Sunday, May 9, 2021

அன்னியப்படுத்தாதீர், அவளுக்குள்ளும் நேசிப்புகளிருக்கும்

பிரத்யேகமாய்...

வடிவமைக்கப்பட்ட ஒவ்வொன்றிலும்

அவளது அபிப்ராயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏதோவொரு குடியிருப்பின் நுழைவாயினிலோ

பரிச்சயமான பேருந்து நிறுத்தத்திலோ

பழக்கப்பட்ட முகமாகவும், கேட்டறிந்த குரலாகவும் தானிருக்கிறது.

வொடைந்த தேங்காய் துண்டுகள் பொறுக்கி...

வயிறு நிறைக்க முயலுமவள்

கற்சிலை பெண்ணின் முலையுறிஞ்சி பால்குடிக்கும்

வித்தைகள்  கற்றிருப்பதாய் சொல்லி கொள்கிறாள்.

எண்ணெய் வீச்சம் சுற்றித்திரியும்

வளாகத்தினுள் வந்தடையும், புறாக்களோடுதான்

உளறிக்கொண்டிருப்பதாய்...

ஒப்பந்தம் செய்துக்கொண்டிருப்பாள் போலும்

எதிலும் லயிப்புகளற்றவள்.

சிரிப்பினை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கிறாள்.

தனது சதையுறிஞ்சி...

ரணமாக்கிய மனித அருவங்கள்  காணப்பொறுக்காது

நகர்ந்துக்கொண்டே இருக்கிறாள்.

கனமான நிகழ்வுகளேதும்

அவளை காயப்படுத்தியிருக்கலாம்

ஆனால் சாட்சியங்களின் பதிவுகளை

மனிதரல்லாத சகலவற்றினுடனும்  ...

பகிர்ந்துக்கொள்ள முனைப்போடிருக்குமவள்

கடைக்கு முன்னாடி நின்னு வியாபாரத்தை கெடுக்காதே மூழி...என

லாவகமாய் வெந்நீர் ஊற்றும்...டீ, கடை  பையனின்

வக்கிரத்தை உதாசினப்படுத்தி போகிறாள்

தாயின் பரிவோடு.... 


 ஈஸ்வர சந்தானமூர்த்தி

 

No comments:

Post a Comment