Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, May 8, 2021

The Road from Elephant Pass (Alimankada) திரைப்பட விமர்சனம்

இலங்கையின் இயற்கை அழகும், போர் பகுதிகளில் தமிழர்கள் நிலையும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறதென கேள்விப்பட்டு இந்த புத்தகத்தை தேடினேன், அமேசானில் கிடைக்கிறது, வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் கூகிளில் தேடியபோது இதை பற்றி மேலும் தகவலறிய  இது படமாக எடுக்கப்பட்டதென்றும் அது யூடூபில் இலவசமாக காண கிடைக்கிறதென்றும் கண்டு தேடி படத்தைப் பார்த்தேன்.

இது ஒரு சிங்கள மொழி படம். ஆனால்  “சாகும் வரை போராடி எங்கள் மக்களை மீட்டெடுத்து தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம் என்ற கோட்பாடுடைய எம் தலைவரின் பெயரால் உம்மை வரவேற்கிறோம்என்ற தமிழ் வசனத்துடன் தான் படம் ஆரம்பமாகிறது, சப் டைட்டில் ஆங்கிலத்தில் உண்டு, பேசப்படும் நிறைய சிங்கள வார்த்தைகள் தமிழோடும் மலையாளத்தோடும் ஒத்து போகின்றது, இரண்டு மாதம் முயற்சி செய்தால், ஆன்லைனிலேயே எளிதாக சிங்களம் கற்று கொள்ளலாம் போல

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் இளையராஜாவின் காதல் ஓவியம் ஒலிக்கிறது.  தூக்கம் வர்ல மாமா, காக்க வைக்கலாமாஎன்று இடையில் டீ கடையில் இன்னொரு முறையும் ஒலிக்கிறது.

நிஹால் டி சில்வா இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். நிறைய பரிசுகளை வென்றிருக்கிறது இந்த புத்தகம். சிங்கள ராணுவத்தையும், விடுதலை புலிகள் செயல்பாடுகளையும் ஒரு ஆர்மி ஆபீஸருக்கும், தமிழ் பெண்ணுக்குமான உரையாடல் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழர்கள் வாழும் பகுதிகள், இயற்கை காட்சிகள் என சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மலையாள சினிமா பார்ப்பது போன்ற உணர்வு.

அந்த கதாநாயகி ஆச்சர்ய பட வைக்கிறாள், அமைதியான அப்பாவியாக அறிமுகமாகி, உழுந்து, புரண்டு, அடிபட்டு, காட்டு பகுதிக்குள் வேகமாக ஓடி, தன் கோபங்களை நேரடியாக காட்டி என தனித்துவமான உடல்மொழியுடன் நல்ல தேர்ந்த நடிப்பு. தமிழில் இப்படி ஒரு ஹீரோயினை நான் பார்த்ததில்லை. நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறாள். இறுதியில் தான் என்னவாக விரும்புகிறாள்  என்பதை சொல்கையில் ஆச்சர்யத்துடன் மதிப்பு வர வைக்கிறாள்.

நாயகனும் தனது கதையை சொல்கையில் ஈர்ப்பு கொள்ள வைக்கிறான்.

சில இடங்களில் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற போதிலும், வித்யாசமான படம் எனும்போது அந்த குறை பெரியதாக தெரியவில்லை. கோபங்களுக்கிடையே இயல்பாக மலரும் காதல் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.  இந்த புத்தகத்தை எழுதிய நிஹால் டி சில்வா தனது மனைவி ஷெர்லீன் மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் கொழும்பில் மே 27, 2006 அன்று வில்பட்டு தேசிய பூங்காவில் கன்னி வெடியில் கொல்லப்பட்டது பெரும் சோகம்.

இந்த படம் வேற்று மொழி படத்தை பார்ப்பது போல அல்லாமல் நமக்கு நெருக்கமாகவே இருக்கிறது,  இலங்கையின் தமிழர் வாழ்ந்த பகுதிகளை நேரடியாக பார்வையிடும் அனுபவம் கிடைக்கவும், அதன் இயற்கை அழகை காணவும், மிக வித்யாசமான ஒரு படம் பார்த்த திருப்தி கிடைக்கவும் இந்த படத்தை தாராளமாக ஒரு முறை காணலாம்

