Monday, February 15, 2021

ஓஷோ சாஸ்வதம் வகுப்பு

 கடுமையான பணி சுமைகளாலும், எங்கள் பகுதியில் எட்டு நகர் மக்களை  ஒன்று சேர்த்து, அதற்காக பலவிதமாக இயங்கி, பலதரப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் போராட்டத்திலும், சுயநலமில்லாத செயல்களாக இருந்தாலும் அரசியல் உள்ளே நுழைந்ததால் அதை சமாளிக்க திணறியும்,   குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் கடமைகளிலும் உழன்று கொண்டிருந்த நான் எனது நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஓஷோ சாஸ்வதம் 2 நாள் வகுப்பை அணுகினேன். வகுப்புகளை பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை, இன்னமும் சொல்லப்போனால் நான் ஒரு பரபரப்பான மனிதன். ஒரு அமைதியான மனநிலையை நாடி சாஸ்வதம் வந்தேன். 


வெள்ளி மாலை சுமார் ஆறு மணியளவில் உள் நுழைந்தேன். ஓஷோ நிர்தோஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி அன்று தொடங்கப்பட்ட முதல் வகுப்பு அறிமுகம் செய்யும் வகையிலும், வெள்ளை கயிறு (White robe) என பொருள்படும்படி வகுப்பு நடைபெற்றது. தியானமென்றால் அமைதியாக அமர்ந்திருப்பது என நினைத்த எனக்கு அதுவே மாறுதலாக இருந்தது. முதல் நாள் உணவும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் அருமையாக இருந்தன. சுத்தமான வெள்ளை உடைகளை கொடுத்தார்கள், செய்த பயிற்சிகளும், அந்த உடையும், பரபரப்பாக இயங்கி வந்த எனக்கு உள்ளுக்குள்ளே குறைந்த பட்ச அமைதியை கொண்டுவந்தது நிஜம். வேறொரு மனிதனாக என்னை மெல்ல உணர்ந்தேன். 

எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் தாராபுரத்தில் இருந்து யுவராஜ், மதன் என இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். முதல் பழக்கத்திலேயே அவர்களை மிகவும் நெருக்கமான நண்பர்களாக உணர்ந்தேன். 

சனியன்று காலை டைனமிக் எனப்படும் வகுப்பு நடைபெற்றது, மிக சாதாரண மனிதர்களாக தெரிந்த வகுப்பை நடத்தும் ஆசிரியர்களின், அங்கே தங்கியிருக்கும் பெண்களின் மொத்த வலிமையை, அர்ப்பணிப்பை அங்கே நான் உணர்ந்தேன். வாழ்நாள் வரை கூட வரும் அதிஅற்புதமான பயிற்சி என்றால் இதுதான். மொத்தமான ஒரு மனிதனின் செயல்பாடுகளையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது இந்த பயிற்சி.  



இது தவிர நட்ராஜ் ஜிப்ரிஸ், குண்டலினி வகுப்புகள் சீரான இடைவெளியில் அன்று முழுவதும் நடைபெற்றன. சிந்தனையில் உழன்று கொண்டே இருக்கும் நான் மதியம் கிடைத்த இடைவெளியில் தூங்கி விட்டேன், அங்கே எனக்கு திரு புவியரசு அவர்கள் மொழி பெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதர்கள் புத்தகம் எனும் புதையல் கிடைத்தது. ஓஷோ பரிந்துரைத்த இது முன்னுரையிலேயே அது எவ்வளவு வலிமையான புத்தகம் என புரிந்தது, எப்படியாவது இரவு நான்கு மணிநேரமாவது படித்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் தூங்கியிருக்கிறேன். என்னை அறியாமல் நடந்த நிகழ்வு இது.  தூங்குவதற்கு கடும் பிரயத்தனம் படும், “நானா இது?” என்பதில் எனக்கு பேராச்சர்யம். 

