Tuesday, August 18, 2020

சாந்தாக்காவும், சரஸ்வதியம்மாவும்

கடந்த ஆகஸ்ட் 12 வீட்டுக்காரியோட பிறந்தநாள், கொரானாவால பெரிய கொண்டாட்டம் எல்லாம் இல்லை, வழக்கமாக அப்பா, மாமா, அத்தை, நண்பர்கள் என சிறிய கூட்டம் கொள்ளும் வீடு, இந்தமுறை யாரும் இல்லாததால், நாங்கள் மூன்று பேர் மட்டுமே கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.  வெள்ளி கொலுசு, ஒரு புடவை, ஒரு சுடிதார், ஒருகிலோ அளவு பர்த் டே கேக் வாங்கியிருந்தேன். 

சரியாக கேக் வெட்டும் சமயத்தில் காலிங் பெல் சப்தம் கேட்டு போய் பார்த்தால் சாந்தாமணி அக்காவும், சரஸ்வதியம்மாவும் நின்றிந்தார்கள்.  (ஏரியா துப்புரவு பணியாளர்கள்) உள்ளே அழைத்தால் வருவதற்கு தயக்கம் காட்டினார்கள், "யாருமே இல்லை, நீங்களாவது  வரப்போறீங்களா? இல்லையா?" என கேட்ட  பின் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள். கேக் கொடுத்ததில் சரஸ்வதியம்மா சாப்பிட ஆரம்பித்தார், சாந்தாமணி கையில் வைத்தபடியே நின்றிந்தார். "ஏன்?" என்றேன் "பேரனுக்கு கொண்டு போலாம்ன்னு" என்றவரை சாப்பிடச்சொல்லிவிட்டு அரைகிலோவை இரண்டாக பிரித்து தனித்தனியாக இரண்டு டிபன் பாக்ஸில் போட்டு என்னவள் அவர்கள் இருவரின் கையிலும் கொடுத்துவிட்டாள். 

இன்று இரண்டு டிபன் பாக்ஸ்களும் திரும்ப வந்திருந்தது, அட்டகாசமான சூடான சிக்கன்  பிரியாணியுடனும் முட்டையுடனும். 

அதில் அளவுக்கு அதிகமாக பிரியமும் அன்பும் கலந்திருந்தது  


அன்பொன்றே வாழ்வின் இழை, அதனால்தான் பெய்கிறது மழை

 

1 comment:

  1. அவர்களின் அன்பை விட பெரிய ஆசீர்வாதம் உண்டா என்ன..நெகிழ்ச்சி..🙏

    ReplyDelete