Monday, March 18, 2019

வியக்க வைத்த பெரும் வைர திருட்டு

108 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.702 கோடி) என்பதுதான் உலகிலேயே மிக அதிக மதிப்பில் நடத்தப்பட்ட வைரத் திருட்டு!
வைரங்களால் பிரபலமான நாடு பெல்ஜியம். அங்கே ஜெம் மாகாணத்தில் அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் மிகவும் பரபரப்பானது. நகரத்தின் 80 சதவீத மக்கள் வைரம் தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள். உலகத்துக்குத் தேவைப்படும் 84 சதவீத வைரம் உருவாகும் இடம் இது. 380 வைரத் தொழிற்சாலைகள் வைரங்களைத் தயாரித்து 1,500 நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன. இங்கே இயங்கும் வைரத்தரகர்கள் மட்டும் 3,500 பேர்.
அண்ட்வெர்ப் டைமண்ட் சென்டர் என்பது இரண்டு மாடிகளும் அண்டர் கிரவுண்டும் கொண்டது. அங்கேதான் ஷேஃப்ட்டி லாக்கர்கள் அடங்கிய பாது காப்பு அறை உள்ளது. அந்த லாக்கர்களை பொதுமக்களும், வர்த்தகர்களும் வைரம், தங்கம், பணம், பத்திரங்களை பாதுகாக்க உபயோகித்தார்கள்.
இந்தக் கட்டிடத்துக்கும் பாதுகாப்பு அறைக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக நவீனமானவை. வானத்தில் எப்போ தும் போலீஸாரின் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றிக் கொண்டேயிருக்கும். ஆயுதம் ஏந்திய வீரர்கள் வாகனங்களில் உலா வருவார்கள். கட்டிடத்துக்கு அருகில் குண்டு துளைக்க முடியாத போலீஸ் பூத். இன்னொருபுறம் ஒரு போலீஸ் ஸ்டேஷன். பொல்லார்ட்ஸ் என்றழைக்கப்படும் இரும்புக் கம்பங்கள் சாலைகளின் குறுக்கில் அமைக்கப்பட்டிருக்கும். வாகனங்கள் அவ்வளவு சுலபமாக கட்டிடத்தை நெருங்கிவிட முடியாது. வெளி கேட்டில் எல்லா அடையாள அட்டைகளும் சரியாக இருந்தால், அவர்கள் இயக்கியதும் இந்த இரும்புக் கம்பங்கள் தரையோடு இறங்கிக் கொண்டு வாகனத்துக்கு வழி தரும்.
கட்டிடத்தை 24 மணி நேரமும் கேமராக்கள் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டேயிருக்கும். அந்தப் பாதுகாப்பு அறைக்குச் செல்வதற்கு முன்பாக இரண்டு கதவுகள். கண்ட்ரோல் அறையில் இருந்து அனுப்பப்படும் சங்கேத ஓசையைக் கேட்ட பிறகே கதவுகள் திறக்கும். பிரதான பாதுகாப்பு அறையின் முக்கியமான கதவு ஸ்டீல் மட்டும் காப்பரால் செய்யப்பட்டது. அந்தக் கதவின் எடை மூன்று டன். அந்தக் கதவை இயந்திரம் கொண்டு டிரில் செய்து திறக்க முயன்றால் இடைவிடாமல் 12 மணி நேரம் மிக சக்தி வாய்ந்த இயந்திரம் செயல்பட வேண்டும். அந்தக் கதவைத் திறக்க சாவியும் போட வேண்டும். அந்த சாவியின் சைஸ் என்ன தெரியுமா? கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கும்போது, அடையாளமாக பெரிய சைஸில் ‘அட்டை சாவி' செய்து கொடுப்பார்கள் அல்லவா, அந்த மாதிரி நிஜத்தில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட சாவி அது.
தவிர லாக்கர்களின் உரிமையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தரப்பட்டுள்ள நான்கு இலக்க ரகசிய எண்களையும் பதிய வேண்டும். இதைத் தவிர, அந்தப் பகுதியில் மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தைக் கண்டுபிடித் தால் எச்சரிக்கும் இன்ஃப்ராரெட் ஹீட் டிடெக்டர்ஸ், புதிய அசைவுகள் மற்றும் வெளிச்சம் தென்பட்டால் எச்சரிக்கும் சென்சார், அந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பத்தில் மாறுதல் ஏற்பட்டால் உடனே அறிவிக்கும் சீஸ்மிக் சென்சார், இதைத் தவிர கதவை அனுமதியின்றி முறையில்லாமல் திறக்க முயற்சி செய் தால் அதை அறிவிக்கும் காந்த மண்டலம்.
2003 பிப்ரவரி 14 அன்று பெல்ஜியம் தேசம் காதலர் தினத்தைக் கொண்டாடியது. மறுநாள் இரவில் இத்தனை பிரமாண்டமான ஏற்பாடுகளை மீறி அந்த வைர மையத்தின் பாதுகாப்பு அறை கொள்ளையடிக்கப்பட்டது.
தகவல் அறிந்து காவல்துறை வந்து பார்த்தபோது அந்தப் பாதுகாப்பு அறையில் இருந்த 160 லாக்கர்களில் 123 லாக்கர்கள் டிரில்லிங் இயந்திரம் மூலம் திறக்கப்பட்டிருந்தது.
அந்த லாக்கர்களின் உரிமையாளர்களும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் ஆய்வாளர்களும் குவிந்துவிட்டார்கள். இதுதான் உலகிலேயே மிக அதிக மதிப் பில் அடிக்கப்பட்ட லாக்கர் கொள்ளை.
