Friday, January 22, 2016

அற்புத கவிதைகள்


சில கவிதைகளுக்கும் பிறப்பு மட்டுமே உண்டு, காலம் கடந்து நிற்கும் கவிதைகள் சிலவற்றை உங்களோடு பகிரவே இந்த முயற்சி  


காதலின் வலியை, தன் ஏமாற்றத்தை  சிறு ஏளனத்துடன் போகனால் போகிற போக்கில் சொல்லி விட முடிகிறது  

"நான் இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..
 இறந்தபிறகு
 பிறந்ததா இது?"


மிக சில கவிதைகள் மட்டுமே எழுதி இருந்தாலும் வனவை தூரிகாவின் "இந்த பாதசாரிகள் கவனத்திற்கு"  கருணை கிடைக்காத ஜீவனுக்காய் உருகுகிறது 

"கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!"இல்லாதவன் பிள்ளை என்ன செய்யும், ஏக்கங்களையும், கனவுகளையும் அறிமுகபடுத்திவிட்டு, ஏமாறுவதை இளம் பருவத்திலேயே கற்றுக்கொள்ளும் அவல நிலை ஏழை குழந்தைகளுக்கு    

"இத்துனூண்டு சைக்கிள்
பெரீய்ய பொம்மை
கத்திரிப்பூ நிற கவுன்
மொழுக்கென்று இருக்கும் பழங்கள்
கண்ணும் மனசும் விரிய விரிய கண்டதையெல்லாம்
களிபொங்க சொன்னால் செல்லமகள்
திரும்பும் வழிநெடுகிலும் வீடடைந்த பின்னும்

கைதேர்ந்த வேசியைப்போல் சிங்காரிதிருக்கும்
இக்கடைவீதியின் பண்டங்கள்
பார்த்துக்கொள்ள மட்டுமே தமக்கென்று
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது இல்லாதவன்

பிள்ளைக்கு....!!"

ராமலக்ஷ்மி எழுதிய  இந்த காட்சி கவிதை சட்டென கடந்த காலத்தை கண் முன்னே பார்வைக்கு வைத்து விடுகிறது 

யாருமற்ற பாதையில்  நெடுநிழல் துணை கொண்டு
தலையில் கோணிப்பையுடன் தளர்வாக நடந்த பெரியவர்
முகத்தில்
ஆதித் தகப்பனின் சாயல்.

"என்னத்தடா வாழறீங்க நகர வாழ்க்கையில்" என்று போட்டிலடித்தது  போல் கேட்கிறார் தாயம்மா   

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சு திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்றதில்லை

அடுக்கு பானை
அரிசி திருடி
ஆற்று சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
"i am living" என்று

காயம், வலி, உணர்வுகள் என்ற அனைத்தையும் ஒரே வரியில் வைத்தார்  ஷேசாம்

"ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல"
-


 கோவை சந்திரசேகர் ஒரு முகநூல் எழுத்தாளர், எப்போதாவது கவிதை எழுதுகிறவர், மரணம் பற்றி அவர் பார்வையில் இருந்து   


"இறந்தவர்களின் உடைமைகள்
நினைவு படுத்துகிறது
இறந்தவரின் வாழ்ந்த காலத்தை.
அவரது கொண்டாட்ட தருணங்களை,
அவரது துயரத்தின் வடுக்களை..
உளுத்த மரத்தை கரையான்கள் தின்ன,
கரையான்களை பாம்புகளும்
பாம்புகளை பருந்துகளும்
பருந்தை பசியும் கொல்வதாக..
ஒரு நெய் பந்தம் பிடித்து நடக்கும் சிறுவனை
வழியெங்கும் மலர் தூவி வரவேற்கலாம்.
இடது கையால் எள் தண்ணிர் இறைக்கும்
இடப்புறங்கையால் எண்ணெய் தடவும்
உத்திரகிரியை பத்திரிகை ஓரங்களில்
கருமை தடவும் கரங்களுக்கு
உங்கள் சமாதானத்தை தரலாம்..
இல்லை.,
ஈமச்சடங்கு முடித்து
கிழக்கு நோக்கி கும்பிடும் கரங்களுக்காக
ப்ராத்திக்கலாம்...
வேறன்ன செய்யமுடியும் உங்களால்.."