YouTube Link : https://www.youtube.com/watch?v=8njGC8SG4yc  


Saturday, February 16, 2019

அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு,

வணக்கம்.
இப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். இந்த கடிதம் வணிக சம்மந்தமானதல்ல, அது சம்மந்தமாக எழுதினாலும் யாருக்கும் உபயோகமும் இல்லை.
தவிர இந்த படத்தையும் நீங்கள் வணிக ரீதியில் சமரசம் செய்ய முற்படவில்லை என்பது வேறு விஷயம். "ஏன் முன்பு தியேட்டரில் பார்க்கவில்லை?" என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதிலில்லை, ஏனெனில் படம் வந்ததே தெரியாத அளவிற்கு எனக்கு ஏற்பட்ட விபத்தோ, மகனின் பிறப்பில் ஏற்பட்ட கோளாறால் மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது பண தேவை சம்மந்தப்பட்ட பைத்தியமாகவோ நான் இருந்திருக்க கூடும்.
நிற்க,
படத்தின் கதாநாயகன் சர்வ நிச்சயமாக இளையராஜா தான், இந்த படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வசனம் எழுதி புரிய வைக்க வேண்டிய தேவையை ஏறக்குறைய விலக்கியே வைத்து விட்டார். படத்தை பதைபதைப்பாய் கொண்டு சென்றதில் அவர்தான் போர் வீரன்.
ஓநாய் நீங்கள் தான். உடல் மொழியில் அப்படியே கொண்டுவந்திருக்கிறீர்கள், உடல் முழுவதும் காயம்பட்டு கிடந்தாலும் கொஞ்சம் கூட குறையாத வேட்டையாடும் துடிப்பும், இழப்பின் ஊமை தவிப்பும், அதுவும் ஒவ்வொரு இழப்பின்போதும் மெளனமாக தலை குனியுமிடம் உச்சம். திருநங்கை ஏஞ்சல் கிளாடியா தலை நிமிர்ந்து உங்களை பார்க்கையில், காப்பாற்ற இயலாமல் தரை நோக்கும் காட்சி உச்சமய்யா. என்னால் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. படத்தில் உங்களுக்கு வசனமே இல்லையோ என நினைத்திருந்த நேரத்தில் அந்த "எட்வினண்ணா நீங்களாவது கதை சொல்லக் கூடாதா" என குட்டி இளவரசி கேட்கையில் ஆரம்பித்தீர்களே? கண்கள் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.
ஸ்ரீ எனும் ஆட்டு குட்டியின் உடலில் ஒரு டன் சுமையை வைத்து சுமக்க சொல்லி விட்டீர்கள், அற்புதம் அந்த குட்டி எந்த வித யோசனையுமில்லாமல் உங்களின் உடலைக் கூட சேர்த்தே சுமந்து வந்தது.
இதை தாண்டிய வசீகரிப்பை சொல்லிக்கொண்டே போகலாம்
"நீ டாக்டர், நீ டாக்டர்" என கையில் கொடுத்த பணத்தை வீசி எறிந்து விட்டு குதூகலிக்கும் மனநிலை தவறியவர்.
"அவனை அரெஸ்ட் பண்ணது தப்புதான் சார், நியாயமா உங்களை முதல்ல பிடிச்சிருக்கணும்" வெறியோடு குற்றவாளியை தேடி தொலைத்துக்கொண்டே இருப்பவனின் கோபம்.
"பணமெல்லாம் தேவைப்படாது, நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி எட்வினை கொல்லனும்" முதன்மை தொழில்முறை வேலைக்காரனின் கூரிய வசனம்.
"மூத்திர பையோட அலைஞ்சிட்டிருக்கேன், அவனை உயிரோடவும், உயிரில்லாதவும் பார்க்கணும்" கடிபட்ட கரடியின் வெறி.
"கொல்லப்பட்டு சாவும் போலீஸ்காரர்கள் வித விதமான குரலெழுப்பி சாவது,
அதிலும் அந்த "ஐயா", பதவியை அந்த வார்த்தையாலே தக்கவைத்து, சாகும் போதும் அது தவிர வேறு எண்ணமே வராத எழுபது விழுக்காடு காவலர்களின் நிலைமை.
"நல்லவேளை அதில ஒருத்தன் மார்ல உதைச்சான், மயக்கமாகி விழிச்சு பார்க்கிறேன், இங்கே இருக்கேன்" எனது நெஞ்சிற்கு கடத்தப்பட்ட வலி.
சாவின் விளிம்பிலும் யாரும் துப்பாக்கியால் சாக கூடாது என மேல் நோக்கி சுடும் அப்பா.
ஒரு பெரும் கொலைகாரன் கதவை திறந்து விடச்சொல்லி பார்வையால் காவலாளியை கெஞ்சும் இடம்
"அம்மாக்கு என்னாச்சு எட்வின் அண்ணா?" என்ற பதில் சொல்லவே இயலாத கேள்விக்கு,
"செத்துட்டாங்க" ஒரே வார்த்தையில் அதை முடித்த விதம்.
ஒரு திரில்லர் படத்தில் மனித நேயத்தை விதைக்கும் வித்தை எப்படி கை வந்தது?
இந்த அரைகுறை எழுத்தை வைத்துக்கொண்டு என்னால் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வேறென்ன....
உங்களுக்கும், பவாவிற்கும் நன்றி மிஷ்கின், ஏனெனில் உங்களை ஒரு இயக்குனராக இல்லாமல் "இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான், அவன் கணக்கையே அடைக்க முடியல பவா" என வேறு ஒரு கோணத்தில் எல்லா நாளும் கார்த்திகையில் அறிமுகம் செய்ததே அவர்தான். புத்தகங்களை அடுத்தநாளே அனுப்பிய என் அக்கா சைலஜாவிற்கும் அன்பு.
உங்கள் காட்டின் இந்த இலை, இனி ஒநாயையும் ஆட்டுக்குட்டியையும் அதன் உள்ரேகை போல சுமந்து கொண்டே திரியும்.

