Thursday, October 25, 2018

பிடித்த புத்தகங்கள் பகுதி 2

படித்த புத்தகங்கள் என்றே வந்திருக்க வேண்டும், முதல் தொகுப்பை பிடித்த என்று எழுதிவிட்டதால் அதையே தொடர்கிறேன்.
ஏற்கனவே நாற்பது புத்தகங்களை பற்றி எழுதி விட்டதால் இனி நாற்பத்தி ஒன்றில் இருந்து ஆரம்பிக்கிறேன். முந்தைய தொகுப்பை தவற விட்டவர்கள் இதை பிடித்த புத்தகங்கள் படித்து விட்டு வாருங்கள்.

41. மலைகள் சப்தமிடுவதில்லை.

இலக்கியமும் இசையும் கலைகளும் இல்லாமல் போனால் மனிதர்கள் வெற்று சக்கையாகி போவார்கள் என்கிறார் இதன் ஆசிரியர்
எஸ். ராமகிருஷ்ணன். நடந்தே இந்தியா முழுவதும் பயணம் செய்த அனலேந்தி, தஸ்தாயேவ்ஸ்கி, சேகா, கார்க்கி, பாஸோ, காமிக்ஸ், ரயிலோடும் தூரம், வெயில், சிற்பங்கள் என உங்களை ஆச்சர்யப்படுத்தும். நிறைய கட்டுரைகள் இதில் உண்டு.

42. பனிமனிதன். 

இது ஏதோ சிறுவர்களுக்கான கதை என்று நினைத்து பத்து பக்கம் படிக்கலாம் என்று ஆரம்பித்தேன், நாவலை முழுவதும் முடித்த பின்பு தான் வைக்க முடிந்தது. கதையின் இடையிடையே வரும் உண்மை தகவல்கள் மிகுந்த ஆச்சர்யங்கள் கொண்டவை. நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினர்களுக்கான புத்தகம்.

43. பணக்கார தந்தை ஏழை தந்தை. 

ஆங்கிலத்தில் இது Rich dad, Poor dad என்ற பெயருடன் வந்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட தந்தைகளின் செழுமை, வாழ்க்கையை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கான புத்தகம்.

44. பொன்னியின் செல்வன்

போதுமானவரை இந்த புத்தகம் பற்றிய பற்றி விளக்கங்கள் வந்து விட்டன. என் தோழி ஒருவர் ஏன் இதை பற்றி எழுதவில்லை என்று கேட்டு கொண்டதற்கிணங்க இதை குறிப்பிடுகிறேன். பத்து வருடங்கள் முன்பே படித்தாயிற்று.

45. Man eaters of kumaon

புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் மனிதர்களை கொல்லும் சிறுத்தை புலிகளை பற்றியும் அவற்றை வேட்டையாடியது பற்றியும் எழுதி இருக்கிறார்.
ஹிமாயூன் புலிகள் என்று தமிழில் புத்தகம் வெளி வந்தது. குறிப்பிட்ட பகுதி மக்களால் தெய்வமாக கொண்டாடப்பட்ட இவர் எழுதிய புத்தகம் ஏறத்தாழ என்பது ஆண்டுகள் கடந்தது. ஆனால் பரபரப்பான நிகழ்வுகள் நிறைந்த புத்தகம்.

46. இனி என் முறை.

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரை பார்த்து பாலகுமாரன் சூடு போட்டு கொண்ட நாவல். நான்கைந்து அத்தியாயத்திற்கு பிறகு அதை படிக்க முடியாமல் ஓரமாக வைத்த புத்தகம். இதற்கு பின் இவர் கிரைம் கதை பக்கமே போகவில்லை.

47. சோளகர் தொட்டி 

எரியும் பனிக்காடு என்ற புத்தகத்தை பரதேசியாக மாற்றி பாலா படம் எடுத்தாரில்லையா, அதை விட அதிக அடர்த்தி கொண்ட புத்தகம் இது. பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களை, அவர்களது கடவுளை, வாழும் முறையை, அதன் அழகுகளை புரியவைக்கும் முதல் பாதி, அரசியல் அதிகாரங்களால், வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஒடுக்கப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகும் ரத்த மயமான இரண்டாம் பகுதி கலங்கடிக்குமாறு எழுதி இருக்கிறார். பூர்விக நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு, அதிகார வர்க்கத்தால் வதைக்கப்படும் மொத்தப் பழங்குடிகளின் கதை அது என நாவலாசிரியர் பாலமுருகன் கூறி இருக்கிறார்.

48. 19 டி எம் சாரோனிலிருந்து.

பவா செல்லத்துரை எழுதிய பொக்கிஷம். அழகையும் எளிமையையும் மனித தன்மையையம் கலந்து, நாம் கொண்டாடும் கொண்டாட வேண்டிய பல எழுத்தாளர்களை, ஓவியர்களை, புகைப்பட கலைஞர்களை அறிமுகம் செய்திருப்பார். தமிழில் வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்களில் இது முக்கியமானது.

49.  சித்திரபாவை

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை என் தந்தையிடம் இருந்து தான் கற்றேன். வார இதழ்களும் மாத இதழ்களும் தவறாது வாங்குபவர். புத்தக சேமிப்பும் நிறைய இருந்தன. என் தந்தையின் புத்தகங்களின் சேமிப்பில் இருந்து எடுத்து படித்த புத்தகம். பழைமையின் மூடத்தனத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆனந்தி போராடும் கதை. முன்னொரு காலத்தில் தூர்தர்சனில் நாடகமாக வந்திருக்கிறதாம்.

50. மோகமுள்

பொருந்தா காமம் என்று ஆரம்பித்தாலும், மோகத்தின் வெப்பம், அது நிகழ்த்துகின்ற நாடகம், கர்நாடக சங்கீத இளைஞன் பாபுவின் தனிமை, யமுனாவின் சிறுவயதுமுதலான நெருக்கம், மாறும் பார்வைகள் என விரிந்து செல்லும் இந்த புத்தகம், காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற முடிவை கண்டடையும். தமிழில் அப்போதைய காலகட்டத்தில் இந்த நாவல்  சினிமாவாக வந்து தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

51. கதவை திற காற்று வரட்டும்.

ஆசிரமத்தில் கேமரா வைக்கப்படுவதற்கு முன்பே குமுதத்தில் வந்து பாதியில் நின்று போன நித்யானந்தாவின் தொடர். நான்கைந்து பத்திகள் படித்ததுமே இந்தாளுகிட்ட அப்படி என்ன இருக்குன்னு கோவை வ உ சில இவ்ளோ பெரிய விளம்பரம் பண்ணி கூட்டம் போடுறாங்க என்று வியந்திருக்கிறேன். "அட  த்தூ" வகையறா

52. கந்தர்வன் கதைகள் 

இந்த தொகுப்பில் 62 கதைகள் இருக்கின்றன, இதுதான் அவர் எழுதிய மொத்த கதைகளுமே, பாதியை படித்துவிட்டு என் மாப்பிள்ளை அன்புவிற்கு திருமண பரிசாக கொடுத்துவிட்டேன். கந்தர்வனை பற்றி ஜெயமோகன் எழுதியதை அல்ல கொண்டாடியதை இதிலே கந்தர்வன் படிக்கலாம்.

53. ஸ்ரீரங்கத்து தேவதைகள் 

சுஜாதாவை படிப்பதில் இருக்கும் ஒரு ஜாலி என்னவென்றால் மிகுந்த சுவாரஸ்யமும், வேகமும் இருக்கும். ஒரு கதையின் பெயர் நினைவில் இல்லை "நான் வணிக எழுத்தாளனா? இல்லையா? என்பதை இந்த கதையை படித்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்" என அடுத்த நாள் இறந்துபோகப் போகிறபோகிற மகளை மருத்துவம சிகிச்சைக்காக அனுமதிக்க அல்லல்படும் தாய் அற்புதமான சிறுகதை ஒன்று இருக்கும். வாசித்தவர்கள் அதன் தலைப்பை சொல்லுங்கள். இந்த ஸ்ரீரங்கத்து தேவதைகள் நிஜமா, கற்பனையா என்ற  சந்தேகம் புத்தகம் முழுக்க படிப்பவருக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார். படிக்கும் வாசகனை மெல்லிய புன்னகையை படற செய்வதில் சுஜாதா ஒரு மன்னன்.

