Sunday, February 21, 2016

கல்லூரி காதல்

முன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது


"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், நீ இல்லாட்டி நான் தூக்கு மாட்டீட்டு செத்துருவேன்" என்ற ரீதியில் ஒரு தற்கொலை மிரட்டல் காதல் கடிதத்துடன் ஆரம்பிக்கிறது எனது கடந்த கல்லூரி வாழ்க்கையின் உண்மை கதை.

"கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  உன்னை பாக்குதுடா" என்றான் உயிர் நண்பன் ஈஸ்வரன் (பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை), முதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்திருந்த காலம்

அப்போதுதான்  ஏழு பேர் கொண்ட மொக்கை க்ரூப்பின் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தேன்.

வீட்டிக்கு தெரிந்தால் சொந்தம் பந்தம் எல்லாம் சேர்ந்து கல்லூரிக்கே வந்து அடி பிரித்துவிடும் அபாயமும் எனக்கு இருந்ததால்,
"அது என்னை ஏண்டா பாக்கணும்?" என்று ரிவர்ஸ் கியர் மாற்றினேன் .

"நம்மை ஒரு பொண்ணு பாக்கிறது எவ்ளோ பெரிய மேட்டர் தெரியுமா "
என்று வண்டியை முன் நோக்கி தள்ளினான் சத்தி (இவன் பெயரை எல்லாம் மாற்றினால் என்ன மாற்றா விட்டால் என்ன?).

கவிதா ஒன்றும் கல்லூரியில் அழகி கிடையாது என்றாலும், சோறு பார்த்து பத்து நாளானது போல் இருக்கும், குடும்ப ஒல்லிவிளக்கு (குத்து விளக்கு கூட கொஞ்சம் குண்டா இருக்கும் பாஸ்) என்று வைத்து கொள்ளுங்கள்.

கவிதா தூது விட்டது, என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று.

இப்போது கொஞ்சம் என் பெருமைகளை பீத்தி கொள்ளும் நேரம் வந்து விட்டது

என்னை பற்றிய பிறரின் அபிப்ராயங்கள்

"அட்டண்டன்ஸ் லாக்" HOD

"கிளாஸ் ரூம்ல கிரிக்கெட் விளையாடுறான்," English lecturer 

"செக்யூரிட்டிக்கு காசு கொடுத்து, 2ன்டு பிரீயடே வெளியே போறான்" Office boy.

"அன்பே, உன் அப்பனை ஓடி ஒளிந்து கொள்ள சொல் நாய் பிடிக்கும் வண்டி வருகிறது"ன்னு கவிதை எழுதுறான்" Maths.

"நீயெல்லாம் திருந்தவே மாட்டியா மூதேவி" vice president 

எனது கல்லூரியில் அனைத்து தவறுகளுக்கும், பெரிய தண்டனை பைன்,  அவர்கள் அப்போதுதான் கல்லூரியை விரிவாக்க கட்டடம் கட்டி கொண்டிருந்தார்கள். நான் சேர்ந்து இருந்தது ஒரு தனியார் கல்லூரி (நம்ம மார்க்குக்கு அரசு கல்லூரில அப்ளிகேசன் கூட தரமாட்டாங்க) கையில் கொஞ்சம் காசு புரண்டதால் தான், பெரிய பிரச்சனைகளில் மாட்டாமல் பைன் கட்டியே ஒரு மானம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

இவ்வளவு சிறப்பு தகுதிகள் வாய்ந்த என்னிடம் தான் தனியாக பேச ஆசை பட்ட கவிதாவை தனியாக தைரியமாக சந்தித்தேன், கையில் ஒரு பேப்பரை கொடுத்து விட்டு ஒரு கேனை சிரிப்பு சிரித்து கொண்டு ஓடி விட்டது.

தேவைப்பட்டால் இதன் தொடர்சியான இரண்டாவது பாராவை மீண்டும் படித்து விட்டு திரும்ப இங்கேயே வரவும்.

இது என்னடா வருங்கால ஒலக தலைவனுக்கு வந்த சோதனை என்ற எண்ணத்தில் எனது மொக்கை க்ரூப்பை கூட்டி ஆலோசனை நடத்தினேன்.

மூன்று ஆதரவும்(ஈஸ், சத்தி, திரு), நான்கு எதிர்ப்பும் (விஜி, கதிர், தனபால், தாமு) இருந்ததால், (இது கரஸ்க்கு மட்டும் தெரிஞ்சுதுன்னு வச்சிக்க, பைன் எல்லாம் கிடையாது மச்சி, காலேஜ் விட்டு ஒரேயடியா தொரத்தி விட்ருவாங்க -தனபால்)
   
"கொஞ்சநாள் டைம் குடு, நாட்டை திருத்தனும், அப்பாவை அம்பானியாக்கணும்" என்ற ரீதியில் பேச்சு வார்த்தை நடத்தி கவிதாவிடம் தற்காலிகமாக தப்பித்தேன்.

"அவன் எதுக்குடா காலேஜ் போகாம, லாரில போறான்?" என்ற என் அப்பாவின் கடும் சுடு சொற்களையும்  மீறி, அப்பா வாங்கி இருந்த புதிய NP லாரியில் ஏறி இந்திய சுற்றுபயணம் செய்யும், நிலைக்கு என்னை நானே தள்ளி கொண்டேன்.

காலேஜ் 10 நாள் லாரி 20 நாள் என இரண்டு வருடத்தை ஓட்டி, கொண்டிருந்த பொன்னான நாட்களில், இரண்டாவது வருட முடிவில் கவிதா மீண்டும் என்னை தனியாக சந்திக்க, தூது விட்டது.

மறுபடியும் சத்திய சோதனையா, சரி ஒரு வருஷம் தாங்கிற மாதிரி ஒரு பொய்யை (லாரி லாஸ், கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணீட்டு இருக்கேன்) ரெடி பண்ணிக்கொண்டு சந்திக்க போனேன்
ஆனால், கவிதா முகம் முழுவதும் வெக்க சிரிப்புடன், திருமண பத்திரிக்கையை கையில் கொடுத்து
"அண்ணா, எனக்கு கல்யாணம் மறக்காம வந்துருங்க"ண்ணா" என பாசமலர் படம் காட்டும் என்று நான் சத்தியமாய் கனவிலும் நினைக்கவில்லை.

பின் திருமணத்திற்க்கு போய்விட்டு, அந்த பாவப்பட்ட மாப்பிள்ளையிடம் "கவிதா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும் ப்ரோ" என பிட்டு போட்டு சரக்கடிக்க காசு வாங்க வேண்டி வந்தது.

அந்த தெய்வீக காதலை நான் ஏற்று கொண்டிருந்திருந்தால், டூயட் பாடி, தாடி வைத்து, குடியில் மூழ்கி, கருப்பு கம்பளியை போர்த்திகொண்டு, பக்கத்தில் ஒரு சொறிநாயை கட்டி வைத்து  "இந்த பொம்பளைங்கள மட்டும் நம்பவே கூடாதுங்க எசமான்" என்று சிலகாலம் இருந்திருக்கும் வாய்ப்பை தவற விட்டு விட்டேன்.

"ஆருயிர் தங்கை" கவிதா எங்கிருந்தாலும் வாழ்க 

2 comments:

  1. very nice . this is happening exactly like this even now with no change !!! liked your humor sense

    ReplyDelete
    Replies
    1. I am really happy for your comments, thank you so much. :)

      Delete