Thursday, November 24, 2016

இணைய விற்பனையில் Amazon ஏன் முதலிடத்தில் இருக்கிறது?

தற்போது இணையத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என  எண்ணுமளவு இணைய சந்தை வளர்ச்சி கண்டிருக்கிறது. நம்பகமான, நிறைய வலைத்தளங்கள்  இருந்தாலும், இணைய பொருட்கள் விற்பனையில்  அமேசான் எப்படி முதலிடத்தில் இருக்கிறது என பார்ப்போம்.

flipkart, ebay, snapdeal, jabong, shopclues, Myntra, Homeshop18, என்று இணைய விற்பனை வலைத்தளங்கள் மிக நீண்ட வரிசை கொண்டது.

இதில் ebayதான் இந்தியாவில் இணைய பொருட்கள் விற்க முதன் முதலாக பெரிய தொகையை முதலீடு செய்து களமிறங்கியது, ஆனால் இப்போது அது பின்னுக்கு தள்ளப்பட்டு ஏறக்குறைய காணாமல் போகும் நிலைக்கு வந்து விட்டது. உதாரணமாக ebayவில் இதுவரை மூன்று முறை பொருட்கள் வாங்கி இரண்டு முறை திருப்தி இல்லாமல் திருப்பி கொடுத்துள்ளேன், நமது பணம் நமக்கு திரும்ப கிடைக்க ஏறக்குறைய 25 நாட்களை கடத்துகிறது, replace எனும் மாற்று முறையில்  மிக மோசமான வணிகம் ebayவில் இருக்கிறது, பொருள் கிடைக்கவும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.  வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதை விட, நாம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதில் இருந்து தப்பிப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

shopclus ஓரளவு வேகமாக செயல்படுகிறது, ஆனால் பொருளின் தரத்தை நம்ப முடிவதில்லை.  flipkart, snapdeal, jabong, Myntra, Homeshop18, போன்ற தளங்களை ஒப்பிடுகையில் flipkartன் சேவை திருப்திகரமாக இருந்தாலும், டெலிவரி பெரு நகரங்களுக்கு கூட தாமதமாகவே கிடைக்கிறது.  

 நாம் இணையத்தில் பொருட்களை வாங்குவதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள், வாங்கும் இணையம் பாதுகாப்பானதா, அதில் உள்ள   பொருளின் தரம் நன்றாக உள்ளதா, அது மற்ற நிறுவனங்களை விட விலை குறைத்து தருகிறதா, திருப்தி இல்லை என்றால் திரும்ப ஒப்படைப்பதில் எளிய அணுகுமுறை உள்ளதா, replace எனப்படும் மாற்று விரைவில் கிடைக்கிறதா என்பனவே.

Amezon இதை சிறப்பாக செயல் படுத்துகிறது, அதனால் தான் இந்திய வணிக சந்தையில் முதலிடம் வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏராளமான பொருட்கள், பண பாதுகாப்பு, விரைவான டெலிவரி, எளிதான திரும்ப எடுக்கும் முறை (easy returns), வாடிக்கையாளர் சேவை, மாற்றுபொருளை விரைவில் அனுப்புதல் எனும் செவைகளால் இது முதலிடம் பிடிக்கிறது. இணைய பொருட்கள் வாங்க Amezon உகந்தது. 

Tuesday, November 22, 2016

பெயரற்றது புத்தக விமர்சனம்

பெயரற்றதை உடுமலை.காமில் வாங்கினேன். அடுத்தநாளே டெலிவரி கொடுப்பது பாராட்டத் தக்கது, 90 ரூபாய் புத்தகத்திருக்கு அதில் சரிபாதி விலையை அஞ்சலுக்கென்று வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, ஆனால் இந்த புத்தகத்திற்கு அஞ்சல் விலையும் சேர்த்து கொடுத்தாலும், அதற்க்கு சற்று அதிகமாகவே கொடுத்தாலும் தகும் என்பதால் உடுமலையை மன்னித்து விட்டேன்.  

இது இலங்கை தமிழர் வாழ்ந்த வாழ்வு பற்றிய சில சம்பவங்களின் தொகுப்பு, இதற்கு முன் "வீழ்வேனென்று நினைத்தாயோ" தொடராக படித்திருக்கிறேன், அப்போதிருந்து எனக்குள் எழுந்திருந்த பிம்பங்களை முற்றிலும் உடைத்து விட்டார் சயந்தன்.

தவறு, சரியென்றோ, நாங்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்தோம் தெரியுமா என்ற கூப்பாடோ இல்லாமல், போர் நடந்ததற்கு முன்னும், பின்னும் நடந்த நிஜமான சம்பவங்களை அழகாக தொகுத்திருக்கிறார்.

 அந்த துயரமெல்லாம், கடந்து வந்ததை சலனமில்லாமல், எழுதியது, அங்கு வாழாமல், ஒரு சாதாரண பார்வையாளன் எழுதியது போன்ற நிலையே. விடுதலை புலிகளின் தரப்பில் நிகழ்ந்த சரி, தவறுகளை, இலங்கை ராணுவம் நடந்து கொண்ட நிலையை, ஒரு சாதாரணனின் அனுபவத்தில் இருந்து காட்சி படம் பார்ப்பது போன்று தொகுத்து தந்திருக்கிறார்.

வன்னியிலும், யாழிலும் வாழ்ந்து திரும்பியது போன்ற உணர்வை தருகிறது இப்புத்தகம். சாதாரணமாக எழுதியுள்ள அந்த சம்பவங்கள், படித்து முடித்த பின் பெரும் அதிர்வை தருகிறது, எடுத்துக்காட்டாக, "தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்" எனும் சிறுகதையில் பிரதீபன் தஞ்சம் கோருவதற்காக காரணங்களை அடுக்கும் பக்கங்களும், சின்ராசு மாமா ஒரு வயது குழந்தையை கால்கள் வெட்டப்பட்டு கண்ட நிமிடங்களும், சாம்பலில் சிறகு பொசுங்கிய சிறு பறவையில் சாகீரின் வாழ்க்கை திசை மாறிய கணங்களும்,    தீராத ரணங்கள் .

பேச்சு மொழி இலங்கை தமிழில் தான் வருகிறது என்றாலும் அதை புரிந்து கொள்வதில் எந்த சிரமமும் இல்லை. இது தவிர மோட்டார் சைக்கிள் குரூப்,  மஞ்சள் கறுப்புக் கயிறுகளின் கதை, பெயரற்றது, இந்தியாகாரன், 90 சுவிஸ் பிராங்குகள் என்ற கதைகளும் உண்டு, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அதிர்வை நீங்கள் உணரலாம்.

சிறுகதை தொகுதி என்று தவறாக குறிப்பிட்டு விட்டார், சயந்தன், நிஜங்களின் தொகுப்புதானே இதெல்லாம்?

ஒரு கதையை மன்னிக்கவும், சம்பவத்தை படித்து முடித்த பின், சட்டென அடுத்ததற்கு தாவி விட முடியாது, அந்த தொகுதியின் பாதிப்பு குறைந்தது அரை மணி நேரமாவது இருக்கும், அதுதான் சயந்தனின் வெற்றி. "எப்படியாவது செத்து விட்டால் போதும்", என ஆரம்பிக்கும் சாகிரையும், அவனின் பாமினியின் நினைவுகளையும், இருபது ஆண்டுகளுக்கும் மேலான இருட்டு வாழ்க்கையையும் படித்து விட்டு அந்த இரவை என்னால் சுலபமாக கழிக்க இயலவில்லை. என்னை போல் ஆயிரக் கணக்கான என்கிற வரிகள் எல்லாம் ரத்த சரித்திரம்.        

ஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டது என்கிறார் சயந்தன், நிச்சயம் ஆறாவது நாவலும் வாங்கி விடுவேன், நீண்ட தேடலுக்கு பின் சயந்தனை ட்விட்டரில் பிடித்து நட்பு பெற்றுவிட்டேன். ஆதிரையை பரிந்துரை செய்திருக்கிறார். ஆர்டர் செய்து விட்டேன். தொலைபேசி செய்து விசாரித்ததற்கு, நாளைக்கே உங்கள் கையில் கிடைத்து விடும் என கூறி இருக்கிறார்கள்.

இலங்கை போரின் முழு ஆவண படத்திற்கு வேண்டிய அத்தனை சம்பவங்களும் இதில் நிறைந்து கிடக்கின்றன. நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டிய நாவல்.

நன்றி சயந்தன்.

சயந்தனை ட்விட்டரில் தொடர கீழ் கண்ட linkக்கை click செய்யுங்கள்
சயந்தன் 

அவரது வலைப்பூவினை வாசிக்க சயந்தன்  

Tuesday, November 15, 2016

ஒழிந்து விடுமா கருப்பு பணம்?

கருப்பு பண ஒழிப்பில் முதல் இரண்டு தினங்கள் உணர்ச்சி வசப்பட்டு மோடிஜி வாழ்க என கூவியது உண்மைதான், ஆனால் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தோமெனில், (மோடியின் தேர்தல் வாக்குறுதிகள் தான்) மண்டை காய்கிறது.
அவை என்னவென நினைவு படுத்துகிறேன்.
#மாநிலத்தின் அனைத்து குடிமக்களும் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவர்
#கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நடுத்தர வர்தக்கத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
#வரும் 5 ஆண்டுகளில் 16 லட்சம் ஹெக்டேர் பரப்பு விளைநிலமாக்கப்படும்
#விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை அரசு பகிர்ந்து கொள்ளும்
#சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான வங்கிக் கடனுக்கு அரசு உதவும்
#ராமர் கோயில் கட்டப்படும்
#எளிமையாகும் வரி நடைமுறைகள், வரி என்ற தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் கவலைகள் தீர்க்கப்படும்
#நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு
#அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்
இன்னும் நிறைய இருக்கிறது, படிக்க உங்களுக்கு பொறுமை இருக்காது, கடைசியாய் நான் நம்பி ஒட்டு போட்ட திட்டம்
#லட்சக் கணக்கான கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும்...
இதில் ஒன்றை கூட செய்யாமல், சரியான முன் ஏற்பாடு இல்லாமல், திடீரென உள்நாட்டு கருப்பு பணத்தை ஒழிக்க கிளம்பி விட்டார் மோடி... சரி சிரமங்களை கூட பொறுத்து கொள்ளலாம், 
ஆனால், காலம் காலமாய் எந்த திமிங்கலத்திற்கும் வலை வீசப்பட்டதில்லை, இது கருப்பு பண ஒழிப்பிற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது..
பொறுத்திருந்து பார்ப்போம்...
ஒன்று மட்டும் நிச்சயம்
சாதாரண குடிமகன் நாட்டின் உயர் பதவிகளை வகிக்க வேண்டுமெனில் அவனுக்கு புத்திசாலித்தனம் தேவை இல்லை, வெறும் வாய் சவடால் போதும்...
மோடியும், அமெரிக்க தேர்தல் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.

Monday, November 7, 2016

உங்களில் யாராவது ஒருவராவது நவீனின் வாழ்க்கையை வாழ்ந்தது உண்டா?

"உங்க அம்மா எப்படி செத்து போனாங்க?", என்ற கேள்விக்கு "தற்கொலை செய்துகொண்டு", என்று பதில் சொல்வதற்கு கூசி இருக்கிறேன், சிறு வயதில் இதை யாராவது கேட்டவுடன் கண்ணீர் வரும் , பின்னர் அதுவே வெறுப்பாக மாறி கடும் கோபம் கொள்ள செய்யும் கேள்வியாகவும் மாறி, கொஞ்ச காலம் திசை மாறிக்கூட மிருகமாய் இருந்திருக்கிறேன்.... அப்படி இருக்கையில் இந்தியாவின் பெரிய நோயானா எய்ட்ஸ்க்கு தன் தந்தையையும், தாயையும் பறி கொடுத்து விட்டு, தனி மனிதனாக போராடி தனக்கான வாழ்க்கையை மீட்டு, தன் தம்பிக்கும் வாழ்வளித்து விட்டான் தம்பி நவீன், எத்தனை அவமானங்களை கடந்து வந்திருக்க கூடும், என நினைக்கையிலேயே பதறுகிறது மனது. கண்ணீர் நிறைந்த தூக்கமில்லா இரவுகளை அவன் மட்டுமே அறிவான், இதை அவன் அடைய, மிக மிக நேர்மையாய் இருந்திருக்கிறான் என்பதே என் ஆச்சர்யங்களில் ஒன்று, அனைவரும் கைவிட்ட பிறகு, காசு பணம் இல்லாமல் நேர்மையாய் மட்டுமே இருப்பது என்பது, 99 சதவீதம் சாத்தியம் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் அதை அவன் வாழ்ந்திருக்கிறான் என்பதை நினைக்கையில் பெருமை கொள்கிறேன்... இன்று அவன் திருமணம் முடிந்தது... 
என்னிடம் அவனுக்காய் சொல்ல சில வார்த்தைகள் இருக்கிறது...

"உனக்கான துயரங்கள் முடிவடைந்து விட்டது, இனி எல்லாம் சுகமே",
"நீடூழி சிறப்புடன் வாழடா, நவீன்"