Wednesday, February 24, 2016

தனலட்சுமி

நண்பனுக்கு ஒரு தங்கை இருந்தால் நமது வாழ்கையிலும் தங்கைகளின் எண்ணிக்கை ஒன்று கூடிவிடுகிறது தானே.

எனது கல்லூரியில் விஜி எனது நெருங்கிய நண்பனாக இருந்தான், இன்னும் நட்புடன் தொடர்கிறான். அவனுக்கு இரண்டு தங்கைகள், முதலாவது புனிதா, இரண்டாவது தனலட்சுமி. "தனா", என்று அழைப்பேன்.

முதலில் அவளை பார்த்தபோது டுடோரியல் காலேஜ் செல்வதாக சொன்னாள், ஒல்லியாக, உயரம் குறைவாக, சிவப்பாக எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பாள்.

"+2வில் பெயில் ஆகிட்டியா",

"இல்லண்ணா, கட் ஆப் மார்க் பத்தல, அதான் மறுபடியும் எழுத போறேன்"

"எழுதி?"

"டாக்டர் ஆக போறேன்" என்றாள் வெகு சீரியஸாக,

செமையாக சிரித்து விட்டேன்.

"சும்மா கதை விடாத"

"நெஜமாதான்னா" என்றவள் அம்மாவை அழைத்து எனக்கு விளக்கம் கொடுக்க சொன்னாள்.
நண்பனின் அம்மாக்கள்  ஆட்டோமாட்டிக்காக நமக்கும் அம்மா ஆகி விடுவார்கள்.
"ஆமாம் கண்ணு' (இப்போதும் அப்படிதான் அழைக்கிறார்கள்) "அவ டாக்டருக்கு தான் படிக்கிறா"

அம்மாவின் முன்னாள் சிரிக்க முடியாது, கல்லூரியில் எனது தோழர்களுடன் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன்.
விஜி எதுவும் சொல்லாமல் சும்மா கேட்டுகொண்டிருப்பான்.

அவன் குடும்பம் அப்போது மிக வறுமையில் இருந்தது, கொஞ்சம் தோட்டம் இருந்தாலும் அதிலும் வருமானம் இல்லை. அப்பா கிடைத்த வேலைகள் செய்து மிகுந்த சிரமத்துடன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். பெரிதாக அம்மாவும் அப்பாவும் படிக்கவும் இல்லை.

விஜி கல்லூரி தொகையை கூட கட்ட முடியாமல் சிரமப்படுவான். நாங்கள் படித்து ஒரு தனியார் கல்லூரி வேறு, ஏதாவது ஒரு காரணம் சொல்லி காசு பிடுங்குவார்கள்.
இன்னொரு தங்கையான புனிதாவும் ஒரு கல்லூரியில் படித்து கொண்டிருந்தாள்
இதில் தனாவை எப்படி படிக்க வைக்க போகிறார்கள் என மலைப்பாக இருந்தது. சிறிய பெண் ஏதோ ஆசை படுகிறது என்ற எண்ணம் மட்டும் இருந்தது.

எனக்கும் "தனா"விருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது, அது வேகம்.
எனக்கு வாகனத்தில் அதிவேகமாக செல்வதென்றால் ஒரு வெறி (எங்கியாவது அடி பட்டே சாக போறான்), அவளும் நானும் பைக்கில் ஒருமுறை சென்ற போது, பயந்து விடுவாள் என 70ல்(அது எனக்கு ரொம்ப கம்மியான வேகம்)
"என்ன இவ்ளோ மெதுவா ஓட்டுறீங்க, பயமா அண்ணா?" என்றாள். என் வேகத்தில் மிக துல்லியம் இருக்கும், சாலை பற்றிய கணிப்பும், வாகன தூரம் கணக்கிடுவதில் இருந்த தெளிவும், எனது வண்டியின் கண்டிசனும், எந்த வாகனமாக இருந்தாலும் அதை தாண்டி செல்ல தூண்டும்.

அப்படி ஒரு பெண்ணை நான் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை, கிட்ட தட்ட 120, 130ல் போகிறேன் கொஞ்சம் கூட பதட்டமோ பயமோ அவளிடம் இல்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என கடைசியில் உங்களுக்கு புரியலாம்.

அதற்காக வேகமாக செல்லுங்கள் என நான் சொல்ல மாட்டேன், ஒரு முறை காலுடைந்து ஆறு மாதம் படுத்த படுக்கையாய் இருந்திருக்கிறேன். அதிலிருந்து எனது காரில் கூட நான் அதிவேகமாய் செல்வதில்லை.

காலம் ஓடுகிறது, கல்லூரியை விட்டு வெளியே வந்து ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறி போனோம், எங்கள் லாரி இரண்டு முறை அடி பட்டு இன்சூரன்ஸ் கூட கிளைம் செய்யமுடியாமல் போய் விற்றும் கடன் அடைக்க இயலவில்லை, இந்த சமயத்தில் எனது தந்தை கடும் விபத்துக்கு உள்ளாகி, கை கால் இரண்டிலும் அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்த வேண்டி வந்த போது, அங்கு டாக்டராக நான் "தனா"வை பார்த்தேன்                    

ஆம். தனாவேதான் என் கண் முன்னாள் டாக்டராக வந்து நிற்கிறாள், எனது அப்பாவிற்கு மருத்துவம் செய்கிறாள், அவளுக்கான பணத்தை வாங்க மறுக்கிறாள்.
மருத்துவம் முடித்து வீட்டிக்கு அவளது காரிலேயே ட்ராப் செய்கிறாள்.
"எப்படி தனா?" என்றேன்
"ஒரு வெறியும் வேகமும் தாண்ணா" என்று சிரித்தபடி சொல்கிறாள்.

அவள் கடந்து வந்த பாதை சுலபமானதல்ல, ஐந்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் சிரமப்பட்டே நகர்த்தி வந்திருக்கிறாள், ஒன்றும் இல்லாத கலை அறிவியல் கல்லூரியிலேயே நமது ஆடைகள் சற்று மோசமாக இருந்தால் படு கேவல படுத்துவார்கள். மருத்துவ கல்லூரி என்றால் கேட்கவே வேண்டாம், இயல்பாகவே இருந்து அனைத்தையும் கடந்து சாதித்திருக்கிறாள்.

பணம் கொழிக்கும் தனியார் துறையில் சேராமல், சொந்த ஊரிலேயே இப்போது அரசு மருத்துவராக, தனது கிராம மக்களுக்காக பணியாற்றும், பல மாணவ மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருக்கும்
தனலட்சுமி என்ற இளம் டாக்டருக்கு ராயல் ஸல்யூட்....
வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்புகளை வைத்திருக்கிறது பாஸ். வாழலாம் வாங்க.

