Monday, April 13, 2020

கொரானா காலங்கள்

தினசரி காலையில் நானும் இவளும் அரை மணிநேர உடற்பயிற்சி (YouTube Home workout), பின்பு மாடியில் மகனுடன் கிரிக்கெட், மதியம் அரைமணி நேரம்  செஸ், (இப்போது அவனுக்கு பள்ளியில் online வழியாக பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்) தினசரி பத்தே நிமிடம் மட்டும் என்ன நடக்கிறது என TV செய்தி பார்த்தேன், (செய்திகளில் பெருங்கூட்டமாக டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல அல்லாடிய, நடந்தே சென்ற மக்களின் நிலை மட்டுமே கடும் உளைச்சலையும், மிகுந்த பரிதாபத்தையும் ஏற்படுத்தியது, நிச்சயமாக இதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் நடந்திருக்க வேண்டும்) மதியத்திற்கு மேல் எனக்கும் இவளுக்கும் வீட்டிலிருந்தே வேலை, சனி ஞாயிறுகளில் படங்கள், சமையல் (அசைவம் தொடவே இல்லை) தினசரி மாலை இருபது நிமிட தியானம், இரவு மட்டும் ஒரு சிகரெட் (3 pkt stock). தேவையான பொருட்களை மளிகை அண்ணாச்சிக்கு வாட்சப் செய்தேன் வீட்டில் கொண்டுவந்து கொடுத்து போனார், Google pay செய்தேன். வாங்கிய புத்தகங்களில் பஷீரின் மொத்த நாவல்களும் முடித்தேன், வண்ணதாசனின் நடுகை, கலைக்கமுடியாத ஒப்பனைகள்,  ஓஷோவின் சிவசூத்திரம், மலையாள சிறுகதைகள்,  (முக்கிய எழுத்தாளர்களின் இணைய, முகநூல் தளங்களை தினமும் படித்தேன்) வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. வாரம் ஒருமுறை  மூன்று பேரும் வீட்டை சுத்தம் செய்தோம். அவசியமெனில் குடிக்கலாம் என வாங்கி வைத்த சரக்கை குடிக்கும் வாய்ப்பும் ஏற்படவில்லை. குடிக்க தோன்றவும் இல்லை.
ஏறக்குறைய என் மொபைல் காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் அனைவருமே பேசிக்கொண்டோம், ஒன்று அவர்கள் போன் செய்தார்கள் இல்லை நான் கூப்பிட்டேன். கொரானாவை பற்றி அதிகம் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டேன், ஏனெனில் அனைவருமே அதில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றிருக்கிறார்கள் போல. நெட்பிலிக்ஸ்ல் மூன்று தொடர்களை பார்ப்பதாக திட்டம் இருந்தது, நேரம் இல்லை...
அலுவலகத்தை பொறுத்தவரை, இரண்டு மாதங்களுக்கு முன் போட்ட இன்கிரிமெண்ட் கட்டானது, வரும் மாதங்களில் முழுதாக சம்பளம் போட இயலாது 30 அல்லது 50 சதவீதம் பிடித்தம் இருக்கும், அல்லது பணியாளர்களை குறைக்க நேரும் என்று மெயில் வந்தது, எனக்கு பரவாயில்லை, இவளுக்கு “CEO நூறு சதவீத சம்பளத்தை தானமாக வழங்கி இருக்கிறார், எனவே நீங்களும் சம்பளத்தை முன்வந்து வழங்குங்கள் எனக் கேட்டார்கள். “நீயே ரிசைன் லெட்டர் கொடுப்பது புத்திசாலித்தனம்”, என்றேன்.  நிஜமாகவே கவலை தோன்றவில்லை. ஏனெனில் வாழ்க்கையை திரும்பி பார்த்தபோது எனக்கு பயணங்களும், புத்தகங்களும், நண்பர்களும் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள், வேலையின் இனிமையான நினைவுகள் என்பது சேர்ந்த சில தினங்களுக்கு பிறகு விலகிக்கொண்ட மாயை. சம்பளம் வந்தும் 20ம் தேதியே பிச்சையெடுப்பவர்களில் நானும் ஒருவன், ஆயிரம் வருடங்கள் வாழப்போகிறோம் என்று நினைப்பவர்கள் இதற்கு நமக்கும் சேர்த்து கவலை படட்டும், இதற்கெல்லாம் நான் கவலைப்பட முடியாது. "இந்த நொடியில் வாழ்என்பதே என் முக்கிய வாழ்க்கை தத்துவம், ஆனால் எதிர்மறையாக இதுதான் எனக்கு வாழ்க்கையில் நிறைய கொடுத்திருக்கிறது.