Monday, November 12, 2018

ரத்த கண்ணீர்

"ராதா "போடுறது தான் போடுறே, அப்படியே கறி சோறு போடு" ராஜேந்திரன் "நாங்க ஜீவ காருண்ய கட்சியில் இருக்கிறோம் அசைவம் சாப்பிட மாட்டோம், எந்த உயிரையும் கொல்ல மாட்டோம்" ராதா "திங்கிறதுக்குக்கூட கட்சி வச்சு இருக்காங்கடா... யப்பா"

பிச்சை எடுத்துக்கொண்டிருக்கையிலேயே இவ்வளவு நக்கல் என்றால் படம் முழுவதும்?

64 வருடங்களுக்கு முந்தைய சினிமா, சாப்பிட உட்காருகையில் ஒரு பத்து நிமிடம் ஏதாவது பார்க்கலாம் என லோக்கல் தொலைகாட்சியில் பார்க்க ஆரம்பித்த இந்த படத்தை முழுதுமே பார்க்கும்படி வைத்தது அந்த ரணகள அறிமுக காட்சியே.

"மோகன் அவர்கள் பாட்டாளிகளை பற்றி பேசுவார்கள்" என்ற உடனே "ஐ டோன்ட் லைக்" என மூக்குடைப்பார், மைக் பக்கத்துல போக மாட்டார், மைக்கை பக்கத்துல கொண்டு வந்து வைக்க சொல்லுவார். "லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்" என ஆரம்பித்த உடனேயே "தமிழ்ல பேசுங்கய்யா" என குரல் கொடுப்பார்கள். "பிரெண்ட்ஸ்" என ஆரம்பித்து, என்னை வரவேற்க பெரிய மனிதர்கள் வந்திருப்பார்கள் என்று வந்தேன், இந்த மாதிரி லேபர்ஸ் கூட்டங்களை கண்டாலே எனக்கு பிடிப்பதில்லை, எப்போதும் பார்த்தாலும் பஞ்சம் பசி பட்னி... நான்சென்ஸ்" கேட்க உட்கார்ந்திருப்பவர்களை வறுத்து எடுப்பார் பாருங்கள் செம்ம ரகளயாக இருக்கும்.
அதற்கும் கைதட்டி கூட்டம் குதூகலிக்கும்.

"நாய் காஸ்ட்லீ நாய் சோறு கீறு போட்டு கெடுத்துறாதே" என சலம்புவதாகட்டும், "கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியால எவனுக்கும் சரியா தெரியாது" என தன் அம்மாவை வாரி விடுவதாகட்டும்.
"எல்லா கட்சிக்காரனும் பிசினெஸ்ல பூத்துண்டான், இவனுக ஒண்ணுக்குமே லாயக்கில்லை" என அன்று பேசியது இன்றுவரை நிஜம்தானே?

கல்யாணம் ஆனா பிறகு மாமனாரை ஓட்டும் விதம் இருக்கிறதே,

"மிஸ்டர் பிள்ளை, உன்னை கல்யாண நாள்ல பார்த்தேன் அடையாளமே தெரியல பேட் பாடியோட இருக்கே"


"என்ன மேன் அசிங்கமா கொடு கீடு இழுத்துகிட்டு இருக்கே! என்ன கோடு இது? "
"இது விபூதி பட்டை"
"வாட் பட்டை"

"ஏம் மேன் பொண்ண பெத்தே? ஏம் பெத்தே?"
என்று அவரை அலற விடுவார்.
தன் அம்மா இறந்து விட்டதை சொல்லி வர சொல்லும் போது,
"டுவெண்ட்டி கிலோ மீட்டர்ஸ்? நடந்ததெல்லாம் வர முடியாது, நான் காந்தா வீட்டுக்கு போயிட்டு அப்படியே கார்ல வந்துடறேன்" என்பதெல்லாம் அந்த மகா செண்டிமெண்ட் காலத்திலேயே வேற லெவல்.

குஷ்டம் வந்து கண் தெரியாமல் போய்விட்ட பிறகு, சரளை கற்கள் மேல் விழுந்து விடுவார், "ரோடு போட மூணு வருசமாகும், கல்ல கொண்டுவந்து இப்போவே கொட்டிருக்கானே" என தன் கவுண்டரை தொடர்வார். இது போல குஷ்டம் வந்தது போல நடித்தாலே ஆயுள் நாட்கள் குறையும் என தெரிந்தும், ஆயிரம் காட்சிகளுக்கு மேல் இது நாடகமாகவும் நடத்தினார் ராதா

தமிழகத்தில் ஏதாவது ஒரு சிறு திரையரங்கத்தில் இவ்வளவு வருடம் கடந்தும் கூட இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
MR ராதா ஒரு பிறவி கலைஞன். எல்லாவற்றிலும் தெளிவும், தோலைநோக்கு பார்வையும், வாழ்வில் உறுதியையும் வைத்திருந்த அவருக்கான சரியான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது
இது YouTubeலேயே காண கிடைக்கிறது. தேவை இல்லை எனில் பாடல்களை ஓட்டி விட்டு ரசித்து பாருங்கள்.
link : https://www.youtube.com/watch?v=F63Qhsl5010https://www.youtube.com/watch?v=F63Qhsl5010

