Friday, January 15, 2016

சங்கவியின் கவிதைகள்

"பின் தொடரும் நிழலில் குரல்"
😈
என் சாயலொத்த
என் பெயர்கொண்ட
என் வயதுடைய
ஒருத்தியின் மரணத்திலிருந்து,
ஒருத்தியாகவே உணர்கிறேன்
என்னை.!
தன்னிறக்கம் கொண்டு
இயலாமையின் துக்கம் தாளமல்
மலையுச்சியிலிருந்து குதித்து இறந்ததாகவும்,
தேற்றஆளற்று சொக்கப்பனைமரமாய்
மொட்டை வெளியில்
நின்றுகொண்டு எரிந்ததாகவும்,
பார்த்தவர்கள் சொல்லிக்கொண்டர்கள்.
முயல்குட்டி போன்ற அவள் வெதுவெதுப்பான கன்னங்களை
கைகளில் ஏந்தி,
சாபமேற்று உறைந்த அவள் ஊனில்
உனது ஆசுவாசத்தை தந்திருப்பாயானால்
அவள் இறப்பைத் தடுத்திருக்கலாம்
நீ....
நான்,
எனது இயலாமையையும்,
தேற்றலற்ற தனிமையயும்
பல்லின் இடுக்கில் புதைத்துவைத்துச் சிரிக்கிறேன்.
இப்போதெல்லாம்,
அப்பாவின் ஏசல்கள் காதில் விழுவதில்லை.
அம்மாவோ இன்னொருத்தியின்
புகைப்படத்தைப் பார்த்து
புலம்பிக்கொண்டிருக்கிறாள்
இன்றிலிருந்து பதினாறாம் நாளில்,
நீயும் ஒப்புக்கொள்வாய்..
உன்னைச் சுற்றி ஒருத்தி நடமாடுவதாய்...
😈
பாதி நீயாகவும்
மீதி பேயாகவும் திரிகிறேன்.
நீயற்ற நானுக்கு பேய் என்று பேர் வை.
😈
உங்களுக்குள் ஒரு பிசாசைப் புகுத்தி,
ஊடூ(Voodu) பொம்மையின் கழுத்தைத் திருகுவதால்
உங்களுக்குள் ஒரு வதை ஏற்படுத்தமுடியும்.
ஆக,
பிசாசுகளை
பிசாசுகளென்றே
அறிமுகப்படுத்துகிறேன்.

பிசாசுகள் மொழியற்றவை,
மொழியற்ற பிசாசுகள்
இலையின் சலசலப்பொத்து குறவையிடுகின்றன.
மின்மினியின் ஒளிப்புள்ளிகளாய் அலையும் பிசாசுகள்,
வெளிச்சக்கீற்றில் புகையாய்ப் படர்கின்றன.
நிணம் எரியும் வாசம்கொண்ட
பிசாசுகளின் வருகையை
நாயறியும்.
நிராசையில் மாண்டுபோன ஒருத்தி,
தனது காதலனைத் தழுவுவவும்,
தனது மறுவருகையை தெரிவிக்கவும்,
முழுநிலா நாளில் உடன் சேர்ந்தால்
சாசுவதம் கிட்டும் என்றும்,
அதற்குத் தனக்கொரு உடல் வேண்டும் என்றும்,
கதையைத் துவக்குகிறேன்..
பிசாசு பற்றிய புனைவுக்கதைகள் கேட்டுத்தூங்கும் சிறுமியின்
விரல்களில் நகங்கள் வளரத்துவங்குகிறது.
வெண்மை நீர்த்து, விழியெங்கும் கருமை படர்கிறது.
சுவர் பற்றி விட்டத்தில் ஏறி நடக்கிறாள் அச்சிறுமி.
தேகத்தின் நகக்கீறல்களை
இசைக்குறியீடாக்கி தன் கனவில்
பண் ஒன்று இசைக்கிறாள்.
தாம் பார்த்த வனத்தை,
தாம் நனைத்த மழையை,
தாம் தம் ஊடலின் கதகதப்பை
கனவிற்குள் உணர்கிறாள்..
ஒரு பூனையைப்போல் மெதுவாய் நடந்து,
தாம் இருந்த மரக்கிளையையும்,
தாம் நடந்த நிழற்சாலையையும்,
தாம் சிரித்த பூங்காவையும்,
தாம் கடந்த கடற்கரையையும்,
சல்லடைகண்ணால் சலிக்கிறாள்.
பயணவழியெங்கும் தொலைந்த கொலுசைத் தேடும்
பாவச் சிறுமியாய் அலைகிறாள்.
வைகறையில் தேடலைக் கைவிட்டு
நாற்புறச்சுவற்றின் ஒரு மூலையில்
கரும்பொதியென சுருண்டு அழுகிறாள்..
விடியலுக்குள் அறியலாம்
எதிர்புறச் சுவற்றில்
சிறுவன் ரூப தன் காதலனை.!!
#பின்குறிப்பு : பிசாசு பற்றிய புனைகதைகளைக் கேட்டுத் தூங்கும் சிறுமியின் நகங்களை கத்தரிப்பது நல்லது.

No comments:

Post a Comment