மிக முக்கியமாக கோபம் வரவில்லை நிஜமாகவே எங்களுக்குள் சண்டை வரவில்லை, அம்மாவும் மகனும் மட்டும், சில சமயங்களில் சண்டையிட்டார்கள் (குளி, சாப்பிடு, மொபைலையே நோண்டாதே மாதிரி) காசு சுத்தமாக செலவாகவில்லை, வழக்கமாக செலவாகவும் இந்த மாதம் ஷாப்பிங், காபி, மகனின் வேன் பீஸ் என கணக்கு போட்டு வைத்திருந்த தொகையை நிவாரண நிதிக்கு கொடுத்தேன். (Google payல் தேடினால் கேரளா முதல்வர், அசாம் முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண வேண்டிய அழைப்பு முன்னாடி வந்து நிற்கின்றன, தமிழக முதல்வர் நிவாரண நிதி அக்கௌண்டையே காணோம். அதனால் Paid via https://ereceipt.tn.gov.in ரெசிப்ட் அங்கேயே பிரிண்ட் எடுத்து கொள்ளலாம், வரி விலக்கும் உண்டாம்) டிவிட்டரை trending பார்ப்பதற்கு மட்டுமே இரண்டு மூன்று நிமிடங்கள் உபயோக படுத்தினேன், முக்கியமாக பத்து நிமிடங்களுக்கு மேல் செய்தி சேனல்களோ சமூக வலைத்தளங்களோ பார்க்காமல் இருந்ததால் நாங்கள் யாரும் ஒருவருக்கொருவர் குரல்வளையை கடித்துக்கொள்ளுமளவு சைக்கோவாகவில்லை. Online ல் வந்த செய்தித்தாளை மட்டும் முழுவதும் படித்தேன். அன்றைய நாளில் நிலவரம் தெளிவானது. உணவை குறைத்து கொண்டதனாலும் (இரண்டு வேளை மட்டுமே, இதில் திங்கட்கிழமைகளில் விரதம்)  உடற்பயிற்சிகளாலும், தியானங்களாலும்  உடல் இளைத்திருக்கிறது, மனம் வலுவாகி இருக்கிறது  இந்த நாட்களை மிக நிம்மதியுடன் அழகாக வாழ்ந்தோம் என தோன்றுகிறது.
எட்டு வருடங்கள் இமயமலை சாரலில் மைனஸ் டிகிரி கடும் குளிரில் நைந்த ஒரே ஒரு உடையுடன் கடும் பசியுடன் ஞானத்தை மட்டுமே தேடிய சாதுக்கள் பற்றி ஓஷோ எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தை உணர்கையில் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை என தோன்றுகிறது. சுயபுராணம் எனக்கே போராடிகிறதுதான், இருந்தாலும் நிச்சயம் இது ஒரு சரித்திர நிகழ்வு இதை எப்படி கடந்தோம் என நினைவு கொள்வதற்கு இந்த எழுத்து பின்னாளில் உபயோகப்படும்.

