நானும் மனைவியும் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டோம்.
'ஹிண்டு’வின் இந்தத் திருமணப் பக்கங்கள் நம் சமூகத்தின் உண்மையான குறிகாட்டி. இந்த நாட்டில் குறிப்பாகத் தென் நாட்டில் அத்தனை சாதிகளும் பத்திரமாக இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.
உ-ம்: ஆர்சி வன்னியர், தெலுகு புராட்டெஸ்டன்ட், கிறிஸ்டியன் நாடார், ரோமன் கத்தோலிக், கள்ளர் - முக்குலத்தோர், தமிழ் முஸ்லிம், சன்னி உருது, பலிஜா நாயுடு, கேரளைட் விஸ்வகர்மா, பாலக்காடு ஈழவா, தெலுகு யாதவா, வன்னியகுல ஷத்ரியா, வடமா பரத்வாஜா, வடகலை நைத்ரியகாசியபம்!
'ஆயிரம் உண்டிங்கு சாதி - இது ஞாயிறுதோறும் தவறாத சேதி’ என்று பாரதி இப்போது பாடியிருப்பார்.
இதை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்வதைவிட, இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள்தாம் எனக்கு முக்கியமாகப்படுகின்றன.
1. சாதி இல்லை என்கிற கொள்கை வீட்டுக்கு வெளியே மற்றவர்களுக்கு.
2. தங்கள் குடும்பத்துக்கு வரும்போது மட்டும் சாதி பாராட்டுகிறார்கள். இதற்குப் பல யதார்த்தமான காரணங்கள் இருக்கலாம். உணவுப்பழக்கங்கள், மொழி, பெறப்போகும் பிள்ளைகள் குழப்பம் இல்லாமல் வளர்வது.
3. பிராமணர்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கத்தினரும் சாதி பாராட்டுகிறார்கள் - கல்யாணம் என்று வரும்போது.
4. 'கிரீன்கார்டு ஹோல்டர்’ என்கிற புதிய சாதி உருவாகிக்கொண்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு, மெடிக்கல் அட்மிஷன் - இவற்றுக்கும் சாதி தேவைப்படுவது வேறு விஷயம்.
இவற்றை மீறித்தான் கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன. அதுவும் வேறு விஷயம். அதன் பின்னும் சாதிகள் பத்திரமாக இருப்பதுதான் செய்தி.
உதாரணம்: Mother brahmin, father vanniyar, 26-poorattathy, multinational company, five figure salary, seeks graduate girl brahmin or pure vegetarian..

இந்த விளம்பரத்தில் ஒரு நாவலுக்குரிய சமாசாரமே இருக்கிறது.

Thursday, July 25, 2019

தம்பிக்கலை அய்யன் கோவில் - புதிய எக்ஸைல்

820 பக்க புதிய எஸ்சைல் படித்து கொண்டிருக்கிறேன், எனக்கு சொந்த ஊரே ஈரோடு மாவட்டம் தான், கோவை வாழ்விடம். எனக்கு நன்கு தெரிந்த பலமுறை போன தம்பிக்கலை அய்யன் கோவில் பற்றி சாரு எழுதியது வியப்பை ஏற்படுத்தியது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தாராம், இவரிடம் நூற்றுக்கணக்கான பசுக்கள் இருந்ததாம், அவற்றை இவரது தம்பி கவனித்து வந்தானாம். ஒருநாள் ஒரு பசுவின் மடியில் ஒரு நாக பாம்பு பால் குடித்து கொண்டு இருக்கும் அதிசய காட்சியை கண்டானாம்.
இதை அண்ணனிடம் சொல்ல, அவரோ என்னடா கதை விடுகிறாய் என ஓங்கி அடித்தாராம், அடுத்தநாள் பண்ணைக்கு கூட்டிப்போய் அதை நேரடியாகவே அண்ணனுக்கு காட்ட, அந்த காட்சியை கண்ட பணக்காரர், வீட்டுக்கு திரும்பி வராமல் அங்கேயே அமர்ந்து சித்தராகி விட்டாராம். அதன் பின் எல்லா விஷத்தையும் முறியடிக்கும் தம்பண கலை கைவர பெற்றதால், அவர் தம்பண கலை அய்யன் என அழைக்கப்பட்டாராம்.
இவரின் விஷ முறிவு க் கலை இந்தியா முழுவதும் பரவி இருந்ததாகவும், பல மன்னர்கள் இவரிடம் மருத்துவம் பெற்று போனதாகவும் கதைகள் உலவுகின்றன. இவரது பெயர் தம்பண கலை அய்யன்தான் மருவி தம்பிக் கலை அய்யன் என மாறியதாம்.
இவர் சமாதி அடைந்த போது இவருக்கென உருவாக்கப்பட்ட கோவிலே தம்பிக் கலை அய்யன் கோவிலாம்.
வெறும் அம்பது வீடுகள் கொண்ட இந்த ஊரில் (தங்கமேடு) இங்கு கார்த்திகை தீபத்தின் போது, இந்த மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் வந்து லட்சம் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கமாம்.
நமக்கு பக்கத்தில் உள்ள கோவிலுக்கு பின்னால் உள்ள, தெரியாத செய்திகள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

Tuesday, July 23, 2019

என் குரு

மலையாள சார்லி பார்த்திருக்கீங்களா? அதுல வர துல்கரை விட சிறந்த மனிதர் ஒருவர் நிஜத்திலேயே இருக்கார். பேரு விஜயகுமார். ஆனா மனுசன் இந்த உலகத்துல கால் பதிக்காக இடமே இல்ல, இப்போகூட ஆஸ்திரேலியாவில் கங்காரு கறியோ, அமெரிக்காவில் கேப்பஸினா காபியோ, இந்தியாவின் ஏதாவது அடர்ந்த வனம் நடுவில கேம்ப் போட்டோ இருக்க கூடும்.
என்ன வயசுதான் 70 இருக்கும்,

காதலோ, காமமோ, கடவுளோ, புத்தகமோ, அறிவியலோ எதை பத்தி வேணாலும் ரெண்டு மணி நேரம் போரடிக்காம மனுஷன் பேசுவார். கொஞ்சம் கூட தற்பெருமையோ, அனத்தாலோ இருக்காது (40 வயசுக்கு மேல ஆகிட்டவே சில பேரோட, முக்கியமா சொந்தக்காரனுக  இம்சை தாங்காது, அதும் அட்வைஸ் பண்ணும்போது  ஓங்கி அறையலாம்னு தோணும்) clear cut pathன்னு சொல்வாங்களே அப்படி இருக்கும்,

நல்ல வசதியான குடும்பத்துல பிறந்தவர், இப்போ கூட ஒரு கம்பெனி நடத்துறார் ஆயிரம் பேர்க்கு பக்கமா வேலை செய்யறாங்க, போலீஸ்ல இருந்து, இங்க பெரிய ஆளுகன்னு சொல்ற எல்லார் கூடவும் நெருங்கிய நட்புண்டு. சுயநலத்துக்கு அவங்களை எப்பவும் உபயோக படுத்த கூடாதுங்கிறதுல தெளிவா இருப்பார். எளிமையான மனிதரும் கூட.  கார் ரேசர், 35 வயசுல ஒரு விபத்துல முதுகெலும்பில நல்ல அடி, ரெண்டு வருஷம் படுக்கையிலேயே கிடந்திருக்கார்.

 இப்போ கூட அதோட பாதிப்பு இருக்கு, நல்லா நிமிர்ந்து நடக்க முடியாது, அதை பற்றில்லாம் கவலையே படலை மனுஷன், தேடல் தான் வாழ்க்கைன்னு சொல்வார். "அப்படி என்ன தேடி கண்டுபிடிச்சீங்க?"ன்னு ஒரு தடவை கேட்டேன், "அன்பு அது மட்டும்தான் வாழ்க்கை"ன்னார். சின்ன குழந்தைகள்கிட்ட கூட ஆலோசனை கேட்பார், இவருடைய பையனும், பொண்ணும்  கல்யாணமாகி ஆஸ்திரேலியா, கலிபோர்னியாவில இருக்காங்க.  நல்லா ரசனையா வாழுறது எப்படின்னு ரெண்டு நாள் கூட சுத்தினாவே தெரிஞ்சிக்கலாம்னு. ஒரு நல்ல மலை பிரதேசத்துல கடும் குளிர்ல மூணு பெக் உள்ள போன பின்னாடி, சில பழைய பாடல்கள் பாடினார். குரல் அவ்ளோ அழகு . வாழ்க்கைக்குமான மொத்த பரிசு அது.