(பின் குறிப்பு: விஜி ஈரோட்டில் மருந்துக்களை மொத்தமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறான், இந்த தொழிலதிபர் போன வாரம்தான் என் ஆலோசனைப்படி Marathi swift desire புதிதாக வாங்கி இருக்கிறான், புனிதா ஒரு அரசு கல்லூரியில் கணினி ஆசிரியையாக பணியாற்றுகிறாள், அம்மாவும் அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்)      
             

Tuesday, February 23, 2016

கடவுள் மறந்த பெயர்

நடு இரவில்
ஆள் அரவமில்லா தெருவில்
வீதியோரம் சுருண்டு
படுத்து விழித்தே
இரவைக் கடக்கும்
அவனின் அரிசியில் மட்டும்
கடவுள் இன்று பெயர்எழுத

மறந்து போனார்..

-பனிமலர்  முகநூல் பக்கத்திலிருந்து 



பள்ளிக்கூடம் to கல்லூரி

"இனி நான் பள்ளிக்கூடம் போவதாக இல்லை"
என  பத்தாம் வகுப்பை முடித்த உடனேயே என் வீட்டில் என் முடிவை அறிவித்து விட்டேன். அது நிச்சயமாக என்னை டாக்டர் ஆக்கி பார்க்கும் கனவுடன் இருந்த என் பாட்டிக்கு தலையில் பாறாங்கல்லை நாலு முறை கொட்டியதற்கு ஈடாக இருந்திருக்கும்.

"ராசா அப்பிடில்லாம் சொல்லகூடாது, பள்ளிக்கோடம் போ" தாத்தா ஒரு பக்கம் பேந்த பேந்த விழித்தவாறு அறிவுரை சொல்லி கொண்டிருந்தார்.

"துரை வேறென்ன பண்ண போறீங்க?" அப்பா
"லாரில போய், வண்டி ஓட்டி பழக போறேன்" சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான்.
ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு 2 அட்டம்ப்டுகள் முயற்சி செய்து தோற்ற என்னை சிறிது நேரம் வெறிக்க பார்த்து விட்டு,  என்ன யோசித்தாரோ கிளம்பி வெளியே போய் விட்டார் அப்பா.

அன்றே நாக்பூர் கிளம்புவதாக இருந்த என் மாமன் நல்லாக்**ண்டனின் (** வரது ஜாதி பேருங்க, அதான் தடை பண்ணி வச்சிருக்கேன் ) வண்டியை மறித்து "மாமா ஐ ஆம் கம்மிங்" என வலுக்கட்டாயமாக ஏறிக்கொண்டேன்.

பெங்களூர், கோவா போன்ற அழகான நகரங்கள், பஞ்சாபி சாப்பாடு, ஹோஸ்பெட் போன்ற அணைகளில் ஆனந்த குளியல், கொல்லம் பீச், கேரளா பீப், (மாட்டுக்கறின்னு சொல்லவே இல்லயே மாமா நீ!)  அரை பீர் (இதை குடிச்சா செத்து போக மாட்டேன்ல) எல்லாம் ஆரம்பத்தில் சுகமாகவே இருந்தது. அரைகுறை டிரைவர் வேறு ஆகிவிட்டேன்.

ஆனால் அதுவே ஏப்ரல், மே மாதத்தில் மிக கொடுமையாக மாறியது. வெயில் தாக்கு பிடிக்க முடியவில்லை, அதுவும் மத்திய பிரதேசங்களில் கடும் அனலடிக்கும், சிறுநீர் கூட ரத்தம் மாதிரி ஒவ்வொரு சொட்டாகத் தான் போகும், லாரியில் இருக்கும் குடி தண்ணீர் தீயை வாயில் ஊற்றினால் போல் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் என் கூட படித்தவர்கள் பதினொன்றாம் வகுப்பை முடித்தால், மீண்டும் படிக்கும் ஆசை வந்தது. ஆனால் பள்ளியில் சென்று படித்தால் கௌரவ குறைச்சல் ஆகி விடுமல்லவா? ஒரு டுடோரியலில் சேர்வதாக முடிவு செய்து, "இனி நான் லாரிக்கு போக போறதில்ல" என்றேன், என் அப்பாவிற்க்கு இப்போதுதான் உண்மையான அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும், "ஒரு லாரி வாங்கீறலாம்னு இருக்கேன்",னு ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார்    

அவரது நினைப்பிலும் மண்ணை போட்டாகி விட்டது, அடுத்த அட்டேம்டில் பத்தாவது, அதற்கு அடுத்த மூன்று அட்டேம்ப்டுகளுக்கு பிறகு பனிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டேன்.
("என்ன சின்னராசு பெரிய படிப்பெல்லாம் படிச்சு முடிசிட்டே போல? இனி அடுத்தது டாக்டர் ஆயிருவே " இது மணி தாத்தா.
"பாட்டி  போய் பத்து வருஷம் ஆச்சு, டிக்கெட் வாங்குற அபிபிராயம் இருக்கா? இல்லையா! தாத்தா" இது நான்)

என் தந்தை லாரி வாங்கியே விட்டார், லாரியில் போவதா இல்லை ஏதாவது ஒரு பல்கலை கழகம் (அண்ணாமலை பல்கலைகழகம் தொலைதூர கல்வி) மூலம் மேல்படிப்பு படிப்பதா என்ற கடும் யோசனையில் காலம் தள்ளி கொண்டிருந்த போது,
என் தங்கையை (சித்தி மகள்) கல்லூரியில் சேர்க்குமாறு (தண்டமாவே தின்னுட்டு சுத்தாதடா, அவளை காலேஜ்ல சேர்த்தி விட்டுட்டு வா) வந்த அன்பு கட்டளையை மீற முடியாமல், ஈரோடு அருகே இருக்கும் ஒரு கல்லூரிக்கு படை எடுத்தோம்.

அவள் என்னுடன் சேராமல் இருந்ததால் சற்று நல்ல மார்க் எடுத்திருப்பதை கொஞ்சம் பெருமையாகவே வீட்டில் சொல்லி கொள்வார்கள். (உன்னால தாண்டி என் மானமே போகுது)

அவளுக்கு கேட்கும் சீட் தருவதாக சொன்ன பின்பும் இடத்தை காலி செய்யாமல் "சார்ர்ர்ர்ர்ர்ர்ர்", என பம்பி கொண்டிருந்தாள். "போலாம் வாடி", என்ற என்னை மதிக்காமல், "இன்னொரு சீட் வேணும்", என்றாள்.