சரி அது தவிர இங்கே நிகழ்ந்தவை, நெகிழ்ந்தவை சில  
நிகழ்வு:
·       
             *   சுமார் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்க படுவார்கள், சுமார் 50 லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என உலகின்  பல பெரிய நிபுணர்களால்  கணிக்கப்பட்ட இந்தியாவில் அது நிகழாதது மிகப்பெரிய ஆறுதல்
·         மிக இழிவானது என நான் கருதியது இரு புறங்களிலும்  கொரானாவை வைத்து செய்த அரசியல். நோயாளிகள் மருத்துவ பணியாளர்களை நோக்கி செய்த தேவையில்லாத செயல்கள். அதற்கு மத சாயம் பூசி சண்டையிட்டது. அரசியல்வாதிகள் எப்போதும் மாற மாட்டார்கள் ஐயா, பொது மக்களுக்கு அறிவு எங்கே போயிற்று? ஜாதி, மத, கட்சி வேறுபாடு பார்த்து  சண்டை போட்டு கொண்டிருக்க வேண்டிய நேரமா இது? நிராகரிக்கப்பட வேண்டிய இன்னும் பல இருக்கிறது. அதை சொல்ல விருப்பமில்லை.
·         அரசு இயந்திரம் இதுவரை நான் என் வாழ்நாளில் பார்க்காத காரியங்களை செய்தது ஆச்சர்யம். VAO உடன் மருத்துவ பணியாளர்கள் ஏரியாவில் வீடுவீடாக வந்து சோதனையிட்டார்கள், ஸ்டிக்கர் பாய்ஸ் என நானே விமர்சித்த இந்த அரசு விளம்பரமில்லாமல் பல பணிகளை செய்தது.
·        
    உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் ஏழை மக்களை மத்திய அரசு சரியாக கவனிக்கவில்லை, அவர்களுக்கு உதவி போய் சேரவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபணமாகிறது. ஒரு ஏழை தாய் கங்கையில் தன் ஐந்து குழந்தைகளையும் வீசி எறிந்தது ஏற்றுக்கொள்ளவே இயலாத செயல். 
·         
     டெல்லி நடைபயணம், கச்சா எண்ணெய், மருத்துவ தேவைகளுக்கு, சுகாதாரத்திற்கு மிக குறைவான ஒதுக்கீடு போன்ற உண்மையில் சீரியஸான  விவகாரங்களை எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக மக்களிடம் கொண்டு செல்லாமல், "விளக்குப்பிடிக்கப் போறியா?" என குறிப்பிட்ட பிரிவை பார்த்து கூறுவதாக நினைத்து எழுதிக்கொண்டிருந்தார்கள். (இதில் தெளிவானா அரசியல் பார்வையுள்ள எதிர்க்கட்சியினர் சிலரும் வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டது துயரம்). தமிழக மக்கள் விளக்கை ஏற்றினார்கள், எனது தெருவில் சுமார் 50 வீடுகள் உள்ளன. நான்கு வீடுகளில் விளக்கை ஏற்றுவார்கள் என எதிர்பார்த்து மொட்டை மாடிக்கு போனால் அனைத்து வீடுகளிலும் மின்சாரம் அணைக்கப்பட்டு விளக்கோ டர்ச்சோ மொபைல் திரையோ ஒளிர்ந்துகொண்டிருந்தது. சென்னையில் மட்டுமே 1500 மெகா வாட் குறையும் என எதிர்பார்த்த மின்வாரிய துறைக்கு 2600 குறைந்ததே இதற்க்கு சாட்சி.  மோடி என்ன எதிர்பார்த்தாரோ அதை எதிர்க்கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன, தவிர சில தவறுகளை சுட்டி காட்டுபவனைக் கூட சங்கி என முத்திரை குத்தி விடுவதால், மோடி எதிர்ப்பா ஆதரவா என குழம்பிக்கொண்டிருந்தவர்களை எதிர் கட்சிகளே  ஏராளமான மோடி பக்தர்களை உருவாக்கி விட்டது பரிதாபம். காங்கிரஸ் என்றொரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. இப்படியே போனால் very difficult to defeat Modi என்பதை புரிந்து கொள்ளுங்கள்.   
·         தன்னார்வ அமைப்புகள் மற்றும் எதிர் கட்சி உதவிகளை ஆளும்கட்சி தடை செய்தது மிகப்பெரிய தவறு, அரசங்களும் உதவி செய்து அமைப்புகளும் உதவி செய்தால் மட்டுமே, ஏழை மக்களின் பசி மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும் 
·         சிகிச்சை தரும் டாக்டர்கள் கொரானாவால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் வேதனையளிக்கிறது

