Monday, August 24, 2020

சோளகர் தொட்டி புத்தக விமர்சனம்

 மிக எளிமையான மொழியில் எழுதியதாலோ என்னவோ முதல் பத்து பதினைந்து பக்கங்களுக்கு இந்த நாவல் மீது ஈர்ப்பே வரவில்லை, அதாவது முன்பெல்லாம் மரண மொக்கை படத்துக்கு தேசிய விருது கொடுப்பார்கள் அல்லவா அப்படி,  அத்துடன் நிறுத்திவிட்டு இந்த நாவலை குறித்தும் அதன் ஆசிரியர் குறித்தும் இணையத்தில் தேடி பார்த்தேன். பவானியை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன், பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். இந்த புத்தகத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை உருவாகும் என கருதி மலேசியாவில் வெளியிட்டிருக்கிறார் என படித்தேன். 


தொடர்ந்து தேடியதில் முக்கியமான செய்தி ஒன்று கண்ணில் பட்டது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சதாசிவம் கமிஷன் முன்பு பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை கூட்டிச் சென்று சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். அவர்களுக்கு நேர்ந்த அவலங்களை கேட்கையில் நடுங்கி போய் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதி இருக்கிறேன் என்றார். 


அதற்கு பின் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், அந்த எழுத்துக்களை மீண்டும் படிக்கையில் ஈர்ப்பாக மாறியதை மறுக்க முடியாது. இரண்டு பாகமாக நாவலை பிரித்திருக்கிறார். முதல் பாதி  அழகியல், அவர்களின் கொண்டாட்டம், வழிபாடு, எளிய அழகான வாழ்க்கை முறை, வன விலங்குகள், வேட்டை, அரிசியை எப்போதாவது ஒருமுறை மட்டுமே உண்ண கிடைக்கும் சந்தர்ப்பங்கள் என அந்த மலையோர வாழ்க்கைக்கு நம்மை பழக்கப்படுத்திவிடுகிறார். இதில் ஆச்சர்யப்படும் தகவல்கள் என்னவெனில் பெண்ணுரிமை, பகுத்தறிவு என்றெல்லாம் என்னவென்றே தெரியாத, விளக்கினாலும் புரிந்து கொள்ள இயலாத ஒரு இனத்திலிருந்து   பெண்ணின் மறுமணம், திருமணமானமாகி கணவன் இறந்த பெண் தன்னைவிட வயது குறைந்த ஆணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்வது என மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆச்சர்யப்படுத்துகிறது. இருநூறு பக்கங்கள் தாண்டி வீரப்பனையும் சட்டென நாவலில் கொண்டுவருகிறார்

இரண்டாம் பாகம் லாக்கப் எனும் திரைப்படத்தில் வரும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை விட நூறு மடங்கு வீரியம் மிக்க தாக்குதல்களை அவர் விவரிக்கும் போது அந்த வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

"அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகியோர் 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு, இந்தியாவின் 70வது சுதந்திரத்தினத்தை யொட்டி விடுதலை செய்யப்பட்டனர்" என்றொரு சிறிய செய்தியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக கடந்து சென்றிருப்போம், அன்புராஜை பற்றி பவா செல்லதுரை youtubeல் பேசியிருப்பார் தேடி பாருங்கள், தனது வாழ்க்கையை ஏறக்குறைய தொலைத்துவிட்டு புதிதாக உருவமைத்துக்கொண்டவர் அன்பு, அவர் சோளகர் தொட்டி பற்றி சொல்கையில் பாலமுருகன் எழுதியது மிக சொற்பம் என்கிறார். 

விடுதலையான நான்கு பேரில் துப்பாக்கி சித்தன் என்பவர் தான் இந்த நாவலின் நாயகன் சிவண்ணா, கொஞ்சம் தேடி பார்த்தீர்கள் எனில் அவர் வீரபனுடன் இருந்த புகைப்படம் முதற்கொண்டு, தற்போது தனது நிலங்களை வீட்டையெல்லாம் இழந்துவிட்ட நிலையில் அரசின் உதவியை எதிர்பார்க்கும் செய்திகளையும் காணலாம். பாலமுருகன் சமீபமாக ஒப்புக்கொண்ட வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இன்னமும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்த வித நியாயமும் கிடைக்கவில்லை என்பதே. 

அந்த சாதாரண எழுத்துக்களின் வலிமை இரண்டாம் பாகத்தில் உலுக்கி எடுத்துவிடுகிறது, படிக்கையில் குமட்டிக்கொண்டு வாந்தி வருவது போல நிகழ்வை நமக்கு கடத்துகிறது. 

ஆறுமாத கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பிறந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று தாயிடம் தகவல் மட்டும் தருவது, உடலுறுப்புகளை அடித்து ஊனப்படுத்துவது என ஆதிரைக்கு பிறகு வாசிக்க சிரமப்பட்ட நாவல் என இதை கூறுவேன். 

நிச்சயம் உங்களை இது தூங்கவிடாது பாதிக்கும். 

கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்... அல்ல, உண்மையில் நடந்த நிகழ்வு  

Tuesday, August 18, 2020

சாந்தாக்காவும், சரஸ்வதியம்மாவும்

கடந்த ஆகஸ்ட் 12 வீட்டுக்காரியோட பிறந்தநாள், கொரானாவால பெரிய கொண்டாட்டம் எல்லாம் இல்லை, வழக்கமாக அப்பா, மாமா, அத்தை, நண்பர்கள் என சிறிய கூட்டம் கொள்ளும் வீடு, இந்தமுறை யாரும் இல்லாததால், நாங்கள் மூன்று பேர் மட்டுமே கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.  வெள்ளி கொலுசு, ஒரு புடவை, ஒரு சுடிதார், ஒருகிலோ அளவு பர்த் டே கேக் வாங்கியிருந்தேன். 

சரியாக கேக் வெட்டும் சமயத்தில் காலிங் பெல் சப்தம் கேட்டு போய் பார்த்தால் சாந்தாமணி அக்காவும், சரஸ்வதியம்மாவும் நின்றிந்தார்கள்.  (ஏரியா துப்புரவு பணியாளர்கள்) உள்ளே அழைத்தால் வருவதற்கு தயக்கம் காட்டினார்கள், "யாருமே இல்லை, நீங்களாவது  வரப்போறீங்களா? இல்லையா?" என கேட்ட  பின் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள். கேக் கொடுத்ததில் சரஸ்வதியம்மா சாப்பிட ஆரம்பித்தார், சாந்தாமணி கையில் வைத்தபடியே நின்றிந்தார். "ஏன்?" என்றேன் "பேரனுக்கு கொண்டு போலாம்ன்னு" என்றவரை சாப்பிடச்சொல்லிவிட்டு அரைகிலோவை இரண்டாக பிரித்து தனித்தனியாக இரண்டு டிபன் பாக்ஸில் போட்டு என்னவள் அவர்கள் இருவரின் கையிலும் கொடுத்துவிட்டாள். 

இன்று இரண்டு டிபன் பாக்ஸ்களும் திரும்ப வந்திருந்தது, அட்டகாசமான சூடான சிக்கன்  பிரியாணியுடனும் முட்டையுடனும். 

அதில் அளவுக்கு அதிகமாக பிரியமும் அன்பும் கலந்திருந்தது  


அன்பொன்றே வாழ்வின் இழை, அதனால்தான் பெய்கிறது மழை