Saturday, November 10, 2018

Into the wild விமர்சனம்

உலகின் தலைசிறந்த பயண திரைப்படங்கள் (worlds best traveler movies list) என கூகிள் செய்தால் இது தான் முதல் இடத்தில் வந்து நிற்கிறது. அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என பார்க்க ஆரம்பித்தேன்.
கையில் பணமோ டெபிட் கிரிடிட் கார்டோ மொபைல் போனே இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் உங்களை யாரென்றே தெரியாத ஒரு இயற்கை கொஞ்சும் பிரதேசத்தில், எந்த கவலையும் இல்லாமல் முழு நிறைவை அனுபவித்துக்கொண்டு உங்களால் இருக்க முடியுமா? அது எப்படி என யோசிக்க தோன்றுகிறதல்லவா?  ஆனால் இரண்டு வருடங்கள் மேற்கண்ட எந்த வசதியும் இல்லாமல் படத்தின் நாயகன் கிறிஸ் மேகாண்டில் தன் பெயரை அலெக்சாண்டர் சூப்பர்டிரம்ப் என மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அலாஸ்காவிற்கு சென்ற கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இது ஒரு உண்மை நிகழ்வு.

ஒவ்வொரு ஆணுக்கும் இது போன்ற, சாகசம் செய்து அழகிய இடத்தில் சில நாலாவது தங்கி இருக்க வேண்டும் என்பது கனவு, அந்த கனவை நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த திரைப்படம்

படத்தை பார்த்து முடித்துவிட்டு கிட்டத்தட்ட அரை மணி நேரங்கள் கடந்து விட்டன, செயலற்று வெறுமையாய் வேறு நினைவுகள் இன்றி அமர்ந்திருக்கிறேன். வணிக ரீதியான படமென்றால் எழுத்து தானாகவே வந்து விழும், ஆனால் இந்த படத்தை பற்றி ஏதாவது எழுத வேண்டும் என தோன்றுகிறது,  எங்கிருந்து ஆரம்பிப்பது எதில் முடிப்பது என்றே தெரியவில்லை. அவ்வளவு பாதிப்பு மனதில். இன்னும் ஒரு வாரம் அழகிய நினைவுகளும், பல காட்சிகளும் என்னுள் தங்கும் என்றே தோன்றுகிறது.

1990ல் ஆரம்பிக்கும் இந்த கதை 1992ல் முடிவடைகிறது. படத்தின் ஒளிப்பதிவு கொள்ளை அழகு, அதுதான் படத்தின் பெரும் பலமே. இறப்பதற்கு முன் பார்த்தே ஆக வேண்டிய படங்களில் இது முக்கியமானது.

வெறும் அழகியலோடு இது முடிந்து விடவில்லை, மனிதர்கள் அவனுக்கு செய்யும் உதவிகள், வழி பயணத்தில் அழகான ஒரு காதல், எதிர்படும் இடர்பாடுகள், அவனை தத்தெடுத்து கொள்ள ஆசைப்படும் விபத்தில் மனைவி மகனை இழந்து விட்ட முதியவர் என படம் நெடுகிலும் பிரியங்களும், துன்பங்களும் சேர்ந்து கொள்கின்றன.

செயற்கை இன்பங்களை, வெற்று நடிப்பை, தொலைபேசி கருவிகளை, தொலைக்காட்சிகளை தூர தள்ளி வைத்து விட்டு இந்த படத்தை பார்க்கையில் இது வேறு உலகத்திற்கு நம்மை கொண்டு செல்லும்

படம் முடிந்த பிறகு, மனதில் மனித நேயம் நிரம்பி வழிய. சில கண்ணீர் துளிகளுடன் எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது. அதுதான் இதன் மேஜிக் .