கொஞ்சம் தாவி ஒரு ஃப்ளாஷ்பேக்குக்குச் சென்று வரலாம். அவன் பெயர் லியார்னாடோ நோடார்பார்டோலோ. இத்தாலியைச் சேர்ந்தவன். ‘பார்ன் கிரிமினல்’ என்பார்களே அப்படி சிறு வயதிலேயே சின்னச் சின்ன திருட்டுக்களில் தன் குற்றலீலைகளைத் தொடங்கி, நகைக் கடைகளில் கொள்ளையடிப்பதைத் தொழிலாகவே செய்துவருபவன்.
பழம்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் 2001-ல் ஒரு குறிப்பிட்ட நகையைக் கொள்ளையடித்துத் தரச் சொன்னார். அவனுக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு லட்சம் யூரோ கரன்சிகள். லியார்னாடோ புத்திநுட்பம் கொண்ட பல துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சிலரை கூட்டணியாக அமைத்துக்கொண்டு, அந்தக் கொள்ளையை சிறப்பாக செய்து முடித்தான்.
அடுத்து அவனுக்கு வந்த அழைப்பு வேறு ஒரு நபரிடம் இருந்து. ஒரு ரகசிய இடத்தில் சந்தித்தபோது, அங்கிருந்த மூன்று பேரை அந்த நபர் அறிமுகப்படுத்தினான். இந்த லாக்கர்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைச் சொல்லி, அதை தலைமையேற்று நடத்தித் தரச் சொன்னான். லியானார்டோ தன் பக்கத்தில் இருந்து ஒரு நபரைச் சேர்த்துக் கொண்டான். ஐந்து பேர் கொண்ட படை உருவானது. அழகாக திட்டம் போட்டு படிப்படியாக நிறைவேற்றினான். இதற்கு அவன் எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை வருடங்கள்.
முதல் வேலையாக, அந்தப் பாதுகாப்பு அறையில் தன் பெயரில் ஒரு லாக்கர் எடுத்துக்கொண்டான். அவனுக்கு அடையாள அட்டைகள் தரப்பட்டன. அவன் அடிக்கடி தன் லாக்கரை இயக்க அங்கு சென்று வரத் தொடங்கினான். அந்த இடத்தின் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவனுக்கு அத்துப்படியாயின.
ஒரு மீட்டர் நீளம் உள்ள அந்த சாவியின் சரியான டூப்ளிகேட்டை ஐவரில் ஒருவன் செய்து முடிக்கவே சில மாதங்களாயின. சின்ன கேமராவை மறைவாகப் பொருத்தி அந்த நான்கு இலக்க பாஸ்வேர்டு எண்களை கச்சிதமாகக் அறிந்தான் லியார்னாடோ. ஒவ்வொரு சென்சார்களையும் கேமராக்களையும் எப்படி ஏமாற்றுவது என்று பாடம் படித்தார்கள். எலெக்ட்ரானிக் செயல்பாடுகளை முறியடிக்கும் கருவிகளை உருவாக்கினார்கள். பாலியெஸ்டர் ஷீல்ட் வெப்பத்தை ஏமாற்றும் என்று புரிந்து அதைச் செய்தார்கள்.
அலுமினியம் பிளாக் செய்து அதைக் கொண்டு காந்த மண்டலத்தைக் கட்டுப்படுத்தினார்கள். பெண்கள் கூந்தலுக்காகப் பயன்படுத்தும் சாதாரண ஸ்ப்ரே மூலம் சில சென் சார்களை கவிழ்க்க முடியுமென்றும், பீன் பேக்குகளில் நிரப்பப்படும் பின் பால்ஸ் மூலம் கேமராக்களை ஏமாற்ற முடியும் என்றும் கண்டறிந்து சின்னச் சின்ன கருவிகள் செய்தார்கள். போலி அடையாள அட்டைகள், இரும்புக் கம்பங்களை இயக்கும் கருவி என்று கச்சிதமான ஏற்பாடுகள். அதற்குத்தான் இரண்டரை வருடங்கள்!
சரி, இதெல்லாம் உலகத்துக்கு எப்படித் தெரிய வந்தது?
இவையெல்லாம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கைது செய்யப்பட்ட பிறகு லியானார்டோவே சொன்னவை. ஆம்! லியானார்டோவும், இவன் ஏற்பாடு செய்த நபரும்தான் மாட்டிக் கொண்டார்கள். திட்டத்தின் சூத்திரதாரியும் அவன் ஏற்பாடு செய்த மூன்று பேரும் கொள்ளையடிக்கப்பட்ட அத்தனை வைரங்கள், நகைகளுடன் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்கள் இந்த நிமிடம்வரை கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த நகைகளும் மீட்கப்படவில்லை.
இந்த லாக்கர் கொள்ளையைப் பற்றி ஒரு விரிவான புத்தகம் ‘ஃப்ளாலெஸ்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது. ஹாலிவுட்டின் பாரமவுன்ட் நிறுவனத்தினர் இந்த சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க உரிமை வாங்கியிருக்கிறார்கள்.
எல்லாம் சரி! இவ்வளவு சாமர்த்திய மாக இரண்டரை வருடங்கள் திட்டம் போட்டு கொள்ளையை செயல்படுத்திய லியார்னாடோ எப்படி போலீஸில் சிக்கினான்?
லியார்னாடோ செய்த ஒரு மிகப் பெரிய முட்டாள்தனம்… கொள்ளை நடந்த அறையில் லாக்கர்களை மற்றவர்கள் டிரில்லிங் இயந்திரம் கொண்டு திறந்துகொண்டு இருந்தபோது எடுத்துச் சென்ற சாண்ட்விச்சை சாப்பிட்டுத் தொலைத்ததுதான். அதிலிருந்து அவ னுடைய எச்சிலுடன் கூடிய ஒரு பிரெட் முனை கீழே விழுந்துகிடக்க… அதிலிருந்து டி.என்.ஏவை எடுத்த போலீஸ் மிக சீக்கிரமே அவனை நெருங்கிவிட்டது. கொள்ளையர்களுக்கு லியார்னாடோ தெரிவிக்கும் அறிவுரை என்பது ‘கொள்ளை சமயத்தில் எதையும் தின்று வைக்காதீர்கள்’ என்பதாக இருக்குமோ? 

