Friday, June 22, 2018

வலைபேசி 3

பலபெண்களின் "எக்ஸ்க்யூஸ்மீ" என்ற சொல், "நகருடா டேய்" என்பது போலவே ஒலிக்கிறது.

-----------------------------------------------------------------------------------

கல்யாணமாகி மூணு வருடங்கள் ஆனதும் மாமனார் நம்மை ஒரு ஆச்சர்யத்தோடவே பார்ப்பார்
"எப்படி இவன் சமாளிக்கிறான்?"

-----------------------------------------------------------------------------------


நம்ம மாதிரியே உலகத்துல ஏழு பேர் இருப்பார்களாம், நம்ம நிலைமையே கேவலமா இருக்கு, மிச்ச ஆறு பேரும் எந்த நாட்ல எந்த தெருவுல அவங்கெல்லாம் பிச்சை எடுத்துட்டு இருப்பாங்களோ. 

-----------------------------------------------------------------------------------


நெல்சன் மண்டேலா வருஷம் ஜெயில்ல சித்திரவதை, அடி, மிதி எல்லாம் தாங்கிருக்கார். வெளிய வந்து ஆறே மாசத்துல டைவர்ஸ் வாங்கிருக்கார்

-----------------------------------------------------------------------------------

நமக்கு எதெல்லாம் பிடிக்கும்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சிக்கிட்டு அதெல்லாம் கிடைக்காம பாத்துக்கிறது தான் கடவுளோட வேலை போல

-----------------------------------------------------------------------------------

எடிசனின் ஆயிரமாவது முயற்சியிலும் அவருக்கு பல்ப் தான் கிடைத்தது

-----------------------------------------------------------------------------------

இந்த ஜென்மத்தில் அனுபவிக்க முடியாத போது புண்ணியம் எதற்கு?

-----------------------------------------------------------------------------------

"குடிசிருக்கியா" என விசாரித்த போலீஸ்காரர் என்னை விட அதிகமாக குடித்திருந்தார்

-----------------------------------------------------------------------------------

கடவுளே நாட்டு மக்களை நீதான் காப்பாத்தணும்னு வெளிய வந்தா என் செருப்பை காணோம், கடவுள் அதை போட்டுட்டு காப்பாத்த போய்ட்டாரு போல                           

-----------------------------------------------------------------------------------


கல்யாண மாலை நிகழ்ச்சியை எதேச்சையா பார்த்தது ஒரு குற்றமாய்யா? இவ ஏன் மொறைச்சு பார்த்துட்டு போறா?

-----------------------------------------------------------------------------------

நான் கோழிக்கு குளிருதுன்னு போர்வையை போர்த்தினேன், கோழி திருடுறான்னு பஞ்சாயத்தை கூட்டிட்டாங்க

-----------------------------------------------------------------------------------


உண்மையில் அது மணற் கொள்ளை இல்லை, நதிகளின் கொலை.

-----------------------------------------------------------------------------------

சில வீடுகளில் நாய்தான் மனுஷங்களை வாக்கிங் கூட்டிட்டு போகுது

-----------------------------------------------------------------------------------

டியர் காட், என் வாழ்க்கைக்கு சப் டைட்டில் அனுப்பவும் இதுவரை ஓடியதில் ஒன்றுமே புரிய மாட்டிங்குது

----------------------------------------------------------------------------------- 

அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சிட்டு, உங்க கைல முத்தம் கொடுத்துட்டு போறீங்க

----------------------------------------------------------------------------------- 

டேய் வாயைக்கட்டி வைத்தக்கட்டி மேனஜர் கிட்ட திட்டு வாங்கி சம்பாதிச்ச 
காசுடா.... தட்டி விட்றாதீங்கடா!!! இன்டெர்வல் பாப்கார்ன் மொமெண்ட்

----------------------------------------------------------------------------------- 

என் பையனுக்கு டெய்லி நைட்ல புலி வந்து உறுமுதாம் ஒருவேளை என் குறட்டையைத்தான் அப்படி நினைச்சிக்கிறானோ?

-----------------------------------------------------------------------------------

அறிவுரை என்பது தற்பெருமை

-----------------------------------------------------------------------------------

நாய்க கிட்ட இருந்து மனுசனுக கத்துகிட்ட ரெண்டாவது விஷயம் திடீர் திடீர்ன்னு ரோட்ல ஓடி வரது

-----------------------------------------------------------------------------------

பாலா, மிஸ்கின், செல்வராகவன் மூணுபேரையும் சிரிச்சா போச்சு ரவுண்டு விளையாட விடனும் #ரொம்ப நாள் ஆசை

----------------------------------------------------------------------------------- 



Thursday, June 21, 2018

எல்லா நாளும் கார்த்திகை புத்தக விமர்சனம்

வம்சியில் புத்தகங்களின் பெயரை அலைபேசியில் அனுப்பினால் கூட அடுத்தநாளே வீடு வந்து சேர்ந்து விடுகிறது.
சைலஜா அவர்களுக்கு, அன்பும் நன்றியும்.

பவாவின் மேல் சத்தியமாக பொறாமையாக இருக்கிறது, மனிதர் எல்லோருடைய வாழ்வில் இருந்தும் எப்படி நிறைகளை மட்டும் எடுத்து நிரப்பி கொள்கிறார் என. அன்பென்பதை வாழ்வின் பாதையாகவே மாற்றிக் கொண்ட அபூர்வ பிறவி. எனது தாத்தாவிற்கு பின்னர் அவர்தான் கதை எனக்கு சொல்லி, நீடூழி வாழ்க.

எல்லா நாளும் கார்த்திகையில் இந்தியாவில் தலைசிறந்த மனிதர்களாக போற்றப்படும் 24 பேரின் மறுபக்கத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்த ஆளுமைகளுக்கான சில வரிகளை, சில குறிப்புகளை பவா எழுத்தின் மூலமாகவே உங்களுக்கு பகிர தருகிறேன். இவர் சொன்ன படைப்பாளிகள் யார் என்று புத்தகம் படிக்கும் போது மிகுந்த சுவாரஸ்யத்தை கூட்டும் என்பதால் பெயர்களை மறைத்திருக்கிறேன்.

இதில் வரும் ஒவ்வொரு வரியும் ஒரு பிரபலங்களை பற்றியது அல்லது அவர்கள் சொன்னது...

"நான் புலி பவா"

"முதுகு குனிந்து நடக்கும் சமூகத்தில் நான் நிமிர்ந்து நடக்கிறேன்.
ஆம், நான் திமிர் பிடித்தவன் தான்"

"நீங்கள் உடன்பட வேண்டாம், ஆனால் இது என் கருத்து"

 அவர் உரையாற்ற தொடங்கியதுமே எல்லா அரசு ஊழியர்களின் முகங்களும் வெளிறி போயின

"சார் எத்தனை வருடமா குடிக்கிறீங்க?"
"அநேகமா ஒன்றரை வருடத்தில் இருந்து"

படைப்பின் உச்சத்தில் ஒளிரும்போதே கீழே விழுந்து கருகி விட வேண்டும் அதுதான் அவருக்கு நிகழ்ந்தது

இவர் இயக்கிய "குற்றவாளி" எனும் குறும்படம் என்றென்றும் பேச தக்கது

கமல்ஹாசன் தன் வாழ்வில் காண துடிக்கும் படைப்பாளி இவர்

இரு பெரும் ஆளுமையின் முன் ஒரு உள்ளூர் கவிஞன் வெட்கமாக நின்ற தருணம்.