மைத்ரேயா ஒரு கடுமையான மாஸ்டராகவும், நல்ல நண்பராகவும் இருந்தார், எளிய விளக்கங்கள், நகைச்சுவை உணர்வு, தேவை அறிந்து உதவும் பண்பு என என்னை மிகவும் ஈர்த்தார். குறிப்பாக அவரது இளையராஜா பாடல்களில் முழு ஜீவன் இருந்தது. அவரது துணைவியாரும் அதற்கு சளைத்தவரில்லை என்பதுபோல பயிற்சிகளிலும், பாடல்களிலும் தனித்துவமாக தெரிந்தார். இரண்டு நாட்கள் குடும்பமாகவே பழகிய பிரபு, விஜயன் மற்றும் பெயர் தெரியாத அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

தோன்றும் உணர்வுகளை எல்லாம் எழுத்தால் கொண்டு வர இயலாது அல்லவா?  

நான் பாடிய பாடலுடன் அதை வெளிப்படுத்த முயல்கிறேன்.

ஓஷோ சாஸ்வதம் வகுப்பு எனக்கு

“ஏய்...

என் தலைக்கேருற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ?

என் நெலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நெஜம் காட்டுற

பட்டா கத்தி தூக்கி

இப்போ மிட்டாய் நறுக்குற

விட்டா நெஞ்ச வாரி

உன் பட்டா கிறுக்குற


என் தலைக்கேருற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ?”

சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் தனிமையின் பேரானந்தத்தை உணர்த்திய  சாஸ்வதம் இல்லத்திற்கு நன்றி என்ற வார்த்தை மிகவும் குறைவு.  



Wednesday, February 10, 2021

கர்நாடக சுற்றுலா பகுதி 2

 அடுத்ததாக நாங்கள் சென்றது ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான சாமுண்டீஸ்வரி கோவில், நஞ்சுண்டேஸ்வரா கோவிலில் இருந்து கிட்டதட்ட 30 கிலோமீட்டர், மைசூர் விமான நிலையத்தை செல்லும் வழியில் காணலாம். நாங்கள் செல்லும்போது விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததால் சுற்று வழியில் அனுப்பிவிட்டார்கள், கூகுள் மேப் உதவியுடன் சென்றும்  காடு மேடுகள் கடந்து முக்கால் மணி நேரத்தில் போய் சேரவேண்டிய கோவிலுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமானது. 

 இங்கே கொண்டாடப்படும் உலக புகழ் பெற்ற தசரா பாண்டிகை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம், வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்து கலந்துகொள்வார்கள், நீங்கள் வாகனத்தில் மலை மீதி ஏறி செல்லவேண்டும், பார்க்கிங் வசதிகள் நவீன முறையில், திரையரங்கள் கொண்ட மால்களில் இருப்பது போலவே அமைத்திருக்கிறார்கள், கட்டணம் மணிக்கு இவ்வளவு என கொள்ளையடிக்காமல் இருப்பது ஆறுதல், சுத்தமான கழிப்பறை வசதிகளும் இங்கிருக்கின்றன. 

கீழ்காணும் புகைப்படத்தில் பாருங்கள் கோபுர உயரமும் அதன் அழகும்


 



முழுவதும் கற்கள் கொண்டு அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார்கள், உயரங்களில் உள்ள சிற்பங்களை பார்க்க பார்க்க வியப்பும் ஆச்சர்யமும் மிஞ்சுகிறது. வேலைப்பாடுகள் கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றன. கோவில் உள்ளேயும் வெளியேயும் வெள்ளி கவசமிட்ட சிற்பங்கள் பேரழகு தருகின்றன. மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் என்ற மஹாராஜா மற்றும் அவரது மனைவியர் சிலைகள் கூட கோவிலுக்குள் இருக்கின்றன.இதன் கோபுரத்தில் எட்டு தங்க கலசங்கள் உள்ளதாம். 
உள்ளே நமது ஊர் கோவில்கள் போல கையில் தராமல் கட்டியில் வெள்ளைவெளேரென திருநீறு வைத்திருக்கிறார்கள், வழிபடும்  அனைவரும் தானே எடுத்து கொள்ளவேண்டியதுதான். இந்த கோவில் மைசூரில் இருந்து எந்த பக்கம் பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பு.  விஜயதசமியன்று கேரளா போல யானைகள் வரிசையாக வர, சுமார் 750 கிலோ எடை கொண்ட தங்க கோபுரத்தில்  தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி கோலாகலமாக வருவாராம். அந்த தினத்தன்று அடிவாரத்திலிருந்து கூட்டம் நிரம்பி வழியுமாம்.  இங்கேயும் நாம் சர்வசாதாரணமாக தமிழ் பேசலாம், புரிந்து கொண்டு பதிலளிக்கிறார்கள். கோவிலுக்கு உள்ளேயே டோக்கன் போட்டு நூறு ரூபாய்க்கு ஆறு லட்டு என மீடியம் சைஸில் தருகிறார்கள். அங்கே கொடுக்கப்படும் லட்டு சுவையாக இருக்கிறது, அதுதான் அங்கே ஸ்பெஷல்  

