Saturday, December 17, 2016

ஆதிரை புத்தக விமர்சனம்

 சயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன்.

  1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது.

  இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில், அரசியல் பிரசாரத்தில் மட்டுமே தெரிந்த, என் போன்ற சாதாரண தமிழ்நாட்டு வாசகனுக்கு, இலங்கை தமிழர்கள் வாழ்வு பற்றிய பிம்பம் சர்வ நிச்சயமாக உடைபடும். தூக்கம் தொலைய வைக்கும் சம்பவங்கள் நிறைந்திருக்கும். நான் நிறைய இரவுகளின் கொலைக்கள சம்பவங்களால் தூக்கம் தொலைத்தேன். அதற்காக சயந்தன் எதையும் மிகைப்படுத்தவும் இல்லை, எங்கள் நிலையை பார்த்தீர்களா என்று கெஞ்சவும் இல்லை, நம்மை நேரடியாக அவ்விடங்களுக்கு கூட்டி சென்று ஒரு மௌன சாட்சியாக வேடிக்கை பார்க்க வைக்கிறார். அவரும் ஒரு இரண்டு வரி கதை பாத்திரமாக வந்து போகிறார்.

 அன்றாட வாழ்க்கை பிடியில் சிக்கி தவித்த சாதாரண மனிதர்கள், அடுத்த கட்ட வாழ்க்கையில் காலடி வைக்கும் தருணங்களில் நடந்த கொடூரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இடம் பெயர்ந்தவர்கள் என்ற  சொல்லுக்கு பின்னிருக்கும் தீராவலியை நான் எப்படி விளக்கினாலும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது, கண்டிப்பாய் கிடைத்திருக்க வேண்டிய, சாதாரண வாழ்க்கையைக் கூட பறி கொடுத்தவர்களுடைய நிம்மதியில்லா போராட்டம் அது.

மலையக தோட்ட தொழிலாளியான சிங்கமலையின் ஒற்றையடி தடம் வழியாக புறப்படும் இந்த 664 பக்கங்கள் கொண்ட நெடும் கதையின் பெரும் பகுதி, எளிய மனிதர்களின் வாழ்வு பற்றியது, இழப்புகளின் வலியை பற்றியிருந்தாலும், இன்னொரு படி ஏறத்துடிக்கும் மனித இயல்பின் தீரா தேடல்கள் தான் களம். ஆண்களை ஏதாவது ஒரு வழியில் இழந்து விட்ட தாய்களின் நெடும்போர், அவர் வார்த்தையிலேயே சொல்லவேண்டும் எனில் தமிழன்னையின் கண்ணீர் துளி.

இலங்கை தமிழ் முதல் 50, 60 பக்கங்களிலேயே பழகி விடுகிறது, ஜெயமோகனின் காடு நாவலின் மொழியை புரிந்துகொள்ள எடுத்த சிரமங்களில் இது 5 சதவீதம் கூட இல்லை.

தனிகல்லடியை, எட்டேக்கரை தவிர மற்ற இடங்களை கூகிளில் கண்டுபிடிக்க முடிகிறது. யாழ், வவுனியா போன்ற பெருநகரங்களையும்  விட அதில் வரும் பல இடங்களை (ஆனையிறவு, கேப்பாப்புலவு பாதை, வட்டுவாகல்,தர்மபுரம், ஆலங்கேணி, இலுப்பைக்கடவை, இன்னும் பல) google map மற்றும் youtube காணொளி வழியாக படித்ததில் நான் அந்த பகுதிகளில் வாழ்ந்த, நன்கு அறிந்த ஒருவனாகவே மாறிப்போனேன்.  

சாதாரண வார்த்தைகள் வழியாக வனத்தின் வேட்டையும், மலரின் ஒற்றை சைக்கிள் பயணங்களும், எட்டேக்கரில் ஒளி பாய்ச்சப்படும் டார்ச்சும், நாமகளின் உடையழகும்,  சின்னாச்சிக்காக உருவாகும் வீடு பற்றிய பிம்பங்களும், கடற்கரைகளும், போர் கலைத்து போட்ட வாழ்க்கையும், சிறுவர்கள் முன்னாள் கொல்லப்படப் போகும் வணிகனும், மயில்குஞ்சனின் வழிதவறிய காடும், இன்னும் கொஞ்சம் உணவை யாசிக்கும் கெஞ்சலும்........  நேர்த்தியான திரைபடத்தின்  ஒலிப்பதிவை கண்முன் கொண்டுவரும் அழகுடன் மிளிர்கிறது.

 500 பக்கங்களில் இருந்து ராணுவத்தினர் சோற்று பொதிகளை போடும்வரை நடக்கும் நிகழ்வுகளை நான் எப்படி விளக்கி சொன்னாலும் அது நான் உணர்ந்ததை சொல்ல இயலாது, பக்கத்துக்கு பக்கம், துப்பாக்கியால் சுட்டதில் முதுகில் ஏறிவிட்ட புல்லட்டின் மிச்சம், அந்த வலியும், வேதனையும். அதை படித்தே உணரமுடியும்.

 காதல்களில், "குடும்பத்தில் ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா" என்ற கதையிறுதி வாக்கியம் தனி கதையாகவே எழுதப்பட்டிருக்க வேண்டிய கண்ணீர் காவியம்.

 புலிகளை போற்றி பேசவும், தூற்றவும், ராணுவத்தின் நல்லது கெட்டதை அலசவும் சில பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன, அது சயந்தனின் அரசியல் நிலைப்பாட்டை தாண்டிய உண்மையான வாதங்களாக இருக்கக்கூடும்.

 நீங்கள் எந்தவிதமான வாசகராக இருந்தாலும், உங்களை இத்தனை பக்க நெடுகிலும் வழிதவறாமலும், சலிப்பை தராமலும்  கூட்டி செல்லும் இயல்பான எழுத்துக்கள் இதன் சிறப்பு. இங்கே ஈழ தமிழர்கள் பெயரால் நடந்த சில ஆதாயம் மிக்க அரசியலின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ளவாவது இதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.

 என்னிடம் குறைந்தது நான்கு பக்கங்களை தாண்டும் கதை பற்றிய எண்ணங்கள் நிரம்பி வழிகின்றன, ஆனால் அதை பற்றி எழுதினால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய கூடும் என்ற எண்ணத்தில்தான் விரிவாக எழுதவில்லை.

 அரசியல் காரணங்களோ, தனிப்பட்ட கருத்து மோதல்களோ, இலங்கை தமிழர் நிலைப்பாடுகளோ எனக்கு இதுவரை இல்லை, நான் இந்த புத்தகத்தையும் எந்த எதிர்பார்ப்பு கொண்டும் படிக்கவில்லை. ஒரு சாதாரண வாசக மனநிலையின் என் எண்ணங்களைதான் நான் எழுதி இருக்கிறேன்.  


 2009 போருக்கு பிறகு சர்வதேச அழுத்தம் காரணமாக, சாலை வசதிகளும், நவீன கட்டடங்கள் சிலவும், 4 ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளும், மக்கள் வாழ அமைதியான சூழலும் யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களில்  ஏற்பட்டிருக்கிறது என்றும், அவைகளெல்லாம் பாதுகாப்புக்கு வந்து இன்னமும் வெளியேறாத இராணுவ வீரர்களுக்காகத்தான், தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

 அப்படி இருந்தாலும் அச்சம் முழுதும் நீங்கி, அந்த மன வருத்தங்கள் குறைந்து, புலம் பெயர்ந்த மக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் நாடு திரும்பவும், வளர்ச்சி காணவும், மனித நேயம் தழைக்கவும், அந்த காயங்கள் ஆறவும் இரண்டு தலைமுறைகள் கடந்து போக வேண்டும். இனியாவது அமைதியும் நிம்மதியும் அங்கு பரவட்டும்.    

 சில பயணங்களை, சில பிரிவின் வலியை, சில பாடல்களை, சரியான தருணத்தில் வீசப்பட்ட வார்த்தைகளை, எதிர்பார்ப்பின்றி தரப்பட்ட அன்பை மனது சுமந்து கொண்டே திரியும், ஏனெனில் அவைதான் நமக்கான பொக்கிஷங்கள். அதில் இப்போது ஆதிரையும் இணைந்திருக்கிறது.
நன்றி சயந்தன். 

Thursday, November 24, 2016

இணைய விற்பனையில் Amazon ஏன் முதலிடத்தில் இருக்கிறது?

தற்போது இணையத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என  எண்ணுமளவு இணைய சந்தை வளர்ச்சி கண்டிருக்கிறது. நம்பகமான, நிறைய வலைத்தளங்கள்  இருந்தாலும், இணைய பொருட்கள் விற்பனையில்  அமேசான் எப்படி முதலிடத்தில் இருக்கிறது என பார்ப்போம்.

flipkart, ebay, snapdeal, jabong, shopclues, Myntra, Homeshop18, என்று இணைய விற்பனை வலைத்தளங்கள் மிக நீண்ட வரிசை கொண்டது.