"எனக்கொன்றும் இல்லை சார், அவரின் பெயர் இவ்வருட நோபல் பரிந்துரைக்கு போயிருப்பதாக சொல்கிறார்கள், அவ்வளவு பெரிய எழுத்தாளரை தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சருக்கே யாரென்று தெரியவில்லை என பதிவு செய்து கொள்ளட்டுமா?"

"என்ன வேணும் ***** உனக்கு?"
"ஒன்றுமே இல்லை"

"தமிழ் மக்களின் ரசனையை இத்தனை படம் எடுத்த அப்புறமும் புரிஞ்சிக்க முடியல பவா"


"ஒவ்வொரு தேசத்திலும் ஏதோ ஒன்று மட்டும்தான் என்னுள் பிரவேசிக்கிறது, மற்றதெல்லாம் பொருட்படுத்ததக்கவை அல்ல, ஸ்வீடனில் ஏரி, எகிப்தில் வீடு, இந்தியாவில் சாதுக்கள்'

"படைப்பிழந்து நின்ற அந்த தலைமை வரலாற்று சோகம்"

"எனக்கு அடுத்தவாரம் புதன் வியாழன் படப்பிடிப்பு இல்லை திருவண்ணாமலை வரட்டா? உங்க பிரண்ட் காலேஜில பிலிம் பத்தி சின்னதா ஒரு ஒர்க்க்ஷாப் நடத்தி தரேனே?"

"அவரோடு இருந்த பல தருணங்களை என் அப்பாவோடு இருந்த கதகதப்பை மனம் உணர்ந்திருக்கிறது"

"ரொம்ப குளிருதுப்பா, சிதையில் வச்சாத்தான் இந்த குளிர் போகும் போல"

"அம்பது குழந்தைகளுக்கு கேமரா கற்று தர வரமுடியுமா சார்?"
"அதை விட எனக்கு என்ன புடுங்கற வேலை?"

"அப்பா... உங்ககிட்ட ஒரு பாராட்டு வாங்க எனக்கு எட்டு வருஷம் ஆச்சு"

"மேடம், நான் உங்களை படம் எடுத்து பொழப்பு நடத்துற தேர்ட் ரேட் வியாபாரி இல்ல"

"அதை விடும்மா இன்னைக்கு ஒரு படம் எடுக்கலாம் எடுக்காம போகலாம் என் அப்பாவை நல்லா பார்த்துக்கறீங்கல்ல அது போதும் எனக்கு"

 "எழுத்தாளனாக இருப்பதை விட தமிழக அரசில் ஒரு கடை நிலை பணி ஊழியனாக பணி கிடைத்து உள்ளூரிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இதைவிட சந்தோசமாக இருந்திருப்பேன்"

"எந்த அகாலத்திலும் போக  இரண்டு வீடுகள் எனக்கு உண்டு என்பதை நம்புகிறேன், ஒன்று என் வீடு மற்றது பவா வீடு"

"இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான் அவன் கணக்கையே அடைக்க முடியல"

பிரியங்களும், மனித நேயமும், ஆளுமையும் கொட்டி கிடக்கிறது இந்த புத்தகத்தில். காலம் கடந்து நிற்கபோகும் ஒரு அருமையான படைப்பு. இது நமக்கு நன்கு தெரிந்த ஒளி வட்டமும், பெருமையும், புகழும் நிறைந்திருக்கும் மனிதர்களின் மறுபக்கம். இந்த புத்தகம் மூடப்படும் தருணம் மனித நேயமேனும் வாசல் திறக்கிறது. நன்றி பவா.

கண்டீப்பாக வாசிக்க பட வேண்டிய புத்தகம்.

வெளியீடு: வம்சி புக்ஸ்


Wednesday, June 13, 2018

காஷ்மீரில் ரட்சகன்

மம்மூட்டியின் மலையாள புத்தகமான "காழ்ச்சப்பாடு" எனும் புத்தகத்தை  மூன்றாம் பிறை எனும் பெயரில் திருமதி சைலஜா மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு நடிகராக பார்த்தவரின் பின்னால் என்ன இருக்க போகிறது என்ற எண்ணத்தில் தான் தொடங்கினேன். ஆனால் அன்பால் பின்னப்பட்ட, சமூக பார்வை கொண்ட தத்துவ புத்தகமாக தொடர்ந்ததால் பெரும் ஆர்ச்சர்யம் கொள்ள வேண்டியதாயிற்று.

இன்னொன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும், சைலஜா அவர்களின் மொழி பெயர்ப்பு மிகுந்த ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. மொழி பெயர்ப்பு புத்தகம் வாசிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அதன் அந்நியத்தன்மை நம்மை ஒன்ற விடாது. ஆனால் இதில் அதை தகர்த்துவிட்டு முழுதாக புத்தகத்தில் மூழ்க செய்கிறார் சைலஜா.

மொழிநடையும், அழகும், பரபரப்பும் கொண்ட ஒரு பகுதியை உங்களுக்கு படிக்க தருகிறேன், அதிலேயே தெரிந்துவிடும் இந்த புத்தகத்தின் மொத்த வீச்சும்.
----------------------------------------------------------------------------------------
பனிமலையில் சலனமற்ற அமைதி என்னை காஷ்மீரை நேசிக்க வைத்தது. பார்வை துளித்துளியாய் முடியும் நேரம் வரை வெண் பஞ்சு கூட்டமாய் கொட்டிக்கிடக்கும் பனி ப்ரவாகமும், தத்தி தத்தி விழும் பால்யத்தை போன்ற பனி துகள்களும் இப்போதும் மனதில் உறைந்திருக்கிறது.பனி குன்றுகளில் இருந்து குன்றுகளுக்கு தாவும் காட்சிதான் அன்றைய படப்பிடிப்பு.


காலை பதினோரு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. "குல்மர்க் ஹில்டன்" விடுதியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்த பின்னரே படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைய முடியும். சக்கரத்தில் சங்கிலி பிணைத்த வண்டிகளையே பனிமலையில் பயன்படுத்துகிறார்கள். நான், சுரேஷ் கோபி, முகேஷ், கணேசன், விஜயராகவன், குஞ்சன், சித்திக், மோகன், ஜோஸ், மணியன் பிள்ளை ராஜு என எல்லோரும் சேர்ந்து சங்கிலியால் சக்கரம் பிணைக்கப்பட்ட வண்டியில் புறப்பட்டோம். பிரதான சாலையை விட்டு மலைப் பாதைக்கு திரும்பியதுமே புறக்காட்சிகளின் வசீகரம் எங்களை ஈர்த்தன. பனியால் சூழப்பட்ட வெண்மையென்ற ஏக நிறமானாலும், நிற்க வைத்து கவனத்தை கோரும் அழகு அதற்கிருந்தது. காலை பத்து மணி. வண்டியில் கேட்ட அபஸ்வரத்தின் தொடர்ச்சியாய் நின்று போன வாகனத்திலிருந்து இறங்கி பார்த்த டிரைவர் ஹிந்தியில் சொன்னான்.

