Monday, June 20, 2016

உண்மை கதை

"நாம பிரேக் அப் பண்ணிக்கலாம் சந்தோஷ், எனக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கும்னு தோணல" என்றாள் நந்தினி.
சந்தோஷிற்க்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே வெளிநாட்டு இந்திய  நிறுவனத்தில் இருவரும் பணி புரிகிறார்கள், அரைலட்சத்தை தொடுமளவு சந்தோஷிற்க்கு சம்பளம், நந்தினிதான் முதலில் அவனை விரும்புவதாக தன் காதலை தெரிவித்தாள், சந்தோஷ் மகிழ்ச்சியாகவே இருந்தான், ஏறக்குறைய தன் மனைவியாகவே அவளை நடத்தினான், கடந்த வாரம் கூட அவளின் பிறந்த நாளென்று இன்ப அதிர்ச்சியாக ஒரு லட்சம் ரூபாய்க்கு i phone கூட வாங்கி கொடுத்திருந்தான். இவன் வீட்டிலும் எந்த தடையும் இல்லை, நந்தினி தரப்பில் சரியென்று சொன்னால் அடுத்த முகூர்த்ததில் திருமணம் கூட முடிந்து விடும்.

  இந்த சமயத்தில் அவள் இவ்வாறு கூறியது கடும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. பலவிதமாய் யோசித்தும் தன் தரப்பில் எந்த தவறும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவன் யாரையும் அதிகமாக தொந்தரவு செய்து பழக்கம் இல்லாதவன், காத்திருக்கலாம் என முடிவு செய்து அவளை விட்டு சற்றே விலகி இருந்தான். திடீரென்று 15 நாள் விடுப்பில் நந்தினி இவனிடம் சொல்லாமல் சென்று விட்டாள்.

ஒரு வாரம் சென்ற நிலையில் நந்தினியின் அப்பா, அலுவலகத்திற்கு  சந்தோஷை பார்க்க வந்திருந்தார். "என் பொண்ணு தெரியாமல் தப்பு பண்ணிட்டா, உங்களை காதலிக்கிறேன்னு நிக்கிறா, அவளுக்கு எங்க சொந்ததுலையே மாப்பிள்ளை இருக்கு, தயவு செஞ்சு அவ தெரியாம தப்பை மன்னிச்சு நீங்க அவளை மறந்திறனும்" என்று கெஞ்ச ஆரம்பித்தார்.


ஒரு வாரம் அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது, என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இதை வீட்டில் சொன்னவுடன் அவர்கள் உறவினர் ஒருவரின் பெண்ணை இவனுக்கு திருமணம் உடனடியாக முடிக்க பேச சொல்வதாக கூற, சந்தொஷிற்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

 சமகால நந்தினியின் பிளாஷ்பேக்
    நந்தினியின் காதல் வீட்டிக்கு முதலில் தெரியாததால் அவளுக்கு வரன் பார்த்து கொண்டிருந்தார்கள் அவள் வீட்டில், ஒரு ஆஸ்திரேலிய மாப்பிள்ளை ஜாதகம் பொருந்தி வந்தது, மாப்பிள்ளை அழகாக வேறு இருந்தார். அவர்கள் குடும்பம், சந்தொஷ் குடும்பத்தை விட வசதியாக இருந்தது, வெளிநாட்டு வாழ்க்கை நந்தினிக்கு கனவு, இவையெல்லாம் நந்தினி கணக்கு போட்டு பார்த்தபின் சந்தோஷை விட்டு மெதுவாக விலக தீர்மானித்தாள்.

 அவள் அப்பாவிடம் தான் செய்த காதலை சொல்லி, அதற்க்கு பின் திட்டமிட்டு நடந்தவைதான் மேற்சொன்ன நாடகங்கள். ஆஸ்திரேலிய மாப்பிள்ளை நவீன் பெண் பார்க்க வந்தான், இவளை மிகவும் பிடித்துவிட அடுத்த முகூர்த்ததில் திருமணம் நிச்சயம் ஆனது. நந்தினி வெளிநாட்டு கனவில் மிதக்க ஆரம்பித்தாள்.


பெற்றோர்களின் வற்புறுத்தல் தாங்க இயலாமல், திருமணத்திற்கு சம்மதித்தான் சந்தோஷ். உறவினர் பெண் ரேஸ்மிதான் மனைவி.

நந்தினிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அதே நாளில் சந்தோஷிற்கும் திருமணம்.

ட்விஸ்ட்.
 திருமணத்திற்கு சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் நவீன் தனது வெளிநாட்டு வேலையை விட்டு விட்டு நந்தினி இருக்கும் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தான். வெளிநாட்டு வாழ்க்கை வீண் எனவும், சம்பளம் குறைவாக இருந்தாலும் இதுதான் நிம்மதி எனவும் பெரிய தத்துவத்தை பதிலாக தந்ததும் நந்தினி ஏனோ மயங்கி விழுந்தாள்.

ரேஸ்மியின் சகோதரன் ஆஸ்திரேலியாவில் இருந்து நவீன் என்பவர் தனது அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்து போவதாகவும், சந்தோஷ் விரும்பினால் அதே வேலையை சற்று கூடுதல் சம்பளத்துடன் வாங்கி தருவதாகவும் சொன்னதால், நந்தினியின் நினைவில் இருந்து முழுதும் விடுபடவும், ரேஸ்மியுடனான புது வாழ்க்கையை தொடங்கவும் சம்மதித்தான் சந்தோஷ்.

நவீன் இப்போது நிரப்ப போவது சந்தோஷ் இருந்த இடத்தை, அலுவலகத்தில் கூட....

கடவுள் இருக்கான்ல?

அலுவலகத்தில் நடந்த உண்மை கதைதான், பெயரும் சிறு சம்பவங்கள் மட்டுமே சுவாரஸ்யத்திற்க்காக சேர்க்கப்பட்டிருக்கின்றன.





  

Thursday, June 9, 2016

நகைச்சுவை

சமீபத்தில் whatsAppல் நான் ரசித்த நகைச்சுவை ஒன்று

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு ஒரு கிண்ணத்துல வச்சு என்னமோ மூஞ்சில தேச்சுட்டு இருந்துச்சு,

"என்ன?"ன்னு கேட்டதுக்கு
"தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா, தயிர் கலந்து மிக்சில அரைச்சு ஃபேசியல்" பண்ணுதாம்.

"சரி கொடு, நான் கொஞ்சம் தேச்சுக்குறேன்"னு பொய் சொல்லி, வாங்கிட்டு வந்து....

தோசைக்கு தொட்டு தின்னுட்டேன்..

#பசங்களுக்கு_சோறுதான்_முக்கியம். 

Wednesday, June 8, 2016

பெரிய வணிக வளாகத்தில் (shopping mall) நடந்த பதைபதைக்கும் குழந்தை கடத்தல்

ஆங்கிலத்தில் எனக்கு வந்த செய்தியை தமிழில் பதிவு செய்திருக்கிறேன்
நண்பர்களே,
 கொச்சினில் மிக பெரிய வணிக வளாகத்தில் (shopping mall), கடந்த வாரம், எனது தோழிக்கு நடந்த கொடூரத்தை செய்திகள் மூடி மறைத்து விட்டன, அந்த வணிக வளாகத்தின் பெயர் கெட்டுவிடும் என்ற காரணத்தால்.