·         நெகிழ்வு: கடும் பசியோடு இருந்த குறிப்பிட்ட பகுதி மக்களை பார்த்த இரண்டு புதுச்சேரி இளைஞர்கள் சமைத்து தினமும் வழங்கி கொண்டிருந்தது,  பல மனிதர்கள் தெருக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு வழங்கியது,  பெரும் பணக்காரர்கள் பலர் நிஜமாகவே தன் யார் என இந்த தருணத்தில் காட்டினார்கள். கோவையில் ஸ்ரீதேவி சிவா, விப்ரோ, நாம் திட்டிக்கொண்டிருந்த அம்பானி, அதானி இன்னும் பல பெரிய நிறுவனங்கள் உதவிகளை முன்னெடுத்தன. பள்ளி சிறுவன் ஒருவன் தன் மொத்த சேமிப்பையும் உதவிக்கு வழங்கினான். நிறைய நடிகர்கள் பெரிய அளவில் நிதிகளை கொடுத்தார்கள், பல நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் பெரிய அளவில் உதவி செய்கின்றன. அக் ஷய் 25 கோடி கொடுத்தார், இங்கே லாரன்ஸ் மூன்று கோடியும், அஜித் 1.25 கோடி கொடுத்தது நிறைவு. கொடுக்காதவர்கள் பற்றி குறை கூற இது நேரமில்லை, கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லும் நேரம். குறிப்பாக எனக்கு டாட்டா நிறுவன தலைவரின் செயல் மிகுந்த நெகிழ்வை கொடுத்தது, 1500 கோடியை சொத்தில் இருந்து கொடுத்துவிட்டு, இன்னும்   தேவைப்பட்டால் எனது முழு சொத்தையும் தேசத்துக்காக தர தயார் என்று கூறியது. நிறைய மனிதர்கள் கட்சி ஜாதி மத வித்யாசம் பார்க்காமல் செய்த பேருதவிகளை, நெகிழ்வை எழுத பக்கங்கள் போதாது, சக மனிதர்கள் மேலும் மனிதத்தின் மேலும் எனக்கு இருந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. அனைவருக்கும் நன்றியும் நேசமும்.  

வாழ்க்கை சுருக்கமானது.
பிடிவாதத்திற்கோ, சண்டை போடவோ நேரமில்லை நண்பனே
-லென்னன்
லாக் டவ்னுக்கு நன்றி.  