"சின்ன பிரச்னை தான் உடனே சரி பண்ணிடறேன்"

பிரச்னையின் தீவிரத்தை ட்ரைவர் உட்பட நாங்கள் யாருமே புரிந்து கொள்ளாமல் போனதால், வண்டிக்கு உட்கார்ந்தபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். பிறகு வெளியே இறங்கி வந்து சூழலின் அழகை ரசித்தோம். கேலிக்கும், கிண்டலுக்கும் குறைவதும் இல்லாமல் நேரம் நகர்ந்தது. மகிழ்வின் சிறகடிப்புகளில் இரண்டு மூன்று மணி நேரம் உதிர்ந்திருந்தது. பேச்சின் கதகதப்பில் மெல்ல மெல்ல ஈரம் படர்ந்தது. பலருக்கும் கிண்டலே வராமல் போன நேரமது. பசிக்க தொடங்கிய நேரத்தில் சாப்பாடு இல்லையென்றாலும் நல்ல சாப்பாட்டை பற்றி பேசலாமே என எப்போதோ சாப்பிட்ட செம்மீன் குழம்பு வைப்பதை நேர்த்தியாக சொல்ல தொடங்கினேன். சுத்தமாக கழுவிய செம்மீனை, மிளகாய், வெங்காயம், இஞ்சி வைத்து நன்றாக கல்லில் தட்டி எடுத்து புரட்டி கொள்ள வேண்டும். மசாலாவில் ஊறிய செம்மீனை இளந்தீயில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி நீர் வற்றும்போது குடம்புளி கறிவேப்பில்லையில் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

பசியை மறக்க சாப்பாட்டை பற்றிய விவரணையே சிறிது நேரத்திற்கு போதுமானதாக இருந்தது. எங்கள் வண்டியில் தண்ணீர் கூட இல்லை. பழுது சரியாகி விடுமென்று டிரைவர் இன்னமும் சொல்லிக் கொண்டிருந்தான். மேலும் மூன்று மணி நேரம் கரைந்திருக்க பலரின் முகம் இருளடைந்தது. கடைசி முறையாக வண்டியில் இருந்து வெளியே வந்த டிரைவர் இப்போதைக்கு வண்டியை சரி செய்ய முடியாதென்றும் நாளை காலை மெக்கானிக் வந்தால்தான் முடியுமென்றும் சொல்லி அதிர வைத்தார். பணியில் வண்டி புதைந்து நீரன்று பழக்கமிருந்த டிரைவரின் பேச்சில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதைக் கேட்ட எங்கள் முகங்களில் ரத்த நாளங்கள் வற்றி போனது.

               மணி ஆறு, காலையில் ஹோட்டலில் எதுவும் சாப்பிடாமல் லொகேஷனில் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு அந்தக் குளிரிலும் பசி அதிகரித்தது. பசியில் தளர்ந்து போயிருந்தோம். ஒரு பகல் முழுவதும் அங்கேயே நின்றிருந்த போதும் எந்த வாகனமும் எங்களை கடந்து போகவில்லை. எங்களை தேடி யாரும் வரவும் இல்லை. ஒருவேளை நாங்கள் பாதை மாறி வந்திருக்கலாம் அல்லது பனிமலை சரிந்து மூடியிருக்கலாம். சாலையின் ஒருபுறம் மலைக்கு மேலே போகும் பனிமலை, மறுபுறம் ஆழமான பள்ளம். அந்த இடத்தின் பேரழகு ஏதோ ஒரு பயங்கரத்தை தனக்குள் புதைத்து வைத்திருப்பதாக தோன்றியது                               
பனிக்காற்றை தடுக்கும் போர்வைகளோ, கம்பளி உடைகளோ எங்களிடம் இல்லை, பகலில் அணியும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தோம். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பனிக்காற்றின் தாண்டவம் தொடங்கிவிடும். அந்த அதிர்வில் அதன் பாகங்கள் உடைந்து விழலாம், வண்டியில் உக்காந்திருப்பது கூட ஆபத்தானது. நாங்கள் பேச்சற்று போயிருந்தோம். எங்களிடம் வயர்லெசோ அலைபேசியோ இல்லை. எப்படி இந்த இரவை கடப்பது? விடிந்தால் எங்களில் யார் மிச்சமிருப்பார்கள்? அதி சீக்கிரமாக சூழல் இருள துவங்க பனிக்காற்றின் ஊளையிடல் ஒரு துர்கனவினை போல எங்களை கவிழ்த்தது. பனியிலும் பயத்திலும் உறைந்து போனோம். சட்டென அதிர வைப்பது போல மலை உச்சியிருந்து ஒரு குரல்.

 "ஏய் மம்முட்டி"

   அனைவரும் அதிர்ந்து ஒலி வந்த திசையில் திரும்பினோம், இந்த இரவில் காஷ்மீரின் நடுக்கமான குரலில் யார் என்னை கூப்பிடுவது?

  மலையில் இருந்து மூன்று பேர் பெட்டியை தூக்கிக்கொண்டு இறங்கி வந்தார்கள். உடல் முழுவதும் கம்பளிகளால் மூடி இருந்தார்கள். அருகில் வந்தபோது ஆஜானுபாகுவான ஒரு ஆணும், பெண்ணும், இளம்பெண்ணுமாக மூன்று பேர் என்பது புரிந்தது. கனவா அல்லது நிஜமா என்றே தெரியவில்லை. அவர் தன்  கையை என்னை நோக்கி நீட்டி பச்சை மலையாளத்தில்,

"நான் கர்னல் கமால், திருவனந்தபுரம்" என்றார்.

இறுகப் பிடித்த அவருடைய கைசூட்டின் இதமான வெப்பம் மிகப் பெரிய நிம்மதியாய் என் உடல் முழுவதும் பரவியது. எங்கள் எல்லோர் முகங்களிலும் வர்ண மொட்டுக்கள் பூக்க ஆரம்பித்தன. நாங்கள் கர்நாளிடம் எங்கள் சூழ்நிலையைச் சொன்னோம்.

எங்கள் வண்டி நிற்பதற்கு கொஞ்சம் மேலேதான் அவருடைய வீடு. பக்கத்தில் இதேபோல் வேறு சில வீடுகளும் இருக்கின்றன. ஆனால் மழையின் அடுத்த அடுக்கிற்கு ஏறினால்தான் அந்த வீடுகளை பார்க்க முடியும். பனி மூடியதால் அவற்றைக் கொண்டுபிடிப்பதும் சிரமம். வீட்டிலிருந்து வண்டிப்பாதையும் தெரியாது. எங்களுடைய வண்டி பழுதாகி நின்றிருந்த இடத்தையும் தாண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற அவர்களுடைய வண்டியை எடுக்கவே அவர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். மகளை இரவுப்பயணத்திற்கு டில்லிக்கு அனுப்பவேண்டும். காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் எங்கள் நிலைமையை அவரிடம் சொன்னோம். அவர் எங்களை அவர்களின் வீட்டிற்கு அவசரமாய் அழைத்துப் போனார்.

