Monday, April 13, 2020

கொரானா காலங்கள்

தினசரி காலையில் நானும் இவளும் அரை மணிநேர உடற்பயிற்சி (YouTube Home workout), பின்பு மாடியில் மகனுடன் கிரிக்கெட், மதியம் அரைமணி நேரம்  செஸ், (இப்போது அவனுக்கு பள்ளியில் online வழியாக பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்) தினசரி பத்தே நிமிடம் மட்டும் என்ன நடக்கிறது என TV செய்தி பார்த்தேன், (செய்திகளில் பெருங்கூட்டமாக டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல அல்லாடிய, நடந்தே சென்ற மக்களின் நிலை மட்டுமே கடும் உளைச்சலையும், மிகுந்த பரிதாபத்தையும் ஏற்படுத்தியது, நிச்சயமாக இதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் நடந்திருக்க வேண்டும்) மதியத்திற்கு மேல் எனக்கும் இவளுக்கும் வீட்டிலிருந்தே வேலை, சனி ஞாயிறுகளில் படங்கள், சமையல் (அசைவம் தொடவே இல்லை) தினசரி மாலை இருபது நிமிட தியானம், இரவு மட்டும் ஒரு சிகரெட் (3 pkt stock). தேவையான பொருட்களை மளிகை அண்ணாச்சிக்கு வாட்சப் செய்தேன் வீட்டில் கொண்டுவந்து கொடுத்து போனார், Google pay செய்தேன். வாங்கிய புத்தகங்களில் பஷீரின் மொத்த நாவல்களும் முடித்தேன், வண்ணதாசனின் நடுகை, கலைக்கமுடியாத ஒப்பனைகள்,  ஓஷோவின் சிவசூத்திரம், மலையாள சிறுகதைகள்,  (முக்கிய எழுத்தாளர்களின் இணைய, முகநூல் தளங்களை தினமும் படித்தேன்) வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. வாரம் ஒருமுறை  மூன்று பேரும் வீட்டை சுத்தம் செய்தோம். அவசியமெனில் குடிக்கலாம் என வாங்கி வைத்த சரக்கை குடிக்கும் வாய்ப்பும் ஏற்படவில்லை. குடிக்க தோன்றவும் இல்லை.
ஏறக்குறைய என் மொபைல் காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் அனைவருமே பேசிக்கொண்டோம், ஒன்று அவர்கள் போன் செய்தார்கள் இல்லை நான் கூப்பிட்டேன். கொரானாவை பற்றி அதிகம் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டேன், ஏனெனில் அனைவருமே அதில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றிருக்கிறார்கள் போல. நெட்பிலிக்ஸ்ல் மூன்று தொடர்களை பார்ப்பதாக திட்டம் இருந்தது, நேரம் இல்லை...
அலுவலகத்தை பொறுத்தவரை, இரண்டு மாதங்களுக்கு முன் போட்ட இன்கிரிமெண்ட் கட்டானது, வரும் மாதங்களில் முழுதாக சம்பளம் போட இயலாது 30 அல்லது 50 சதவீதம் பிடித்தம் இருக்கும், அல்லது பணியாளர்களை குறைக்க நேரும் என்று மெயில் வந்தது, எனக்கு பரவாயில்லை, இவளுக்கு “CEO நூறு சதவீத சம்பளத்தை தானமாக வழங்கி இருக்கிறார், எனவே நீங்களும் சம்பளத்தை முன்வந்து வழங்குங்கள் எனக் கேட்டார்கள். “நீயே ரிசைன் லெட்டர் கொடுப்பது புத்திசாலித்தனம்”, என்றேன்.  நிஜமாகவே கவலை தோன்றவில்லை. ஏனெனில் வாழ்க்கையை திரும்பி பார்த்தபோது எனக்கு பயணங்களும், புத்தகங்களும், நண்பர்களும் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள், வேலையின் இனிமையான நினைவுகள் என்பது சேர்ந்த சில தினங்களுக்கு பிறகு விலகிக்கொண்ட மாயை. சம்பளம் வந்தும் 20ம் தேதியே பிச்சையெடுப்பவர்களில் நானும் ஒருவன், ஆயிரம் வருடங்கள் வாழப்போகிறோம் என்று நினைப்பவர்கள் இதற்கு நமக்கும் சேர்த்து கவலை படட்டும், இதற்கெல்லாம் நான் கவலைப்பட முடியாது. "இந்த நொடியில் வாழ்என்பதே என் முக்கிய வாழ்க்கை தத்துவம், ஆனால் எதிர்மறையாக இதுதான் எனக்கு வாழ்க்கையில் நிறைய கொடுத்திருக்கிறது.