எனது தோழியும், அவரது கணவரும் ஆறு வயது பெண் குழந்தையுடன் வணிக வளாகத்தில் உள்ள விளையாட்டு இடத்தை நோக்கி  (fun zone) நடந்து கொண்டிருந்தனர், மகள் தாயின் கரம் பற்றியே நடந்து கொண்டிருந்தாள், ஒரே ஒரு நொடி கை பிரிவதை உணர்ந்த தாய், திரும்பி பார்ப்பதற்குள் மகளை காணாததை அறிந்தார், பதைத்து போனவர் உடனே சுதாகரித்து, தாமதிக்காமல் அந்த வணிக வளாகத்தின் அலுவலகத்திற்கு விரைந்து சென்று புகார் கொடுத்திருக்கிறார். அவர்கள் உடனடியாக வளாகத்தின் காவலர்களையும் உஷார் செய்து, எல்லா கதவுகளையும் அடைத்து சோதனை செய்திருக்கிறார்கள். வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது. இதெல்லாம் பத்து நிமிடத்தில் நடந்தது, அந்த பத்தாவது நிமிடத்தில் அந்த குழந்தை, வளாகத்தின் கடைசி தளத்தில், போதை மருந்து கொடுக்கப்பட்டு, மயங்கிய நிலையில், தலை மொட்டை அடிக்கப்பட்டு, துணி மாற்றப்பட்டு கீழே கிடந்திருக்கிறது. பெற்றோர் உடனடி புகாரின் காரணமாகவும், வணிக வளாகத்தின் பாதுகாப்பு வேகம் காரணமாகவும் கண்டு பிடிக்க பட்டு அந்த குழந்தை மீட்க பட்டது.

அந்த பத்து நிமிடத்தில் இவையெல்லாம் நடந்திருக்கிறது, அப்படி என்றால் குழந்தை வெளியே சென்றிருந்தால்? அடுத்த அரை மணி நேரத்தில் அக் குழந்தை எங்கே இருக்கும், எப்படி பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்  என நினைக்கவே பதறும் இக்காரியங்களை, ஒரு மிக பெரிய கும்பல், மிக திறமையாக திட்டமிட்டு, கடத்தல்களை நடத்துகிறது.

எவ்வளவுதான் பாதுகாப்பு கருவிகள் இருந்தாலும், மனித தன்மையற்ற இது போன்ற செயல்கள் எல்லா வணிக வளாகங்களிலும் நடப்பதற்கான சாத்திய கூறு முழுமையாக உள்ளது. இது நாம் செல்லும் வணிக வளாகங்களிலும் நடக்க கூடும் இல்லையா?

குழந்தைகளை கூட்டி செல்லும் பெற்றோர்கள், உறவினர்கள் மிகுந்த விழிப்புடன் இருங்கள். தயவு செய்து அவர்களை தனியாக செல்ல அனுமதிக்காதீர்கள்.

நன்றி
மக்களின் விழிப்புணர்ச்சிக்காக
Team Swaraksha
NGO for child sexual abuse awareness.  
 
  

Sunday, June 5, 2016

ஆசாரி வறுவல் செய்வது எப்படி?

சுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா?

தேவையானவை
சிக்கன் : அரை கிலோ (மிக சிறிதாக வெட்டப்பட்டது)
வர மிளகாய் : 25 (மிக சிறிதாக நறுக்க வேண்டும், விதைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்)
தேங்காய் நீளமாக நறுக்கியது : 10  
சிறிய வெங்காயம் :10
சிக்கன் மசாலா : 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி : 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை : பத்து இலைகள்
எண்ணெய், உப்பு, தண்ணீர்

செய்முறை

எண்ணெய் காய்ந்ததும், முதலில் மிளகாயை போட்டு நன்கு வதக்க வேண்டும், பின்னர் கறிவேப்பில்லை, வெங்காயம் கலந்து அது நன்கு வறுபடும் வரை  கரண்டியை வைத்து கிளறவும். சிக்கனை போட்டு, அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும், சிக்கன் மசாலா சேர்க்கவும். நன்றாக கலந்த பின் சிக்கன் அளவிருக்கு தண்ணீர் ஊற்றி பதினைந்து நிமிடம் மூடி விடவும், தண்ணீர் வற்றும் முன் நன்கு கலக்கவும். சிக்கனை வெந்து விட்டதா என சுவை பார்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். மதிய உணவுக்கு சுவையான  அசைவ வறுவல் ரெடி.  

