Friday, April 22, 2016

கோவையில் சாப்பிட கூடாத ஹோட்டல்களில் ஒன்று

எக்ஸ்பிரஸ் சிக்கன் என்று ஒரு ஹோட்டல் மேட்டுப்பாளையம் ரோட்டில் தொப்பம்பட்டி அருகே உள்ளது. பெயர் நன்றாக இருக்கிறது, கார் நிறுத்தும் வசதியும் இருந்தது, கடையும் பார்க்க நன்றாகவே இருக்க, சாப்பிடலாம் என முடிவு செய்து உள்ளே நுழைந்தோம், நானும் என் நண்பனும்.

ஆர்டர் மெனுவெல்லாம் பயங்கரம், விலையும் அதி பயங்கரம். அந்த விலைக்கு தக்க உணவு வருமென எக்க சக்க எதிர் பார்ப்பில் ஆர்டர் செய்தோம். முதலில் ஒரு மலையாள சர்வர், தண்ணீர் வைத்தார், சுத்தம் செய்யபடாத டம்ளர், தண்ணீர் வேறு வித்யாசமான நிறத்தில் இருந்தது. அதை எடுத்து போக சொல்லிவிட்டு, தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்தோம்.

சிக்கன் பிரியாணி சொல்லி இருந்தேன், அதில் மருந்து போல ஒரு வாசம், என் நண்பன் சப்பாத்தியும் பள்ளிபாளையம் குழம்பும் சொன்னவனும் நெளிந்தான். பாதியில் வைத்து விட்டு எழ வேண்டி வந்தது. நேரடியாக பத்து நிமிடம் செலவழித்து சொல்லவும் செய்தோம். அதை அந்த கடையின் கல்லாவில் இருந்தவர் உணர்ந்ததாக தெரியவில்லை. (கடை ஓனராம்ல) 

இதெல்லாம் நடந்தும், பாதி உணவு தட்டில் இருந்தும் அந்த மலையாளி டிப்ஸ்க்கு தலையை சொறிந்த படி நின்றதுதான் வேதனை. (ஏன் மலையாளிகள் எங்க போனாலும் போழைக்கிறாங்கன்னு இப்போ தெரியுதா மக்களே)

அறிய வேண்டிய கடைகள் மட்டுமல்ல அறியகூடாத, செல்லகூடாத கடைகளும் கோவையில் உண்டு. அதில் ஒன்று இந்த express chicken. பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதன் வாடிக்கையாளர்கள் வேண்டுமானால் தாராளமாக சாப்பிடலாம், பெரிய ஹோட்டல் என்று நம்பி, குடும்பத்துடனோ நண்பர்களுடனோ தயவு செய்து போக வேண்டவே வேண்டாம். 

அய்யா ஹோட்டல் நடத்தும் தெய்வங்களே, ஒரு வாடிக்கையாளர் என்பவர் உங்களுக்கு சங்கிலி தொடர் போன்றவர், அவரால் உங்கள் வருமானத்தை உயர்த்த முடியும், புதிய வாடிக்கையாளர்களை சிபாரிசால் தர முடியும், தயவு செய்து அவரை எளிதாக இழக்காதீர்கள்...

Saturday, April 16, 2016

இரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில

இளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை,

நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இசை...
இரவுக்கென சில பிரத்யோக பாடல்கள் உண்டு. அவற்றில் சில.

கேட்க அமைதியான சூழலை தேர்ந்தெடுங்கள், மொட்டை மாடி, குளிர் காற்று, ஹெட் போன், தனிமை வாய்க்குமாறு பார்த்து கொள்ளுங்கள், மெல்ல கண்மூடி அனுபவித்தபடி கேட்கையில், உங்களுக்குள் வேறொரு உலகம் திறக்கும்.
பத்து பாடல்களை வரிசை படுத்தி இருக்கிறேன், மேலும் நேரம் கிடைக்கையில் இன்னும் முயற்சிக்கிறேன்.

"நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான், நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்"
என்று இடையில் வரும் இந்த வரிகள் ஈர்த்தாலும் மொத்த பாடலும் சுகமான தெளிந்த நீரோடை

1. மறுபடியும்: எல்லோரும் சொல்லும் பாட்டு
----------------------------------------------------------------------
"நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை"
மென்மையான ரஜினியும், spbயின் மாய குரலும் கட்டி போடும், காதலின் வழியே கசியும் ரகசியங்களை பாடலாக, இசையாக மொழி பெயர்த்து கொடுத்திருப்பார் ராஜா

2.தம்பிக்கு எந்த ஊரு: காதலின் தீபம் ஒன்று
-----------------------------------------------------------------------
"கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்"
இது, நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசீலா பாடிய, மகளுக்கான தாயின் முழு பிரியம் கலந்து கண்ணோரம் நீரை துளிர்க்க வைக்கும் மற்றொரு அற்புதம் இது.

