Showing posts with label என் பயணங்கள். Show all posts
Showing posts with label என் பயணங்கள். Show all posts

Wednesday, February 10, 2021

கர்நாடக சுற்றுலா பகுதி 2

 அடுத்ததாக நாங்கள் சென்றது ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான சாமுண்டீஸ்வரி கோவில், நஞ்சுண்டேஸ்வரா கோவிலில் இருந்து கிட்டதட்ட 30 கிலோமீட்டர், மைசூர் விமான நிலையத்தை செல்லும் வழியில் காணலாம். நாங்கள் செல்லும்போது விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததால் சுற்று வழியில் அனுப்பிவிட்டார்கள், கூகுள் மேப் உதவியுடன் சென்றும்  காடு மேடுகள் கடந்து முக்கால் மணி நேரத்தில் போய் சேரவேண்டிய கோவிலுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமானது. 

 இங்கே கொண்டாடப்படும் உலக புகழ் பெற்ற தசரா பாண்டிகை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம், வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்து கலந்துகொள்வார்கள், நீங்கள் வாகனத்தில் மலை மீதி ஏறி செல்லவேண்டும், பார்க்கிங் வசதிகள் நவீன முறையில், திரையரங்கள் கொண்ட மால்களில் இருப்பது போலவே அமைத்திருக்கிறார்கள், கட்டணம் மணிக்கு இவ்வளவு என கொள்ளையடிக்காமல் இருப்பது ஆறுதல், சுத்தமான கழிப்பறை வசதிகளும் இங்கிருக்கின்றன. 

கீழ்காணும் புகைப்படத்தில் பாருங்கள் கோபுர உயரமும் அதன் அழகும்


 



முழுவதும் கற்கள் கொண்டு அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார்கள், உயரங்களில் உள்ள சிற்பங்களை பார்க்க பார்க்க வியப்பும் ஆச்சர்யமும் மிஞ்சுகிறது. வேலைப்பாடுகள் கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றன. கோவில் உள்ளேயும் வெளியேயும் வெள்ளி கவசமிட்ட சிற்பங்கள் பேரழகு தருகின்றன. மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் என்ற மஹாராஜா மற்றும் அவரது மனைவியர் சிலைகள் கூட கோவிலுக்குள் இருக்கின்றன.இதன் கோபுரத்தில் எட்டு தங்க கலசங்கள் உள்ளதாம். 
உள்ளே நமது ஊர் கோவில்கள் போல கையில் தராமல் கட்டியில் வெள்ளைவெளேரென திருநீறு வைத்திருக்கிறார்கள், வழிபடும்  அனைவரும் தானே எடுத்து கொள்ளவேண்டியதுதான். இந்த கோவில் மைசூரில் இருந்து எந்த பக்கம் பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பு.  விஜயதசமியன்று கேரளா போல யானைகள் வரிசையாக வர, சுமார் 750 கிலோ எடை கொண்ட தங்க கோபுரத்தில்  தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி கோலாகலமாக வருவாராம். அந்த தினத்தன்று அடிவாரத்திலிருந்து கூட்டம் நிரம்பி வழியுமாம்.  இங்கேயும் நாம் சர்வசாதாரணமாக தமிழ் பேசலாம், புரிந்து கொண்டு பதிலளிக்கிறார்கள். கோவிலுக்கு உள்ளேயே டோக்கன் போட்டு நூறு ரூபாய்க்கு ஆறு லட்டு என மீடியம் சைஸில் தருகிறார்கள். அங்கே கொடுக்கப்படும் லட்டு சுவையாக இருக்கிறது, அதுதான் அங்கே ஸ்பெஷல்  

வெளியே வந்தால் ஏதாவது பொருளை கையில் வைத்துக்கொண்டு வாங்க சொல்லி நச்சரிக்கிறார்கள். விலையெல்லாம் பேரம் பேசி வாங்கலாம்,  வேகவைத்த சோளக்கருது சாப்பிடுவதற்கு கற்களை எடுத்து சாப்பிடலாம் அவ்வளவு மோசம், உப்பு மிளகாயில் ஊறவைத்த நெல்லிக்காய் சிறப்பாக இருக்கிறது. நமது பங்காளிகளான குரங்குகள் தொந்தரவும் உண்டு, எனது மைத்துனியின் கையிலிந்த ஸ்வீட் கார்னை மொத்தமாக வழிப்பறி செய்து ஆட்டையை போட்டது ஒரு குரங்கு. 

அதன் பின் பதினைந்தடி உயரமுள்ள நந்தி ஹில்ஸ் சென்றோம். 


இது இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்த ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலை, உள்ளே குகைக்குள் உருவாக்கப்பட்ட  குறுகிய  வடிவில் சிரமப்பட்டு உள்ளே சென்றால் சுமார் நூறு பேர் நிற்கக்கூடிய கட்டுமானத்தில் வழிபட சிவன் கோவில் உண்டு. கோவிலை விட்டு வெளியே வந்தால் பாதி மைசூர் நகரம் தெரிகிறது, அதில் மிக சிறப்பான பார்வை காட்சிக்கு ரேஸ் கோர்ஸ் எனப்படும் விளையாட்டு மைதானம் கண்ணை கவர்கிறது. 

இந்த பகுதியோடு கோவில்களுக்கு முற்றும் கொடுத்துவிடுகிறேன், அடுத்தடுத்த பகுதிகளில் அரண்மனை, பிருந்தாவன் கார்டன் போன்ற பொழுது போக்கு சுவாரஸ்யங்களுக்கும், சினிமா பாணியில் இருக்கும் குவாரி அனுபவங்களுக்கும், தாளவாடி  வனப்பகுதி நிகழ்ச்சிகளுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். தயாராகுங்கள்


 


Tuesday, February 9, 2021

கர்நாடக சுற்றுலா - பகுதி 1

 சனியன்று கோவையிலிருந்து நான் எனது மனைவி மகன் என மூன்று பேரும் அதிகாலை 3 மணிக்கு கிளம்புவதாக தான் திட்டம், இருவருக்கும் வேலை நீண்டுவிட்டதால் கிளம்ப 5 மணியாயிற்று. கர்நாடக  நஞ்சன்கூடு பகுதியில் உள்ள நஞ்சுண்டீஸ்வரர் கோவிலை தரிசிப்பது முதல் திட்டம். எனது தம்பி ஒருவன் புதிதாக திருமணம் முடித்து நஞ்சன்கூடு பகுதிக்கு அருகிலேயே பந்திப்பூர் சாலையில் எரிக்கட்டி என்ற ஊரில் வீடு வாங்கி கட்டி, அங்கேயே விவசாயம் செய்கிறான், தவிர டிப்பர் லாரிகளும் வைத்திருக்கிறான், அவனையும் கோவிலுக்கு வரச்சொல்லி மைசூர் சுற்றிபார்ப்பதே எங்கள் திட்டம். பவானிசாகர் பண்ணாரி வழியாக திம்பத்தை அடையும்போது மணி ஏழாகி விட்டது, எனது ஓனர் வேறு மலை பயணம் என்றாலே வாந்தி எடுக்கும் ஜீவன் வேறு, திம்பத்தில் எலுமிச்சையெல்லாம் வாங்கி கொடுத்து அமைதி படுத்தவேண்டியதாயிற்று.

 திம்பத்தில் செக் போஸ்ட் ஒட்டியே ஒரு பலகார கடை இருக்கும், அங்கே முறுக்கு, தட்டுவடை போன்ற சிறுதீனிகள் மிக சுவையாக இருக்கும், வாங்கிக்கொள்ளலாம், குளிர் ஊடுருவும் அங்கே டீ சாப்பிடுவது தனி சுகம். கூகுள் எனும் கடவுள் உதவியுடன் நீங்கள் உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் யாரை கேட்காமலும் பயணம் செய்யலாமல்லவா? குறிப்பாக கேரளாவில் வழி கேட்டீர்கள் எனில் சுற்றுலாவே வேண்டாம், நீங்கள் வந்த வழியே திரும்பி போய் விடலாம், அதனால்தான் கூகிள் மேப் அட்டகாசமான வழிகாட்டி என்கிறேன்.

திம்பம் தாண்டியதும் நாங்கள் கொண்டாட்டத்திற்காக அடிக்கடி செல்லும் ஹாசனூர் வருகிறது, ஆண்களின் கொண்டாட்ட ஸ்தலமான, இதை பற்றி நான் முன்பே விலாவரியாக எழுதிவிட்டதால் ஹாசனுர் , அதை தாண்டியதும் தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியான சுற்றிலும் காடுள்ள பகுதியில் கூட்டமாக மேயும் மான்களை எப்போதும் காணலாம், காட்டு பன்றிகள் வேறு அங்கங்கே சிங்கிளாக சுற்றி திரியும். மான்கள் கூட்டத்தை ரசித்துவிட்டு சிறிது தூரம் கடக்கையில், முன்பெல்லாம் திருமணமான பேச்சுலர்ஸ் நாங்கள் ஹாசனூர் செல்லும் போது மணிக்கணக்கில் காத்திருக்கையில் பார்க்க முடியாத  புலி சலீரென்று காரின் முன்புறம் தாவி ஓடிற்று. எங்கள் குடும்பத்துக்கே இன்ப அதிர்ச்சி, எனது மகன் சப்தமாகவே "புலிப்பாபாபாபாபாபா" என்றான். வாழ்வில் முதல்முதலாக டிவியில் பார்த்து வந்த மிருகத்தை நேரடியாகவே பார்த்த அனுபவம் அவனுடையது. இனி எவ்வளவு முறை அந்த இடத்தை கடந்தாலும் அவனுக்கு எப்போதும் அது நினைவில் தங்கும்.

தமிழக சாலைகள் எவ்வளவு அற்புதமானவை என நீங்கள் கர்நாடக எல்லையை தொட்டாலே தெரியும். நான் கடந்த இருபது ஆண்டுகளாக அந்த சாலையில் சென்றிருக்கிறேன், அவ்வளவு கேவலமான சாலை அது. எட்டு கிலோமீட்டரை கடப்பதற்கு குறைந்தது முக்கால் மணி நேரமாகும். மூன்றடி குழிகளெல்லாம் சாலையில் சர்வ சாதாரணமாக பல்லிளிக்கிறது, பத்து கிலோமீட்டருக்கு மேல் வண்டியை ஓட்டவே முடியாது. கிளட்ச் அழுத்தியே கால்களில் பாரம் சுமப்பதுபோல வலி வந்துவிடும். பயணத்தில் மிக மோசமான அனுபவம் இதுதான்.

கர்நாடக எல்லைக்குள் தமிழ்நாட்டு பகுதியான தாளவாடி இருப்பதும் இங்கேதான். தலைமலை என்றொரு பகுதி இங்குள்ளது, அதன் அபாயங்கள் அற்புதங்கள் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.

நஞ்சன்கூடு வரை உள்ள கர்நாடக பகுதிக்குள் நீங்கள் கடைகள், உணவகங்கள், பொருட்கள் வாங்குமிடங்கள் என எங்கேயும் தமிழ் பேசலாம், அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், தவிர ஏராளமான தமிழ் மக்கள் அங்கே தோட்டம் பிடித்தோ, வாங்கியோ விவசாயம் செய்கிறார்கள். எளிதில் தாங்கள் வசிக்கும் பகுதியில் புகழ் பெற்று விடுகிறார்கள். (தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு) எனது அக்கா குடும்பம் நஞ்சன்கூடில் தான் வசிக்கிறது. நமது அரசியலில் காழ்ப்புணர்ச்சியில் கன்னடர்கள் விரோதியாக தெரியலாம், ஆனால் பழகினால் உயிரையே கொடுக்குமளவு நல்ல மனிதர்கள், அவ்வப்போது மட்டும் அக்கா வீட்டிற்கு சென்று வரும் எனது அப்பாவிற்கு கன்னடம் மட்டுமே பேச தெரிந்த  நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு, இத்தனைக்கும் என் அப்பாவிற்கு சுத்தமாக கன்னடமும், அவர் நண்பர்களுக்கு தமிழும் தெரியாது.

கோவையில் இருந்து நான்கரை மணி நேரத்தில் (around 200 km)  நஞ்சன்கூடு, நஞ்சுண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். மிக பழமையான கோவிலான இதை, திப்பு சுல்தான் இங்குள்ள மரகத லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் என்கிறது வரலாறு. அழகான கட்டிட கலை, மிக பழைமையான வலுவான கல் தூண்கள், உயரமான கோபுரம் என கண்கொள்ளாதபடி நிறைகிறது இந்த கட்டிட கலையின் அற்புதம். கோவில் வெளியே பெரிய சிவன் சிலை ஒன்றை கவரும்படி வண்ணமயமாக அமைத்திருக்கிறார்கள்.

(கோவில் உட்புறத்தில் இருந்து, நான், என் செல்ல புதல்வன் என் தம்பி

புதிதாக திருமணமான என் தம்பியும் அவனது ஓனரும் அங்கே எங்களுக்காக காத்திருந்தார்கள், பயணம் அதன் பின் களை கட்டியது, என் மனைவிக்கும் மகனுக்கும் தோழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, எனக்கோ புது டிரைவர் அமைத்து விட்ட ஆனந்தம். ராம் பிரசாத் எனும் உணவகத்திற்கு எனது தம்பி கூட்டி சென்றான், இதற்கு முன்பு ஒரு உணவகத்தில் சாப்பிட்ட மோசமான அனுபவத்தோடு அதை சகித்து கொள்ளலாம் என சென்றால் உணவு வகைகள் தரமான சுவையாக இருந்தது. நமது அன்புபவன் ஆனந்த பவன் போல பார்வைக்கு உயர்தரம் கொடுக்கும், விலையும் குறைவாகவே இருந்தது. அந்த உணவகத்தை தேடி சென்று தாராளமாக சாப்பிடலாம்



வெளியே வருகையில் பக்கத்தில் மிக சுத்தமாக, அழகாக இருந்த ஒரு கடையை  ஏதோ உயர் ரக பேக்கரி என நினைத்து பார்த்தால் மது விற்பனை கடை. தனியார் வசமிருக்கிறது, கூட்டமும் ஒன்றும் அதிகமில்லை, குடிகார வாடிக்கையாளர்களால் எந்த பஞ்சாயத்தும் இல்லாத இடமாம். பொறாமைகள். காசு கொடுத்து குடிக்கும் குடிகாரர்களை வாடிக்கையாளர்களாக மதிக்கும் இடமாக இருக்கிறது. தவிர பேராச்சர்யங்களில் ஒன்று ஒவ்வொரு பிராண்டிற்கும் அதன் விலை, மற்றும் விளம்பரம் தரமாக இருக்கிறது. அதாவது விற்பனை போட்டி விளம்பரங்கள் கடையில் வைத்திருக்கிறார்கள். 


