Thursday, April 7, 2016

கொலைதான் தீர்வோ? எக்ஸ்ப்ரஸ்சிறுகதை

  தன் இளம் மனைவி, இன்னொரு இளைஞனுடன் உரசியபடி நடந்து போன சிசிடிவியின் காட்சியை கண்டதும் உச்ச மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தான் சைபர் கிரைம் உயர்அதிகாரி நரேன். வேறொரு கேஸ் விசயமாக ஒரு தனியார் ஹோட்டல் அறையை சிசிடிவியின் தொடர்பு மூலம் தன் அறையில் இருந்த டிவியை கண்காணித்து கொண்டிருந்த அவன், அதற்கு அருகில் இருந்த அறையில் வெளிப்பட்டு  சர்வ சாதாரணமாக இளஞ்ஜோடிகள் போல் தன் மனைவி, இன்னொருவனுடன் கைகோர்த்து சிரித்தபடி சென்ற  இந்த காட்சியில் திகைத்துப் போனான்.

  நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டில் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான் நரேன், வனிதாவிற்கு குடும்ப பாங்கான தோற்றம், வசதி அதிகம் இல்லாவிட்டாலும், நல்ல குடும்பமாக இருந்தது. தனது பணியின் மூலம், வனிதாவின் முன்கதையை சுலபமாக தெரிந்து கொண்டிருக்கலாம், ஆனால் அவளை பெண் பார்த்த உடன் அந்த எண்ணமே வரவில்லை. அதுவுமில்லாமல் அவன் தன் பணியை சுயநலத்திற்க்காக பயன்படுத்தியதில்லை, திருமணமானதில் இருந்து கொஞ்சம் கூட வெறுப்போ, கோபமோ, வேறு சந்தேகபடும்படி நடவடிக்கையோ கொண்டதில்லை வனிதா, எல்லாம் இனிமையாகவே சென்று கொண்டிருந்தது.

"மூன்று நாள் திருப்பதி உட்பட சில கோவில்களை தரிசிக்க போகிறோம், எனது தோழிகள் அனைவரும் வருகிறார்கள்" என அனுமதி பெற்று சென்றவள், இன்று சென்னையில் ஒரு அறையில் வேறொருவனுடன் கைகோர்த்தபடி.....

ஆத்திரம் தலைக்கேறி, கொலைவெறியுடன் இருந்தான் நரேன்.

 இரண்டு நாள்களுக்கு பிறகு,

 வனிதா தனது ஆன்மீக பயணம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டதாக அலைபேசியில் அழைத்தாள். அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு சொல்லிவிட்டு கோபம் குறையாமல் தனது காரை வேகமாக செலுத்தியபடி வீடு வந்து சேர்ந்தால் நரேன்.

 ஒருவேளை தான் நினைப்பது போல் அல்லாமல் வேறேதாவதாக இருக்குமோ என்ற கோணத்திலும் தீர விசாரித்து விட்டான், அந்த இளைஞனை பற்றிய தகவலை, அவன் சம்பத், கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், காதலித்திருக்கிறார்கள், பெற்றோர்கள் சம்மதம் தராததாலும், அவனுக்கு சரியான வேலை கிடைக்காததாலும், வனிதாவிற்கு அரசு வேலையில், நல்ல சம்பளத்தில் இளிச்சவாய் கணவன் கிடைத்தாலும்..லும்...லும்..

நரேன் எவ்வளவு சுலபமாக ஏமாற்றப்பட்டு விட்டான்?

 இரண்டு நாட்களில் சரியான திட்டம் தீட்டியாகி விட்டது.  அவளிடம் பேசி உபயோகமில்லை என தீர்மானித்தான்.

  வீட்டிக்கு வந்த அடுத்த கணமே, "வெளியே செல்லலாம் வா", என்றழைத்தான், அவள் "எங்கே" என்றாள், "சொல்கிறேன்" என்று முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், காரை ஸ்டார்ட் செய்து கதவை அவளுக்கு திறந்து விட்டான், மிதமான வேகத்தில் கார் செல்ல, பலமுறை அவள் கேட்டும் பதில் சொல்லாமல் ஒரு மர்ம புன்னகையுடன் மௌனமாகவே வந்தான், கார் ஒரு வீதியில் திரும்பி ஒண்டு குடித்தன வீட்டின் முன் நின்றது, வனிதா வெளிறிய முகத்துடன் நரேனை பார்த்தாள், அது சம்பத்தின் வீடு.

 ஒரு கற்றை பேப்பரை காரின் டேஷ் போர்டில் இருந்து வெளியே எடுத்து, இது "விவாகரத்து பத்திரம், இதில் கையெழுத்து போட்டு விட்டு இறங்கி தாராளமாக நடந்து சம்பத் இருக்கும் இந்த வீட்டில் சென்று வாழலாம், அல்லது அவனையே உனது குடும்பத்தில் சென்று சேர்க்க சொல்லலாம், அது உன் இஷ்டம். இனி உனக்கு எனது வீட்டில் இடமில்லை" என்றவனை விக்கித்து பார்த்து கொண்டிருக்கும் போதே,

"எல்லா தவறையும் செய்து விட்ட நீ மகிழ்ச்சியாய் இருக்கையில் ஒரு தவறும் செய்யாமல் என் நிம்மதியை தொலைத்து கொண்டு உன்னுடன் வாழ இயலாதே?"

"உன்னை கொன்று விட்டு ஜெயிலுக்கு போய் என் வாழ்க்கையை கெடுத்து கொள்ளும் அளவு முட்டாளும் நானில்லை"  என்றவனை பார்த்து வேறு வழியில்லாமல் கையெழுத்திட ஆரம்பித்தாள் வனிதா.

கையெழுத்திட்டு முடிந்ததும் கார் கதவை திறந்து விட்டு அவள் இறங்கியவுடன் எந்த சலனமும் இன்றி தனது காரை வந்த வழியே திருப்பி செலுத்த ஆரம்பித்தான் நரேன்.


2 comments: