Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Tuesday, March 27, 2018

கொச்சி, செராய் பீச்

இரண்டு நாள் பயண திட்டம்.

கடவுளின் சொந்த தேசமான கேரளாவிற்கு அடிக்கடி செல்வதன் முக்கிய காரணம் அது கோவைக்கு அருகில் இருக்கிறது, அதுவுமில்லாமல் நிஜமாகவே இயற்கையை இயற்கையாக வைத்திருக்கிறார்கள்.

 இரண்டு நாளைக்கு முன்பு எதிர்பாராத திட்டமிடுதலில் போர்ட் கொச்சியும் செராயும் செல்ல முடிவெடுத்தோம். நான் பயணங்களில் முக்கியமாக கற்றுக்கொண்ட விஷயம் என்னவெனில் நல்ல சாப்பாடு கிடைத்தால் அது போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம், உணவக விஷயங்களில் கூகுளை நம்பி நிறைய மண்டை காய்ந்திருக்கிறேன், எனவே இரண்டு வேலைக்கான உணவாவது எடுத்து கொண்டு கிளம்புவதே புத்திசாலித்தனமான காரியம்.

  கோவையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரமுள்ள போர்ட் கொச்சிக்கு சொந்த வண்டியில் செல்வது உத்தமம், விலை குறைவான நல்ல வசதி கொண்ட விடுதிகள் முன்னரே பதிவு செய்து விடுங்கள். உதாரணமாக இந்த பிரேம்ஸ் ஹோம்ஸ்டே வெகு சிறப்பு. AC அறையே 1600 ரூபாய்தான் வருகிறது, 800 ரூபாயில் இருந்தே விலை ஆரம்பிக்கிறது, குடும்பம் எனில் யோசிக்காமல் அறை பதிவு செய்யலாம்.

வரும் வழியில் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து பாதை செய்திருப்பார்கள், இரண்டு பக்கமும் நீர் சூழ கப்பல்களை பார்த்தபடி அந்த பாதையை கடப்பது வெகு அழகாக இருக்கும். ரோபோட் போல சிறிய ரக உளவு விமானங்கள் மேலே பறக்கும் வாயை பிளந்தபடி பார்த்தவாறு போகலாம். பகல் பதினோரு மணிக்குள் அங்கே சென்று விடுங்கள்,  அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு, மூன்று கிலோ மீட்டருக்கு உள்ளேயே எல்லா சுற்றுலா தளங்களும் அடங்கி விடுவதால் அவற்றை விசாரித்து ஐந்து மணிக்குள் முடித்துக்கொண்டு, போர்ட் கொச்சி வந்துவிடுங்கள் வழியெங்கும் வெளிநாட்டு ஜோடிகளும், நம்ம ஊர் (கேரளா நாட்டிளம் பெண்கள்) மேல் சட்டையை மட்டும் உடையாய் போட்டுகொண்டு வலம்வரும் அறிய காட்சியை காணலாம்.
  குழந்தைகள் விளையாட கடலுக்கு அருகே ஒரு பார்க் உள்ளது, சுற்றிலும் கைவினை பொருட்கள், உணவு கடைகள், ஓவிய, இசைக் கருவி விற்பனை நிலையங்கள் என வெளிநாட்டு கலாச்சார அழகில் கடைகள் நிறைந்திருக்கும்... வண்ண ஓவியங்கள், அலங்கார பொருட்கள் என கடைகளை அட்டகாசமாக வைத்திருக்கிறார்கள். பொருட்களை அங்கே பார்த்துக் கொள்ளுங்கள், வாங்க வேண்டிய இடம் பற்றி அடுத்தது எழுதுகிறேன்.

கடலில் கால் நனைக்கலாம், குளிக்க அனுமதிப்பதில்லை, ஆதலால் சூரியன் மறையும் வரை நல்ல ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனின் அழகையும், பிரம்மாண்டமான நகரும் கப்பல்களையும் ரசிக்கலாம்.