Monday, April 6, 2020

அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு,


வணக்கம்.
இப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். இந்த கடிதம் வணிக சம்மந்தமானதல்ல, அது சம்மந்தமாக எழுதினாலும் யாருக்கும் உபயோகமும் இல்லை.
தவிர இந்த படத்தையும் நீங்கள் வணிக ரீதியில் சமரசம் செய்ய முற்படவில்லை என்பது வேறு விஷயம். "ஏன் முன்பு தியேட்டரில் பார்க்கவில்லை?" என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதிலில்லை, ஏனெனில் படம் வந்ததே தெரியாத அளவிற்கு எனக்கு ஏற்பட்ட விபத்தோ, மகனின் பிறப்பில் ஏற்பட்ட கோளாறால் மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது பண தேவை சம்மந்தப்பட்ட பைத்தியமாகவோ நான் இருந்திருக்க கூடும்.
நிற்க,
படத்தின் கதாநாயகன் சர்வ நிச்சயமாக இளையராஜா தான், இந்த படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வசனம் எழுதி புரிய வைக்க வேண்டிய தேவையை ஏறக்குறைய விலக்கியே வைத்து விட்டார். படத்தை பதைபதைப்பாய் கொண்டு சென்றதில் அவர்தான் போர் வீரன்.
ஓநாய் நீங்கள் தான். உடல் மொழியில் அப்படியே கொண்டுவந்திருக்கிறீர்கள், உடல் முழுவதும் காயம்பட்டு கிடந்தாலும் கொஞ்சம் கூட குறையாத வேட்டையாடும் துடிப்பும், இழப்பின் ஊமை தவிப்பும், அதுவும் ஒவ்வொரு இழப்பின்போதும் மெளனமாக தலை குனியுமிடம் உச்சம். திருநங்கை ஏஞ்சல் கிளாடியா தலை நிமிர்ந்து உங்களை பார்க்கையில், காப்பாற்ற இயலாமல் தரை நோக்கும் காட்சி உச்சமய்யா. என்னால் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. படத்தில் உங்களுக்கு வசனமே இல்லையோ என நினைத்திருந்த நேரத்தில் அந்த "எட்வினண்ணா நீங்களாவது கதை சொல்லக் கூடாதா" என குட்டி இளவரசி கேட்கையில் ஆரம்பித்தீர்களே? கண்கள் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.
ஸ்ரீ எனும் ஆட்டு குட்டியின் உடலில் ஒரு டன் சுமையை வைத்து சுமக்க சொல்லி விட்டீர்கள், அற்புதம் அந்த குட்டி எந்த வித யோசனையுமில்லாமல் உங்களின் உடலைக் கூட சேர்த்தே சுமந்து வந்தது.
இதை தாண்டிய வசீகரிப்பை சொல்லிக்கொண்டே போகலாம்
"நீ டாக்டர், நீ டாக்டர்" என கையில் கொடுத்த பணத்தை வீசி எறிந்து விட்டு குதூகலிக்கும் மனநிலை தவறியவர்.
"அவனை அரெஸ்ட் பண்ணது தப்புதான் சார், நியாயமா உங்களை முதல்ல பிடிச்சிருக்கணும்" வெறியோடு குற்றவாளியை தேடி தொலைத்துக்கொண்டே இருப்பவனின் கோபம்.
"பணமெல்லாம் தேவைப்படாது, நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி எட்வினை கொல்லனும்" முதன்மை தொழில்முறை வேலைக்காரனின் கூரிய வசனம்.
"மூத்திர பையோட அலைஞ்சிட்டிருக்கேன், அவனை உயிரோடவும், உயிரில்லாதவும் பார்க்கணும்" கடிபட்ட கரடியின் வெறி.
"கொல்லப்பட்டு சாவும் போலீஸ்காரர்கள் வித விதமான குரலெழுப்பி சாவது,
அதிலும் அந்த "ஐயா", பதவியை அந்த வார்த்தையாலே தக்கவைத்து, சாகும் போதும் அது தவிர வேறு எண்ணமே வராத எழுபது விழுக்காடு காவலர்களின் நிலைமை.
"நல்லவேளை அதில ஒருத்தன் மார்ல உதைச்சான், மயக்கமாகி விழிச்சு பார்க்கிறேன், இங்கே இருக்கேன்" எனது நெஞ்சிற்கு கடத்தப்பட்ட வலி.
சாவின் விளிம்பிலும் யாரும் துப்பாக்கியால் சாக கூடாது என மேல் நோக்கி சுடும் அப்பா.
ஒரு பெரும் கொலைகாரன் கதவை திறந்து விடச்சொல்லி பார்வையால் காவலாளியை கெஞ்சும் இடம்
"அம்மாக்கு என்னாச்சு எட்வின் அண்ணா?" என்ற பதில் சொல்லவே இயலாத கேள்விக்கு,
"செத்துட்டாங்க" ஒரே வார்த்தையில் அதை முடித்த விதம்.
ஒரு திரில்லர் படத்தில் மனித நேயத்தை விதைக்கும் வித்தை எப்படி கை வந்தது?
இந்த அரைகுறை எழுத்தை வைத்துக்கொண்டு என்னால் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வேறென்ன....
உங்களுக்கும், பவாவிற்கும் நன்றி மிஷ்கின், ஏனெனில் உங்களை ஒரு இயக்குனராக இல்லாமல் "இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான், அவன் கணக்கையே அடைக்க முடியல பவா" என வேறு ஒரு கோணத்தில் எல்லா நாளும் கார்த்திகையில் அறிமுகம் செய்ததே அவர்தான். புத்தகங்களை அடுத்தநாளே அனுப்பிய என் அக்கா சைலஜாவிற்கும் அன்பு.
உங்கள் காட்டின் இந்த இலை, இனி ஒநாயையும் ஆட்டுக்குட்டியையும் அதன் உள்ரேகை போல சுமந்து கொண்டே திரியும்.

