Wednesday, June 13, 2018

காஷ்மீரில் ரட்சகன்

மம்மூட்டியின் மலையாள புத்தகமான "காழ்ச்சப்பாடு" எனும் புத்தகத்தை  மூன்றாம் பிறை எனும் பெயரில் திருமதி சைலஜா மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு நடிகராக பார்த்தவரின் பின்னால் என்ன இருக்க போகிறது என்ற எண்ணத்தில் தான் தொடங்கினேன். ஆனால் அன்பால் பின்னப்பட்ட, சமூக பார்வை கொண்ட தத்துவ புத்தகமாக தொடர்ந்ததால் பெரும் ஆர்ச்சர்யம் கொள்ள வேண்டியதாயிற்று.

இன்னொன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும், சைலஜா அவர்களின் மொழி பெயர்ப்பு மிகுந்த ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. மொழி பெயர்ப்பு புத்தகம் வாசிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அதன் அந்நியத்தன்மை நம்மை ஒன்ற விடாது. ஆனால் இதில் அதை தகர்த்துவிட்டு முழுதாக புத்தகத்தில் மூழ்க செய்கிறார் சைலஜா.

மொழிநடையும், அழகும், பரபரப்பும் கொண்ட ஒரு பகுதியை உங்களுக்கு படிக்க தருகிறேன், அதிலேயே தெரிந்துவிடும் இந்த புத்தகத்தின் மொத்த வீச்சும்.
----------------------------------------------------------------------------------------
பனிமலையில் சலனமற்ற அமைதி என்னை காஷ்மீரை நேசிக்க வைத்தது. பார்வை துளித்துளியாய் முடியும் நேரம் வரை வெண் பஞ்சு கூட்டமாய் கொட்டிக்கிடக்கும் பனி ப்ரவாகமும், தத்தி தத்தி விழும் பால்யத்தை போன்ற பனி துகள்களும் இப்போதும் மனதில் உறைந்திருக்கிறது.பனி குன்றுகளில் இருந்து குன்றுகளுக்கு தாவும் காட்சிதான் அன்றைய படப்பிடிப்பு.


காலை பதினோரு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. "குல்மர்க் ஹில்டன்" விடுதியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்த பின்னரே படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைய முடியும். சக்கரத்தில் சங்கிலி பிணைத்த வண்டிகளையே பனிமலையில் பயன்படுத்துகிறார்கள். நான், சுரேஷ் கோபி, முகேஷ், கணேசன், விஜயராகவன், குஞ்சன், சித்திக், மோகன், ஜோஸ், மணியன் பிள்ளை ராஜு என எல்லோரும் சேர்ந்து சங்கிலியால் சக்கரம் பிணைக்கப்பட்ட வண்டியில் புறப்பட்டோம். பிரதான சாலையை விட்டு மலைப் பாதைக்கு திரும்பியதுமே புறக்காட்சிகளின் வசீகரம் எங்களை ஈர்த்தன. பனியால் சூழப்பட்ட வெண்மையென்ற ஏக நிறமானாலும், நிற்க வைத்து கவனத்தை கோரும் அழகு அதற்கிருந்தது. காலை பத்து மணி. வண்டியில் கேட்ட அபஸ்வரத்தின் தொடர்ச்சியாய் நின்று போன வாகனத்திலிருந்து இறங்கி பார்த்த டிரைவர் ஹிந்தியில் சொன்னான்.

"சின்ன பிரச்னை தான் உடனே சரி பண்ணிடறேன்"

பிரச்னையின் தீவிரத்தை ட்ரைவர் உட்பட நாங்கள் யாருமே புரிந்து கொள்ளாமல் போனதால், வண்டிக்கு உட்கார்ந்தபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். பிறகு வெளியே இறங்கி வந்து சூழலின் அழகை ரசித்தோம். கேலிக்கும், கிண்டலுக்கும் குறைவதும் இல்லாமல் நேரம் நகர்ந்தது. மகிழ்வின் சிறகடிப்புகளில் இரண்டு மூன்று மணி நேரம் உதிர்ந்திருந்தது. பேச்சின் கதகதப்பில் மெல்ல மெல்ல ஈரம் படர்ந்தது. பலருக்கும் கிண்டலே வராமல் போன நேரமது. பசிக்க தொடங்கிய நேரத்தில் சாப்பாடு இல்லையென்றாலும் நல்ல சாப்பாட்டை பற்றி பேசலாமே என எப்போதோ சாப்பிட்ட செம்மீன் குழம்பு வைப்பதை நேர்த்தியாக சொல்ல தொடங்கினேன். சுத்தமாக கழுவிய செம்மீனை, மிளகாய், வெங்காயம், இஞ்சி வைத்து நன்றாக கல்லில் தட்டி எடுத்து புரட்டி கொள்ள வேண்டும். மசாலாவில் ஊறிய செம்மீனை இளந்தீயில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி நீர் வற்றும்போது குடம்புளி கறிவேப்பில்லையில் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

