Friday, April 20, 2018

செம்புலம் புத்தக விமர்சனம்

பொள்ளாச்சியில் இருந்து கேரளா போகும் வழியில் உள்ள காமாட்சிபுரம் எனக்கு தெரிந்த பகுதி, என் நண்பன் பாபுவின் தோட்டம் அங்கே தான் உள்ளது, அவன் ஜமீன்தார் பரம்பரையும் கூட. முப்பது ஏக்கரில் தோட்டம், பழங்கால அரண்மனை போன்ற வீடு அவனுக்கு உண்டு. இருபது தோட்டக்காரர்களும், சில வீட்டு வேலைக்காரர்களும் பாபுவின் வீட்டில் உண்டு. அரசியலில் அவனது அப்பா ஒரு நல்ல பதவி வகிக்கிறார் . தரம் உயர்ந்த குதிரைகளையும், வெளிநாட்டு நாய்களையும் பிரியமாக வளர்கிறான். உயர் ரக காரின் மீது அவனுக்கு அலாதி மோகம் உண்டு, சந்தையில் எந்த புதிய வாகனம் வந்தாலும் அதன் விபரத்தை விரல் நுனியில் வைத்திருப்பான்.

சோமனூர் பகுதியில் பாலு என்ற நண்பன் தன் அப்பா கொடுத்த மூன்று தறிகளுடன் வாழ்வை தொடங்கியவன், அதை தன் உழைப்பால் பத்து தறிகளாக மாற்றி முன்னேறியவன், தறி பட்டறையின் முழு வரலாறும் அதில் லாப நஷ்டங்களும், அதில் அவன் பட்ட கஷ்டங்களும் முழுவதும் எனக்கு அத்துப்படி. அதே போல் அரசு கல்லூரியில் படித்துக்கொண்டே கூலிக்கு தறிவேலைக்கு விடுமுறையில் வரும் விஜயகுமார் என்ற மாணவனும் எனக்கு நன்கு தெரியும். சரளமாக கமெண்ட் அடிப்பதில் மன்னன், மிக சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இருப்பான், ஒன்றாக உட்கார்ந்து சரக்கடித்திருக்கிறோம். ஒருமுறை பாலு தனது பட்டறையை நடத்த முடியாமல், வாங்கிய கடனை அடைக்க வேண்டி  கூலி வேலைக்கு கூட சென்றிருக்கிறான்.

 நான் கோவையை சேர்ந்தவன் என்பதால் இங்கிருக்கும் ஆர் எஸ் புரம் பகுதியில் தான் எனக்கான முதல் வேலை வாய்ப்பே தொடங்கியது, அதுவும் மூன்று வருடம் முன்பு அன்னபூர்ணா தான் எங்களது மாலை காபி கடையே....
'
நிற்க...

இதற்கும் செம்புலத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?

நான் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கும் இதே போன்ற மூன்று பிரிவு மக்களின் கதைதான் செம்புலம். நான் நேரிலேயே நின்று இந்த சம்பவங்களை பார்த்து போன்ற உணர்வு கதை நெடுகிலும் வந்ததை என்னால் தடுக்க இயலவில்லை.

பாஸ்கர் எனும் இளைஞனின் கொலை வழியே ஆரம்பமாகும் இந்த தொகுதி,
கம்யூனிச பார்வையில் சம்பவங்களை அலசுகிறது. முதல் தொகுதியில் போலீஸ் விசாரணையும், அவர்களின் பார்வையும், ஆரம்பத்தில் கைதியை கட்டி வைத்து பீடி கொடுக்கும் நிகழ்வுகளும், அவர்களின் சாட்சிகளுமென அவர்களின் நிஜ உலகத்தை காட்டியிருக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் இருந்து, சாதி சம்மந்தம் கொண்ட கேஸை யார் விசாரிப்பார்கள் என்பது வரை சட்டத்தில் உள்ள பொதுவான நுண்ணிய தகவல்களை விரிவாகவே எழுதி இருக்கிறார். முருகவேள் காவலராக பணியாற்றி இருப்பாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

பொதுவாக நிஜ சம்பவங்களை எழுதும் போது சலிப்பு தட்டிவிடும், ஆனால் நாவலின் இறுதிவரி வரை சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு சென்றதற்கு பாராட்டுக்கள் . திரைப்படமாக இதை வடிவமைத்தால் ஆடுகளம் போல பேசப்படும்.

ஜாதி என்ற அடிமைத்தனம் எப்படி மறு உருவம் எடுக்கிறது என்பதையும் பாஸ்கர் வழியாகவே சொல்லி விடுகிறார். மூன்று பேராவில் முடிந்து விடும் பேரூர் கோவிலில் நடந்ததாக சொல்லப்படும் அந்த ஆணவ கொலை கதை பகீர் ரகம்.

வன்கொடுமை தடுப்பை இந்த நிறுவனங்கள் கையாளும் விதம் பற்றி இன்னமும் பேசி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. வெறும் விசாரணை அளவிலேயே முடிந்து விடுவதும், அவர்கள் செய்த உதவிகளின் பட்டியல் மனதில் தாங்காமல் மேலோட்டமாக முடிந்து விடுகிறது.

ஜாதி என்ற அமைப்பை எந்த காரணமும் இல்லாமல் வலுவாக பற்றி நிற்கும் பலரை இந்த கதை யோசிக்க வைக்கும்.

மொத்தத்தில் இந்த புத்தகம் நிறைய ஆவணங்களுடன் கூடிய சுவாரஸ்யம் நிறைந்த நிஜங்கள் படைப்பு.

வாசிக்க வேண்டிய புதினம்



No comments:

Post a Comment