இதுபோன்ற பல சுவாரஸ்ய குற்ற சம்பவங்களை பின்னணியாக வைத்து, தொகுத்து, "எப்படி இப்படி" என  புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். கீழ் கொடுத்துள்ள இணைப்பில் கிடைக்கிறது. விலை 102

Saturday, February 16, 2019

அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு,

வணக்கம்.
இப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். இந்த கடிதம் வணிக சம்மந்தமானதல்ல, அது சம்மந்தமாக எழுதினாலும் யாருக்கும் உபயோகமும் இல்லை.
தவிர இந்த படத்தையும் நீங்கள் வணிக ரீதியில் சமரசம் செய்ய முற்படவில்லை என்பது வேறு விஷயம். "ஏன் முன்பு தியேட்டரில் பார்க்கவில்லை?" என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதிலில்லை, ஏனெனில் படம் வந்ததே தெரியாத அளவிற்கு எனக்கு ஏற்பட்ட விபத்தோ, மகனின் பிறப்பில் ஏற்பட்ட கோளாறால் மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது பண தேவை சம்மந்தப்பட்ட பைத்தியமாகவோ நான் இருந்திருக்க கூடும்.
நிற்க,
படத்தின் கதாநாயகன் சர்வ நிச்சயமாக இளையராஜா தான், இந்த படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வசனம் எழுதி புரிய வைக்க வேண்டிய தேவையை ஏறக்குறைய விலக்கியே வைத்து விட்டார். படத்தை பதைபதைப்பாய் கொண்டு சென்றதில் அவர்தான் போர் வீரன்.
ஓநாய் நீங்கள் தான். உடல் மொழியில் அப்படியே கொண்டுவந்திருக்கிறீர்கள், உடல் முழுவதும் காயம்பட்டு கிடந்தாலும் கொஞ்சம் கூட குறையாத வேட்டையாடும் துடிப்பும், இழப்பின் ஊமை தவிப்பும், அதுவும் ஒவ்வொரு இழப்பின்போதும் மெளனமாக தலை குனியுமிடம் உச்சம். திருநங்கை ஏஞ்சல் கிளாடியா தலை நிமிர்ந்து உங்களை பார்க்கையில், காப்பாற்ற இயலாமல் தரை நோக்கும் காட்சி உச்சமய்யா. என்னால் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. படத்தில் உங்களுக்கு வசனமே இல்லையோ என நினைத்திருந்த நேரத்தில் அந்த "எட்வினண்ணா நீங்களாவது கதை சொல்லக் கூடாதா" என குட்டி இளவரசி கேட்கையில் ஆரம்பித்தீர்களே? கண்கள் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.
ஸ்ரீ எனும் ஆட்டு குட்டியின் உடலில் ஒரு டன் சுமையை வைத்து சுமக்க சொல்லி விட்டீர்கள், அற்புதம் அந்த குட்டி எந்த வித யோசனையுமில்லாமல் உங்களின் உடலைக் கூட சேர்த்தே சுமந்து வந்தது.
இதை தாண்டிய வசீகரிப்பை சொல்லிக்கொண்டே போகலாம்
"நீ டாக்டர், நீ டாக்டர்" என கையில் கொடுத்த பணத்தை வீசி எறிந்து விட்டு குதூகலிக்கும் மனநிலை தவறியவர்.
"அவனை அரெஸ்ட் பண்ணது தப்புதான் சார், நியாயமா உங்களை முதல்ல பிடிச்சிருக்கணும்" வெறியோடு குற்றவாளியை தேடி தொலைத்துக்கொண்டே இருப்பவனின் கோபம்.
"பணமெல்லாம் தேவைப்படாது, நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி எட்வினை கொல்லனும்" முதன்மை தொழில்முறை வேலைக்காரனின் கூரிய வசனம்.
"மூத்திர பையோட அலைஞ்சிட்டிருக்கேன், அவனை உயிரோடவும், உயிரில்லாதவும் பார்க்கணும்" கடிபட்ட கரடியின் வெறி.
"கொல்லப்பட்டு சாவும் போலீஸ்காரர்கள் வித விதமான குரலெழுப்பி சாவது,
அதிலும் அந்த "ஐயா", பதவியை அந்த வார்த்தையாலே தக்கவைத்து, சாகும் போதும் அது தவிர வேறு எண்ணமே வராத எழுபது விழுக்காடு காவலர்களின் நிலைமை.
"நல்லவேளை அதில ஒருத்தன் மார்ல உதைச்சான், மயக்கமாகி விழிச்சு பார்க்கிறேன், இங்கே இருக்கேன்" எனது நெஞ்சிற்கு கடத்தப்பட்ட வலி.
சாவின் விளிம்பிலும் யாரும் துப்பாக்கியால் சாக கூடாது என மேல் நோக்கி சுடும் அப்பா.
ஒரு பெரும் கொலைகாரன் கதவை திறந்து விடச்சொல்லி பார்வையால் காவலாளியை கெஞ்சும் இடம்
"அம்மாக்கு என்னாச்சு எட்வின் அண்ணா?" என்ற பதில் சொல்லவே இயலாத கேள்விக்கு,
"செத்துட்டாங்க" ஒரே வார்த்தையில் அதை முடித்த விதம்.
ஒரு திரில்லர் படத்தில் மனித நேயத்தை விதைக்கும் வித்தை எப்படி கை வந்தது?
இந்த அரைகுறை எழுத்தை வைத்துக்கொண்டு என்னால் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வேறென்ன....
உங்களுக்கும், பவாவிற்கும் நன்றி மிஷ்கின், ஏனெனில் உங்களை ஒரு இயக்குனராக இல்லாமல் "இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான், அவன் கணக்கையே அடைக்க முடியல பவா" என வேறு ஒரு கோணத்தில் எல்லா நாளும் கார்த்திகையில் அறிமுகம் செய்ததே அவர்தான். புத்தகங்களை அடுத்தநாளே அனுப்பிய என் அக்கா சைலஜாவிற்கும் அன்பு.
உங்கள் காட்டின் இந்த இலை, இனி ஒநாயையும் ஆட்டுக்குட்டியையும் அதன் உள்ரேகை போல சுமந்து கொண்டே திரியும்.

Thursday, February 14, 2019

டாலர் தேசம் புத்தக விமர்சனம்

பொதுவாக பொருளாதாரம், கடந்த கால வரலாறு போன்ற புத்தகங்கள் போரடிக்க கூடியவை, விதி விலக்காக மதன் தமிழில் சுவாரஸ்யமாக எழுதுவார். அதுவும் கிமுகிபி அட்டகாசமாக வந்த புத்தகம். அதற்கு அடுத்தபடியாக  பா ராகவன்  அமெரிக்காவின் கதையா டாலர் தேசம் என்ற பெயரில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதி  வெளியிட்டிருக்கிறார், நான்கு நாட்களில் 600 பக்கங்கள் கொண்ட  அந்த புத்தகத்தை இன்றுதான்  முடித்தேன்.

ஒரு ராட்டினத்தில் அமரவைத்து மிக உயரமாக சென்று கீழிறங்கியதை போல ஜெட் வேகம். மூன்று நாட்களிலேயே படித்து முடிக்க முடிந்தது. அமெரிக்காவை கண்டுபிடித்ததில் இருந்து சதாம் உசேனை பிடித்தது வரை பல புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள் உதவியுடன் எழுதி இருக்கிறார். மக்களை உணவுக்கே கையேந்த விட்ட அமெரிக்கா எப்படி வல்லரசானது, வெளியுறவு கொள்கை என்று படிக்கிறோமே அது என்ன? உலகில் ஏதாவது ஒரு மூலையில் இன்னமும்  ஏன் போர்கள் நிலவுகின்றன, அங்கெல்லாம் பொருளுதவி, எக்கச்சக்கமான பண உதவி கொண்டு ஓடி வந்து  அமெரிக்கா உதவுகிறதே எதனால்? என்பது போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறது இந்த புத்தகம்.

அந்தந்த காலகட்டங்களை நேரடியாகவே கூட்டிப்போய் திரைப்படம் காட்டுவது போல் காட்சிகளை விவரிக்கிறார் எஸ் ரா., ஜார்ஜ் வாஷிண்டனுக்கு முன்னாலேயே ஏழு அதிபர்கள் ஆண்டாலும் அதை மறைத்த இருண்ட பக்கங்களின் வரலாற்று குறிப்பு, உண்மையான அமெரிக்கர்களான செவ்விந்தியர்களின் பரிதாப நிலை, லிங்கனின் வரலாறு,
கறுப்பினத்தவர்களின் அடிமைப் புரட்சி, முதல் உலக யுத்தம் கொடுத்த லாபம், டாலர் சம்பாதிக்க ஆரம்பித்த வழி,  அதன் பின் வந்த சோசலிச கம்யூனிஸ போட்டிகள், உருவான நவீன அமெரிக்கா என ஜரூராக முதல் பாகம் செல்கிறது.
ஹிட்லர் ஆடிய ஆட்டங்கள், அவரின் வீழ்ச்சி,  பேர்ல் துறைமுக அழிப்பு, தொடர்ந்த அந்த ஹிரோஷிமா நாகசாகி பயங்கரம், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்குமான பனிப்போர், அதன் விளைவுகள், வியட்னாம் என்றொரு குட்டி தேசம் ஏற்படுத்திய ஆறா காயங்கள். மார்ட்டின் லூதர் கிங் என முழுவதையும் ஒன்று விடாமல் அலசி அதில் சுவாரஸ்யமானதை தொகுத்து ஆத்ம சுத்தியுடன் (குறைத்து ஐம்பது இடங்களிலாவது ஆத்ம சுத்தி வருகிறது) கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

குஜாலான கிளிண்டன் மோனிகா பக்கங்களும் உண்டு, கனிம வளங்களை வளைக்க செய்யும் யுத்திகள்,  ஹமாஸும், பின்லேடனும், சதாம் உசேன் பகுதிகளும் எக்ஸ்பிரஸ் ஓட்டம், திகில் தரும் திட்டமிட்ட சம்பவங்கள். அதிலும் கால்வாசி புத்தகம் பின் லேடன் பற்றித்தான். செப்டம்பர் 11ம் தேதி சம்பவங்களின் பக்கத்திலே யாரோ தீவிரவாதி அமர்ந்து திட்டமிட்டது போல தொகுப்பு ஜில்லிட வைக்கிறது. சரியான திட்டமிடல், அதற்கு தகுதியான ஆட்கள், ஊடுருவும் போராளிகள், பயிற்சி, கடைசி வரை ரகசியம் காத்தல், தனி மனிதனாக உலகின் ஒரே ஒரு வல்லரசுக்கு அறை கூவல் விடுதல் காரியத்தை கச்சிதமாக செய்து முடித்தல் என பின் லேடன் பகுதி ரணகளம். அதுசரி, பின்லேடனை விட்டுவிட்டு அமெரிக்க சரித்திரம் எழுத முடியுமா என்ன? இந்த புத்தகத்தை படித்த பின் உங்களின் அரசியல் பற்றிய பார்வையே மாறிப்போகும் என்பதற்கு நான் உத்திரவாதம்

உலக அரசியல் தெரிந்து கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். அமேசானில் புத்தகமாகவும், மின் நூலாகவும் (மூன்று மடங்கு குறைந்த விலையில்) கிடைக்கிறது  

Monday, November 12, 2018

ரத்த கண்ணீர்

"ராதா "போடுறது தான் போடுறே, அப்படியே கறி சோறு போடு" ராஜேந்திரன் "நாங்க ஜீவ காருண்ய கட்சியில் இருக்கிறோம் அசைவம் சாப்பிட மாட்டோம், எந்த உயிரையும் கொல்ல மாட்டோம்" ராதா "திங்கிறதுக்குக்கூட கட்சி வச்சு இருக்காங்கடா... யப்பா"

பிச்சை எடுத்துக்கொண்டிருக்கையிலேயே இவ்வளவு நக்கல் என்றால் படம் முழுவதும்?

