Friday, April 21, 2017

வெண்முரசு முதற்கனல் பார்வை

"உலக இலக்கிய புத்தகங்களில் மிக பெரும் நூலாக இது அமையும்", என்ற உறுதியுடன் எழுத ஆரம்பித்து பல தொகுதிகளை கடந்து விட்டு ஜெயமோகன் அவர்களின் பெருமுயற்சிக்கு மிக பெரிய நன்றிகள்.

ஜெமோவின் சில படைப்புகளில் மொழி சற்றே அன்னியமாக முதல் சில பக்கங்களில் தெரியும், (உதாரணமாக காடு) சில பகுதிகள் கடந்த பின் அப்படியே அதன் அழகியல் உள்ளே இழுத்து விடும், மீண்டும் மீண்டும் முதலில் இருந்து படிக்க தூண்டும். அது போல் இலக்கிய தமிழ் இதிலும் ஆரம்பிக்கிறது, பின்னர் அது நம்மை புராண காலங்களுக்குள் இயல்பாய் கலந்து விட செய்கிறது.

பிரமாண்டமான ஒரு வரலாற்று திரைப்படம் கண் முன் காட்சியாய் விரிவது போன்ற எழுத்து நடை, அதற்கு மேலும் அழகு சேர்க்கும் ஷண்முகவேலின்   படங்கள் (இவரின் ஓவியம் பற்றி தனி கட்டுரையே எழுதலாம் அவ்வளவு அறுபுதமான கிறங்கடிக்கும் நம்மை அந்த இடத்திற்கே கை பிடித்து அழைத்து செல்லும் மாயங்கள்).

 கடந்த 20 தினங்களால் என்னால் முதற்கனலை விட்டு வெளியே வர முடியவில்லை, திரும்ப திரும்ப படிக்கச் சொல்லும் எழுத்துப் போதை நிறைந்து கிடக்கிறது.

கிருஷ்ணை நதிக்கரையில் ஆரம்பிக்கும் முதல் தொகுதி அங்கேயே வந்து நிறைவு பெறுகிறது.

 அழகான செடியாய் மலர்ந்து மணம் வீச வேண்டிய அம்பை, கருகி அதிலிருந்து பெரும் காட்டு தீயாய் மாறி முதல் தொகுதி எங்கும் பற்றி எரிகிறாள். அந்த பெருநெருப்பின் விஸ்வரூபம் படிப்பவருக்கும் பரவி விடுவதில் ஆச்சர்யம் இல்லை.

இத்தொகுதியில் பீஷ்மரைமரை விட பெரிய ஞானி எனில் அது விசித்திர வீரியனே, ஒவ்வொரு நொடியையும் அறிந்து வாழும் உயிர்.  எப்போதும் மரணத்தின் பிடியில் இருக்கும் அவன், உயிர் பிரிகையில் படிப்பவர்களுக்கு ஏற்படும் ரணம் சாதாரணமல்ல. எனக்கு மிக பிடித்த பாத்திரப் படைப்பு.

 சரி தவறுகளுக்கு உட்படாமல், சிந்தை மாறாமல் தன் எதிரியை கொள்வதே வாழ்வென புறப்படும் சிகண்டியின் பிரம்மாண்டம் பிற்பகுதியை நிறைக்கிறது.

 சிறிது சிறிதாய் கிளை கதைகள் விரவி கிடக்கின்றன, அது என்னை, என் மனைவிக்கு கதை சொல்லியாய் மாற்றி விட்டது.

 எழுத்தழகு என்றால் என்ன, என்பதற்கான சில பதங்களை கீழ் தருகிறேன் சுவைத்து மகிழுங்கள்

"பசித்த நாய்க்குட்டி நான்குகால்களையும் ஊன்றி திமிறி கழுத்தை கட்டில் இருந்து உருவி ஓடிவந்து தன் இயற்கையால் மாமிச வாசனையை வாங்கிக்கொண்டு சிறியவாலை ஆனந்தமாகச் சுழற்றியபடி வேள்விப்பொருளாக வைக்கப்பட்டிருந்த மானிறைச்சியை நக்கி உண்ண ஆரம்பித்தது".

"அஸ்தினபுரி என்ற அழகியின் மான்விழிகளாக நீலத்தடாகங்கள் அமைந்தன. அவள் நீலக்கூந்தலைப்போல அங்கே பூம்பொழில்கள் வளர்ந்தன. மண்ணில் நாரைச்சிறகுகள்போல வெண்கூம்புமுகடுகள் கொண்ட மாளிகைகள் அதில் எழுந்தன. நீர்பெருகும் மாநதிகள் என சாலைகள் அந்நகருக்குள் ஓடின".

"திரும்பும் கழுத்துகளின் நளினங்கள், பறக்கும் கூந்தலை அள்ளும் பாவனைகள், ஓரவிழிப்பார்வையின் மின்வெட்டுகள், சுழித்துவிரியும் உதட்டு முத்திரைகள், அசையும் கைகளின் நடனங்கள், தோள்சரிவின் குழைவுகள், இடை வளைவின் ஒயில்கள், பின்னழகின் குவிதல்கள், முலைநெகிழ்வுகளின் பேரெழில்கள் வழியாக அவர் சென்றுகொண்டிருந்தார்"

இன்னும் பத்து பக்கம் வருமளவு எழுதிக்கொண்டே போகலாம், அவ்வளவு கொட்டி கிடக்கிறது. ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். 
முதல் தொகுதியை ஆரம்பித்து விட்டீர்கள் எனில் முழு தொகுப்பையும் படிப்பதை உங்களால் நிறுத்த இயலாது. 

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் எனில் "காலம் பல தாண்டி தமிழில்  நிற்கப்போகும் ஒரு அற்புதம்".

இரண்டாம் பாகமான மழைப்பாடலை முடித்துவிட்டு வருகிறேன்.

No comments:

Post a Comment