வெளியே வந்தால் ஏதாவது பொருளை கையில் வைத்துக்கொண்டு வாங்க சொல்லி நச்சரிக்கிறார்கள். விலையெல்லாம் பேரம் பேசி வாங்கலாம்,  வேகவைத்த சோளக்கருது சாப்பிடுவதற்கு கற்களை எடுத்து சாப்பிடலாம் அவ்வளவு மோசம், உப்பு மிளகாயில் ஊறவைத்த நெல்லிக்காய் சிறப்பாக இருக்கிறது. நமது பங்காளிகளான குரங்குகள் தொந்தரவும் உண்டு, எனது மைத்துனியின் கையிலிந்த ஸ்வீட் கார்னை மொத்தமாக வழிப்பறி செய்து ஆட்டையை போட்டது ஒரு குரங்கு. 

அதன் பின் பதினைந்தடி உயரமுள்ள நந்தி ஹில்ஸ் சென்றோம். 


இது இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்த ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலை, உள்ளே குகைக்குள் உருவாக்கப்பட்ட  குறுகிய  வடிவில் சிரமப்பட்டு உள்ளே சென்றால் சுமார் நூறு பேர் நிற்கக்கூடிய கட்டுமானத்தில் வழிபட சிவன் கோவில் உண்டு. கோவிலை விட்டு வெளியே வந்தால் பாதி மைசூர் நகரம் தெரிகிறது, அதில் மிக சிறப்பான பார்வை காட்சிக்கு ரேஸ் கோர்ஸ் எனப்படும் விளையாட்டு மைதானம் கண்ணை கவர்கிறது. 

இந்த பகுதியோடு கோவில்களுக்கு முற்றும் கொடுத்துவிடுகிறேன், அடுத்தடுத்த பகுதிகளில் அரண்மனை, பிருந்தாவன் கார்டன் போன்ற பொழுது போக்கு சுவாரஸ்யங்களுக்கும், சினிமா பாணியில் இருக்கும் குவாரி அனுபவங்களுக்கும், தாளவாடி  வனப்பகுதி நிகழ்ச்சிகளுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். தயாராகுங்கள்


 


Tuesday, February 9, 2021

கர்நாடக சுற்றுலா - பகுதி 1

 சனியன்று கோவையிலிருந்து நான் எனது மனைவி மகன் என மூன்று பேரும் அதிகாலை 3 மணிக்கு கிளம்புவதாக தான் திட்டம், இருவருக்கும் வேலை நீண்டுவிட்டதால் கிளம்ப 5 மணியாயிற்று. கர்நாடக  நஞ்சன்கூடு பகுதியில் உள்ள நஞ்சுண்டீஸ்வரர் கோவிலை தரிசிப்பது முதல் திட்டம். எனது தம்பி ஒருவன் புதிதாக திருமணம் முடித்து நஞ்சன்கூடு பகுதிக்கு அருகிலேயே பந்திப்பூர் சாலையில் எரிக்கட்டி என்ற ஊரில் வீடு வாங்கி கட்டி, அங்கேயே விவசாயம் செய்கிறான், தவிர டிப்பர் லாரிகளும் வைத்திருக்கிறான், அவனையும் கோவிலுக்கு வரச்சொல்லி மைசூர் சுற்றிபார்ப்பதே எங்கள் திட்டம். பவானிசாகர் பண்ணாரி வழியாக திம்பத்தை அடையும்போது மணி ஏழாகி விட்டது, எனது ஓனர் வேறு மலை பயணம் என்றாலே வாந்தி எடுக்கும் ஜீவன் வேறு, திம்பத்தில் எலுமிச்சையெல்லாம் வாங்கி கொடுத்து அமைதி படுத்தவேண்டியதாயிற்று.

 திம்பத்தில் செக் போஸ்ட் ஒட்டியே ஒரு பலகார கடை இருக்கும், அங்கே முறுக்கு, தட்டுவடை போன்ற சிறுதீனிகள் மிக சுவையாக இருக்கும், வாங்கிக்கொள்ளலாம், குளிர் ஊடுருவும் அங்கே டீ சாப்பிடுவது தனி சுகம். கூகுள் எனும் கடவுள் உதவியுடன் நீங்கள் உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் யாரை கேட்காமலும் பயணம் செய்யலாமல்லவா? குறிப்பாக கேரளாவில் வழி கேட்டீர்கள் எனில் சுற்றுலாவே வேண்டாம், நீங்கள் வந்த வழியே திரும்பி போய் விடலாம், அதனால்தான் கூகிள் மேப் அட்டகாசமான வழிகாட்டி என்கிறேன்.

திம்பம் தாண்டியதும் நாங்கள் கொண்டாட்டத்திற்காக அடிக்கடி செல்லும் ஹாசனூர் வருகிறது, ஆண்களின் கொண்டாட்ட ஸ்தலமான, இதை பற்றி நான் முன்பே விலாவரியாக எழுதிவிட்டதால் ஹாசனுர் , அதை தாண்டியதும் தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியான சுற்றிலும் காடுள்ள பகுதியில் கூட்டமாக மேயும் மான்களை எப்போதும் காணலாம், காட்டு பன்றிகள் வேறு அங்கங்கே சிங்கிளாக சுற்றி திரியும். மான்கள் கூட்டத்தை ரசித்துவிட்டு சிறிது தூரம் கடக்கையில், முன்பெல்லாம் திருமணமான பேச்சுலர்ஸ் நாங்கள் ஹாசனூர் செல்லும் போது மணிக்கணக்கில் காத்திருக்கையில் பார்க்க முடியாத  புலி சலீரென்று காரின் முன்புறம் தாவி ஓடிற்று. எங்கள் குடும்பத்துக்கே இன்ப அதிர்ச்சி, எனது மகன் சப்தமாகவே "புலிப்பாபாபாபாபாபா" என்றான். வாழ்வில் முதல்முதலாக டிவியில் பார்த்து வந்த மிருகத்தை நேரடியாகவே பார்த்த அனுபவம் அவனுடையது. இனி எவ்வளவு முறை அந்த இடத்தை கடந்தாலும் அவனுக்கு எப்போதும் அது நினைவில் தங்கும்.

தமிழக சாலைகள் எவ்வளவு அற்புதமானவை என நீங்கள் கர்நாடக எல்லையை தொட்டாலே தெரியும். நான் கடந்த இருபது ஆண்டுகளாக அந்த சாலையில் சென்றிருக்கிறேன், அவ்வளவு கேவலமான சாலை அது. எட்டு கிலோமீட்டரை கடப்பதற்கு குறைந்தது முக்கால் மணி நேரமாகும். மூன்றடி குழிகளெல்லாம் சாலையில் சர்வ சாதாரணமாக பல்லிளிக்கிறது, பத்து கிலோமீட்டருக்கு மேல் வண்டியை ஓட்டவே முடியாது. கிளட்ச் அழுத்தியே கால்களில் பாரம் சுமப்பதுபோல வலி வந்துவிடும். பயணத்தில் மிக மோசமான அனுபவம் இதுதான்.

கர்நாடக எல்லைக்குள் தமிழ்நாட்டு பகுதியான தாளவாடி இருப்பதும் இங்கேதான். தலைமலை என்றொரு பகுதி இங்குள்ளது, அதன் அபாயங்கள் அற்புதங்கள் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.

நஞ்சன்கூடு வரை உள்ள கர்நாடக பகுதிக்குள் நீங்கள் கடைகள், உணவகங்கள், பொருட்கள் வாங்குமிடங்கள் என எங்கேயும் தமிழ் பேசலாம், அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், தவிர ஏராளமான தமிழ் மக்கள் அங்கே தோட்டம் பிடித்தோ, வாங்கியோ விவசாயம் செய்கிறார்கள். எளிதில் தாங்கள் வசிக்கும் பகுதியில் புகழ் பெற்று விடுகிறார்கள். (தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு) எனது அக்கா குடும்பம் நஞ்சன்கூடில் தான் வசிக்கிறது. நமது அரசியலில் காழ்ப்புணர்ச்சியில் கன்னடர்கள் விரோதியாக தெரியலாம், ஆனால் பழகினால் உயிரையே கொடுக்குமளவு நல்ல மனிதர்கள், அவ்வப்போது மட்டும் அக்கா வீட்டிற்கு சென்று வரும் எனது அப்பாவிற்கு கன்னடம் மட்டுமே பேச தெரிந்த  நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு, இத்தனைக்கும் என் அப்பாவிற்கு சுத்தமாக கன்னடமும், அவர் நண்பர்களுக்கு தமிழும் தெரியாது.

கோவையில் இருந்து நான்கரை மணி நேரத்தில் (around 200 km)  நஞ்சன்கூடு, நஞ்சுண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். மிக பழமையான கோவிலான இதை, திப்பு சுல்தான் இங்குள்ள மரகத லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் என்கிறது வரலாறு. அழகான கட்டிட கலை, மிக பழைமையான வலுவான கல் தூண்கள், உயரமான கோபுரம் என கண்கொள்ளாதபடி நிறைகிறது இந்த கட்டிட கலையின் அற்புதம். கோவில் வெளியே பெரிய சிவன் சிலை ஒன்றை கவரும்படி வண்ணமயமாக அமைத்திருக்கிறார்கள்.

(கோவில் உட்புறத்தில் இருந்து, நான், என் செல்ல புதல்வன் என் தம்பி

புதிதாக திருமணமான என் தம்பியும் அவனது ஓனரும் அங்கே எங்களுக்காக காத்திருந்தார்கள், பயணம் அதன் பின் களை கட்டியது, என் மனைவிக்கும் மகனுக்கும் தோழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, எனக்கோ புது டிரைவர் அமைத்து விட்ட ஆனந்தம். ராம் பிரசாத் எனும் உணவகத்திற்கு எனது தம்பி கூட்டி சென்றான், இதற்கு முன்பு ஒரு உணவகத்தில் சாப்பிட்ட மோசமான அனுபவத்தோடு அதை சகித்து கொள்ளலாம் என சென்றால் உணவு வகைகள் தரமான சுவையாக இருந்தது. நமது அன்புபவன் ஆனந்த பவன் போல பார்வைக்கு உயர்தரம் கொடுக்கும், விலையும் குறைவாகவே இருந்தது. அந்த உணவகத்தை தேடி சென்று தாராளமாக சாப்பிடலாம்



வெளியே வருகையில் பக்கத்தில் மிக சுத்தமாக, அழகாக இருந்த ஒரு கடையை  ஏதோ உயர் ரக பேக்கரி என நினைத்து பார்த்தால் மது விற்பனை கடை. தனியார் வசமிருக்கிறது, கூட்டமும் ஒன்றும் அதிகமில்லை, குடிகார வாடிக்கையாளர்களால் எந்த பஞ்சாயத்தும் இல்லாத இடமாம். பொறாமைகள். காசு கொடுத்து குடிக்கும் குடிகாரர்களை வாடிக்கையாளர்களாக மதிக்கும் இடமாக இருக்கிறது. தவிர பேராச்சர்யங்களில் ஒன்று ஒவ்வொரு பிராண்டிற்கும் அதன் விலை, மற்றும் விளம்பரம் தரமாக இருக்கிறது. அதாவது விற்பனை போட்டி விளம்பரங்கள் கடையில் வைத்திருக்கிறார்கள். 


நாற்றம் சூழ சகிக்க முடியாத இடங்களில், கூச்சலும் சண்டையாக, அதிகமாக விலை வைத்தும், போலி மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் நமது தமிழ்நாட்டை நினைத்தால் அவமானமாகத்தான் இருக்கிறது.


உணவு உண்டு முடித்ததும் புராதனமான பாலமாக அறிவித்துள்ள நஞ்சன்கூடு பாலத்தை பார்த்தோம். 1735ல் கட்டப்பட்ட இது ரயில் மற்றும் இதர வாகனங்கள் அருகருகே செல்லும்படி இருக்கிறது 



எழுதியது கொஞ்சம், இன்னும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன
தொடரும்….