Friday, December 29, 2017

*ஆண்டாளின் விசிறி *

ஆண்டாள் கோவில் 

இருட்பிரகாரத்தில் அப்பாயி

கை பிடித்து ஈரத்தரையில் 

மிதந்து சென்றது அவ்வப்போது 

கனவில் எழுகிறது..!!

கருஞ்சிலைகள் நோக்கி நிற்க 

பதட்டத்துடன் கடந்து சென்றிருக்கிறேன்..!

யானைச்சாண  வீச்சம் காற்றில் கலந்து வீச 

கருங்கல்  

எதிரொலி கேட்டபடிக்கு 

பயந்து கண்டாங்கி சேலைநுனியை 

இறுக்கி பிடித்தபடி கடந்திருக்கிறேன்..!

வாரச்சந்தாவில் சேர்த்து வைத்த ஐந்து பத்து 

ரூபாய்க்கும் வேட்டு வைக்க 

தகர இரயில்வண்டி வேண்டி 

தரையில் புரண்டு அழுதிருக்கிறேன்..!!

டயர் செருப்பு வார் அறுந்தும் 

காலணாவுக்கு 

தைக்காமல்   வெறுங்காலில், எனைச்சுமந்து       

கருவேல கண்மாய் கடந்து 

இரயில்வண்டியோடு சுடச்சுட 

வாழையிலை பால்கோவாவும் 

வாங்கித்தந்திருக்கிறாள்..!!

கரண்ட் வந்திருக்காத சிறுகிராமத்தின் 

இரவுகள் 

அவள் மாராப்பு விசிறிகளின்றி 

எனக்கு கடந்ததே இல்லை..!!

உணர்கிறேன்  நான் ...புற்று வந்து 

செத்துப்போன அப்பாயி அன்று என் 

கை பிடித்து அழைத்துச் சென்ற 

ஆண்டாளே தான் என..!!


*---அனலோன் *

No comments:

Post a Comment