இதில் ebayதான் இந்தியாவில் இணைய பொருட்கள் விற்க முதன் முதலாக பெரிய தொகையை முதலீடு செய்து களமிறங்கியது, ஆனால் இப்போது அது பின்னுக்கு தள்ளப்பட்டு ஏறக்குறைய காணாமல் போகும் நிலைக்கு வந்து விட்டது. உதாரணமாக ebayவில் இதுவரை மூன்று முறை பொருட்கள் வாங்கி இரண்டு முறை திருப்தி இல்லாமல் திருப்பி கொடுத்துள்ளேன், நமது பணம் நமக்கு திரும்ப கிடைக்க ஏறக்குறைய 25 நாட்களை கடத்துகிறது, replace எனும் மாற்று முறையில்  மிக மோசமான வணிகம் ebayவில் இருக்கிறது, பொருள் கிடைக்கவும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.  வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதை விட, நாம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதில் இருந்து தப்பிப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

shopclus ஓரளவு வேகமாக செயல்படுகிறது, ஆனால் பொருளின் தரத்தை நம்ப முடிவதில்லை.  flipkart, snapdeal, jabong, Myntra, Homeshop18, போன்ற தளங்களை ஒப்பிடுகையில் flipkartன் சேவை திருப்திகரமாக இருந்தாலும், டெலிவரி பெரு நகரங்களுக்கு கூட தாமதமாகவே கிடைக்கிறது.  

 நாம் இணையத்தில் பொருட்களை வாங்குவதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள், வாங்கும் இணையம் பாதுகாப்பானதா, அதில் உள்ள   பொருளின் தரம் நன்றாக உள்ளதா, அது மற்ற நிறுவனங்களை விட விலை குறைத்து தருகிறதா, திருப்தி இல்லை என்றால் திரும்ப ஒப்படைப்பதில் எளிய அணுகுமுறை உள்ளதா, replace எனப்படும் மாற்று விரைவில் கிடைக்கிறதா என்பனவே.

Amezon இதை சிறப்பாக செயல் படுத்துகிறது, அதனால் தான் இந்திய வணிக சந்தையில் முதலிடம் வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏராளமான பொருட்கள், பண பாதுகாப்பு, விரைவான டெலிவரி, எளிதான திரும்ப எடுக்கும் முறை (easy returns), வாடிக்கையாளர் சேவை, மாற்றுபொருளை விரைவில் அனுப்புதல் எனும் செவைகளால் இது முதலிடம் பிடிக்கிறது. இணைய பொருட்கள் வாங்க Amezon உகந்தது. 

Tuesday, November 22, 2016

பெயரற்றது புத்தக விமர்சனம்

பெயரற்றதை உடுமலை.காமில் வாங்கினேன். அடுத்தநாளே டெலிவரி கொடுப்பது பாராட்டத் தக்கது, 90 ரூபாய் புத்தகத்திருக்கு அதில் சரிபாதி விலையை அஞ்சலுக்கென்று வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, ஆனால் இந்த புத்தகத்திற்கு அஞ்சல் விலையும் சேர்த்து கொடுத்தாலும், அதற்க்கு சற்று அதிகமாகவே கொடுத்தாலும் தகும் என்பதால் உடுமலையை மன்னித்து விட்டேன்.  

இது இலங்கை தமிழர் வாழ்ந்த வாழ்வு பற்றிய சில சம்பவங்களின் தொகுப்பு, இதற்கு முன் "வீழ்வேனென்று நினைத்தாயோ" தொடராக படித்திருக்கிறேன், அப்போதிருந்து எனக்குள் எழுந்திருந்த பிம்பங்களை முற்றிலும் உடைத்து விட்டார் சயந்தன்.

தவறு, சரியென்றோ, நாங்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்தோம் தெரியுமா என்ற கூப்பாடோ இல்லாமல், போர் நடந்ததற்கு முன்னும், பின்னும் நடந்த நிஜமான சம்பவங்களை அழகாக தொகுத்திருக்கிறார்.

 அந்த துயரமெல்லாம், கடந்து வந்ததை சலனமில்லாமல், எழுதியது, அங்கு வாழாமல், ஒரு சாதாரண பார்வையாளன் எழுதியது போன்ற நிலையே. விடுதலை புலிகளின் தரப்பில் நிகழ்ந்த சரி, தவறுகளை, இலங்கை ராணுவம் நடந்து கொண்ட நிலையை, ஒரு சாதாரணனின் அனுபவத்தில் இருந்து காட்சி படம் பார்ப்பது போன்று தொகுத்து தந்திருக்கிறார்.

வன்னியிலும், யாழிலும் வாழ்ந்து திரும்பியது போன்ற உணர்வை தருகிறது இப்புத்தகம். சாதாரணமாக எழுதியுள்ள அந்த சம்பவங்கள், படித்து முடித்த பின் பெரும் அதிர்வை தருகிறது, எடுத்துக்காட்டாக, "தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்" எனும் சிறுகதையில் பிரதீபன் தஞ்சம் கோருவதற்காக காரணங்களை அடுக்கும் பக்கங்களும், சின்ராசு மாமா ஒரு வயது குழந்தையை கால்கள் வெட்டப்பட்டு கண்ட நிமிடங்களும், சாம்பலில் சிறகு பொசுங்கிய சிறு பறவையில் சாகீரின் வாழ்க்கை திசை மாறிய கணங்களும்,    தீராத ரணங்கள் .

பேச்சு மொழி இலங்கை தமிழில் தான் வருகிறது என்றாலும் அதை புரிந்து கொள்வதில் எந்த சிரமமும் இல்லை. இது தவிர மோட்டார் சைக்கிள் குரூப்,  மஞ்சள் கறுப்புக் கயிறுகளின் கதை, பெயரற்றது, இந்தியாகாரன், 90 சுவிஸ் பிராங்குகள் என்ற கதைகளும் உண்டு, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அதிர்வை நீங்கள் உணரலாம்.

சிறுகதை தொகுதி என்று தவறாக குறிப்பிட்டு விட்டார், சயந்தன், நிஜங்களின் தொகுப்புதானே இதெல்லாம்?

ஒரு கதையை மன்னிக்கவும், சம்பவத்தை படித்து முடித்த பின், சட்டென அடுத்ததற்கு தாவி விட முடியாது, அந்த தொகுதியின் பாதிப்பு குறைந்தது அரை மணி நேரமாவது இருக்கும், அதுதான் சயந்தனின் வெற்றி. "எப்படியாவது செத்து விட்டால் போதும்", என ஆரம்பிக்கும் சாகிரையும், அவனின் பாமினியின் நினைவுகளையும், இருபது ஆண்டுகளுக்கும் மேலான இருட்டு வாழ்க்கையையும் படித்து விட்டு அந்த இரவை என்னால் சுலபமாக கழிக்க இயலவில்லை. என்னை போல் ஆயிரக் கணக்கான என்கிற வரிகள் எல்லாம் ரத்த சரித்திரம்.        

ஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டது என்கிறார் சயந்தன், நிச்சயம் ஆறாவது நாவலும் வாங்கி விடுவேன், நீண்ட தேடலுக்கு பின் சயந்தனை ட்விட்டரில் பிடித்து நட்பு பெற்றுவிட்டேன். ஆதிரையை பரிந்துரை செய்திருக்கிறார். ஆர்டர் செய்து விட்டேன். தொலைபேசி செய்து விசாரித்ததற்கு, நாளைக்கே உங்கள் கையில் கிடைத்து விடும் என கூறி இருக்கிறார்கள்.

இலங்கை போரின் முழு ஆவண படத்திற்கு வேண்டிய அத்தனை சம்பவங்களும் இதில் நிறைந்து கிடக்கின்றன. நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டிய நாவல்.

நன்றி சயந்தன்.

சயந்தனை ட்விட்டரில் தொடர கீழ் கண்ட linkக்கை click செய்யுங்கள்
சயந்தன் 

அவரது வலைப்பூவினை வாசிக்க சயந்தன்  

Tuesday, November 15, 2016

ஒழிந்து விடுமா கருப்பு பணம்?

கருப்பு பண ஒழிப்பில் முதல் இரண்டு தினங்கள் உணர்ச்சி வசப்பட்டு மோடிஜி வாழ்க என கூவியது உண்மைதான், ஆனால் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தோமெனில், (மோடியின் தேர்தல் வாக்குறுதிகள் தான்) மண்டை காய்கிறது.
அவை என்னவென நினைவு படுத்துகிறேன்.
#மாநிலத்தின் அனைத்து குடிமக்களும் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவர்
#கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நடுத்தர வர்தக்கத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
#வரும் 5 ஆண்டுகளில் 16 லட்சம் ஹெக்டேர் பரப்பு விளைநிலமாக்கப்படும்
#விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை அரசு பகிர்ந்து கொள்ளும்
#சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான வங்கிக் கடனுக்கு அரசு உதவும்
#ராமர் கோயில் கட்டப்படும்
#எளிமையாகும் வரி நடைமுறைகள், வரி என்ற தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் கவலைகள் தீர்க்கப்படும்
#நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு
#அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்
இன்னும் நிறைய இருக்கிறது, படிக்க உங்களுக்கு பொறுமை இருக்காது, கடைசியாய் நான் நம்பி ஒட்டு போட்ட திட்டம்
#லட்சக் கணக்கான கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும்...
இதில் ஒன்றை கூட செய்யாமல், சரியான முன் ஏற்பாடு இல்லாமல், திடீரென உள்நாட்டு கருப்பு பணத்தை ஒழிக்க கிளம்பி விட்டார் மோடி... சரி சிரமங்களை கூட பொறுத்து கொள்ளலாம், 
ஆனால், காலம் காலமாய் எந்த திமிங்கலத்திற்கும் வலை வீசப்பட்டதில்லை, இது கருப்பு பண ஒழிப்பிற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது..
பொறுத்திருந்து பார்ப்போம்...
ஒன்று மட்டும் நிச்சயம்
சாதாரண குடிமகன் நாட்டின் உயர் பதவிகளை வகிக்க வேண்டுமெனில் அவனுக்கு புத்திசாலித்தனம் தேவை இல்லை, வெறும் வாய் சவடால் போதும்...
மோடியும், அமெரிக்க தேர்தல் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.

Monday, November 7, 2016

உங்களில் யாராவது ஒருவராவது நவீனின் வாழ்க்கையை வாழ்ந்தது உண்டா?

"உங்க அம்மா எப்படி செத்து போனாங்க?", என்ற கேள்விக்கு "தற்கொலை செய்துகொண்டு", என்று பதில் சொல்வதற்கு கூசி இருக்கிறேன், சிறு வயதில் இதை யாராவது கேட்டவுடன் கண்ணீர் வரும் , பின்னர் அதுவே வெறுப்பாக மாறி கடும் கோபம் கொள்ள செய்யும் கேள்வியாகவும் மாறி, கொஞ்ச காலம் திசை மாறிக்கூட மிருகமாய் இருந்திருக்கிறேன்.... அப்படி இருக்கையில் இந்தியாவின் பெரிய நோயானா எய்ட்ஸ்க்கு தன் தந்தையையும், தாயையும் பறி கொடுத்து விட்டு, தனி மனிதனாக போராடி தனக்கான வாழ்க்கையை மீட்டு, தன் தம்பிக்கும் வாழ்வளித்து விட்டான் தம்பி நவீன், எத்தனை அவமானங்களை கடந்து வந்திருக்க கூடும், என நினைக்கையிலேயே பதறுகிறது மனது. கண்ணீர் நிறைந்த தூக்கமில்லா இரவுகளை அவன் மட்டுமே அறிவான், இதை அவன் அடைய, மிக மிக நேர்மையாய் இருந்திருக்கிறான் என்பதே என் ஆச்சர்யங்களில் ஒன்று, அனைவரும் கைவிட்ட பிறகு, காசு பணம் இல்லாமல் நேர்மையாய் மட்டுமே இருப்பது என்பது, 99 சதவீதம் சாத்தியம் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால் அதை அவன் வாழ்ந்திருக்கிறான் என்பதை நினைக்கையில் பெருமை கொள்கிறேன்... இன்று அவன் திருமணம் முடிந்தது... 
என்னிடம் அவனுக்காய் சொல்ல சில வார்த்தைகள் இருக்கிறது...

"உனக்கான துயரங்கள் முடிவடைந்து விட்டது, இனி எல்லாம் சுகமே",
"நீடூழி சிறப்புடன் வாழடா, நவீன்"

Tuesday, October 25, 2016

தேவதேவன் கவிதைகள் இரண்டு

தேவதேவன்

கடவுளின் நிலைமையில் இருந்து யோசித்து எழுதியது போன்ற எளிய கவிதை போல் தெரிந்தாலும், ஆழமான அர்த்தம் கொண்டது பின் வரும் கவிதை, வேறென்ன செய்து விட முடிகிறது கடவுளால்

"காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென

உணர்ந்தார், துயர்குழப்பமிக்க

இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற

வெகுயோசனைக்குப் பின்,

கடவுள்"

பூனை கவிதை, எல்லோருக்குள்ளும் ரசிப்பு தன்மை ஆரம்பிக்கும் முதல் பார்வையே பயத்தில் இருந்து தானே தொடங்குகிறது, பால்யத்தை மீட்டெடுக்கும் நினைவு படலங்களுடனே முடிகிறது இக்கவிதை...   

"முதல் அம்சம்

அதன் மெத்தென்ற ஸ்பரிசம்

குழைவு அடிவயிற்றின்

பீதியூட்டும் உயிர் கதகதப்பு


இருவிழிகள் நட்சத்திரங்கள்

பார்க்கும் பார்வையில்

சிதறிஓடும் இருள் எலிகள்

நான்! நான்!என புலிபோல

நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்

உருளும் கோட்டமுள்ள சக்கரமென

புழுப்போல

அதன் வயிறசைதல் காணலாம்

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத

சாமர்த்திய நடை இருந்தும்

மியாவ்என்ற சுயப்பிரலாப குரலால்

தன் இரையை தானே ஓட்டிவிடும்

முட்டாள் ஜென்மம்

நூல்கண்டோடும்

திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்

விளையாடும் புத்திதான் எனினும்

பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு

எலியை குதறுகையில்

பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்

நக்கி நக்கி பாலருந்துகையில்

தெரியவரும் இளகிய நாக்கையும்

ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்

ஞாபகப்படுத்திப்பாருங்கள்

உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்

இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே


சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?"

Friday, October 21, 2016

An Occurrence at Owl Creek Bridge அட்டகாசமான குறும்படம்


An Occurrence at Owl Creek Bridge என்னும் கதையை அம்ப்ரூஸ் பியர்ஸ் என்பவர் 1891லேயே எழுதி  இருந்தார், அது பிற்பாடு குறும்படமாக எடுக்கப்பட்டு பல விருதுகளை அள்ளி குவித்தது.

செர்லாக் ஹோம்ஸ் கதைகள் எப்படி நூற்றாண்டு கடந்த பின்னும் சுவாரஸ்யம் குறையவில்லையோ அதே போல, இதுவும் மிக சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டு youtubeல் காண கிடைக்கிறது.

ஒரு துளி வசனம் கூட இல்லாமல் வெறும் காட்சி அமைப்பில் உருவான கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த கூடிய நல்ல படம். வெறும் பதினோரு நிமிடங்கள் தான் வருகிறது.

இதில் பாடல்களை இணைத்திருக்கிறார்கள்,  இசையும் பாடலும் அந்த படத்திற்க்கு இன்னும் வேகம் சேர்க்கின்றன.

கதை

ஒரு தண்டனை கைதியை, ஒரு பாலத்திற்கு கீழே அழைத்து வந்து, கை, கால்களை கட்டி, கயிறை கழுத்தில் மாட்டி தூக்கில் போட போகிறார்கள் அதிகாரிகள், அதை நிறைவேற்றும் சமயத்தில், அதிர்ஷ்ட வசமாக  அந்த கயிறு அறுந்து அவன் நீருக்குள் வீழ்கிறான், தனது கட்டுகளை அவிழ்த்து, நீருக்கு மேலே வந்து தப்ப முயல்கிறான்,   துப்பாக்கியால் சுட்டு மீண்டும் அவனை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

அம்முயற்சியிலும் அவன் தப்பி, தன் வீடு செல்கிறான். அவனுக்காக அவன் மனைவி காத்திருக்கிறான். கடைசி இரண்டு செகண்ட்கள் காட்சியமைப்பு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறது. ஏன் அத்தனை விருது அதற்க்கு கிடைத்தது என்பது பிறகு உங்களுக்கு புரியும். பட்டென முடிந்து விடும் அந்த காட்சியை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். பொறுமையாக முழுதும் பாருங்கள்.

மொக்கை தமிழ் சினிமாவை பார்பதற்க்கு பதில், இதற்கு தாராளமாக நேரம் செலவழித்து பாருங்கள், அற்புதமான திரைக்காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே உதாரணம் காட்டி இருக்கிறார்கள்.

கீழே இருக்கும் அந்த படத்தின் பெயரை click செய்து பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக இடுங்கள்.                    

An Occurrence at Owl Creek Bridge or dead mans dream

Monday, October 3, 2016

பேயை நேருக்கு நேர் சந்தித்த போது...

 திகில் கதை என்று பதட்டப்பட்டு தெறித்து விட வேண்டாம், உங்களை எந்த விதத்திலும் பயப்படுத்தாது என்ற உத்தரவாதத்துடன் தொடங்குகிறேன்.

 பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது , பொலவக்காளிபாளையம் எனும் என் சிறிய கிராமத்தில் இருந்து, கோபிசெட்டிபாளையம் சாந்தி தியேட்டரில் வீட்டிற்கு தெரியாமல் நைட் ஷோ பார்ப்பதில் எங்கள் சங்கத்துக்கு திரில் இருந்தது. அதுவும் ஜாக்கிஜான், ஜெட்லி படமென்றால் இரகசிய திட்டத்துடன், வீட்டில் ஆட்டையை போட்ட ஐந்து, பத்து பணத்துடன் ஜெட்டில் (சைக்கிள் தான்) கிளம்பி விடுவோம்.

 
படம் முடித்து ஜாக்கிஜான் போலவே ஓடி வந்து சைக்கிளில் ஏற முயன்ற என் அண்ணா ஜகதீஸ், நான் பிரேக் பிடித்தால் படாத இடத்தில் பட்டு ஒரு வாரம் மருத்தவமனையில் ஓய்வெடுத்தது, கேட்டின் வழியே செல்லாமல், வீரத்தை காட்ட வீட்டின் ஓட்டை பிரித்து அவர் இறங்கும்போது, உள்ளே இருந்த அவர் அம்மா நிஜ ஜாக்கிஜானாக மாறி அவரை பிரித்து எடுத்தது எல்லாம் எங்கள் வரலாற்று காவியங்கள்.

நிற்க,

 அதே போன்ற ஒரு இரவில் மூன்று பேர் கொண்ட குழு வீர சாகச திரைபடத்தை பார்த்து விட்டு, வித்தை செய்யும் முடிவுடன் பதினைந்து நிமிடத்தில் ஊர்க்கு வந்து சேர்ந்தோம் (7 கி மீ), வடக்காலூர் தெக்காலூர் என்ற இரு பெரும் கிளைகள்(?) எங்கள் ஊருக்கு உண்டு, மற்ற இருவரும் அதே வேகத்தில் என்னை சுடுகாட்டுக்கு பிரியும் வழியில் விட்டுவிட்டு வடக்கே பறந்து விட்டனர். நண்பர்களாம்....  நான் தெற்க்கே போக வேண்டும்  

 வீரப்பரம்பரையானாலும், சரியாக 12 மணியளவில் சுடுகாடு வழியாக வீட்டுக்கு செல்வதென்பது எந்த கைப்பிள்ளைக்கும் பெரும்சோதனை தரக்கூடியது.

வெகு வேகமாக அந்த இடத்தை சைக்கிளில் கடந்து விடுவதும், கடந்த பின் "தப்பிச்சோம்" என்ற பெருமூச்சு விடும் சாதனையை நிறையமுறை நிகழ்த்தி இருந்ததாலும், அதே போன்ற வேகத்துடன் அன்றும் செல்ல ஆரம்பித்த உடன் நேர்ந்தது சோதனை.

  சினிமா படங்களில் வரும் காட்சியை போலவே வெள்ளை புடவை கட்டி, வேகமாக தூரத்தில் ஒரு உருவம். சரியாக பிணம் எரிக்கும் இடத்தின் இடது புற சாலையில் நான். அந்த பயத்தின் உணர்வுகளை வார்த்தையாய் கொண்டு வருவது என்பது பாலா படத்தில் நடிப்பதை விட மோசமானது.

 வருவது கிளைமாக்ஸ்...

 "யார்றா அவன்" என்று என்னை சப்தம் போட்டு கேட்டது பேய், சப்த நாடியும்  ஒடுங்கி விட்டதென்று படித்திருப்பீர்கள், அனுபவித்தேன். சைக்கிளை போட்டு கீழே விழப்போன என்னை ஓடி வந்து பிடித்து விட்டது, "அடேய் பிரகாசு, இந்நேரத்துல இங்க என்னடா பண்றே" என்று பெயர் சொல்லி வேறு கூப்பிட்டது.

என்னடா நெப்(போலி)யனுக்கு வந்த சோதனை என பார்த்தால் என் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் வேலம்பாலயத்து (ஊர் பெயர்) ஆயா, அது வயதான விதவை... உயிரை கொண்டு வந்து திரும்ப கொடுத்த எல்லா சாமிகளுக்கும் நன்றி சொல்லி, "நீ என்ன பண்றே ஆயா, பன்னண்டு மணிக்கு?" என்று பாசம் பொங்கும் குரலில் கேட்டேன், "நைட் கரண்ட்டுடா, லட்சுமண் (அண்ணா)  ஊருக்கு போய்ட்டான், அதான் நானே தோட்டத்துக்கு தண்ணி எடுத்து விட மோட்டார் போட வந்தேன், (அப்போதெல்லாம் இரவு 12 மணிக்குத் தான் மின்சாரம் தருவார்கள்)   பாத்து போ" என்ற படி கடந்து போய்விட்டார்.

 அதற்கு பின் நான் எந்த பேயையும் கடவுளையும் நேருக்குநேர் இதுவரை சந்திக்கவில்லை. சந்தித்தால் இன்னொரு கட்டுரை எழுதுகிறேன்.  
 
    

Thursday, September 29, 2016

நாய் பிழைப்பு

எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை.
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை
நாயைக் கண்டதும் பயப்படுகிறேன்.
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது.
நான் அறையில் உறங்குகிறேன். நாய் தரையில் உறங்குகிறது.
நாய் கனவு காண்கிறது. நானும் கனவு காண்கிறேன்.
நாய் தேர்தலில் நிற்பதில்லை. நானும் தேர்தலில் நிற்பதில்லை.
நாய் இப்போதும் நாயாக இருக்கிறது. மனிதன் நான்
எல்லாவற்றுக்கும் நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.

-கோசின்ரா

Saturday, September 24, 2016

ஏன் மீனவர் கைதுகள்? அப்படி என்னதான் பிரச்னை?

நான்கைந்து வருடங்களுக்கு முன்பே தேனி இணைய தளம் இதை பற்றி முழுமையான கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலோட்டமாக நாம் கடந்து செல்லும் இந்த பிரச்னையின் நேரடியான களம் கடும் அதிர்ச்சிகரமானது. தொடர்ந்து படியுங்கள் .....  

மீனவர்களுக்கு மட்டுமே புரிந்த அல்லது தெரிந்த மீன்பிடி தொழில் பற்றி நிலம் சார்ந்த மக்களுக்கு தெரியாது. அதாவது இரட்டை மடி வலை, சுருக்கு வலை ஆகியவை ஒட்டுமொத்த மீனவர்களும் மீன் பிடிக்க முடியாமல் தடுக்கின்ற அல்லது அவர்களுக்கு மீன்கள் கிடைக்காமல் முழு கடலையும் அரித்து எடுக்கின்ற ஒரு தடை செய்யப்ப்பட்ட வலைகளாகும். அந்த வலைகளை சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் உலா மீனவர்கள் மட்டும் மற்ற மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ராமேஸ்வரத்திலும், நாகப்பட்டினத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கிடைகிறது. அதனால் மற்ற மீனவர்களுக்கு மீன்களே இல்லாமல் ஆகிவிடுகிறது.

இந்த தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை மீன்வளத் துறையின் ஊழல் அதிகாரிகளும், ஊழல் அரசியல்வாதிகளும் ஆதரிக்கிறார்கள். கையூட்டு வாங்கி கொள்கிறார்கள். இது விசைப்படகு மீனவர் சங்கங்களால் தொடர்ந்து எதிர்க்கப்படுகிறது. இதே தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்தி மன்னார், யாழ்ப்பாணம் வரை சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் சில ஆண்டுகளாகவே அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்ப்பை கொடுத்துள்ளார்கள்.

அது தவிர யாழ்ப்பாணம், மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் போல டிராலர்களை பயன்படுத்துவது இல்லை. அவர்கள் இன்னமும் நாட்டு படகு முறைகளையே பயன்படுத்துகிறார்கள். இப்போது அங்கே பிடிபட்டவர்கள் இரட்டை மடி வலைகளையும், ஒற்றை மடி வலைகளையும் பயன்படுத்தி டிராலர்கள் மூலம் மீன் பிடிக்க சென்றவர்கள். அங்கே வந்து மீன் பிடிப்பதை அங்குள்ள தமிழ் மீனவர்கள் எதிர்க்கவில்லை.

டிராலர்களை பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறுதான் என்றாலும்  அதைக்கூட அவரால் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பல முறை எச்சரிக்கை விடுத்தும் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவது அவர்களது வாழ்வுரிமையை பறிப்பதாக உள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் யாழ்ப்பாண கரையோரம் சென்று மீன் பிடித்துள்ளனர். அது அவர்களது அன்றாட மீன் பிடித்தலுக்கே எதிரானது.

