Monday, May 10, 2021

பேச்சாளர் - ஆன்டன் செகாவ்

 அன்று காலை வருமானவரி அதிகாரி கிரில் இவானோவிச்சுக்கு இறுதி ஊர்வலம். இரண்டு முக்கியமான நோய்களால் அவர் மரணம் எய்தியதாக ஊருக்குள் பேச்சு நிலவியது; ஒன்று குடிப்பழக்கம், மற்றொன்று மனைவியுடன் மனத்தாங்கல்.

சர்ச்சிலிருந்து இடுகாட்டை நோக்கி ஊர்வலம் புறப்படத் துவங்கியது; இறந்தவரின் சக ஊழியர்களில் ஒருவரான பாப்லாவ்ஸ்கி கோச் வண்டியொன்றில் ஏறித் தன் நண்பன் கிரிகரியை அழைத்து வர விரைந்தான்.
கிரிகரி என்பவன் இளம் வயதிலேயே தனது தனித்திறமையால் ஊருக்குள் பெரும் புகழ் பெற்றிருந்தான். அவ‌ன் எந்த நேரத்திலும், எவ்விடத்திலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் அநாயாசமாகப் பேசக் கூடியவன். தூங்கும் போதும், குடித்திருக்கும் போது, பசி வயற்றிக் கிள்ளும் போதும், ஏன் கடும் காய்ச்சலில் கூட அவ‌ன் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பான் என்பார்கள்.
பேச்சு என்றால் சும்மா சாதாரணமாக அல்ல. மடை திறந்த வெள்ளம் போல் தேர்ந்த வார்த்தைகளுடன், கேட்பவரைக் கவரும் வண்ணம் உணர்ச்சிப் பெருக்கோடு பேசுவான். டீக்கடையில் மொய்க்கும் ஈக்களை விட அதிகமான வார்த்தைகள் அவனது அகராதியில் இருப்பதாகப் பேசிக் கொள்வார்கள். ஒரு விழாவில் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போன அவனைப் பலாத்காரமாக மேடையிலிருந்து இறக்க வேண்டி வந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
“அப்பாடி, நல்ல வேளையா வீட்ல இருக்கே!” – என்றான் அவன் வீட்டுக்குள் நுழைந்த பாப்லாவ்ஸ்கி. “உடனே சட்டைய மாத்திட்டு என்னோட கிளம்பு. என் பாஸ் இறந்துட்டாரு. அவருக்கு இறுதி மரியாதை நடக்குது. கொஞ்சம் நீ வந்து அவரைப் பத்தி நாலு வார்த்தை புகழ்ந்து பேசினா நல்லாருக்கும். நீ தான்யா இதுக்கு சரியான ஆள். வேற யாராவதுன்னா பரவாயில்ல, இது எங்க பாஸ்; பெரிய ஆளு; கடைசியா அவரைப் பத்திப் பாராட்டி நாலு வார்த்தை கூட பேசாம அனுப்பி வெச்சா நல்லாவா இருக்கும்?”
“உங்க பாஸ் யாரு? ஓ! அந்தக் குடிகாரனா?”
“அவரே தான்; இங்க பாரு டீ, மதியானம் சாப்பாடு, எல்லாத்தோட நீ வந்து போன செலவையும் குடுக்க ஏற்பாடு பண்றேன். நல்ல பையனா என் கூட வா. உன் பாணியில அவர் இந்திரன், சந்திரன்னு ஏதாச்சும் அடிச்சு விடு. எல்லாருக்கும் திருப்தியாகிடும்.”
” உன் பாஸ் தான? எனக்கு அந்தாளத் தெரியுமே. சரியான டுபாகூர். ஊரை வித்து உலையில போட்டவனாச்சே.”
“அது உண்மைதான், ஆனா செத்தவனைப் பத்தித் தப்பாப் பேசாதப்பா.”
“அது சரி தான், ஆனாலும் அந்த ஆள் ஒரு ராஸ்கல் தான்.” ‍ முணுமுணுத்தான் கிரிகரி.
நண்பர்கள் இருவரும் சரியான நேரத்தில் போய் ஊர்வலத்தோடு சேர்ந்து கொண்டனர். ஊர்வலம் போன வேகத்துக்கு, அது இடுகாட்டை அடைவதற்குள், இவர்கள் துக்கத்தை மறக்க இரண்டு மூன்று முறை பாருக்குச் சென்றும் திரும்பினர்.
ஒருவழியாக இடுகாட்டை அடைந்தனர். சவப்பெட்டிக்கு அருகே இறந்தவரின் மனைவி, மாமியார், மைத்துனி ஆகியோர் கடமை தவறாமல் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தனர். பெட்டியைச் சவக்குழிக்குள் இறக்கும் போது அவர் மனைவி, “அய்யோ! என்னையும் அவரோட போக விடுங்களேன்!” என்று கூடக் கதறினாள். ஆனால் அவனது கணிசமான பென்ஷனை நினைத்தோ என்னவோ நிஜத்தில் அம்மாதிரி எதுவும் அவள் செய்துவிடவில்லை.
எல்லாரும் அமைதியானபின் கிரிகரி முன்னால் வந்தான். எல்லாரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்து விட்டுத் தன் உரையைத் துவக்கினான்.
“என்னால் நம்பவே முடியவில்லை. இந்தச் சவக்க்குழியும் கண்ணீர் தோய்ந்த இந்தக் கண்களும் ஓலங்களும் ஒரு மோசமான கனவாக இருந்து விடக்க் கூடாதா? அய்யோ! ஆனால் இது கனவல்லவே! நேற்று வரை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும், செயல்பட்ட ஒருவர், இந்தச் சமூகத்துக்காக ஒரு தேனியைப் போல அயராது உழைத்தவர் இன்று மண்ணுக்குள் போய்விட்டார்.
கொடிய மரணம் தனது இரும்புக் கைகளால் அவரைத் தழுவிக் கொண்டதே. நடுவயதைத் தாண்டி இருந்தாலும் உடலிலும் மனதிலும் இளமையாகவும், எண்ணற்ற கனவுகளும் கொண்டிருந்தவராயிற்றே!
அவரது இழப்பு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாதது. அவரைப் போல யார் உண்டு? ஆயிரமாயிரம் அரசுப் பணியாளர்கள் இருக்கலாம். ஆனால் ப்ரகாஃபி ஒசிபிச் அவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். தனது கடைசி மூச்சு வரை தனது கடமையில் நேர்மையையும் கண்ணியத்தையும் கட்டிக் காத்தவர். அல்லும் பகலும் அயராது உழைத்தாலும் லஞ்சம், ஊழல் இவற்றின் காற்றுக் கூடப் படாதவர். லஞ்சம் வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் விஷம் போல் வெறுத்தவர்.
நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை; தன் சம்பளத்தில் பெரும்பகுதியை ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது அவரது வழக்கம். அவர் உதவியால் பிழைத்துக் கொண்டிருக்கும் அனாதைகளும் அபலைப்பெண்களும் ஏராளம். கடமைக்கு முன் தன் சொந்த வாழ்க்கைக்குக் கூட முக்கியவம் தராமல் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அய்யோ! முடி முழுதும் மழித்த அவரது அந்த முகத்தையும், அன்பான‌ குரலையும் என்னால் மறக்கவே முடியாது. ப்ரகாஃபி ஒசிபிச், வாழ்க உன் புகழ்! வளர்க உன் பெருமை இப்பூமியில்! அவர்தம் ஆத்மா சாந்தி அடைய‌ வேண்டுவோம். “
