Wednesday, February 24, 2016

தனலட்சுமி

நண்பனுக்கு ஒரு தங்கை இருந்தால் நமது வாழ்கையிலும் தங்கைகளின் எண்ணிக்கை ஒன்று கூடிவிடுகிறது தானே.

எனது கல்லூரியில் விஜி எனது நெருங்கிய நண்பனாக இருந்தான், இன்னும் நட்புடன் தொடர்கிறான். அவனுக்கு இரண்டு தங்கைகள், முதலாவது புனிதா, இரண்டாவது தனலட்சுமி. "தனா", என்று அழைப்பேன்.

முதலில் அவளை பார்த்தபோது டுடோரியல் காலேஜ் செல்வதாக சொன்னாள், ஒல்லியாக, உயரம் குறைவாக, சிவப்பாக எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பாள்.

"+2வில் பெயில் ஆகிட்டியா",

"இல்லண்ணா, கட் ஆப் மார்க் பத்தல, அதான் மறுபடியும் எழுத போறேன்"

"எழுதி?"

"டாக்டர் ஆக போறேன்" என்றாள் வெகு சீரியஸாக,

செமையாக சிரித்து விட்டேன்.

"சும்மா கதை விடாத"

"நெஜமாதான்னா" என்றவள் அம்மாவை அழைத்து எனக்கு விளக்கம் கொடுக்க சொன்னாள்.
நண்பனின் அம்மாக்கள்  ஆட்டோமாட்டிக்காக நமக்கும் அம்மா ஆகி விடுவார்கள்.
"ஆமாம் கண்ணு' (இப்போதும் அப்படிதான் அழைக்கிறார்கள்) "அவ டாக்டருக்கு தான் படிக்கிறா"

அம்மாவின் முன்னாள் சிரிக்க முடியாது, கல்லூரியில் எனது தோழர்களுடன் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன்.
விஜி எதுவும் சொல்லாமல் சும்மா கேட்டுகொண்டிருப்பான்.

அவன் குடும்பம் அப்போது மிக வறுமையில் இருந்தது, கொஞ்சம் தோட்டம் இருந்தாலும் அதிலும் வருமானம் இல்லை. அப்பா கிடைத்த வேலைகள் செய்து மிகுந்த சிரமத்துடன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். பெரிதாக அம்மாவும் அப்பாவும் படிக்கவும் இல்லை.

விஜி கல்லூரி தொகையை கூட கட்ட முடியாமல் சிரமப்படுவான். நாங்கள் படித்து ஒரு தனியார் கல்லூரி வேறு, ஏதாவது ஒரு காரணம் சொல்லி காசு பிடுங்குவார்கள்.
இன்னொரு தங்கையான புனிதாவும் ஒரு கல்லூரியில் படித்து கொண்டிருந்தாள்
இதில் தனாவை எப்படி படிக்க வைக்க போகிறார்கள் என மலைப்பாக இருந்தது. சிறிய பெண் ஏதோ ஆசை படுகிறது என்ற எண்ணம் மட்டும் இருந்தது.

எனக்கும் "தனா"விருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது, அது வேகம்.
எனக்கு வாகனத்தில் அதிவேகமாக செல்வதென்றால் ஒரு வெறி (எங்கியாவது அடி பட்டே சாக போறான்), அவளும் நானும் பைக்கில் ஒருமுறை சென்ற போது, பயந்து விடுவாள் என 70ல்(அது எனக்கு ரொம்ப கம்மியான வேகம்)
"என்ன இவ்ளோ மெதுவா ஓட்டுறீங்க, பயமா அண்ணா?" என்றாள். என் வேகத்தில் மிக துல்லியம் இருக்கும், சாலை பற்றிய கணிப்பும், வாகன தூரம் கணக்கிடுவதில் இருந்த தெளிவும், எனது வண்டியின் கண்டிசனும், எந்த வாகனமாக இருந்தாலும் அதை தாண்டி செல்ல தூண்டும்.

அப்படி ஒரு பெண்ணை நான் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை, கிட்ட தட்ட 120, 130ல் போகிறேன் கொஞ்சம் கூட பதட்டமோ பயமோ அவளிடம் இல்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என கடைசியில் உங்களுக்கு புரியலாம்.

அதற்காக வேகமாக செல்லுங்கள் என நான் சொல்ல மாட்டேன், ஒரு முறை காலுடைந்து ஆறு மாதம் படுத்த படுக்கையாய் இருந்திருக்கிறேன். அதிலிருந்து எனது காரில் கூட நான் அதிவேகமாய் செல்வதில்லை.

காலம் ஓடுகிறது, கல்லூரியை விட்டு வெளியே வந்து ஆளுக்கு ஒரு பக்கமாக சிதறி போனோம், எங்கள் லாரி இரண்டு முறை அடி பட்டு இன்சூரன்ஸ் கூட கிளைம் செய்யமுடியாமல் போய் விற்றும் கடன் அடைக்க இயலவில்லை, இந்த சமயத்தில் எனது தந்தை கடும் விபத்துக்கு உள்ளாகி, கை கால் இரண்டிலும் அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்த வேண்டி வந்த போது, அங்கு டாக்டராக நான் "தனா"வை பார்த்தேன்                    

ஆம். தனாவேதான் என் கண் முன்னாள் டாக்டராக வந்து நிற்கிறாள், எனது அப்பாவிற்கு மருத்துவம் செய்கிறாள், அவளுக்கான பணத்தை வாங்க மறுக்கிறாள்.
மருத்துவம் முடித்து வீட்டிக்கு அவளது காரிலேயே ட்ராப் செய்கிறாள்.
"எப்படி தனா?" என்றேன்
"ஒரு வெறியும் வேகமும் தாண்ணா" என்று சிரித்தபடி சொல்கிறாள்.

அவள் கடந்து வந்த பாதை சுலபமானதல்ல, ஐந்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் சிரமப்பட்டே நகர்த்தி வந்திருக்கிறாள், ஒன்றும் இல்லாத கலை அறிவியல் கல்லூரியிலேயே நமது ஆடைகள் சற்று மோசமாக இருந்தால் படு கேவல படுத்துவார்கள். மருத்துவ கல்லூரி என்றால் கேட்கவே வேண்டாம், இயல்பாகவே இருந்து அனைத்தையும் கடந்து சாதித்திருக்கிறாள்.

பணம் கொழிக்கும் தனியார் துறையில் சேராமல், சொந்த ஊரிலேயே இப்போது அரசு மருத்துவராக, தனது கிராம மக்களுக்காக பணியாற்றும், பல மாணவ மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருக்கும்
தனலட்சுமி என்ற இளம் டாக்டருக்கு ராயல் ஸல்யூட்....
வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்புகளை வைத்திருக்கிறது பாஸ். வாழலாம் வாங்க.

(பின் குறிப்பு: விஜி ஈரோட்டில் மருந்துக்களை மொத்தமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறான், இந்த தொழிலதிபர் போன வாரம்தான் என் ஆலோசனைப்படி Marathi swift desire புதிதாக வாங்கி இருக்கிறான், புனிதா ஒரு அரசு கல்லூரியில் கணினி ஆசிரியையாக பணியாற்றுகிறாள், அம்மாவும் அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்)      
             

No comments:

Post a Comment