எவ்ளோ வயசானாலும், காலத்தால பழிவாங்க முடியாத குழந்தையா வாழுற சில பேர் இருக்காங்க அதில நம்மாளு முதல் இடத்துல இருப்பார். "காஷ்மீர் டு கன்னியாகுமரி" ட்ரிப் ஒண்ணு நாம ரெண்டு பேரும் போலாம் ன்னு சொல்லிருக்கார். நடக்கும். எனக்கு அவர்கிட்டயோ அவருக்கு என்கிட்டயோ எந்த எதிர்பார்ப்பும் இல்ல, வரவும் வராது.

இதே மாதிரிதான் தியாகு, என்னை சின்ன வயசில இருந்து பாதை மாறாம பார்த்துக்கிட்டார்னு சொல்லலாம், இந்த புத்தகங்கள் மேல காதல் வர காரணமே அவர்தான்... ராஜ பரம்பரை, இப்போ சொத்து எல்லாம் போய்டுச்சு, அதுக்காகவெல்லாம் அவர் கவலை படமாட்டார்னு தெரியும், கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு முதல்லயே முடிவெடுத்து அதிலேயே உறுதியா இருக்கார்.  ஒண்ணா சரக்கடிப்போம், பயங்கர சண்டைல்லாம் வந்திருக்கு, ரெண்டு நாளைக்கு மேல அது நீடிச்சதில்ல. இப்போ கூட ஏதாவது பிரச்சனைன்னா, சந்தோஷம்னா  அவருக்கு தான் முதல் போன் பண்றேன். ஊருக்கு போறப்ப பத்து புத்தகமாவது வாங்கிட்டு போய் கொடுக்கிறேன். இப்ப அநேகமா அவரை சுத்தியும் குறைஞ்சது பத்து பசங்களாவது இருப்பாங்க, இல்லைன்னா  ஏதாவது ஒரு புத்தகம் படிச்சிட்டு தோட்டத்துல ஆடு மேச்சிட்டு இருப்பார்.

எனக்கு குரு, வழிகாட்டி எல்லாம் இந்த மாதிரி பிரியமா வாழ்க்கையை வாழ தெரிஞ்ச  மனுசங்கதான்.

Thursday, July 11, 2019

சிவலிங்கம் மற்றும் கருணாகரன்

கோவையில் நான் குடியிருக்கும் ஏரியாவில் டீ குடிப்பதற்கு பதில் விஷத்தை குடித்து விடலாம், நல்ல பசியாக இருக்கிறதென்று ஒரு கடையில் டீயும் வடையும் வாங்கிவிட்டு என்ன செய்வதென்று முழித்து கொண்டிருந்த நேரத்தில், சிவலிங்கம் நினைவுக்கு வந்தார், டீ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம், சுடச் சுட வடை போடுகையில் கையில் காசிருக்கிறதோ இல்லையோ வாங்கி விடுவோம், பணம் கொடுத்தாலும் கடன் சொன்னாலும் ஒரே ரியாக்ஷன் தான் கொடுப்பார், பழைய பாக்கியென எங்களிடம் ஒரு நாளும் கேட்டதே இல்லை. சுப்பு மாம்ஸிடம் சதா கோபித்து கொண்டு "இனிமேல் இங்க டீ குடிக்கவே கூடாதுடா" என கட்டளையிட்டு விட்டான், கருணாகர அண்ணனும் ஆபத் பாண்டவன், கடைசியாக நான் பார்த்தபோது அவர் ஒரு பெரிய பொட்டணத்தில் வடை கட்டி கொடுத்தார், காசு கொடுக்க போனதற்கு கோபித்து கொண்டார், அதில் அன்பும் சுவையும் நிறைய இருந்தது. நான் கடந்து வந்த பாதைகள் பிரியங்களால் நிறைந்திருந்தன