இடம் -ஜெயமோகன்

இந்த இரண்டாவது வார வீட்டின் உள்ளிருப்பில் "என்னடா இது" என்ற மன நிலையில் இருந்தேன், சொல்லப்போனால் அதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே வீட்டில் இருந்தபடி வேலை செய்ய சொல்லிவிட்டார்கள். ட்விட்டர் தோழி மேகா, ஜெமோவின் ஒரு சிறுகதை லிங்க் கொடுத்திருந்தார், அதை முடித்துவிட்டு மற்ற கதைகளையும் படிப்போம் என ஜெமோவின் இடம் சிறுகதையை நன்றாக வீட்டில் சூடு இறங்கி கொண்டிருந்த மதியம் 2 மணிக்கு சற்றே எரிச்சலான மனநிலையில் தான் வாசிக்க ஆரம்பித்தேன்,

“கொரங்கா? இதுவா??

“இது பின்ன கொரங்குல்ல?”

“சிரிக்குது?”

“சிரிக்காதா பின்னே? அம்பது ஓடுல்லா உடைச்சிருக்கு?”

அனந்தன் திரும்பி தன் வீடு நோக்கி ஓடினான்.  என்ற வரிகளுக்கு சற்றே சிரிப்பு வந்தது, மறுபடியும் முதலில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன். வரிக்கு வரி சிரிப்பு தாங்க இயலவில்லை.

“ஏமான், சொறியுது”

“கொரங்கு சொறியாம பின்ன டான்ஸாலே ஆடும்? வெளங்காப்பயலாட்டு இருக்கானே”  என்ற போது இருந்த சிரிப்பு
”சாதி நாயர்மாரு என்ன பிடிப்பானுவ?” என்றன் அனந்தன்

“எலிபிடிப்பானுவ” என்றான் தவளைக்கண்னன் கொஞ்சம் சப்தமாக மாறியது.
“ஒண்ணுக்கடிக்கும்பம் புடுக்க பிடுங்கீட்டுப்போற எனமாக்கும்”

“ஆருக்க புடுக்க?” என்றான் அனந்தன். என்ற வரிகளுக்கெல்லாம் என் வீடே அதிரும்படி சப்தமிட்டு சிரித்துவிட்டேன். வரிக்கு வரி சிரிப்பை கூட்டி கொண்டே சென்று விட்டீர்கள் ஜெமோ. அட்டகாசம். எனது தனிமை, கவலை, பணிச்சுமை கடந்த நாட்களின் துயரங்கள் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்து விட்டதை போல உணர்வு. படித்து ஒரு மணி நேரம் கடந்த பிறகும்,

"நாயருண்ணா மூளை இருக்கணும். இல்லேண்ணா $ண்ணி இருக்கணும்.. இது ரெண்டும் இல்லேண்ணா என்ன செய்ய?”

"ஹணிமூண் … ஹனுமானுக்கு இங்கிலீஷ்லே"என்பதெல்லாம் ஞாபகத்தில்,  சிரித்துக்கொண்டே தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சுமையை மறக்க செய்த உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை மிக மிக குறைவு ஜெமோ.எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, சக மனிதனின் மனதின் சுமையை  முற்றிலும் குறைத்து மகிழ்விக்கும் கலைஞனுக்கு ஒரு சாதாரண வாசகன்  என்ன கைமாறு செய்துவிட முடியும்?     

அட்டகாசமான நகைச்சுவை குறும்படமாக இடம் சிறுகதையை பதிவு செய்யலாம்.  தமிழிலோ மலையாளத்திலோ அல்லது ஒரே சமயத்தில் இரண்டிலுமோ, இதை இளம் வருங்கால இயக்குனர்கள் ஜெமோவின் உதவியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.

இந்த சிறுகதையை ஜெமோவின் இணையதளத்தில் படிக்க:
Click இடம் [சிறுகதை]