54. சுபா

இது புத்தக தலைப்பல்ல, எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் எழுதிய க்ரைம் கதைகளை வெகு சுவாரஸ்யமாக படித்துக்கொண்டிருந்த நாவல்கள் பற்றிய முழு தொகுப்பு. முன்பு பாக்கெட் நாவல் என்று அசோகன் (பார்ப்பதற்கு நக்கீரன் கோபால் மாதிரி இருப்பார் என்று அனுமானம்) வெளியிட்டு வந்தார். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுத்தில் கிரைம் கதைகளாக வெளிவரும், ராஜேஷ்குமாருக்கு விவேக், ரூபலா, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு பரத், சுசீலா, சுஜாதாவிற்கு கணேஷ், வசந்த் என்று துப்பறியும் கதாபாத்திரங்கள் உண்டு... ஆனால் ஒரு குடும்பத்தையே படைத்தவர்கள் இரட்டையர்கள் சுபா தான். நரேன் வைஜெயந்தி மற்றும் ஈகிள் ஐ,  ராமதாஸ், ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், என ஒரு பட்டாளத்தையே வைத்திருந்தார். அதிலும் முருகேஷ் என்ற சென்னை தமிழ் பேசும் கதாபாத்திரம் மறக்க முடியாதது.

பிடித்த புத்தகங்கள் மூன்றாம் பாகம் தொடரும்


Saturday, October 20, 2018

பரியேறும் பெருமாள் சில கேள்விகள்

பரியேறும் பெருமாளை பார்த்துவிட்டு உடனடியாக சில்லறையை சிதற விட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன், அதில் வரும் மிக உணர்ச்சி மிகுந்த இரு சம்பவங்கள் எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை, ஐந்து வருடங்களுக்கு முன்பு விகடனில் தொடராக வந்த மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தில் இருந்து மாரி செல்வராஜே சொல்லி இருக்கிறார். நீங்களும் படித்து தெரிந்து கொள்ளலாம். முதலில் அந்த காதல் உண்மை சம்பவம் அல்ல, பூங்குழலி என்ற தன் கல்லூரியில் படித்த ஜுனியர் பெண்ணுக்கு செய்த சிறு உதவிக்காக மாரியை தனது அக்காவின் திருமணத்திற்கு அழைத்திருக்கிறாள் பூங்குழலி. அண்ணா என்று சொல்லித்தான் பழகியும் வந்திருக்கிறார். திருமணத்திற்கு தனது நண்பருடன் சென்று மேடையில் நின்றிருந்த பூங்குழலியிடம் கையை காட்டி சைகை செய்திருக்கிறார்கள், அது பிடிக்காத அவர் தகப்பன், தனியே அழைத்து இதை கண்டித்திருக்கிறார், இதைத்தான் ரூமில் வைத்து அடித்து ரத்தம் வர அடித்து தனது தெய்வீக காதலை இழந்ததாக உணர்ச்சிகரமாக சொல்லி இருக்கிறார். இரண்டாவது முக்கியமான பலரை அழ வைத்த அவர் தகப்பனின் துணிகளை அவிழ்த்தெறியும் இடம். முன்பு நிஜ சம்பவமாக அவரே எழுதியது என்னவெனில், இவருடைய தகப்பன் பெண் வேடமிட்டு சம்படி எனும் நடமாடும் கலைஞர், ஒருமுறை ஆடும்போது அவர் கால் சுளுக்கி கொண்டதால் ஓரமாக அமர்ந்திருக்கிறார், மூன்று விடலைகள் அவரை பெண் என்று நினைத்து தொந்தரவு தர முயன்றிருக்கிறார்கள், அவர் அந்த விடலைகளை தடியால் அடித்து ஊர் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர்களும் இளைஞர்களை பிடித்து ஆட்டம் நடந்த இடத்திலேயே முட்டி போட வைத்து தண்டனை கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எப்படி திரித்தார் என்பதை திரையில் கண்டிருப்பீர்கள். ஜாதி என்பது சம்பாதிக்க உதவும் போது எதுவும் தவறில்லை என்று நினைத்திருப்பாரோ இயக்குனர்? எனது தந்தை மிக மோசமான நிலையில் விபத்துக்கு உள்ளான போது அவருக்கு ரத்தம் கொடுத்தது என் நண்பர்கள் தான் அன்றிலிருந்தே எனக்கு ஜாதி மதங்களில் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் கதை எழுதிய ஐந்து வருடங்களில் ஒரு சம்பவம் வெறும் காசுக்காக, சுய ஜாதியின் தூண்டுதலுடன் எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்பது நிச்சயம் ஏற்று கொள்ள இயலாதது

Wednesday, October 17, 2018

உடையும்போது அது உடையட்டும்...

வாத்தியார் ஒரு பறவை போல, ஆகாயம் பார்த்தபடியே போகையில் எதிரில் அவரது மனைவி கன்னியம்மாள் டீச்சர் வந்தால், அப்படியே தெரு மாறிப் போய்விடுவார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாத்தியாருக்குத் தெரியாமல் டீச்சர் அவரின் அருகில் போய் நின்று, யதேச்சையாக இருமுவதைப் போல இருமுவார். உடனே, ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார் டீச்சரைப் பார்த்துத் தனது வலது கையை நீட்டுவார். டீச்சரும் கேள்வி எதுவும் கேட்காமல், ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து அதில் வைப்பார். கன்னியம்மாள் டீச்சரின் இந்த இருமலும் ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரின் இந்தக் கை நீட்டலும் அந்தப் பத்து ரூபாய்க்காகவே, அது தேவைப்படும் நேரங்களில் மிகச் சரியாக நடப்பதுபோல் இருக்கும்.

அந்தப் பத்து ரூபாய்த் தாளோடு ஸ்டீபன் வாத்தியார் தங்கப் பாண்டி நாடார் கடைக்குப் போவார். தன்னிடம் நீட்டப்பட்ட ரூபாய்த் தாளை நாடார் வாங்குவார். அவரும் எதுவும் கேட்க மாட்டார். வாத்தியாரும் எதுவும் சொல்ல மாட்டார். அந்தப் பத்து ரூபாய்க்கும் மொத்தமாக நிலக் கடலையோ, பொரிகடலையோ கொடுப்பார். அதை வாங்கி இரண்டு கம்பில் ஒரு கம்பில் பொட்டலம் கட்டுவார். அம்மன் கோயில் முன்னாடி கோலிக்காய் விளையாடும் சிறுவர்களைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பார். அப்புறம் வடக்குத் திசையை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவார்.

முதலில் ஒரு வாய்க்கால் வரும். அப்புறம் இருள் சூழ்ந்த வாழைக்காடு. அப்புறம் திருநெல்வேலி, திருச்செந்தூர் மெயின் ரோடு வரும். அதைத் தாண்டினால் நாவல் பழ மரங்களும், தேக்கு மரங்களும், மருத மரங்களும், வேப்ப மரங்களும், மொட்டுக்காய் மரங்களும், மஞ்சணத்தி மரங்களும்... அப்புறம் எனக்குப் பெயர் தெரியாத ஆயிரம் செடிகள்கொண்ட ஒரு சின்னக் காடு இருக்கிறது. அந்தக் காட்டைத் தாண்டித்தான் தாமிரபரணி நதி ஓடுகிறது.

காட்டுக்குள் அவர் சென்றதும், அடுத்த நொடி அந்தக் காடு கரையும், அந்தக் காடு கத்தும். அந்தக் காடு கூவும். அந்தக் காடு அகவும். அந்தக் காடு கீச்சிடும். இப்போது அவரும் கரைவார், கத்துவார், கூவுவார், அகவுவார், கீச்சிடுவார். அவ்வளவுதான்... அத்தனை மரங்களும் இலைகளுக்குப் பதிலாக விதவிதமான பறவைகளை உதிர்க்கும். கொண்டுவந்த கடலையையோ, பிடி சோற்றையோ, பழத்தையோ, தானியத்தையோ... அங்கேயே எப்போதும் கிடக்கும் ஐந்து தேங்காய்ச் சிரட்டைகளில் தன்னைச் சுற்றி வைப்பார். தாமிரபரணியில் இருந்து ஒரு தகர டப்பாவில் எடுத்துவந்த தண்ணீரைக் கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்.