நாற்றம் சூழ சகிக்க முடியாத இடங்களில், கூச்சலும் சண்டையாக, அதிகமாக விலை வைத்தும், போலி மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் நமது தமிழ்நாட்டை நினைத்தால் அவமானமாகத்தான் இருக்கிறது.


உணவு உண்டு முடித்ததும் புராதனமான பாலமாக அறிவித்துள்ள நஞ்சன்கூடு பாலத்தை பார்த்தோம். 1735ல் கட்டப்பட்ட இது ரயில் மற்றும் இதர வாகனங்கள் அருகருகே செல்லும்படி இருக்கிறது 



எழுதியது கொஞ்சம், இன்னும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன
தொடரும்….

Tuesday, July 21, 2020

மூணார் சுற்றுலா


  1. மூணாரை விவரிக்க சொர்க்கம் என்று வார்த்தை நிஜமாகவே போதாது. கோவையில் இருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் உடுமலைப்பேட்டை வழியாக மூணாரை அடைந்து விடலாம். ஆனால் ஜூன் ஜூலையில் மழை பெய்வதால் உருவாகும் குட்டி குட்டி அருவிகளை நின்று ரசித்து கொண்டே போனால் ஏழு எட்டு மணிநேரம் கூட போதாது.
  2. உடுமலை செக் போஸ்ட் காரை திறந்து வைத்திருந்தால் யோசிக்காமல் உள்ளே நுழைந்து தின்பது கிடைத்தால் ஆட்டையை போட நமது பங்காளிகளாக குரங்குகள் தேடுவார்கள், எனது காரில் சறுக்கி விளையாடிய குரங்கு வழுக்கிக்கொண்டு வந்த போது கீச் என்று வந்த சப்தம் இன்னமும் நினைவிருக்கிறது.
  3. உடுமலை தாண்டி செக் போஸ்ட், அன்பின் தமிழ்காவலர்கள் மூன்றுமுறை சோதனை என்ற பெயரில் ஒவ்வொன்றிலும் 30ரூபாய் வாங்கிக்கொண்டு எதையும் சோதனை செய்யாமல் கேரளாவிற்குள் விடுவார்கள். கேரள செக் போஸ்டில் காசு கொடுத்தால் காறி உமிழ்ந்து வாகனத்தை முழு சோதனையிட்டு பிளாஸ்டிக் அகற்றி அனுமதிப்பார்கள்
  4. உள்ளே நுழைய ஆரம்பிக்க வேண்டியதுதான்.  அதன்பின் சாலை ஒற்றை ரோடும் மழையும் இருப்பதால் மிக பாதுகாப்பாக ஓட்ட வேண்டியது அவசியம்.
  5. முதல்நாளுக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே எடுத்து செல்வது பழக்கம். நல்ல உணவென்பது மூணாரில் கிடைக்கும்,
  6. வழியில் மற்ற உணவகங்கள் மிக மோசமாக இருக்கிறது. பிரட் ஆம்லெட் நம்பி உண்ணலாம்  நாங்கள் கொண்டு சென்ற உணவை அருவியில் கால் நனைத்துக்கொண்டே சாப்பிட்டது அழகான அனுபவம்.
  7. அடுத்தது லேக்கம் என்ற சிறிய அருவி வருகிறது. ஒரு மணி நேரம் சிறுவர்கள் மற்றும் நாம் நீரில் விளையாடலாம். பக்கத்தில் சிறிய கடைகள் இருக்கும், டீ காப்பி கூட சாப்பிட தகுதியில்லாதவை. ரிஸ்க் வேண்டாம்.
  8. அடுத்தது இரவிகுளம் பார்க்கை தவறவிடாதீர்கள், டிக்கெட் வாங்கி விட்டால், அவர்களே வனத்திற்குள் அழைத்து செல்வார்கள், வெகு உயரத்தில் இருந்து அருவி பேருந்தின் மேல் விழும் அழகு கண் நிறையும். படபட வென நீர் பேருந்தின் மேலும் நம் மேலும் அடிக்கும்போது நம் குழந்தை பருவம் திரும்பும்
  9. 97 கி.மீ. பூங்கா, அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடம். நீலக்குறிஞ்சிகள் ஆண்டு முழுவதும் பூத்திருக்கும். அழிந்து வரும் அரிய வகை உயிரினமான வரையாடு இங்கே காணலாம்.
  10. மூணாறுல நாங்க ஒரு நெஸ்ட்ன்னு ஒரு பட்ஜெட்  ரிசார்ட்ல தங்கிருந்தோம், இது மூணார் சிட்டில இல்ல, ஏழு எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது 
  11. அப்போ எனக்கு அங்கே தங்க Gift Card, make my trip30% offer + break fast complimentary. Room and food is OK. ஆனா அதோட பால்கனி வியூ செம்ம சூப்பர்
  12. அப்புறம் Tour Placeன்னு சொன்னாவே நான் ஜெர்க் ஆகிடுவேன், அதெல்லாம் பயணிக்கு செட்டாகாதுங்கிற மனநிலைதான். இருந்தாலும் இதெல்லாம் நல்லாவே இருக்கும். மற்ற Tour இடமெல்லாம் கோவாலு (Google) கிட்ட கேளுங்க
  13. Top Point மிஸ் பண்ணிடாதீங்க, காலையிலேயே போய்டுங்க, மேகம் காலுக்கு கீழே இருக்கும். கண்டீப்பா பார்க்க வேண்டிய இடம்.
  14. பொதுவா கேரளால எனக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா, சுத்தம். சின்ன பேப்பர் கீழ கிடந்தாலும் உடனே சுத்தம் பண்ணிடறாங்க, இயற்கையை அழகா வச்சிக்கிறாங்க, பாதுகாக்கறாங்க...
  15. வேதனை என்னென்னா நம்ம ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா வன பாதுகாப்பு, பராமரிப்பு கூட்டம் எதுக்கு இருக்குன்னே...
  16. அவ்ளோதான் டீ முடிஞ்சு போச்சு...
  17. நன்றி வணக்கம் 

 
 
 
 
 
 




Monday, May 28, 2018

மீனவ நண்பர்கள்

எனது மச்சினன் செந்தில் வீட்டிற்கு சென்னை சென்ற போது, பழவேற்காடு பகுதியிலிருந்து மீனவர்கள் செல்லும் படகு வழியாக சென்றால் தனித்தீவுகள் இருப்பதாகவும், அது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் எனக்கூறி எங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்தார்.

அவர் வீடான பெருங்குடியில் இருந்து, கிட்டத்தட்ட எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் அது மீனவர்கள் வாழும் பகுதி எனவும் முன்னுரை தந்தார். எனக்கு சென்னை மனிதர்கள் மீதும், மீனவர்கள் மீதும் கரடுமுரடானவர்கள், மரியாதை தெரியாத பேச்சுக்கு சொந்தக்காரர்கள் என்ற பொது புத்தி இருந்தது. அதன் யோசிப்பிலேதான் அங்கே சென்றேன். நாங்கள் குடும்பமாக சென்று கொண்டிருந்தோம் இரண்டு குழந்தைகள் வேறு. அங்கிருந்த மாதா கோவிலை நெருங்கிய போது சுற்றிலும் மீன் வாசனை, குடிசைகளும் சிறு வீடுகளும் அடங்கிய பகுதி, லுங்கி கட்டிக்கொண்டு பீடி பிடித்தபடி "இன்னா" என்ற மனிதர்கள் வரவேற்றார்கள்.

பரசுராம் என்பவரை தேடி அங்கே போனோம், அவர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று விட்டதால், அவரின் மருமகன் தினேஷ் எங்களை வரவேற்றார். அவர் ஏனோ சற்று பரபரப்பாகவே இருந்த போதிலும், பார்த்த முதல் வார்த்தையே "துன்னாச்சா" என்றார். கையில் சாப்பாடு எடுத்து வந்திருக்கிறோம் என்று சொன்னதும், "பரவால்ல நம்ம ஊட்டுல பிரியாணி துன்ணுட்டு போலாம் சார்" என்று வற்புறுத்தினார்.
"பரவாலைங்க, போயிட்டு வந்து பாத்துக்கலாம்" என்று தப்பித்து சென்று படகு இருக்கும் இடம் கேட்டோம். அவர் தனது மாமா என்று ஒரு வயதானவரை அறிமுகம் செய்து வைத்து அவருடன் அனுப்பி வைத்தார், படகில் ஏறிய சிறிது நேரத்திலேயே என்ன மாயம் செய்தாரோ அந்த முதியவர் எங்கள் குழந்தைகள் அவரிடம் ஒட்டி கொண்டன.  சிரித்து விளையாடியபடியே சென்ற அந்த பயணம் வெகு நிறைவு, மாசு படறா மேகமும், குப்பைகள் இல்லா கரையும் சுத்தமான பகுதியும் எங்களை  ஆச்சரியத்திலும் பேரழகிலும் ஆழ்த்தின.

பயணம் முடித்து திரும்பி கரைக்கு வரும்போது எனக்கு ஏனோ அந்த பெரியவரின் மேல் இனம் புரியா ஈர்ப்பு இருந்தது. "நீங்களும் மீன் தான் பிடிக்கறீங்களா?" என்று கேட்டதற்கு "இல்ல தங்கம், நான் தினேஷ் தங்கச்சி கண்ணாலத்து வந்தேன் அவனுக்கு நெறையா வேல கெடக்கு அதான் ஹெல்ப் பண்றேன்" என்றார். எல்லோரையும் "தங்கம்" என்றே அழைத்தார்.

"எப்போ கண்ணாலம்?" என்று அவர் பாஷைக்கே மாற முயற்சித்தேன். "இன்னம் ஒரு வாரம் இருக்கு" ஒரு வாரத்திற்கு முன்பே சொந்தங்கள் வந்து தங்கி கல்யாண வேலைகளை பகிர்ந்து இயன்ற வரை பண உதவி செய்து திருமணத்தை சிறப்பித்து விட்டு செல்வார்களாம்.

 "நான் தினேஷ் வீட்டுக்கு வரலாமா?" என்று கேட்ட உடனே "வா தங்கம்" என்று கை பற்றி அழைத்து சென்றார். இவ்வளவு வாஞ்சையான கை பற்றுதலை என் பாட்டிக்கு பிறகு இவரிடம் தான் உணர்ந்தேன்

சுற்றிலும் மீன் வாசம் கமழ, "கொட்டு கலி கொட்டு நாயனம் கேட்குது" என்ற
மைக் செட் பாடலுடன் அமர்க்கள பட்டு கொண்டிருந்தது ஒரு வீடு. தினேஷ் வாழை மரம் கட்டி கொண்டிருந்தவர் எங்களை பார்த்து ஓடி வந்தார்.
"கிளம்பறோம் என்று சொல்ல வந்தோம்" என்றேன், "இன்னா சார் நீ? லேடீஸ் வந்துருக்காங்க வீட்டுக்கு வாங்க, என்று ஒரு குழந்தையை அழைத்து "மேகா, ரெண்டு அக்காவையும் கூட்டிட்டு போய் கால் கழுவ வையி" என்றார், நாங்கள் தயங்க "அட போ தங்கச்சி" என்று அருகில் இருந்த வீட்டிற்குள் செல்ல வைத்தார். பின்னர் எங்களை பார்த்து "நமக்கென்ன சார், எங்க வேனா மூத்திரம் போவோம், லேடீஸ் என்ன பண்ணுவாங்க, இன்னும் ரெண்டு மணி நேரமாகும் நீங்க வீட்டுக்கு போக" என்றார். அதற்குள் எனக்கும் செந்திலுக்கு காபி வந்து சேர்ந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும், "வீடு சின்னதா இருந்தாலும் எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? சாப்பிட சொல்லி ஒரே வற்புறுத்தல், இப்போ தான் சாப்பிட்டோம்னு சொன்ன உடனே வீட்டுக்கு வந்திருக்கே ஸ்வீட் சாப்பிடாம போக கூடாது"ன்னு சாப்பிட வச்சு அனுப்பினாங்க என்றார்கள்.

மிக எளிய வாழ்க்கை வாழ்கிற, மனதில் ஈரம் கொண்ட, யாரென்றே தெரியாமல் வரவேற்கிற, ரோட்டில் யாராவது அடிபட்டால் உடனே முதலில் ஓடிப்போய் தூக்குகிற உண்மையான மனிதர்களையே  என் வாழ்வில் இப்போதுதான் சந்திக்கிறேன். அடுத்தமுறை நான்கு நாள் தினேஷ் வீட்டில் தங்க அனுமதி கேட்டிருக்கிறேன். "ஒரு போன் பண்ணிட்டு எப்ப வேனா வா, நான் இருந்தாலும் இல்லான்னாலும் நம்மாளுங்க இருப்பாங்க, ஜாலியா இருந்துட்டு போலாம்" என்றார். அங்கே போய் இரண்டு நாட்களாவது தங்கிவிட்டு தினேஷையும், பெரியவரையும் நான்கு நாட்களுக்கு என் வீட்டிற்கு இழுத்து வந்துவிட வேண்டும் என்பது எனது அடுத்த பயண திட்டம்

Friday, May 4, 2018

முதல் விமான பயணம் -சில டிப்ஸ்

கொஞ்சம் விமான பயணங்களை கடந்து விட்டவன் என்ற முறையில் முதல் விமான பயணம் போகும் ஆசை உள்ளவர்களுக்கான சிறிய வழி காட்டல் இது. (அடிக்கடி விமானத்தில் பறப்பவர்கள் படித்து விட்டு கீழே ஆலோசனை சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டு...)
பதினைந்து நாட்களுக்கு முன்னதாக புக் செய்தால் கூட ஆயிரத்து ஐநூறுக்குள் தமிழ்நாட்டின் உள்விமான போக்குவரத்தோ (சென்னை -கோவை போல), பெங்களூருவோ நீங்கள் தாராளமாக சென்று வரலாம்.
எல்லா விமான நிறுவனங்களும் (Economic flights) தங்களுக்கு பயணிகள் சேரும் வரை offer கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கூகுளே (Search: Google flights)  அதன் விலை விபரங்களை தேதி வாரியாக வெளியிடும். எனவே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளுங்கள். இறக்கைகள் மறைக்காத கீழே பார்க்கும் வண்ணம் சீட்டை தேர்ந்தெடுங்கள்.

