Monday, September 12, 2016

ஜெயமோகனின் காடு

யானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ.  ஆனால் அவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டு விட்டது காடு.


படித்து கொண்டிருக்கும் வாசகன், சர்வ நிச்சயமாய் மலை நோக்கிய சுற்றுலாவை திட்டமிட ஆரம்பித்து, அதை எப்படி ரசிக்க வேண்டும் என சரியான விதத்தில் கணக்கிட ஆரம்பிப்பார், இதுவே நாவலின் வெற்றி,

கிரிதரன் பார்வையில் நாவல் விரிந்தாலும், நாயகன் என்னவோ குட்டப்பன் தான், காட்டின் அத்தனை மாற்றங்களையும், விதிகளையும், செய்ய கூடாதவைகளையும் அவன் குரல் வழியாகவே முழுதும் உணர முடிகிறது.   குருசு, ராசப்பன், சினேகம்மை, ரெஜினாவை விட அந்த தேவாங்கும், அயனி மரமும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது. மலையாளம் கலந்த தமிழ், படிப்பவர்களை அதிகம் சிரமம் கொள்ள செய்யாமல் படிப்பை தொடர செய்ததில் ஜெமோவின் கையாளல் திறமை அருமை.

மிளாவை என்னை போல பலருக்கும் அறிமுகம்  செய்திருக்கிறார் ஜெமோ, கீறக்காதன் வழியாக ஒற்றை யானையின் பலத்தை, அதன் தவிப்பை, இயல்பை, அது கிரிதரனை உதவி கேட்டு யாசிக்கையில் பரிதாபத்தையும் கொள்ள செய்து விடுகிறது. யானை என்றால் பிரம்மாண்டம்  மட்டுமே என்ற மாயை உடைபடுகிறது.    

நீலியை காமக்கார, வீரியம் மிக்க, ஒரு நகரையே அழிக்க செய்யும் கொடூர காமப் பேயாய் வழிவழியாய் வரும் கதை மூலம்  அறிமுகம் செய்து விட்டு, அதே நினைவுடன் வாசகனை தொடர செய்து,

பின் அவளை மலையத்தியாய் மாற்றி, கிரியின் மூலம் தகிக்கும் அவள் நினைவுகளை சொல்வதிலும், அவளின் அழகை முழுதும் விவரித்து தேவதையாக மாற்றி விட்டத்திலும் ஜெமோ இருவேறு கோணங்களிலும் ஆளுமை காட்டியிருக்கிறார்.

காமம் நாவல் நெடுக வந்தாலும், அதில் வாசகனை இளைப்பாற விடாமல், பட்டென திசை திருப்பி, அதன் உண்மை தன்மையை மட்டுமே புரிந்து கொள்ள வரிகள் அமைத்திருப்பது பெரும் தனித்துவம்.

காலத்தின் மாற்றங்கள் அந்த கதை பாத்திரங்கள் வழியாக உணர்த்தபட்டிருக்கிறது.

அய்யர் பாத்திரம் நொடி நொடியாய் கணங்களை அனுபவித்து வாழ்ந்த மனிதரை பற்றியது. காட்டின் மீது அதிக மோகம் கொண்ட ஒருவர் எடுத்த அழகிய முடிவை பற்றிய வாழ்க்கைப்  பயணம்.  அதை ஒரு தனி நாவல் போலவே எழுதலாம்.

ஏதாவது ஒரு பகுதியில் அவர் உணர்ந்த நெருப்பை வாசகனுக்கு பற்ற வைத்து விடுகிறார் ஜெமோ. நான் அதை கடைசி நாற்பது பக்கங்களில் உணர்ந்தேன்.

சாரலும், பெருமழையும், வன அழகும், அயனி மரமும், நீலியும், உயர மலைகளும், குறுக்கிடும் ஆறுகளும், வெள்ளி நீர் வீழ்ச்சிகளும், மலையத்தியின் வீடும், கடும் காப்பி சுவையும், "மாங்காயை பிளந்து மிளகு உப்பு வைத்து அடுப்பில் கருக்கி கொதிக்கும் மென் குழம்பை இலையில் பிதுக்கி தருகிறான் குட்டப்பன்" என்ற காட்சி சுவை கொண்ட அழகியலுக்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கலாம்.

காட்டை பற்றிய முழு காட்சி அழகுடன், அறத்தை மீறாத வசனங்களுடனும், காட்டின் இரகசியங்களையும், அதை எப்படி ரசிக்க வேண்டும் என்ற பாடங்களையும் நடத்தும் ஒரு சிறப்பான திரைக்கதை ஜெமோவிடம் எப்போதும் தயாராகவே இருக்கும்,

ஏதாவது நல்ல இயக்குனரும், சரியான ஒளிப்பதிவாளரும் அதை படமாக மாற்றினால் அது நிச்சயம் தமிழின் காலத்தை வெல்லும் படைப்பாய் அமையும்.

பெருங்களியாட்டம் இந்த காடு. நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு நல்ல படைப்பு.


காடு -ஒரு பார்வை என தன் வலைதளத்தில் இதை சுட்டி காட்டி இருந்த ஜெமோ அவர்களுக்கு மிக்க நன்றி .