ஊருக்கு போக இருந்ததால் அவர்கள் வீட்டில் அன்று சமைத்திருக்கவில்லை. சமையலுக்கான பொருட்களும், பெரிதாக அந்த வீட்டில் இருப்பில்லை. கிடைத்த கேக்கும்,ரொட்டி துண்டுகளும் கருப்பு டீயும் அதீத ருசியை தந்தன. இனி இறந்து போக மாட்டோம் என்ற தைரியம் துளிர்விட முகம் தெளிய ஆரம்பித்து மற்ற விஷயங்களையும் யோசிக்க வைத்தது. கமாலின் வீட்டிலிருந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு தொலைபேசியில் தகவல் தந்தோம்.

கமால் அவருடைய கார் நிற்கும் இடத்திற்கு எப்போதும் வேறு வழியில் தான் செல்வாராம். அன்றைக்கு மட்டுமே இந்த வழியில் வந்திருக்கிறார். பகல் முழுவதும் அதே இடத்தில பட்டினியால் அலைந்தபோதும் கொஞ்சம் மேலே சாலை ஓரத்தில் பனியில் புதைந்தபடி இப்படியொரு வீடு இருப்பதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் இரவில் ஆபத்தின் விளிம்பிலிருந்து எண்களைக் காக்க ஒரு ரட்சகனாய் கமால் வந்தார். ஆகாயத்திலிருந்து ஒரு ரட்சகன் இறங்கி வருவதை போலத்தான் முதல் பார்வையில் அவர் எங்களுக்கு தெரிந்தார். அதன் பின்பு அங்கிருந்த நாட்களில் கமாலோடு நெருங்கிய நண்பர்களானோம். அந்த திருவனந்தபுரத்து மலையாளியை அதற்கு பின்பு நான் சந்திக்கவே இல்லை.

"உயிர் காத்த ரட்சகனே இப்போது நீ எங்கிருக்கிறாய்?"

கடுங்குளிரிலும் பனிபொழிவிலும் காப்பாற்றப்பட்ட அந்த இரவின் அடர்த்தியில் நான் ராணுவ வீரர்களைப் பற்றி பலவாறு யோசித்தபடி இருந்தேன்.

ஒரு நாளில் தற்செயலாய் அமைத்த பட்டினியையும், குளிரையும், நிர்கதியையுமே எங்களால் தாள முடியாமல் தளர்ந்திருந்தோம். நாள் கணக்கில் உணவும் தண்ணீருமில்லாமல் தனியாளாய் சில இடங்களில் மாட்டிக்கொள்ளும் ராணுவ வீரன், ஐஸ் கட்டியை கையில் எடுத்து உரசி சூடாக்கி, தண்ணீரை குடித்த அனுபவதியெல்லாம் கமால் சொன்னார். நாம் தூங்கும்போது, இந்த அவஸ்தையிலும், நம் நல்வாழ்வுக்காக, பாதுகாப்புக்காக, நிம்மதிக்காக, நாம் காணும் சந்தோச கனவு கலையக்கூடாது என்பதற்காக, அவர்கள் பனிபொழியும் இரவுகளில் காவலுக்கு நிற்கிறார்கள்.

எல்லை பாதுகாப்பில் இருக்கும் ஜவான்களுக்கு வாழ்விற்கும், மரணத்திற்குமான தூரம் ஒரே ஒரு வெடிகுண்டின் இடைவெளியாக மட்டுமே இருக்கிறது. நம் எல்லோரையும் அதன் அழகின், கம்பீரத்தை வழி ஈர்க்கும், பனியில் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் கன்னி வெடிகளுக்கு மேலே வைக்கும் ஒரு காலடியில் அகலம் மட்டுமே இருக்கிறது. ராணுவவீரர்கள் தங்களுக்குள் எந்த பகையுடனுமில்லை. அவர்கள் பரஸ்பரம் அறிமுகமே இல்லாதவர்கள். ஆனால் தங்கள் நாட்டிற்காக பகையியேற்றிருக்கிறார்கள்.

ஒரு கோழியை கொல்லக் கூட தயங்கும் சாத்வீகன்தான் எதிரில் வரும் ஒரு மனிதனின் இதயத்துக்கு நேராக மிகச்சரியாக குறிபார்க்கிறான். வெடிகுண்டை வெடிக்க செய்து மனிதகுலத்தைச் சீதைத்தழிக்கிறான்.

பனியிலும் கடுங்குளிரிலும் தூங்காமல் பார்வையைக் கூர்மையாக்கி, துப்பாக்கியுடன் உலவும்பொழுது மனதில். வீட்டில் உள்ளவர்களின் முகங்களோ, சொந்தபந்தங்கள் நினைவுகளோ இல்லை. மின்னி மறையும் ஒரு நிமிட இடைவெளிகூட ஒரு யுத்தத்திற்கான முதல் அழைப்பாய் இருக்கலாம். எந்தக் சூழலிலும் உள்ளே அணையாமல் இருப்பது தேசத்தின் மீதான மாறாத பற்று மட்டுமே.

யுத்த காலத்தில் மட்டும் நாம் இவர்களை பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறோம். யுத்தமில்லாத நேரங்களில் வெறுமனே தின்றும், குடித்தும், அலைந்தும் நாட்களை கடத்துபவர்களாகத்தான் நாம் அவர்களை நினைக்கிறோம். "அவன் மிலிட்ரிக்காரன்" எனும் தொனியில் விடுமுறையில் கொண்டுவரும் மதுகுப்பிகளிலேயே நம் கவனம் குவித்து, அவனுடைய தியானத்திற்கான மரியாதையை சிதைக்கிறோம். மிகச்சரியாக இயற்கையின் பேரழிவையோ, ஒரு வெடிகுண்டின் சப்தத்தையோ அனுபவித்தறியாத ஒருவனுக்கு பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் பார்ப்பது மட்டுமே யுத்தம். எல்லையில் நடக்கும் கலவர பேராவஸ்தை பற்றி அவனுக்கு என்ன தெரியும்? நம்முடைய தேசத்தின் மீதான பிரியம் கூட எதார்த்தத்தில் இருந்து மிக தொலைவில் நிற்கிறது.

வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களை நேசிப்பது போல, நமக்காக தன் சந்தோசத்தின் துளிகளைக் கூட தியாகம் செய்து காவலிருக்கும் அந்த வீரர்களை நாம் நேசிப்போம். மரியாதை செய்வோம், அவர்களை நினைத்து பெருமைப்படுவோம். கர்வப்படுவோம். அவர்களை போல் இந்த தேசத்திற்கு என்ன செய்யலாம் என யோசிப்போம்

ஜெய் ஹிந்த்.
-------------------------------------------------------------------------------


Friday, June 8, 2018

வடிவேலு வசனங்கள் தொகுப்பு

படம் நடித்து பல ஆண்டுகள் கடந்து போனாலும், அடுத்த தலைமுறை தாண்டி தொடரும் வடிவேலு காமெடி. இன்றும் சமூக வலைத்தளத்தில் அவரின் புகைப்படங்களோ, வசனங்களோ, இல்லாத நகைச்சுவை மிக குறைவு. தமிழ்நாட்டில்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரின் நகைச்சுவை காட்சிக்கு சிரிக்காமல் கடந்து வந்திருக்கவே முடியாது.   அவரது சிறந்த  வசனங்களின் தொகுப்பு இது     


"பேங்க் ஒன்னு கட்டிகொட்டுங்க நடத்துறோம்"

"ஒட்டகப்பால்ல டீ போடுறா ஒட்டகப்பால்ல டீ போடுறான்னு உன்கிட்ட எத்தன தடவடா சொல்லிருக்கன்"

"கூலு குடிக்க வேனா வர்றோம், குடுக்க ஒன்னுமில்ல..."

"யு ரெஸ்ப் பெக்ட் என்ட் டெக் ரெஸ்ப் பெக்ட்"


"துபைய்ல்லேந்து என் தம்பி மார்க் போன் பண்ணான்"

"வழிய விடுங்கடி பீத்த சிறுக்கிங்களா"

"உயிரே உயிரே தப்பிச்சி எப்பிடியாது ஓடிவிடு அய்யய்யோ வருதே மூதேவி வருதே"

"லாங்குல பார்த்தா தான்டா காமெடியா இருப்பேன் .!கிட்ட பார்த்தா டெரரா இருப்பேன்டா..டெரரா"

"சண்டைக்கு வாரியா? மண்ட பத்தரம்"

"என் சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?"

"பேஸ்மென்ட் வீக்கு"

"ஆரம்பத்துல இருந்தே ராங்கா போயிட்டுயிருக்கு" 
"யாருக்கு"
"யாருக்கோ"
"எது கலவர பூமில காத்து வாங்க வந்தீங்களா"

"நீ என்கிட்ட வேல பாக்குற கிச்சுனமூர்த்தி லேபர்"
"லேடண்ட பேசுறியா.. பின்லேடன்"
"ஓனர்னா ஓரமா போக வேண்டியதான,ஏன் பொளந்துகிட்டு போறீங்க"

"அவன நசுக்கு நசுக்குனு நசுக்கி தூக்கி எரிஞ்சறேன்"

"வட போச்சே"

"இன்னொரு அடி என் மேலே விழுந்துச்சு சேகர் செத்ருவான்"
"சினங்கொண்ட சிங்கத்த செல்லுல அடச்சா அது செல்லயே செதச்சிடும்.. பரவால்லியா"
"வாய் என்ன வாசப்படி வரைக்கும் போய்ட்டு வருது"
"டெப்னட்லி டெப்னட்லி"
"யானைக்கி பொறந்த நாள் வருது பேண்ட்டு சட்டையெல்லாம் எடுக்கனும் டொனேசன கொடு"
"நீ லவ் பண்ணா என்ன நான் லவ் பண்ணா என்ன எனக்கு மொத்தத்துல அந்த குடும்பம் உருப்படாம போகணும்"

"இருமா! ஒரு பொஸிஸன்ல போய் நின்னுகிறேன்"
"ஷட் அப் யுவா் ப்ளடி மவுத் அன்ட் ரிலீஸ் ஹிம் இம்யமிடியட்லி
ரெண்டு பேரா மாமீ...... ஈஈஈஈஈ"
"பப்பிமா ....கரும்பு மெசின்ல சிக்குன மாறியே ஒரு பீலிங்கு"
"மாமா இங்கதான் இதுக்கு பேரு பஸ்சு,துபாய்லலாம இதுக்கு பேரு குப்ப லாரிஇதுல்லாம் இந்த நாய்ங்க எப்டித்தான் ஏறி வர்றாங்கதெரில
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , ராஸ்கல்ஸ் !!!"
"அண்ணன் போட்ட கோடு"
"நான் எதுக்கு ஒத்துவரமாட்டேன்னு சொல்லிட்டு அடிங்கடா"
"எங்கப்பா வாசிக்க எங்கம்மா ஆட நானும் எங்கண்ணனும் அத வேடிக்க பாக்க ஒரே கூத்தா இருக்கும்"

"ஹே ….ஹே……சொல்லிட்டாருயா கவர்ணருருருரு"
"காதுல ரீங்ங்குன்னு சத்தம் கேக்குமே"
"அடி வாங்கினது நானு, அதுனால 'கப்பு' எனக்குத் தான் சொந்தம்"
"ரெண்ட்ரூவா தான்டா கேட்டேன். . . என்ன நெனச்சான்னு தெரியல வாய்ல இருந்த பான்பராக்க பொளக்குனு மூஞ்சிலியே துப்பிட்டான்"
"தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை"
"மண்டை பத்திரம் , என்ன லுக்கு லேடன் ட்ட பேசுறிய , பின் லேடன்"
"அத்த செல்வு பண்டன்"

"மூக்கு வெடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும்"
"ஆளே இல்ல பெல்லு"
"அநியாயமா ஒரு லவ் பேர்ட்ஸ அத்து வுட்டுட்ட"
"ஆடு கிடைச்சிருச்சு..ஆனா அத திருடுனவன பஞ்சாயத்துல சொல்லனுமா இல்லையா?"

"பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு"
"இது அன்னத்துல கை வைக்கிற நேரம் ...யாரு கன்னத்திலயும் வைக்க மாட்டேன்"
"நல்லா குத்தாலத்துல இருக்க வேண்டியவனேல்லாம் இங்க வந்து என் உசிர வாங்குரானுக"

"உன்ன திட்னவன் கழுத்த கரகரன்னு அறுத்து கடல்ல கடல்ல வீசினியே என் தெய்வமே! என் கட்டவ்வுள்ளே! மூண்ணாள்ல பணம் வந்துரும் போ"
"உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு"
"ஆகமொத்தம் இருவது. சியர்ஸ்"

"ஏன்யா ஏன்? ஒரு ஆர்டரா ப்ளோவா போய்க்கிட்டு இருக்கேன் இல்ல கூட கூட பேசுனா மறந்திரமாட்டேனா?"

