Tuesday, October 25, 2016

தேவதேவன் கவிதைகள் இரண்டு

தேவதேவன்

கடவுளின் நிலைமையில் இருந்து யோசித்து எழுதியது போன்ற எளிய கவிதை போல் தெரிந்தாலும், ஆழமான அர்த்தம் கொண்டது பின் வரும் கவிதை, வேறென்ன செய்து விட முடிகிறது கடவுளால்

"காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென

உணர்ந்தார், துயர்குழப்பமிக்க

இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற

வெகுயோசனைக்குப் பின்,

கடவுள்"

பூனை கவிதை, எல்லோருக்குள்ளும் ரசிப்பு தன்மை ஆரம்பிக்கும் முதல் பார்வையே பயத்தில் இருந்து தானே தொடங்குகிறது, பால்யத்தை மீட்டெடுக்கும் நினைவு படலங்களுடனே முடிகிறது இக்கவிதை...   

"முதல் அம்சம்

அதன் மெத்தென்ற ஸ்பரிசம்

குழைவு அடிவயிற்றின்

பீதியூட்டும் உயிர் கதகதப்பு


இருவிழிகள் நட்சத்திரங்கள்

பார்க்கும் பார்வையில்

சிதறிஓடும் இருள் எலிகள்

நான்! நான்!என புலிபோல

நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்

உருளும் கோட்டமுள்ள சக்கரமென

புழுப்போல

அதன் வயிறசைதல் காணலாம்

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத

சாமர்த்திய நடை இருந்தும்

மியாவ்என்ற சுயப்பிரலாப குரலால்

தன் இரையை தானே ஓட்டிவிடும்

முட்டாள் ஜென்மம்

நூல்கண்டோடும்

திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்

விளையாடும் புத்திதான் எனினும்

பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு

எலியை குதறுகையில்

பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்

நக்கி நக்கி பாலருந்துகையில்

தெரியவரும் இளகிய நாக்கையும்

ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்

ஞாபகப்படுத்திப்பாருங்கள்

உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்

இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே


சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?"

No comments:

Post a Comment