இரட்டை மடி மற்றும் சுருக்கு வலை என்ற தடை செய்யப்ப்பட்ட வலைகளை மீன் பிடிக்க பயன்படுத்த கூடாது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் அமுலில் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஊழல் பிடித்த மீனவர் அல்லாத மீன்வளத்துறையின் அதிகாரிகள் தங்கள் பணிக்காலத்திற்குள் எவ்வளவு சுருட்டலாம் என்ற நோக்கம் கொண்டவர்கள் கை நிறைய காசை வாங்கிக்கொண்டு அத்தகைய தடை செய்யப்ப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள்.

கடல்ச் சூழலை பற்றியோ, கடலின் நீரோட்டங்கள் பற்றியோ, மீன்களின் வளர்ச்சி பற்றியோ, மீன்களை பிடிப்பதில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, மற்றும் விதிகள் பற்றியோ, வெவ்வேறு வகை மீன்களை வெவ்வேறு காலத்தில் பிடிப்பதற்கான வெவ்வேறு வகையான வலைகளை பற்றியோ எந்த அறிவும் இல்லாத அதிகாரிகள், மீன் வளத்துறையை ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல மீன்வளம் பற்றிய, மீன் பிடித்தல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத அரசியல்வாதிகளும், இந்த நாட்டில் கடற்கரை தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களாக, மற்றும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அநேக காலங்களில் கடலை பற்றிய அறிவே இல்லாத மீனவர் அல்லாத மாற்று சமூகங்களை சேர்ந்தவர்கள் அப்படிப்பட்ட அமைச்சர்களாக வந்துவிடுகிறார்கள். சிலநேரம் மீனவர் சமூகத்தை சேர்ந்த மனிதர்களே அமைச்சர்களாக வந்தாலும் அவர்கள் விவரம் தெரிந்தவர்களாக இருந்தாலும், தவறான அறிவியலுக்கு எதிரான வழிமுறைகளை கையாண்டு அதிகமான லாபத்தை சுரண்டலாம் என்ற லாப வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு நிலம் சார்ந்த முதலாளிகளுக்கு, அதாவது நிலம் சார்ந்த முதலைகளுக்கு, கடல் சார்ந்த மக்களான மீனவர்கள் என்ற கடல் சார் பழங்குடிகள் பற்றிய அறிவே இருப்பதில்லை. அறிவு இருந்தாலே அதில் எப்படி ஊழல் அதிகமாக செய்து சொத்து சேர்க்கலாம் என்ற புத்தி கொண்ட இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில், இயற்கை விதிகள் பற்றிய அறிவே இல்லாமல், சிறு மனச்சாட்சி உறுத்தல் கூட இல்லாமல் இந்த முதலைகள் தவறு செய்கின்றன. அப்படித்தான் இங்கே கடல் சார் உலகத்தை இவர்கள் கொடுமை படுத்துகிறார்கள்.

உதாரணமாக மீன் பிடித்தலில் பொதுவாக உலகம் முழுவதும் கில்நெட் வலையை பயன்படுத்துவார்கள். ஆனால் லாப வெறி பிடித்த தன்னலவாதிகள் இந்த தொழிலில் நுழைந்த பின், டிராலர் முறையை அறிமுகப்படுத்தி கொள்ளை அடிக்க தொடங்கினார்கள். இந்த டிராலர் முறை எல்லா மீனவர்களாலும் எப்போதும் எதிர்க்கப்படும் முறை. ஆனால் இன்றைய சாக்கடை அரசியலின் விளைவாக, ஊழல் பெருச்சாளிகள் அதிகாரிகளாக இருப்பதன் விளைவாக இந்த டிராலர் முறை பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை தீவில் தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் டிராலர் முறையை பயன்படுத்துவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறார்கள். கேரளாவில் கடற்கரைகளில் டிராலர் முறையை பின்பற்றுவதில்லை. அவர்கள் கில்நெட் முறையைத்தான் பின்பற்றுகிறர்கள். ஆனால் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொடங்கி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என்று எல்லா ஊர்களிலும் டிராலர் முறையை பின்பற்றி மீன் பிடிக்கிறார்கள்.

இந்த டிராலர் முறை என்பது கடலுக்குள் அடியாழம் வரை கருவி மூலம் வலையை கொண்டு சென்று, அரித்து எடுக்கும் தன்மை கொண்டது. அடுத்த மீனவனின் தேவைக்கு கிடைக்கவிடாமல் கடலை உடனடியாக காலி செய்யும் தன்மையுடையது. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களை சந்திக்க வந்திருந்த இலங்கை மீனவர்களான தமிழ் மீனவர்களும், சிங்கள மீனவர்களும் இங்குள்ள விசைப்படகு மீனவர்களுடன் இது பற்றி ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் இலங்கை மீனவர்கள் டிராலர் முறையை விட்டுவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அதன்பிறகு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் டிராலர் முறையில் இன்னும் எழுபது நாட்களுக்கு அதாவது இந்த ஆண்டிற்கு இந்த சீசன் காலத்தில் வேண்டுமானால் விடமுடியவில்லை என்பதால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் எங்கள் அதாவது இலங்கை கடற்கரைக்கு ஐந்து மைல்களுக்கு [ கடல் மைல்கள்] அப்பால் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதேநேரம் அடுத்த ஆண்டிலிருந்து இத்தகைய டிராலர் பயன்படுத்தும் முறையை கைவிட்டு விடுங்கள் என்பதே அவர்களது கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதை இங்குள்ள விசைப்படகு மீனவர் சங்கங்களும் ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திட்டனர். அதன்பிறகு சமீபத்தில் கடந்த மூன்று வாரமாக இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழ் மீனவர்களிடம் இதை நினைவு படுத்தி டிராலர் வேண்டாம் என்று அறைகூவல் விடுத்து வந்தனர். அதன்பிறகும் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊழல் மீன்வளத்துறை அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளான ஆளும் கட்சிக்காரகளின் ஒத்துழைப்பில், அமைச்சரின் பங்களிப்புடன் இந்த சட்டவிரோத மீன்பிடிக்கும் முறை தொடரத்தொடங்கியது.

அதில் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியின் மீன்வளத்துறை துணை இயக்குனர், இந்த ஆண்டுக்கான இலஞ்சத்தொகையாக இந்த சட்டவிரோத டிராலர்காரர்களிடம், ஆறு லட்சம் ரூபாயை பெற்றுள்ளார் எனச் சொல்கிறார்கள்.  அதேபோல நாகப்பட்டினம் பகுதியின் மீன்வளத்துறை அதிகாரிகள் ஐந்து கோடி ரூபாயை பெற்றுள்ளார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த பணத்தில் ஒரு பகுதி அமைச்சகம் வரை செல்வதால் அவர்களும் இவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் பிப்ரவரி பதினைந்தாம் நாள் யாழ்ப்பாணம் கடற்கரை வரை சென்று,  அதாவது அவர்கள் கேட்டுக்கொண்ட ஐந்து மைல் தூரத்திற்குள்ளும் சென்று டிராலரில் இரட்டை மடியையும், ஒற்றை மடியையும் கொண்ட வலைகளை வைத்துக்கொண்டு மீன் பிடித்த நாகப்பட்டினம் மீனவர்கள் நூற்று ஆறு பேரை அவர்களது பதினெட்டு படகுகளுடன், யாழ்ப்பாண தமிழ் மீனவர்கள் சுற்றிவளைத்துப் பிடித்து, கரைக்குக் கொண்டு சென்று,  அவர்களுக்கு நல்ல உணவுகள் வழங்கிய பின்னர், படித்துறை என்ற காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்கையில், மீனவர்களுக்கான போராட்டம் என்பதன் பேரில், கட்சிகள்  நடத்திய போராட்டம் தடை செயப்பட்ட வலைகளை பயன்படுத்துவோருக்கு ஆதரவாகவும், ஊழல் அமைச்சர்களுக்கும், ஊழல் அதிகாரிகளுக்கும் ஆதரவாகவும் இருகிறதே தவிர, உன்மையில் அப்பாவி மீனவர்கள் கடலில் இலங்கை கடற்படையால் சுடப்படுவதற்கு எதிரானதாகவோ, அத்தகைய எதிர்புப்  போராட்டங்களுக்கு ஆதரவாகவோ இருக்கவில்லை.

அப்படி அவர்கள் ஆதரவாக குரல் கொடுக்க எண்ணினால் இதுவரை கொல்லப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் 538 முதல் தகவல் அறிக்கைகளையும், அடிக்கப்பட்ட, வலைகள் அறுக்கப்பட்ட, படகுகள் உடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் இருபதேட்டேட்டாண்டு வழக்குகளையும் சேர்த்து உயர்நீதி மன்றத்தில் போட்டு, இலங்கை கடற்படை தளபதிகள் மீது கைது வாரண்டை பிறப்பிக்க செய்யட்டும் என்பதே மீனவர்களுக்கான நியாயமான கோரிக்கையாக அமையும்.