Wednesday, April 17, 2019

கலவரம்

"ஒரு லட்ச ரூவா இருக்கு, ரொம்ப நாள் ஆசை, ஒரு நல்ல கார் வாங்கி கொடுங்க" என்று என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் அன்பொழுக கேட்டதற்கு இணங்க. "முதல் கார் மாருதி எடுக்கலாம், ஆறுமாசம் அதிலே ஓட்டி பழகி (இடிச்சு?) அப்புறம் எக்சேஞ்சு போட்டு நல்ல வண்டி எடுத்துக்கோங்க, மாருதி நல்ல ரேட்ல எக்சேஞ் போகும்" என்று olx, car wala, car Dicky(?) etc., மற்றும்  தெரிந்தவர்களிடம் விசாரித்து,  ஒரு வண்டியை தேர்ந்தெடுத்து, விலை திருப்தியாக, மெக்கானிக் கூட்டி போய் சோதனை செய்து எடுத்து வந்தோம்.

அவர் மகன் ஓரளவு வண்டி ஓட்டுவான், நம்மாளுக்கு "இதான் ஸ்டேரிங்கா?" என்ற அளவு கார் அறிவு. ஆனால் BMW பரம்பரையாய் வைத்திருந்தது போல விளம்பர பார்ட்டி.

அதனால் அவரின் சொந்தக்காரர்கள் என ஒரு இருபது பேரை அன்றே வீட்டுக்கு கூட்டி வந்து பெருமை அடித்து கொண்டிருந்தார். இரவு ஒரு பத்து மணி இருக்கும், கேஸ் வெடித்தது போல, பயங்கர சப்தம். என்னடா என ஓடிப்போய் வெளியே பார்த்தால், நம் தலைவர் காரை, கட்டி கொண்டிருந்த புது வீட்டு சுவரில் விட்டு மோதி மயங்கி விழுந்திருந்தார். பத்து நிமிடங்கள் கழித்து தெளிந்து "எனக்கு ஒண்ணுமில்லை" என கதறி கொண்டிருந்தார்.

நிற்க,

அதற்கு முன்னாள் நடந்த சம்பவம் என்னவெனில், இந்த கூட்டம் சரக்கடித்து சநதோஷமாக இருந்த பொழுதில், இவரின் மச்சினிச்சி (அதற்கும் ஐந்து வருடத்தில் டிக்கெட் வாங்கிவிடும் வயதுதான்) ஏதோ கலாய்த்து கொண்டிருந்திருக்கிறது.

தலைவர் திரைப்படம் காட்ட எண்ணி,  காரை எப்படியோ ஸ்டார்ட் செய்து விட்டார், கீர் போட்டு வண்டி எடுக்கையில் ஒரு குழந்தை குறுக்கே வந்து விட்டது, பிரேக் அடிப்பதாக நினைத்து எக்ஸ்லேட்டரை மிதித்து விட்டார், தெய்வாதீனமாக அந்த குழந்தை எஸ்கேப், தலைவர் நேராக சென்று புதிதாக கட்டி கொண்டிருந்த வீட்டை நாசம் செய்து விட்டார்...

இதில் உச்ச கட்ட நகைச்சுவை என்னவெனில் அவர் மகன் அவரை காப்பாற்ற வீட்டின் காம்பௌண்ட் சுவரின் மீது ஏறி குதித்து காலை உடைத்து கொண்டான்

புதிய வீட்டை கட்டி கொண்டிருந்தவருக்கு ஐம்பதாயிரம், கார் எஞ்சின் முதற்கொண்டு காலி அதற்கு எழுபதாயிரம், பையன் கால் உடைந்ததற்கு இருபதாயிரம் என மச்சினிக்கு வேண்டி, செலவு செய்து கொண்டிருக்கிறார் அன்பின் பக்கத்துக்கு வீட்டு விளம்பரம்... தேவையா?

