Monday, May 10, 2021

வியாபாரம்

 நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய உயரமான கனத்த தொந்தியுடன் தனது குதிரை வண்டியிலிருந்து தாய்க்கிழவியான மக்கோலாவின் பண்ணை வீட்டு முன்பு இறங்கினான் ஜூல்ஸ் சிகோட். நல்ல வியாபாரி என்று ஊருக்குள் பேச்சிருந்தது. 

ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக கிழவி மக்கோலா நடந்து கொள்கிறாள், ஏனினில் ஜூல்ஸ்ற்கு கிழவியின் நிலத்தின் பக்கத்திலேயே அவனுடைய பெரிய பண்ணை நிலமும் இருந்தது, மக்கோலாவின் நிலத்தை வாங்க எவ்வளவோ பேரம் பேசியும், ஆசை தூண்டிலிட்டும் கிழவி தன் நிலத்தை விற்க மறுத்துவிட்டாள். 

"நான் இங்கதான் பொறந்தேன், இங்கதான் சாவேன்" என அவனை மண்டைகாய விட்டாள். . 

எழுபத்தி இரண்டு வயது கிழம், உருளைக்கிழங்கை உரிப்பதையும் மற்ற வேலைகள் செய்வதையும் பார்த்தால் சிறு பெண்களை விட சுறுசுறுப்பாக இருந்தது சிகோட்டுக்கு கடுப்படித்தது. மக்கோலா முன்புறமிருந்த ஸ்டூலில் உட்கார்ந்தவன் அவள் தோளை தொட்டான். 

"சாகுற வயசுல இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கியே எப்புடி?" 

"இது வேலை செஞ்சே பழக்கப்பட்ட ஒடம்பு, அப்படித்தான் இருக்கும், நீ எப்படி இருக்கே?"

"எப்போவாவது கால் வலி வருது, மத்தபடி நல்லாத்தான் இருக்கேன்" 

"கேக்க நல்லாருக்கு" என்று சொல்லியபடி, கிளம்பு காத்து வரட்டும் என்பதுபோல் அமைதியானாள். 

ஒரு கையால் உருளையை அனாயசமாக பழைய கத்தி கொண்டு சீவியபடி, சீவி முடித்ததை மறு கையால் அருகில் இருந்த பாத்திர நீரில் வீசினாள். இடையே மூன்று கோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவள் மேல் ஏறி கால்களுக்கிடையே ஓடின. இதை பார்த்தபடி இருந்த சிகோட், பதட்டமடைந்தவனாக காணப்பட்டான். சிறிது நேரம் பேச யோசித்தவன்,  தயக்கத்திற்கு பின், 

" அம்மா மேக்லோயர் நான் சொல்றதை கேளேன்"

"என்ன?"

"நீ உன்னோட நிலத்தை விப்பியா? மாட்டியா?"

எவ்ளோ தடவை சொல்ரது உனக்கு... மாட்டேன், மறுபடியும் விக்க சொல்லி கேக்காத, கடுப்பாயிடுவேன்"   

"விக்க போறதில்லைன்னு சொல்றே, அப்படியே இருக்கட்டும்.... என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, என்னன்னுதான் கேளேன்" 

"சொல்லி தொலை" 

"மாச மாசம் நான் ஒரு அமௌன்ட் தரேன், அதை நீயே வச்சுக்க, ஆனா நீ இங்கேயே எப்பவும் போல இருக்கலாம்" 

செய்துகொண்டிருந்த வேலையே நிறுத்திவிட்டு "என்னோட நிலத்தை நீயே வச்சுக்கன்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு பணம் கொடுக்கணும்?" என்றாள். 

"முழுசா கேளு,  நீ இருக்கிறவரை நீயே உன்னோட நிலத்தை எப்பவும் போல வச்சுக்கோ, மாசம் மாசம் மூவாயிரம் தரேன், நீயே ஒரு வக்கீலை வச்சு, நீ இறந்ததும் அப்புறம் எனக்கு இந்த சொத்துன்னு எழுதிக்குடு, உனக்குத்தான் புள்ளகுட்டியக யாருமே இல்லையே? உன் சொந்தக்காரன் எவனும் நீ உயிரோட இருக்கியா இல்லையான்னு கூட கேக்கறதில்ல, இந்த டீல் உனக்கு பெரிய லாபம் தானே?" என்றான். 

கிழவிக்கு உள்ளூர மகிழ்ச்சி என்றபோதும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை, ஏதாவது பித்தலாட்டமாக இருக்குமோ என்ற கவலை கூட வந்தது. இருந்தாலும், 

"எனக்கு ஒரு வாரம் யோசிக்க டைம் குடு, அடுத்தவாரம் இதே நாள் வா, ஒரு முடிவை உறுதியா சொல்றேன் " என்றாள். 

சிகோட்டுக்கு "பார்ட்டி வலையில மாட்டிருச்சு" என்ற சந்தோஷத்தோடு கிளம்பி போனான். 

கிழவிக்கு தூக்கமே வரவில்லை, இதை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள், நாலு நாள் ஒரு குழப்பத்திலேயே வாழ்ந்தாள், ஏதாவது ஏழரை இருக்குமோ என யோசித்தாள், காசே இல்லாமல் கிடக்கும் அவளுக்கு மாதம் மாதம் வரபோற மூவாயிரம் ருபாய் பெரும் ஆசையை தூண்டி விட்டது. இதை அதிர்ஷ்டமாகவே கருதினாள். 

அடுத்தநாளே ஒரு வக்கீலை பார்த்து இதை சொன்னாள், வக்கீல் ஒத்துக்கொள்ளும்படி சொன்னார், ஆனால் "கேக்கிறதுதான் கேக்குறே ஐயாயிரம் கேளு, உன்னோட நிலம் எப்படியும் அம்பது அறுபது லட்சத்துக்கு போகும், பத்து பதினஞ்சு வருஷம் உயிரோட இருந்தா அவன் கொடுக்கிறது கம்மியாத்தான் இருக்கும்" என்றார். பல கேள்விகள் வக்கீலை கேட்டு அவர் உயிரை வாங்கி, கடைசியாக ஐயாயிரத்துக்கு சம்மதிப்பதாக உயில் எழுதுமாறு சொல்லிவிட்டு வீடு வந்தாள். மட்டமான டாஸ்மாக் சரக்கடித்ததது போல் ஒரு கிறுகிறுப்பு அவள் உடம்பில் இருந்தது. 

அடுத்த இரண்டு நாளில் ஜுல்ஸ் வந்தான், உடனே ஒப்புக்கொண்டால் கெத்து என்னாவது? மாக்லோர் நீண்ட பில்டப்புகளுக்கு மத்தியில், அவனே கடுப்பாகி கிளம்பும் நிலையில் "இங்க பாரு மாசம் ஐயாயிரம் தரதுன்னா ஒப்பந்தம் போட்ரலாம்" என்றாள். "எது அய்யாயிரமா? ஆள உடு" என்றவனை கிழவி சமாதான படுத்த வேண்டி வந்தது. 

"இங்க பாரு, நேத்து கூட படுக்கையை விட்டு எந்திரிக்க முடியல, போய் சேந்துருவேன்னு நினச்சேன், அதிகபட்சம் நாலஞ்சு வருஷம் தான் தாங்குவேன்" என்றவளை இடைமறித்து, 

"யாரு நீ? நான் செத்தா கூட நீ உயிரோட தான் இருப்பே, சின்ன பொண்ணை விட சுறுசுறுப்பா இருக்கே, உனக்கு செஞ்சுரி கன்பார்ம்" என்றான். 

அன்றைய நாள் முழுவதும் இந்த பேரம் நடந்தது. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான் ஜுல்ஸ். அட்வான்ஸாக ஆயிரம் ரூபாயை வாங்கிகொண்டாள் கிழவி. 

ஒப்பந்தம் போட்டு பணம் கொடுக்க துவங்கி மூன்று ஆண்டுகள் கழிந்தன, கிழவி பழைய நிலையிலிருந்து மிக ஆரோக்யம் பெற்றவளாக தோன்றியது ஜுல்ஸ்க்கு, அவன் பார்க்கப்போகும் போதெல்லாம் கிழவி, நானா டூ ஹண்ட்ரட் போடாம போக போறதில்ல என நக்கலாக சிரிப்பது போன்றே இருந்தது. 

"ஆஹா ஏமாந்துட்டோமோ, இவ சாகிற மாதிரியே தெரியலையே, கழுத்தை நெறிச்சு கொன்றலாமா? அது வேற பிரச்சனையாகிடுமே? என்ன பண்றதுன்னே புரியல" என கடும் குழப்பத்திலும் ஆற்றாமையிலும் இருந்தான். 

பிறிதொருநாள் கிழவியை சந்தித்து, கொஞ்ச நேரம் ஊர்கதைகளை பேசிவிட்டு, "ஏன் என் வீட்டுக்கே வர்ரதில்ல, ஒருநாள் வரலாம்ல? ஊர்காரனுக "உனக்கும் எனக்கும் பிரச்சனை போல"ன்னு பேசுறானுக, அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு அவனுகளுக்கு தெரியப்படுத்தனும், அதுவுமில்லாம உனக்கு விருந்து கொடுக்கிறதுல எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கும், நீ இஷ்டப்பட்டபோ வா" என்று சொல்லி கிளம்பினான். 

அடுத்தநாளே சந்தை நாளாக இருந்ததால் கிழவி வண்டி கட்டி கொண்டு சந்தைக்கு போய் விட்டு, விருந்தை சிறப்பிக்க ஷிக்கோவின் வீட்டு முன் வந்து இறங்கினாள்.

அவன் கிழவி வருவதில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான், சிறப்பான வரவேற்புடன், விருந்தை தடபுடலாக ஏற்பாடு செய்தான், கோழி, புட்டு, மட்டன், பீப் என உணவை தயார் செய்து அவளை சாப்பிட அழைத்தான். கிழவி சூப், ரொட்டி மற்றும் வெண்ணெய்களே போதுமென வாழ்ந்து பழக்கப்பட்டவள், "இந்த வயசுல எப்புடி இவ்ளோ தின்கிறது?" என மறுத்தாள். "பரவால்ல சாப்பிடு" என்றவனை, "இவ்ளோல்லாம் முடியாது" என கறாராக மறுத்துவிட்டாள். 

"சாப்பிடாட்டி தான் பரவால்ல, செம்மையான சரக்கு இருக்கு கொஞ்சமா அடிக்கிறியா?" என்றான், 

"சரக்குதான், அதை எப்படி வேண்டாம்னு சொல்றது, கொஞ்சமா குடு" என்றாள், உற்சாகமான ஷிக்கோ உள்ளே, வேலைக்காரனை நோக்கி, அந்த "ஸ்பெஷல் சரக்கை எடுத்துட்டு வா" என்றான். வேலைக்காரன் திராச்சை இலைகளை முகப்பில் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்ட பாட்டிலையும் கூடவே இரண்டு தம்ளரையும் எடுத்துவந்தான். 

"ராஜ போதையா இருக்கும், குடி" 

"ஆமா, செம்ம சரக்கா இருக்கே" என்று சொல்லி முடிக்கவில்லை கிழவி, இன்னொரு பெக் ஊற்றி கொடுத்தான், மறுக்க நினைத்த கிழவி, மனம் தாங்காமல் வாங்கி குடித்தாள். அந்த சுவையும் போதையும் அவளுக்கு பிடித்திருந்தது. "இன்னொரு பெக் போடுறியா?" என்றவனிடம் வேண்டாம் என மறுத்தாள். இது மாதிரி கிடைக்கிறது கஷ்டம், ஒரு புல்லே உள்ள போனாலும் உடம்புக்கு கெடுதல் பண்ணாது, தேன் மாதிரி இருக்கும்  சும்மா அடி" என ஊற்றி கொடுத்தான். கிழவி தயக்கமாக இருந்தாலும் குடித்து முடித்தாள். 

நம்ம நட்புக்கு அடையாளமா இன்னொரு பாட்டில் இருக்கு வீட்டுக்கு கொண்டு போ, தீந்து போச்சுன்னா தயங்காம கேளு தரேன் என்று ஒரு பாட்டிலை கொடுத்து அனுப்பினான். 

அடுத்த நாளே கிழவி வீட்டிற்கு மேலும் ஒரு பாட்டிலுடன் சென்றான், கொண்டுவந்த சரக்கை அவள் கையில் கொடுத்து, "ரெண்டு பேரும் ஆரம்பிக்கலாமா?"என்றான், கிழவி மகிழ்ந்தாள், நான்கு நாட்களுக்கு பிறகு கிழவி சூப் தயார் செய்துகொண்டிருந்தாள், அவன் அவளருகில் சென்ற போது மது வாடை வந்தது. "எனக்கு சரக்கிருக்கா?" என்றான், "இருக்கு, அடிக்கலாம் வா" என்றபடி கிழவியே வாங்கிய பாட்டிலுடன் இரண்டு தம்ளரை எடுத்து வந்தாள். 

கொஞ்சம் கொஞ்சமாக கிழவியின் பண்ணை வீட்டு பக்கத்தில், தெருவில் அதை தாண்டி, அவள் அதிகம் குடிக்கிறாள் எனவும், குடித்துவிட்டு எங்காவது விழுந்து கிடக்கிறாள் எனவும், விழுந்து கிடந்ததை  பார்த்த அவளை சிலர் தூக்கி சென்று பண்ணை வீட்டில் விடுகிறார்கள் எனவும் தகவல் அவனுக்கு வந்து கொண்டு இருந்தது. 

அதன் பிறகு அவன் கிழவி வீட்டு பக்கம் போகவில்லை. 

கிழவியை பற்றி மற்றவர்கள் சொல்லும்போது சோக முகத்துடன் கேட்டுக்கொண்டான். அவன் அவளின் மரணத்துக்காக காத்திருந்தான், 

அதுவும் விரைவில் நிகழ்ந்தது, ஒரு டிசம்பர் மாத குளிர் கால கிறிஸ்துமஸ் நெருங்கிய தினத்தில் அவள் குடித்துவிட்டு தெருவில்  இரவு முழுவதும் கீழே விழுந்து கிடந்து இறந்து விட்டாள். 

அவன் அந்த பண்ணைக்கு வந்து, "முட்டாள்தனமாக குடித்து இறந்து விட்டாள், குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பத்து வருடங்களுக்கு உயிரோடு இருந்திருப்பாள்" என அருகிலிருந்தவர்களிடம் கூறினான்  


Translated From The french famous writer Guy de Maupassant's The Little Cask

  


No comments:

Post a Comment