இந்த உண்மைநிலையைச் சரிவரப் புரிந்து கொள்ளாவிடின், 'மீனவர் போராட்டம்' என்ற பொதுவான தலைப்பில், இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில்,  அரசியல்வாதிகளும், அவர்களது கைகூலிகளும், மோதல்நிலையை உருவாக்கி. தங்கள் கல்லாக்களை நிரப்பிக்கொள்ளும் அபாயம் ஏற்படும். இதனால் என்றும்  இறப்பதும், இழப்பதும் மீனவர்கள் என்பதே மாறாத உண்மையாகும்.

கட்டுரையின் ஒரு பகுதியில்....
நன்றி: தேனி இணையதளம்

Thursday, September 22, 2016

அப்துல் கலாம் பற்றி வினவின் சில கேள்விகள்

அப்துல் கலாம் பற்றி வினவின் சில கேள்விகள்... அதை அப்படியே உங்கள் முன் வைக்கிறேன்...  

பொதுவாக மறைந்த பிறகு ஒருவரை போற்றியே பேச வேண்டும் எனும் எழுதப்படாத நாட்டில் வாழ்கிறோம்.தன்னலம் இல்லாதவர் நேர்மையாளர் எளிமையானவர் மிக சிறந்த அணு விஞ்ஞானி எளிய குடும்பத்தில் இருந்து முன்னேறியவர் ஜனாதிபதி மாளிகையின் தடைகளை தகர்த்தவர் இன்னும் பல பெருமைக்கும் சாதனைக்கும் உரியவர் அந்த மாமேதை என்பதில் பேதம் இல்லை …..

அறிவியல் வழிகாட்டி, இளைஞர்களின் எழுச்சி நாயகர், சிறந்த மனித நேயர், அணுசக்தி விஞ்ஞானி, அக்னியின் அரசன் என்று அப்துல் கலாம் புகழ் பாடும் அன்பு நெஞ்சங்கள், வெகு நாட்களாக நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு விளக்கம் கூறுங்களேன் ..

1. கடந்த 2002ல் குஜராத் கலவரம் என்ற பெயரில் இஸ்லாமியப் படுகொலை நடந்து முடிந்த பின், தனது இஸ்லாமிய எதிர்ப்பு முகத்தை மறைக்க அப்துல் கலாமை ஜனாதிபதியாக பாஜக முன் வைத்த போது, இந்த மனித நேயர், கருவிலிருந்த சிசுவையும் கொன்ற அக்கொலைகாரர்கள் வழங்கிய பதவியை ஏற்றுக் கொண்டது ஏன் ?.

2. தமிழகத்தில் அனைவரும் டாஸ்மாக்கிற்கு எதிராக குரல் கொடுத்த சமயத்தில், வாய் திறக்க மறந்தது ஏன்?

3. “ராமேஸ்வரம் மீனவர்களின் வீட்டில் உண்டு வளர்ந்தவன் நான்”, என்று பெருமைக்கு கூறும் இவர், சிட்டுக் குருவிகளைப் போல் இந்திய மீனவர்களை இலங்கை இராணுவப்படை சுட்டுக் கொன்ற போது ஏதாவது கருத்து சொன்னதுண்டா?.

4. இலங்கையில் சிங்கள இனவெறியர்கள் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த போது, மௌனியானதன் காரணம் என்ன ?.

5. மாணவர்கள தான் இந்தியாவின் எதிர்காலம் என்றவர், தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக ஏதாவது செய்ததுண்டா?

6. வல்லரசுக் கனவுகென ஏதாவது செயல் திட்டம், அவரது புத்தகத்திலோ அல்லது அரசின் ஆணை வழியாகவோ, அதற்கான செயல்திட்டமாக எதையேனும் வகுத்துக் கொடுத்தாரா ?.

7. கூடங்குளத்தில் மக்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சினையை முன் வைத்துப் போராடும் போது, உள் நுழைந்த 3 மணிநேரத்தில் அணு உலையை தட்டிப் பார்த்து, அணு உலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை, பாதுகாப்பானது என்று அறிக்கை விட்டவர்,  அடுத்த மாதமே அணு உலை கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன் ?.
8. யாதும் ஊரே யாவரும் கேளீர்என்று ஐ.நா வில் தமிழை பேசி விட்டு,  20 தமிழர்கள் ஆந்திர போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஏன் குரல் எழும்பவில்லை?.

9. சாய்பாபா, சங்கராச்சாரியார் போன்ற காவி கிரிமினல்களோடு நெருக்கமாக இருந்தது ஏன்?

10. பல இலட்சம் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி கேட்டபோது, அதை பற்றி பேசாமல் 2020ல் இந்தியா வள்ளரசாகும் என தப்பித்தது யாருக்காக?

11. நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது ஜப்பான் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கான திட்டம், என்பதும் அது மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தெரிந்தும், அது ஆபத்தற்றது என்று பிரச்சாரம் செய்ததன் பின்னணி?.

12. தனியார் கல்லூரிகளிலும், தனியார் பள்ளிகளிலும் போய் மாணவர்களைச் சந்திக்கிறேன் என்ற பெயரில் அந்நிறுவனங்களை பிரபலமாக்கியதைத் தவிர அங்கு சாதித்தது என்ன? அந்தக் கல்வி நிறுவனங்கள் இதனைக் காரணம் காட்டி, அதிகக் கட்டணத்தை வசூலித்துக் கொண்டது தெரியுமா?  

13. இவர் காலகட்டங்களிலோ அல்லது அதற்குப் பின்னரோ கூட இந்திய விண்வெளித்துறையும், அணுசக்தித் துறையும் ஏதேனும் ஒரு புதிய தொழிநுட்ப கண்டுபிடிப்பைச் (technological innovation) செய்ததுண்டா?

14. இந்திய மக்களின் வாழ்வை சூறையாடக் கூடியதும் இந்தியாவை
அமெரிக்காவின் நிரந்தர இராணுவ அடிமையாக்குவத்ற்குமான அணுசக்தி -123ஒப்பந்தத்திற்கு வல்லரசுக்கான தேவை என்றது நியாயமா?

15. அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிராக வாயைத் திறந்து பேசாததன் பின்னணி என்ன ? மக்களின் போராட்டங்கள் குறித்தோ, தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை குறித்தோ, மாணவர்களின் டாஸ்மாக் சீரழிவுக் கலாச்சாரம் குறித்தோ வாயைக் கூடத் திறக்காத இந்தப் புண்ணியவானுக்கு சரியாகத் தான் பெயர் வைத்திருக்கின்றனர் மக்களின் ஜனாதிபதி என்று கிரிமினல் அரசியல்வாதிகளுக்கும் “மக்களின் முதல்வர்”,  என்று பெயர் வைக்கிறார்களே அதை ஒப்பு கொள்வீர்களாஅதைப் போல தானே இதுவும்?
இங்கு சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து சம்பவங்களிலும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு இருந்தும் மவுனம் சாதித்ததால்தான் அப்துல்கலாம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்டு ஏற்கனவே மக்களின் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறார்.
மக்களின் பிரச்சினைகளுக்காக உண்மையில் களத்தில் நிற்கும் போராளிகள் அப்பிரச்சினை குறித்து உண்மையாக நடந்துகொண்டதால் தான் இதே ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டனர்.
இப்படி மக்களின் பிரச்சினைகளுக்காக போராட முன் வராதவருக்கு, அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உழலும் நாம் ஏன் அழ வேண்டும்?
பல நூறு இந்தியக் குழந்தைகள் ஊட்ட்டச் சத்துக் குறைவால் இறந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் வல்லரசுக் கனவைக் காட்டி மக்களை திசை திருப்பியவருக்குபாம்பன் கடலில் சிலையும், ரூபாய் நோட்டில் முகமும், பீச்சில் சமாதியும் தான் நிச்சயம் வேண்டுமா?.
என்ன இருந்தாலும் அவர் தனி மனித ஒழுக்கம் பூண்டவர் என்று பதில் கூறுபவர்களுக்கும், அவர் இறந்து விட்ட சூழலில் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கூறுபவர்களுக்கும் ஒரே ஒரு பதில் தான். ஹிட்லரும் தனி மனித ஒழுக்கம் பூண்டவர் தான், இறந்து விட்டார் தான்  ஹிட்லரையும் நல்லவர் என்று ஏற்றுக் கொள்வீர்களா?

வரலாற்றில் ஹிட்லர் இறந்த பிறகு அவரைப் பற்றி பேசும் போது நல்ல விசயங்களை மட்டுமே பேச வேண்டும் என்றால் இப்படியும் பேசலாம் ஹிட்லர் உணவு விசயத்தில் எந்த உயிரையும் கொன்றது கிடையாது அவ்வளவு நல்லவர் சுத்த சைவம் என்று.
அப்துல் கலாமை தலை மேல் வைத்துக் கொண்டாடும் அன்புடையீர், தயவு செய்து இக்கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன் !!!