பறவைகள் தானியங்களைத் தின்றுவிட்டு, அவர் கையில் ஏறித் தண்ணீர் குடிக்கும். இரண்டு கிளிகள் அவருடைய எண்ணெய் பார்க்காத தலையில் ஏறி நின்று பேன் பார்க்கும். மாமிசப் பட்சி யான காக்கைகளோ அவருடைய கால் புண் களைக் கொத்தும். அவர் உடுத்தியிருந்த அந்த அழுக்கு வேட்டியில் தங்கிக்கிடக்கும் தானியங்களைக் கொத்தித் தின்ன அந்தச் சிட்டுக்குருவிகள் அத்தனை ஆசைப்படும். சொன்னால் நம்பவே மாட்டீர்கள். அவசரமாக முட்டையிட விரும்பும் சில மணிப் புறாக் கள் அவர் மடியில்தான் முட்டையிடும். அப்படியே காலை விரித்துக்கொண்டு சாரத்தைத் தொட்டிலாக்கி அமர்ந்திருப்பார். நேரம் ஆக ஆக... மயில் அகவும், நிழல் நகரும், காடு இருளும். சின்னதாக ஓர் இருமல். அவ்வளவுதான். உதிர்ந்த அந்தப் பறவைகள் மறுபடியும் மரத்தின் கிளை திரும்பும். வாத்தியார் அதே வழியில் ரோட்டைத் தாண்டி, வாழைத் தோட்டம் தாண்டி, வாய்க்கால் தாண்டி, அம்மன் கோயில் தாண்டி, நாடார் கடை தாண்டி வீடு திரும்புவார்.

ஊரில் தங்கபாண்டி நாடார் சில நாள் கடை திறக்க மாட்டார். சத்துணவில் சில நாள் உருண்டை கொடுக்க மாட்டார்கள். செல்வி சில நாள் பால் வாங்க வராமல் இருந்துவிடுவாள். அண்ணன் சில நாள் என்னை அடிக்க மறந்துவிடுவான். புஷ்பலீலா சில நாள் பூ வைக்காமல் பள்ளிக்கு வந்துவிடுவாள். ஆனால், வாத்தியார் காடு போவதும் வீடு திரும்புவதும் தவறியதே இல்லை. ஒருநாள் அது தவறியது. காடு போனவர் வீடு திரும்பவில்லை. எந்தப் பறவையும் வந்து யாரிடமும் ஏனென்றும் சொல்லவில்லை.

மொத்த ஊரும் காட்டுக்குள் இறங்கித் தேடினோம். நதிக் கரைகளில் தேடினோம். நதிக்குள் இறங்கித் தேடினோம். கன்னியம்மாள் டீச்சர் இருமிக்கொண்டே தேடினார். ஏதாவது ஒரு திசையிலிருந்து வாத்தியார் தன் வலது கையை நீட்டிவிட மாட்டாரா..? நாம் அதில் பத்து ரூபாயை வைத்துவிட மாட்டோமா என்று தவித்த படியே புதர்களுக்குள் புகுந்து பார்த்தார். முதலில் ஒரு சாய்ந்த பெரிய மஞ்சணத்தி மரத்தை அசைத்துப் பார்த்தார்கள். அதன் பின்னர், ஒரு மருத மரத்தின் பெரிய பொந்துக்குள் புகுந்து பார்த்தார்கள். அங்கே வாத்தியார் அப்படியே தானியக் கிண்ணங்களைப் பிடித்தவாறு சுருண்டு, பறவைகளுக்காகக் காத்துக்கிடப்பவரைப் போல இருந்தார். உயிர் ஒரு பறவையாகி சக பறவைகளைத் தேடிப்போயிருந்தது.

யாருக்கும் எதுவும் புரியவில்லை. இந்தக் காடு ஏன் இன்று பறவைகள் இல்லாத காடாக இருக்கிறது? வாத்தியார் ஏன் இப்படி அநாதையாகக்கிடக்கிறார்? அத்தனை இறகுகளையும் இங்கே கொட்டிவிட்டு அத்தனை பறவைகளும் எங்கே போய்த் தொலைந்தன. எல்லாருமே கண்களைக் கசக்கிக்கொண்டு நின்றார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஆனால், எனக்குத் தெரியும். பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடித்த வேட்டைக்காரர்களான எங்களுக்கு மட்டுமே தெரியும்.

ஒரு சிட்டுக்குருவியை அடிப்பதற்கு இடுப்பில் வில்வாரை வைத்துக்கொண்டு, தெருத் தெருவாகப் பார்க்கிறவர்களிடம் எல்லாம் 'எப்படி அலையுதுவோ பார் பிராட்டியன் மாதிரி...' என்று ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு, ஏதும் கிடைக்காமல் அம்மன் கோயில் சுவரில் ஓடுகளில் ஓடும் அணில்களை அடித்து, சுட்டுத் தின்று திருப்தி அடைந்தவர்கள் நாங்கள். ஒரே இடத்தில் ஒருநாள் முழுவதும் பறக்காமல் தங்களுக்குச் சிறகு இருப்பதையே மறந்து... புறா, மைனா, காக்கா, மணிப்புறா, முங்குவாத்து, சிட்டுக்குருவிகள் என்று அத்தனை பறவைகளும் நின்று இரை பொறுக்குவதைப்  பார்த்தால், எங்களுக்கு எப்படி இருக்கும்? திட்டம் போட்டோம்.

சதீஷ் மீன் தூண்டிலுக்குப் போடும் நரம்புகளைவைத்து வளையம் வளையமாக ஐந்து கண்ணிகளைச் செய்தான். ஒரு வளையத்துக்கு எப்படியும் பத்துப் பறவைகளாவது கண்டிப்பாகச் சிக்கும். எப்படியாப்பட்ட வலுவான பறவையாலும் தூக்கிக்கொண்டு பறக்க முடியாத அளவுக்கு, அந்த இரும்பு வளையங்களை மண்ணில் அடித்து இறக்கிவைக்க பெரிய ஆணிகளையும் எடுத்துக்கொண்டோம். வாத்தியார் வீடு திரும்பிய நேரத்தில் நாங்கள் காடு புகுந்தோம். வாத்தியாரின் தானிய சிரட்டைகளில் தானியங்களையும், பெரிய தகரப் பாத்திரத்தில் தண்ணீரையும் எப்போதும்போல வைத்துவிட்டு, எங்களின் வளையங்களை மண்ணுக்குள் புதைத்து ஆணிகளை இறக்கி, சுருக்கு நரம்புகளின் அகல வாயை விரித்துவைத்துவிட்டு, எங்களின் கால் தடம் பதியாமல் வீடு திரும்பினோம்.

மறுநாள் அதிகாலையில் வாத்தியார் எழுவதற்கு முன்பே முத்துக்குமார், சதீஷ், முருகன், நான் நால்வரும் காட்டுக்குள் இருந்தோம். நாங்கள் நினைத்ததைவிட அதிகமாகவே வளையத்துக்குள் அகப்பட்ட பறவைகள், றெக்கைகளை அடித்தபடி அலறிக்கொண்டும் கத்திக்கொண்டும் காட்டைக் கிழித்தபடிகிடந்தன. புறா, மணிப்புறா, காக்கா, மைனா, சிட்டுக்குருவிகள், கொக்குகள், கௌதாரிகள், கிளிகள், முங்குவாத்துகள் இப்படி எல்லாப் பறவைகளும் அகப்பட்டுக்கிடந்தன. நாங்கள் ஆச்சர்யப்பட்டுக் கத்தும் அளவுக்கு ஒரு மயில்கூட அகப்பட்டு அகவிக்கொண்டுகிடந்தது. தயாராகக் கொண்டுவந்திருந்த சாக்குப் பைக்குள் ஒவ்வொரு பறவையாக, அவற்றின் றெக்கைகளை ஒடித்து உள்ளே போட்டோம். மைனாவைச் சாப்பிட முடியாது என்று அவற்றை எடுத்து சதீஷ் பறக்கவிட்டான். ஆனால், கிளிகளை வீட்டில் வளர்க்க வைத்துக்கொண்டோம். அந்தப் பெரிய மயிலை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டு இருக்கும்போதுதான் முருகன் சொன்னான், ''வேண்டாம்லே... மயிலைக் கொன்ன மனுசனுக்குப் புத்தி பேதலிக்கும்னு எங்க அம்ம சொல்லுவா...'' என்று. அவ்வளவுதான் அதைப் பறக்கவிட்டோம். ஆனால், அது ஓர் அப்பாவி டைனோசரைப் போல ஓடித்தான் போனது. ஏனென்றால், அதன் றெக்கை ஏற்கெனவே உடைந்துவிட்டது.

தூக்க முடியாத அளவுக்கு நிரம்பிய சாக்கைத் தூக்கிக்கொண்டு, வாழைத் தோட்டம் வழியாகப் போனால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று, பஸ் ஸ்டாப் வழியாகச் சென்று உச்சிபரும்பு ஏறி, கால்வாய் ரயில்வே கேட் தாண்டி வீரளப்பேரி பனங்காட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். வாத்தியார் எப்போதும்போல எழுந்ததும் நாடார் கடையில் கடலை வாங்கிக்கொண்டு காட்டுக்குள் போய்ச் சேர்ந்த அதே நேரத்தில், வீரளப்பேரியின் பனங்காட்டுக்குள் அகப்பட்ட எல்லாப் பறவைகளும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஆவி பறக்க வெந்துகொண்டிருந்தன.

