Tuesday, November 22, 2016

பெயரற்றது புத்தக விமர்சனம்

பெயரற்றதை உடுமலை.காமில் வாங்கினேன். அடுத்தநாளே டெலிவரி கொடுப்பது பாராட்டத் தக்கது, 90 ரூபாய் புத்தகத்திருக்கு அதில் சரிபாதி விலையை அஞ்சலுக்கென்று வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, ஆனால் இந்த புத்தகத்திற்கு அஞ்சல் விலையும் சேர்த்து கொடுத்தாலும், அதற்க்கு சற்று அதிகமாகவே கொடுத்தாலும் தகும் என்பதால் உடுமலையை மன்னித்து விட்டேன்.  

இது இலங்கை தமிழர் வாழ்ந்த வாழ்வு பற்றிய சில சம்பவங்களின் தொகுப்பு, இதற்கு முன் "வீழ்வேனென்று நினைத்தாயோ" தொடராக படித்திருக்கிறேன், அப்போதிருந்து எனக்குள் எழுந்திருந்த பிம்பங்களை முற்றிலும் உடைத்து விட்டார் சயந்தன்.

தவறு, சரியென்றோ, நாங்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்தோம் தெரியுமா என்ற கூப்பாடோ இல்லாமல், போர் நடந்ததற்கு முன்னும், பின்னும் நடந்த நிஜமான சம்பவங்களை அழகாக தொகுத்திருக்கிறார்.

 அந்த துயரமெல்லாம், கடந்து வந்ததை சலனமில்லாமல், எழுதியது, அங்கு வாழாமல், ஒரு சாதாரண பார்வையாளன் எழுதியது போன்ற நிலையே. விடுதலை புலிகளின் தரப்பில் நிகழ்ந்த சரி, தவறுகளை, இலங்கை ராணுவம் நடந்து கொண்ட நிலையை, ஒரு சாதாரணனின் அனுபவத்தில் இருந்து காட்சி படம் பார்ப்பது போன்று தொகுத்து தந்திருக்கிறார்.

வன்னியிலும், யாழிலும் வாழ்ந்து திரும்பியது போன்ற உணர்வை தருகிறது இப்புத்தகம். சாதாரணமாக எழுதியுள்ள அந்த சம்பவங்கள், படித்து முடித்த பின் பெரும் அதிர்வை தருகிறது, எடுத்துக்காட்டாக, "தமிழ் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ்" எனும் சிறுகதையில் பிரதீபன் தஞ்சம் கோருவதற்காக காரணங்களை அடுக்கும் பக்கங்களும், சின்ராசு மாமா ஒரு வயது குழந்தையை கால்கள் வெட்டப்பட்டு கண்ட நிமிடங்களும், சாம்பலில் சிறகு பொசுங்கிய சிறு பறவையில் சாகீரின் வாழ்க்கை திசை மாறிய கணங்களும்,    தீராத ரணங்கள் .

பேச்சு மொழி இலங்கை தமிழில் தான் வருகிறது என்றாலும் அதை புரிந்து கொள்வதில் எந்த சிரமமும் இல்லை. இது தவிர மோட்டார் சைக்கிள் குரூப்,  மஞ்சள் கறுப்புக் கயிறுகளின் கதை, பெயரற்றது, இந்தியாகாரன், 90 சுவிஸ் பிராங்குகள் என்ற கதைகளும் உண்டு, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அதிர்வை நீங்கள் உணரலாம்.

சிறுகதை தொகுதி என்று தவறாக குறிப்பிட்டு விட்டார், சயந்தன், நிஜங்களின் தொகுப்புதானே இதெல்லாம்?

ஒரு கதையை மன்னிக்கவும், சம்பவத்தை படித்து முடித்த பின், சட்டென அடுத்ததற்கு தாவி விட முடியாது, அந்த தொகுதியின் பாதிப்பு குறைந்தது அரை மணி நேரமாவது இருக்கும், அதுதான் சயந்தனின் வெற்றி. "எப்படியாவது செத்து விட்டால் போதும்", என ஆரம்பிக்கும் சாகிரையும், அவனின் பாமினியின் நினைவுகளையும், இருபது ஆண்டுகளுக்கும் மேலான இருட்டு வாழ்க்கையையும் படித்து விட்டு அந்த இரவை என்னால் சுலபமாக கழிக்க இயலவில்லை. என்னை போல் ஆயிரக் கணக்கான என்கிற வரிகள் எல்லாம் ரத்த சரித்திரம்.        

ஆறாவடு நாவலுக்கு முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டது என்கிறார் சயந்தன், நிச்சயம் ஆறாவது நாவலும் வாங்கி விடுவேன், நீண்ட தேடலுக்கு பின் சயந்தனை ட்விட்டரில் பிடித்து நட்பு பெற்றுவிட்டேன். ஆதிரையை பரிந்துரை செய்திருக்கிறார். ஆர்டர் செய்து விட்டேன். தொலைபேசி செய்து விசாரித்ததற்கு, நாளைக்கே உங்கள் கையில் கிடைத்து விடும் என கூறி இருக்கிறார்கள்.

இலங்கை போரின் முழு ஆவண படத்திற்கு வேண்டிய அத்தனை சம்பவங்களும் இதில் நிறைந்து கிடக்கின்றன. நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டிய நாவல்.

நன்றி சயந்தன்.

சயந்தனை ட்விட்டரில் தொடர கீழ் கண்ட linkக்கை click செய்யுங்கள்
சயந்தன் 

அவரது வலைப்பூவினை வாசிக்க சயந்தன்  

No comments:

Post a Comment