இளையராஜாவை பற்றியோ அவர் பிறப்பு மற்றும் நுண் தகவல்களை பற்றியோ நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் கூகுள் என்னை விட அதிகமான விபரங்களை வைத்திருக்கும்.
எனக்குள்ளும் என்னை சுற்றிய மனிதர்களுக்குள்ளும் ராஜா எனும் இசை பெருங்கடல் ஏற்படுத்திய தாக்கங்களை சொல்வதே என் விருப்பம். ராஜா தன் இசை மூலம் என் சோர்ந்த தருணங்களில் மீட்டெடுத்து, மகிழ்ச்சியான தருணங்களை தந்து, ஏதாவது ஒரு பாடல் மூலமாக பல நினைவுகளை கிளறி விடும் அந்த அற்புதத்தை தான் நினைவு கூற விரும்புகிறேன்.
கால் நூற்றாண்டை கடந்து விட்ட நிலையிலும் "இளமை இதோ இதோ" என்று என்றோ இசையமைத்த அந்த பாடல் தான் இன்றைக்கும் புத்தாண்டு பாடல். எல்லா மதமும் போற்றும்படியான, காலத்தால் அழிக்க இயலா பாடல்களை படைத்திருக்கிறார் ராஜா.
எண்பதுகளின் மத்தியில் வந்த மோகன் படங்கள், இளையராஜாவின் பாடல்களுக்காகவே சூப்பர் ஹிட் அடித்துக் கொண்டிருந்தன என்பதிலிருந்தே அவரின் இசை ஆளுமையை புரிந்து கொள்ளலாம்.
தொண்ணூறுகள் இளையராஜாவின் காலம். அவர் அந்த சமயங்களில் இசையமைக்காத படங்கள் வெகு குறைவே எனலாம். கதாநாயகர்கள் படத்தைவிட இளையராஜாவின் படத்தை பத்திரிகைகளில் முன்னிருத்தி விளம்பரம் செய்யப்பட்டன.
எனக்கு முந்தைய தலைமுறைகளான எனது மாமா, அத்தை, அக்கா, சித்தி போன்றவர்களுடைய ரத்தத்தில் இளையராஜா கலந்திருப்பார். அவர்கள் பாடும் பாடலில் ஒரு வரி கூட பிசகாமல், தாளம் கூட மாறாமல் அப்படியே பாடும் வல்லமை அவர்கள் பெற்றிருந்தார்கள்.
நம்மைச் சூழ்ந்து நிற்கும் துன்பங்களை கூட மாற்றி அதை துடைத்து தூர எறியும் வல்லமை இளையராஜாவின் இசைக்கு உண்டு.
இளையராஜாவின் திருவாசகம் கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் வடித்த ஒரு நாத்திக நண்பனை எனக்குத் தெரியும்.
எனது காரில் இளையராஜாவின் இசையின் துணைகொண்டு எவ்வளவு தூரமானாலும், தனிமையிலும் அழகாக மகிழ்ச்சியாக கடக்க முடியும்.
ராஜாவின் பாடல்களை ஒலிக்கவிடும் பஸ் டிரைவர்கள் பயணிக்கும் பயணிகளை சுகமான உலகத்திற்கு கூட்டிச் செல்கிறார்கள்.
வெறும் இசை என்று தவறாக நினைக்காதீர்கள் நம் இறந்தகால நினைவுகளை மீட்டித்தரும் டைம் மெஷின்.
"கண்ணே கலைமானே", "காதலின் தீபம் ஒன்று", "என்ன சத்தம் இந்த நேரம்", "மண்ணில் இந்த காதலன்றி", "ஓ பட்டர்பிளை", "கேளடி கண்மணி", "தாலாட்டும் பூங்காற்று நானல்லவா?", "மாலையில் யாரோ மனதோடு பேச", "வலையோசை கலகலவென", "ராஜராஜ சோழன் நான்" என குறைந்தது 50 மெல்லிசை பாடல்களையாவது நான் உங்களுக்குச் சொல்ல முடியும். அவை மயிலிறகால் வருடும் சுகம் என்ன என்பதை நேரடியாக உணர்த்துபவை.
இந்த பரபரப்பான வாழ்க்கையில் இருந்து என்னை தப்புவிக்க மொட்டை மாடியும், இளையராஜாவும் கிடைத்தது எனக்கான முந்தைய ஜென்ம வரங்கள். இந்த ஜென்மம் எனக்கு ராஜாவின் இசையின் ரசிப்பிற்காக படைக்க பட்டிருக்கிறது
நன்றி ராஜா சார்.
இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழ்க.
No comments:
Post a Comment