வாத்தியாரின் சடலத்தைப் பார்த்தபோது, அது எல்லாம் நினைவுக்கு வந்து எங்களுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டது. சதீஷ் நிற்க முடியாமல் வீட்டுக்கு ஓடிவிட்டான். முருகனோ அவன் அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து நின்றுகொண்டான். நானும் முத்துக்குமாரும்தான் நடக்கும் எல்லாவற்றையும் எதுவும் தெரியாதவர்களைப் போல வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

சத்தியமாக எங்களுக்குத் தெரியாது வாத்தியார் எல்லாப் பறவைகளையும் அடையாளம் வைத்திருப்பார் என்று. எங்களுக்குத் தெரியாது, ஐந்நூறு பறவைகளில் இருபது பறவைகளை வேட்டையாடினாலும் வாத்தியார் கண்டுபிடித்துவிடுவார் என்று. எங்களுக்குத் தெரியாது, வாத்தியார் பறவைகளை இவ்வளவு நேசித்திருப்பார் என்று. எங்களுக்குத் தெரியாது, நாங்கள் கண்ணி போட்டுப் பிடிக்கும்போது அந்தப் பறவைகள் உதிர்த்த அத்தனை இறகுகளும்  வாத்தியாருக்கு... அவை எழுதிய கடைசிக் கடிதம் என்று. எங்களுக்குத் தெரியாது, அவர் அந்தக் கடிதங்களை வாசித்திருப்பார் என்று. வாசித்து வாசித்து வாத்தியார் பித்துப் பிடித்துக் கதறி அழுதிருப்பார் என்று. ஏதோ ஒரு பறவை 'வாத்தியாரே... நீதான் துரோகி. நீதான் எங்களைப் பழக்கி, எங்களை நம்பவைத்து அவர்களிடம் பிடித்துக்கொடுத்துவிட்டாய். இனி, உன் முகத்திலே நாங்கள் விழிக்க மாட்டோம்...'' என எழுதிச் சென்றிருக்குமோ? அதுதான் வாத்தியாரின் நெஞ்சை அடைத்திருக்குமோ? அந்த நொடியிலே, அந்த இடத்திலே அவர் உயிர் பிரிந்திருக்குமோ?

வாத்தியாரைத் தூக்கச் சொன்னார்கள். எல்லாரும் தூக்கினோம். அவரோ பறக்கப் போவதைப் போல கைகள் இரண்டையும் விரித்துக்கொண்டுகிடந்தார். 'அவரை எங்கே தூக்குகிறீர்கள். அவர் இங்குதான் வாழ்ந்தார். அவர் இப்போது எங்கேயும் போகவில்லை. இங்குதான் ஏதோ ஒரு பறவையாகி... ஏதோ ஒரு மரத்தில் இருக்கிறார். எப்படியும் நாம் போன பின் இறங்கிவருவார். இந்த உடலை மட்டும் அங்கே கொண்டுபோய் என்ன செய்வது? இங்கேயே ஏதாவது ஒரு மரத்தின் நிழலில் நல்லபடி அவரை அடக்கம் செய்யுங்கள். அவர் பறவையாகப் பறக்கட்டும், காடாக வாழட்டும்...' என்று கன்னியம்மாள் டீச்சர் சொன்னதனால், வாத்தியாரை அங்கேயே அடக்கம் செய்தார்கள்.

போன பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்தபோது பிறந்த நாள் பரிசாக மயிலிறகு வேண்டும் என்று திவ்யா கேட்டபோது, வாத்தியாரின் கல்லறைப் பக்கமாக அத்தனை போலி தைரியத்துடன் போய்ப் பார்த்தேன். எவ்வளவு பறவைகளின் இறகுகள், அங்கே கொட்டிக்கிடந்தன. அவை எல்லாமுமே வாத்தியாருக்கு அந்தப் பறவைகள் எழுதிய கடிதங்களாக இருந்தால், அவை என்ன எழுதி யிருக்கும்? நிச்சயமாக எங்களைப் பற்றித்தானே எழுதியிருக்கும்? அவற்றின் றெக்கைகளை வலிக்க வலிக்க ஒடித்தவன் என்று என்னைத் தானே அடையாளப்படுத்தியிருக்கும்? அவை எப்படிக் கொல்லப்பட்டன என்று எழுதினால்? ஐயோ... வேண்டாம்!

காட்டைவிட்டு வேகமாக வெளியேறி எப்போதும்போல என்றாவது ஒருநாள், யார் மூலமாகவோ பகிரங்கமாக, நிச்சயமாக உடை படப்போகும் பாவத்தின் முட்டைக்குள் வந்து பதுங்கிக்கொண்டேன்.

உடையும்போது அது உடையட்டும்...

நாறும்போது அது நாறட்டும்!

நன்றி "மறக்கவே நினைக்கிறேன்" மாரி செல்வராஜ்

நடந்து தீராத கால்கள்

 இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார்.  எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரை என் மீது அதிக அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர்.



புகழ் பெற்ற உலக இலக்கியப் புத்தகங்களை தந்து  என்னைப் படிக்க வைத்து, என் சிறுகதைகள் வெளியான நாட்களில் அதைப் பற்றி விவாதித்து எப்போதும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவரைச் சந்தித்துவிட்டு விழா துவங்குவதற்கு முன்பாக மாநாட்டு பந்தலில் அமைக்கபட்டிருந்த புத்தகக் கடைகளில் ஏதாவது பழைய ரஷ்யநாவல்கள் கண்ணில்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.



அருகில் வந்து நின்றபடியே என்னையே பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். ஐம்பது வயதைத் தாண்டிய தோற்றம். முகமெல்லாம் புன்னகை. ஏதோ பேச விரும்புகிறார் என்பது அவரது முகபாவத்தில் தெளிவாகத் தெரிந்தது. நானே பரிச்சயம் செய்து கொண்டேன்.


மிகுந்த உரிமையுடன்  என் வலதுகையைப் பிடித்து கொண்டு ஊர் சுற்றுகிறவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்படுத்தி கொடுத்தது நீங்கள் தான் என்று சொன்னார். அப்படியெல்லாம் இல்லை. ஊர் சுற்றி யாருக்காகவும் பயணம் செல்வதில்லை. அது ஒரு சுதந்திரம். விடுபடல் என்றேன்.


அவர் அதை ஆமோதிப்பது போல சிரித்தபடியே  தன்னுடைய பெயர் கவிஞர் அனலேந்தி , நீங்க படிச்சிருப்பீங்க. ஏதோ கொஞ்சம் கவிதைகள் எழுதியிருக்கேன்.  நானும் கொஞ்சம் ஊர் சுற்றிவந்தவன் என்று அறிமுகமானார்.


ஊர்சுற்றுகின்றவன் என்ற ஒரு சொல் இருவரையும் மணிக்கணக்கில் பேச வைத்தது.  அருகில் இருந்தவர்களை மறந்து நாங்கள் ஏதேதோ ஊர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  புத்தக கடையில் இருந்த வேறு ஒரு நண்பர் இடையிடையே அவரிடம் ஏதோ கேள்விகேட்டுக் கொண்டிருந்தார். அனலேந்தியின் கவனம் அதில் குவியவேயில்லை. தனது பயணத்தின் நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொள்வதிலே ஆர்வமாக இருந்தார்.


நாங்கள் நின்றிருந்த இடம் சூழல் யாவும் மறந்து போனது. இருவரும் ஏதோ நெடுநாள் பரிச்சயம் கொண்டவர்கள் போல நெருக்கமாகி பேசிக் கொண்டிருந்தோம்.


அப்படி எங்களைப் பேச வைத்தது அவரது பயணம். அனலேந்தி நான்கு வருடங்கள் நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். அதுவும் 2002ல் இருந்து 2006 வரை யான இந்த காலகட்டத்தில்.


எனக்கே நம்ப முடியாமல் இருந்தது. பின்பு அவர் சொல்லச் சொல்ல அதில் ஒரு துளி பொய்யில்லை என்று உணர முடிந்தது. பத்திரிக்கைகளில் செய்தியாளராக , பிழைதிருத்துபவராக பல வருசம் சென்னையில் வேலை செய்த அனலேந்திக்கு நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களும் எரிச்சல்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுமையை ஏற்படுத்த துவங்கியது.