64 வருடங்களுக்கு முந்தைய சினிமா, சாப்பிட உட்காருகையில் ஒரு பத்து நிமிடம் ஏதாவது பார்க்கலாம் என லோக்கல் தொலைகாட்சியில் பார்க்க ஆரம்பித்த இந்த படத்தை முழுதுமே பார்க்கும்படி வைத்தது அந்த ரணகள அறிமுக காட்சியே.

"மோகன் அவர்கள் பாட்டாளிகளை பற்றி பேசுவார்கள்" என்ற உடனே "ஐ டோன்ட் லைக்" என மூக்குடைப்பார், மைக் பக்கத்துல போக மாட்டார், மைக்கை பக்கத்துல கொண்டு வந்து வைக்க சொல்லுவார். "லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்" என ஆரம்பித்த உடனேயே "தமிழ்ல பேசுங்கய்யா" என குரல் கொடுப்பார்கள். "பிரெண்ட்ஸ்" என ஆரம்பித்து, என்னை வரவேற்க பெரிய மனிதர்கள் வந்திருப்பார்கள் என்று வந்தேன், இந்த மாதிரி லேபர்ஸ் கூட்டங்களை கண்டாலே எனக்கு பிடிப்பதில்லை, எப்போதும் பார்த்தாலும் பஞ்சம் பசி பட்னி... நான்சென்ஸ்" கேட்க உட்கார்ந்திருப்பவர்களை வறுத்து எடுப்பார் பாருங்கள் செம்ம ரகளயாக இருக்கும்.
அதற்கும் கைதட்டி கூட்டம் குதூகலிக்கும்.

"நாய் காஸ்ட்லீ நாய் சோறு கீறு போட்டு கெடுத்துறாதே" என சலம்புவதாகட்டும், "கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியால எவனுக்கும் சரியா தெரியாது" என தன் அம்மாவை வாரி விடுவதாகட்டும்.
"எல்லா கட்சிக்காரனும் பிசினெஸ்ல பூத்துண்டான், இவனுக ஒண்ணுக்குமே லாயக்கில்லை" என அன்று பேசியது இன்றுவரை நிஜம்தானே?

கல்யாணம் ஆனா பிறகு மாமனாரை ஓட்டும் விதம் இருக்கிறதே,

"மிஸ்டர் பிள்ளை, உன்னை கல்யாண நாள்ல பார்த்தேன் அடையாளமே தெரியல பேட் பாடியோட இருக்கே"


"என்ன மேன் அசிங்கமா கொடு கீடு இழுத்துகிட்டு இருக்கே! என்ன கோடு இது? "
"இது விபூதி பட்டை"
"வாட் பட்டை"

"ஏம் மேன் பொண்ண பெத்தே? ஏம் பெத்தே?"
என்று அவரை அலற விடுவார்.
தன் அம்மா இறந்து விட்டதை சொல்லி வர சொல்லும் போது,
"டுவெண்ட்டி கிலோ மீட்டர்ஸ்? நடந்ததெல்லாம் வர முடியாது, நான் காந்தா வீட்டுக்கு போயிட்டு அப்படியே கார்ல வந்துடறேன்" என்பதெல்லாம் அந்த மகா செண்டிமெண்ட் காலத்திலேயே வேற லெவல்.

குஷ்டம் வந்து கண் தெரியாமல் போய்விட்ட பிறகு, சரளை கற்கள் மேல் விழுந்து விடுவார், "ரோடு போட மூணு வருசமாகும், கல்ல கொண்டுவந்து இப்போவே கொட்டிருக்கானே" என தன் கவுண்டரை தொடர்வார். இது போல குஷ்டம் வந்தது போல நடித்தாலே ஆயுள் நாட்கள் குறையும் என தெரிந்தும், ஆயிரம் காட்சிகளுக்கு மேல் இது நாடகமாகவும் நடத்தினார் ராதா

தமிழகத்தில் ஏதாவது ஒரு சிறு திரையரங்கத்தில் இவ்வளவு வருடம் கடந்தும் கூட இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
MR ராதா ஒரு பிறவி கலைஞன். எல்லாவற்றிலும் தெளிவும், தோலைநோக்கு பார்வையும், வாழ்வில் உறுதியையும் வைத்திருந்த அவருக்கான சரியான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது
இது YouTubeலேயே காண கிடைக்கிறது. தேவை இல்லை எனில் பாடல்களை ஓட்டி விட்டு ரசித்து பாருங்கள்.
link : https://www.youtube.com/watch?v=F63Qhsl5010https://www.youtube.com/watch?v=F63Qhsl5010

Saturday, November 10, 2018

Into the wild விமர்சனம்

உலகின் தலைசிறந்த பயண திரைப்படங்கள் (worlds best traveler movies list) என கூகிள் செய்தால் இது தான் முதல் இடத்தில் வந்து நிற்கிறது. அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என பார்க்க ஆரம்பித்தேன்.
கையில் பணமோ டெபிட் கிரிடிட் கார்டோ மொபைல் போனே இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் உங்களை யாரென்றே தெரியாத ஒரு இயற்கை கொஞ்சும் பிரதேசத்தில், எந்த கவலையும் இல்லாமல் முழு நிறைவை அனுபவித்துக்கொண்டு உங்களால் இருக்க முடியுமா? அது எப்படி என யோசிக்க தோன்றுகிறதல்லவா?  ஆனால் இரண்டு வருடங்கள் மேற்கண்ட எந்த வசதியும் இல்லாமல் படத்தின் நாயகன் கிறிஸ் மேகாண்டில் தன் பெயரை அலெக்சாண்டர் சூப்பர்டிரம்ப் என மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அலாஸ்காவிற்கு சென்ற கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இது ஒரு உண்மை நிகழ்வு.