இதை 2002 குஜராத் கலவரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டு, ஒரு நிறை மாதக் கர்ப்பிணியாய் இஸ்லாமியப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவில் இருக்கும் சிசுவை வெளியில் எடுத்து அதனை இரண்டாக வெட்டிக் கொன்ற சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு, தன் மீது விழுந்திருக்கும் இஸ்லாமிய விரோதி என்ற கறையை துடைப்பதற்காக அப்துல் கலாமை ஜனாதிபதியாக் முன்னிறுத்தினர்.

நடந்த கொடுமைகள் எல்லாம் தெரிந்த பின்னும், அந்தக் கிரிமினல் கூட்டத்தின் முகத்திரையைக் காக்க அப்பதவியை அலங்கரித்தது மட்டுமல்லாமல், அதன் பின்னர் குஜராத்திற்கு சென்று மோடியின் நிவாரணப் பணிகளையும் பாராட்டி விட்டு வந்த கொடுமையை என்னவென்று சொல்வீர்கள்?

இறந்த பின்னர் குற்றம் சொல்லக் கூடாது என்றால், வரலாற்றில் எவரைப் பற்றியுமே முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது போய்விடும் என்பதை உணர்ந்து தான் பேசுகிறீர்களா ?..

அஜ்மல் கசாப் இறந்த பிறகும் இதே ஒழுக்க நெறியை பின்பற்றினீர்களா ?.

#வினவு

Wednesday, September 21, 2016

"ஜக்கு" என்ற ஜெகதீஷ்

என் தம்பியை பற்றி முக நூல் பக்கங்களில் இருந்து மணியன்....

ஜக்கு என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெகதீஷ்... 6 மாதக்குழந்தையாய் இருந்த போது "Tetraplegia" வால் பாதிக்கப்பட்ட இந்த 24 வயது இளைஞருக்கு நம் எல்லோரைப் போலும் எழுந்து நடக்கவோ, ஓடவோ முடியாது. ஏன்? தொடர்ச்சியாய் ஒரே இடத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்கவும் முதுகெலும்பு அனுமதியாது. கழுத்துப் பட்டை துணை இன்றி கால் மணி நேரம் அமர்ந்திருக்க முடியாது.. ஆனால் எந்த ஒரு பணியையும் கண நேரத்தில் கட்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்.

"அம்ரித் சிறப்புப் பள்ளியில்" படிக்கும்போது, தான் ஒரு சிறப்பு குழந்தை இல்லை, சமுதாயம் சிறப்பிக்கப் பிறந்த குழந்தை என்ற உறுதியை ஏற்றார். தனது அங்க பல/பலகீனங்களை அறிந்த இவர், "Web Page Development , Corel Draw, Photo Shop" தொழில்நுட்பங்களை கற்று தேர்ந்து சமூகவலைத்தளங்களில் வலைத்தளங்களில் பெரும் புரட்சி செய்துவருகிறார்.

சமூக ஆர்வலர், வலைப்பதிவாளர், இணையதள வடிவமைப்பாளர் என்ற பல்வேறு பரிமாணங்களைக்கொண்ட இவர் சிறந்த வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர் போன்ற அடையாளங்களையும் கொண்டவர்.

இவர் சார்ந்திருக்கும் பரஸ்பரம், Coimbatore zonal Eye Donation Trust அமைப்பு மூலம், கண் தானத்தை ஊக்குவித்து, பலநூறு பேர் விழி கிடைக்கப்பெற்று இந்த உலகைக் காணும் வழி செய்தவர்.
Ultra Service Journey Charitable Trust, Thoorigai Charitable Trust மூலம், குருதிக் கொடை, உடல் உறுப்பு தானம், குழந்தைகள் கல்வி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்துவருகிறார்.

Enable Foundation, United Hearts Charitable Trust, Bhojanam, Sahana Charitable Trust, Pirarukku Udhavu, Kovai Aram Foundation போன்ற அமைப்புகளின் தன்னார்வலராகவும், ஆலோசகராகவும் இருந்து பசிப்பிணி, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி மேம்பாடு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்.

சமூக வலைத்தளங்களை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி, தனது சமூக வலை தொடர்புகள் மூலம், நிவாரணப் பொருட்களைத் திரட்டி, சமீபத்திய வெள்ளத்தின் போது, C4TN (Coimbatore For Tamilnadu) என்ற அமைப்பின் மூலம், 70 லாரிகள் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

நூலகம் ஒன்றை நிறுவி, கிராமக் குழந்தைகளிடம் வாசித்தலை ஊக்குவித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனைகளை வழங்கி அவர்களின் தாழ்வுமனப்பான்மையை போக்கி, அவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் அளப்பரிய பணியை செய்துவருகிறார்.

நம்மில் பெரும்பாலானோருக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கும். ஆனால், நமது ஜக்குவின் பணிகளைக் கேள்விப்பட்ட அவர், தான் ஜக்குவை சந்திக்க விரும்புவதாய் கூறி, கோவை வந்தபோது ஜக்குவை சந்தித்தார்...

சமுதாயத்திற்காகவே சதா சர்வ காலமும் சுழன்று கொண்டிருக்கும் இவரை "Unsung Hero" விருது வழங்கி, நேற்று (17/09/16) இந்திய தொழில் வர்த்தக சபை கௌரவப்படுத்தியது.

நின்னை அன்புத் தம்பியெனக் கொளல் ஆனந்தமடா ஜக்கு!!!

சக்கரம் சுழலட்டும்!!!

முக்கியமான இணைய தமிழ் பத்திரிக்கைகள்

இணையத்தில் நிறைய தமிழ் பத்திரிக்கைகள் படிக்க கிடைக்கின்றன, இது போல பலர் தொகுத்து கொடுத்திருந்தாலும் ஏறக்குறைய தமிழின் அனைத்து பத்திரிக்கைகளின் இணைய பக்கங்களை தொகுத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவே இந்த முயற்சி. விடுபட்ட முக்கிய பத்திரிக்கைகளை தெரியப்படுத்தினால் இணைத்து கொள்ள வசதியாக இருக்கும். பத்திரிக்கைகளின் வலைத்தளம் செல்ல அந்த பெயரின் மேல் click செய்யுங்கள்

பிரபல நாளிதழ்கள் 


பிரபல வார/மாத  இதழ்கள் 


இணைய இதழ்கள் 



Saturday, September 17, 2016

நகைக்கடைக்காரர்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் நமக்கு லாபமா?


நீங்கள் எந்த ஒரு நகைக்கடைக்கு போய் ஏதாவது ஒரு நகையோ, நாணயமோ, அல்லது பழைய நகையை சரி செய்யவோ போனாலும் அந்த நகைக்கடை ஊழியர் உங்களிடம் கண்டிப்பாக நகை சேமிக்கும் திட்டம் பற்றி விளக்கி அதில் இணையுமாறு கேட்டு கொள்வார். அனேகமாக பெரும்பாலான மக்கள் மாதம் மாதம் பணம் செலுத்தி வரவும் கூடும்.

 இந்த நகைத்திட்டம் லாபம் கொடுக்கிறதா?  இது உண்மையில் நமக்கானது தானா? இதைப் பற்றி மத்திய அரசு என்ன கூறுகிறது?
  மத்திய அரசு கடும் விதிகளை இதற்காக விதித்துள்ளது, காரணம் இதில் பொது மக்கள் அதிகமாக ஏமாற்ற படும் வாய்ப்பு இருக்கிறது என்பதாலும், ஏமாற்ற பட்டு விட்டார்கள் என்பதாலும்.

முதலில் இதை பொதுமக்களுக்கான திட்டம் என்பதையே மறுக்கிறது, இதை நகைக்கடைகாரர்களின் முதலீடாகவே பார்க்கும் அரசு, "கணக்கு வழக்கில்லாமல் மக்களை இதில் சேர்க்க கூடாது, கடையின் முதலீட்டில் அல்லது மொத்த சொத்தில் குறிப்பிட்ட சதவீதமே வாடிக்கையாளர்களை சேர்க்கலாம், அதுவும் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே"  என்கிறது.

 என்னதான் நம்மிடம் ஆசை வார்த்தை காட்டினாலும், இது முழுக்க கடைக்காரர்களின் நலனுக்கான முதலீட்டு திட்டமே, அரசு இந்த கெடுபிடிகளை விதித்ததன் காரணம், பல கோடி லட்சம் பணம் இதில் புரள்கிறது, அதாவது பல கோடி சேர்ந்த பிறகு விலை குறைவாக மொத்தமாக நகை வாங்கி விற்பனை செய்வதே இதன் மூலம். இதில் ஏமாற்று அதிகமாகி புகார் வருகிறது, எல்லோரும் ஏமாற்ற வாய்ப்பில்லை எனினும், தங்க நகை மேல் இருக்கும் மோகம் காரணமாக மக்களிடம் இதில் நாற்பது சதவிகிதம் அளவுக்கு திருட்டு நடக்கிறது.

