Thursday, May 26, 2016

இப்போதெல்லாம் . . .


இப்போதெல்லாம்
நிறைய வாசிக்கிறேன்
நிறைய எழுதுகிறேன்
நண்பர்களுடன், குடும்பத்தாருடன்
நிறைய நேரம் செலவிடுகிறேன்.

நிறைய புதிய முகங்கள் பார்க்கிறேன்
நிறைய புதிய குரல்கள் கேட்கிறேன்
நான் வசிக்கும் அதே தெருவின் கடைக்கோடிவீட்டின்
ஹார்மோனிய இசைவகுப்புகளின் ஸ்வரவரிசைகள்
என் காதுகளில் விழுகின்றன.

கேபிள் டிவிக்காரர்
பால்காரர்
தபால்காரர்
இஸ்திரிக்கு துணி வாங்க வரும் இளைஞன்
இவர்களை குசலம் விசாரிக்கிறேன்

பண்பலை அல்லாத வானொலியில்
தேடிப் பிடித்து சங்கீதம் கேட்கிறேன்
பத்மராஜனின் திரைப்படங்களை
மீண்டும் பார்க்கத் துவங்கியிருக்கிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு
நெஞ்சிலாடும் பூ ஒன்று
ஈரவிழிக்காவியங்கள்
மணிப்பூர் மாமியார்
படப்பாடல்களை
ஒலிக்கவிட்டு ரசிக்கிறேன்.

மகன் எந்த வகுப்பில் படிக்கிறான்
என்கிற கேள்விக்கு யோசிக்காமல்
பதில் சொல்கிறேன்.
முதுகுக்குப் பின்னால் மட்டுமே
உணர்ந்து பழகியிருந்த
மனைவின் கோபப்பார்வையை
இப்போது நேருக்கு நேராக
எதிர்கொண்டு தலைகுனிகிறேன்.

நட்சத்திரங்கள், நிலா பார்க்கிறேன்
செவ்வானத்தில் வெள்ளைப் பறவைக் கூட்டத்தைப் பார்த்து
பால்ய நினைவு திரும்பி
கொக்கே கொக்கே பூ போடு என்று
கைகள் நீட்டிச் சிரிக்கிறேன்

எப்போதும் கட்டிப் போடப்பட்டிருக்கும்
மாடிவீட்டு லாப்ரடார் டாமியை
அவிழ்த்து விட்டு,
ஓடிப்பிடித்து விளையாடுகிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக
இப்போதெல்லாம்
ஒருநாளைக்கு
ஒரே ஒரு முறைதான்
என் கைபேசிக்கு மின்னூட்டுகிறேன்.

ஆம்.
நான் என் முகநூல், கீச்சு கணக்குகளை  
முடக்கிவிட்டேன்.

 சுகா


No comments:

Post a Comment