தனிமையாக வசிப்பவர் என்பதால் எதற்காக இப்படி வேலை செய்கிறோம். என்ன பிரயோஜனம் என்று யோசிக்க ஆரம்பித்து, இதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு ஒரு நாள் பேசாமல் எங்காவது போய்விடலாம். இனிமே சென்னைக்கு திரும்பவே வேண்டாம் என்று தன் அறையிலிருந்து கிளம்பியிருக்கிறார்


அப்படிக் கிளம்பும் போது இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வரலாம் என்றொரு எண்ணம் மனதில்  உருவாகியிருக்கிறது. நடந்தே இந்தியாவை சுற்றலாம் .கிடைத்த இடத்தில் தங்கிக் கொண்டு கிடைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு முடிந்தவரை போய்வரலாம் என்று நடக்கத் துவங்கினார்.


நான்கு ஆண்டுகள் ஒய்வில்லாமல் நடந்து இமயமலையின் அடிவாரம் வரை சென்று திரும்பியிருக்கிறார். பயணம் அவருக்குக் கற்று தந்த முதல்பாடம் மௌனமாக இருப்பது என்பதே. நாம் கேட்காமல் எதையும் அவர் சொல்வதேயில்லை.


எந்தச் சாலைகள் வழியாக நடக்கத் துவங்கினீர்கள் என்று கேட்டேன். பெரும்பாலும் பிரதான வழிகளை விட்டு கிராம சாலைகள், மலைப்பாதைகள், ஒற்றையடி பாதைகள் வழியாகவே நடந்தேன்.  ஒவ்வொரு ஊருக்கும் இடையில் இத்தனை பாதைகள் இருக்கின்றதா என்று வியப்பாக இருந்தது. ஒவ்வொரு பாதையும் மனிதர்கள் உண்டாக்கிய சாதனை என்றும் தோன்றியது. எத்தனை விதமான மரங்கள். எத்தனை விதமான நீர்நிலைகள், குன்றுகள், வளைந்து வளைந்து செல்கிறது பாதை. ஒவ்வொரு நாளும் பகல்முழுவதும் நடந்து கொண்டேயிருப்பேன்.


வழியில் எங்காவது மனிதர்களைக் கண்டால் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு நான் நடத்து திரிகின்றவன். ஏதாவது உணவு தரமுடியுமா என்று கேட்பேன். மறுக்காமல் உணவு தருவார்கள். மாலையானதும் ஏதாவது ஒரு இடத்தில் தங்கி  கொண்டு விடுவேன்.


அப்படி ஒரு முறை மத்தியபிரதேசத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த போது மலைபாதை ஒன்றினை கடப்பதற்குள் இரவாகி விட்டது. அங்கேயே தங்கிவிடலாம் என்று ஒரு மரத்தடியில் படுத்து கொண்டேன். இரவாகியதும் அந்த பாதையில் என்னை தவிர  வேறு மனித நடமாட்டமேயில்லை. இருட்டு அப்பிக் கொண்டிருந்தது.


அப்போது பைக்கில்  வந்த ஒரு முரட்டு மனிதன் என்னை அடையாளம் கண்டு கொண்டு பைக்கை நிறுத்தி யார் நீ என்று கேட்டான். நான் பதில் சொன்னதும் அவன் என்னுடன் வருகிறாயா என்று கேட்டான். வேண்டாம் என்று மறுத்தாலும் விடவில்லை. வழியின்றி அவனோடு சென்றேன். மலைபாதையின் சரிவில் பைக் இருட்டிற்குள்ளாகவே பயணம் செய்து அவன் வீட்டை அடைந்தது.


அந்த மனிதனின் வயதான தந்தை என்னை வரவேற்றார். என்னைப் பற்றி அவன் சொன்னதும் என் காலில் விழுந்து ஆசி தருமாறு கேட்டார் அந்த வயதானவர். எனக்கு வியப்பாக இருந்தது. அவர் உங்களை போல தன்னலம் இல்லாமல் நடந்து செல்கின்றவர்கள் புண்ணியவான்கள். அவர்கள் ஆசி கிடைப்பது அரிது என்று சொல்லி என்னை அங்கே தங்க வைத்தார். மறுநாள் விடிகாலையில் அங்கிருந்து மறுபடியும் நடக்கத் துவங்கினேன். இப்படியாக நீண்டது எனது பயணம்.


என்னுடைய நான்கு ஆண்டுகால பயணத்தில் தமிழகத்தில் மட்டும் தான் வழிப்பயணிகளை ஏமாற்றுவதும் மோசமாக நடந்து கொள்வதும் அதிகமாக உள்ளது. வடமாநிலங்களில் இன்றும் பயணம் செய்கிறவன் மதிக்கபடுகிறான். உண்மையான காரணத்தை சொன்னால் உணவு தருகிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். ஏமாற்றினால் உடனே அடிஉதை கிடைக்கிறது. வட இந்திய கிராமங்கள் இன்னமும் நேசமும் அன்பும் நிரம்பியே இருக்கின்றன. நடந்து செல்லும் போது தான் இந்தியா எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


ஆனால் மொழி அறிவு முக்கியம். என் பயணத்தில் ஹிந்தி தெரிந்திருப்பது ஒன்று தான் என்னிடமிருந்த ஒரே துணை. அது இல்லாமல் போயிருந்தால் அவதிப்பட்டிருப்பேன். அதுவும் நன்றாக ஹிந்தி பேசத் தெரியும் என்பதால் அவர்கள் என்னை வேற்று மனிதனை போல ஒரு போதும் நடத்தவேயில்லை.


சில இடங்களில் என்னைத் தங்க வைத்து சாப்பாடு போட்டு கிளம்பும் போது செலவிற்கு பணமும் தருவார்கள். நான் ஒரு போதும் பணத்தை பெற்றுக் கொண்டதேயில்லை. கையில் ஒரு ரூபாய் கூட பணம் கிடையாது. தோளில் ஒரு பை. காலில் உள்ள வலு உள்ள அளவு நடை. அப்படித் தான் என் பயணம் நீண்டது.


இந்தியாவின் அத்தனை முக்கிய கலைகோவில்களைகளையும் கண்டேன். மலைகள், பள்ளதாக்குகள், ஏரிகள், நகரங்கள், கோட்டைகள் என்று கால்கள் வலி கொள்ளும் அளவு நடந்தேன். ஆனால் எனக்குள் இருந்த தேடல் குறையவேயில்லை.


பார்க்க பார்க்க வியப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. வட இந்தியாவில் பயணம் செய்யும் சில இடங்களில் குருத்துவராவில் தந்த உணவை சாப்பிட்டிருக்கிறேன். மதுரா, காசி, ரிஷிகேஷ், ஹரிதுவார் போன்ற இடங்களில் சாப்பாடு போடுவதற்காக ஆட்களைத் தேடுவார்கள். சாப்பாடும் போட்டு தட்சணையும் தருவார்கள். இதை நம்பி வாழக்கூடிய பெரிய கூட்டமே வட இந்தியாவில் உள்ளது. அப்படி ஒரு கூட்டத்தில் சில வாரம் இருந்தேன். அவர்கள் ஒரு இடம் மற்றொரு இடம் போய் தானம் வாங்கியே வாழ்க்கை நடத்துகிறார்கள்.


நடக்க நடக்க மெல்ல எனக்கிருந்த அடையாளம் அழியத் துவங்கியது. என்னுடைய பேச்சில் இருந்த கோபம், ரௌத்திரம், தான் என்ற அகங்காரம் யாவும் என்னை விட்டுப் போக துவங்கியது. ஒரு இறகு காற்றில் கொண்டு செல்லப்படுவதை போலத் தான் நடந்து கொண்டிருந்தேன்.


இருப்பிடத்தில் கற்றுக் கொள்ள தவறிய பல விஷயங்களை பயணம் எளிதாக கற்றுத் தந்துவிடுகிறது. மனிதர்கள் மீது பெரிய நம்பிக்கையும் இயற்கையின் மீது அளவில்லாத வியப்பும் அதிகமானது. சில இடங்களில் நோய் பாதித்து படுத்துக் கிடந்தேன். சில இடங்களில் குளிர் என் உடலை வாட்டியது. ஆனால் ஒரு போதும் ஊர் திரும்ப வேண்டும் என்று தோன்றவேயில்லை.


நான் எங்கோ காணாமல்  போய்விட்டேன் என்று நண்பர்கள் நம்ப துவங்கியிருந்தார்கள். அப்படியே இருக்கட்டுமே என்று எனக்கும் தோன்றியது. என்னுடைய அடையாளம் தெரியாத அளவிற்கு தாடி வளர்ந்து விட்டிருந்தது. மெலிந்து என் தோற்றமே மாறியிருந்தது.


திடீரென ஒரு நாள் திரும்பிப் போகலாம் என்று தோன்றியது. அது ஏன் என்று இன்றும் புரியவில்லை. கிளம்பியது போலவே எந்த பரபரப்பும் இன்றி திரும்பி வரும் பயணமும் நடந்தது. நடந்து நடந்து ஆந்திராவின் அருகில் வந்த போது தமிழும் நம்முடைய உணவும் ஆட்களையும் பார்த்த போது  காரணமற்ற உவகை ஏற்பட்டது.


சென்னை திரும்பிய பிறகும் நண்பர்கள் எவரையும் சந்திக்கவில்லை. சில வாரங்கள் தனிமையில் இருந்தேன். பிறகு நண்பர்களைத் தேடி சென்று சந்தித்த போது அவர்களால் நம்ப முடியவில்லை. நான் எதற்காக பயணம் சென்றேன் என்று இன்றும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்


நிச்சயம் இது ஒரு துறவியின் பயணம் அல்ல. மாறாக நடந்து செல்ல ஆசைப்பட்ட ஒரு கிராமத்து மனிதனின் பயணமே. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு மாலை தினசரியில் பிழை திருத்துபவராக வேலை செய்கிறேன். தனியான ஒரு அறை. மனதில் கடந்தகால நினைவுகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.


உங்களது தேசாந்திரி மற்றும் பல பயண அனுபவங்களைப் படிக்கும் போது என் பயணத்தில் கண்ட பல நிகழ்வுகளை அப்படியே மிக உண்மையாக நீங்கள்பதிவு செய்திருப்பதை கண்டு சந்தோஷமாக இருந்தது. ஆனால் உங்களை தேடி வந்து சந்திக்க கூச்சமாக இருந்தது. இன்றைக்கு உங்களை சந்தித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்


நடந்தே இந்தியா முழுவதையும் சுற்றி வந்த ஒரு மனிதன் என் முன்னால் நிற்கிறார். நான் அப்படி பயணம் செய்திருக்கவில்லையே என்று மனதில் தீராத ஆதங்கம் உருவானது. அவர் கைகளை இறுக்கபிடித்தபடியே இதை எல்லாம் நீங்கள் எழுதலாமே என்று சொன்னேன். எழுத வேண்டும். நிறைய மனதில் இருக்கிறது என்று சொல்லியபடியே இன்னொரு முறை நாம் சந்தித்து பேசலாம் என்றார்.


நிகழ்ச்சி துவங்கவே அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். மனது நிலை கொள்ளவில்லை. இது தான் இந்தியா மனதின் இயல்பு என்று தோன்றியது.


எல்லா காலத்திலும் காரணமில்லாத பயணத்தை மேற்கொள்கின்ற மனிதன் இருந்து கொண்டேயிருக்கிறான். அவன் துறவியல்ல. அவன் சுற்றுலாபயணியோ. சாகச பயணியோ கிடையாது . அவன் படைப்பாளியும் அல்ல. மாறாக அவன் ஒரு எளிய மனிதன். தன்மீது குடும்பமும், சமூகமும் உருவாக்கி வைத்த பிம்பங்களை அடையாளங்களைக் கடந்து போக விரும்புகிறான். அவனிடம் உள்ள ஒரே சக்தி அவனது அக நம்பிக்கை. அது அவனைக் கொண்டுசெல்கிறது.


காத காத தூரத்திற்கு அப்பால் இருந்து வரும் பறவைகளை போல அவன் நிலவெளிகளை கடந்து போகிறான்.  எங்கோ தங்கி எதையோ கண்டு தன்உடல் முழுவதும் புழுதிபடிய நிசப்தத்தை மனதில் நிரப்பி கொண்டு திரும்பி வருகிறான் அல்லது விலகி போய்விடுகிறான்.


இன்னொரு உண்மை திரும்ப திரும்ப நினைவூட்டபடுகிறது. எல்லா பயணமும் ஏதோ ஒரு நாள் வீடு திரும்புதலுக்கானதே.


அன்றைய கூட்டம் முடிந்து வெளியே வந்த போது மீண்டும் அனலேந்தியை சந்தித்தேன். அவர் என் அருகில் வந்து இன்னும் சில வருசங்கள் கழித்து மறுபடியும் நடந்து போனாலும் போய்விடுவேன், ஏனோ மனதில் அப்படி தோன்றிக் கொண்டேயிருக்கிறது. என்றபடியே ஒருவேளை திரும்பி வராமலும் இருந்துவிடுவேன் என்று விடை பெற்று போனார்.


காரணம் சொல்ல முடியாத மனதுக்கம் ஏற்பட்டது.  பயணி நடப்பதை நிறுத்திவிட்டாலும் அவன் மனதில் அரூபமான இரண்டு கால்கள் நடந்து கொண்டேயிருக்கும் போலும்.  உலகம் பெரியது. அதன் விந்தைகள் அளப்பரியது. அவை யாவும் விடவும் விந்தையும் அரியதும் இது போன்ற மனிதர்களே.

பெரு நன்றி எஸ் ரா விற்கும் கவிஞர் திரு அனலேந்தி அவர்களுக்கும்...
மலைகள் சப்தமிடுவதில்லை என்பதன் ஒரு பகுதி

Tuesday, October 16, 2018

தமிழ் சினிமா 2018

மலையாள சினிமா கடந்த காலங்களில் மிக அட்டகாசமான கதைகளுடன் களமிறங்கி அறிவுபூர்வமான ரசிகர்களை தக்க வைத்து கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ இந்த தலைமுறை மலையாள இளைஞர்கள் அயல் மொழியான ஆங்கிலத்தில் மயங்கி அதன் பின்னே செல்ல ஆரம்பித்து விட்டனர். எடுத்துக்காட்டாக மொழி இலக்கியம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆங்கிலம் எழுதும் நம்ம ஊர் சாரு நிவேதிதாவிற்கு வாசகர்கள் அதிகரித்து கொண்டே போகின்றனர். பிரபல முன்னணி எழுத்தாளர் பால் சர்க்காரியா கூட, இலக்கியம், வாசிப்பு என்றாலே  மலையாள உலகம் என்பது இந்த தலைமுறையில் மாறி, இலக்கியத்தில் தமிழை விட பின் தங்கி விட்டது என ஆதங்கம் தெரிவித்திருந்தார். மலையாளிகள் புத்தகங்களை மறந்து பாண்டஸி எனும் மசாலா சினிமாவை நோக்கி போய் கொண்டிருக்கையில், தமிழ் சினிமா கதைகளை கையாள தொடங்கி விட்டது.

அதிலும் இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக சிறப்பான வருடம், குறிப்பாக இந்த இரண்டு மாதங்கள் பொற்காலம். இந்த வருடங்கள் வந்த திரைப்படங்களை பற்றி நான்கைந்து வரிகளில் ஆராய்வோம்.

1. இரும்புத்திரை 

வணிக சினிமாவாக இருந்தாலும், விஷால் பறந்து பறந்து சண்டை போடாமல் அடக்கி வாசித்தார். சொல்ல போனால் படத்தின் வில்லன் அர்ஜுன் தான் பெரும் படத்தின் பலம், இணைய தீமைகளை விரிவாகவே பட்டியலிட்டது இந்த படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு நல்ல லாபத்தை, விஷாலுக்கு சம்பாதித்து கொடுத்தது

2. தமிழ் படம் 2.0

 மிக எதிர்பார்க்கப்பட்ட கமலின் விஸ்வரூபம்,  விக்ரமின் ஸ்கெட்ச், சாமி 2, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சந்திரசேகரின் ட்ராபிக் ராமசாமி, மிஷ்கினின் சவரக்கத்தி, பாலாவின் நாச்சியார், விஜய் சேதுபதியின் ஜூங்கா எல்லாம் வசூலில் தோல்வி கண்ட நிலையில், சினிமாவை அரசியலை கிண்டலடித்து வந்த தமிழ்ப்படம் தாறுமாறு வசூலை குவித்தது இந்த வருட ஆச்சர்யங்களின் ஒன்று.

3. மேற்கு தொடர்ச்சி மலை 

ஏராளமான கதைகளை தன்னுள் புதைத்து வைத்த இந்த திரைப்படம், தமிழ் மொழிக்கு புதிது. சினிமா அறிமுகமே இல்லாத சாதாரண மக்களை வைத்து மிக அட்டகாசமாக எடுக்கப்பட்ட திரைப்படம். வணிக ரீதியில் வெற்றி பெறுமா என தெரியாத நிலையில் இதை தயாரித்த விஜய் சேதுபதி மிக பாராட்டுக்கு உரியவர். படத்திற்கு மேலும் அழகூட்டுகிறது இளையராஜாவின் இசை. பட இயக்குனர் லெனின் பாரதியின் கடுமையான உழைப்பிற்கு ராயல் ஸல்யூட்.

4. கடைக்குட்டி சிங்கம் 

நட்சத்திர பாட்டாளங்களுடன் களமிறங்கிய பாண்டியராஜ், டிவி சீரியல் போல இருக்கும் ஒரு கதையை குடும்ப உறவுகளை வைத்து அற்புதமாக கையாண்டார், விவசாயத்தை உயர்த்தி பிடித்த அவர் அதன் துயரங்களையும் சொல்ல தவறவில்லை.. வணிக ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது இந்த படம்.

5. காலா 

வணிக ரீதியாக தோல்வியா வெற்றியா என்ற விவாதம் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா மற்றொரு வித்தியாசமான முயற்சியே, அழுத்தமான கதையுடன் கேங் ஸ்டர் படமாக வந்த இதில் நானா படேகர் நடிப்பு பிரமிக்க வைத்தது.

6. பரியேறும் பெருமாள் 

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் இன்னொரு வாசல், திரைப்படம் என்ற உணர்வை தராத அளவிற்கு பட ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நம்மை அவ்விடத்திற்க்கே அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர். குறைவான திரையரங்கு காட்சிகளுடன் ஆரம்பித்த இந்த படம், அதிக தியேட்டர்களை கைப்பற்றியது இந்த படத்தின் கதையின் மாபெரும் வெற்றி.

7. செக்க சிவந்த வானம் 

விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம், கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.

8. 96


இதயத்தில் தூங்கி கிடந்த பழைய காதலை மீட்டெடுத்த காவியம். படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஆனால் இளையராஜா இசை போல் இடையில் ஜானகி பாடுவது  தாலாட்டு, அதிலும் யமுனை ஆற்றிலே உணர்வுபூர்வம். தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த காதல் திரைப்படம்.

9. கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் 

நயன்தாராவை ஏன் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த இரண்டு படங்களும் சான்று, கோலமாவு கோகிலாவின் அமைதியான ஆனால் மிகப்பெரிய குற்றங்களை கையாள வேண்டிய நிர்பந்த வேடம், இமைக்கா நொடிகளில் சிபிஐ அதிகாரி. இரண்டிலும் வித்யாசம் காட்டியிருப்பார். இரண்டு படங்களுமே நன்றாக இருந்தன. குறிப்பாக இமைக்கா நொடிகள் மிக நன்று.

10. ராட்சசன்.

முண்டாசுப்பட்டியில் நகைச்சுவையை படர விட்ட இயக்குநரா இது? என ஆச்சர்யம் கொள்ள வைத்தார் ராம்குமார். நல்ல சைக்கோ திரில்லர் என்ற பெயரை இந்த படம் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.


இந்த வருடம் வடசென்னைசண்டைக்கோழி 2, சர்க்கார், எந்திரன் 2.0என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் வரிசையில் வர இருக்கிறது அதை பற்றி படம் வெளி வந்த பின் அலசுவோம்



Monday, October 15, 2018

பிடித்த புத்தகங்கள்

எல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என  இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். இன்றுவரை இருபது பக்கங்களாவது படிக்காமல் என்னால் தூங்க போக இயலாது. தமிழில் மிக நல்ல புத்தகங்களை நான் இதுவரை படிக்காமல் கூட இருந்திருக்கலாம். தவிர நல்லது கெட்டது என எதையும் தள்ளி வைப்பதில்லை, கூடுமானவரை எனக்கு ஏற்பில்லாத கருத்துக்கள் பற்றிய புத்தகங்களையும் படிப்பதில் ஆர்வம் உண்டு. எனக்கு பிடித்த புத்தகங்களை பட்டியல் இட்டிருக்கிறேன். அந்தந்த காலங்களில் அவை மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது. உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

பிடித்த புத்தகங்களின் பட்டியல்.

1. மிர்தாதின் புத்தகம்

இதை படைத்த நைமி எல்லா நூற்றாண்டிலும் மாபெரும் எழுத்தாளர் என்று ஓஷோ சொல்லிருக்கார். இதயத்தால் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

2. அறம்

ஜெயமோகன் எழுதியதிலேயே உயர்ந்த இடத்தில் இருப்பது இதுதான். அறத்தின் வழியே வாழ்ந்த மனிதர்களின் கதை. படித்த உடனேயே நாமும் நேர்மையாக வாழ வேண்டும் என தூண்டும் எழுத்துக்கள்.

3. தேசாந்திரி

எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது, கட்டுரை, அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய அழகான பதிவு. அதை பற்றிய விமர்சனம் தேசாந்திரி

4. கிமு கிபி

மதன் விகடனில் இருக்கும்போது எழுதியது. போராடிக்கிற விஷயத்தை அதிஅற்புதமாக வழங்கினார் என சுஜாதா பாராட்டினார், மனித வளர்ச்சியை ஆதியில் இருந்து எழுதிருப்பார், ஒலி வடிவமாகவும் இது வந்திருக்கிறது.

5. கற்றதும் பெற்றதும்

தொடராக வந்து நிறைய பாகங்கள் எழுதினார் சுஜாதா. அப்போதைய சுவாரஸ்ய நிகழ்வுகளை நகைச்சுவை பொங்க எழுதிருப்பார். தடதடவென ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்.

6. கரையோர முதலைகள்

இதில் வரும் தியாகு கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும், வேலை கிடைக்காத சமயங்களில் பாலகுமாரன் புத்தகங்கள் மீண்டு வரவும் ஆறுதலாகவும் இருந்திருக்கிறது.

7. பிருந்தாவனமும் நொந்த குமாரனும்.

இப்பொழுது படிக்க இயலுமா என தெரியவில்லை, ஆனால் அந்த காலகட்டத்தில் வயிறு வலிக்க சிரிக்க வைத்த நாவல்.  அதுவும் கோபி பேசுற வசனமெல்லாம் வேற லெவல்.

8. ஒரு யோகியின் சுயசரிதம் 


Autobiography of a Yogiன்னு இதை சுதந்திரத்துக்கு முன்னாடியே பரமஹம்ச யோகானந்தர் எழுதிட்டார். தமிழ்ல 2001ல தான் முதற்பதிப்பு வந்துச்சு, இப்போ பத்து பதிப்புகளுக்கு மேல வந்திருச்சு.  எல்லா மதத்தில இருந்தும் மேற்கோள் காட்டி எழுதிருப்பார். வாழ்வில் இருந்து இறப்பு, அதை தாண்டி, வெவ்வேறு நிலை, பிறவி நோக்கம், வாழ்தல் முறைன்னு கிட்டத்தட்ட 800 பக்கங்கள் இருக்கும்.

7. வட்டியும் முதலும் 

ராஜு முருகனின் புத்தகம், மனித தன்மை பற்றி விளிம்பியல் மனிதர்கள் பற்றி எழுதிருப்பார், இளையராஜாவோட சிறந்த மெல்லிசை பாடல் மாதிரி இது மயிலிறகு.

8. மாதொரு பாகன் 

சர்ச்சைகளை தாண்டி இது ஒரு சமூகத்துனருக்கான மொழி ஆவண நூல், அந்த பழங்கால வழக்கு மொழிகளை அப்படியே மீட்டு கொண்டு வந்திருப்பார். அதற்கான அவர் உழைப்பு மிக பெரியது.

9. வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 

இது கவிதை நூல், ஒரு காலத்தில் தபூ சங்கர் கவிதைகள் தான் காதல் தூதே.


10. கொலுசுகள் பேசக் கூடும்.

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இந்த ஒரே புத்தகம் தான் எழுதினார். "ஏன் இந்தாளு மறுபடியும் எழுதலை?"ன்னு ஏங்க வைத்த புத்தகம்

11. புளியமரத்தின் கதை

சுந்தர ராமசாமியின் புத்தகம். 1966ல் வெளிவந்தது, விடுதலை பெறுவதற்கு முன்பும் பின்பும் ஒரு புளியமரத்தை சுற்றி நடக்கும் கதை. ஏறக்குறைய நான்கைந்து மொழிக ளில் இது மொழி மாற்றம் செய்யப்பட்டது. தமிழ் இலக்கியவாதிகளால் இன்றும் போற்றப்படுகிறது.


12. பாகிஸ்தான் போகும் ரயில்

எழுதப்பட்டு 70 ஆண்டுகள் கடந்த பின்பும் அதிர்வை உண்டாக்கும் நாவல், இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த காலத்தில் அமைதியாக இருந்த பஞ்சாபில் ஒரு ரயில் வருவதால் நிகழ்ந்த கொடூரங்களை விவரிக்கும் கதை. இவரின் எழுத்துக்களில் வழக்கம் போல இதிலும் காமமும் கலந்திருக்கும், அரசியல் கலந்து சொல்லப்பட்டிருக்கும்.

13. ஸீரோ டிகிரி.

சாரு நிவேதிதாவின்  புத்தகம், அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து கட்டி அடித்திருப்பார், இதில் வரும் கவிதைகள் மிக சிறப்பானவையாக இருக்கும். சாருவின் எழுத்துலகம் வேறு, இது எல்லோருக்குமான நாவல் இல்லை.

 14. காடு

விமர்சனம் படிக்க காடு ஒரு பார்வை கிளிக் செய்யுங்கள்

15. ஆதிரை.

புரட்டி போட்ட புத்தகம் ஒரு வரியில் இதை பற்றி சொல்ல முடியாது. Please click this link ஆதிரை

16. எனது இந்தியா

எஸ் ராமகிருஷ்ணனின் எனது இந்தியா, ஜுனியர் விகடனில் தொடராக எழுதப்பட்டு பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஆட்சி அதிகார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கை நிலை, கொடூரங்கள் கலாசாரம், பண்பாடு என பல சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

17. எல்லா நாளும் கார்த்திகை

எல்லா நாளும் கார்த்திகை புத்தக விமர்சனம்.

18. செம்புலம்

புத்தக விமர்சனம் Link செம்புலம்

19. ஊழல் உளவு அரசியல்

புத்தக விமர்சனம் Link ஊழல் உளவு அரசியல்

20. குற்றப் பரம்பரை 
புத்தக விமர்சனம் Link குற்றப் பரம்பரை

21. மறைந்திருக்கும் உண்மைகள்

புத்தக விமர்சனம் Link மறைந்திருக்கும் உண்மைகள்

22. வெண்முரசு முதற்கனல்

புத்தக விமர்சனம் Link முதற்கனல்

23. பெயரற்றது

புத்தக விமர்சனம் Link பெயரற்றது

24. மூன்றாம் பிறை 

புத்தக விமர்சனம் Link காழ்ச்சாப்பாடு

25. நினைவு நாடாக்கள்

வாலி கவிதையும் உரைநடையாக எழுதிய அவரின் சினிமா அரசியல் பொது சம்மந்தமான சுவாரஸ்ய பழைய நினைவுகள்

26. நான் ஏன் நாத்திகனானேன் 

இந்திய விடுதலை புரட்சி நாயகனாக அறியப்படும் பகத்சிங் எழுதிய புத்தகம் இது. பகத்சிங் சிறையில் இருந்தபோது அவரது தந்தைக்கு கடிதமாக எழுதப்பட்ட இது பின்பு நூலாக வெளிவந்தது.

27. ஒரு மோதிரம் இரு கொலைகள்

செர்லாக் ஹோம்ஸ் தமிழில் அறிமுகமானதும் வாங்கி படித்த புத்தகம்.   1887ல் எழுதப்பட்ட இதன் மூலக்கதைகள் கிட்டத்தட்ட 130 வருடங்களை கடந்து விட்ட நிலையிலும், திரைப்படங்களாக நாடகங்களாக எடுக்கப்பட்டபின்னரும்  இதன் பரபரப்பு இன்னமும் குறையாமல் இருப்பது மிக ஆச்சர்யமானது.

28. பெரியார் சிந்தனைகள் 

நாத்திகத்தின் வலுவான கருத்துக்களை முன் வைக்கிறது இந்த புத்தகம். தவிர பெரியார் பற்றி தெரியாமல் ஆதரிப்போரும், எதிர்ப்போரும் கட்டாயம் ஒரு முறை படிக்க வேண்டிய புத்தகம்.

29. ஞானத்தின் பிரமாண்டம்

ஜக்கி வாசுதேவிற்கு ஏன் உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த புத்தகம் சாட்சி. நிறைய தகவல்களை கொண்டுள்ள இந்த புத்தகம் வாசிக்க பட வேண்டியது.

30. இவன்தான் பாலா 
இயக்குனர் பாலாவின் சுயசரிதை. நகைச்சுவையும், அதிர்ச்சியும், நெகிழ்வும் கலந்த அவரது திரைப்படத்தை போலவே மிக இயல்பான புத்தகம். பாத யாத்திரை போன்ற இடங்களில் எல்லாம் வாய் விட்டு சிரித்திருக்கிறேன்.

31. அணிலாடும் மூன்றில்

மறைந்த கவிஞர் ந முத்துக்குமார் உறவுகளின் வலிமை பற்றி விகடனில் தொடர்கதையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். மனம் நெகிழும் நிகழ்வுகளால் நிறைந்திருக்கிறது இந்த புத்தகம்.

32. கடவுள் தொடங்கிய இடம் 

அ முத்துராமலிங்கம் எழுதிய நிஷாந்த் எனும் இலங்கை தமிழ் அகதி ஒருவனின் உலகம் முழுவதும் ஓடி உயிர் போராட்டம் தான் கதை. சரவெடியாய் வெடிக்கும் பட்டாசு. அதிவேகமான கதை, துயரமும், நெகிழ்வும் தாங்கியவன் தேடிய கடவுள் தொடங்கிய இடத்திற்கு எப்படி செல்கிறான் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

33. மகாத்மா காந்தி கொலை வழக்கு

சதி திட்டங்கள், விசாரணை விவரங்கள், வரலாற்று பின்னணி காந்தி கொலை குறித்த முழுமையான ஆய்வு என இதை எழுதிய என் சொக்கன் முன்னுரை கொடுத்துள்ளார்

34. வந்த நாள் முதல் 

96 படம் இருக்கிறதல்லவா அதை விட அழகிய காதலை கொண்டது. இந்த புத்தகம். செழியன் எழுதியது

35.    ம் 
உறைய வைக்கும் தமிழின மக்களின் உயிர்ச் சேதமும், படுக்கொலைகளும், அதற்கு அவர் தரும் முன்எச்சரிக்கைகளும். தாய்மண்ணிலேயே மாற்று கருத்து கொண்ட குழுக்களால் குதறப்படும் உயிர்களும் என்று தன் கதை வாசிப்பவர் மனதில் வடு விழுமாறு படைத்து உள்ளார் ஷோபா சக்தி. -ஈகரை

36. மலையாள சிறுகதைகள்.

முகுந்தன் தொகுத்து ராஜாராம் மொழி பெயர்த்த புத்தகத்தை படித்தேன், ஏன் இந்திய அளவில் அவர்கள் இலக்கியத்தில் மிக உயரத்தில் இருக்கிறார்கள் என புரிகிறது.எனக்கு பிடித்த எழுத்தாளரான பால் சர்க்காரியாவிலிருந்து, ஜெயதேவன், காக்க நாடன், துளசி, குஞ்சப்துள்லா என எழுதி இருக்கிறார்கள்.

37. ஒரு பொருளாதர அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் 

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய புத்தகம். Confessions of an Economic Hit Man என்ற உலக புகழ் பெற்ற ஆங்கில புத்தகத்தை இரா முருகன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அமெரிக்கா என்றாலே வளமை, செல்வாக்கு, ஆளுமை என்பதை தாண்டி அதன் கோர முகத்தை துகிலுரித்து காட்டிய புத்தகம்.

38. வண்ணதாசன் கதைகள் (தொகுப்பு)

புதிதாக எழுத வருபவர்கள் தயவு செய்து வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி யை படியுங்கள் என சுஜாதாவே சொல்லி இருக்கிறார் இதற்க்கு மேல் நான் என்ன சொல்ல

39.  முத்திரை கவிதைகள் 75 

நல்ல கவிதைகளாக தேர்ந்தெடுத்து விகடனில் வெளி வந்தது இரண்டு கவிதைகளை தருகிறேன் படித்து பாருங்கள்

"நகர்ந்து கொண்டே இரு ஒரு நதிபோல,
நான் காத்திருப்பேன் ஓரிடத்தில் கடலாக"

"ஓங்கி ஒலிக்கும் கெட்டிமேளத்தில் அமுங்கி போகிறது
யாரோ ஒருவரின் விசும்பல் சப்தம்"

40. நட்புக்காலம் 

அறிவுமதியின் கவிதைகள், ஆண் பெண்ணிற்க்கிடையேயான நட்பை அழகிய எழுத்துக்கள் கொண்டு நிரப்பியிருப்பார்.
உதாரணம்:
 "நீ நிரூபித்த பெண்மையிலிருந்து வாய்த்தது
நான் மதிக்கும் ஆண்மை"

இன்னும் இருக்கின்றன, பிடித்த புத்தகங்கள் இரண்டில் மேலும் எழுதுகிறேன். வாசிப்பிற்கு நன்றி