ஒவ்வொரு ஆணுக்கும் இது போன்ற, சாகசம் செய்து அழகிய இடத்தில் சில நாலாவது தங்கி இருக்க வேண்டும் என்பது கனவு, அந்த கனவை நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த திரைப்படம்

படத்தை பார்த்து முடித்துவிட்டு கிட்டத்தட்ட அரை மணி நேரங்கள் கடந்து விட்டன, செயலற்று வெறுமையாய் வேறு நினைவுகள் இன்றி அமர்ந்திருக்கிறேன். வணிக ரீதியான படமென்றால் எழுத்து தானாகவே வந்து விழும், ஆனால் இந்த படத்தை பற்றி ஏதாவது எழுத வேண்டும் என தோன்றுகிறது,  எங்கிருந்து ஆரம்பிப்பது எதில் முடிப்பது என்றே தெரியவில்லை. அவ்வளவு பாதிப்பு மனதில். இன்னும் ஒரு வாரம் அழகிய நினைவுகளும், பல காட்சிகளும் என்னுள் தங்கும் என்றே தோன்றுகிறது.

1990ல் ஆரம்பிக்கும் இந்த கதை 1992ல் முடிவடைகிறது. படத்தின் ஒளிப்பதிவு கொள்ளை அழகு, அதுதான் படத்தின் பெரும் பலமே. இறப்பதற்கு முன் பார்த்தே ஆக வேண்டிய படங்களில் இது முக்கியமானது.

வெறும் அழகியலோடு இது முடிந்து விடவில்லை, மனிதர்கள் அவனுக்கு செய்யும் உதவிகள், வழி பயணத்தில் அழகான ஒரு காதல், எதிர்படும் இடர்பாடுகள், அவனை தத்தெடுத்து கொள்ள ஆசைப்படும் விபத்தில் மனைவி மகனை இழந்து விட்ட முதியவர் என படம் நெடுகிலும் பிரியங்களும், துன்பங்களும் சேர்ந்து கொள்கின்றன.

செயற்கை இன்பங்களை, வெற்று நடிப்பை, தொலைபேசி கருவிகளை, தொலைக்காட்சிகளை தூர தள்ளி வைத்து விட்டு இந்த படத்தை பார்க்கையில் இது வேறு உலகத்திற்கு நம்மை கொண்டு செல்லும்

படம் முடிந்த பிறகு, மனதில் மனித நேயம் நிரம்பி வழிய. சில கண்ணீர் துளிகளுடன் எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது. அதுதான் இதன் மேஜிக் .


Saturday, November 3, 2018

இந்த நாள்

நரசிம்ம நாயக்கன் பாளையத்தில், சிறு கட்டிடத்தில் பல வருடங்களாக  இயங்கி வந்த அமுதா ஸ்டோர்ஸ், அதன் எதிரிலேயே  கடையை மாற்றி பெரிய வணிக வளாகமாக உருவெடுத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. விலை குறைவாக இருப்பதால் வழக்கமாக அங்கேயே நாங்கள் மாத மளிகை வாங்குவது வழக்கம்.

இந்த முறையும் வழக்கம் போல மளிகை வாங்கி கொண்டிருந்தாள் என் எஜமானி,  ஆண்களுக்கான மாத செலவு என்பது மிக சொச்ச பொருள்களோடே முடிந்து விடுமல்லவா, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வாசனை திரவியம் (perfume) மட்டும் எனது பங்காக வாங்கி வைத்தேன்.

வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு வாசனை திரவியத்தை தேடுகையில், "அதை வைக்கவே இல்லை" என்று அம்மா சொன்னார்கள். என் செல்வ புத்திரனையும் அழைத்துக்கொண்டு, திரும்ப சென்று பில் போடும் இடத்திற்கே வந்து இது "லிஸ்ட்ல இது விட்டு போச்சு, ஸ்டாக் செக் பண்ணிட்டு எடுத்துதாங்க, இல்லைன்னா CCTV footage பாருங்க" என்றேன். பில் போடுபவர், அங்குள்ள பணியாளர்கள் அனைவரையும் கூப்பிட்டு, "இங்கே அந்த பொருள் ஏதாவது இருந்ததா, எடுத்து வைத்தீர்களா?" விசாரித்தார். யாரும் அந்த வாசனை திரவியத்தை எடுத்து பழைய இடத்தில் வைத்ததாக கூறவில்லை.

பத்து நிமிடம் கடந்த பின் பேச்சு வார்த்தை நீடித்து கொண்டே போனது. சட்டென கோபம் என் இயல்பிலேயே இருப்பதால், "முத்துவை கூப்பிடு நான் பேசிக்கொள்கிறேன்" என்றேன். முத்து அமுதாஸ் ஸ்டார் ஓனருக்கு நெருக்கமானவர், பழைய கடையை அவர்தான் பார்த்துக்கொண்டிருந்தார். நீண்ட கால வாடிக்கையாளரான என்னை நன்கு தெரியும் என்பதால் அவரிடமே பேசி பஞ்சாயத்தை தீர்த்து கொள்ளலாம் என கணக்கிட்டேன்.

"என்ன சார்?" என்றபடி முத்து வந்தார், சொல்ல ஆரம்பித்த உடனேயே, "ஒண்ணும் பிரச்சனை இல்லை சார்", என்றபடி, ஒரு பெண்ணை அழைத்து "சார் எதை சொல்றாரோ, அதை எடுத்து கொடு" என்றார். அப்பாடா என்றிருந்தது. "போயிட்டு வாங்க சார் இதெல்லாம் ஒரு விஷயம்னு இவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்தீர்களா, நேரா என்னை வந்து பார்க்க வேண்டியதுதானே?" வாடிக்கையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் பில் போடுபவர்கள் என ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது, கொஞ்சம் பெருமிதமாகவும், கூச்சமுமாகவும் இருந்தது. பொருளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது

வீட்டின் கேட்டின் முன் வண்டியை நிறுத்துகையில் என்  தவப்புதல்வன் வீட்டிற்குள் அவசரமாக "மூச்சா வருதுப்பா" ஓடினான். ஓடிய வேகத்திலேயே அலறியபடி திரும்ப ஓடி வந்து "அப்பா, நாம வாங்கிட்டு வந்த மாதிரியே இங்கே இன்னொன்னு இருக்கு" என்றான்.

"அப்புறம் எப்படி இல்லைன்னு சொன்னீங்க?" என்று அம்மாவிடம் கடும் கோபமாக கேட்க, "இது பிரியாக்கு வாங்குற  பவுடர் டப்பா"ன்னு நெனச்சேன் என்றார் மலங்க விழித்தபடி. "என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க?" என்றதற்கு, "நெஜமாவே தெரியலயே, உனக்கு வாங்கினா, அப்பவே எடுத்து  உன் ரூமுக்கு கொண்டு போய்டுவே, இது அவளுக்குன்னு நெனச்சு" என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, வீட்டின் உள்ளிருந்து வேகமாக வெளியே வந்த என் மனைவி, "அம்மா தெரிஞ்சு செய்வாங்களா? லூசு மாதிரி பேசிட்டு, முதல்ல வண்டிய எடுங்க" வழக்கமாக கட்டளைகளை கேட்டே பழகிய நான் அதை மறுக்காமல் திரும்ப அமுதா ஸ்டோர்ஸ் வந்து, முத்துவை பார்த்து "தயவு செஞ்சு மன்னிசிடுங்க முத்து, முன்னாடி வாங்கினது வீட்ல இருந்தது, சரியா பார்க்கல" என்றேன். "என் கஸ்டமரை எனக்கு தெரியாதா சார், இதுக்கு எதுக்கு மன்னிப்பு? இதை திருப்பி கொடுக்க குடும்பத்தோட வேற வரணுமா" என்று அதே புன்னகையுடன் வாங்கி வைத்து, என் மனைவியும் மன்னிப்பு கோரி கொண்டிருந்ததை "மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கட படுத்தாதீங்க மேடம்" என்று அந்த சம்பவத்திற்கு முழு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, வேறு ஒரு வாடிக்கையாளரின் தொலைந்த கதையை சுவாரஸ்யமாக சொல்லி கொண்டே இருந்தார்.

பணியில் இருந்த பில் போடுபவரையும் வரவழைத்து மன்னிப்பு கேட்ட பின்பே, அந்த ஏதோ ஒரு தவிப்பு அடங்கியது. இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அம்மாவும், மகனும், மனைவியும் தூங்கி விட்டார்கள். முத்து இவர்களுக்கு முன்பே தூங்கி இருப்பார் என அவதானிக்கிறேன்.

இந்த குறைந்த பட்ச நேர்மை நல்லவர்கள்  என்றோ, நடிப்பையோ காட்டிக்கொள்ள அல்ல, சுய நிம்மதிக்காகவும் படுத்த உடன் தூங்கவும் தான்.

இனிய இரவு.

Thursday, October 25, 2018

பிடித்த புத்தகங்கள் பகுதி 2

படித்த புத்தகங்கள் என்றே வந்திருக்க வேண்டும், முதல் தொகுப்பை பிடித்த என்று எழுதிவிட்டதால் அதையே தொடர்கிறேன்.
ஏற்கனவே நாற்பது புத்தகங்களை பற்றி எழுதி விட்டதால் இனி நாற்பத்தி ஒன்றில் இருந்து ஆரம்பிக்கிறேன். முந்தைய தொகுப்பை தவற விட்டவர்கள் இதை பிடித்த புத்தகங்கள் படித்து விட்டு வாருங்கள்.

41. மலைகள் சப்தமிடுவதில்லை.

இலக்கியமும் இசையும் கலைகளும் இல்லாமல் போனால் மனிதர்கள் வெற்று சக்கையாகி போவார்கள் என்கிறார் இதன் ஆசிரியர்
எஸ். ராமகிருஷ்ணன். நடந்தே இந்தியா முழுவதும் பயணம் செய்த அனலேந்தி, தஸ்தாயேவ்ஸ்கி, சேகா, கார்க்கி, பாஸோ, காமிக்ஸ், ரயிலோடும் தூரம், வெயில், சிற்பங்கள் என உங்களை ஆச்சர்யப்படுத்தும். நிறைய கட்டுரைகள் இதில் உண்டு.

42. பனிமனிதன். 

இது ஏதோ சிறுவர்களுக்கான கதை என்று நினைத்து பத்து பக்கம் படிக்கலாம் என்று ஆரம்பித்தேன், நாவலை முழுவதும் முடித்த பின்பு தான் வைக்க முடிந்தது. கதையின் இடையிடையே வரும் உண்மை தகவல்கள் மிகுந்த ஆச்சர்யங்கள் கொண்டவை. நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினர்களுக்கான புத்தகம்.

43. பணக்கார தந்தை ஏழை தந்தை. 

ஆங்கிலத்தில் இது Rich dad, Poor dad என்ற பெயருடன் வந்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட தந்தைகளின் செழுமை, வாழ்க்கையை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கான புத்தகம்.

44. பொன்னியின் செல்வன்

போதுமானவரை இந்த புத்தகம் பற்றிய பற்றி விளக்கங்கள் வந்து விட்டன. என் தோழி ஒருவர் ஏன் இதை பற்றி எழுதவில்லை என்று கேட்டு கொண்டதற்கிணங்க இதை குறிப்பிடுகிறேன். பத்து வருடங்கள் முன்பே படித்தாயிற்று.

45. Man eaters of kumaon

புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் மனிதர்களை கொல்லும் சிறுத்தை புலிகளை பற்றியும் அவற்றை வேட்டையாடியது பற்றியும் எழுதி இருக்கிறார்.
ஹிமாயூன் புலிகள் என்று தமிழில் புத்தகம் வெளி வந்தது. குறிப்பிட்ட பகுதி மக்களால் தெய்வமாக கொண்டாடப்பட்ட இவர் எழுதிய புத்தகம் ஏறத்தாழ என்பது ஆண்டுகள் கடந்தது. ஆனால் பரபரப்பான நிகழ்வுகள் நிறைந்த புத்தகம்.

46. இனி என் முறை.

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரை பார்த்து பாலகுமாரன் சூடு போட்டு கொண்ட நாவல். நான்கைந்து அத்தியாயத்திற்கு பிறகு அதை படிக்க முடியாமல் ஓரமாக வைத்த புத்தகம். இதற்கு பின் இவர் கிரைம் கதை பக்கமே போகவில்லை.