Friday, June 3, 2016

இறைவி திரைப்பட விமர்சனம்

ஹீரோக்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல், தான் சொல்ல வந்ததை எந்த ஒரு சமரசமும் செய்யாமல், தனது பாதை விலகாமல் இந்த படத்தை கொண்டு சென்றதற்கு கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு பூங்கொத்து.

இந்த படத்தில் நாயகர்கள், நாயகிகள்  இன்னும் மற்றும் பலரெல்லாம் இருக்கிறார்கள், விசேசம் என்னவென்றால் கதையில் இருந்து கொஞ்சம் கூட துருத்தி வெளியே தெரியாமல் இருப்பதே.

பீட்சா, ஜிகர்தண்டா வரிசையில் இப்போது "இறைவி"யும் மிக வித்யாசமான கதைகளம், அதை அழகாகவும் படைத்திருக்கிறார் கார்த்திக்.

எஸ் ஜே சூர்யாவை பாராட்டியே தீர வேண்டும், அவர் தான் மொத்த படத்தையும் தாங்கி கொள்ளும் தூணே. படம் வெளிவராமல் தவிக்கும் இடங்களிலும், குடிக்கு அடிமையாகி டாஸ்மாக் வாசலில் கடை திறக்க காத்திருக்கும் காட்சியிலும், தனது கோபத்தை கட்டு படுத்தத் தெரியாமல் கத்தி விட்டு, பின் சரக்கு ஊற்றி கொடுத்தவுடன் "உன் நல்லதுக்குதான் சொன்னேன் ப்ரோ" என்று குலைவதிலும், உச்ச காட்சியில் அழுகையை அடக்கி கொண்டு அவர் போனில் தன் மனைவியுடன் பேசும் காட்சியிலும் மனிதர் சிக்ஸர்களாக அடித்து தள்ளி இருக்கிறார்.

விஜய் சேதுபதி கன கச்சிதம், கொலைவெறியை காட்டும் காட்சிகளிலும், அஞ்சலிக்காக தவிக்கும் இடங்களிலும்  உடல் மொழி அபாரம். பாபி சிம்ஹா சிறப்பு, பள்ளி உடையிலும், திருமண காட்சிகளிலும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் எப்படி மாற முடிகிறதோ இந்த அஞ்சலியால்!
கமலினியும், விஜய் சேதுபதியின் தோழியாக வரும் பூஜா திவாரியாவின் கதாபாத்திரங்கள் , இன்றைய தலைமுறையின் வேறு ஒரு தளத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக கொஞ்ச நேரமே வரும் பூஜா அதிர்வை ஏற்படுத்துகிறார்.  

சந்தோஷ் நாராயண் பிண்ணனி இசை வழக்கம் போல நன்று, பாடல்களும் கேட்கும்படியே இருக்கின்றன.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு அருமை,  அந்த மைதான காமெடி சண்டை, கேரளா கோவில், சிலை திருடும் இடங்கள்,  பாடல்கள் எல்லாவற்றிலும் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார்.

சின்ன சின்ன கேள்விகள் இருந்தாலும், ஆண்களினால் ஏற்படும், பெண்களின் வலியை, வேதனையை, இயலாமையை, கடும் நெடுக்கடியை சரியான முறையில் பகிர செய்ததில் கார்த்திக் மனம் விட்டு பாராட்ட படவேண்டியவர்.  இது போன்ற முயற்சிகளை வரவேற்றால் மட்டுமே இன்னும் சிறப்பான தமிழ் படங்கள் வரும் என்ற எண்ணத்தினால் எனது கேள்விகளை தள்ளியே வைக்கிறேன்.

தயவுசெய்து திரையரங்குகளில் காணுங்கள், அப்படி காண வேண்டிய படம் இது.