Wednesday, January 27, 2021

உலகின் அழகான பாடம்

 ஆறு வயது சிறுவன் ஒருவன், தன் நான்கு வயது சகோதரியுடன் சந்தைக்குள் நுழைந்தான், அங்கே ஒரு பொம்மைகள் விற்கும் கடையின் முன் நின்ற அவனது சகோதரி ஒரு அழகான பொம்மையை ஏக்கமாக  பார்த்துவிட்டு அங்கேயே நின்றாள். 

சிறுவன்  "உனக்கு அந்த பொம்மை வேண்டுமா?"

சகோதரி, "ஆம்" 

சிறிதும் யோசிக்காமல் அந்த சிறுவன் தன் சகோதரியை அக்கடைக்குள் கூட்டி சென்று, அந்த பொம்மையை கையில் எடுத்துக்கொண்டு, இருவரின் அனைத்து நடவடிக்கைகளையும் புன் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த அந்த கடை முதலாளியிடம் சென்றான். 

வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என தெரிந்த தெளிவான கடை முதலாளியிடம் சிறுவன், "இந்த பொம்மை என்ன விலை?" என விசாரித்தான், 

அவர் மிகுந்த பிரியத்துடன், "நீ எவ்வளவு கொடுக்க விரும்புகிறாய்?" என கேட்டார். சிறுவன் தனது கால் சட்டை பையில் கைவிட்டு, தான் கடற்கரையில் சேமித்து வைத்திருந்த அனைத்து சிப்பிகளையும் அவரிடம் கொடுத்தான், அவர் மிக கவனமாக பணம் எண்ணுவது போல் அவற்றை எண்ணினார். சிறுவன் கவலையுடன் அவரை பார்த்து, "இது குறைவாக இருக்கிறதா?" என கேட்க, "இல்லையில்லை, மிக அதிகமாக இருக்கிறது என கூறி நான்கு சிப்பிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மீதியை அவனிடமே திருப்பி கொடுத்தார். 

சிறுவன் மீதமிருந்த சிப்பிகளை திரும்ப எடுத்துக்கொண்டு, சகோதரிக்கு பொம்மை வாங்கி கொடுத்த பெருமிதத்தில் வெளியேறினான். சிறுமியின் முகத்தில் அளவில்லாத சந்தோசம். 

அந்தக் கடையில் இருந்த ஒரு வேலைக்காரன் இதையெல்லாம் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டான். அவன்  தனது முதலாளியிடம், "ஐயா! இதுபோன்ற விலையுயர்ந்த பொம்மையை ஏன் வெறும் நான்கு சிப்பிகளுக்கு கொடுத்தீர்கள்?" என்றான். 

கடைக்காரர் புன்னகையுடன் "நமக்கு இவை வெறும் சிப்பிகள். ஆனால் அந்த பையனுக்கு, இவை மிகவும் விலைமதிப்பற்றவை. இந்த வயதில் அவனுக்கு பணம் என்னவென்று புரியவில்லை, ஆனால் அவன் வளருவான், பணத்திற்கு பதிலாக சிப்பிகள் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கினான்  என்பதை அவன் நினைவில் கொள்ளும்போது, ​​என் நினைவு வரும், வாழ்க்கை அவனுக்கு பல பாடங்களை கற்று கொடுத்தாலும், உலகம் நல்ல மனிதர்களாலும் நிறைந்தது என்று நினைப்பான். இது அவனுக்கு ஒரு நேர்மறையான அணுகுமுறையை வளர்க்க உதவும், மேலும் அவனும் நல்லவனாக இருக்க பேராசைப்படுவான்" என்றார் 


உலகம் அழகானது. Life is beautiful.


Translated