இரவு உணவிற்கு அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தள்ளி கிருஷ்ணா போன்ற சைவ உணவகங்களும், முஸ்லீம் பீப் பிரியாணி ஹோட்டல்களும் உண்டு, கட்டுப்படியாகிற விலையில் ஓரளவு நல்ல சுவையுடன் கிடைக்கின்றன.
குடிகாரர்கள் ஒன்பது மணிக்கு முன்பே சரக்கு வாங்கி வைத்து விடுங்கள், நமது ஊர் போல ப்ளாக்கில் கிடைக்காது.

 அடுத்தநாள் காலையில் சிரமம் பார்க்காமல் நாலு மணிக்கு எழுந்து முப்பது கிலோ மீட்டர் தூரமுள்ள செராய் பீச்சுக்கு (ஒரு மணிநேரம்) வந்து விடுங்கள், மூன்று, நான்கு மணி நேரம் கடலில் விளையாடலாம். பக்கத்தில் போட்டிங் போக ஒரு மணிநேரத்துக்கு ஆயிரம் என அழைப்பார்கள் அது சிறப்பில்லை, வேண்டாம்.
 காலை உணவை வரும் வழியில் புட்டு, ஆப்பம், கடலை கறி, அல்லது முட்டை கறி கிடைக்கும் சிறிய உணவகங்களில் கூட நம்பி செல்லலாம், அது கேரள நாட்டின் தேசிய உணவு.

அறை காலி செய்யும் நேரத்தை தெரிந்து கொண்டு அதற்க்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே செராய் பீசிலிருந்து புறப்படுங்கள். காலி செய்த பின், மதிய உணவை வழியில் முடித்துக்கொண்டு (சாப்பாடு வேண்டாம், கொட்டை அரிசி மட்டுமே கிடைக்கும், வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள்) எர்ணாகுளம் வந்து விடுங்கள்.

அங்கே மார்க்கெட் ஜெட்டி உண்டு, அவை முழுக்க லோக்கல் கடைகளால் நிரம்பி வழிந்திருக்கும், பேரம் பேசி வாங்கலாம். அதை முடித்து விட்டு அதன் எதிரிலேயே Boating point Marine drive உண்டு, தலைக்கு நூறு ரூபாய் டிக்கெட் குழந்தைகளுக்கு இலவசம், ஒரு மணிநேரம் கடலுக்குள் சுற்றி காட்டுவார்கள், தனி தீவுகள், கடலோரம் அமைந்திருக்கும் மிகப் பெரிய அப்பார்ட்மெண்ட்கள் என கண்டு மகிழலாம்.
 முடித்த பின் கொச்சியில் உள்ள இந்தியாவிலேயே பெரிய ஷாப்பிங்  மாலான லூலுவை பார்க்கலாம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சுற்றியும் முழுவதும் பார்த்து முடிக்க இயலவில்லை.
இரண்டு நாட்களுக்கான கேரள சுற்றுலா திட்டம் இத்துடன் நிறைவடைகிறது.



Sunday, December 10, 2017

வயநாடு சுற்றுலா

கடந்த முறை  சென்ற போது மிக தவறாக திட்டமிட்டு ஏமாந்ததால் வயநாடு ஒரு மொக்கை சுற்றுலா பிரதேசம் என பதிவு செய்திருந்தேன்... மன்னிக்கவும்

 இந்த முறை வேண்டா வெறுப்பாக தான் ஆரம்பித்தேன், கோவையில் இருந்து ஊட்டி சென்று அங்கிருந்து வயநாடு போவதாய் இருந்த திட்டத்தை திம்பம் கர்நாடகா வழியாக செல்ல காலையில் முடிவெடுத்து நாலரை மணிக்கு ஆரம்பித்தேன்.

 ஐந்து மணிநேர இளையராஜா பாடல்களுடன் காரமடை, பவானிசாகர், பண்ணாரி வழியாக ஆரம்பித்தது பயணம், நல்ல ஓட்டுனருக்கு மலைப்பாதை வாகன செலுத்தல் சொர்க்கம், ஆனால் வெறும் 14 கிமீக்கு, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் லாரிகளை வரிசையாக வர வைத்து சோதனை தருகிறது. காலை ஏழு மணிக்கும் திம்பம் விழிப்படைந்திருக்கவில்லை. மலை ஏற்றம் முடிந்தபின் வாகனசோதனை சாவடி அருகில் ஒரு சிறுகடை  உண்டு (அந்த சோதனைசாவடியில்தான் சிறுத்தை இரண்டு வனகாவலர்களையும், சில மலைவாழ்மக்களையும் கொன்றது உபரி தகவல்) சிறுதின்பண்டங்களை சுடச்சுட செய்து தருகிறார்கள், தேநீரும் உண்டு, நல்ல சுவை.

