Thursday, March 3, 2016

பேயோன்

தனது சோகங்களை நகைச்சுவையாக மாற்றிவிடும், நான் படித்து சிரிக்கும் நல்ல எழுத்தாளர். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் இவரின் எழுத்துக்கள் தமிழின் முக்கிய பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருக்கின்றன 
அவரின் ஒரு கட்டுரை தொகுப்பில் இருந்து 
  
எல்லோரும்-சிரிக்குறாப்ல

பற்றவைத்துவிட்டு லைட்டரைப் பார்த்தேன். மஞ்சள் வண்ணம். நேற்று இளஞ்சிவப்பாக இருந்த ஞாபகம்.

கடைக்கார இளைஞனிடம் கேட்டேன்: தெனமும் லைட்டருக்கு பெயின்ட்டு மாத்துவீங்களோ? நேத்து வேற கலர்ல இருந்துது?”

புது லைட்டர் சார்என்றான் கடைக்காரன்.

கலக்குங்கஎன்றேன்.

விடுமுறை நாளின் காலை நேர அமைதியில் புகைக்கும் சிகரெட்டின் விலையைப் பொதுவில் குறிப்பிடுவது அசிங்கம். அது விலைமதிப்பற்றது. அங்கு இன்னும் நான்கு பேர் நின்றிருந்தார்கள். அவர்களும் அந்த அமைதியை ரசிப்பவர்களாகத் தென்பட்டார்கள்.

முதுகுக்குப் பின்னால் சன்னமாகக் கூட்டுச் சிரிப்பொலி கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நான்கு இளைஞர்களும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

புகைத்து முடித்ததைக் கீழே போட்டுவிட்டுக் கடைக்காரனிடம் விடைபெற்றுச் சில அடிகள் சென்ற பின்பு பெரிய சிரிப்புச் சத்தம். என் செவிச் செல்வம் கூர்மையடைந்தது, ஓர் உரையாடலைச் சேகரித்தது.

என்ன சோமு, லைட்டருக்கு பெயின்ட் அடிக்கிறியாமே? இது எப்பலேந்து?” என்றான் ஒரு ஆள்.

த்தா அந்தாளோட தெனமும் இதே பொளப்பாப் போச்சு. மனுசன சும்மா விடாம ஏதாச்சும் ஒளறிட்டே இருக்கணும்என்றான் கடைக்காரன். நான் அங்கு கண்ட ஒரு தெய்வாதீன மின்சாரப் பெட்டிக்குப் பின்னால் மறைந்து நின்று கேட்டேன்.

இன்னொரு ஆள் சொன்னான் – “அடி பின்னிருவாப்ல. ஏன் சோமு, ஃபர்ஸ்ட் டைம் என்னப் பாத்தப்ப நீங்க எந்த ஊரு’-ன்னு கேட்டாப்ல. தஞ்சாவூருங் சார்’-ன்னேன். அதுக்கு அந்தாளு ஓகோ, அந்தப் பேர்ல தமிழ்நாட்ல ஒரு மாவட்டம் இருக்கேஅப்டின்னாப்ல (எல்லோரும் சிரிப்பு). நான் ஆடிப்போயிட்டேன் (எல்லோரும் சிரிப்பு). அன்னிலேந்து டிஸ்டன்ஸ் மெய்ன்டைன் பண்ட்டுவரன் (எல்லோரும் சிரிப்பு).

மீண்டும் கடைக்காரன்: கேளு விசு, தீவாளியன்னைக்கு வந்தாப்ல. இந்தாள மதிச்சி தீவாளி வாழ்த்துக்கள் சார்’-ன்னேன், ‘, இருக்கட்டும், இருக்கட்டும்’-ன்றாப்ல (எல்லோரும் சிரிப்பு). பொறவு மறுநாள் வந்து தீவாளில்லாம் முடிஞ்சுதா?’-ன்னு இளிக்கிறாப்ல (எல்லோரும் சிரிப்பு). பண்டிகைக்கி விசாரிக்கிறாராம் (எல்லோரும் சிரிப்பு). யோவ், தீவாளி நேத்துய்யா! வாழ்த்து சொன்னா பதிலுக்கு வாழ்த்தணும்யா (எல்லோரும் சிரிப்பு)!

ங்கொய்யால யாருய்யா அந்தாளு?”

தெனமும் வருவாப்ல. ஒவ்வொரு சனிக்கெழமையும் மச்சான், ‘நாளக்கிக் கட இருக்கா?’-ன்னு வுடாம கேப்பாப்ல. நானும் பொறிம்யா எல்லா நாத்திக்கேமையும் கட உண்டு சார்’-னுவேன்.

ஆனா நாத்திக்கேம வர மாட்டாரு…”

வர மாட்டான்!

எல்லோரும் சிரித்தார்கள். இவர்கள் சொன்ன எல்லாமே எனக்கு நினைவிருந்ததால் விலகி நடக்கத் தொடங்கினேன்.

பார்ரா, நின்னு முளுசா கேட்டுப் போறாப்லஎன்றது ஒரு குரல். மீண்டும் அடக்கிக்கொண்ட சிரிப்புச் சத்தம்.

நான் வீட்டுக்கு வந்து சேர்ந்து ஐபேடில் ஒரு மின்னூலைப் பழக்க தோஷத்தில் எச்சில் தொட்டுப் புரட்டிக்கொண்டிருந்தபோது நினைவெல்லாம் அந்த உரையாடலில் இருந்தது. உரையாடல் முடிந்து அரை மணிநேரம் கழித்து அந்த சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொண்டது. கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தேன்.

மனைவி என் அறைக்கு வந்து என்னைப் பார்த்தார்.


தீவாளி வாழ்த்துக்கள் சார்!என்று அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தேன்.

இவரை பற்றி மேலும் அறிய கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள் 

பேயோனின் வலைதளம் காண  Payon
இவரை ட்விட்டரில் பின் தொடர பேயோன்

2 comments:

  1. பேயோனின் எழுத்துக்களைப் பிரபல இதழ்களில் படித்ததுண்டு. வித்தியாசமான நகைச்சுவையுணர்வு கொண்டவர்.

    ReplyDelete
  2. ஆனந்த விகடன்ல பேயோன் பக்கங்கல்ன்னு தொடர்ந்து எழுதினார்.. அதில இருந்துதான் அவரை தெரியும். அவரின் துண்டிலக்கியம் நல்லாருக்கும் உமேஷ் ஸ்ரீநிவாசன். நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete