Saturday, May 8, 2021

The Road from Elephant Pass (Alimankada) திரைப்பட விமர்சனம்

இலங்கையின் இயற்கை அழகும், போர் பகுதிகளில் தமிழர்கள் நிலையும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறதென கேள்விப்பட்டு இந்த புத்தகத்தை தேடினேன், அமேசானில் கிடைக்கிறது, வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் கூகிளில் தேடியபோது இதை பற்றி மேலும் தகவலறிய  இது படமாக எடுக்கப்பட்டதென்றும் அது யூடூபில் இலவசமாக காண கிடைக்கிறதென்றும் கண்டு தேடி படத்தைப் பார்த்தேன்.

இது ஒரு சிங்கள மொழி படம். ஆனால்  “சாகும் வரை போராடி எங்கள் மக்களை மீட்டெடுத்து தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம் என்ற கோட்பாடுடைய எம் தலைவரின் பெயரால் உம்மை வரவேற்கிறோம்என்ற தமிழ் வசனத்துடன் தான் படம் ஆரம்பமாகிறது, சப் டைட்டில் ஆங்கிலத்தில் உண்டு, பேசப்படும் நிறைய சிங்கள வார்த்தைகள் தமிழோடும் மலையாளத்தோடும் ஒத்து போகின்றது, இரண்டு மாதம் முயற்சி செய்தால், ஆன்லைனிலேயே எளிதாக சிங்களம் கற்று கொள்ளலாம் போல

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் இளையராஜாவின் காதல் ஓவியம் ஒலிக்கிறது.  தூக்கம் வர்ல மாமா, காக்க வைக்கலாமாஎன்று இடையில் டீ கடையில் இன்னொரு முறையும் ஒலிக்கிறது.

நிஹால் டி சில்வா இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். நிறைய பரிசுகளை வென்றிருக்கிறது இந்த புத்தகம். சிங்கள ராணுவத்தையும், விடுதலை புலிகள் செயல்பாடுகளையும் ஒரு ஆர்மி ஆபீஸருக்கும், தமிழ் பெண்ணுக்குமான உரையாடல் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழர்கள் வாழும் பகுதிகள், இயற்கை காட்சிகள் என சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மலையாள சினிமா பார்ப்பது போன்ற உணர்வு.

அந்த கதாநாயகி ஆச்சர்ய பட வைக்கிறாள், அமைதியான அப்பாவியாக அறிமுகமாகி, உழுந்து, புரண்டு, அடிபட்டு, காட்டு பகுதிக்குள் வேகமாக ஓடி, தன் கோபங்களை நேரடியாக காட்டி என தனித்துவமான உடல்மொழியுடன் நல்ல தேர்ந்த நடிப்பு. தமிழில் இப்படி ஒரு ஹீரோயினை நான் பார்த்ததில்லை. நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறாள். இறுதியில் தான் என்னவாக விரும்புகிறாள்  என்பதை சொல்கையில் ஆச்சர்யத்துடன் மதிப்பு வர வைக்கிறாள்.

நாயகனும் தனது கதையை சொல்கையில் ஈர்ப்பு கொள்ள வைக்கிறான்.

சில இடங்களில் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற போதிலும், வித்யாசமான படம் எனும்போது அந்த குறை பெரியதாக தெரியவில்லை. கோபங்களுக்கிடையே இயல்பாக மலரும் காதல் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.  இந்த புத்தகத்தை எழுதிய நிஹால் டி சில்வா தனது மனைவி ஷெர்லீன் மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் கொழும்பில் மே 27, 2006 அன்று வில்பட்டு தேசிய பூங்காவில் கன்னி வெடியில் கொல்லப்பட்டது பெரும் சோகம்.

இந்த படம் வேற்று மொழி படத்தை பார்ப்பது போல அல்லாமல் நமக்கு நெருக்கமாகவே இருக்கிறது,  இலங்கையின் தமிழர் வாழ்ந்த பகுதிகளை நேரடியாக பார்வையிடும் அனுபவம் கிடைக்கவும், அதன் இயற்கை அழகை காணவும், மிக வித்யாசமான ஒரு படம் பார்த்த திருப்தி கிடைக்கவும் இந்த படத்தை தாராளமாக ஒரு முறை காணலாம்

YouTube Link : https://www.youtube.com/watch?v=8njGC8SG4yc  


No comments:

Post a Comment