குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!
- பி.பழனிச்சாமி
கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!
பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!
வெ.கிருஷ்ணவேணி
-----------------------------------------------
நாமிருவரும் சேர்ந்து எடுத்த
புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ
உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ
நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ
எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை
- ஜெயபாஸ்கரன்
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
- ஜி.ஆர்.விஜய்
------------------------------------------------
வதை
திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்...
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெருநாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து
ஊருக்கு வெளியே
கள்ளிக்காட்டிலே
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது!
-ஜி.விஜயலெட்சுமி
----------------------------------------------
ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு
- ஜெ.முருகன்
-----------------------------------------------------
முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னாள்
அம்மா
"அடிக்காதேடா..
அது
கருப்பசாமிக்கு நேர்ந்துவிட்டது"
- பி.மணிகண்டன்
---------------------------------------------------
சொக்கத் தங்கம் நூறு பவுன்
ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என
பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்..
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்.
- தாமிரபரணி
---------------------------------------------------
தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!
- க.பாலவெங்கடேசன்
No comments:
Post a Comment