Saturday, October 20, 2018

பரியேறும் பெருமாள் சில கேள்விகள்

பரியேறும் பெருமாளை பார்த்துவிட்டு உடனடியாக சில்லறையை சிதற விட்டதற்கு மன்னிப்பு கோருகிறேன், அதில் வரும் மிக உணர்ச்சி மிகுந்த இரு சம்பவங்கள் எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை, ஐந்து வருடங்களுக்கு முன்பு விகடனில் தொடராக வந்த மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தில் இருந்து மாரி செல்வராஜே சொல்லி இருக்கிறார். நீங்களும் படித்து தெரிந்து கொள்ளலாம். முதலில் அந்த காதல் உண்மை சம்பவம் அல்ல, பூங்குழலி என்ற தன் கல்லூரியில் படித்த ஜுனியர் பெண்ணுக்கு செய்த சிறு உதவிக்காக மாரியை தனது அக்காவின் திருமணத்திற்கு அழைத்திருக்கிறாள் பூங்குழலி. அண்ணா என்று சொல்லித்தான் பழகியும் வந்திருக்கிறார். திருமணத்திற்கு தனது நண்பருடன் சென்று மேடையில் நின்றிருந்த பூங்குழலியிடம் கையை காட்டி சைகை செய்திருக்கிறார்கள், அது பிடிக்காத அவர் தகப்பன், தனியே அழைத்து இதை கண்டித்திருக்கிறார், இதைத்தான் ரூமில் வைத்து அடித்து ரத்தம் வர அடித்து தனது தெய்வீக காதலை இழந்ததாக உணர்ச்சிகரமாக சொல்லி இருக்கிறார். இரண்டாவது முக்கியமான பலரை அழ வைத்த அவர் தகப்பனின் துணிகளை அவிழ்த்தெறியும் இடம். முன்பு நிஜ சம்பவமாக அவரே எழுதியது என்னவெனில், இவருடைய தகப்பன் பெண் வேடமிட்டு சம்படி எனும் நடமாடும் கலைஞர், ஒருமுறை ஆடும்போது அவர் கால் சுளுக்கி கொண்டதால் ஓரமாக அமர்ந்திருக்கிறார், மூன்று விடலைகள் அவரை பெண் என்று நினைத்து தொந்தரவு தர முயன்றிருக்கிறார்கள், அவர் அந்த விடலைகளை தடியால் அடித்து ஊர் மக்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர்களும் இளைஞர்களை பிடித்து ஆட்டம் நடந்த இடத்திலேயே முட்டி போட வைத்து தண்டனை கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எப்படி திரித்தார் என்பதை திரையில் கண்டிருப்பீர்கள். ஜாதி என்பது சம்பாதிக்க உதவும் போது எதுவும் தவறில்லை என்று நினைத்திருப்பாரோ இயக்குனர்? எனது தந்தை மிக மோசமான நிலையில் விபத்துக்கு உள்ளான போது அவருக்கு ரத்தம் கொடுத்தது என் நண்பர்கள் தான் அன்றிலிருந்தே எனக்கு ஜாதி மதங்களில் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் கதை எழுதிய ஐந்து வருடங்களில் ஒரு சம்பவம் வெறும் காசுக்காக, சுய ஜாதியின் தூண்டுதலுடன் எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்பது நிச்சயம் ஏற்று கொள்ள இயலாதது

Monday, September 10, 2018

மேற்கு தொடர்ச்சி மலை

காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம், மசாலா படம், நாலு சண்டை மூணு பாட்டு, வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் பார்ப்பவர்கள் நீங்கள் எனில் இது உங்களுக்கானதல்ல.
ஒரு திரைப்படத்தை பத்து வருடங்கள் செலவிட்டு அங்கேயே வாழ்ந்து அந்த மக்களை மலையை புரிந்து கொண்டு தவம் போல இதை கொடுத்த இயக்குனர் லெனின் பாரதிக்கு அன்பு
இயற்கையை ரசிக்கும், வாழ்க்கையை புரிந்து கொள்ளும், புத்தகங்களை விரும்பி படிக்கும், நல்ல படம் வந்தால் மட்டுமே பார்ப்பேன் என பிடிவாதம் கொள்ளும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.
ரங்கசாமியை மீறியும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு கதை புதைந்து கிடக்கிறது, கம்யூனிஸ்ட் சாக்கோ, மலை ஏற்றத்தில் ரத்த வாந்தி எடுக்கும் பெரியவர், தனது மகனையும் பொருளையும் தொலைத்து விட்டு, அதே மலையில் தேடும் மனநிலை பாதிக்க பட்ட மூதாட்டி (எல்லாத்தையும் கொல்ல போறேன்), கணவன் பெயரை சொல்ல நானும் பெண்மணி, கண்ணீர் வழியும் கண்களால் விடுப்பா பாத்துக்கலாம் என ஆறுதல் சொல்லும் ரங்கசாமியின் அம்மா, நிலத்தின் பத்திரத்தையும், கல்யாண பத்திரிக்கையும் தரும் அந்த தாய், என நெஞ்சம் நிறையும் வாழ்வு கொண்ட படைப்பு.
வணிக ரீதியில் ஆயிரம் படங்கள் வரட்டுமே, ஆனால் இது குறிஞ்சி, வணிகத்துக்கான எந்த சமரசத்தையும் செய்யா வீரம். சாதாரண காட்சிகள்தான், அழகியலும், ஆறாத ரணமும் புதைந்து கிடக்கும் தன்மையை வெளிக்கொணர இளையராஜாவை தவிர யாரால் இயலும்.
தயாரித்த விஜய் சேதுபதிக்கு நன்றி.
எளிய மனிதர்களின் வாழ்வை, எதிர்பாராமல் தரப்படும் அன்பை, தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் ஈர மனதை, அந்த நெடும் மலையை நிச்சயம் நல்ல சினிமா ரசிகர்கள் தவற விடாதீர்கள்.
தியேட்டரில் காணுங்கள், அப்போதுதான் சற்றே மேம்பட்ட ரசனையுடன் கூடிய நல்ல படங்கள் வெளிவரும்

Friday, June 8, 2018

வடிவேலு வசனங்கள் தொகுப்பு

படம் நடித்து பல ஆண்டுகள் கடந்து போனாலும், அடுத்த தலைமுறை தாண்டி தொடரும் வடிவேலு காமெடி. இன்றும் சமூக வலைத்தளத்தில் அவரின் புகைப்படங்களோ, வசனங்களோ, இல்லாத நகைச்சுவை மிக குறைவு. தமிழ்நாட்டில்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரின் நகைச்சுவை காட்சிக்கு சிரிக்காமல் கடந்து வந்திருக்கவே முடியாது.   அவரது சிறந்த  வசனங்களின் தொகுப்பு இது     


"பேங்க் ஒன்னு கட்டிகொட்டுங்க நடத்துறோம்"

"ஒட்டகப்பால்ல டீ போடுறா ஒட்டகப்பால்ல டீ போடுறான்னு உன்கிட்ட எத்தன தடவடா சொல்லிருக்கன்"

"கூலு குடிக்க வேனா வர்றோம், குடுக்க ஒன்னுமில்ல..."

