Thursday, September 15, 2016

இரத்தம் கலக்காத காவிரியை அனுப்பி வை.

நண்பா! 
ஞாபகமிருக்கிறதா? 
விஜய் மல்லையா 
ஓடிப் போன நாளில் ,
இருவருமே 
கடன் பாக்கிக்காக 
வங்கிக்கு அழைக்கப்பட்டிருந்தோம்

உன் முகத்தை 
இதுவரையில் 
நான் பார்த்ததில்லை 
ஆனால் , 
உனக்கு சேற்றுப் புண்ணிருப்பது 
எனக்குத் தெரியும்.

வயசுக்கு வந்த மகள்களை 
கவலையோடு
வெறித்து விட்டு 
நட்சத்திரங்களை 
சாட்சியாக்கி அழும் 
பின்னிரவுப் பொழுதுகள் 
இருவருக்கும் ஒன்றுதான்.

விளைநெல் வாசம் 
களைகளின் கடைசி நிமிடம் 
விரால் மீன்களின் கொஞ்சல் 
சாரைப் பாம்பின் சரசரப்பு 
இவற்றை உணர்வதற்கு 
தமிழோ, கன்னடமோ 
தேவையற்ற ஒன்றுதான்.

உன்னோடு 
வயலுக்கு வராத 
உன் பிள்ளைகள் 
பேருந்துகளை 
எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

என் வயல்களை 
அழித்துக் கட்டப்பட்ட 
வீட்டுக்குள் இருந்தபடி ,
என் பிள்ளைகள் 
கலவரங்களின் சோழிகளை
முகநூலில் 
உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சி 
பார்த்துக் கொண்டிருக்கும் 
இரண்டு முதல்வர்களும் ,
வீதிகளில் 
கொடும்பாவியாக்கிக் 
கொளுத்தப்பட்டாலும்
வீடுகளுக்கு வாய்த்திருக்கிறது 
Z பிளஸ் பாதுகாப்பு

நம் பிரதமர் ,
ஏதாவது ஒரு நாட்டின் 
தண்ணீர்ச் சுவையில் 
தற்காலிகமாய் 
மறந்திருக்கக் கூடும் 
காவிரியை.

டி. எம். சி கணக்குகளை 
பிறகு 
பார்த்துக் கொள்வோம்.

மேகதாதுவோ 
மேட்டூரோ 
பின்னர் 
தீர்த்துக் கொள்வோம்.

நாளைக்கு 
சமைப்பதற்காக 
மீதம் வைத்திருந்த 
விதை நெல்லைக் கூட 
உன் வீட்டுக் கலயத்தில் 
கொட்டி விடுகிறேன்.

உன் 
எல்லா கோபங்களும் 
தீர்ந்த பிறகு 
இரத்தம் கலக்காத 
காவிரியை 
அனுப்பி வை.

எங்கள் 
கண்ணீர் கதைகளை 
நாங்கள் 
தலைமுழுகியபடி 
அந்த நதியோடு 
பேசிக் கொள்கிறோம்.

$மானசீகன் $

No comments:

Post a Comment