"யாருக்கும்மா?", என்றார் துணை தலைவர்.
"இவனுக்கு தாங்க",, என்று என்னை கைகாட்டினாள், எனக்கு பேரதிர்ச்சி, என்னைவிட துணை தலைவருக்கு மருத்துவ மனையில் அனுமதியாகும் அளவு அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஒரு பாட்டில் விஷம் முன்னால் வைக்க பட்டு இருந்தால் அதை அவர் தயங்காமல் குடித்திருப்பார்.

இருக்காதா பின்னே?

என் சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் போடப்படவில்லை, எண்ணெய் வைத்து ஒரு வருடமே இருக்கும் பரட்டை தலை, கழுத்தில் கத்திபோல் தொங்கும் ஒரு செயின், சோலாப்பூர் செருப்பு (அரை கிலோ மீட்டருக்கு முன்பே சத்தம் வரும்), மயில் மார்க் லுங்கி. (ஆடுகளம் தனுஷ்?)

"என்னம்மா சொல்றே?", எனற அவர் கத்திய கத்தலில் அந்த அலுவலக கட்டிடமே கொஞ்சம் தூர் விட்டிருக்கும்.                    

அலுவலகத்தில் இருந்த யாரோ ஒருவர் வந்து அவரை சமாதான படுத்த வேண்டி வந்தது, நீண்ட ஆசுவாசத்திற்கு பின் "இவன் மார்க் சீட் குடு", என்றார் என்னை மேலும் கீழும் பார்த்தபடி.(என்ன ஒரு மன உறுதி?)
"ஹே ஹே அதை வீட்டில் வச்சிருக்கேன்", என்று சொல்லிய என் நம்பிக்கையில் வெடிகுண்டு வைத்தாள் என் அன்பு சகோதரி, அவள் கைப்பையில் (என்னை திட்டம் போட்டு குடும்பமே ஏமாத்தி போட்டீங்களேடி) இருந்து எனது மார்க் சீட் கற்றைகளை எடுத்து கொடுத்தாள்.

"உங்கப்பா என்ன தொழில் பண்றாருப்பா?" என்று திடீரென அன்பொழுக கேட்டார்.
"விவசாயம் பண்றார், ஒரு லாரி கூட வச்சிருக்காருங்க"
"நீங்க எதுல இங்க வந்தீங்க?"
"டீசல் புல்லட்லங்க"
"மார்க் ஷீட் ரொம்ப வெயிட்டா இருக்கேப்பா? எதுக்கு கஷ்டப்பட்டு பைக்ல கொண்டு வந்தீங்க? லாரில போட்டு எடுத்திட்டு வந்திருக்கலாம்ல!"

இதற்கு பிறகு எனக்கும், அவருக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளும், என் தங்கை பியூன் வரைக்கும் போய் கெஞ்சியதையும் (ஆளுதான் இப்படி, மத்தபடி இவன் ரொம்ப நல்லவன்ங்க)  நான் எழுதுவது உங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல.

எனக்கு நல்லது செய்ய முயன்ற (?) என் தங்கைக்கும், என் குடும்பத்திற்கும் நான் கொடுத்த வாழ்நாள் பரிசு அந்த கல்லூரியில் அவளுக்கும் சீட் இல்லை என்று துணை முதல்வர் எங்களை துரத்தி விட்டதே.

யாருகிட்ட?

அதன் பின் பக்கத்தில் இருந்த இன்னொரு சிறப்பு வாய்ந்த தனியார் கல்லூரி எங்கள் இருவருக்கும் இடம் கொடுத்தது.
ஏன்னா அவங்க அப்பத்தான் கட்டடம் கட்ட ஆரம்பிச்சு இருந்தாங்க....


    

கொடைக்கானல் சுற்றுலா

கொடைக்கானல் பகிர்வுகளும், உபயோகமான குறிப்புகளும்
நவம்பர் மாதம் கோடை செல்ல ஏற்ற மாதம், ஏனெனில் ஹாப் சீசன், ரூம்களின் விலை பாதியாக இருக்கும், clear trip போன்ற வெப்சைட்களில் 30 சதவீதம் வரை discount கிடைக்கும்


மேகம் தலையை தொடும் பொதிகை தொலைக்காட்சி அருகில் ரூம் (green land) அதில் தெரியும் காட்சிகளே மிக அற்புதமானவை, சுற்றிலும் மலை தொடர்கள், மேகத்தை மெதுவாக நகர்த்தி செல்லும் காற்று, குளிர். அருகில் கோக்கர்ஸ் வாக் எனப்படும் நடை பயிலும் இடம்

சில குறிப்புகள்
# உணவு மிக கேவலமாகவே இருக்கின்றது, Astoria என்ற பேருந்து நிலைய பக்கத்துக்கு உணகவகத்தில் மிக நன்று, ஆனால் அதிக பட்ச விலை

# நவம்பர் மாதம் கூட்டம் மிக குறைவு, அனுபவிக்க உகந்தது, சீசன் எனில் அவசர அவசரமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போகும்

# பூம்பாறை என்று ஒரு எழில்மிகு கிராமம் இருக்கிறது, அங்கு ஒரு முருகர் கோவிலை தவிர வேறு எதுவுமில்லை, ஆனால் அதற்கு போகும் வழி எங்கும் இயற்கை, அழகென்றால் என்ன என சொல்லித்தரும், அங்கே மலை பூண்டு கிடைக்கும் ஒரு வருடம் நன்றாக இருக்குமாம், பேரம் பேசி வாங்கலாம்

# முடிந்தவரை சொந்த வாகனத்தில் சென்று விடுங்கள், gps மூலமாகவே, சுற்றுலா இடங்களை எளிதில் கண்டறிய முடியும், டாக்ஸி வாடகை மிக அதிகம்

# குழந்தைகள் பெரியவர்கள் கூட வருகிறார்கள் எனில் குளிருக்கு இதமான ஆடைகளை கண்டிப்பாக கொண்டு செல்லவும்

# campfire அனுமதி உள்ள ஹோட்டல்கள் எனில் இரவு மிக சிறப்பாக இருக்கும்.

# பேரிஜம் செல்ல வேண்டுமெனில் காலை ஏழு மணிக்கு அதன் செக் போஸ்டில் நின்றால் முதல் 25 வாகனங்களுக்கு அனுமதி தருகிறார்கள், அடர்ந்த வன விலங்குகள் நிறைந்த மனிதர்கள் நாசம் செய்யாத காடு அது

