Friday, January 19, 2018

ராயல் என்பீல்ட் புல்லட்

தம்பி மாமாவின் டீசல் புல்லெட்டை திருட்டு தானமாக ஸ்டார்ட் செய்து ஒரு ரவுண்ட் வருவது ஒன்பதாம் வகுப்பில் கொள்ளை இன்பம் கொடுக்கும். கார் வரை வந்து விட்ட போதும், ஏனோ இன்று வரை அந்த மயக்கம் மாறவே இல்லை, அதிலும் அந்த பழைய வண்டிகளின் கீரும், பிரேக்கும் இப்போது வண்டிகளில் நேர் மாறாக இருக்கும், ஆம்ஸ் நேராக வைத்து ஸ்டார்ட் செய்வது ஒரு கலை. அதிலும் டீசல் புல்லட்டை பள்ளி சிறுவன் நான் ஓட்டி கொண்டு போவதை வாயை திறந்து பார்ப்பவர்கள் முன்னாள் "ஷோ" காட்டுவது  அத்தனை பரவசம் தரும்.

 பழைய வண்டிகளை எடைக்கு போடும் நிலை வந்து மீண்டு இன்று உச்சத்தை தொட்டுவிட்ட (கேரள இளைஞர்களின் பங்கு அதில் அதிகம், அவர்கள் திடீர் மோகம் கொண்டு புல்லட் நிறுவனத்தை பெரு வாழ்வு வாழ வைத்து விட்டார்கள்) அதன் மீது மீண்டும் மயக்கம் தொற்றி கொள்ள என் மகனும் ஒரு காரணம். அவனது பல்லே சரியாக முளைக்காத தோழன் விதைத்த விதையில் சாலையில் வாகனத்தை பார்த்தாலே துள்ளி குதிக்கும் புல்லெட் வெறியனாக மாறி விட்டான்.
     பல்சரில் மூன்றாவது முறையாக விழுந்து காலில் தையல் போடும் நிலைக்கு வந்த பின் ஆக்ட்டிவா போன்ற வண்டி வாங்கி செட்டில் ஆகி விடலாமென்று என் மாமன் மகனிடம் பல்சரை தள்ளி விட்டு கொஞ்ச நாள் அவனின் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என எடுத்து வந்தேன்.
  சிறு வயது முதல் கீர் வண்டியே ஓட்டி பழக்கப்பட்ட நான், அதை ஓட்டுவதில் இயல்பே வரவில்லை, சிறிய சக்கரங்கள் வேறு, எனது உயரத்திற்கு (6 feet) என்னை பெண்ணாகவே உணர வைத்தது (தனிப்பட்ட கருத்து, ஆக்ட்டிவா வெறியர்கள் மன்னிக்க)
  சரி ஒரு புதிய புல்லேட்டே வாங்கி விடுவோம் என கோவையில் உள்ள ஷோரூம்களுக்கு சென்றால் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டுமென சொன்னதால் செகண்ட்ஸ் வாங்க முயற்சி செய்தேன்.
  1965ம் ஆண்டு G2 வண்டி என ஒன்றை பார்த்தேன் 2 லட்சம் ரூபாய் சொன்னார்கள், அப்படியென்ன இதில் இருக்கிறது என்றால் அதில் ஒரு கிளைக் கதை விரிந்து சென்றது, சுதந்திரத்திற்கு பிறகு இங்கேயே தங்கி விட்ட வெள்ளையர்களுக்காகவும், குறிப்பிட்ட ராணுவ வீரர்களுக்காகவும் இங்கிலாந்தில் இருந்து கொஞ்சம் வண்டிகளை இறக்குமதி செய்தார்களாம், அந்த வண்டிகளின் எஞ்சின் மிக வலுவானதாம், அது சரியாக பராமரித்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு உழைக்குமாம்.
அது வேலைக்கு ஆகாது என பல வண்டிகளை இணையம் மூலம் நான், எனது அப்பா, அவர் நண்பர்கள், என் நண்பர்கள், எனது புல்லெட் ஆசான் தம்பி மாமா என ஒரு படை தேடியது. கடந்த ஒரு மாதத்தில் மாடல் சொன்னால் அதன் புகைப் படம் பார்த்தே விலை நிர்ணயிக்கும் அளவு கிறுக்கன் ஆகி இருந்தேன்.
 கடந்த வாரத்தில் தேடி கிட்டத்தட்ட பார்த்த 15 வண்டிகளில் பிடித்த 4 வண்டிகள் விலை கட்டுப்படியாகமல், வண்டியில் வேலைகள் நிறைய இருந்ததாலும் சோர்ந்து இன்னும் கொஞ்ச காலம் ஆக்ட்டிவாவிலேயே பொழுதை ஓட்டலாம் என மனதை தேற்றிக் கொண்டேன்.
 சென்ற வார இறுதியில் இணையத்தில் தேடிய போது ஒரு கல்லூரி தாளாளரின் வண்டி பார்க்கையில் பிடித்து போனது விலையும் கட்டுப்படியாகும் என தோன்றி போன் செய்த போது அது ஈரோட்டில் இருந்தது, உடனே எனது மாமன் மகனை அழைத்து வண்டியை பார்க்கும் படி சொன்னேன், அவன் அதை அருகில் இருந்த புல்லெட்  மெக்கானிக்கின் கடைக்கே வரவழைத்து சோதனை செய்து "வாங்கலாம் மாமா" என சட்டிபிகேட் கொடுத்தான்.
 அப்புறம் என்ன? உடனடியாக அட்வான்ஸ் கொடுக்க சொல்லி விட்டு வண்டியை கைப்பற்றி அடுத்த நாளே ஈரோடு சென்று பணம் செட்டில் செய்து எடுத்து வந்தாகி விட்டது.
புல்லட்டில் standard அல்லது Electra அதிகம் செலவு வைப்பதில்லையாம், வாகனத்திலும் அதிக தொந்தரவு தருவதில்லையாம். நான் வாங்கி இருப்பது Electra வகையறா.

 என் மகனுக்கு சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து,  தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி "வண்டி வாங்கியாச்சு குட்டிமா" என்றவுடன் வாயெல்லாம் பல்லாக அந்த நாள் முழுவதும் அதை சுற்றி வந்து கொண்டே இருந்ததை, அவனின் டவுசர் கூட ஒழுங்காக போட தெரியாத நண்பர்களை கூட்டி கொண்டு வந்து வண்டியில் ஏற்றி விளையாடி கொண்டிருந்ததை தனி கட்டுரையாக எழுதலாம்

கடைசியாக உங்களிடம் சொல்ல ஆசைப்படுவது
 "ஆண்களின் ராஜவாகனமய்யா புல்லட்"

Sunday, January 14, 2018

திட்டமிட்டு குடியுங்கள் - சில டிப்ஸ்கள்

இது குடிக்க வைப்பதற்காக எழுதப்பட்ட tl அல்ல, குடிக்காதவர்களும், பெண்களும் இதை படித்து விட்டு புத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தயவு செய்து மேலே தொடராமல் கிளம்பி விடுங்கள். அது உங்களுக்கும் எனக்கும் நல்லது. 

மாதத்தில் ஒரு நாள் மட்டுமே குடிக்கும் பழக்கமுள்ள ஒருவனால் எழுதப்பட்டது தான் இது.

சில டிப்ஸ்கள் 
1. குடிக்க தெரியாதவர்களை தயவு செய்து புதிதாய் குடிக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள், அதன் பிற்பலன் ஆபத்தானது. அவர்கள் சேட்டை தாங்க முடியாது. 

2. தெரு சண்டை போடவோ, நாம் இந்த உலகத்தில் பெரிய பருப்பு என்று காட்டவோ குடிக்க வேண்டாம், அதில் சில பல நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். பேர் கெட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. 