உங்கள் விமானம் புறப்படும் நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்பே விமான நிலையத்தை அடைந்து விடுங்கள். உள்நாட்டு விமான பயணத்தில் நீங்கள் ஏதாவது ஒரு அரசு ஆதார சான்றிதழை வைத்திருந்தால் போதுமானது (லைசென்ஸ், வோட்டர் ஐடி, ஆதார்)  உங்களுக்கான பயண சீட்டையோ, மொபைலில் உள்ள டிக்கெட்டையோ முன்னால் நின்றிருக்கும் காவல் பாதுகாவலரிடம்  காண்பித்து விமான நிலையத்திற்குள் நுழையுங்கள்.

நீங்கள் எவ்வளவு கிலோ வரை பொருட்கள் கொண்டு செல்லலாம் என்பதை நீங்கள் செல்ல வேண்டிய விமான பயண குறிப்பில் சோதனை செய்து கொள்ளுங்கள். Hand luggage எனப்படும் கைபையில் ஏறக்குறைய பதினைந்து கிலோ வரை அனுமதி இருக்க கூடும். கத்தி, ப்ளேடு, கூர்மையான ஊசிகள், வாசனை திரவியங்கள் போன்ற தடை செய்த பொருட்கள் எவை என்ற குறிப்பை படித்து விட்டு அவற்றை எடுத்து செல்வதை தவிருங்கள்

விமான சீட்டு பாதுகாப்பு முடிந்ததும் உங்களை கைப்பை சோதனை நடக்கும், அதை சோதித்த பின் நேராக நீங்கள் செல்ல வேண்டிய விமானத்தின் அலுவலகம் இருக்கும் பகுதியை கேட்டு தெரிந்து கொண்டு (அழகான பெண்கள் இருப்பார்கள்) அவர்களிடம் போர்டிங் பாஸ் பெற வேண்டும். அங்கேயே உங்கள் விமானம் எந்த வாசலுக்கு வரும், நீங்கள் எங்கு சென்று காத்திருக்க வேண்டும் என்ற தகவலை கூறுவார்கள். விமான நிலையத்தின் காத்திருப்பு அறைக்கு முன் மீண்டும் ஒரு சோதனை நடக்கும்.

உங்கள் பர்ஸ், போன், சாவி, மற்ற எதுவாக இருந்தாலும் கைப்பையில் வைத்து சோதனைக்கு அனுப்ப வேண்டும், இல்லை எனினும் பிளாஸ்டிக் தட்டு வைத்திருப்பார்கள் அதில் வைக்கவும். உங்களது போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட்டை மட்டும் கையில் வைத்திருங்கள், அதை சரி பார்த்த பின் கையை விரிக்க சொல்லி சோதனை நடத்துவார்கள். அதன் பின் நீங்கள் காத்திருப்பு அறைக்குள் சென்று உங்களது விமானத்திருக்காக காத்திருக்க வேண்டியது தான்

காத்திருப்பு பகுதியில் உங்கள் விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும் வரிசையில் சென்று போர்டிங் பாஸ் கொடுத்து அவைகளை சரி பார்த்த பின் உங்களை விமானத்தின் அருகில் அழைத்து செல்ல ஒரு பஸ் நின்றிருக்கும்.
அல்லது ஒரு சில தளங்களில் நேரடியாகவே செயற்கை படிகள் வைத்து விமானத்திற்குள் செல்லும் அமைப்பு இருக்கும்.

விமானத்தில் ஏறியதும் சிரித்தபடி வரவேற்க விமான பணிப்பெண்கள் இருப்பார்கள், Air India, spicejet  போன்றவற்றில் ஆண்களும் இருந்து கடுப்படிப்பார்கள். இருக்கைகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு போகாதீர்கள், உயர்தர பஸ் இருக்கையை போன்றே இருக்கும். ஏனெனில் அது ஏர்பஸ் தானே?   
 விமானத்தில் ஏறியதும் மொபைலை ஆப் செய்தோ அல்லது Airplane மோடிலோ வைக்க சொல்வார்கள் சீட் பெல்ட் போட சொல்லி அறிவுறுத்துவார்கள்.  விமானம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு மணி நேரத்தில் அடையும் என்று கூறினால் ஏற இறங்க மட்டுமே அதில் பாதி நேரத்தை எடுத்து கொள்ளும் பறக்கும் நேரம் அதில் பாதி மட்டுமே.

அவ்வளவுதான்...
சென்று அனுபவித்து விட்டு பின்னூட்டம் இடுங்கள்

Monday, April 9, 2018

வெள்ளிங்கிரி பயணம்

இயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் (அதிலும் இது மிகவும் ஸ்பெஷல்) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் சென்றிருக்கிறேன். நடந்தும் திருப்பதி, சபரிமலை (காலில் அடி பட்டு தையல் பிரித்த ஒரு வாரத்திலேயே), கர்நாடகாவில் ராஜ்குமார் பங்களா அமைத்திருக்கும் மலைப் பகுதி, கரளயம் எனும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி என அலைந்திருக்கிறேன்.

கடந்த வாரம் வெள்ளிங்கிரி போகலாம் என முடிவெடுத்து மூன்று பேருடன் தொடங்கியது எங்கள் பயணம், அதிலும் என் மாமன் மகன் கிருபா பத்து மாத கர்ப்பிணி போன்றே தொப்பை வைத்திருப்பவன். "நானா? வெள்ளியங்கிரியா? என்ன விளையாடுறியா?" என்றவனை "உடம்புல என்னடா இருக்கு? மனசு பலம் போதும்டா" என வர வைத்தேன். இன்னொருவன் சஞ்சீவ் பக்கத்துக்கு வீட்டு தம்பி. அவன் இதற்கு முன்பு நான்கு முறை ஏறி இருப்பதால் அவனை வரவைத்தேன்.

இரவு ஏழு மணிக்கே மலை ஏற ஆரம்பித்தோம். முதல் மலை முழுவதும் படிகள், சில உடைந்திருக்கின்றன, 1600 படிகள் என வழியில் ஒருவர் தகவல் தந்து உதவினார். முதல் மலையில் உடலில் இருக்கும் மொத்த தண்ணீரும் வெளிவந்து விடுமளவு நன்றாக வியர்க்கும்,  பொறுமையாகவே ஏறினோம், ஒன்றில் நாங்கள் தெளிவாக இருந்தோம், "இந்த மலை எப்போது முடியும் அடுத்த மலை எப்போது ஆரம்பிக்கும்" என்றெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொரு படியும் அனுபவித்தே ஏறுவது என்று.
அந்த எண்ணம் இறங்கும் வரை கை கொடுத்தது.

அதற்கு முன் மலை ஏற்றத்தின் போது என்ன தேவை என்பதையும் சொல்லி விடுகிறேன். மாற்று துணி ஒரு செட், ஒரு நல்ல டார்ச், இரண்டு பாக்கெட் ஆரஞ்சு மிட்டாய்கள் (நா வறலாமல் காக்கும்), க்ளுகோஸ் ஒரு பாக்கெட், ஜெர்கின், போர்த்திக்கொள்ள ஒரு போர்வை, இரண்டு லிட்டர் தண்ணீர், சப்பாத்தி அல்லது அதிகம் எண்ணெய் இல்லாத உணவு, உலர் தீனி (திராட்சை போன்று) மலை அடிவாரத்தில் விற்கும் ஊன்றுகோல்.