47. சோளகர் தொட்டி 

எரியும் பனிக்காடு என்ற புத்தகத்தை பரதேசியாக மாற்றி பாலா படம் எடுத்தாரில்லையா, அதை விட அதிக அடர்த்தி கொண்ட புத்தகம் இது. பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களை, அவர்களது கடவுளை, வாழும் முறையை, அதன் அழகுகளை புரியவைக்கும் முதல் பாதி, அரசியல் அதிகாரங்களால், வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஒடுக்கப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகும் ரத்த மயமான இரண்டாம் பகுதி கலங்கடிக்குமாறு எழுதி இருக்கிறார். பூர்விக நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு, அதிகார வர்க்கத்தால் வதைக்கப்படும் மொத்தப் பழங்குடிகளின் கதை அது என நாவலாசிரியர் பாலமுருகன் கூறி இருக்கிறார்.

48. 19 டி எம் சாரோனிலிருந்து.

பவா செல்லத்துரை எழுதிய பொக்கிஷம். அழகையும் எளிமையையும் மனித தன்மையையம் கலந்து, நாம் கொண்டாடும் கொண்டாட வேண்டிய பல எழுத்தாளர்களை, ஓவியர்களை, புகைப்பட கலைஞர்களை அறிமுகம் செய்திருப்பார். தமிழில் வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்களில் இது முக்கியமானது.

49.  சித்திரபாவை

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை என் தந்தையிடம் இருந்து தான் கற்றேன். வார இதழ்களும் மாத இதழ்களும் தவறாது வாங்குபவர். புத்தக சேமிப்பும் நிறைய இருந்தன. என் தந்தையின் புத்தகங்களின் சேமிப்பில் இருந்து எடுத்து படித்த புத்தகம். பழைமையின் மூடத்தனத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆனந்தி போராடும் கதை. முன்னொரு காலத்தில் தூர்தர்சனில் நாடகமாக வந்திருக்கிறதாம்.

50. மோகமுள்

பொருந்தா காமம் என்று ஆரம்பித்தாலும், மோகத்தின் வெப்பம், அது நிகழ்த்துகின்ற நாடகம், கர்நாடக சங்கீத இளைஞன் பாபுவின் தனிமை, யமுனாவின் சிறுவயதுமுதலான நெருக்கம், மாறும் பார்வைகள் என விரிந்து செல்லும் இந்த புத்தகம், காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற முடிவை கண்டடையும். தமிழில் அப்போதைய காலகட்டத்தில் இந்த நாவல்  சினிமாவாக வந்து தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

51. கதவை திற காற்று வரட்டும்.

ஆசிரமத்தில் கேமரா வைக்கப்படுவதற்கு முன்பே குமுதத்தில் வந்து பாதியில் நின்று போன நித்யானந்தாவின் தொடர். நான்கைந்து பத்திகள் படித்ததுமே இந்தாளுகிட்ட அப்படி என்ன இருக்குன்னு கோவை வ உ சில இவ்ளோ பெரிய விளம்பரம் பண்ணி கூட்டம் போடுறாங்க என்று வியந்திருக்கிறேன். "அட  த்தூ" வகையறா

52. கந்தர்வன் கதைகள் 

இந்த தொகுப்பில் 62 கதைகள் இருக்கின்றன, இதுதான் அவர் எழுதிய மொத்த கதைகளுமே, பாதியை படித்துவிட்டு என் மாப்பிள்ளை அன்புவிற்கு திருமண பரிசாக கொடுத்துவிட்டேன். கந்தர்வனை பற்றி ஜெயமோகன் எழுதியதை அல்ல கொண்டாடியதை இதிலே கந்தர்வன் படிக்கலாம்.

53. ஸ்ரீரங்கத்து தேவதைகள் 

சுஜாதாவை படிப்பதில் இருக்கும் ஒரு ஜாலி என்னவென்றால் மிகுந்த சுவாரஸ்யமும், வேகமும் இருக்கும். ஒரு கதையின் பெயர் நினைவில் இல்லை "நான் வணிக எழுத்தாளனா? இல்லையா? என்பதை இந்த கதையை படித்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்" என அடுத்த நாள் இறந்துபோகப் போகிறபோகிற மகளை மருத்துவம சிகிச்சைக்காக அனுமதிக்க அல்லல்படும் தாய் அற்புதமான சிறுகதை ஒன்று இருக்கும். வாசித்தவர்கள் அதன் தலைப்பை சொல்லுங்கள். இந்த ஸ்ரீரங்கத்து தேவதைகள் நிஜமா, கற்பனையா என்ற  சந்தேகம் புத்தகம் முழுக்க படிப்பவருக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார். படிக்கும் வாசகனை மெல்லிய புன்னகையை படற செய்வதில் சுஜாதா ஒரு மன்னன்.

54. சுபா

இது புத்தக தலைப்பல்ல, எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் எழுதிய க்ரைம் கதைகளை வெகு சுவாரஸ்யமாக படித்துக்கொண்டிருந்த நாவல்கள் பற்றிய முழு தொகுப்பு. முன்பு பாக்கெட் நாவல் என்று அசோகன் (பார்ப்பதற்கு நக்கீரன் கோபால் மாதிரி இருப்பார் என்று அனுமானம்) வெளியிட்டு வந்தார். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுத்தில் கிரைம் கதைகளாக வெளிவரும், ராஜேஷ்குமாருக்கு விவேக், ரூபலா, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு பரத், சுசீலா, சுஜாதாவிற்கு கணேஷ், வசந்த் என்று துப்பறியும் கதாபாத்திரங்கள் உண்டு... ஆனால் ஒரு குடும்பத்தையே படைத்தவர்கள் இரட்டையர்கள் சுபா தான். நரேன் வைஜெயந்தி மற்றும் ஈகிள் ஐ,  ராமதாஸ், ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், என ஒரு பட்டாளத்தையே வைத்திருந்தார். அதிலும் முருகேஷ் என்ற சென்னை தமிழ் பேசும் கதாபாத்திரம் மறக்க முடியாதது.

பிடித்த புத்தகங்கள் மூன்றாம் பாகம் தொடரும்