Thursday, November 12, 2020

பவாவின் மேய்ப்பர்கள்

 பவாவின் மேய்ப்பர்கள் முடித்திருக்கிறேன், "வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? எப்படி வாழணும்ன்னு தெரியுமா? " என என்னை கைப்பிடித்து கூட்டிப் போய் அவர் சுட்டிக் காட்டுகிற மனிதர்கள் முன் கூசிப் போய் நிற்கிறேன். காற்றுக்காய் பாடும் இசைக் கலைஞனுக்காக தானாய் வழியுது கண்ணீர், தனிமையில் எப்போதோ வரும் ரயிலுக்காக தனிமையில் புத்தகங்களுடன் தவம் கிடந்தவர் பிரமிக்க வைக்கிறார். நாடகமென்றால் என்னவென்றே தெரியாத என் தலைமுறைக்கு நாடகங்களுக்காக அனைத்தையும் உதறியவரை வியப்போடு பார்க்கிறேன், ஒரு ஓவியத்தை தானே உருவாக்கி அதில் நெக்குருகி தெய்வ தன்மையை காணும் மனிதரும் இருக்கிறார். வாழ்க்கையில் எல்லா புயல்களையும் சந்தித்தும் ஓயாமல், அன்பு என் பெயரல்ல, இனி அதுவே வாழ்வு என வேகமாக செயல்புரிகிறார் வீரப்பன் காடுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர். ஆளுமைகள் என அறியப்படுபவர்களின் முன் கம்பீரமாகவும், அவர்களை மதிக்காமலும், சோற்றுக்கு அமர்ந்திருப்பவர்கள் முன்னே தாழ்ந்தும் போகிற மனிதனல்லவா பெருங் கலைஞன்? "பொருளாதார வளம் மயிருக்கு சமானம்" என்று புறந்தள்ளி எளிய மனிதர்களின் நட்புக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக போராடும் அற மனிதர்கள் கதையில் முக்கால்வாசி நிரம்புகின்றனர்.

நீங்கள் எங்கோ இருந்து என்னை அன்பெனும் பெருங்கருணையால் தீண்டுகிறீர்கள் பவா, அதற்கு என்னிடம் தகுதியில்லை என தெரிந்தும்.
"மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை"
புத்தகத்தின் கடைசி அறிவுரைக்கு நன்றி, படிக்கிறேன் பவா, இந்த ஜென்ம இறுதி வரை.