"யு ரெஸ்ப் பெக்ட் என்ட் டெக் ரெஸ்ப் பெக்ட்"


"துபைய்ல்லேந்து என் தம்பி மார்க் போன் பண்ணான்"

"வழிய விடுங்கடி பீத்த சிறுக்கிங்களா"

"உயிரே உயிரே தப்பிச்சி எப்பிடியாது ஓடிவிடு அய்யய்யோ வருதே மூதேவி வருதே"

"லாங்குல பார்த்தா தான்டா காமெடியா இருப்பேன் .!கிட்ட பார்த்தா டெரரா இருப்பேன்டா..டெரரா"

"சண்டைக்கு வாரியா? மண்ட பத்தரம்"

"என் சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?"

"பேஸ்மென்ட் வீக்கு"

"ஆரம்பத்துல இருந்தே ராங்கா போயிட்டுயிருக்கு" 
"யாருக்கு"
"யாருக்கோ"
"எது கலவர பூமில காத்து வாங்க வந்தீங்களா"

"நீ என்கிட்ட வேல பாக்குற கிச்சுனமூர்த்தி லேபர்"
"லேடண்ட பேசுறியா.. பின்லேடன்"
"ஓனர்னா ஓரமா போக வேண்டியதான,ஏன் பொளந்துகிட்டு போறீங்க"

"அவன நசுக்கு நசுக்குனு நசுக்கி தூக்கி எரிஞ்சறேன்"

"வட போச்சே"

"இன்னொரு அடி என் மேலே விழுந்துச்சு சேகர் செத்ருவான்"
"சினங்கொண்ட சிங்கத்த செல்லுல அடச்சா அது செல்லயே செதச்சிடும்.. பரவால்லியா"
"வாய் என்ன வாசப்படி வரைக்கும் போய்ட்டு வருது"
"டெப்னட்லி டெப்னட்லி"
"யானைக்கி பொறந்த நாள் வருது பேண்ட்டு சட்டையெல்லாம் எடுக்கனும் டொனேசன கொடு"
"நீ லவ் பண்ணா என்ன நான் லவ் பண்ணா என்ன எனக்கு மொத்தத்துல அந்த குடும்பம் உருப்படாம போகணும்"

"இருமா! ஒரு பொஸிஸன்ல போய் நின்னுகிறேன்"
"ஷட் அப் யுவா் ப்ளடி மவுத் அன்ட் ரிலீஸ் ஹிம் இம்யமிடியட்லி
ரெண்டு பேரா மாமீ...... ஈஈஈஈஈ"
"பப்பிமா ....கரும்பு மெசின்ல சிக்குன மாறியே ஒரு பீலிங்கு"
"மாமா இங்கதான் இதுக்கு பேரு பஸ்சு,துபாய்லலாம இதுக்கு பேரு குப்ப லாரிஇதுல்லாம் இந்த நாய்ங்க எப்டித்தான் ஏறி வர்றாங்கதெரில
என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , ராஸ்கல்ஸ் !!!"
"அண்ணன் போட்ட கோடு"
"நான் எதுக்கு ஒத்துவரமாட்டேன்னு சொல்லிட்டு அடிங்கடா"
"எங்கப்பா வாசிக்க எங்கம்மா ஆட நானும் எங்கண்ணனும் அத வேடிக்க பாக்க ஒரே கூத்தா இருக்கும்"

"ஹே ….ஹே……சொல்லிட்டாருயா கவர்ணருருருரு"
"காதுல ரீங்ங்குன்னு சத்தம் கேக்குமே"
"அடி வாங்கினது நானு, அதுனால 'கப்பு' எனக்குத் தான் சொந்தம்"
"ரெண்ட்ரூவா தான்டா கேட்டேன். . . என்ன நெனச்சான்னு தெரியல வாய்ல இருந்த பான்பராக்க பொளக்குனு மூஞ்சிலியே துப்பிட்டான்"
"தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை"
"மண்டை பத்திரம் , என்ன லுக்கு லேடன் ட்ட பேசுறிய , பின் லேடன்"
"அத்த செல்வு பண்டன்"

"மூக்கு வெடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும்"
"ஆளே இல்ல பெல்லு"
"அநியாயமா ஒரு லவ் பேர்ட்ஸ அத்து வுட்டுட்ட"
"ஆடு கிடைச்சிருச்சு..ஆனா அத திருடுனவன பஞ்சாயத்துல சொல்லனுமா இல்லையா?"

"பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு"
"இது அன்னத்துல கை வைக்கிற நேரம் ...யாரு கன்னத்திலயும் வைக்க மாட்டேன்"
"நல்லா குத்தாலத்துல இருக்க வேண்டியவனேல்லாம் இங்க வந்து என் உசிர வாங்குரானுக"

"உன்ன திட்னவன் கழுத்த கரகரன்னு அறுத்து கடல்ல கடல்ல வீசினியே என் தெய்வமே! என் கட்டவ்வுள்ளே! மூண்ணாள்ல பணம் வந்துரும் போ"
"உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு"
"ஆகமொத்தம் இருவது. சியர்ஸ்"

"ஏன்யா ஏன்? ஒரு ஆர்டரா ப்ளோவா போய்க்கிட்டு இருக்கேன் இல்ல கூட கூட பேசுனா மறந்திரமாட்டேனா?"

"நீ பயப்படாத.... என்னிய எப்படியாச்சும் காப்பாத்துடாஆஆ அவ்வ்வ்"
"பாசத்துல என்னிய மிஞ்சிருவான் போலயே"

"பர்க்கர் இருக்கா..பீசா..சிக்கன் டொக்கா...ஸ்பீரிங்க் ரோல்ல்ல்ல்...கபாப்"
"கல்யாணம் ஆயிருச்சா? இன்னும் ஆவல...எப்புடி ஆவும்"

"இப்ப நம்ம பண்ணப்போற ஆப்பரேசன் உரிமைக்கும் உறவுக்கும் நடக்குற உச்சகட்ட ஆப்பரேசன்"
"இந்த டீலிங் நம்மக்குள்ளையே இருக்கட்டும்"
"பேக்கரிய டெவலப் பண்ணுனதுல இருந்து பன்னு வேணும் வென்னை வேணும்னு கொல்லுறீங்களேடா?"
"பெரிய பெரிய எல்கேஜி படிப்பெல்லாம் படிச்சா மட்டும் பத்தாது"
"அப்ப நான் கொடுத்த நெருப்ப ரிட்டன் பண்னு"
"தங்களுக்கு தெரியாத சட்டமொன்றும் இல்லை, அதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதன்படி தண்டனையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
"இது இரத்த பூமி இங்க குழாயத்தொறந்தா தண்ணீ வராது இரத்தம்தான் வரும்"

"இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது"
"பேட் இன்ஸ்பெக்டர் அன்டு பேட் ரவ்டி ப்ளே பேஸ்கட் பால் இன் மை லைப்"
"ரொம்ப பெருமையா இருக்குடா.. ஆனா இந்த அண்ணனால இப்ப 5 பைசா கூட தரமுடியலன்னு நெனைக்கும்போது"
"சூடா காபி குடிச்சா கூட தாங்க மாட்டாரேடா, அவரு மேல நெருப்ப அள்ளி கொட்டிருக்கீங்களேடாஆஆ"
"ஐயோ திருட வந்த எடத்துல தெவசம் பண்றாய்ங்களே"
"மதுரை சட்னிக்குத்தானடா ஃபேமசு கிட்னிக்குமா?"
"திரிசா இல்லனா திவ்யா"
"உன் ட்ரஸ்ஸ் நான் போட்டு பார்த்தா எப்படி இருக்கும்னு நெனச்சேன் சிப்பு வந்திடுச்சு சிப்பு"

"தனிய போன தகராறு,தண்ணியோட போன வரலாறு"
"உங்க கடையில அப்பளக்கட்ட காணோம்னு தேடலீங்க! எங்கப்பன காணோம்னு தேடிட்டிருக்கேன்"
"ஓ இதான் அழகுல மயங்குறதா. ஏய் என்னை வச்சு ஒண்ணும் காமெடி கீமடி பண்ணலயே"
"ஏ வாடா வாடா வாடா! ஒம்பணத்துக்கும் எம்பணத்துக்கும் சோடி போட்டு பாப்பமா சோடி! சொல்லிக்காட்னேண்டா என் வென்றேய்"
"ஒரு காக்கா இம்பட்டூண்டு ஆய் போனதுக்காடா இவ்வள பெரிய கலவரம்"
"இந்தமாதிரி கதர்சட்டையெல்லாம் போடுறதுக்கு ஒரு தகுதி வேணும்டா"
"என்ன கையபுடிச்சு இழுத்தியா"
"But அந்த deal எனக்கு புடிச்சிருந்துச்சு"

"ஹேய் லேடீஸ் கெட்டப்புல நான் உன்ன விட ரொம்ப அழகா இல்ல"
"ஏய்யா கத்துற?"
"கடுப்பேத்துறார் மை லார்ட்"
"காலம்பர நம்மாத்துலயே டிப்பன்னு சொல்லிருப்பாங்களே! எண்ட்டயும் சொன்னானுவளே"
"என்னைய மட்டும்தான் ஈசியா அடிச்சிபுடுறானுக"
"கழுவி விட்டுட்டு போறியாமா ? இந்த அப்ரோச்ச்சும் பிடிச்சு இருக்கு"
"நல்லா கேக்குராங்கியா டீட்ட்ட்ட்ட்டைலு"
"ஏண்டா இப்படி ஆய் போறா மாதிரி உக்கார வக்கிறீங்க
சங்கமே அபராதத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு"
"இது தெரியாம நாலஞ்சு தடவ டிக்கெட் எடுத்துட்டேனப்பா"
"பறவை முனியம்மா ந்னு ஒரு கெழவி திரியுது.. அதென்ன பறந்துட்டு திரியுது..?? பாட்டு பாடுதுடா"
"நிப்பாட்டாதீங்க்க...நிப்பாட்டாதீங்க...என்ன ஸார் நீங்க..ஒண்ணுக்கு போயிட்டுருக்கேன்லே"
"நான் அப்டியே ஷாக்காய்ட்டேன்"
"பர்னிச்சர் மேல கைய வச்ச மொத டெட்பாடி நீ தான்டா"
"நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்டா"
"சின்ன வயசில இருந்தே, நான் அவன் குடும்பத்த கேவலமா பேசுவேன் அவன் என் குடும்பத்த ரெம்ப கேவலமா பேசுவான்"