# சுற்றிலும் நாற்பது கிமீக்குள் மொத்த சுற்றுலா தளங்களும் அடங்கி விடுகின்றன, இரண்டு நாட்கள் சரியாக இருக்கும்

# இயற்கை காட்சிகளை அமர்ந்து ரசிக்கும் படியான ரூம்களை தேர்ந்தெடுங்கள்.

# சர்ச் road வழியாக சென்றால் தொண்ணூறு சதவிகித சுற்றுலா தளங்கள் முடிந்து விடுகின்றன

# பிரட் ஆம்லேட் மட்டும் ஓரளவு எல்லா கடைகளிலும் சிறப்பாகவே இருக்கிறது

# வேறென்ன நீங்களும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


நன்றி

யானை டாக்டர் கதை பற்றி

ஜெயமோகன் எழுதிய "அறம்" சிறுகதை தொகுப்பில் உள்ள "யானை டாக்டர்" எனும் கதை பற்றிய சிறு பார்வை

காடு சார்ந்த வாழ்க்கை பற்றி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் யானை டாக்டரை ஒரு முறை வாசிக்க வேண்டும்.

டாக்டர் வி கிருஷ்ணமூர்த்தி என்பவரை பற்றி எழுதப்பட்ட உண்மை கதை தான் இது. ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. யானைகளையும், புழுக்களையும் ஒரு குழந்தை போல் இவரால் கையாள முடிகிறது, எதற்கும் ஆசைபடாத, மிருகங்கள் பால் பேரன்பு கொண்டு அவைகளின் இன்னல்களை தீர்க்க போராடிய ஒரு மனித நேயத்தின் தளபதி அவர். யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல்துறையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொருவடிவமே காசிரங்கா காண்டாமிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார்கள்

அந்த நல்ல மனிதருக்கு காலம் கடந்தாவது, ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்து விட வேண்டும் என ஜெயமோகன் செய்திருப்பது உண்மையில் மிகுந்த பாராட்டுக்கு உரியது.
 ஒருமுறை ஜெமோவை படிக்க தொடங்கி விட்டால், அவர் நம்மை வேறொரு காட்சி பரப்புக்கு கடத்தி கொண்டு போய் விடுகிறார் 
அவரது வரிகள் சில

வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம். அதைமாதிரி தியானம் ஒண்ணும் கெடையாது. நாம யாரு, நம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும். வலின்னா என்ன? சாதாரணமா நாம இருக்கறத விட கொஞ்சம் வேறமாதிரி இருக்கற நிலைமை. ஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்னு நம்ம மனசு போட்டு துடிக்குதுஅதான் வலியிலே இருக்கற சிக்கலே….பாதி வலி வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும்வெல், டெஃபனிட்லி கடுமையான வலிகள் இருக்கு. மனுஷன் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. ஹி இஸ் ஜஸ்ட் அனதர் அனிமல்னு காட்டுறது அந்த மாதிரி வலிதான்…’

"சரிதான் தூங்கு என்று சொன்னது மூளை. எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு."
   
"என் உடலின் எல்லா செல்களும் நுரையின் குமிழிகள் போல உடைந்து நான் சுருங்கிச் சுருங்கி இல்லாமலாவது போல உணர்ந்தேன்"

"நிறைந்த மனதின் எடையை உடலில் உணர்வது அப்போதுதான் முதல் முறை"

 அறம் சிறுகதை தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் சிறந்தவையே. இவை புத்தகங்களாக இணையத்தில் விற்பனையாகிறது. உங்கள் வாசிப்பின் திறனை நிச்சயம் ஜெமோ அதிகரித்து விடுவார். நீங்கள் படிக்கவும் பரிசளிக்கவும் மிக நல்ல புத்தகம் அது என்பதில் சந்தேகம் இல்லை.

அதற்கு சுத்தமாக நேரம் இல்லை என்பவர்களுக்காக ஜெயமோகன் தனது வலை பக்கத்திலும் இந்த சிறுகதையை வெளியிட்டிருக்கிறார்.


  மனித நேயத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் எனில் இதை காசு கொடுத்து வாங்கி படியுங்கள்

Sunday, February 21, 2016

கல்லூரி காதல்

முன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது


"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், நீ இல்லாட்டி நான் தூக்கு மாட்டீட்டு செத்துருவேன்" என்ற ரீதியில் ஒரு தற்கொலை மிரட்டல் காதல் கடிதத்துடன் ஆரம்பிக்கிறது எனது கடந்த கல்லூரி வாழ்க்கையின் உண்மை கதை.

"கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  உன்னை பாக்குதுடா" என்றான் உயிர் நண்பன் ஈஸ்வரன் (பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை), முதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்திருந்த காலம்

அப்போதுதான்  ஏழு பேர் கொண்ட மொக்கை க்ரூப்பின் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தேன்.

வீட்டிக்கு தெரிந்தால் சொந்தம் பந்தம் எல்லாம் சேர்ந்து கல்லூரிக்கே வந்து அடி பிரித்துவிடும் அபாயமும் எனக்கு இருந்ததால்,
"அது என்னை ஏண்டா பாக்கணும்?" என்று ரிவர்ஸ் கியர் மாற்றினேன் .

"நம்மை ஒரு பொண்ணு பாக்கிறது எவ்ளோ பெரிய மேட்டர் தெரியுமா "
என்று வண்டியை முன் நோக்கி தள்ளினான் சத்தி (இவன் பெயரை எல்லாம் மாற்றினால் என்ன மாற்றா விட்டால் என்ன?).

கவிதா ஒன்றும் கல்லூரியில் அழகி கிடையாது என்றாலும், சோறு பார்த்து பத்து நாளானது போல் இருக்கும், குடும்ப ஒல்லிவிளக்கு (குத்து விளக்கு கூட கொஞ்சம் குண்டா இருக்கும் பாஸ்) என்று வைத்து கொள்ளுங்கள்.

கவிதா தூது விட்டது, என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று.

இப்போது கொஞ்சம் என் பெருமைகளை பீத்தி கொள்ளும் நேரம் வந்து விட்டது

என்னை பற்றிய பிறரின் அபிப்ராயங்கள்

"அட்டண்டன்ஸ் லாக்" HOD

"கிளாஸ் ரூம்ல கிரிக்கெட் விளையாடுறான்," English lecturer 

"செக்யூரிட்டிக்கு காசு கொடுத்து, 2ன்டு பிரீயடே வெளியே போறான்" Office boy.