முதல்மலையின் முடிவில் இருக்கிறது வெள்ளி விநாயகர் கோவில். கல்லும் முள்ளுமாக கிடந்த இந்த மலையை சீராக்கி படிகள் செய்ய உதவியவர் ஒட்டர் என்ற சித்தராம். அங்கே இரு புறமும் கடைகள் இருக்கின்றன, தர்பூசணி பீஸாக தருகிறார்கள், குளிர் பானங்களை விட அவை எடுத்துக்கொள்ளுங்கள், குளிர்பானங்கள் தாகத்தை அதிக படுத்தும்.

அங்கே பதினைந்து நிமிட நேர ஓய்வுக்கு பின் இரண்டாவது மலைக்கு ஏற ஆரம்பித்தோம், மின்சார வசதியில்லாத, சிதிலமடைந்த படிகளின் வழியே நிலவொளியில் மரங்களின் ஊடே காற்றின் தாலாட்டில் நடப்பது சுகம்.

இரண்டாவது மலை கொஞ்சம் படிக்கட்டுகள் கொஞ்சம் வன பாதைகள் என இருக்கிறது, அதன் முடிவில் பாம்பாட்டி சுனை வரும், அங்கே ஒரு சிறிய மூங்கில் வழியாக நீர் பிடித்து கொள்ளலாம், மலை வழியே வரும் அந்த மூலிகை தண்ணீர் நல்ல சுவை கொண்டது, தண்ணீர் தான் உங்களின் உயிர் தோழன், முடிந்த வரை நாக்கை நனைத்து கொள்ள உபயோக படுத்துங்கள், ஒரு மலைக்கு இரண்டு  ஆரஞ்சு மிட்டாயை உபயோகப் படுத்துங்கள்  ஐம்பது ரூபாய்க்கு ஒரு தண்ணீர் லிட்டர் விற்கிறார்கள், மலை ஏற்றத்தில் சுமந்து வருபவர்களுக்கு கூலி கொடுத்து, போலீஸ்காரர்களுக்கு (நாங்கள் கீழே இறங்கி வரும்போது கடமை மிக்க காவல் அலுவலர் கடைக்கு 300 வாங்கி கொண்டிருந்தார்)  லஞ்சம் கொடுத்து கடை வாடகையும் கொடுத்து பிழைப்பு நடத்த வேண்டுமே என கடைக்காரர் ஒருவர் புலம்பினார்.

 பாறைகளுக்கு நடுவில் படிக்கட்டுகள் செதுக்கி பாதை அமைத்திருக்கிறார்கள், வழுக்குப் பாறை என்று பெயர், சிறிது கவனத்துடன் கடக்க வேண்டிய பகுதி, இது போன்ற இடங்களிலே தான் மூன்றாவது காலான மூங்கில் குச்சி அருமையாக செயல்படும். முன்பெல்லாம் கயிறு கட்டி கடந்த இந்த பகுதியை சீராக்கி இப்போது பாதை அமைத்து தந்திருக்கிறார்கள்.

 மூன்றாவது மலை முடிவிலும் நீர் பிடிக்க இடம் உண்டு, அதன் பெயர் கைதட்டி சுனை. அதிலிருந்து குளிர் உங்களை வரவேற்று தழுவிக்கொள்ளும்.
இடையிடையே கடைகள் இருக்கும், மோர் அல்லது தர்பூசணி அல்லது மூலிகை சூப் கிடைக்கிறது, விலை ஒரு மடங்கு அதிகமாக இருக்கும், இருந்தாலும் அங்கெல்லாம் விலையை பற்றி யோசிக்காமல் வாங்குவது புத்திசாலித்தனம். பஜ்ஜி போண்டாவெல்லாம் விற்பார்கள், கீழே சென்று எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் அங்கே வேண்டாம், மலை ஏறுதலின் ஸ்பீட் ப்ரேக்கர்கள் அவை.

அடுத்ததாக வெள்ளை ஜிப்ஸம் மண் நிறைந்த மலையை விபூதிமலை என்று அலைகிறார்கள், திருநீறு போன்றே இருப்பதால் அதை குடைந்து எடுத்து செல்லும் முட்டாள் தனத்தை நீங்களும் செய்ய வேண்டாம், சிவ தரிசம் முடிந்த உடனேயே அங்கேயே விபூதி பொட்டணம் தருவார்கள்.

இங்கெல்லாம் குளிர் காற்றில் தாலாட்டை நன்கு உணர முடியும், வியர்வை வழிய நடக்கும் உடலுக்கு அது தரும் இதம் சுகம்.

காத்தாதி திட்டு எனப்படும் ஐந்தாவது மலை ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அங்கேயே ஒரு கடை அருகில் கையில் கொண்டு போயிருந்த புளி, தயிர் சாதத்தை முடித்து விட்டு, இரண்டு மணி நேரமாவது தூங்கி விட்டு செல்லலாம் என படுத்துகொண்டோம். ஜெர்கின் போர்வை தாண்டியும் குளிர் ஊடுருவுகிறது, இரண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு பக்கத்துக்கு கடையில் சுக்கு காபி கிடைத்தது, அவ்வளவு குளிரிலும் அத்தனை சூடான காபி வரம். கொதிக்க கொதிக்க ஊதி ஆனந்தமாக அனுபவித்து சாப்பிட்ட அதன் சுவை வாழ்நாள் முழுவதும் மறக்காது.

ஆறாவது மலையை காஞ்சி மாநதி என்றும், ஆண்டி சுனை என்றும் அழைக்கிறார்கள், அதிலிருந்து கீழே இறங்கி போக வேண்டும். நான்கு காலால் இறங்கும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் உண்டு.
 நாங்கள் கீழே சென்ற போது நீர் வரத்து குறைவாக இருந்ததால் குளிக்க முடியவில்லை.

அதிலிருந்து ஏழாவது மலை உச்சியில் பரமன் அருகில் நெருக்கும் நேரம் ஆரம்பிக்கிறது. சிறிது தூரம் கடக்கையிலேயே கடவுளைக் காண பக்தர்கள் காத்திருக்கும் கூட்டம் தெரிய ஆரம்பிக்கும். ஏழாவது மலை சற்றே சோதித்தாலும், காணும் இடமெல்லாம் மேகம் உரசும் நிறைவும், இயற்கையின் கண் கொள்ளா பேரழகும் வாரி அணைத்துக்கொள்ளும். சிவன் அருகில் நெருங்க நெருங்க பரவசம் தொற்றிக்கொள்ளும், உச்சியில் வேல்கள் சூழ நடை பாதை அமைத்து வரிசையில் பரமனை காண நிற்க வேண்டியது தான்.

அழுவதெல்லாம் அவமான சின்னமாக நினைக்கும் எனக்கு சிவனை பார்த்த உடனே ஏனோ கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது, நிச்சயம் அதில் துக்கமில்லை, பரவசமா, ஆனந்தமா, உச்ச நன்றி உணர்ச்சியா சொல்ல தெரியவில்லை.

சிவனை தரிசித்து விட்டு வந்து அமர்ந்தீர்கள் எனில் அட்டகாசமான சூரிய உதயம் பார்க்கலாம், அதையெல்லாம் எவ்வளவு எழுத்துக்கள் போட்டு எழுதினாலும் நிரப்பவே முடியாது. சோலை சூழ பனிக்காற்று உடல் மீது பரவ, ஆனந்தம் நிரம்பி வழிய, சூரியன் தன் கிரகணத்தை விரிக்கும் நேரம் சொர்க்கம். அந்த அழகின் மயக்கம் தீர மூன்று மணி நேரம் ஆனது.

