Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Wednesday, March 28, 2018

ஹாசனூர் கோடை வாஸ்தலம்

கொங்கு மண்டலத்தை சேர்ந்த நண்பர்கள் ஒருநாள் பொழுதுபோக்கு வேண்டும் எனில் தாராளமாக ஹாசனூரை தேர்ந்தெடுக்கலாம். (குடும்ப குத்து விளக்குகள், பெண்ணிய போராளிகள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் உங்களுக்கு உபயோகமாக எதுவும் இல்லை, நண்பன் மேல் அக்கறை உள்ள நல்ல பெண்கள் மட்டும் தொடரவும் )

27 மிக குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலை பண்ணாரி வன சோதனை சாவடியிலிலிருந்து ஆரம்பமாகிறது. (லஞ்சமா லாரிக்கு இருநூறு ரூபா வாங்கறாங்க, "சாப்பாட்டுக்கு பதிலா வேறு ஏதாவது சாப்பிடலாமே போலீஸ்கார்"ன்னு கூட திட்டினேன், வேகமா அங்கிருந்த சாவடிக்குள்ள புகுந்துட்டார் ஒரு போலீஸ்)

 மிக கவனமாக மலை ஏறுங்கள், முக்கியமாக டேங்கர் லாரிகள் நிறைய போகும் பாதை அது, நூறு மீட்டர் இடைவெளி விட்டே தொடருங்கள், அவர்கள் கொண்டை ஊசி வளைவுகளில் பின்னால் வந்தே திருப்ப முடிகிறது .

காலையில் நேரத்திலேயே பயணத்தை தொடங்கி விடுவது உத்தமம், ஏனெனில் மான்கள், மயில்கள், முயல்கள், உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் கரடி, யானை மற்றும் ஆளை கொல்லும் சிறுத்தை புலிகளைக் கூட காணலாம். நாங்கள் நிறைய மான்களும், மயில்களும், காட்டு பன்றிகளும், ஒரே ஒரு கரடியையும் பார்த்தோம். (கார் பைக் இரண்டும் ஏற்றது)
 திம்பம் மலையில் பாதி தூரம் ஏறும்போதே மெல்லிய குளிர் உங்களை தழுவிக் கொள்ளும்... கொண்டை ஊசி வளைவுகள் முடிந்த பிறகு வனப்பகுதி சோதனை சாவடி அலுவலகம் தாண்டி ஒரு சிறிய கடையில் சுடசுட சிறு பலகாரங்கள் செய்து தருகிறார்கள். நல்ல ருசியும் கூட... (அங்கேயே டச்சர்கள் வாங்கி கொள்க)

தலைக்கு ஐநூறு வீதம் அறை எடுத்து தங்கும் வசதி ஹாசனூர் முழுவதும் நிறைந்து கிடக்கிறது. KAS என்னும் விடுதியில்  நீச்சல் குளம் வெகு சிறப்பு, தேவையான அளவு தண்ணீர் நிரப்பி தருகிறார்கள். அறைகளும் தேறுகிறது.
 சாப்பாடு நன்றாக சமைக்க வரும் எனில் நாட்டு கோழியை வாங்கி காரில் வைத்துக்கொண்டு அங்கு சென்று சமைக்கலாம், சமையலறை, பாத்திரங்கள் எல்லாம் தருகிறார்கள், நாங்கள் அங்கே சென்று சமைத்தோம். இல்லையெனில் அங்கேயே செய்து தர சொல்லியும் சாப்பிடலாம்.


உற்சாக பானம் வாங்க பக்கத்திலேயே டாஸ்மாக் உள்ளது... ஆறு கிலோ மீட்டர் சென்றால் கர்நாடக சரக்கு மளிகை கடைகளிலேயே கிடைக்கிறது (ஹாப் க்கு தாங்கும் என் கஸின் கட்டிங்கிற்கே பாசத்தை கொட்ட ஆரம்பித்தான்) விலை, சுவை, தரம் உத்தரவாதம். இந்த முறை என் தம்பி துபாயில் இருந்தே வாங்கி வந்து விட்டான், இருந்தாலும் நாலு பாக்கெட் வாங்கினோம் (ஆம், அது ஜுஸ் பாக்கெட்களிலும் கிடைக்கிறது)


காலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் கர்நாடக எல்லை வரை சென்றால் புலி மானை சாப்பிட்டு கொண்டிருக்கும் டிஸ்கவாரி நிகழ்ச்சிகளை   காணலாம் என்றார்கள். (ஏனெனில் அது புலிகள் காப்பகம்) காலை வரை மட்டையாகி விட்டதால் அதை காண இயலவில்லை
ஆக ஒரு நாளை மிக ஜாலியாக நண்பர்களுடன் பொழுது போக்கி வர உகந்த இடம் ஹாசனூர், ஹாசனூர், ஹாசனூர்
-நிறைவு