Monday, March 18, 2019

வியக்க வைத்த பெரும் வைர திருட்டு

108 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.702 கோடி) என்பதுதான் உலகிலேயே மிக அதிக மதிப்பில் நடத்தப்பட்ட வைரத் திருட்டு!
வைரங்களால் பிரபலமான நாடு பெல்ஜியம். அங்கே ஜெம் மாகாணத்தில் அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் மிகவும் பரபரப்பானது. நகரத்தின் 80 சதவீத மக்கள் வைரம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள். உலகத்துக்குத் தேவைப்படும் 84 சதவீத வைரம் உருவாகும் இடம் இது. 380 வைரத் தொழிற்சாலைகள் வைரங்களைத் தயாரித்து 1,500 நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன. இங்கே இயங்கும் வைரத்தரகர்கள் மட்டும் 3,500 பேர்.
அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் என்பது இரண்டு மாடிகளும் அண்டர் கிரவுண்டும் கொண்டது. அங்கேதான் ஷேஃப்ட்டி லாக்கர்கள் அடங்கிய பாது காப்பு அறை உள்ளது. அந்த லாக்கர்களை பொதுமக்களும், வர்த்தகர்களும் வைரம், தங்கம், பணம், பத்திரங்களை பாதுகாக்க உபயோகித்தார்கள்.
இந்தக் கட்டிடத்துக்கும் பாதுகாப்பு அறைக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நவீனமானவை. வானத்தில் எப்போ தும் போலீஸாரின் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றிக் கொண்டேயிருக்கும். ஆயுதம் ஏந்திய வீரர்கள் வாகனங்களில் உலா வருவார்கள். கட்டிடத்துக்கு அருகில் குண்டு துளைக்க முடியாத போலீஸ் பூத். இன்னொருபுறம் ஒரு போலீஸ் ஸ்டேஷன். பொல்லார்ட்ஸ் என்றழைக்கப்படும் இரும்புக் கம்பங்கள் சாலைகளின் குறுக்கில் அமைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் அவ்வளவு சுலபமாக கட்டிடத்தை நெருங்கிவிட முடியாது. வெளி கேட்டில் எல்லா அடையாள அட்டைகளும் சரியாக இருந்தால், அவர்கள் இயக்கியதும் இந்த இரும்புக் கம்பங்கள் தரையோடு இறங்கிக் கொண்டு வாகனத்துக்கு வழி தரும்.
கட்டிடத்தை 24 மணி நேரமும் கேமராக்கள் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டேயிருக்கும். அந்தப் பாதுகாப்பு அறைக்குச் செல்வதற்கு முன்பாக இரண்டு கதவுகள். கண்ட்ரோல் அறையில் இருந்து அனுப்பப்படும் சங்கேத ஓசையைக் கேட்ட பிறகே கதவுகள் திறக்கும். பிரதான பாதுகாப்பு அறையின் முக்கியமான கதவு ஸ்டீல் மட்டும் காப்பரால் செய்யப்பட்டது. அந்தக் கதவின் எடை மூன்று டன். அந்தக் கதவை இயந்திரம் கொண்டு டிரில் செய்து திறக்க முயன்றால் இடைவிடாமல் 12 மணி நேரம் மிக சக்தி வாய்ந்த இயந்திரம் செயல்பட வேண்டும். அந்தக் கதவைத் திறக்க சாவியும் போட வேண்டும். அந்த சாவியின் சைஸ் என்ன தெரியுமா? கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கும்போது, அடையாளமாக பெரிய சைஸில் ‘அட்டை சாவி' செய்து கொடுப்பார்கள் அல்லவா, அந்த மாதிரி நிஜத்தில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட சாவி அது.
தவிர லாக்கர்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தரப்பட்டுள்ள நான்கு இலக்க ரகசிய எண்களையும் பதிய வேண்டும். இதைத் தவிர, அந்தப் பகுதியில் மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தைக் கண்டுபிடித் தால் எச்சரிக்கும் இன்ஃப்ராரெட் ஹீட் டிடெக்டர்ஸ், புதிய அசைவுகள் மற்றும் வெளிச்சம் தென்பட்டால் எச்சரிக்கும் சென்சார், அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பத்தில் மாறுதல் ஏற்பட்டால் உடனே அறிவிக்கும் சீஸ்மிக் சென்சார், இதைத் தவிர கதவை அனுமதியின்றி முறையில்லாமல் திறக்க முயற்சி செய் தால் அதை அறிவிக்கும் காந்த மண்டலம்.
2003 பிப்ரவரி 14 அன்று பெல்ஜியம் தேசம் காதலர் தினத்தைக் கொண்டாடியது. மறுநாள் இரவில் இத்தனை பிரமாண்டமான ஏற்பாடுகளை மீறி அந்த வைர மையத்தின் பாதுகாப்பு அறை கொள்ளையடிக்கப்பட்டது.
தகவல் அறிந்து காவல்துறை வந்து பார்த்தபோது அந்தப் பாதுகாப்பு அறையில் இருந்த 160 லாக்கர்களில் 123 லாக்கர்கள் டிரில்லிங் இயந்திரம் மூலம் திறக்கப்பட்டிருந்தது.
அந்த லாக்கர்களின் உரிமையாளர்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஆய்வாளர்களும் குவிந்துவிட்டார்கள். இதுதான் உலகிலேயே மிக அதிக மதிப் பில் அடிக்கப்பட்ட லாக்கர் கொள்ளை.
கொஞ்சம் தாவி ஒரு ஃப்ளாஷ்பேக்குக்குச் சென்று வரலாம். அவன் பெயர் லியார்னாடோ நோடார்பார்டோலோ. இத்தாலியைச் சேர்ந்தவன். ‘பார்ன் கிரிமினல்’ என்பார்களே அப்படி சிறு வயதிலேயே சின்னச் சின்ன திருட்டுக்களில் தன் குற்றலீலைகளைத் தொடங்கி, நகைக் கடைகளில் கொள்ளையடிப்பதைத் தொழிலாகவே செய்துவருபவன்.
பழம்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் 2001-ல் ஒரு குறிப்பிட்ட நகையைக் கொள்ளையடித்துத் தரச் சொன்னார். அவனுக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு லட்சம் யூரோ கரன்சிகள். லியார்னாடோ புத்திநுட்பம் கொண்ட பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சிலரை கூட்டணியாக அமைத்துக்கொண்டு, அந்தக் கொள்ளையை சிறப்பாக செய்து முடித்தான்.
அடுத்து அவனுக்கு வந்த அழைப்பு வேறு ஒரு நபரிடம் இருந்து. ஒரு ரகசிய இடத்தில் சந்தித்தபோது, அங்கிருந்த மூன்று பேரை அந்த நபர் அறிமுகப்படுத்தினான். இந்த லாக்கர்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைச் சொல்லி, அதை தலைமையேற்று நடத்தித் தரச் சொன்னான். லியானார்டோ தன் பக்கத்தில் இருந்து ஒரு நபரைச் சேர்த்துக் கொண்டான். ஐந்து பேர் கொண்ட படை உருவானது. அழகாக திட்டம் போட்டு படிப்படியாக நிறைவேற்றினான். இதற்கு அவன் எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை வருடங்கள்.
முதல் வேலையாக, அந்தப் பாதுகாப்பு அறையில் தன் பெயரில் ஒரு லாக்கர் எடுத்துக்கொண்டான். அவனுக்கு அடையாள அட்டைகள் தரப்பட்டன. அவன் அடிக்கடி தன் லாக்கரை இயக்க அங்கு சென்று வரத் தொடங்கினான். அந்த இடத்தின் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவனுக்கு அத்துப்படியாயின.
ஒரு மீட்டர் நீளம் உள்ள அந்த சாவியின் சரியான டூப்ளிகேட்டை ஐவரில் ஒருவன் செய்து முடிக்கவே சில மாதங்களாயின. சின்ன கேமராவை மறைவாகப் பொருத்தி அந்த நான்கு இலக்க பாஸ்வேர்டு எண்களை கச்சிதமாகக் அறிந்தான் லியார்னாடோ. ஒவ்வொரு சென்சார்களையும் கேமராக்களையும் எப்படி ஏமாற்றுவது என்று பாடம் படித்தார்கள். எலெக்ட்ரானிக் செயல்பாடுகளை முறியடிக்கும் கருவிகளை உருவாக்கினார்கள். பாலியெஸ்டர் ஷீல்ட் வெப்பத்தை ஏமாற்றும் என்று புரிந்து அதைச் செய்தார்கள்.
அலுமினியம் பிளாக் செய்து அதைக் கொண்டு காந்த மண்டலத்தைக் கட்டுப்படுத்தினார்கள். பெண்கள் கூந்தலுக்காகப் பயன்படுத்தும் சாதாரண ஸ்ப்ரே மூலம் சில சென் சார்களை கவிழ்க்க முடியுமென்றும், பீன் பேக்குகளில் நிரப்பப்படும் பின் பால்ஸ் மூலம் கேமராக்களை ஏமாற்ற முடியும் என்றும் கண்டறிந்து சின்னச் சின்ன கருவிகள் செய்தார்கள். போலி அடையாள அட்டைகள், இரும்புக் கம்பங்களை இயக்கும் கருவி என்று கச்சிதமான ஏற்பாடுகள். அதற்குத்தான் இரண்டரை வருடங்கள்!
சரி, இதெல்லாம் உலகத்துக்கு எப்படித் தெரிய வந்தது?
இவையெல்லாம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கைது செய்யப்பட்ட பிறகு லியானார்டோவே சொன்னவை. ஆம்! லியானார்டோவும், இவன் ஏற்பாடு செய்த நபரும்தான் மாட்டிக் கொண்டார்கள். திட்டத்தின் சூத்திரதாரியும் அவன் ஏற்பாடு செய்த மூன்று பேரும் கொள்ளையடிக்கப்பட்ட அத்தனை வைரங்கள், நகைகளுடன் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்கள் இந்த நிமிடம்வரை கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த நகைகளும் மீட்கப்படவில்லை.
இந்த லாக்கர் கொள்ளையைப் பற்றி ஒரு விரிவான புத்தகம் ‘ஃப்ளாலெஸ்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டின் பாரமவுன்ட் நிறுவனத்தினர் இந்த சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க உரிமை வாங்கியிருக்கிறார்கள்.
எல்லாம் சரி! இவ்வளவு சாமர்த்திய மாக இரண்டரை வருடங்கள் திட்டம் போட்டு கொள்ளையை செயல்படுத்திய லியார்னாடோ எப்படி போலீஸில் சிக்கினான்?
லியார்னாடோ செய்த ஒரு மிகப் பெரிய முட்டாள்தனம்… கொள்ளை நடந்த அறையில் லாக்கர்களை மற்றவர்கள் டிரில்லிங் இயந்திரம் கொண்டு திறந்துகொண்டு இருந்தபோது எடுத்துச் சென்ற சாண்ட்விச்சை சாப்பிட்டுத் தொலைத்ததுதான். அதிலிருந்து அவ னுடைய எச்சிலுடன் கூடிய ஒரு பிரெட் முனை கீழே விழுந்துகிடக்க… அதிலிருந்து டி.என்.ஏவை எடுத்த போலீஸ் மிக சீக்கிரமே அவனை நெருங்கிவிட்டது. கொள்ளையர்களுக்கு லியார்னாடோ தெரிவிக்கும் அறிவுரை என்பது ‘கொள்ளை சமயத்தில் எதையும் தின்று வைக்காதீர்கள்’ என்பதாக இருக்குமோ? 

இதுபோன்ற பல சுவாரஸ்ய குற்ற சம்பவங்களை பின்னணியாக வைத்து, தொகுத்து, "எப்படி இப்படி" என  புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். கீழ் கொடுத்துள்ள இணைப்பில் கிடைக்கிறது. விலை 102