 இதில் தங்க நாணயமோ, அல்லது கட்டிகளோ வாங்க இயலாது, எக்காரணம்  கொண்டும் பணம் திருப்பி தரப்பட மாட்டது, கட்ட தவறும் போது அதற்க்கு உண்டான நகையை சலுகைகளுடன் பெற இயலாது. அந்நாளைய ரூபாயில் நகை கிடைக்கும், நகையாக மட்டுமே வாங்க இயலும் என்பது இவர்கள்  சொல்லும் விதிமுறைகள்.

யோசித்து பாருங்கள், நாம் எப்போதாவது செய்கூலி சேதாரம் என கணக்கிட படும் தொகையில் திருப்தியாக நகை வாங்கி இருக்கிறோமா? பவுன் சுமாராக  21000 எனில் அதை ஏதேதோ கணக்கிட்டு 30000 வரை நம் தலையில் கட்டுகிறார்கள் தானே?  நம் பணத்தை பெரும் முதலீடாக்கி, அதில் நகை வாங்கி, நம்மிடம் சில நூறு இருநூறு கவர்ச்சி பொருட்களை தருவதாக ஆசை காட்டி, செய்கூலியிலோ சேதாரத்திலோ கொஞ்சம் தள்ளுபடி தந்து அவர்கள் நகையையும் விற்பனை செய்து இன்னொரு புதிய விற்பனை கட்டிடம் திறந்து விடுகிறார்கள். அவர்கள் உயர்வதற்க்கு தானே நம் பணம்?

நகை பெரும் முதலீட்டு பொருள் தான் அதை நீங்கள் தங்க காசாகவோ, கட்டியாகவோ வாங்கும் வரை, இதை நீங்கள் எப்படிப்பட்ட நகை வாங்கினாலும் கடைக்காரர்களுக்கு இலாபமே. அதுவுமில்லாமல் உங்களுக்கு பிடிக்காத டிசைன் இருந்தால் வேறு கடைகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லை, அதில் ஏதோ ஒன்றை தான் வாங்க வேண்டும். ஆர்டர் எனில் ஒரு மாதம் இரண்டு மாதம் இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு.

நகைக்கடை ஊழியர்கள் சம்பளம், acயும், கட்டிட வாடகையும், அல்லது சொந்த கட்டடங்களுக்கு emiயும், பராமரிப்பு செலவுகளும், அதையும் தாண்டி இலாபமும் தானே முதல் இலாக்காக எல்லா தனியார்  நிறுவனத்திருக்கும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே அவர்கள் தொடர்ந்து நடத்த இயலும், இன்நிறுவனங்கள் நமக்கு தங்களது சொந்த காசை செலவிடும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? தவிர அவர்கள் ஒன்றும் சமூக சேவை செய்ய வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  

நடுத்தர வர்க்க சகோதரிகள் கவனிக்க வேண்டியவைகள்

தங்கத்தின் விலையை கடந்த காலத்தின் ஏற்ற இறக்கங்களை வைத்து உற்று நோக்கினால் கணிக்க முடியும்.

ஆசை வார்த்தைகளை நம்பி இதில் முதலீடு செய்யாதீர்கள்.

நியாயமான வட்டி விகிதத்தை வங்கிகள் உங்களுக்கு தருகின்றன, அதில் முதலீடு செய்து விட்டோ, மாதம் மாதம் சேமிப்பு திட்டங்களிலோ பணம் சேர்த்து, தங்கம் விலை குறைகையில் வாங்கி கொள்ளுங்கள்.

அல்லது பணம் இருக்கும் போது ஒன்றிரண்டு  தங்க காசாக வாங்கி சேர்ப்பது முழு புத்திசாலித்தனம்.

இம்முதலீட்டு திட்டங்களில் சேர்பவர்கள் இதிலுள்ள அரசின் கட்டுப்பாடுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.          

 உடனடியாக இணையுமாறு வற்புறுத்தி, கவர்ச்சிகர பரிசு கொடுக்கும்    நிறுவனங்களை புறக்கணியுங்கள்.

நமக்கான லாபம் என்ன எனபதை திட்ட வட்டமாக அறிந்து கொள்ளுங்கள்,
முக்கியமாக பக்கத்துக்கு வீட்டுக்காரர் முதலீடு செய்கிறார் என நீங்களும் விழாதீர்கள்.  
தங்கத்தை முதலீடு செய்யும் பொருளாக பாருங்கள், வெற்று ஆசைகளும்,  ஏமாற்றமும் இருக்காதது.

பிரபுவோ, சத்யராஜோ ஏன் அமிதாப் பச்சனோ அந்தந்த கடைகளில் நகை வாங்கி விட்டு சந்தோசமாக பேட்டி கொடுக்கவில்லை என்பதையும், அவர்கள் காசு வாங்கி நடிக்கும் வெறும் நடிகர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள், ஒரு நாளில் நூறு முறை ஒளிபரப்பாகும் அவ்விளம்பரங்களின் தொகையை உங்களிடம் இருந்து தான் ஏதாவது ஒரு வழியில் பெற முடியும் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.


Friday, September 16, 2016

காவிரி ஆறும்,அதை கொலை செய்த நாமும்

இந்த புகைப்படம் காவிரி டெல்டாவின் மையப்பகுதி பிரதான சாலையில் எடுக்கப்பட்டது.  தஞ்சையை தாண்டிய பின் இந்த காவிரி புதர்மண்டி, சாக்கடை கலந்து, கழிவுநீர் வர, வெங்காயத்தாமரை சூழ, பாலிதீன் குப்பைகள் நிறைந்து கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் இருக்கிறது.

மக்கள் இதை பார்த்தும்சாதாரணமாக கடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் விளைகிற நெல்லின் அளவு 18ஆயிரம்டன். இதில் 13ஆயிரம் டன் காவிரி பாயும் பூமியான 7மாவட்டங்களில் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.  இப்பொன்விளையும் பூமிக்கு உயிர் தரும் ஆறுதான் காவிரி. நம் மக்கள் காவிரி ஆற்றையோ, ஆற்று நீரையோ பாதுகாக்க சிறு பங்களிப்பை கூட நிகழ்த்தவில்லை என்பதன் பெரும் வேதனை.

இந்த புகைப்படம்விவசாயத்தை நம்பி வாழ்கிற, அதை உண்ணும் பொருளாக வாழ்க்கை ஆதாரமாக மாற்றுகிற பூமியில் ஆறு சீரழிந்து கிடப்பது வரலாற்றின் மிகமோசமான துயரம்.  ஆற்றுசமவெளி பகுதியால், அவ்விடங்களில்   செழிப்பாக வாழ்ந்தது நம் கலாச்சாரம், எல்லா வளமும் தந்த அதே ஆற்றை சாக்கடையாக்கி, அதன் சாவுக்கும் வழி வகிக்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை நீரை பாதுகாத்து தேவைகேற்ப பயன்படுத்த வழிவகை செய்யவே.

காமராஜருக்கு பிறகு தமிழகத்தில் எந்த அணையும் கட்டப்படவில்லை என்பதும், அதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பதும் உங்களுக்கு தெரியுமா? நெடும் துயரம் என்னவெனில் கட்டிய அணைகளை கூட பராமரிக்கவில்லை. ஆறு,குளம், ஏரிகண்மாய், வாய்க்கால் என எவையும் சரியாக தூர்வாரப்படவில்லை.  காவிரி ஆற்றில் இருந்து பயன்படுத்தாமல் கடலில் கலக்கும் நீரின் அளவு 155TMC.  நாம் கர்நாடாகாவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் நீரின் அளவு 142TMC.  தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்திருந்தாலே முப்போகம் விளையும் பூமியாக இருந்திருக்கும். 

சென்னையில் வெள்ளம் வந்த பொழுது ஏற்றப்பட்ட பேரிழப்பிற்கு முக்கிய காரணம் ஆறு, குளங்கள்,ஏரிகள் தூர்வாரப்படாததே என்பது யாவரும் அறிந்ததே. நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் நாம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆறுகளை பாதுகாப்பதில் உள்ள  பெரிய நன்மையை நாம் வளரும் தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க தவறிவிட்டோம். 

கர்நாடகம் நிச்சயம் தண்ணீர் தந்தே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் தரும் நீரை நாம் தலையிலா தூக்கிவரமுடியும்? காற்று கலப்படமாகிவிட்டால் எப்படி சுவாசிப்பது சிரமமோ, அது போல் நீர் கலப்படமாகிவிட்டாலும் விஷமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இனியாவது ஆறுகளை பாதுகாக்கவேண்டும்.


இது அடுத்த தலைமுறைக்கு, நாம் செய்தே தீர வேண்டிய அடிப்படை சூத்திரம்.

@Rajarocketrocky from twitlonger