நீங்கள் ஆத்திகரோ, நாத்திகரோ, இந்துவோ, வேறு மதத்தினரோ அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, உங்கள் உடலையும், மனதையும் வலுப்படுத்த, இயற்கையின் முழு வீச்சை அனுபவிக்க ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டதுபோல் பெருமை சொல்ல நிச்சயம் ஒரு முறை வெள்ளியங்கிரி சென்று வாருங்கள்... என் வாழ்நாளில் நான் சென்ற பயணங்களில் மிக சிறப்பான பயணம் என இதைத்தான் கூறுவேன்.

பின் குறிப்பு: எனது மாமன் மகன் கடைசி மலை இறங்கும் பொழுது மிகவுமே சிரமப்பட்டான், மிக மிக மெதுவாக இறங்கினால் போதும் என்றே வந்தோம்... அதிசயம் என்னவெனில் என்னை விட சீக்கிரமாக அவன் இறங்கி விட்டான்.
காலையில் போன் செய்து "என்ன நடந்தாலும் வருடாவருடம் இந்த அற்புதமான பேரழகை தவற விடக்கூடாது, இனி உடல் எடையை குறைத்து விட வேண்டியதுதான்" என தீர்மானமாக சொன்னான்.

சில அறிவுரைகள்:
தயவு செய்து பிளாஸ்டிக் குப்பைகளை, தண்ணீர் பாட்டில்களை போட கடைகளிலேயே ஒரு சாக்கு வைத்திருக்கிறார்கள், அதிலேயே போடுங்கள்.

நடைபாதை நடப்பதற்கு மட்டுமே. மனிதன் என்ற பெயரில் ஒரு சில மிருகங்கள் அதை கழிப்பறையாக உபயோகப் படுத்துகின்றன. அந்த ஆபாச செயலை தயவு செய்து செய்ய வேண்டாம்.

சக மனிதர்களிடம் சண்டை போடும் இடமோ, கெத்துக் காட்டும் இடமோ அதுவல்ல என உணருங்கள்.

 முடிந்தவரை மலை ஏற சிரமப்படும் மனிதர்களுக்கு ஆறுதலாக இருங்கள், என் மாமன் மகன் அதில் சிறப்பு நானே ஏறுறேன் உங்களுக்கு என்ன பாஸ் என குறைந்தது முப்பது பேரிடமாவது சொல்லி உந்துதல் தந்தான்.

கூடுதல் தகவல்கள் :
1) பிப்ரவரி மாத தொடக்கத்தில் (1ம் தேதி)  இருந்து மே மாத இறுதி வரை (30) மட்டுமே செல்ல அனுமதி உண்டு. மற்ற மாதங்களில் வெள்ளிங்கிரி செல்ல இயலாது.

2) ஆண்களுக்கு வயது வரம்பு கிடையாது, பெண்கள் எனில் 13 வயதிற்கு கீழும் 45 வயதிற்கு மேலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கீழ்கண்ட லிங்கில் இந்த மலையை பற்றி முழு தகவலும் ஆங்கிலத்தில் உள்ளது படித்து பயன்பெறுக
https://tamilnadu-favtourism.blogspot.com/2015/10/velliangiri-mountains-coimbatore.html

-நன்றி

Wednesday, March 28, 2018

ஹாசனூர் கோடை வாஸ்தலம்

கொங்கு மண்டலத்தை சேர்ந்த நண்பர்கள் ஒருநாள் பொழுதுபோக்கு வேண்டும் எனில் தாராளமாக ஹாசனூரை தேர்ந்தெடுக்கலாம். (குடும்ப குத்து விளக்குகள், பெண்ணிய போராளிகள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் உங்களுக்கு உபயோகமாக எதுவும் இல்லை, நண்பன் மேல் அக்கறை உள்ள நல்ல பெண்கள் மட்டும் தொடரவும் )

27 மிக குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலை பண்ணாரி வன சோதனை சாவடியிலிலிருந்து ஆரம்பமாகிறது. (லஞ்சமா லாரிக்கு இருநூறு ரூபா வாங்கறாங்க, "சாப்பாட்டுக்கு பதிலா வேறு ஏதாவது சாப்பிடலாமே போலீஸ்கார்"ன்னு கூட திட்டினேன், வேகமா அங்கிருந்த சாவடிக்குள்ள புகுந்துட்டார் ஒரு போலீஸ்)

 மிக கவனமாக மலை ஏறுங்கள், முக்கியமாக டேங்கர் லாரிகள் நிறைய போகும் பாதை அது, நூறு மீட்டர் இடைவெளி விட்டே தொடருங்கள், அவர்கள் கொண்டை ஊசி வளைவுகளில் பின்னால் வந்தே திருப்ப முடிகிறது .

காலையில் நேரத்திலேயே பயணத்தை தொடங்கி விடுவது உத்தமம், ஏனெனில் மான்கள், மயில்கள், முயல்கள், உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் கரடி, யானை மற்றும் ஆளை கொல்லும் சிறுத்தை புலிகளைக் கூட காணலாம். நாங்கள் நிறைய மான்களும், மயில்களும், காட்டு பன்றிகளும், ஒரே ஒரு கரடியையும் பார்த்தோம். (கார் பைக் இரண்டும் ஏற்றது)
 திம்பம் மலையில் பாதி தூரம் ஏறும்போதே மெல்லிய குளிர் உங்களை தழுவிக் கொள்ளும்... கொண்டை ஊசி வளைவுகள் முடிந்த பிறகு வனப்பகுதி சோதனை சாவடி அலுவலகம் தாண்டி ஒரு சிறிய கடையில் சுடசுட சிறு பலகாரங்கள் செய்து தருகிறார்கள். நல்ல ருசியும் கூட... (அங்கேயே டச்சர்கள் வாங்கி கொள்க)

தலைக்கு ஐநூறு வீதம் அறை எடுத்து தங்கும் வசதி ஹாசனூர் முழுவதும் நிறைந்து கிடக்கிறது. KAS என்னும் விடுதியில்  நீச்சல் குளம் வெகு சிறப்பு, தேவையான அளவு தண்ணீர் நிரப்பி தருகிறார்கள். அறைகளும் தேறுகிறது.
 சாப்பாடு நன்றாக சமைக்க வரும் எனில் நாட்டு கோழியை வாங்கி காரில் வைத்துக்கொண்டு அங்கு சென்று சமைக்கலாம், சமையலறை, பாத்திரங்கள் எல்லாம் தருகிறார்கள், நாங்கள் அங்கே சென்று சமைத்தோம். இல்லையெனில் அங்கேயே செய்து தர சொல்லியும் சாப்பிடலாம்.