கிரிகரி பேசி முடிப்பதற்குள் கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுக்கத் தொடங்கினர். முதலாவது ‘இறந்து போனது கிரில் இவானொவிச் ஆயிற்றே. இந்த ஆள் ஏன் பிரகாஃபி யைப் பத்திப் பேசினான்’ என்று குழம்பினார்கள்.
மேலும், அவருக்கும் அவர் மனைவிகும் இருந்த ஏழாம் பொருத்தம் ஊருக்கே தெரியும். அப்படி இருக்க அவர் பிரம்மச்சாரி என்று சொன்னானே? என்றும், காட்டிலிருந்து தப்பி வந்த கரடி மாதிரி மூஞ்சி பூரா முடி இருக்கறவனுக்கு மழித்த‌ முகமா’ என்று பலவாறாகப் பேசித் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டனர்.
கிரிகரி தொடர்ந்தான், “ப்ரகாஃபி ஒசிபிச்! உங்கள் உருவம் அவலட்சணமாக இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் உள்ளத்தால் உயர்ந்தவர். அசிங்கமான சிப்பிக்குள் முத்து இருப்பது போல் உங்களுக்குள் இருந்த உள்ளம் பளிங்கு போன்றது.”
இப்போது கிரிகரியின் முகத்திலேயே குழப்ப ரேகைகள் படிவதைப் பார்வையாளர்கள் கண்டனர். சட்டென்று பேச்சை நிறுத்தியவன், அதிர்ச்சியுடன் பாப்லாவ்ஸ்கியிடம் திரும்பினான்.
“டேய்! அவன் உயிரோட இருக்கான்டா” – என்றான் பீதியுடன்.
“எவன்?”
“அதோ அங்க நிக்கிறானே ப்ரகாஃபி”
“அவன் எங்கடா செத்தான்? செத்தது கிரில் தானே?” – அநியாயக் கடுப்புடன் பதிலளித்தான் பாப்லாவ்ஸ்கி.
“நீ தானேடா சொன்னே உன் பாஸ் இறந்துட்டான்னு”
“போடா லூசு. அவனுக்குப் பிரமோஷன் கெடைச்சுப் போய் ரெண்டு வருஷமாச்சேடா. அதுக்கப்பறம் கிரில்
தானேடா இன்கம்டாக்ஸ் ஆஃபிஸ்ல‌ இருக்கான்.”
“இந்த எழவெல்லாம் எனக்கெப்பிடிரா தெரியும்?”
“சரி நீ பாட்டுக்குப் பேசு. பாதியில நிறுத்தினா ஒரு மாதிரி இருக்கும்.”
கிரிகரி தட்டுத் தடுமாறி உரையை முடித்தான். தூரத்தில் ப்ரகாஃபி கொலைவெறியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
எல்லாம் முடிந்ததும் இறந்தவனின் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கிரிகரியைச் சூழ்ந்து கொண்டனர்.
“அடப்பாவி! உயிரோட ஒருத்தனை மண்ணுக்குள்ள‌ போட்டுப் புதைச்சுட்டியே. சரியான ஆளுப்பா நீ” –
கூச்சலும் சிரிப்புமாக அவன் முதுகில் அடித்துச் சென்றனர்.
ப்ரகாஃபி வந்தான்.
“யோவ்! செத்தவனுக்கு வேணா நீ பேசினதெல்லாம் பெருமையா இருந்திருக்கும்யா… எனக்கு? உன்னை யாருய்யா நான் லஞ்சம் வாங்க மாட்டேன் ஊழல் பண்ணமாட்டேன்னெல்லாம் பேசச் சொன்னது? என்ன, நக்கலா? ஊருக்கே தெரியும் என்னைப் பத்தி; இப்போ அவனவன் என்னைப் பாத்துக் கேவலமா சிரிக்கப் போறான். என் பொழப்புல ஏன்யா மண்ணள்ளிப் போட்டே? ஹூம்.. மூஞ்சிக்கு நேரயே என்னைக் கலாய்ச்சிட்டுப் போயிட்டே. போ! போ! நல்லா இரு” – புலம்பிக் கொண்டே போனான் ப்ரகாஃபி.


ஆன்டன் செகாவ் எழுதிய The Orator என்ற சிறுகதையின் தமிழாக்கம்:  தீபா

Thank you: https://deepaneha.blogspot.in/

No comments:

Post a Comment