"நீ பயப்படாத.... என்னிய எப்படியாச்சும் காப்பாத்துடாஆஆ அவ்வ்வ்"
"பாசத்துல என்னிய மிஞ்சிருவான் போலயே"

"பர்க்கர் இருக்கா..பீசா..சிக்கன் டொக்கா...ஸ்பீரிங்க் ரோல்ல்ல்ல்...கபாப்"
"கல்யாணம் ஆயிருச்சா? இன்னும் ஆவல...எப்புடி ஆவும்"

"இப்ப நம்ம பண்ணப்போற ஆப்பரேசன் உரிமைக்கும் உறவுக்கும் நடக்குற உச்சகட்ட ஆப்பரேசன்"
"இந்த டீலிங் நம்மக்குள்ளையே இருக்கட்டும்"
"பேக்கரிய டெவலப் பண்ணுனதுல இருந்து பன்னு வேணும் வென்னை வேணும்னு கொல்லுறீங்களேடா?"
"பெரிய பெரிய எல்கேஜி படிப்பெல்லாம் படிச்சா மட்டும் பத்தாது"
"அப்ப நான் கொடுத்த நெருப்ப ரிட்டன் பண்னு"
"தங்களுக்கு தெரியாத சட்டமொன்றும் இல்லை, அதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதன்படி தண்டனையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
"இது இரத்த பூமி இங்க குழாயத்தொறந்தா தண்ணீ வராது இரத்தம்தான் வரும்"

"இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது"
"பேட் இன்ஸ்பெக்டர் அன்டு பேட் ரவ்டி ப்ளே பேஸ்கட் பால் இன் மை லைப்"
"ரொம்ப பெருமையா இருக்குடா.. ஆனா இந்த அண்ணனால இப்ப 5 பைசா கூட தரமுடியலன்னு நெனைக்கும்போது"
"சூடா காபி குடிச்சா கூட தாங்க மாட்டாரேடா, அவரு மேல நெருப்ப அள்ளி கொட்டிருக்கீங்களேடாஆஆ"
"ஐயோ திருட வந்த எடத்துல தெவசம் பண்றாய்ங்களே"
"மதுரை சட்னிக்குத்தானடா ஃபேமசு கிட்னிக்குமா?"
"திரிசா இல்லனா திவ்யா"
"உன் ட்ரஸ்ஸ் நான் போட்டு பார்த்தா எப்படி இருக்கும்னு நெனச்சேன் சிப்பு வந்திடுச்சு சிப்பு"

"தனிய போன தகராறு,தண்ணியோட போன வரலாறு"
"உங்க கடையில அப்பளக்கட்ட காணோம்னு தேடலீங்க! எங்கப்பன காணோம்னு தேடிட்டிருக்கேன்"
"ஓ இதான் அழகுல மயங்குறதா. ஏய் என்னை வச்சு ஒண்ணும் காமெடி கீமடி பண்ணலயே"
"ஏ வாடா வாடா வாடா! ஒம்பணத்துக்கும் எம்பணத்துக்கும் சோடி போட்டு பாப்பமா சோடி! சொல்லிக்காட்னேண்டா என் வென்றேய்"
"ஒரு காக்கா இம்பட்டூண்டு ஆய் போனதுக்காடா இவ்வள பெரிய கலவரம்"
"இந்தமாதிரி கதர்சட்டையெல்லாம் போடுறதுக்கு ஒரு தகுதி வேணும்டா"
"என்ன கையபுடிச்சு இழுத்தியா"
"But அந்த deal எனக்கு புடிச்சிருந்துச்சு"

"ஹேய் லேடீஸ் கெட்டப்புல நான் உன்ன விட ரொம்ப அழகா இல்ல"
"ஏய்யா கத்துற?"
"கடுப்பேத்துறார் மை லார்ட்"
"காலம்பர நம்மாத்துலயே டிப்பன்னு சொல்லிருப்பாங்களே! எண்ட்டயும் சொன்னானுவளே"
"என்னைய மட்டும்தான் ஈசியா அடிச்சிபுடுறானுக"
"கழுவி விட்டுட்டு போறியாமா ? இந்த அப்ரோச்ச்சும் பிடிச்சு இருக்கு"
"நல்லா கேக்குராங்கியா டீட்ட்ட்ட்ட்டைலு"
"ஏண்டா இப்படி ஆய் போறா மாதிரி உக்கார வக்கிறீங்க
சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு"
"இது தெரியாம நாலஞ்சு தடவ டிக்கெட் எடுத்துட்டேனப்பா"
"பறவை முனியம்மா ந்னு ஒரு கெழவி திரியுது.. அதென்ன பறந்துட்டு திரியுது..?? பாட்டு பாடுதுடா"
"நிப்பாட்டாதீங்க்க...நிப்பாட்டாதீங்க...என்ன ஸார் நீங்க..ஒண்ணுக்கு போயிட்டுருக்கேன்லே"
"நான் அப்டியே ஷாக்காய்ட்டேன்"
"பர்னிச்சர் மேல கைய வச்ச மொத டெட்பாடி நீ தான்டா"
"நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்டா"
"சின்ன வயசில இருந்தே, நான் அவன் குடும்பத்த கேவலமா பேசுவேன் அவன் என் குடும்பத்த ரெம்ப கேவலமா பேசுவான்"

"அந்த கொறங்கு பொம்ம என்ன வெல சார்"
"ஏன்னே! அவன் பொண்டாட்டிய முனுசாமி வச்சுருந்தானு எப்படினே தெரியும்? 
உன் பொண்டாட்டிய வச்சிருக்குற ஆறுமுகம் தான் சொன்னான்"
"குருவம்ம்மாஆஆஆ.. (பாஸ் நீங்க இடுப்ப கிள்ளுனிங்களே அவ பேரு அது) தூ.. செல்லத்தாஆயீஈஈஈஈ"
"ஆறு மணிக்கு மேல ஆட்டோ ஓடாது"
"நாங்கூட புதுசோன்னு நெனச்சுட்டேன்"
"வா ஸ்ருதி போவலாம்"
"அய்யய்யோ கோவப்பட்டுட்டோமே சோத்துல வெசத்த வைச்சிடுவாய்ங்களே"
"இடம்: பிள்ளையார் கோவில் தெரு, நேரம்: இரவு 12 மணி, இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்"

"அலோ யார் பேசுறது
நீதான்டா பேசுற
அலோ யார் பேசுறது
நீதான்டா பேசுற
அலோ நீங்க பேசுனீங்களா
இல்ல நீ என்கிட்ட பேசுனியா"
"அக்காவையும் ஓட்ற தங்கச்சியையும் ஓட்ற வெக்கமால்ல !!!! ஒரு அல்சர் வேணாம் ???.... டேய் அது கல்ச்சர்"
"வேணாம் அவனாச்சும் சாப்டா சொல்வான் நீ ரணகளமா சொல்லி என்னை அழவைப்ப"
"தோட்டக்காரனுமாஆஆஆஆஆ"
"சங்ங்ங்கட்டமா இருக்காது?"
"அட்டாக் பண்ணிட்டேயில... போயிட்டே இரு போ..
உனக்கு எதோ ட்ரேன்ஸராமில்ல மா!!"
"என்ன ஃபீலிங்கா.. இல்ல ஃபீலிங்கா னு கேக்குறேன்"

"அவனா நீய்யி"

"நம்ம ஷோ தான் நல்லா இருக்காதேடா"



வலைபேசி 2

  பிடித்த ட்விட்டுகள் தொடர்கின்றன. 



குரங்கில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திருப்பான் மனிதன். 

------------------------------------------------------------ 



இஸ்லாமியர்களை போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும் மதுரை ஆதீனம் 

நீ முதல்ல சட்டையை போடு



------------------------------------------------------------ 


குழந்தை வளர்ப்பை குழந்தைகளிடமே கற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் பொம்மைகளை அழ விடுவதில்லை 

------------------------------------------------------------ 


தன்னை அறியாமல் ரஜினி பலநேரம் தனக்குள் இருக்கும் எம் எஸ் பாஸ்கரை வெளியே விட்டு விடுகிறார் 

------------------------------------------------------------ 

 வெறுப்பை உள்வாங்கி கொள்கிறோம் அன்பை அலட்சியம் செய்து தூர வைக்கிறோம்


------------------------------------------------------------ 

"காபி டே" எனப் பெயரிட்டவர் நிச்சயமாக ஒரு திருநெல்வேலிக்காரராகத்தான் இருக்க வேண்டும்!

------------------------------------------------------------ 

பிடிக்காத இடத்திலிருந்து சட்டென வெளியேறும் சுதந்திரம் பால்யத்தோடு முடிந்துவிடுகிறது 

------------------------------------------------------------ 

"பாவாயா பேரனா?" என்று முன்பு எங்கள் ஊரில் சில கிழவிகள் கேட்பார்கள், அதைத்தான் "People you may know?" என்கிறது இந்த facebook

------------------------------------------------------------ 

சீனாவில் காற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை -செய்தி. 
நீ ரொம்ப லேட்டு, லேஸ் காரன் அதை பண்ணி பல வருசமாச்சு

------------------------------------------------------------  

       அசதியா இருக்குன்னு ஒரு நிமிசந்தான் கால நீட்டி உட்கார்ந்தேன்!  "கொடுத்து வச்ச வாழ்க்கையா"ன்னு ஒருத்தர் பாராட்டிட்டு போறாரு :(

------------------------------------------------------------   

மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருப்பவன் கஞ்சன் அல்ல, புத்திசாலி  

------------------------------------------------------------   

திடீரென ஒருவன் நூறு எதிரிகளை சம்பாதிக்க, சிக்னலில் வண்டி ஆப் ஆவதே போதுமானதாக இருக்கிறது  

------------------------------------------------------------   

   சரக்கடித்த பின் பழைய கேர்ள் பிரெண்ட்ஸ்க்கு மெசேஜ் அனுப்பாமல் தடுக்கும் App இருந்தா எவ்வளவு நல்லா  இருக்கும் !!

------------------------------------------------------------

Sunday, June 3, 2018

முடிவை யூகிக்க முடியாத சில வரிக் கதைகள்

டாஸ்மாக் உரையாடல்
"உனது தாய்தான் உலகத்திலேயே அற்புதமான உடலமைப்பு கொண்ட அழகி"
"நீ நிறைய குடித்துவிட்டாய், வீட்டுக்கு போகலாம் வா, அப்பா'
_______________________
"எல்லோரும் போகும் பாதையில் செல்வதை விட, அதற்கு எதிராக செல்பவன் அதி புத்திசாலி" என்ற என் விளக்கத்தைக் கேட்டும், ஒன்வேயில் வந்ததற்க்கான அபராத பேப்பரை என் கையில் கொடுத்தார் போக்குவரத்து காவலர்.
_______________________
"ஆண்டவா ஆண், ஆம் அது ஆண்" என கத்திக்கொண்டே ரூமை விட்டு வெளியே வந்தான்.
இனி தாய்லாந்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கக்கூடாது என்றும் முடிவு செய்து கொண்டான்
_______________________
பெரும் பணக்காரனுக்கு பிறக்க இந்தக் குழந்தை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது என்றனர் பொதுமக்கள்.
பணக்காரனால் கருவிலேயே கொல்லப்பட்ட குழந்தைகள், சொர்க்கத்தில் இதை கேட்டதும் கடும் கோபம் கொண்டனர்.
_______________________
தொலைபேசி உரையாடல்:
மனைவி: windowவை திறக்க முடியவில்லை என்ன செய்ய.
கணவன்: அதன் மேல் நிறைய எண்ணெய் ஊற்றி ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து திற.
அரைமணி நேரத்திற்கு பிறகு.
மனைவி: இப்போது திறக்க முயற்சித்தேன், லேப்டாப்பே வெடித்து சிதறி விட்டது.
_______________________

காதலும், முத்தங்களும்.

"நான் அவளுக்கு, இந்த அழகான ரோஜா பூங்கொத்தைக் கொடுத்தாள், என்னை முத்தமிட்டு கொண்டே இருப்பாள்" என தன்னிடமிருந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்து கடைக்காரரிடம் பூங்கொத்தை வாங்கினான் அவன்.
"இது போன்ற பத்து வயது சிறுவர்கள் மிகக் கெட்டுப்போய் விட்டார்கள்" என்று புலம்பினார் கடைக்காரர்.

பூங்கொத்தை வாங்கிய சிறுவன் தன் அம்மாவின் கல்லறை மேல் படுத்துக்கொண்டு அவளுக்கு மிகப் பிடித்த ரொஜா பூங்கொத்துடன் அவள் வந்து முத்தமிட காத்திருந்தான்
_______________________

Saturday, June 2, 2018

வலைபேசி 1

 கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்து நான் மிகவும் ரசித்து மறக்க இயலா பல ட்விட்டுகள் (கல்வெட்டுகள் அல்லது நங்கூரம்) தான் இந்த மலரும் நினைவுகள்...

எங்க தாத்தா கடைசிவரை சுதந்திரத்துக்கு போராடினார் எங்க பாட்டி தரவே இல்லை
---------------------------------------

"காக்கா ஜெயிச்சாலும் நரி ஜெயிச்சாலும் வடை பாட்டிக்கு கிடைக்க போறதில்ல. நாமதான் அந்த பாட்டி #அரசியல் #வட போச்சே!"
---------------------------------------

வகுப்பறையில் டீச்சர் "வெளியே போ" என திட்டினால் வாதத்தில் வென்று விட்டாய் என்று அர்த்தம்.
---------------------------------------

கல்யாண சமையல் அண்டாவில் காயை தேடுவது போலவே இருக்கிறது ஹர்பஜன் பேட்டிங் ஸ்டைல்
--------------------------------------- 

ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படாத எந்த திறமையும் ஜெயிப்பதில்லை.
---------------------------------------

"மச்சி சாம்பார் வைக்கவா? ரசம் வைக்கவா?" "
முதல்ல ஏதாவது செய்டா, அப்புறம் பேர் வைக்கலாம்" பேச்சுலர் ரூம் பேஜார்கள்.
---------------------------------------

ஆழம் தெரியவேண்டுமானால் காலை விடாதே அடுத்தவனை தள்ளிவிடு #கார்போரேட் விதி
---------------------------------------


மனைவி கஸ்டமர் கேர் ரெண்டுமே ஒண்ணு. பிரச்சனைன்னு போன் பண்ணா அவங்க சொல்றதை தான் சொல்வாங்க, நாம என்ன சொல்றோம்னு கண்டுக்கவே மாட்டாங்க
---------------------------------------