உற்சாக பானம் வாங்க பக்கத்திலேயே டாஸ்மாக் உள்ளது... ஆறு கிலோ மீட்டர் சென்றால் கர்நாடக சரக்கு மளிகை கடைகளிலேயே கிடைக்கிறது (ஹாப் க்கு தாங்கும் என் கஸின் கட்டிங்கிற்கே பாசத்தை கொட்ட ஆரம்பித்தான்) விலை, சுவை, தரம் உத்தரவாதம். இந்த முறை என் தம்பி துபாயில் இருந்தே வாங்கி வந்து விட்டான், இருந்தாலும் நாலு பாக்கெட் வாங்கினோம் (ஆம், அது ஜுஸ் பாக்கெட்களிலும் கிடைக்கிறது)


காலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் கர்நாடக எல்லை வரை சென்றால் புலி மானை சாப்பிட்டு கொண்டிருக்கும் டிஸ்கவாரி நிகழ்ச்சிகளை   காணலாம் என்றார்கள். (ஏனெனில் அது புலிகள் காப்பகம்) காலை வரை மட்டையாகி விட்டதால் அதை காண இயலவில்லை
ஆக ஒரு நாளை மிக ஜாலியாக நண்பர்களுடன் பொழுது போக்கி வர உகந்த இடம் ஹாசனூர், ஹாசனூர், ஹாசனூர்
-நிறைவு

Tuesday, February 23, 2016

கொடைக்கானல் சுற்றுலா

கொடைக்கானல் பகிர்வுகளும், உபயோகமான குறிப்புகளும்
நவம்பர் மாதம் கோடை செல்ல ஏற்ற மாதம், ஏனெனில் ஹாப் சீசன், ரூம்களின் விலை பாதியாக இருக்கும், clear trip போன்ற வெப்சைட்களில் 30 சதவீதம் வரை discount கிடைக்கும்


மேகம் தலையை தொடும் பொதிகை தொலைக்காட்சி அருகில் ரூம் (green land) அதில் தெரியும் காட்சிகளே மிக அற்புதமானவை, சுற்றிலும் மலை தொடர்கள், மேகத்தை மெதுவாக நகர்த்தி செல்லும் காற்று, குளிர். அருகில் கோக்கர்ஸ் வாக் எனப்படும் நடை பயிலும் இடம்

சில குறிப்புகள்
# உணவு மிக கேவலமாகவே இருக்கின்றது, Astoria என்ற பேருந்து நிலைய பக்கத்துக்கு உணகவகத்தில் மிக நன்று, ஆனால் அதிக பட்ச விலை

# நவம்பர் மாதம் கூட்டம் மிக குறைவு, அனுபவிக்க உகந்தது, சீசன் எனில் அவசர அவசரமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போகும்

# பூம்பாறை என்று ஒரு எழில்மிகு கிராமம் இருக்கிறது, அங்கு ஒரு முருகர் கோவிலை தவிர வேறு எதுவுமில்லை, ஆனால் அதற்கு போகும் வழி எங்கும் இயற்கை, அழகென்றால் என்ன என சொல்லித்தரும், அங்கே மலை பூண்டு கிடைக்கும் ஒரு வருடம் நன்றாக இருக்குமாம், பேரம் பேசி வாங்கலாம்

# முடிந்தவரை சொந்த வாகனத்தில் சென்று விடுங்கள், gps மூலமாகவே, சுற்றுலா இடங்களை எளிதில் கண்டறிய முடியும், டாக்ஸி வாடகை மிக அதிகம்

# குழந்தைகள் பெரியவர்கள் கூட வருகிறார்கள் எனில் குளிருக்கு இதமான ஆடைகளை கண்டிப்பாக கொண்டு செல்லவும்

# campfire அனுமதி உள்ள ஹோட்டல்கள் எனில் இரவு மிக சிறப்பாக இருக்கும்.

# பேரிஜம் செல்ல வேண்டுமெனில் காலை ஏழு மணிக்கு அதன் செக் போஸ்டில் நின்றால் முதல் 25 வாகனங்களுக்கு அனுமதி தருகிறார்கள், அடர்ந்த வன விலங்குகள் நிறைந்த மனிதர்கள் நாசம் செய்யாத காடு அது

# சுற்றிலும் நாற்பது கிமீக்குள் மொத்த சுற்றுலா தளங்களும் அடங்கி விடுகின்றன, இரண்டு நாட்கள் சரியாக இருக்கும்

# இயற்கை காட்சிகளை அமர்ந்து ரசிக்கும் படியான ரூம்களை தேர்ந்தெடுங்கள்.

# சர்ச் road வழியாக சென்றால் தொண்ணூறு சதவிகித சுற்றுலா தளங்கள் முடிந்து விடுகின்றன

# பிரட் ஆம்லேட் மட்டும் ஓரளவு எல்லா கடைகளிலும் சிறப்பாகவே இருக்கிறது

# வேறென்ன நீங்களும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


நன்றி

Saturday, January 23, 2016

ஊட்டி ரயில் பயணம்

நிறைய முறை காரிலும், பைக்கிலும் பஸ்சிலும் சென்று இருந்தாலும்முதன் முதலாக ரயிலில் செல்ல நேர்த்தது.

அப்படி என்ன ரயிலில் செல்லும் போது இருந்துவிட போகிறது என்ற எண்ணத்திலே தான் ரயில் ஏறினோம்.

முதல் வகுப்பு பதிவு செய்யப்பட்டு இருந்தது. முதல் வகுப்புக்கும் அடுத்துள்ள வகுப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

சரியாக 2.15 க்கு புறப்பட தொடங்கியது ரயில்

கொஞ்சமாக அழகில் என்னை கவர தொடங்கினாள் மலைகளின் ராணி

மலைகளின் ராணி என்று சும்மாவா சொன்னார்கள் வெள்ளையர்கள்.

அடுத்த 5 ஆவது நிமிடத்தில் அவளின் அழகில் மயங்கிய நான், மேட்டுபாளையம் வரும் வரை மீளவே முடியாத நிலைக்கு சென்று விட்டேன்.

மலைகளின் மொத்த அழகும், வனப்பும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும், உயர்ந்த மலை சிகரங்களும், நீண்ட தாழ்வான பள்ள தாக்குகளும் இலேசாக தூறல் போட தொடங்கிய வானமும், குகைகளும் பரவசத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

(208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்கள்)

மிக மிக மெதுவாக செல்லும் ரயிலின் (13 கி.மீ., வேகம்) வெளியே தெரியும் ஒவ்வொரு காட்சிகளும் கவிதை எழுத சொல்கிறது.

குளிரின் தாக்கம் தெரியா வண்ணம் வண்டி நிறுத்தும் இடங்களில்  தேநீர் மற்றும் சூடான பஜ்ஜிகள்

குழந்தைகளை மகிழ்விக்க குகைகள் மற்றும் குரங்குகள்.

ஒரு விதத்தில் ஆங்கிலேயனுக்கு நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும், இவை எல்லாம் அவர்கள் காலத்தில் செயல் படுத்தபட்டவை

குகைகளை குடைந்து  பாதை போட்டதும், பாலங்கள் கட்டியதும், பெரிய பெரிய கற்கள் கொண்டு சீராக்கியதும், சாதரணமாக முடிந்திருக்கும் காரியங்கள் அல்ல

எத்தனை எத்தனை மனித மற்றும் மிருக உயிர்கள் பலி ஆக்கப்பட்டிருக்கும்? அது கண்ணில் நீர் வர வைக்கும் தனி கதை

ரயில் மேட்டுபாளையம் தொட 3 மணி நேரம் எடுத்து கொண்டது

அந்த 5 மணி நேரம் (7500 அடி)

முழுதாய்

நான் அனுபவித்து வாழ்ந்த

வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாத

நேரங்கள்….

நீங்கள் கண்டீப்பாக நேரம் கிடைக்கையில் அங்கே ரயிலில் சென்று வாருங்கள்,


மிக சிறப்பான வாழ்நாள் அனுபவம் கிடைக்க கூடும் என்னை போலவே….