பசியை மறக்க சாப்பாட்டை பற்றிய விவரணையே சிறிது நேரத்திற்கு போதுமானதாக இருந்தது. எங்கள் வண்டியில் தண்ணீர் கூட இல்லை. பழுது சரியாகி விடுமென்று டிரைவர் இன்னமும் சொல்லிக் கொண்டிருந்தான். மேலும் மூன்று மணி நேரம் கரைந்திருக்க பலரின் முகம் இருளடைந்தது. கடைசி முறையாக வண்டியில் இருந்து வெளியே வந்த டிரைவர் இப்போதைக்கு வண்டியை சரி செய்ய முடியாதென்றும் நாளை காலை மெக்கானிக் வந்தால்தான் முடியுமென்றும் சொல்லி அதிர வைத்தார். பணியில் வண்டி புதைந்து நீரன்று பழக்கமிருந்த டிரைவரின் பேச்சில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதைக் கேட்ட எங்கள் முகங்களில் ரத்த நாளங்கள் வற்றி போனது.

               மணி ஆறு, காலையில் ஹோட்டலில் எதுவும் சாப்பிடாமல் லொகேஷனில் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு அந்தக் குளிரிலும் பசி அதிகரித்தது. பசியில் தளர்ந்து போயிருந்தோம். ஒரு பகல் முழுவதும் அங்கேயே நின்றிருந்த போதும் எந்த வாகனமும் எங்களை கடந்து போகவில்லை. எங்களை தேடி யாரும் வரவும் இல்லை. ஒருவேளை நாங்கள் பாதை மாறி வந்திருக்கலாம் அல்லது பனிமலை சரிந்து மூடியிருக்கலாம். சாலையின் ஒருபுறம் மலைக்கு மேலே போகும் பனிமலை, மறுபுறம் ஆழமான பள்ளம். அந்த இடத்தின் பேரழகு ஏதோ ஒரு பயங்கரத்தை தனக்குள் புதைத்து வைத்திருப்பதாக தோன்றியது                               
பனிக்காற்றை தடுக்கும் போர்வைகளோ, கம்பளி உடைகளோ எங்களிடம் இல்லை, பகலில் அணியும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தோம். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பனிக்காற்றின் தாண்டவம் தொடங்கிவிடும். அந்த அதிர்வில் அதன் பாகங்கள் உடைந்து விழலாம், வண்டியில் உக்காந்திருப்பது கூட ஆபத்தானது. நாங்கள் பேச்சற்று போயிருந்தோம். எங்களிடம் வயர்லெசோ அலைபேசியோ இல்லை. எப்படி இந்த இரவை கடப்பது? விடிந்தால் எங்களில் யார் மிச்சமிருப்பார்கள்? அதி சீக்கிரமாக சூழல் இருள துவங்க பனிக்காற்றின் ஊளையிடல் ஒரு துர்கனவினை போல எங்களை கவிழ்த்தது. பனியிலும் பயத்திலும் உறைந்து போனோம். சட்டென அதிர வைப்பது போல மலை உச்சியிருந்து ஒரு குரல்.

 "ஏய் மம்முட்டி"

   அனைவரும் அதிர்ந்து ஒலி வந்த திசையில் திரும்பினோம், இந்த இரவில் காஷ்மீரின் நடுக்கமான குரலில் யார் என்னை கூப்பிடுவது?