 அதை தாண்டி ஹாசனூருடன்  தமிழக எல்லை முடிவடைகிறது, படுகேவலமான கர்நாடக சாலை அங்கிருந்து ஆரம்பிக்கிறது, தமிழக சாலைகளை குறை சொல்லும் எனக்கு சரியான பாடத்தை புகட்டுகிறது கர்நாடகா.

இதில் ஒரு குழப்பம் என்னவெனில் தாளவாடி (வீரப்பன் ராஜ்குமாரை கடத்தி கொண்டு போன காட்டு பங்களா அங்கே இருக்கிறது) கர்நாடக எல்லைக்குள் வருகிறது ஆனால் அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்கிறார்கள்.

 காலை ஒன்பதுமணிக்கு கூட இருள் பிரியாத, மேகம் பொழியும், காரில் லைட் போட்டே ஓட்டும் நிலையிலும்,  காட்டுப் பன்றிகள், மயில்கள், மான்கள் (காரை தாண்டி குதித்து ஓடின), முயல்கள், முள்ளம்பன்றிகள் சர்வ சாதாரணமாக கண்ணில் படுகின்றன. சிலிர்ப்பும் ஆனந்தமும் பரவ வாகனத்தை மெதுவாகவே செலுத்துகிறேன்.
 தயவு செய்து அந்த வழியில் வருபவர்கள் பணம் கையிருப்பு வைத்திருங்கள், "atm என்றால் என்ன?" என அங்குள்ளவர்கள் கேட்கிறார்கள். சாம்ராஜ் நகரில் மட்டுமே atm வசதி உண்டு, அதுபோக பெரிய ஹோட்டல்களில், பெட்ரோல் பங்குகளில் கூட கார்டு உபயோகிக்க இயலவில்லை (அரே மோடி கியா கரே தும் டிஜிட்டல் இந்தியா)
 அங்கே ஒரு பெரிய ஹோட்டலில் ஏமாந்து போய் சாப்பிட்டேன், சாம்பார் ஒரே இனிப்பு, இட்லியில் கருவேப்பில்லை எல்லாம் போட்டு ஒரு விதமாக தருகிறார்கள், பூரி மசால் உருப்படியான உணவு, டீ பரவாயில்லை. செல்லும் வழியிலோ, சுற்றுலா தளங்களிலோ நல்ல உணவு கிடைத்தது எனில் நீங்கள் அதிஷ்டக்காரர்.
 குண்டல்பேட் தாண்டி பந்திப்பூர் வழியே சென்றால் கூட்டமாக யானைகள், அதைவிட அதிக கூட்டமாக மான்கள் வழியெங்கும் பரவசபடுத்துகின்றன. பத்து யானைகள் குட்டிகளோடு நிற்கும் இடத்தில்  அரைமணிநேரத்துக்கு மேல் நின்றிருந்தேன்.
 வயநாடு செல்ல பந்திப்பூர் பாதையில் செல்லுங்கள், அதுதான் சொர்க்கம்.
வயநாடு பற்றி நிறைய பதிவு வந்திருக்கும். நான் சுருக்கமாகவே முடிக்கிறேன்.

கல்பேட்டாவில் அறை பதிவு செய்யுங்கள், அங்கிருந்து சுற்றுலா தளங்கள் போய் வர வசதியாக இருக்கும்.

அசைவ உணவு விரும்பிகள் சிட்டி ஹோட்டல் விசாரித்து அங்கு சாப்பிடுங்கள், சைவம் எனில் அப்பாஸ், கட்டுப்படியாகும் விலை,  வயிற்றை அலற வைப்பதில்லை, சுவை சிறப்பு.

மூன்று நாட்கள் திட்டமிடுங்கள்.

 லேக்கடி வியூ பாயிண்ட், பாணாசுர சாகர் அணை, மீன்முட்டி அருவி, கார்லாட் லேக்கின் ரோப் ரெய்டு தவற விட வேண்டாம். உங்களுக்கு மிக பிடித்த இடமெனில் ஒரு முழு நாளும் அங்கு செலவு செய்யுங்கள், எல்லாவற்றையும் பார்த்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை.
முக்கியமாக மொபைலை ரூமிலேயே வீசி விட்டு கண்களாலும் மனதாலும் பதிவு செய்யுங்கள்.

Saturday, June 24, 2017

வயநாடு

எனது தம்பிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது, அவன் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறான், திருமணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க ஊட்டி, கூடலூர் போக வேண்டி இருந்தது. திருமணதிற்க்கு பத்து நாள் மீதம் இருக்கையில் தமிழ்நாடு வந்து சேர்ந்தான். பத்திரிக்கை கொடுத்துவிட்டு அப்படியே வயநாடு போய் இரண்டு நாட்கள் சுற்றி விட்டு திருமணத்திற்க்கு முன்பு ஒரு வாரம் வீட்டு சிறைக்கு அனுப்பி விட திட்டமிட்டு, மே கடைசி வாரத்தில்  வயநாட்டின் ஒரு பகுதியான புல்பாலியில் அமைந்துள்ள luxinn என்ற விடுதியில் அறை முன்னதாகவே பதிவு செய்து வைத்திருந்தோம்.
    கோவையில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் காரில் கிளம்பி விட்டோம், இரண்டு பேர் கொண்ட பயணம், கடைசி நாட்களில் இன்னமும் இரண்டு நண்பர்கள் வரலாமா என்று கேட்க, அது நான்கு பேராக மாறியது.
 பரளியாறு தாண்ட ஆரம்பித்ததுமே அந்த ஊட்டி குளிர் காரின் ac யை அணைத்துவிட்டு அதை அனுபவிக்க தூண்டியது. மலைமேல் பயணிக்கும்  காலை பயணங்கள் உண்மையில் சொர்க்கங்கள்.    
   ஊட்டி வரை செல்பவர்கள் அதை தாண்டி கூடலூர் ரோட்டில் ஒரு பதினைந்து கிலோ மீட்டராவது செல்லுங்கள், அங்கே குளிரும் அதிகம், ஊட்டியின் வியாபார தன்மையை தாண்டி அழகு பறந்து விரிந்து கிடக்கிறது, அதுவும் பைகார தாண்டி மலை பார்க்கும் பகுதி இருக்கிறது, மேகம் கூட்டமாய் தலை உரசும் அங்கே தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் கணம் இருக்கிறதே, அதை விளக்கும் அளவு அழகியல் எழுத்தில் எனக்கு கைவரவில்லை. மகா அற்புதம் என கொள்ளுங்கள்.
 வயநாடு போன்ற தெரியாத இடங்களுக்கெல்லாம் கூகுள் மேப் எனும் கடவுள் கூடவே உதவிக்கு வருகிறார், ஒரு தடவை கூட நாங்கள் யாரிடமும் வழி கேட்கவில்லை, நேராக Luxinnக்கு அது கூட்டி சென்று விட்டது.
 கூடலூரில் இருந்து பத்து கிமீ தாண்டி சென்றால் குளிர் போய் விடுகிறது.
அதே கூகுள் வயனாடை அழகான படங்களை போட்டு, கேரளாவின் சொர்க்கம் என்றெல்லாம் வர்ணித்து வைத்திருக்கிறது, எக்கசக்க எதிர்பார்ப்புடன் கேரளாவில் நுழைந்தால் சுள்ளென அடிக்கும் வெயில் பட்டவயல் எனும் மலைக்கு கீழிருக்கும் பகுதியில்  வரவேற்கிறது. நாங்கள் சென்ற சமயம் மழை வேறு இல்லை, அடர் வன பகுதிகள் கூட பாதி வறண்டு போய் இருந்தது. நாங்கள் சென்ற luxinn வெகு தொலைவு வேறு.
 வயனாட்டுக்கு செல்வோர் கல்பேட்டாவில் தங்க அறை பதிவு செய்து கொள்ளுங்கள், luxinn பற்றிய நல்ல கூகிள் ரேட்டிங்கில் நாங்கள் ஏமாந்தோம், முதலாவது அதன் முகப்பு மட்டும் நன்றாக இருக்கிறது, தங்கும் அறைகள் அளவில் மிக சிறியவை, டீலக்ஸ் ரூம்களுக்கு தரும் விலை மிகமிக அதிகம், உள்ளே சாப்பிட ஹோட்டல் இல்லை, உணவு ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்கள்,  காலையில் சுடுதண்ணிர் மட்டும் அரை மணிநேரம் வருகிறது, பழைய டிவி, மொபைல் சார்ஜ் போடக்கூட ப்ளக் பாய்ண்டுகள் இல்லை, என் கார் சார்ஜர் வேறு பழுதாகி உயிரை வாங்கியது. முக்கியமாக மாதம் ஒருநாள் வீட்டில் அனுமதி வாங்கி குடிக்கும் எனக்காக என் தம்பி அங்கிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் செலவில் இரண்டு புல் ஸ்காட்ச் வாங்கி வந்திருந்தான், குடிக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள், ரூம் பாய்க்கு கொஞ்சம் காசு கையில் திணித்து குடித்தது தனிக்கதை.

 சரி வயனாடுக்கு வருவோம், குருவா ஐலன்ட் என்று கொடுமை அங்கே இருக்கிறது, மதியம் ஒரு மணிக்கு சென்றால் அதற்க்கு பின் அங்கு அனுமதி இல்லை என்றார்கள்.

பணசுரா அணை பற்றி ஓவர் பில்டப் கொடுத்தார்கள், அங்கே சென்றால் நீர் வரத்து மிக மிக குறைவு. பக்கத்தில் மீன் முட்டி அருவி இருக்கிறது அதுவும் அதே லட்சணத்தில் தான்.
 ஒரே பெரிய நிறைவும் ஆறுதலும் பூக்கொட் லேக், அங்கே நாங்கள் செல்லும் வழியில் மழை, அது அழகாக இருந்தது. செம்பரா, எடக்கல் பாறைகள், நீலிமலை காட்சிமுனை, கபினி என்றெல்லாம் சொன்னார்கள். சுமாராக இருந்தாலே உற்சாகமாக பயணங்களை அனுபவிக்கும்  எனக்கே போதுமடா சாமி என இருந்தது, ரூம் திரும்பி விட்டோம்.
 நீதி என்னவெனில், ஊட்டி குளிரை, பைகாரா வரை அனுபவித்து விட்டு கீழே கடும் வெயில் உள்ளதால் (கோவையை விட மிக அதிகம்) மண்டை காய்கிறது, அதிக எதிர்பார்ப்போடு போகக்கூடாது, மிக முக்கியமாக நீங்கள் மழை நன்கு பெய்து கொண்டிருக்கையில் அங்கு பயணம் செல்லுங்கள், ஒவ்வொரு சுற்றுலா இடத்துக்கும் தூரம் மிக அதிகம், அதாவது நாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து பணசுரா அணை போய், பூக்காடு முடித்தால் ஒரு நாள் ஆகிறது, ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள், அதே போலதான் எல்லா சுற்றுலா இடங்களும் உள்ளன, அங்கிருந்த ரோடுகளை போல் படுகேவலமான குண்டும் குழியுமான ரோடுகளை நான் சமீபத்தில் எங்குமே பார்க்கவில்லை, ஒரு சில இடங்களில் வண்டியை பத்து, இருபது ஸ்பீடில் ஓட்டினாலே போதும் என்றாகி விடுகிறது. நன்கு திட்டமிட்டால் மட்டுமே ஒரு நாளில் மூன்று இடங்களை பார்க்க இயலும்.
 அவ்வளவு செலவு செய்து அங்கே போனதை விட, ஆசனூரில் நீச்சல்குளம் உள்ள ஹில்வியூ போன்ற காட்டேஜ்களுக்கு இரண்டு கோழி வாங்கி போயிருந்தால், சிறப்பாக அசைவ உணவு செய்வார்கள், அனுபவித்து குடித்து  சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் விளையாடி,  மலையை ரசித்தபடி அமைதியாக அமர்ந்து விட்டு, இரவு வனஉலா சென்று அதிஷ்டம் இருந்தால் புலியை கூட பார்த்து திரும்பி இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை.

  

Tuesday, February 23, 2016

கொடைக்கானல் சுற்றுலா

கொடைக்கானல் பகிர்வுகளும், உபயோகமான குறிப்புகளும்
நவம்பர் மாதம் கோடை செல்ல ஏற்ற மாதம், ஏனெனில் ஹாப் சீசன், ரூம்களின் விலை பாதியாக இருக்கும், clear trip போன்ற வெப்சைட்களில் 30 சதவீதம் வரை discount கிடைக்கும்


மேகம் தலையை தொடும் பொதிகை தொலைக்காட்சி அருகில் ரூம் (green land) அதில் தெரியும் காட்சிகளே மிக அற்புதமானவை, சுற்றிலும் மலை தொடர்கள், மேகத்தை மெதுவாக நகர்த்தி செல்லும் காற்று, குளிர். அருகில் கோக்கர்ஸ் வாக் எனப்படும் நடை பயிலும் இடம்

சில குறிப்புகள்
# உணவு மிக கேவலமாகவே இருக்கின்றது, Astoria என்ற பேருந்து நிலைய பக்கத்துக்கு உணகவகத்தில் மிக நன்று, ஆனால் அதிக பட்ச விலை

# நவம்பர் மாதம் கூட்டம் மிக குறைவு, அனுபவிக்க உகந்தது, சீசன் எனில் அவசர அவசரமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போகும்

# பூம்பாறை என்று ஒரு எழில்மிகு கிராமம் இருக்கிறது, அங்கு ஒரு முருகர் கோவிலை தவிர வேறு எதுவுமில்லை, ஆனால் அதற்கு போகும் வழி எங்கும் இயற்கை, அழகென்றால் என்ன என சொல்லித்தரும், அங்கே மலை பூண்டு கிடைக்கும் ஒரு வருடம் நன்றாக இருக்குமாம், பேரம் பேசி வாங்கலாம்

# முடிந்தவரை சொந்த வாகனத்தில் சென்று விடுங்கள், gps மூலமாகவே, சுற்றுலா இடங்களை எளிதில் கண்டறிய முடியும், டாக்ஸி வாடகை மிக அதிகம்

# குழந்தைகள் பெரியவர்கள் கூட வருகிறார்கள் எனில் குளிருக்கு இதமான ஆடைகளை கண்டிப்பாக கொண்டு செல்லவும்

# campfire அனுமதி உள்ள ஹோட்டல்கள் எனில் இரவு மிக சிறப்பாக இருக்கும்.

# பேரிஜம் செல்ல வேண்டுமெனில் காலை ஏழு மணிக்கு அதன் செக் போஸ்டில் நின்றால் முதல் 25 வாகனங்களுக்கு அனுமதி தருகிறார்கள், அடர்ந்த வன விலங்குகள் நிறைந்த மனிதர்கள் நாசம் செய்யாத காடு அது

# சுற்றிலும் நாற்பது கிமீக்குள் மொத்த சுற்றுலா தளங்களும் அடங்கி விடுகின்றன, இரண்டு நாட்கள் சரியாக இருக்கும்

# இயற்கை காட்சிகளை அமர்ந்து ரசிக்கும் படியான ரூம்களை தேர்ந்தெடுங்கள்.

# சர்ச் road வழியாக சென்றால் தொண்ணூறு சதவிகித சுற்றுலா தளங்கள் முடிந்து விடுகின்றன

# பிரட் ஆம்லேட் மட்டும் ஓரளவு எல்லா கடைகளிலும் சிறப்பாகவே இருக்கிறது

# வேறென்ன நீங்களும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


நன்றி