3. காசில்லாத பெரும் குடிகாரர்களை கூட்டு சேர்க்க வேண்டாம். மொட்டையாய் வெளியே வருவீர்கள். 

4. முடிந்த மட்டும், வீட்டாரிடம், அனுமதி வாங்கி மொட்டை மாடி போல ஒரு இடம் தேர்ந்தெடுங்கள், சில பாடல்களை மொபைலில் ஒலிக்க விட்ட படி, சுவையான தீனிகளை வைத்து கொண்டு, தனியாக கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து குடிக்க சிறந்த வழி. எனது வழி அதுதான்.

5. பார்ட்டி எனில் சொந்த வாகனத்தை தவிர்த்து விடுங்கள், கால் டாக்ஸி வைத்து வீட்டுக்கு வந்து சேருவது சரியான வழி.

6. சோகத்தின் போதோ, தோல்வியின் போதோ குடிக்காதீர்கள், எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் போதைக்கு அடிமையாகி மீள முடியாமல் போனது அப்படிதான். குடிப்பதை ஒரு கொண்டாட்டமாக மாற்ற வேண்டுமானால் குடியுங்கள்.

7. டாஸ்மாக்கில் அவசர அவசரமாக குடிப்பவர்கள், இதை படிக்க வாய்ப்பில்லை, இது அவர்களுக்காக எழுத பட்டது அல்ல.

8. மாதம் ஒரு முறை குடியுங்கள், அது சம்பள நாளாக இருந்தால் நல்லது. 

வேறென்ன? 
குடி குடியை கெடுக்கும் 

குக்கரிலேயே மட்டன் தம் பிரியாணி செய்வது எப்படி?

விளக்கம் இங்கே! -

Thursday, January 4, 2018

குற்றப் பரம்பரை புத்தக விமர்சனம்

வேலா ராமமூர்த்தி எழுதிய இந்த புத்தகத்தை டிஸ்கவரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதுதான் இவர் எழுதியதில் நான் படிக்கும் முதல் புத்தகம்.
 Criminal Tribes Act எனும் குற்ற பரம்பரை சட்டம் இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட போது சில குறிப்பிட்ட சமூகத்தினர்மீது அவர்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் பொருட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. (அதாவது வெள்ளைக்காரர்கள் மட்டும் திருட வேண்டும் ;) வேறு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் வைத்து கொள்ளலாம் )
 ஒரு நூற்றாண்டுக்கு முந்தய வாழ்வை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வேலா. ஆதிரை, காடு, எனது இந்தியா போன்றவை ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கொண்டவை, படிக்க சில நாட்களை தின்று தீர்த்தவை. ஆனால் 446 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை தினம் நூறு அல்லது நாற்றைம்பது பக்கங்கள் என்ற ரீதியில் நான்கு நாளில் முடித்து விட்டேன்.
 பரபரவென படு வேகமான, மிக அட்டகாசமான வரலாற்று தொகுப்புகளுடன் கூடிய தமிழில் முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.
  கொம்பூதி கிராமத்து கள்ளர்களின் வாழ்க்கை தான் கதைக்களம், வீரம், மரணம், காதல், நெகிழ்வு, பசி, மகிழ்ச்சி, தொழில் நுணுக்கம், பழி வாங்கல் என எல்லா சுவைகளும் கொண்ட அறுசுவை விருந்து.
 இதில் எனக்கு மிக பிடித்த பகுதி வஜ்ராயினியின் வாழ்க்கை, அவளை பற்றி வேலா எழுதுகையில் மட்டும் காதல் நிரம்பி வழிகிறது. இயற்கை அழகு, கவிதை, மீன்களின் துள்ளல், அந்த மானின் பிரியம், கோபம், உணர்வுகளை கடத்தும் தன்மை என அது வேறு உலகம்
 ரயில் கடந்த பின் தண்டவாளம் அதிருமில்லையா, அது போல "ஆங்கார சூறாவளி ஒன்று முன்னோட்டம் காட்டி போனது" என ஆரம்பிக்கும் இப்புதினம் ஓயாத "அழுகுரல் ஊரணிக்கரை அலை சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன வரை" அதிர்வை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. 
 இயக்குனர் பாலாவும், பாரதிராஜாவும் இந்த கதைக்காக மோதி கொண்டார்கள் என்பது தெரிந்த விஷயமே, பாரதிராஜாவை விட பாலாவின் வடிவத்தில் வெளிவந்தால் பழைமை மாறாமல், சமரசம் செய்து கொள்ளாமல் அருமையான திரைப்படமாக உருவாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
 ஆனால் பாலா அந்த வருடத்தின் வேறு சம்பவங்களை கதை காலமாக்குவதாக அறிவித்து இருப்பதும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.

