Sunday, February 21, 2016

பொலவக்காளிபாளையம் கிரிக்கெட் அணி

பொடிப்பையன்களாக இருந்த நாங்கள், வயதுக்கு வந்ததும், பொலவக்காளிபாளையம் கிரிகெட் அணியை இரண்டாக பிரித்து  (பொகாபா ஜூனியர்), முதல் கிரிக்கெட் டோர்ணமன்ட்டில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்து, எங்கள் கையில் இருந்த ஐந்து பத்துகளை பொறுக்கி, நூறு ரூபாயை கட்டி விட்டோம். உள்ளூர் சீனியர்களின் கடும் ஆட்சேபனையை வேறு நாங்கள் சந்திக்க வேண்டி வந்தது.

 
மொத்த பரிசே ஆயிரம் ரூபாய் தான், அப்போது எங்களுக்கு அது ஆயியியியியிரம் ரூரூரூரூவா.

  டோர்ணமென்ட் நெருங்க நெருங்க ஆயிரம் ரூபாய் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்ற பேச்சு வார்த்தை ஒரு பக்கம், அதி தீவிரமான பயிற்சிகள் ஒரு பக்கம்.

  முந்தய இரவு, எதிரணி விவரம் சேகரித்து கொண்டு வந்து சேர்ந்தான் நண்பன், மிக முக்கிய சதி ஆலோசனைகளும், வெற்றி வாய்ப்புகளும் பற்றி தீவிர பேச்சு வார்த்தையில் இருந்தபோது, "கிரிக்கெட் திட்டம் போட்டு ஜெயிக்கிற விஷயம் இல்லடா" என்று வயிற்றில் புளியை கரைத்தார் பொறாமை பிடித்த சீனியர். "அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம், உன் வேலைய பாருண்ணா" என்று அவரை கடுப்பேத்தி கிளப்பினோம்.      
 
  காலை சைக்கிளில் (அப்போதெல்லாம் அதுதான்) ட்ரிபில்ஸ் அடித்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஒரு குளத்துக்கு, நாக்கு தள்ள வந்து சேர்ந்தோம், அதுதான் கிரிக்கெட் நடக்கும் இடம், மைக் எல்லாம் கட்டி, எங்கள் ஊர் அணி வந்து விட்டதை அறிவித்த போது, எங்களுக்கு பரவசத்தை விட பயம்தான் அதிகம் இருந்தது. மேட்ச் பார்க்க எங்களுக்கு முன்னரே எங்கள் சீனியர் அணி துண்டு போட்டு உக்கார்ந்து இருந்ததே முதல் காரணம்.

  ஆரம்பித்தது மேட்ச், டாஸ் ஜெயித்தோம், டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுப்பதே அப்போது எழுதப்படாத விதி. முதல் பேட்ஸ்மேனாக நானும்,  கில்கிறிஸ்ட் என்று அறியப்படும் காட்டான் கோவிந்தனும் களமிறங்கினேன், முதல் பாலிலேயே போல்ட் ஆகி வெறியேற்றினான் காட்டு கோவிந்தன். எங்கள் அத்தனை திட்டமும் தவிடு பொடியாக, எதிரே நின்று, எங்கள் அணியில்  ஒவ்வொருவராக அவுட் ஆவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன், நான் மட்டும் டொக்கு வைத்து சாமாளித்து ஏழு ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 33 ரன்கள் (இதில் அவர்கள் கொடுத்த எக்ஸ்ட்ராஸ் 19) குவித்தோம்???

  அணி தலைவனாகிய நான் கடைசி வரை போராடி ஒரு ரன்கூட  எடுக்காமல் திரும்பியதை பார்க்க எங்களது சீனியர்களுக்கு பேரானந்தமாக இருந்திருக்கும். "சொன்னமே! கேட்டீங்கலாடா?" என்று கவுன்டர் வேறு.

  பந்து வீச்சு ஆரம்பமானது, எங்கள் ஊரின் வேக புயல், ஊரின் ஒரே ஷோகிப் அக்தர், "ஏறி பந்தான்" என அழைக்க படும் அதிவேக பந்து வீச்சாளன் ஷங்கர் ஆட்டத்தின் முதல் ஓவரை ஆரம்பித்தான், (முன் குறிப்பு இவன் பந்து வீசினால் பாட்டை கீழே போட்டு விட்டு ஓடியவர்கள் கூட உண்டு)  
    முதல் ஓவரின் முடிவில் 13 வைடு, 1 நோபால் மட்டும் கொடுத்து ஒரு விக்கட்டை வேறு கைப்பற்றி சாதனை படைத்தான்
"ஏண்டா?" என்றதற்கு "கண்ட்ரோல் கிடைக்கல மாமன் பையா" என்றான்.

அவன் என் மாமன் மகனாக வேறு போய் விட்டதாளும், நானே சிபாரிசு என்பதாலும் வேறு ஏதும் சொல்லவும் முடியாது, அடுத்த ஓவரில் மாட்சை முடித்து கொண்டு குறுக்கு வழியாக யாருக்கும் தெரியாமல் ஊருக்கு போய் சேர்ந்து விடலாம் என ஸ்பின் என்று நினைத்து கொண்டு வீசும் ராஜேந்திரனை கூப்பிட்டு ஓவர் கொடுத்தேன்.

இருப்பதிலேயே மட்டமான பந்து வீச்சாளன் என்றால் அவன்தான், பிட்சை தவிர எல்லா திசையிலும் பந்து வீசும் திறமைசாலி. சில சமயத்தில் அவன் வீசும் பந்து பின்புறமாக போய் பவுண்டரி கோட்டை தொடும் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இறுதி காட்சியை நெருங்கி விட்டீர்கள், உங்கள் இதயம் பலவீனமாகும் சம்பவமும் இனி நடக்க போகிறது

நான்கு விக்கட்டை கைப்பற்றி ரன் ஏதும் கொடுக்காமல் எங்கள் எல்லோருக்கும் ஹார்ட் அட்டாக் வர வைத்தான் ராஜேந்திரன். பிறகுதான் தெரிந்தது எங்க அணியை விட படு மொக்கையான அணியை எதிர்த்து விளையாடி கொண்டிருக்கிறோம் என, பின்னர் எங்கள் வீர தீர சாகசங்களை காட்டி எட்டு ரன்கள் மீதம் இருக்கையில் நாங்கள் வெற்றி வாகை சூடினோம்.

  அடுத்த மேட்சிற்கு ராஜேந்திரன் தன்னை கேப்டனாக அறிவிக்க வேண்டி கேட்டு கொண்டான்.

  

No comments:

Post a Comment