Monday, June 12, 2017

கோயம்புத்தூர் பற்றி அறியாதவர்களுக்கு.

 கொங்கு தமிழ் பேசும் எங்கள் கோவை, தென்இந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம், கோவை சுற்றுபுறம் முழுவதும் சேர்த்து, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஊர்.

  கோவன் என்ற இருளர் தலைவன் பெயரில் உருவானதே கோவன் புத்தூர், அது உருமாறி கோயம்புத்தூர் ஆனதாக வரலாறு.

 14 சட்டமன்ற தொகுதிகளையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டது இந்த பெருநகர்.

  மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடியில் இந்நகரம் அமைந்துள்ளதால் குறைந்த பட்ச வெப்பநிலையான 12 டிகிரி அடிக்கடி இங்கு நிலவும், உலகின் இரண்டாமிட மிக சிறந்த சுவை கொண்ட சிறுவாணி தண்ணீர் இங்கு புகழ் பெற்றது. இங்கு நீர் ஆதாரத்திற்கு அத்திக்கடவும் உண்டு.

 புகழ் பெற்ற இந்து வழிபாட்டு தளங்கள், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர், ஈச்சனாரி, கோனியம்மன் கோவில், வெள்ளியங்கிரி, ஈசா, காரமடை ரங்கநாதர், தென்திருப்பதி,  கிறிஸ்துவர்களுக்கு மைக்கேல், பழைய பாத்திமா சர்ச்கள், காருண்யா, முஸ்லீம்களுக்கு கோட்டை,  ரயில்நிலையம், போத்தனூர், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள்.
     
 தொழில் மற்றும் பல்வேறு துறையில் மிக புகழ் பெற்ற சில பிரபலங்கள்,
 ஜி டி நாயுடு, நரேன் கார்த்திகேயன், ராஜேஷ் குமார், நிருபமா வைத்தியநாதன் உடுமலை நாராயணன், நா, மகாலிங்கம், ஜி கே சுந்தரம், சாண்டோ சின்னப்பா தேவர், அவினாசிலிங்கம் செட்டியார்,

சினிமா துறையில் சிவகுமார், மணிவண்ணன், சத்யராஜ், ரகுவரன்,  கவுண்டமணி, பாக்யராஜ், சுந்தரராஜன், நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், கோவை சரளா என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

300க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கில் சிறு, குறு  தொழில் நிறுவனங்களும், இரண்டாயிரத்தும் அதிகமான தொழிற்சாலைகளும் இங்குண்டு.  

சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் பெருமை குன்றாமல் இயங்கி வருகிறது.

சுற்றுலா தளங்கள் சிறுவாணி, கோவை குற்றாலம், பாரெஸ்ட் மியூசியம், வஉசி பறவைகள் பூங்கா, சிங்கநல்லூர் லேக் போன்றவை.
 ப்ளாக் தண்டர், கோவை கொண்டாட்டம், மகாராஜா என மூன்று தீம் பார்க்குகள் கொண்டது, இதில் ப்ளாக் தண்டர் அதிக நீர் விளையாட்டுகள் கொண்ட இந்திய அளவில் மிக பெரிய தீம் பார்க்குகளில் ஒன்று.

கோவையை சுற்றி அமைத்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி பாருங்கள்
 நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கோவை சுற்றுலா தளங்கள்

உபசரிப்பிற்க்கு எவ்வளவு புகழோ அதே போல் மதச்சண்டைக்கு புகழ் பெற்றது என ஒரு பிம்பம் இருந்தாலும் இங்கு வசிக்கும்  ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து மிகநெருங்கிய (கவனிக்கவும் மிகநெருங்கிய) நண்பர்களாவது வேற்று மதத்தில் தான் உண்டு. உங்கள் கோவை தோழர், தோழிகளிடம் இதை சோதித்து கொள்ளுங்கள்    
நட்சத்திர விடுதிகள் விபரம் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளது
Star Hotels in coimbatore     

மூன்று பெரிய வணிக வளாகமும் (இன்னொன்று கட்டப்பட்டு வருகிறது), ஒரு சர்வதேச விமான நிலையமும், ரயில் நிலையமும் உண்டு.  
 சிங்காநல்லூரில் அமைத்திருக்கும் சாந்தி நிறுவனம், பெட்ரோல், உணவு, மருந்து ஆகியவற்றை எல்லோருக்கும் மிகமிக குறைந்த விலையில் அதிக  தரமானவற்றை தருகிறது.

வெளிநாட்டு பணத்தை ஈட்டி தரும் டாலர் தேசமான திருப்பூர் கோவையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவையின் சுற்றுப்புரங்கள் மற்றும் அழகுகள் பற்றிய முக்கிய மூன்று பாடல்கள் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளன. இவைகளை பாருங்கள், எங்கள் ஊரை பற்றிய முழுமையை காட்சிப்பூர்வமாக நீங்களே உணர்வீர்கள்.


1. கோவை ஏந்தம்
2. கோவைப்பாட்டு
3. ரேடியோ சிட்டி கோவை பாட்டு


புரியும்படி சொல்ல வேண்டுமெனில், ஆறு மாதங்கள் நீங்கள் இங்கே தங்கி இருந்தால், நிரந்தரமாக தங்க விரும்புவீர்கள்.
அதுதான் கோவை