மிக முக்கியமாக கோபம் வரவில்லை நிஜமாகவே எங்களுக்குள் சண்டை வரவில்லை, அம்மாவும் மகனும் மட்டும், சில சமயங்களில் சண்டையிட்டார்கள் (குளி, சாப்பிடு, மொபைலையே நோண்டாதே மாதிரி) காசு சுத்தமாக செலவாகவில்லை, வழக்கமாக செலவாகவும் இந்த மாதம் ஷாப்பிங், காபி, மகனின் வேன் பீஸ் என கணக்கு போட்டு வைத்திருந்த தொகையை நிவாரண நிதிக்கு கொடுத்தேன். (Google payல் தேடினால் கேரளா முதல்வர், அசாம் முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண வேண்டிய அழைப்பு முன்னாடி வந்து நிற்கின்றன, தமிழக முதல்வர் நிவாரண நிதி அக்கௌண்டையே காணோம். அதனால் Paid via https://ereceipt.tn.gov.in ரெசிப்ட் அங்கேயே பிரிண்ட் எடுத்து கொள்ளலாம், வரி விலக்கும் உண்டாம்) டிவிட்டரை trending பார்ப்பதற்கு மட்டுமே இரண்டு மூன்று நிமிடங்கள் உபயோக படுத்தினேன், முக்கியமாக பத்து நிமிடங்களுக்கு மேல் செய்தி சேனல்களோ சமூக வலைத்தளங்களோ பார்க்காமல் இருந்ததால் நாங்கள் யாரும் ஒருவருக்கொருவர் குரல்வளையை கடித்துக்கொள்ளுமளவு சைக்கோவாகவில்லை. Online ல் வந்த செய்தித்தாளை மட்டும் முழுவதும் படித்தேன். அன்றைய நாளில் நிலவரம் தெளிவானது. உணவை குறைத்து கொண்டதனாலும் (இரண்டு வேளை மட்டுமே, இதில் திங்கட்கிழமைகளில் விரதம்)  உடற்பயிற்சிகளாலும், தியானங்களாலும்  உடல் இளைத்திருக்கிறது, மனம் வலுவாகி இருக்கிறது  இந்த நாட்களை மிக நிம்மதியுடன் அழகாக வாழ்ந்தோம் என தோன்றுகிறது.
எட்டு வருடங்கள் இமயமலை சாரலில் மைனஸ் டிகிரி கடும் குளிரில் நைந்த ஒரே ஒரு உடையுடன் கடும் பசியுடன் ஞானத்தை மட்டுமே தேடிய சாதுக்கள் பற்றி ஓஷோ எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தை உணர்கையில் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை என தோன்றுகிறது. சுயபுராணம் எனக்கே போராடிகிறதுதான், இருந்தாலும் நிச்சயம் இது ஒரு சரித்திர நிகழ்வு இதை எப்படி கடந்தோம் என நினைவு கொள்வதற்கு இந்த எழுத்து பின்னாளில் உபயோகப்படும்.