"அன்பே, உன் அப்பனை ஓடி ஒளிந்து கொள்ள சொல் நாய் பிடிக்கும் வண்டி வருகிறது"ன்னு கவிதை எழுதுறான்" Maths.

"நீயெல்லாம் திருந்தவே மாட்டியா மூதேவி" vice president 

எனது கல்லூரியில் அனைத்து தவறுகளுக்கும், பெரிய தண்டனை பைன்,  அவர்கள் அப்போதுதான் கல்லூரியை விரிவாக்க கட்டடம் கட்டி கொண்டிருந்தார்கள். நான் சேர்ந்து இருந்தது ஒரு தனியார் கல்லூரி (நம்ம மார்க்குக்கு அரசு கல்லூரில அப்ளிகேசன் கூட தரமாட்டாங்க) கையில் கொஞ்சம் காசு புரண்டதால் தான், பெரிய பிரச்சனைகளில் மாட்டாமல் பைன் கட்டியே ஒரு மானம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

இவ்வளவு சிறப்பு தகுதிகள் வாய்ந்த என்னிடம் தான் தனியாக பேச ஆசை பட்ட கவிதாவை தனியாக தைரியமாக சந்தித்தேன், கையில் ஒரு பேப்பரை கொடுத்து விட்டு ஒரு கேனை சிரிப்பு சிரித்து கொண்டு ஓடி விட்டது.

தேவைப்பட்டால் இதன் தொடர்சியான இரண்டாவது பாராவை மீண்டும் படித்து விட்டு திரும்ப இங்கேயே வரவும்.

இது என்னடா வருங்கால ஒலக தலைவனுக்கு வந்த சோதனை என்ற எண்ணத்தில் எனது மொக்கை க்ரூப்பை கூட்டி ஆலோசனை நடத்தினேன்.

மூன்று ஆதரவும்(ஈஸ், சத்தி, திரு), நான்கு எதிர்ப்பும் (விஜி, கதிர், தனபால், தாமு) இருந்ததால், (இது கரஸ்க்கு மட்டும் தெரிஞ்சுதுன்னு வச்சிக்க, பைன் எல்லாம் கிடையாது மச்சி, காலேஜ் விட்டு ஒரேயடியா தொரத்தி விட்ருவாங்க -தனபால்)
   
"கொஞ்சநாள் டைம் குடு, நாட்டை திருத்தனும், அப்பாவை அம்பானியாக்கணும்" என்ற ரீதியில் பேச்சு வார்த்தை நடத்தி கவிதாவிடம் தற்காலிகமாக தப்பித்தேன்.

"அவன் எதுக்குடா காலேஜ் போகாம, லாரில போறான்?" என்ற என் அப்பாவின் கடும் சுடு சொற்களையும்  மீறி, அப்பா வாங்கி இருந்த புதிய NP லாரியில் ஏறி இந்திய சுற்றுபயணம் செய்யும், நிலைக்கு என்னை நானே தள்ளி கொண்டேன்.

காலேஜ் 10 நாள் லாரி 20 நாள் என இரண்டு வருடத்தை ஓட்டி, கொண்டிருந்த பொன்னான நாட்களில், இரண்டாவது வருட முடிவில் கவிதா மீண்டும் என்னை தனியாக சந்திக்க, தூது விட்டது.

மறுபடியும் சத்திய சோதனையா, சரி ஒரு வருஷம் தாங்கிற மாதிரி ஒரு பொய்யை (லாரி லாஸ், கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணீட்டு இருக்கேன்) ரெடி பண்ணிக்கொண்டு சந்திக்க போனேன்
ஆனால், கவிதா முகம் முழுவதும் வெக்க சிரிப்புடன், திருமண பத்திரிக்கையை கையில் கொடுத்து
"அண்ணா, எனக்கு கல்யாணம் மறக்காம வந்துருங்க"ண்ணா" என பாசமலர் படம் காட்டும் என்று நான் சத்தியமாய் கனவிலும் நினைக்கவில்லை.

பின் திருமணத்திற்க்கு போய்விட்டு, அந்த பாவப்பட்ட மாப்பிள்ளையிடம் "கவிதா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும் ப்ரோ" என பிட்டு போட்டு சரக்கடிக்க காசு வாங்க வேண்டி வந்தது.

அந்த தெய்வீக காதலை நான் ஏற்று கொண்டிருந்திருந்தால், டூயட் பாடி, தாடி வைத்து, குடியில் மூழ்கி, கருப்பு கம்பளியை போர்த்திகொண்டு, பக்கத்தில் ஒரு சொறிநாயை கட்டி வைத்து  "இந்த பொம்பளைங்கள மட்டும் நம்பவே கூடாதுங்க எசமான்" என்று சிலகாலம் இருந்திருக்கும் வாய்ப்பை தவற விட்டு விட்டேன்.

"ஆருயிர் தங்கை" கவிதா எங்கிருந்தாலும் வாழ்க 

பொலவக்காளிபாளையம் கிரிக்கெட் அணி

பொடிப்பையன்களாக இருந்த நாங்கள், வயதுக்கு வந்ததும், பொலவக்காளிபாளையம் கிரிகெட் அணியை இரண்டாக பிரித்து  (பொகாபா ஜூனியர்), முதல் கிரிக்கெட் டோர்ணமன்ட்டில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்து, எங்கள் கையில் இருந்த ஐந்து பத்துகளை பொறுக்கி, நூறு ரூபாயை கட்டி விட்டோம். உள்ளூர் சீனியர்களின் கடும் ஆட்சேபனையை வேறு நாங்கள் சந்திக்க வேண்டி வந்தது.

 
மொத்த பரிசே ஆயிரம் ரூபாய் தான், அப்போது எங்களுக்கு அது ஆயியியியியிரம் ரூரூரூரூவா.

  டோர்ணமென்ட் நெருங்க நெருங்க ஆயிரம் ரூபாய் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்ற பேச்சு வார்த்தை ஒரு பக்கம், அதி தீவிரமான பயிற்சிகள் ஒரு பக்கம்.

  முந்தய இரவு, எதிரணி விவரம் சேகரித்து கொண்டு வந்து சேர்ந்தான் நண்பன், மிக முக்கிய சதி ஆலோசனைகளும், வெற்றி வாய்ப்புகளும் பற்றி தீவிர பேச்சு வார்த்தையில் இருந்தபோது, "கிரிக்கெட் திட்டம் போட்டு ஜெயிக்கிற விஷயம் இல்லடா" என்று வயிற்றில் புளியை கரைத்தார் பொறாமை பிடித்த சீனியர். "அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம், உன் வேலைய பாருண்ணா" என்று அவரை கடுப்பேத்தி கிளப்பினோம்.      
 