Saturday, June 24, 2017

வயநாடு

எனது தம்பிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது, அவன் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறான், திருமணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க ஊட்டி, கூடலூர் போக வேண்டி இருந்தது. திருமணதிற்க்கு பத்து நாள் மீதம் இருக்கையில் தமிழ்நாடு வந்து சேர்ந்தான். பத்திரிக்கை கொடுத்துவிட்டு அப்படியே வயநாடு போய் இரண்டு நாட்கள் சுற்றி விட்டு திருமணத்திற்க்கு முன்பு ஒரு வாரம் வீட்டு சிறைக்கு அனுப்பி விட திட்டமிட்டு, மே கடைசி வாரத்தில்  வயநாட்டின் ஒரு பகுதியான புல்பாலியில் அமைந்துள்ள luxinn என்ற விடுதியில் அறை முன்னதாகவே பதிவு செய்து வைத்திருந்தோம்.
    கோவையில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் காரில் கிளம்பி விட்டோம், இரண்டு பேர் கொண்ட பயணம், கடைசி நாட்களில் இன்னமும் இரண்டு நண்பர்கள் வரலாமா என்று கேட்க, அது நான்கு பேராக மாறியது.
 பரளியாறு தாண்ட ஆரம்பித்ததுமே அந்த ஊட்டி குளிர் காரின் ac யை அணைத்துவிட்டு அதை அனுபவிக்க தூண்டியது. மலைமேல் பயணிக்கும்  காலை பயணங்கள் உண்மையில் சொர்க்கங்கள்.    
   ஊட்டி வரை செல்பவர்கள் அதை தாண்டி கூடலூர் ரோட்டில் ஒரு பதினைந்து கிலோ மீட்டராவது செல்லுங்கள், அங்கே குளிரும் அதிகம், ஊட்டியின் வியாபார தன்மையை தாண்டி அழகு பறந்து விரிந்து கிடக்கிறது, அதுவும் பைகார தாண்டி மலை பார்க்கும் பகுதி இருக்கிறது, மேகம் கூட்டமாய் தலை உரசும் அங்கே தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் கணம் இருக்கிறதே, அதை விளக்கும் அளவு அழகியல் எழுத்தில் எனக்கு கைவரவில்லை. மகா அற்புதம் என கொள்ளுங்கள்.
 வயநாடு போன்ற தெரியாத இடங்களுக்கெல்லாம் கூகுள் மேப் எனும் கடவுள் கூடவே உதவிக்கு வருகிறார், ஒரு தடவை கூட நாங்கள் யாரிடமும் வழி கேட்கவில்லை, நேராக Luxinnக்கு அது கூட்டி சென்று விட்டது.
 கூடலூரில் இருந்து பத்து கிமீ தாண்டி சென்றால் குளிர் போய் விடுகிறது.
அதே கூகுள் வயனாடை அழகான படங்களை போட்டு, கேரளாவின் சொர்க்கம் என்றெல்லாம் வர்ணித்து வைத்திருக்கிறது, எக்கசக்க எதிர்பார்ப்புடன் கேரளாவில் நுழைந்தால் சுள்ளென அடிக்கும் வெயில் பட்டவயல் எனும் மலைக்கு கீழிருக்கும் பகுதியில்  வரவேற்கிறது. நாங்கள் சென்ற சமயம் மழை வேறு இல்லை, அடர் வன பகுதிகள் கூட பாதி வறண்டு போய் இருந்தது. நாங்கள் சென்ற luxinn வெகு தொலைவு வேறு.
 வயனாட்டுக்கு செல்வோர் கல்பேட்டாவில் தங்க அறை பதிவு செய்து கொள்ளுங்கள், luxinn பற்றிய நல்ல கூகிள் ரேட்டிங்கில் நாங்கள் ஏமாந்தோம், முதலாவது அதன் முகப்பு மட்டும் நன்றாக இருக்கிறது, தங்கும் அறைகள் அளவில் மிக சிறியவை, டீலக்ஸ் ரூம்களுக்கு தரும் விலை மிகமிக அதிகம், உள்ளே சாப்பிட ஹோட்டல் இல்லை, உணவு ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்கள்,  காலையில் சுடுதண்ணிர் மட்டும் அரை மணிநேரம் வருகிறது, பழைய டிவி, மொபைல் சார்ஜ் போடக்கூட ப்ளக் பாய்ண்டுகள் இல்லை, என் கார் சார்ஜர் வேறு பழுதாகி உயிரை வாங்கியது. முக்கியமாக மாதம் ஒருநாள் வீட்டில் அனுமதி வாங்கி குடிக்கும் எனக்காக என் தம்பி அங்கிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் செலவில் இரண்டு புல் ஸ்காட்ச் வாங்கி வந்திருந்தான், குடிக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள், ரூம் பாய்க்கு கொஞ்சம் காசு கையில் திணித்து குடித்தது தனிக்கதை.

 சரி வயனாடுக்கு வருவோம், குருவா ஐலன்ட் என்று கொடுமை அங்கே இருக்கிறது, மதியம் ஒரு மணிக்கு சென்றால் அதற்க்கு பின் அங்கு அனுமதி இல்லை என்றார்கள்.

பணசுரா அணை பற்றி ஓவர் பில்டப் கொடுத்தார்கள், அங்கே சென்றால் நீர் வரத்து மிக மிக குறைவு. பக்கத்தில் மீன் முட்டி அருவி இருக்கிறது அதுவும் அதே லட்சணத்தில் தான்.
 ஒரே பெரிய நிறைவும் ஆறுதலும் பூக்கொட் லேக், அங்கே நாங்கள் செல்லும் வழியில் மழை, அது அழகாக இருந்தது. செம்பரா, எடக்கல் பாறைகள், நீலிமலை காட்சிமுனை, கபினி என்றெல்லாம் சொன்னார்கள். சுமாராக இருந்தாலே உற்சாகமாக பயணங்களை அனுபவிக்கும்  எனக்கே போதுமடா சாமி என இருந்தது, ரூம் திரும்பி விட்டோம்.
 நீதி என்னவெனில், ஊட்டி குளிரை, பைகாரா வரை அனுபவித்து விட்டு கீழே கடும் வெயில் உள்ளதால் (கோவையை விட மிக அதிகம்) மண்டை காய்கிறது, அதிக எதிர்பார்ப்போடு போகக்கூடாது, மிக முக்கியமாக நீங்கள் மழை நன்கு பெய்து கொண்டிருக்கையில் அங்கு பயணம் செல்லுங்கள், ஒவ்வொரு சுற்றுலா இடத்துக்கும் தூரம் மிக அதிகம், அதாவது நாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து பணசுரா அணை போய், பூக்காடு முடித்தால் ஒரு நாள் ஆகிறது, ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள், அதே போலதான் எல்லா சுற்றுலா இடங்களும் உள்ளன, அங்கிருந்த ரோடுகளை போல் படுகேவலமான குண்டும் குழியுமான ரோடுகளை நான் சமீபத்தில் எங்குமே பார்க்கவில்லை, ஒரு சில இடங்களில் வண்டியை பத்து, இருபது ஸ்பீடில் ஓட்டினாலே போதும் என்றாகி விடுகிறது. நன்கு திட்டமிட்டால் மட்டுமே ஒரு நாளில் மூன்று இடங்களை பார்க்க இயலும்.
 அவ்வளவு செலவு செய்து அங்கே போனதை விட, ஆசனூரில் நீச்சல்குளம் உள்ள ஹில்வியூ போன்ற காட்டேஜ்களுக்கு இரண்டு கோழி வாங்கி போயிருந்தால், சிறப்பாக அசைவ உணவு செய்வார்கள், அனுபவித்து குடித்து  சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் விளையாடி,  மலையை ரசித்தபடி அமைதியாக அமர்ந்து விட்டு, இரவு வனஉலா சென்று அதிஷ்டம் இருந்தால் புலியை கூட பார்த்து திரும்பி இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை.

  

Thursday, January 21, 2016

மரம் காத்த பெண் டார்ஜன்கள்

மரம் வெட்டுவதற்கு எதிராக விநோபாபாவேவும், பகுணா என்பவரும் பல்லாயிரக்கணக்கான தூரம் நடந்தே சென்று பிரசாரம் செய்து சிப்கோ என்ற இயக்கத்தை வளர்த்து எடுத்தனர்

உத்தர்கந்த் மாநிலத்தில் ரெனி எனும் கிராமத்தில் இருந்த மரங்களை வனத்துறை சார்ந்தவர்கள் வெட்ட முயன்றனர், அந்த மரங்களை வெட்டும் முன்பு தங்களை வெட்டி விட்டு பின்னர் மரங்களை வெட்டுமாறு அப்பகுதி பெண்கள் மரத்தை கட்டிப்பிடித்து நின்று கொண்டனர்.

அதன்பின் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பெண்களை மரத்திலிருந்து பிரிக்க முடியாமல் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பி சென்று விட்டனர்
அவர்களே பெண் டர்ஜன்கள் என அழைக்கபட்டனர்.
ஒரு துளி  வன்முறை கூட  இல்லாமல் கிடைத்த வெற்றி அது!

சிப்கோ என்றால் கட்டிகாப்பது என்று பொருள், இந்த இயக்கத்தில் பெரும் பகுதி பெண்களே இருக்கிறார்கள் 

பின்னர் இதுவே பேரியக்கமாக மாறி காட்டில் உள்ள மரங்களை  வெட்ட அனுமதிக்காமல் வளங்களை காப்பாற்றி வருகிறார்கள், பெண்கள் ஒன்றிணைத்தால் எவ்வளவு வளங்களை கெடுக்கும் கூட்டத்தை அது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் கூட துரத்தலாம் என்பதை செயல்கள் மூலம் நிரூபித்தது அந்த இயக்கம்  

தமிழ்நாட்டிலும் பெண்கள் இருக்கிறீர்கள்,  இங்கும் மரம் வெட்ட பட்டுக்கொண்டு இருக்கின்றன, நமது நில வளங்களும் அழிந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் நினைவு படுத்துவது எனது கடமை      

மூலம்: எனது இந்தியா, எஸ் ராமகிருஷ்ணன்