3. கேளடி கண்மணி : கற்பூர பொம்மை ஒன்று
-----------------------------------------------------------------------
எஸ் ஜானகி பாடிய இது காதல் தாலாட்டு பாட்டு, "ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக" லயிப்பில் ஆழ்த்திவிடும் ராகம்


4. கோபுர வாசலிலே: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
-------------------------------------------------------------------------
நம்மை ஒரு அரசனாக உணர செய்ய வேண்டுமெனில் இந்த பாடல் சரியான தேர்வு, "வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே, பெண்பார்வை கண்கள் என்று பொய் சொல்லுதே" 
என பல்லவியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்கி தந்திருப்பார் ஜேசுதாஸ்.

5. ரெட்டை வால் குருவி : ராஜராஜ சோழன் நான்
----------------------------------------------------------------------------
"அன்பே நீயே அழகின் அமுதே" என மனோவுடன் ஜானகி இணைந்து பாடிய இது மிக பெரிய வரவேற்பை பெற்ற மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

6. செம்பருத்தி: நிலா காயும் நேரம் சரணம்
-----------------------------------------------------------------------------
"ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ, ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ"
ஒரு முழு சங்கீத கச்சேரிக்கு உரிய இசை, சாமான்ய மனிதனையும் ஈர்த்து அந்த மெல்லிய சோக உணர்வை கொடுத்து விடக்கூடிய மித்தாலி எனும் அதிகம் அறியப்படாத பெண் பாடகி பாடிய காலத்தை கடந்து நிற்கும் பாடல் இது.

7. தளபதி: யமுனை ஆற்றிலே
---------------------------------------------------------------------------------
"தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே" 
என விரியும் அற்புதமான கவிதைக்கு அதே கவிதை போல் இசை. ஜானகியின் குரலிலும் இந்த பாடல் இருந்தாலும், ஜேசுதாஸ் குரலில் கேட்கையில் இது உச்ச பரவசம்.

8. கிளிபேச்சு கேட்கவா : அன்பே வா அருகிலே
----------------------------------------------------------------------------------
"சொன்னாலும் இனிக்குது, நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே" ரஜினியை அமைதியான, நெகிழ்வான மனிதனாக காட்டும் பாடல்களில் இது ஒன்று, அண்ணன் தாயாக மாறும், மிக மிதுவான ஒரு நல்ல மெல்லிசை பாடல் இது 

9. நான் சிகப்பு மனிதன்: வெண்மேகம் விண்ணில் இன்று கண்ணில் இன்று பன்னீர் தூவும் 
------------------------------------------------------------------------------------
முதல் கணினி இசை, முதல் தீம் இசை தமிழில் என்ற பெருமைகள் பல இப்படத்திற்கு உண்டு,
"கிளிகள் முத்தம் தருதா, அதனால் சப்தம் வருதா",
spbயின் உச்சகட்ட சிறப்பான பாடல்களில் இது முக்கியமானது

10. புன்னகை மன்னன் : என்ன சப்தம் இந்த நேரம்
--------------------------------------------------------------------------------------

இது இரவுக்கான நான் பரிந்துரை செய்யும் வெறும் பத்து இசை பாடல்கள் மட்டுமே, இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஆயிரக்கணக்கான நீளும் ராஜாவின் பாடல்களில் எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத ஒரு குழப்பமே மிஞ்சும். தாங்களுக்கு பிடித்த பாடல்களையும் இயன்றால் பின்னூட்டம் இடுங்கள்


Thursday, April 7, 2016

கொலைதான் தீர்வோ? எக்ஸ்ப்ரஸ்சிறுகதை

  தன் இளம் மனைவி, இன்னொரு இளைஞனுடன் உரசியபடி நடந்து போன சிசிடிவியின் காட்சியை கண்டதும் உச்ச மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தான் சைபர் கிரைம் உயர்அதிகாரி நரேன். வேறொரு கேஸ் விசயமாக ஒரு தனியார் ஹோட்டல் அறையை சிசிடிவியின் தொடர்பு மூலம் தன் அறையில் இருந்த டிவியை கண்காணித்து கொண்டிருந்த அவன், அதற்கு அருகில் இருந்த அறையில் வெளிப்பட்டு  சர்வ சாதாரணமாக இளஞ்ஜோடிகள் போல் தன் மனைவி, இன்னொருவனுடன் கைகோர்த்து சிரித்தபடி சென்ற  இந்த காட்சியில் திகைத்துப் போனான்.

  நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டில் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான் நரேன், வனிதாவிற்கு குடும்ப பாங்கான தோற்றம், வசதி அதிகம் இல்லாவிட்டாலும், நல்ல குடும்பமாக இருந்தது. தனது பணியின் மூலம், வனிதாவின் முன்கதையை சுலபமாக தெரிந்து கொண்டிருக்கலாம், ஆனால் அவளை பெண் பார்த்த உடன் அந்த எண்ணமே வரவில்லை. அதுவுமில்லாமல் அவன் தன் பணியை சுயநலத்திற்க்காக பயன்படுத்தியதில்லை, திருமணமானதில் இருந்து கொஞ்சம் கூட வெறுப்போ, கோபமோ, வேறு சந்தேகபடும்படி நடவடிக்கையோ கொண்டதில்லை வனிதா, எல்லாம் இனிமையாகவே சென்று கொண்டிருந்தது.

"மூன்று நாள் திருப்பதி உட்பட சில கோவில்களை தரிசிக்க போகிறோம், எனது தோழிகள் அனைவரும் வருகிறார்கள்" என அனுமதி பெற்று சென்றவள், இன்று சென்னையில் ஒரு அறையில் வேறொருவனுடன் கைகோர்த்தபடி.....

ஆத்திரம் தலைக்கேறி, கொலைவெறியுடன் இருந்தான் நரேன்.

 இரண்டு நாள்களுக்கு பிறகு,

 வனிதா தனது ஆன்மீக பயணம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டதாக அலைபேசியில் அழைத்தாள். அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு சொல்லிவிட்டு கோபம் குறையாமல் தனது காரை வேகமாக செலுத்தியபடி வீடு வந்து சேர்ந்தால் நரேன்.

 ஒருவேளை தான் நினைப்பது போல் அல்லாமல் வேறேதாவதாக இருக்குமோ என்ற கோணத்திலும் தீர விசாரித்து விட்டான், அந்த இளைஞனை பற்றிய தகவலை, அவன் சம்பத், கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், காதலித்திருக்கிறார்கள், பெற்றோர்கள் சம்மதம் தராததாலும், அவனுக்கு சரியான வேலை கிடைக்காததாலும், வனிதாவிற்கு அரசு வேலையில், நல்ல சம்பளத்தில் இளிச்சவாய் கணவன் கிடைத்தாலும்..லும்...லும்..

நரேன் எவ்வளவு சுலபமாக ஏமாற்றப்பட்டு விட்டான்?

 இரண்டு நாட்களில் சரியான திட்டம் தீட்டியாகி விட்டது.  அவளிடம் பேசி உபயோகமில்லை என தீர்மானித்தான்.

  வீட்டிக்கு வந்த அடுத்த கணமே, "வெளியே செல்லலாம் வா", என்றழைத்தான், அவள் "எங்கே" என்றாள், "சொல்கிறேன்" என்று முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், காரை ஸ்டார்ட் செய்து கதவை அவளுக்கு திறந்து விட்டான், மிதமான வேகத்தில் கார் செல்ல, பலமுறை அவள் கேட்டும் பதில் சொல்லாமல் ஒரு மர்ம புன்னகையுடன் மௌனமாகவே வந்தான், கார் ஒரு வீதியில் திரும்பி ஒண்டு குடித்தன வீட்டின் முன் நின்றது, வனிதா வெளிறிய முகத்துடன் நரேனை பார்த்தாள், அது சம்பத்தின் வீடு.

 ஒரு கற்றை பேப்பரை காரின் டேஷ் போர்டில் இருந்து வெளியே எடுத்து, இது "விவாகரத்து பத்திரம், இதில் கையெழுத்து போட்டு விட்டு இறங்கி தாராளமாக நடந்து சம்பத் இருக்கும் இந்த வீட்டில் சென்று வாழலாம், அல்லது அவனையே உனது குடும்பத்தில் சென்று சேர்க்க சொல்லலாம், அது உன் இஷ்டம். இனி உனக்கு எனது வீட்டில் இடமில்லை" என்றவனை விக்கித்து பார்த்து கொண்டிருக்கும் போதே,

"எல்லா தவறையும் செய்து விட்ட நீ மகிழ்ச்சியாய் இருக்கையில் ஒரு தவறும் செய்யாமல் என் நிம்மதியை தொலைத்து கொண்டு உன்னுடன் வாழ இயலாதே?"

"உன்னை கொன்று விட்டு ஜெயிலுக்கு போய் என் வாழ்க்கையை கெடுத்து கொள்ளும் அளவு முட்டாளும் நானில்லை"  என்றவனை பார்த்து வேறு வழியில்லாமல் கையெழுத்திட ஆரம்பித்தாள் வனிதா.

கையெழுத்திட்டு முடிந்ததும் கார் கதவை திறந்து விட்டு அவள் இறங்கியவுடன் எந்த சலனமும் இன்றி தனது காரை வந்த வழியே திருப்பி செலுத்த ஆரம்பித்தான் நரேன்.