தமிழில் தரமான கதை விரும்பிகள் தவற விடக்கூடாத புத்தகம் இது.

Friday, December 29, 2017

*ஆண்டாளின் விசிறி *

ஆண்டாள் கோவில் 

இருட்பிரகாரத்தில் அப்பாயி

கை பிடித்து ஈரத்தரையில் 

மிதந்து சென்றது அவ்வப்போது 

கனவில் எழுகிறது..!!

கருஞ்சிலைகள் நோக்கி நிற்க 

பதட்டத்துடன் கடந்து சென்றிருக்கிறேன்..!

யானைச்சாண  வீச்சம் காற்றில் கலந்து வீச 

கருங்கல்  

எதிரொலி கேட்டபடிக்கு 

பயந்து கண்டாங்கி சேலைநுனியை 

இறுக்கி பிடித்தபடி கடந்திருக்கிறேன்..!

வாரச்சந்தாவில் சேர்த்து வைத்த ஐந்து பத்து 

ரூபாய்க்கும் வேட்டு வைக்க 

தகர இரயில்வண்டி வேண்டி 

தரையில் புரண்டு அழுதிருக்கிறேன்..!!

டயர் செருப்பு வார் அறுந்தும் 

காலணாவுக்கு 

தைக்காமல்   வெறுங்காலில், எனைச்சுமந்து       

கருவேல கண்மாய் கடந்து 

இரயில்வண்டியோடு சுடச்சுட 

வாழையிலை பால்கோவாவும் 

வாங்கித்தந்திருக்கிறாள்..!!

கரண்ட் வந்திருக்காத சிறுகிராமத்தின் 

இரவுகள் 

அவள் மாராப்பு விசிறிகளின்றி 

எனக்கு கடந்ததே இல்லை..!!

உணர்கிறேன்  நான் ...புற்று வந்து 

செத்துப்போன அப்பாயி அன்று என் 

கை பிடித்து அழைத்துச் சென்ற 

ஆண்டாளே தான் என..!!


*---அனலோன் *

Sunday, December 10, 2017

வயநாடு சுற்றுலா

கடந்த முறை  சென்ற போது மிக தவறாக திட்டமிட்டு ஏமாந்ததால் வயநாடு ஒரு மொக்கை சுற்றுலா பிரதேசம் என பதிவு செய்திருந்தேன்... மன்னிக்கவும்

 இந்த முறை வேண்டா வெறுப்பாக தான் ஆரம்பித்தேன், கோவையில் இருந்து ஊட்டி சென்று அங்கிருந்து வயநாடு போவதாய் இருந்த திட்டத்தை திம்பம் கர்நாடகா வழியாக செல்ல காலையில் முடிவெடுத்து நாலரை மணிக்கு ஆரம்பித்தேன்.

 ஐந்து மணிநேர இளையராஜா பாடல்களுடன் காரமடை, பவானிசாகர், பண்ணாரி வழியாக ஆரம்பித்தது பயணம், நல்ல ஓட்டுனருக்கு மலைப்பாதை வாகன செலுத்தல் சொர்க்கம், ஆனால் வெறும் 14 கிமீக்கு, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் லாரிகளை வரிசையாக வர வைத்து சோதனை தருகிறது. காலை ஏழு மணிக்கும் திம்பம் விழிப்படைந்திருக்கவில்லை. மலை ஏற்றம் முடிந்தபின் வாகனசோதனை சாவடி அருகில் ஒரு சிறுகடை  உண்டு (அந்த சோதனைசாவடியில்தான் சிறுத்தை இரண்டு வனகாவலர்களையும், சில மலைவாழ்மக்களையும் கொன்றது உபரி தகவல்) சிறுதின்பண்டங்களை சுடச்சுட செய்து தருகிறார்கள், தேநீரும் உண்டு, நல்ல சுவை.

 அதை தாண்டி ஹாசனூருடன்  தமிழக எல்லை முடிவடைகிறது, படுகேவலமான கர்நாடக சாலை அங்கிருந்து ஆரம்பிக்கிறது, தமிழக சாலைகளை குறை சொல்லும் எனக்கு சரியான பாடத்தை புகட்டுகிறது கர்நாடகா.

இதில் ஒரு குழப்பம் என்னவெனில் தாளவாடி (வீரப்பன் ராஜ்குமாரை கடத்தி கொண்டு போன காட்டு பங்களா அங்கே இருக்கிறது) கர்நாடக எல்லைக்குள் வருகிறது ஆனால் அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்கிறார்கள்.

 காலை ஒன்பதுமணிக்கு கூட இருள் பிரியாத, மேகம் பொழியும், காரில் லைட் போட்டே ஓட்டும் நிலையிலும்,  காட்டுப் பன்றிகள், மயில்கள், மான்கள் (காரை தாண்டி குதித்து ஓடின), முயல்கள், முள்ளம்பன்றிகள் சர்வ சாதாரணமாக கண்ணில் படுகின்றன. சிலிர்ப்பும் ஆனந்தமும் பரவ வாகனத்தை மெதுவாகவே செலுத்துகிறேன்.
 தயவு செய்து அந்த வழியில் வருபவர்கள் பணம் கையிருப்பு வைத்திருங்கள், "atm என்றால் என்ன?" என அங்குள்ளவர்கள் கேட்கிறார்கள். சாம்ராஜ் நகரில் மட்டுமே atm வசதி உண்டு, அதுபோக பெரிய ஹோட்டல்களில், பெட்ரோல் பங்குகளில் கூட கார்டு உபயோகிக்க இயலவில்லை (அரே மோடி கியா கரே தும் டிஜிட்டல் இந்தியா)
 அங்கே ஒரு பெரிய ஹோட்டலில் ஏமாந்து போய் சாப்பிட்டேன், சாம்பார் ஒரே இனிப்பு, இட்லியில் கருவேப்பில்லை எல்லாம் போட்டு ஒரு விதமாக தருகிறார்கள், பூரி மசால் உருப்படியான உணவு, டீ பரவாயில்லை. செல்லும் வழியிலோ, சுற்றுலா தளங்களிலோ நல்ல உணவு கிடைத்தது எனில் நீங்கள் அதிஷ்டக்காரர்.
 குண்டல்பேட் தாண்டி பந்திப்பூர் வழியே சென்றால் கூட்டமாக யானைகள், அதைவிட அதிக கூட்டமாக மான்கள் வழியெங்கும் பரவசபடுத்துகின்றன. பத்து யானைகள் குட்டிகளோடு நிற்கும் இடத்தில்  அரைமணிநேரத்துக்கு மேல் நின்றிருந்தேன்.
 வயநாடு செல்ல பந்திப்பூர் பாதையில் செல்லுங்கள், அதுதான் சொர்க்கம்.
வயநாடு பற்றி நிறைய பதிவு வந்திருக்கும். நான் சுருக்கமாகவே முடிக்கிறேன்.

கல்பேட்டாவில் அறை பதிவு செய்யுங்கள், அங்கிருந்து சுற்றுலா தளங்கள் போய் வர வசதியாக இருக்கும்.