குழந்தைகளுக்கு குழந்தைகளே தடையாக இருக்கின்றன. நான் நடுவுலதான் படுப்பேன்
---------------------------------------

ரம்யா நித்யா ஓவியா பேருக்கு பின்னாடி ஆம்பளை பேரை சேத்திக்கிட்டா மட்டும் நாங்க ஒரிஜினல் ஐடின்னு நம்பிருவமா #பிளடி பேக் ஐடி ப்ராடுகளா... பிச்சு... பிச்சு
---------------------------------------

மனைவி சமையல் பழகும் முன் மனைவி சமையல் பழகி விடுகிறது.
---------------------------------------

ஆபீஸ் கேன்டீன்ல ஒருத்தி அந்த ஒயிட் சட்னி கொடுன்னான்னு கேட்குறா, ஏண்டி உனக்கு நிஜமா அது தேங்கா சட்னின்னு தெரியாது
---------------------------------------

 போண்டா வடையோடு ஒப்பிட்டால் பஃப்ஸ்ல்லாம் வெறும் பித்தலாட்டம்.
---------------------------------------

புன்னகை வழிய போன் பேசுபவன் ஒன்று புதிதாய் பெண்ணுடன் பேச வேண்டும் அல்லது புதிய பெண்ணுடன் பேசவேண்டும்.
---------------------------------------
உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் ஒருமுறையாவது நம்பிக்கை துரோகம் கடவுளால் செய்யப்பட்டிருக்கும்
--------------------------------------- 

பொங்கிய பீரை அடைக்க பூந்தியை உள்ளே போடும் விங்ஞானி யார் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் என்ன ஒரு கண்டுபிடிப்பு
---------------------------------------  

கிரிக்கெட்டில் விளையாடுவதே பத்து நாடு, இதில் செஞ்சா எப்படி உலக சாதனைன்னு சொல்றாங்களோ 
---------------------------------------  

வலைபேசி 2,3,4 என இதன் தொடர்ச்சியை வரும் நாட்களில் பதிவிடுகிறேன். கூகுளிலோ, ட்விட்ரிலோ follow செய்யுங்கள், பதிவிடுகையில் அப்டேட் கிடைக்கும். தங்களுக்கு மிகவும் பிடித்த பழைய ட்விட்களையும் பின்னூட்டம் இடலாமே?



Friday, June 1, 2018

இளையராஜா 75

இளையராஜாவை பற்றியோ அவர் பிறப்பு மற்றும் நுண் தகவல்களை பற்றியோ நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் கூகுள் என்னை விட அதிகமான விபரங்களை வைத்திருக்கும்.
எனக்குள்ளும் என்னை சுற்றிய மனிதர்களுக்குள்ளும் ராஜா எனும் இசை பெருங்கடல் ஏற்படுத்திய தாக்கங்களை சொல்வதே என் விருப்பம். ராஜா தன் இசை மூலம் என் சோர்ந்த தருணங்களில் மீட்டெடுத்து, மகிழ்ச்சியான தருணங்களை தந்து, ஏதாவது ஒரு பாடல் மூலமாக பல நினைவுகளை கிளறி விடும் அந்த அற்புதத்தை தான் நினைவு கூற விரும்புகிறேன்.
கால் நூற்றாண்டை கடந்து விட்ட நிலையிலும் "இளமை இதோ இதோ" என்று என்றோ இசையமைத்த அந்த பாடல் தான் இன்றைக்கும் புத்தாண்டு பாடல்.  எல்லா மதமும் போற்றும்படியான, காலத்தால் அழிக்க இயலா பாடல்களை படைத்திருக்கிறார் ராஜா.
எண்பதுகளின் மத்தியில் வந்த மோகன் படங்கள், இளையராஜாவின் பாடல்களுக்காகவே சூப்பர் ஹிட் அடித்துக் கொண்டிருந்தன என்பதிலிருந்தே அவரின் இசை ஆளுமையை புரிந்து கொள்ளலாம்.
தொண்ணூறுகள் இளையராஜாவின் காலம். அவர் அந்த சமயங்களில் இசையமைக்காத படங்கள் வெகு குறைவே எனலாம். கதாநாயகர்கள் படத்தைவிட  இளையராஜாவின் படத்தை பத்திரிகைகளில் முன்னிருத்தி விளம்பரம் செய்யப்பட்டன.
எனக்கு முந்தைய தலைமுறைகளான  எனது மாமா, அத்தை, அக்கா, சித்தி போன்றவர்களுடைய ரத்தத்தில் இளையராஜா கலந்திருப்பார். அவர்கள் பாடும் பாடலில் ஒரு வரி கூட பிசகாமல், தாளம் கூட மாறாமல் அப்படியே பாடும் வல்லமை அவர்கள் பெற்றிருந்தார்கள்.
நம்மைச் சூழ்ந்து நிற்கும் துன்பங்களை கூட மாற்றி அதை துடைத்து தூர எறியும் வல்லமை இளையராஜாவின் இசைக்கு உண்டு.
இளையராஜாவின் திருவாசகம் கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் வடித்த ஒரு நாத்திக நண்பனை எனக்குத் தெரியும்.
எனது காரில் இளையராஜாவின் இசையின் துணைகொண்டு எவ்வளவு தூரமானாலும், தனிமையிலும் அழகாக மகிழ்ச்சியாக கடக்க முடியும்.
ராஜாவின் பாடல்களை ஒலிக்கவிடும் பஸ் டிரைவர்கள் பயணிக்கும் பயணிகளை சுகமான உலகத்திற்கு கூட்டிச் செல்கிறார்கள்.
வெறும் இசை என்று தவறாக நினைக்காதீர்கள் நம் இறந்தகால நினைவுகளை மீட்டித்தரும் டைம் மெஷின்.
"கண்ணே கலைமானே", "காதலின் தீபம் ஒன்று", "என்ன சத்தம் இந்த நேரம்", "மண்ணில் இந்த காதலன்றி", "ஓ பட்டர்பிளை", "கேளடி கண்மணி", "தாலாட்டும் பூங்காற்று நானல்லவா?", "மாலையில் யாரோ மனதோடு பேச", "வலையோசை கலகலவென", "ராஜராஜ சோழன் நான்" என  குறைந்தது 50 மெல்லிசை பாடல்களையாவது நான் உங்களுக்குச் சொல்ல முடியும். அவை மயிலிறகால் வருடும் சுகம் என்ன என்பதை நேரடியாக உணர்த்துபவை.
இந்த பரபரப்பான வாழ்க்கையில் இருந்து என்னை தப்புவிக்க மொட்டை மாடியும், இளையராஜாவும் கிடைத்தது எனக்கான முந்தைய ஜென்ம வரங்கள். இந்த ஜென்மம் எனக்கு ராஜாவின் இசையின் ரசிப்பிற்காக படைக்க பட்டிருக்கிறது
நன்றி ராஜா சார். 
இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழ்க.