Friday, May 4, 2018

முதல் விமான பயணம் -சில டிப்ஸ்

கொஞ்சம் விமான பயணங்களை கடந்து விட்டவன் என்ற முறையில் முதல் விமான பயணம் போகும் ஆசை உள்ளவர்களுக்கான சிறிய வழி காட்டல் இது. (அடிக்கடி விமானத்தில் பறப்பவர்கள் படித்து விட்டு கீழே ஆலோசனை சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டு...)
பதினைந்து நாட்களுக்கு முன்னதாக புக் செய்தால் கூட ஆயிரத்து ஐநூறுக்குள் தமிழ்நாட்டின் உள்விமான போக்குவரத்தோ (சென்னை -கோவை போல), பெங்களூருவோ நீங்கள் தாராளமாக சென்று வரலாம்.
எல்லா விமான நிறுவனங்களும் (Economic flights) தங்களுக்கு பயணிகள் சேரும் வரை offer கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கூகுளே (Search: Google flights)  அதன் விலை விபரங்களை தேதி வாரியாக வெளியிடும். எனவே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளுங்கள். இறக்கைகள் மறைக்காத கீழே பார்க்கும் வண்ணம் சீட்டை தேர்ந்தெடுங்கள்.

உங்கள் விமானம் புறப்படும் நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்பே விமான நிலையத்தை அடைந்து விடுங்கள். உள்நாட்டு விமான பயணத்தில் நீங்கள் ஏதாவது ஒரு அரசு ஆதார சான்றிதழை வைத்திருந்தால் போதுமானது (லைசென்ஸ், வோட்டர் ஐடி, ஆதார்)  உங்களுக்கான பயண சீட்டையோ, மொபைலில் உள்ள டிக்கெட்டையோ முன்னால் நின்றிருக்கும் காவல் பாதுகாவலரிடம்  காண்பித்து விமான நிலையத்திற்குள் நுழையுங்கள்.

நீங்கள் எவ்வளவு கிலோ வரை பொருட்கள் கொண்டு செல்லலாம் என்பதை நீங்கள் செல்ல வேண்டிய விமான பயண குறிப்பில் சோதனை செய்து கொள்ளுங்கள். Hand luggage எனப்படும் கைபையில் ஏறக்குறைய பதினைந்து கிலோ வரை அனுமதி இருக்க கூடும். கத்தி, ப்ளேடு, கூர்மையான ஊசிகள், வாசனை திரவியங்கள் போன்ற தடை செய்த பொருட்கள் எவை என்ற குறிப்பை படித்து விட்டு அவற்றை எடுத்து செல்வதை தவிருங்கள்

விமான சீட்டு பாதுகாப்பு முடிந்ததும் உங்களை கைப்பை சோதனை நடக்கும், அதை சோதித்த பின் நேராக நீங்கள் செல்ல வேண்டிய விமானத்தின் அலுவலகம் இருக்கும் பகுதியை கேட்டு தெரிந்து கொண்டு (அழகான பெண்கள் இருப்பார்கள்) அவர்களிடம் போர்டிங் பாஸ் பெற வேண்டும். அங்கேயே உங்கள் விமானம் எந்த வாசலுக்கு வரும், நீங்கள் எங்கு சென்று காத்திருக்க வேண்டும் என்ற தகவலை கூறுவார்கள். விமான நிலையத்தின் காத்திருப்பு அறைக்கு முன் மீண்டும் ஒரு சோதனை நடக்கும்.

உங்கள் பர்ஸ், போன், சாவி, மற்ற எதுவாக இருந்தாலும் கைப்பையில் வைத்து சோதனைக்கு அனுப்ப வேண்டும், இல்லை எனினும் பிளாஸ்டிக் தட்டு வைத்திருப்பார்கள் அதில் வைக்கவும். உங்களது போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட்டை மட்டும் கையில் வைத்திருங்கள், அதை சரி பார்த்த பின் கையை விரிக்க சொல்லி சோதனை நடத்துவார்கள். அதன் பின் நீங்கள் காத்திருப்பு அறைக்குள் சென்று உங்களது விமானத்திருக்காக காத்திருக்க வேண்டியது தான்

காத்திருப்பு பகுதியில் உங்கள் விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும் வரிசையில் சென்று போர்டிங் பாஸ் கொடுத்து அவைகளை சரி பார்த்த பின் உங்களை விமானத்தின் அருகில் அழைத்து செல்ல ஒரு பஸ் நின்றிருக்கும்.
அல்லது ஒரு சில தளங்களில் நேரடியாகவே செயற்கை படிகள் வைத்து விமானத்திற்குள் செல்லும் அமைப்பு இருக்கும்.

விமானத்தில் ஏறியதும் சிரித்தபடி வரவேற்க விமான பணிப்பெண்கள் இருப்பார்கள், Air India, spicejet  போன்றவற்றில் ஆண்களும் இருந்து கடுப்படிப்பார்கள். இருக்கைகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு போகாதீர்கள், உயர்தர பஸ் இருக்கையை போன்றே இருக்கும். ஏனெனில் அது ஏர்பஸ் தானே?   
 விமானத்தில் ஏறியதும் மொபைலை ஆப் செய்தோ அல்லது Airplane மோடிலோ வைக்க சொல்வார்கள் சீட் பெல்ட் போட சொல்லி அறிவுறுத்துவார்கள்.  விமானம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு மணி நேரத்தில் அடையும் என்று கூறினால் ஏற இறங்க மட்டுமே அதில் பாதி நேரத்தை எடுத்து கொள்ளும் பறக்கும் நேரம் அதில் பாதி மட்டுமே.

அவ்வளவுதான்...
சென்று அனுபவித்து விட்டு பின்னூட்டம் இடுங்கள்

No comments:

Post a Comment