  காலை சைக்கிளில் (அப்போதெல்லாம் அதுதான்) ட்ரிபில்ஸ் அடித்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஒரு குளத்துக்கு, நாக்கு தள்ள வந்து சேர்ந்தோம், அதுதான் கிரிக்கெட் நடக்கும் இடம், மைக் எல்லாம் கட்டி, எங்கள் ஊர் அணி வந்து விட்டதை அறிவித்த போது, எங்களுக்கு பரவசத்தை விட பயம்தான் அதிகம் இருந்தது. மேட்ச் பார்க்க எங்களுக்கு முன்னரே எங்கள் சீனியர் அணி துண்டு போட்டு உக்கார்ந்து இருந்ததே முதல் காரணம்.

  ஆரம்பித்தது மேட்ச், டாஸ் ஜெயித்தோம், டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுப்பதே அப்போது எழுதப்படாத விதி. முதல் பேட்ஸ்மேனாக நானும்,  கில்கிறிஸ்ட் என்று அறியப்படும் காட்டான் கோவிந்தனும் களமிறங்கினேன், முதல் பாலிலேயே போல்ட் ஆகி வெறியேற்றினான் காட்டு கோவிந்தன். எங்கள் அத்தனை திட்டமும் தவிடு பொடியாக, எதிரே நின்று, எங்கள் அணியில்  ஒவ்வொருவராக அவுட் ஆவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன், நான் மட்டும் டொக்கு வைத்து சாமாளித்து ஏழு ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 33 ரன்கள் (இதில் அவர்கள் கொடுத்த எக்ஸ்ட்ராஸ் 19) குவித்தோம்???

  அணி தலைவனாகிய நான் கடைசி வரை போராடி ஒரு ரன்கூட  எடுக்காமல் திரும்பியதை பார்க்க எங்களது சீனியர்களுக்கு பேரானந்தமாக இருந்திருக்கும். "சொன்னமே! கேட்டீங்கலாடா?" என்று கவுன்டர் வேறு.

  பந்து வீச்சு ஆரம்பமானது, எங்கள் ஊரின் வேக புயல், ஊரின் ஒரே ஷோகிப் அக்தர், "ஏறி பந்தான்" என அழைக்க படும் அதிவேக பந்து வீச்சாளன் ஷங்கர் ஆட்டத்தின் முதல் ஓவரை ஆரம்பித்தான், (முன் குறிப்பு இவன் பந்து வீசினால் பாட்டை கீழே போட்டு விட்டு ஓடியவர்கள் கூட உண்டு)  
    முதல் ஓவரின் முடிவில் 13 வைடு, 1 நோபால் மட்டும் கொடுத்து ஒரு விக்கட்டை வேறு கைப்பற்றி சாதனை படைத்தான்
"ஏண்டா?" என்றதற்கு "கண்ட்ரோல் கிடைக்கல மாமன் பையா" என்றான்.

அவன் என் மாமன் மகனாக வேறு போய் விட்டதாளும், நானே சிபாரிசு என்பதாலும் வேறு ஏதும் சொல்லவும் முடியாது, அடுத்த ஓவரில் மாட்சை முடித்து கொண்டு குறுக்கு வழியாக யாருக்கும் தெரியாமல் ஊருக்கு போய் சேர்ந்து விடலாம் என ஸ்பின் என்று நினைத்து கொண்டு வீசும் ராஜேந்திரனை கூப்பிட்டு ஓவர் கொடுத்தேன்.

இருப்பதிலேயே மட்டமான பந்து வீச்சாளன் என்றால் அவன்தான், பிட்சை தவிர எல்லா திசையிலும் பந்து வீசும் திறமைசாலி. சில சமயத்தில் அவன் வீசும் பந்து பின்புறமாக போய் பவுண்டரி கோட்டை தொடும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இறுதி காட்சியை நெருங்கி விட்டீர்கள், உங்கள் இதயம் பலவீனமாகும் சம்பவமும் இனி நடக்க போகிறது

நான்கு விக்கட்டை கைப்பற்றி ரன் ஏதும் கொடுக்காமல் எங்கள் எல்லோருக்கும் ஹார்ட் அட்டாக் வர வைத்தான் ராஜேந்திரன். பிறகுதான் தெரிந்தது எங்க அணியை விட படு மொக்கையான அணியை எதிர்த்து விளையாடி கொண்டிருக்கிறோம் என, பின்னர் எங்கள் வீர தீர சாகசங்களை காட்டி எட்டு ரன்கள் மீதம் இருக்கையில் நாங்கள் வெற்றி வாகை சூடினோம்.

  அடுத்த மேட்சிற்கு ராஜேந்திரன் தன்னை கேப்டனாக அறிவிக்க வேண்டி கேட்டு கொண்டான்.

  

Friday, February 19, 2016

மாமன்கள் எனும் அடிமைகள்

ஒரு மாலை மயங்கும் நேரத்தில் டீசல் புல்லட்டில் வந்திறங்கிய மாமா என்னையும் என் நண்பனையும் எங்கள் சங்க வாசலில் (ஒரு பெரிய பலகை போன்ற கல்தான் ) அரஸ்ட் செய்தார், அன்றுதான் அவரின் வாழ்க்கையில் பெருத்த அவமானம்  நேர்ந்தது.

கல்லூரி முடித்து வேலை இல்லாமல் அல்லது வேலைக்கு போக பிடிக்காமல் எங்களது ஊரை நாங்கள் ராஜாண்ட ஒரு  காலத்தில், எனது PVK செல்வராஜ் மாமா எனக்கு உற்ற தோழனாகதான் இருந்தார், கட்டுசேவல் சண்டை முடிந்து  சண்டையிட்டு தோற்ற சேவலை எடுத்துக்கொண்டு வந்து விடுவார், அல்லது இவரின் சேவலே அதில் தோற்றாலும் அதற்கும் சேர்த்தி காசு கொடுத்து அதை சமையல் செய்ய எடுத்து வருவார்.  

தோட்டத்தில் சேவலை சுத்தம் செய்து அதை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, மசாலா எதுவும் சேர்க்காமல் சுமார் நான்கு மணிநேரம் எடுத்துக்கொண்டு செய்வார். அது போல ஒரு சுவை இந்த உலகில் எங்கும் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டு. 

பக்கத்தில் ஒரு கிணறு இருக்கும், அதில் 2 மணி நேரம் விளையாடிவிட்டு (கவனிக்க: குளித்து விட்டு அல்ல) சாப்பிட ஆரம்பிப்போம்.

நிற்க,

இவை எல்லாம் அவர் திமுக இளைஞர் அணி செயலாளர் ஆகும் வரையே நீடித்தது.

அதன் பின் அவர் எனக்கு பார்க்கும் இடத்தில் எல்லாம் புத்தி சொல்ல ஆரம்பித்தார், "வேலைக்கு போடா, வெங்காயத்துக்கு போடா" என. 
"சரிங் மாமா" என்பதை தவிர இந்த ரொம்ப நல்லவனால் என்ன பேச முடியும்.  

ரகசியமாய் பீர் குடிக்கும் பழக்கத்தை எங்கள் சங்க உறுப்பினர்கள் ஆரம்பித்த நேரம் அது. (பிகு: குடி குடியை கெடுக்கும்), குடித்து முடித்து ஒரு மிதப்பில் இருந்த போதுதான் அவர் எங்களை அரெஸ்ட் செய்வதாக நினைத்து என்னிடம் அரெஸ்ட் ஆனார்

"புத்தி சொல்லு மாமா, இல்ல சொல்லித்தான் பாரேன்" என ஆரம்பித்து ஒரு மணி நேரம் விடாமல் பழைய வஞ்சனையை வைத்து தீர்த்தேன்.  
"கெட்ட வார்த்தைல ஏண்டா ஒரு பெரிய மனுசன திட்டினே"ன்னு என் நண்பன் கூட சொன்னான்
"அப்படியா"ன்னு நான் காலைல கேட்டது தனி கதை.

இரவு முழுவதும் என் நாவினால் சுட்ட வடு தாங்காமல், தூங்காமல் தவித்த என் பிரிய மாமா, காலை 3 மணிக்கே எங்கள் வீட்டு கதவை தட்டி வீட்டில் அனைவரையும் எழுப்பி உக்கார வைத்து அழுது கொண்டிருந்தார்.

இரவு சம்பவங்கள் ஏதும் அறியாமல், தவம் கலைத்து காலை 9 மணிக்கு எழுந்த நான் "சாப்பிடுங்க மாமா" என அன்பொழுக அழைத்த போது ஏன் கோபமாக வெளியே போகிறார் எனவும், எனது  குடும்ப உறுப்பினர்கள் ஏன் துர்வாச அவதாரம் எடுக்க வேண்டும் எனவும் அப்போது எனக்கு தெரியவில்லை.            

சொந்த மாமாக்கள் எப்போதுமே நமக்குத்தான்  அடிமைகள், நாம் அவர்களுக்கு அல்ல என்பது எனது கருத்து.  

Tuesday, February 16, 2016

மீண்டும் ஒரு ஆரம்பம்

கண்ட கனவுகள் அனைத்தும் 
சரித்திரம் ஆனதாம் – இது
மெய்தானா என நானறியேன்
ஆனால் கேள்வி ஒன்று 
மிச்சம் உண்டு என்னிடத்தில்
யார் கண்ட கனவு இது - என் 
நாட்டின் கலாச்சார சீர்குலைவு!!!
கருவறை தொடங்கி இறைவனின் 
கர்பக்ரஹம் வரை வியாபாரம் ஆனது 
எவரின் கனவாய் இருக்கும் ???
விதையை பிடுங்கி வீசிவிட்டு 
விருட்சத்தை எதிர்பார்க்க 
யார்சொல்லி கொடுத்தது - என் 
தலைமுறை வர்க்கத்திற்கு...
நல்லதொரு வீணையை புழுதியில் 
எறிந்தது இந்த தலைமுறை தானா??? 
விடை தெரியாத கேள்விகளை 
மட்டும் சுமந்துகொண்டு பாரமில்லாத 
மண்ணின் சுமைதாங்கிகளாய் !!! 
தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கும் 
நேரத்தில் சம்பவமாய் வருவேன் 
என்ற இறைவன் வருவாரா – ஆயின்
வேண்டுகோளும் உண்டு என்னிடத்தில்
சூன்யங்கள் முடிந்து உதயம் 
தொடங்கும் வேளை வரும் போது 
அன்றும் வேண்டும் என் பாரதம்!!!
அக்னி குளியல் கேக்காத ராமன் 
செஞ்சோற்று கடன் கேட்காத துரியன் 
வம்சத்தை அழிக்காத திரௌபதி
வேண்டும் இவர்கள் அனைவரும்... 
முகலாயர்களை உள் அனுமதியாது 
சிந்துவும் ஜீலமும் அரணாய் என்றும்
வேண்டும் என் பாரதத்திற்கு...... 
இரு வேறு துருவங்கள் ஆகாது என் 
பாரதம் முழுதாய் வேண்டும் - அன்று
தீர்க்கதரிசனம் காணும் முண்டாசு கவி 
மீண்டும் பிறப்பான் - வாள் 
ஏந்திய கட்டபொம்மன் மீண்டும் 
உருவெடுப்பான் - தூக்கு கயிறை 
முத்தமிட்ட பகத்சிங் கண்விழிப்பான்
போராட அல்ல - இன்று அவர்கள் 
வாழாமல் விட்ட நிமிடங்களை 
வாழ்ந்து கழிக்க சுதந்திரத்தை 
அனுபவித்து வாழ்ந்து முடிக்க... 
இன்று நாங்கள் வெற்றிடம் என 
விட்டுவிட்ட இடத்தில் எல்லாம் 
வேர்கள் துளிர்க்க வேண்டும் 
“மீண்டும் ஒரு ஆரம்பத்தின் சாட்சிகளாய்”

-இந்து.  


"வானைத்தொட்ட வேள்வித்தீயில் உதித்தவள் அல்ல இருப்பினும் பொசுக்கப்படும் எல்லைகள் மீறப்படும் போது கேள்விக்கணைகளால்" என்று கூறும் இவரை நீங்கள் ட்விட்டரில் பின் தொடர, கீழே உள்ள பெயரை click செய்யுங்கள்  

இவள் வேள்வித்தீ

Thursday, February 11, 2016

எங்கள் சேர்க்கையின் பிண்டமெனப்படலாம்

எங்கள் சேர்க்கையின் பிண்டமெனப்படலாம்
நீ.....
எனக்கு அப்படியில்லை.
உன் முற்றுபெறாத வார்த்தைகளுக்குள் நீட்சிபெறுகிறது எனக்கான வாழ்க்கை.....
உன் ஸ்பரிசங்களின் பூரிப்பில் இலகுவாகிறேன்
காற்றுவெளியில் மிதக்கும் பறவையின்
இறகென.....
நீ மட்டுமே அறிந்திருக்கிறாய்
நான் எப்போது சிறுவனாவேனென்று.....
சொல்வதெனக்கொண்டால்
மறுபிறப்பொன்று வேண்டும்.
அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
ஆனால்,
என் மரணம் உன் மடியில் வேண்டும்
மகளே.

-சதா 

Wednesday, February 10, 2016

ரசித்த கவிதைகள்

"தேர்தல்" 

தேர்தலெனும்
ஆர்ப்பாட்டமான டெஸ்ட்டில்
அம்பயர்களாக நின்ற
அப்பாவி மக்களே-எப்போதும்
அவுட் ஆகிறார்கள்..!
-------------------------------------

பரத்தமை

நாங்கள் பொருட்பாலுக்காக
காமத்துப் பாலை விற்கிறோம்
அதற்காக
அறத்துப்பால் ஏன்
அழுதுவடிகிறது..
-------------------------------------- 
சுதந்திரம்

இரவில் வாங்கினோம்
விடியவே இல்லை..என
புதுக்கவிதை சொல்லி
புலம்பித் திரிகிறார்கள்
பாரதம் முழுவதும்
ஊழல்மன்னர்கள்
பரவிக்கிடக்கையில்
பகலில் வாங்கியிருந்தால் மட்டும்
விடிந்துவிடவா போகிறது..?”..
---------------------------------------------- 
சுதந்திரம்

பட்டுவேட்டியைப் பற்றிக்
கனாக் கண்டு
கொண்டிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது..!

களவாடப்பட்டது கோவணம்
கனவிலென்னவோ
பட்டு வேட்டி..
 ---------------------------------------

Tuesday, February 9, 2016

"மௌனம்" அல்லது "கடவுளின் குரல்"

என் தம்பி ஜெகதீஷ் எழுதிய "மௌனம்" அல்லது "கடவுளின் குரல்" 


"மின்விசிறியை அணைத்துவிட்டு, ஜன்னலையும் அதையொட்டி அடிக்கப்பட்ட கொசு வலையையும் கடந்து அறையை நிரப்பும் மெலிதான வெளிச்சத்தில் அமைதியாய் அமர்ந்து சுவர் கடிகாரத்தின் ச்சிக்..ச்சிக்.. என்ற சத்தத்தை கவனிக்க துவங்குகையில் ச்சிக்..ச்சிக்..கிற்கு துணையாக அருகாமையில் எங்கெங்கோ குருவிகளும், சேவல்களும் சேர்ந்துகொண்டன.

சூடான காஃபி டம்ளர் கொண்டு கைகளுக்கு ஒத்தடம் வைத்துக் கொண்டே இவற்றையெல்லாம் ரசிக்க. புன்னகைத்தேன்... இப்பொழுது ச்சிக்..ச்சிக்.. நன்றாக சத்தமாக கேட்கிறது யாரோ என்னோடு மட்டும் பேசி மகிழ எனக்கே எனக்காய் கண்டுபிடித்த மொழி போல.

கொஞ்சமாய் வியர்த்திருந்தது ஜன்னல் வழி வரும் காற்று சில்லென்றாக்கியது. ச்சிக்..ச்சிக்.. இன்னும் கேட்கிறது பின்னணியில் குருவிகளும், சேவலும்...

மெல்ல குடிக்க துவங்குகிறேன் காஃபியை. இன்றைய மாலைநேர காஃபிடைம் எவ்வளவு பேரழகாய் இருக்கிறது பாருங்கள்..!


இவனை ட்விட்டரில் பின் தொடர, கீழே உள்ள பெயரை click செய்யுங்கள்  

Jagadeesh

பள்ளிகள் ஏன் இனியும் விண்ணப்பம் தர பெற்றோரை தெருவில் நிறுத்த வேண்டும்?

நேற்று மதியத்தில் இருந்து. என்னோட ஆபீஸ் பக்கத்துல ரோட்டுல ஒரு பெரிய "சபத கியூ" நின்னிட்டிருக்கு. ராத்திரியெல்லாம் கொட்டும் பனியில், கிலோமீட்டர் அளவுக்கு தெருவுல படுத்திட்டிருக்காங்க. என்னடான்னு விசாரிச்சா, பக்கதுல இருக்குற DAV school-ல இன்னிக்கு அட்மிஷன் ஃபாம் குடுக்குறாங்களாமாம். !
தெரியாமல் தான் கேட்க்குறேன், 'ஈ கவர்ன்மென்ட், டிஜிட்டல் இந்தியான்னு, அரசாங்கமே அடுத்த தலைமுறை தொழில் நுட்பத்துக்கு மாறிட்டிருக்கு. இந்த பள்ளிகள் ஒவ்வொரு வருடமும் அப்பிளிகேன் குடுக்குறோம்ன்னு, இப்படி பெற்றோர்களை தெருவுல படுக்க வெச்சி, அசிங்கபடுத்துறதுக்கு, ஆன் லைன்ல கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தால் என்ன குடியா முழுகிடபோகுது?
இதெல்லாம் ரெம்பவே சில்லரைதனமான மார்க்கெட்டிங்!
இதோ பாருங்க, 'என்னோடா ஸ்கூல் வாசலில தேவுடு காக்குறாங்க'ன்னு அடுத்த நாள் பேப்பர்ல "பே நியூஸ்" வரச்செய்வதற்கான ஏற்பாடு. இந்த சின்ன விசயம் கூட உணர்ந்து கொள்ள முடியாத பள்ளிகளால், எப்படி கல்வியை சேவையாக, கொடுக்கமுடியும்?
இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், சிறு தேல்வியை கூட தங்கமுடியாது, தற்கொலை செய்து கொள்ளும் ஏட்டு சுரைக்காய்யாக தான் வெளியே வருவார்களே தவிர, பின்னாளில் கண்டிப்பாக தன்னம்பிக்கையுள்ள இளைய தலைமுறையாக உருவாகாது. இந்த பெற்றோரை நினைத்தால் தான் பாவமா இருக்கு.
தமிழ் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக கஸ்மரை தெருவுல படுக்கவச்சது இந்த கழிச்சடைகளாக தான் இருக்கும்.

முகநூல் பக்கத்திலிருந்து ராஜேஷ்குமார்

Wednesday, February 3, 2016

இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்

ஒரு சுகம் உண்டு

-நகுலன்