சரி அது தவிர இங்கே நிகழ்ந்தவை, நெகிழ்ந்தவை சில  
நிகழ்வு:
·       
             *   சுமார் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்க படுவார்கள், சுமார் 50 லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என உலகின்  பல பெரிய நிபுணர்களால்  கணிக்கப்பட்ட இந்தியாவில் அது நிகழாதது மிகப்பெரிய ஆறுதல்
·         மிக இழிவானது என நான் கருதியது இரு புறங்களிலும்  கொரானாவை வைத்து செய்த அரசியல். நோயாளிகள் மருத்துவ பணியாளர்களை நோக்கி செய்த தேவையில்லாத செயல்கள். அதற்கு மத சாயம் பூசி சண்டையிட்டது. அரசியல்வாதிகள் எப்போதும் மாற மாட்டார்கள் ஐயா, பொது மக்களுக்கு அறிவு எங்கே போயிற்று? ஜாதி, மத, கட்சி வேறுபாடு பார்த்து  சண்டை போட்டு கொண்டிருக்க வேண்டிய நேரமா இது? நிராகரிக்கப்பட வேண்டிய இன்னும் பல இருக்கிறது. அதை சொல்ல விருப்பமில்லை.
·         அரசு இயந்திரம் இதுவரை நான் என் வாழ்நாளில் பார்க்காத காரியங்களை செய்தது ஆச்சர்யம். VAO உடன் மருத்துவ பணியாளர்கள் ஏரியாவில் வீடுவீடாக வந்து சோதனையிட்டார்கள், ஸ்டிக்கர் பாய்ஸ் என நானே விமர்சித்த இந்த அரசு விளம்பரமில்லாமல் பல பணிகளை செய்தது.
·        
    உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் ஏழை மக்களை மத்திய அரசு சரியாக கவனிக்கவில்லை, அவர்களுக்கு உதவி போய் சேரவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபணமாகிறது. ஒரு ஏழை தாய் கங்கையில் தன் ஐந்து குழந்தைகளையும் வீசி எறிந்தது ஏற்றுக்கொள்ளவே இயலாத செயல். 
·         
     டெல்லி நடைபயணம், கச்சா எண்ணெய், மருத்துவ தேவைகளுக்கு, சுகாதாரத்திற்கு மிக குறைவான ஒதுக்கீடு போன்ற உண்மையில் சீரியஸான  விவகாரங்களை எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக மக்களிடம் கொண்டு செல்லாமல், "விளக்குப்பிடிக்கப் போறியா?" என குறிப்பிட்ட பிரிவை பார்த்து கூறுவதாக நினைத்து எழுதிக்கொண்டிருந்தார்கள். (இதில் தெளிவானா அரசியல் பார்வையுள்ள எதிர்க்கட்சியினர் சிலரும் வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டது துயரம்). தமிழக மக்கள் விளக்கை ஏற்றினார்கள், எனது தெருவில் சுமார் 50 வீடுகள் உள்ளன. நான்கு வீடுகளில் விளக்கை ஏற்றுவார்கள் என எதிர்பார்த்து மொட்டை மாடிக்கு போனால் அனைத்து வீடுகளிலும் மின்சாரம் அணைக்கப்பட்டு விளக்கோ டர்ச்சோ மொபைல் திரையோ ஒளிர்ந்துகொண்டிருந்தது. சென்னையில் மட்டுமே 1500 மெகா வாட் குறையும் என எதிர்பார்த்த மின்வாரிய துறைக்கு 2600 குறைந்ததே இதற்க்கு சாட்சி.  மோடி என்ன எதிர்பார்த்தாரோ அதை எதிர்க்கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன, தவிர சில தவறுகளை சுட்டி காட்டுபவனைக் கூட சங்கி என முத்திரை குத்தி விடுவதால், மோடி எதிர்ப்பா ஆதரவா என குழம்பிக்கொண்டிருந்தவர்களை எதிர் கட்சிகளே  ஏராளமான மோடி பக்தர்களை உருவாக்கி விட்டது பரிதாபம். காங்கிரஸ் என்றொரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. இப்படியே போனால் very difficult to defeat Modi என்பதை புரிந்து கொள்ளுங்கள்.   
·         தன்னார்வ அமைப்புகள் மற்றும் எதிர் கட்சி உதவிகளை ஆளும்கட்சி தடை செய்தது மிகப்பெரிய தவறு, அரசங்களும் உதவி செய்து அமைப்புகளும் உதவி செய்தால் மட்டுமே, ஏழை மக்களின் பசி மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும் 
·         சிகிச்சை தரும் டாக்டர்கள் கொரானாவால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் வேதனையளிக்கிறது

·         நெகிழ்வு: கடும் பசியோடு இருந்த குறிப்பிட்ட பகுதி மக்களை பார்த்த இரண்டு புதுச்சேரி இளைஞர்கள் சமைத்து தினமும் வழங்கி கொண்டிருந்தது,  பல மனிதர்கள் தெருக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு வழங்கியது,  பெரும் பணக்காரர்கள் பலர் நிஜமாகவே தன் யார் என இந்த தருணத்தில் காட்டினார்கள். கோவையில் ஸ்ரீதேவி சிவா, விப்ரோ, நாம் திட்டிக்கொண்டிருந்த அம்பானி, அதானி இன்னும் பல பெரிய நிறுவனங்கள் உதவிகளை முன்னெடுத்தன. பள்ளி சிறுவன் ஒருவன் தன் மொத்த சேமிப்பையும் உதவிக்கு வழங்கினான். நிறைய நடிகர்கள் பெரிய அளவில் நிதிகளை கொடுத்தார்கள், பல நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் பெரிய அளவில் உதவி செய்கின்றன. அக் ஷய் 25 கோடி கொடுத்தார், இங்கே லாரன்ஸ் மூன்று கோடியும், அஜித் 1.25 கோடி கொடுத்தது நிறைவு. கொடுக்காதவர்கள் பற்றி குறை கூற இது நேரமில்லை, கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லும் நேரம். குறிப்பாக எனக்கு டாட்டா நிறுவன தலைவரின் செயல் மிகுந்த நெகிழ்வை கொடுத்தது, 1500 கோடியை சொத்தில் இருந்து கொடுத்துவிட்டு, இன்னும்   தேவைப்பட்டால் எனது முழு சொத்தையும் தேசத்துக்காக தர தயார் என்று கூறியது. நிறைய மனிதர்கள் கட்சி ஜாதி மத வித்யாசம் பார்க்காமல் செய்த பேருதவிகளை, நெகிழ்வை எழுத பக்கங்கள் போதாது, சக மனிதர்கள் மேலும் மனிதத்தின் மேலும் எனக்கு இருந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. அனைவருக்கும் நன்றியும் நேசமும்.  

வாழ்க்கை சுருக்கமானது.
பிடிவாதத்திற்கோ, சண்டை போடவோ நேரமில்லை நண்பனே
-லென்னன்
லாக் டவ்னுக்கு நன்றி.  

No comments:

Post a Comment