  மலையில் இருந்து மூன்று பேர் பெட்டியை தூக்கிக்கொண்டு இறங்கி வந்தார்கள். உடல் முழுவதும் கம்பளிகளால் மூடி இருந்தார்கள். அருகில் வந்தபோது ஆஜானுபாகுவான ஒரு ஆணும், பெண்ணும், இளம்பெண்ணுமாக மூன்று பேர் என்பது புரிந்தது. கனவா அல்லது நிஜமா என்றே தெரியவில்லை. அவர் தன்  கையை என்னை நோக்கி நீட்டி பச்சை மலையாளத்தில்,

"நான் கர்னல் கமால், திருவனந்தபுரம்" என்றார்.

இறுகப் பிடித்த அவருடைய கைசூட்டின் இதமான வெப்பம் மிகப் பெரிய நிம்மதியாய் என் உடல் முழுவதும் பரவியது. எங்கள் எல்லோர் முகங்களிலும் வர்ண மொட்டுக்கள் பூக்க ஆரம்பித்தன. நாங்கள் கர்நாளிடம் எங்கள் சூழ்நிலையைச் சொன்னோம்.

எங்கள் வண்டி நிற்பதற்கு கொஞ்சம் மேலேதான் அவருடைய வீடு. பக்கத்தில் இதேபோல் வேறு சில வீடுகளும் இருக்கின்றன. ஆனால் மழையின் அடுத்த அடுக்கிற்கு ஏறினால்தான் அந்த வீடுகளை பார்க்க முடியும். பனி மூடியதால் அவற்றைக் கொண்டுபிடிப்பதும் சிரமம். வீட்டிலிருந்து வண்டிப்பாதையும் தெரியாது. எங்களுடைய வண்டி பழுதாகி நின்றிருந்த இடத்தையும் தாண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற அவர்களுடைய வண்டியை எடுக்கவே அவர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். மகளை இரவுப்பயணத்திற்கு டில்லிக்கு அனுப்பவேண்டும். காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் எங்கள் நிலைமையை அவரிடம் சொன்னோம். அவர் எங்களை அவர்களின் வீட்டிற்கு அவசரமாய் அழைத்துப் போனார்.

ஊருக்கு போக இருந்ததால் அவர்கள் வீட்டில் அன்று சமைத்திருக்கவில்லை. சமையலுக்கான பொருட்களும், பெரிதாக அந்த வீட்டில் இருப்பில்லை. கிடைத்த கேக்கும்,ரொட்டி துண்டுகளும் கருப்பு டீயும் அதீத ருசியை தந்தன. இனி இறந்து போக மாட்டோம் என்ற தைரியம் துளிர்விட முகம் தெளிய ஆரம்பித்து மற்ற விஷயங்களையும் யோசிக்க வைத்தது. கமாலின் வீட்டிலிருந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு தொலைபேசியில் தகவல் தந்தோம்.

கமால் அவருடைய கார் நிற்கும் இடத்திற்கு எப்போதும் வேறு வழியில் தான் செல்வாராம். அன்றைக்கு மட்டுமே இந்த வழியில் வந்திருக்கிறார். பகல் முழுவதும் அதே இடத்தில பட்டினியால் அலைந்தபோதும் கொஞ்சம் மேலே சாலை ஓரத்தில் பனியில் புதைந்தபடி இப்படியொரு வீடு இருப்பதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் இரவில் ஆபத்தின் விளிம்பிலிருந்து எண்களைக் காக்க ஒரு ரட்சகனாய் கமால் வந்தார். ஆகாயத்திலிருந்து ஒரு ரட்சகன் இறங்கி வருவதை போலத்தான் முதல் பார்வையில் அவர் எங்களுக்கு தெரிந்தார். அதன் பின்பு அங்கிருந்த நாட்களில் கமாலோடு நெருங்கிய நண்பர்களானோம். அந்த திருவனந்தபுரத்து மலையாளியை அதற்கு பின்பு நான் சந்திக்கவே இல்லை.

"உயிர் காத்த ரட்சகனே இப்போது நீ எங்கிருக்கிறாய்?"

கடுங்குளிரிலும் பனிபொழிவிலும் காப்பாற்றப்பட்ட அந்த இரவின் அடர்த்தியில் நான் ராணுவ வீரர்களைப் பற்றி பலவாறு யோசித்தபடி இருந்தேன்.

ஒரு நாளில் தற்செயலாய் அமைத்த பட்டினியையும், குளிரையும், நிர்கதியையுமே எங்களால் தாள முடியாமல் தளர்ந்திருந்தோம். நாள் கணக்கில் உணவும் தண்ணீருமில்லாமல் தனியாளாய் சில இடங்களில் மாட்டிக்கொள்ளும் ராணுவ வீரன், ஐஸ் கட்டியை கையில் எடுத்து உரசி சூடாக்கி, தண்ணீரை குடித்த அனுபவதியெல்லாம் கமால் சொன்னார். நாம் தூங்கும்போது, இந்த அவஸ்தையிலும், நம் நல்வாழ்வுக்காக, பாதுகாப்புக்காக, நிம்மதிக்காக, நாம் காணும் சந்தோச கனவு கலையக்கூடாது என்பதற்காக, அவர்கள் பனிபொழியும் இரவுகளில் காவலுக்கு நிற்கிறார்கள்.

எல்லை பாதுகாப்பில் இருக்கும் ஜவான்களுக்கு வாழ்விற்கும், மரணத்திற்குமான தூரம் ஒரே ஒரு வெடிகுண்டின் இடைவெளியாக மட்டுமே இருக்கிறது. நம் எல்லோரையும் அதன் அழகின், கம்பீரத்தை வழி ஈர்க்கும், பனியில் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் கன்னி வெடிகளுக்கு மேலே வைக்கும் ஒரு காலடியில் அகலம் மட்டுமே இருக்கிறது. ராணுவவீரர்கள் தங்களுக்குள் எந்த பகையுடனுமில்லை. அவர்கள் பரஸ்பரம் அறிமுகமே இல்லாதவர்கள். ஆனால் தங்கள் நாட்டிற்காக பகையியேற்றிருக்கிறார்கள்.

ஒரு கோழியை கொல்லக் கூட தயங்கும் சாத்வீகன்தான் எதிரில் வரும் ஒரு மனிதனின் இதயத்துக்கு நேராக மிகச்சரியாக குறிபார்க்கிறான். வெடிகுண்டை வெடிக்க செய்து மனிதகுலத்தைச் சீதைத்தழிக்கிறான்.

பனியிலும் கடுங்குளிரிலும் தூங்காமல் பார்வையைக் கூர்மையாக்கி, துப்பாக்கியுடன் உலவும்பொழுது மனதில். வீட்டில் உள்ளவர்களின் முகங்களோ, சொந்தபந்தங்கள் நினைவுகளோ இல்லை. மின்னி மறையும் ஒரு நிமிட இடைவெளிகூட ஒரு யுத்தத்திற்கான முதல் அழைப்பாய் இருக்கலாம். எந்தக் சூழலிலும் உள்ளே அணையாமல் இருப்பது தேசத்தின் மீதான மாறாத பற்று மட்டுமே.

யுத்த காலத்தில் மட்டும் நாம் இவர்களை பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறோம். யுத்தமில்லாத நேரங்களில் வெறுமனே தின்றும், குடித்தும், அலைந்தும் நாட்களை கடத்துபவர்களாகத்தான் நாம் அவர்களை நினைக்கிறோம். "அவன் மிலிட்ரிக்காரன்" எனும் தொனியில் விடுமுறையில் கொண்டுவரும் மதுகுப்பிகளிலேயே நம் கவனம் குவித்து, அவனுடைய தியானத்திற்கான மரியாதையை சிதைக்கிறோம். மிகச்சரியாக இயற்கையின் பேரழிவையோ, ஒரு வெடிகுண்டின் சப்தத்தையோ அனுபவித்தறியாத ஒருவனுக்கு பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் பார்ப்பது மட்டுமே யுத்தம். எல்லையில் நடக்கும் கலவர பேராவஸ்தை பற்றி அவனுக்கு என்ன தெரியும்? நம்முடைய தேசத்தின் மீதான பிரியம் கூட எதார்த்தத்தில் இருந்து மிக தொலைவில் நிற்கிறது.

வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களை நேசிப்பது போல, நமக்காக தன் சந்தோசத்தின் துளிகளைக் கூட தியாகம் செய்து காவலிருக்கும் அந்த வீரர்களை நாம் நேசிப்போம். மரியாதை செய்வோம், அவர்களை நினைத்து பெருமைப்படுவோம். கர்வப்படுவோம். அவர்களை போல் இந்த தேசத்திற்கு என்ன செய்யலாம் என யோசிப்போம்

ஜெய் ஹிந்த்.
-------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment