Saturday, March 25, 2017

Baraka என்னும் அற்புத ஆவணப்படம்.

மொழி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, இயற்கையின் சப்தங்கள், அவற்றின் மொத்த அழகு, சிறந்த பிரார்த்தனைகள், பல்வேறு வகையான வாழ்க்கை முறை அதற்கு கோர்த்திருக்கும் வலுவான இசை, பதினான்கு மாத கடுமையான உழைப்பு எல்லாம் சேர்ந்து கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது Baraka என்னும் அற்புதம்.

   Ron Fricke என்பவர் இயக்கியுள்ள இப்படம் 1992ல் வெளி வந்தது, இன்னும் ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் வியப்பில் ஆழ்த்தும். இருபத்தி நான்கு நாடுகளில் இருந்து காட்சிகள் பரவுகின்றன,  இயற்கையின் அழகை, கொண்டாட்டங்களை, மனித இயந்திர வாழ்வை, சோகங்களை எந்த குறிப்பையும் சொல்லாமல் முன் வைத்து விட்டு நகர்கிறது.
    பெரும் காட்டுதீ, புத்தர் பெரிய முகம், உடைந்த சிலைகள், மண்ணோடு மண்ணான அரச மாளிகை, வழிபட்டு மனிதர்களின் கொண்டாட்டங்கள், அடர் வனங்கள், மலை சிகரங்கள், கடல் அலைகள், பாலைவன இரவுகள், கென்ய மக்களின் அலங்காரங்கள், ஜெருசேல நெரிசல்கள், கண்ணாடி மாளிகையின் பேரழகு என இதன் பார்வை உலகம் சுற்றி வருகிறது.

 விழியிழந்த தேர்ந்த புகைவண்டி புல்லாங்குழல்காரர் தரும் மயக்கும் இசை போல  படம் நெடுகிலும் உணர்வுகளுக்கு ஏற்ப கொள்ளை கொள்கிறது இசை. வாகன விரைவு, புகைவண்டி வழியனுப்பல்கள், நிலவு மாறும் கணம், இரவு நிலவு சூரியன் வருகை என ஒரு சில பகுதிகளில் ஒரே இடத்தில நாட்கணக்கில் அமர்த்து ஒரு சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

கழுதையின் வண்டியில் தொடங்கும் ஒரு காட்சியில் அடித்தட்டு மக்கள் கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து, நாய்களுடனும் பன்றிகளுடனும் சரிசமமாக உணவு தேடி கொள்வது நிச்சயம் மனதை உலுக்கும்.

ஒரே வேலையை சலிப்பில்லாது செய்யும், ஜப்பானிய பங்களாதேஷ் ஊழியர்களின் வாழ்க்கையை சொல்கிறது நிறுவனங்களில் படம் பிடிக்கப்பட்ட காட்சி. நமது கங்கையில் பாதி எரிந்து கீழே விழப்போகும் உயிரற்ற சடலத்தில் கால் உங்களை திகைக்க வைக்கும்.

 வரலாற்று கவிதையின் கால் தடம் இது, இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்தும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதம்.

 பார்க்கும் எவரும் புரிந்து கொள்ளும் மிக சிறந்த உலக படத்திருக்கு உதாரணம் இது

நீண்ட நேர மயக்கும் பார்வைகளின் பிம்பம் இன்னும் விலகாது தொடர்கிறது.
படத்தின் தலைப்பின் அர்த்தம் "வாழ்வின் மூச்சு",  குப்பை தமிழ் படங்களை சிலாகித்து கொண்டிருக்காமல் இந்த மூச்சை சுவாசியுங்கள்...
மீண்டும் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க விரும்புவீர்கள்.

Thursday, March 9, 2017

கொங்கு பிரியாணி செய்முறை (அரிசிம் பருப்பு)

கொங்கு பிரியாணி என்பது வேறொன்றும் இல்லை அரிசி பருப்பு சாதமே.

கொங்கு மண்ணின் பாரம்பரிய சமையலான இது தனிச்சுவை கொண்டது, அசைவ உணவு ஒரு புறமும், அரிசிம் பருப்பு சாதம் மறுபுறமும் வைக்கப்பட்டால், நான் விரும்பி சாப்பிட நினைப்பது இதுவே.
ஓய்வு நேரங்களில் சமைப்பது எனக்கு பொழுதுபோக்கு,  என் இந்த சமையலுக்கு நிறைய அடிமைகள் உண்டு.

செய்முறை

தேவையான பொருட்கள்        
அரிசி ஒரு டம்ளர்
துவரம் பருப்பு, அவரை பருப்பு இரண்டும் சேர்த்து அரை டம்ளர்
கடுகு கொஞ்சம்
வெங்காயம் சிறியது ஒரு கப்
பூண்டு ஆறு பல்
தக்காளி மூன்று
பச்சை மிளகாய் ஒன்று
கறிவேப்பில்லை
கொத்துமல்லி தலை
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு, எண்ணெய், நெய், கடுகு.
தண்ணீர் 3 டம்ளர்.
----------------------------------------------
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் 2, பட்டை ஒரு துண்டு, கிராம்பு 3 இவற்றை பொடித்து வைத்து கொள்ளுங்கள்          
-------------------------------------------------
செய்முறை

அரிசி பருப்புகளை அரை மணி நேரம் ஊற விடுங்கள்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, நான்கு டீஸ்பூன் நெய்யை அதில் கலந்திடுங்கள்.
 கடுகு தாளித்து, வெங்காயம் பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள், பின் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மஞ்சள் தூள், (காரம் அதிகம் வேண்டும் என்பவர்கள் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்) பொடித்து வைத்துள்ள மிளகு சீரக கலவையை கலந்து ஒரு நிமிடம் வதக்கிய பின், தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
பின் உப்பு, கொத்துமல்லிதலை சேர்த்து அரிசி பருப்பை போட்டு நன்கு கிளறி,      மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடுங்கள்.
சுவையான கொங்கு பிரியாணி ரெடி.
------------------------------------------------------------------------

அதற்கு  தொட்டுகொள்ள நிலகடலை சட்னி அருமையாக இருக்கும்.

சின்ன வெங்காயம் பத்து,
வர மிளகாய் 2,
பூண்டு 2 பல்,
கறிவேப்பில்லை நான்கைந்து இலை,
சீரகம் கொஞ்சம்,
மல்லித்தூள் ஒரு ஸ்பூன்,
நிலகடலை தேவையான அளவு (வறுத்தது)
உப்பு.
புளி பெரிய நெல்லி அளவு        

 புளி தவிர  மேற்கூறிய அனைத்தையும் வரிசைபடி எண்ணெய் ஊற்றி வறுத்து, புளி கலந்து மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்தால் வாசனைமிக்க நிலகடலை சட்னி ரெடி.    

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.