Sunday, March 20, 2016

உடல் எடையை குறைப்பது எப்படி?

தகவல் சொல்வதற்கு முன் சிறிய போரடிக்காத பிளாஷ்பேக் சொல்லி விடுகிறேன்.

என் பள்ளி, கல்லூரி காலங்களில் கிரிக்கெட் என்றால் போதும், சோறு தண்ணீர் எதுவும் தேவை இல்லை, வீட்டில் இருப்பவர்கள் மைதானத்திருக்கு வந்து திட்டினால் மட்டுமே சாப்பாடு ஞாபகம் வரும், இப்படி ஒல்லி பிச்சானாக இருக்கிறானே இவன் என மற்றவர்கள் கவலை பட்ட காலம் அது. அதன் பின், சரியான வேலை, நல்ல சம்பளம் கிடைத்து, ஐந்து, ஆறு வருடங்கள்  வேலை வீடென இருந்ததில், கொஞ்சம் கொஞ்சமாக எடை கூட ஆரம்பித்து, கார் வாங்கியதில் இருந்து, சொகுசு வாழ்க்கையில் சிக்கி, கொளுத்த பன்றி போல் உடம்பு மாறிவிட்டது.

அலுவலகத்தில் சாதாரணமாக பத்து மணிநேரத்திற்கு மேல் உக்கார்ந்தே வேலை பார்ப்பது, அளவுக்கு அதிகமான நொறுக்கு தீனிகள், விரைவு உணவுகள் என என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடையை ஏற்றி விட்டேன். காதல் திருமணம், வீட்டில் கையில் காலில் விழுந்து சம்மதம் வாங்கிய சந்தோஷத்தில், நான்கே மாதங்களில் மென்மேலும் பெரியதாக தொப்பையை வளர்த்து, கிட்டத்தட்ட செஞ்சுரியை தொடுமளவு எடை கூடிவிட்டேன்.    

அதன் பின் பைக்கில் 30 கிலோ மீட்டர் போனாலே முதுகு வலி, திடீரென சுவாச பிரச்னை வேறு, சோர்வாகவே உணர்ந்து கொண்டிருந்தேன், உடலின் இடர் என்னை முழுதும் தொந்தரவு செய்ய மருத்துவரை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "உடல் எடையை வாக்கிங்கோ, ஜாக்கிங்கோ போயாவது கண்டிப்பாக குறைத்தே தீருங்கள், இதற்காக பட்டினி கிடந்தது உடல் எடையை குறைக்க வேண்டாம், சரியான உடல் உழைப்பின் மூலமே குறைக்க வேண்டும், உடற்பயிற்சி செய்கிறேனென்று கண்டபடி உடலை வருத்தக்கூடாது,  இல்லையெனில் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்" என்று வாங்கிய காசுக்கு மேலாகவே புத்திமதி சொல்லி அனுப்பி விட்டார் . சரி உடல் எடையை குறைக்க வேண்டும் ஆனால் எப்படி? வாக்கிங், ஜாக்கிங்கிற்க்கு  நேரம் இல்லை,  இரவு பணி வேறு, தூங்கி எழவே காலை ஒன்பது ஆகும். என்ன செய்வதென்று ஏக குழப்பம்.

எப்படி என் எடையை குறைத்தேன்.

கடந்த வருடம் புதிய வீடு ஒன்றை emi மூலமாக வாங்கி இருந்தோம், எனது மனைவிக்கும் எனக்கும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் தான் (இரவு 3 மணிக்கு) வேலை முடியும். மீண்டும் மதியதிற்க்கு மேல் திரும்பவும் வேலை. எங்கள் வீட்டின் அருகே CRPF எனப்படும் இராணுவ வீரர்கள் பயிற்சி பெரும் இடம் உண்டு, அந்த இடத்திற்கு செல்ல, உள்ளே ஒரு கிலோ மீட்டர் பாதை இருக்கும், சுற்றிலும் மரம், மயில்கள், முயல்கள் என அற்புதமாக இருக்கும், காலையில் எட்டு மணிவரை அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள், (அப்போது அங்கே வேறு நபர்கள் நடமாட அனுமதி கிடையாது) அதன் பின் அந்த சாலை இராணுவ மற்றும் பள்ளி வாகனங்கள் போய் வர மட்டுமே பயன்படுத்தப்படும். அதுவும் எப்போதாவது தான் வரும்.

ஒன்பது மணிக்கு வாக்கிங் போக ஆரம்பித்தோம், பக்கத்துக்கு வீட்டில் கேலி வேறு,(ஒலகத்திலேயே வாக்கிங் மத்தியானத்துல போற ஆளுக இவுக மட்டும் தான்) வரிசயாக மரங்கள் இருந்ததால் வெயில் உள்ளே வராது, முதல் நாள் ஒற்றை சுற்றுடன் முடிந்தது, நாளாக நாளாக அது நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் நீண்டுகொண்டே போனது. மெல்லிசை, தமிழ், ஆங்கில நாடகங்கள்,  கட்டுரைகள், சொற்பொழிவுகள் என ஒரு வார தேவைக்கான mp3யை வாரத்தில் ஒரு தடவை தரவிறக்கம் செய்து, கேட்டபடியோ, இது எதுவும் இல்லாவிட்டால் பேசியபடி நடப்போம், சிலசமயம் அலுவலக பேச்சு  போட்டிகளுக்கான (Toast master club) ஒத்திகைகளும் நடக்கும்.

நிற்க எனக்கும் என் மனைவிக்கும் EMI, Increment, சொந்தக்காரர்கள், பக்கத்துக்கு வீட்டு பிரச்னை, டேஷ், டேஷ் என உங்களைப்போலவே எல்லாம் இருக்கிறது                  
        காலையில் கம்மங்கூல் வீட்டிலேயே தயார் செய்து அதை மட்டும், மோர் மிளகாய், மற்றும் கீரை, அல்லது ஏதாவது ஒரு பொரியல் வகைகளுடன்  மட்டுமே சாப்பிடுவேன், 12 மணியளவில் ஏதாவது ஒரு பழம், மதியம் 2 மணிக்கு மேல் முழு சாப்பாடு, இடையில் கிரீன் டீ, அல்லது காபி (பால் இல்லாத) இரவில் மூன்று வகை பழங்கள் மற்றும் காய் (வாழை, ஆப்பிள் அல்லது நெல்லி, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, இது போல),. உடலுக்கு சக்தியை தரும் காய் கனிகளை எடுத்துக்கொண்டால் உடல் சொர்வடையாமலும், வேறு பிரச்சனைகள் வராமலும் இருக்கும்.

நொறுக்கு தீனிகளை அறவே நிறுத்தி விட்டேன், இதை நான் குறுகிய கால நோக்கமாகத் தான் செய்தேன். எனது உடல் எடை இந்த மூன்று மாதத்தில் 26 கிலோ குறைந்து விட்டது என நான் சொன்னால் நீங்கள் நம்பிதான்  தீர வேண்டும். எனது முகநூல் பக்கங்களில் இருக்கும் நண்பர்களுக்கு இதை போட்டோவுடன் வேறு நிரூபித்திருக்கிறேன். பழைய எல்லா தொந்தரவுகளும் முற்றிலும் இல்லை. மிக முக்கியமான ஒரு விஷயம் பக்கத்துக்கு வீட்டில் இருந்த கேலி கும்பல் எங்களுடன் வாக்கிங் வருவதற்காக தூது விட்டு கொண்டிருக்கிறார்கள். (மத்தியானத்துல, அதும் வெயில் காலத்துல  உங்களுக்கு எதுக்கு சிரமம்னு சொல்லி வச்சிருக்கேன்)  

இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் , கிடைக்கும் நேரத்தை பயன்படுத்துங்கள், உடல் எடை குறையும் என உறுதியாக நம்புங்கள், சரியான உணவு பழக்கமும், உடல் பயிற்சியும் செய்யுங்கள், ஒரு நல்ல மருத்துவரிடம் உங்கள் உடலுக்கு தேவையான உணவு பழக்கம் பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் ...
  
உணவு பழக்கத்தை மாற்றா விட்டாலும் கூட, தினமும் 40 நிமிடங்கள் நடப்பதன் மூலம் வருடத்திற்கு எட்டு கிலோ உங்களால் எடை குறைக்க முடியும்.

முயற்சி செய்யுங்கள், குறைப்பது சுலபம்தான்.

-அறிவுரை முடிந்தது- 

No comments:

Post a Comment