அசைவ உணவு விரும்பிகள் சிட்டி ஹோட்டல் விசாரித்து அங்கு சாப்பிடுங்கள், சைவம் எனில் அப்பாஸ், கட்டுப்படியாகும் விலை,  வயிற்றை அலற வைப்பதில்லை, சுவை சிறப்பு.

மூன்று நாட்கள் திட்டமிடுங்கள்.

 லேக்கடி வியூ பாயிண்ட், பாணாசுர சாகர் அணை, மீன்முட்டி அருவி, கார்லாட் லேக்கின் ரோப் ரெய்டு தவற விட வேண்டாம். உங்களுக்கு மிக பிடித்த இடமெனில் ஒரு முழு நாளும் அங்கு செலவு செய்யுங்கள், எல்லாவற்றையும் பார்த்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை.
முக்கியமாக மொபைலை ரூமிலேயே வீசி விட்டு கண்களாலும் மனதாலும் பதிவு செய்யுங்கள்.

Wednesday, September 27, 2017

ஸ்பைடர் விமர்சனம்

ஏ ஆர் முருகதாஸ், மகேஷ்பாபு என்பதாலும், முதல்நாளே பார்த்துவிட நேரமும், வாய்ப்பும், டிக்கெட்டும் கிடைத்தாலும் எதிர்பார்ப்புடனே படம் பார்க்க தொடங்கினேன்.

முதலில் அரை மணி நேரம் நான் விவேகம் இரண்டாம் பாகத்துக்கு தான் வந்து விட்டேனோ என்ற ஜெர்க் வராமல் இல்லை, அத்தனை செலவு செய்து வெளிநாடுகளில் படம் பிடித்த பாடல்கள் ஆரம்பிக்கும் போதே, பெண்கள் கூட வெளியே சென்று தம்மடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

சுடலை என்ற சைக்கோ தான் இதில் வில்லன், எஸ் ஜே சூர்யா என்ற பெரும் சவால் தரக்கூடிய, வசன உச்சரிப்பில் அசத்தகூடிய திருப்புமுனை தரக்கூடிய வில்லனை வைத்துக் கொண்டு, நாலைந்து காட்சிகளில் முடிந்திருக்க கூடிய ஒரு பகுதியை  இடைவேளைக்கு முன்புவரை எதற்காக அந்த பையனை வைத்து தேவையில்லாமல் இழுத்தார் முருகதாஸ் என்றே தெரியவில்லை? பட்ஜெட்டா பாஸ்? அதுவும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?

கதாநாயகி இந்த படத்தில் தேவையே இல்லாத திணிப்பு, R J பாலாஜி உங்களை ஒரு இடத்திலாவது சிரிக்க வைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

எதற்காக இவ்வளவு திட்டு என்றால், முருகதாஸ் ஏறக்குறைய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.. அதுதான்.

நேரடி படம் செய்ய மகேஷ்பாபுவிற்கு ஒரு மார்க்கெட் தமிழ்நாட்டில் உருவாகும்.

சரி படம் ஓடுமா?

கண்டிப்பாக...

ஏனெனில் இடைவேளைக்கு பிறகு எஸ் ஜே சூர்யா என்ற தனி மனிதனின் பிரித்து மேயப்பட்ட நடிப்பில் மொத்த படமும் தலை நிமிர்கிறது, அதன் பின் அமைக்கப்பட்ட புத்திசாலிதன காட்சிகள் நம்மை அசர வைக்கின்றன.   படத்தின் பாடல்கள் மொக்கையாக இருந்தாலும் BGM அட்டகாசம்.

இடைவேளைக்கு பிறகு நம்மை பரபரப்பாக வைக்கும் இசைக்காகவும், படத்தின் வில்லனுக்காகவும், ஆபாசம் இரட்டை வசனங்கள் இல்லாததாலும் பொழுது போக்கு படமாக இதை குடும்பத்துடனே சென்று பார்க்கலாம்.