"அந்த கொறங்கு பொம்ம என்ன வெல சார்"
"ஏன்னே! அவன் பொண்டாட்டிய முனுசாமி வச்சுருந்தானு எப்படினே தெரியும்? 
உன் பொண்டாட்டிய வச்சிருக்குற ஆறுமுகம் தான் சொன்னான்"
"குருவம்ம்மாஆஆஆ.. (பாஸ் நீங்க இடுப்ப கிள்ளுனிங்களே அவ பேரு அது) தூ.. செல்லத்தாஆயீஈஈஈஈ"
"ஆறு மணிக்கு மேல ஆட்டோ ஓடாது"
"நாங்கூட புதுசோன்னு நெனச்சுட்டேன்"
"வா ஸ்ருதி போவலாம்"
"அய்யய்யோ கோவப்பட்டுட்டோமே சோத்துல வெசத்த வைச்சிடுவாய்ங்களே"
"இடம்: பிள்ளையார் கோவில் தெரு, நேரம்: இரவு 12 மணி, இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்"

"அலோ யார் பேசுறது
நீதான்டா பேசுற
அலோ யார் பேசுறது
நீதான்டா பேசுற
அலோ நீங்க பேசுனீங்களா
இல்ல நீ என்கிட்ட பேசுனியா"
"அக்காவையும் ஓட்ற தங்கச்சியையும் ஓட்ற வெக்கமால்ல !!!! ஒரு அல்சர் வேணாம் ???.... டேய் அது கல்ச்சர்"
"வேணாம் அவனாச்சும் சாப்டா சொல்வான் நீ ரணகளமா சொல்லி என்னை அழவைப்ப"
"தோட்டக்காரனுமாஆஆஆஆஆ"
"சங்ங்ங்கட்டமா இருக்காது?"
"அட்டாக் பண்ணிட்டேயில... போயிட்டே இரு போ..
உனக்கு எதோ ட்ரேன்ஸராமில்ல மா!!"
"என்ன ஃபீலிங்கா.. இல்ல ஃபீலிங்கா னு கேக்குறேன்"

"அவனா நீய்யி"

"நம்ம ஷோ தான் நல்லா இருக்காதேடா"



Saturday, February 10, 2018

கவிதாயினி தாமரை


 ஆண் கவிஞர்கள் கோலோச்சி கொண்டிருந்த தமிழ் சினிமாவில் 1998ல் இனியவளே மூலம் அறிமுகமாகி, "காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே.... வசீகரா என் நெஞ்சினிக்க" என தனது வரிகளில் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்தார்.

வேறு மொழி கலப்பே இல்லாமல் தமிழில் மட்டுமே எழுதும் கொள்கை கொண்ட ஒரே பாடலாசிரியரும் இவர்தான்.
 இது அவருக்கு திரைத்துறையில் இருபதாம் ஆண்டு தொடக்கம்.  இதுவரை மூன்று பிலிம் பேர் விருதுகளையும், தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை இரண்டு முறையும் பெற்றுள்ளார்.

கெளதம்கெசுதேவ் மேனனின் ஆஸ்தான பாடலாசிரியர் தாமரை தான். "வசீகரா என் நெஞ்சினிக்க, உயிரின் உயிரே, ஒன்றா ரெண்டா ஆசைகள், பார்த்த முதல் நாளே, உன் சிரிப்பினில், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன் தினம் பார்த்தேனே, ஓ சாந்தி சாந்தி, ஓ சாந்தி, உனக்கென்ன வேணும் சொல்லு, பறக்கும் ராஜாளியே, அவளும் நானும்" என உச்ச காதலை அட்டகாசமாக சொல்லும் பாடல்கள் நமக்கு கிடைக்கும்.

இதயத்தை குறிவைத்து அதில் நுழைந்து நிரந்தர இடம் பிடிக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரி தாமரை.

 தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டாவில் வெளிவந்த "மறுவார்த்தை பேசாதே" பாடல் தற்போதைய வைரல். எனது மிக விருப்ப பாடல் பட்டியலில் முதலிடமும் அதுதான்.

காதலை தொலைக்காத வண்ணம் தன் பாடல்களில் வாழ்க்கையை தொடரும் தாமரைக்கும், அதை அழகாக்கி தரும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கும் நன்றிகள்.

 தனி வாழ்க்கையின் கடும் பாதிப்புக்கு உள்ளானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாது மீண்டும் தன் கலை மூலம் விஸ்வரூபம் எடுத்தவர் பாடகி ஸ்வர்ணலதா, அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ இருந்திருப்பேன்" போன்ற   உருக்கும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை.

இப்போது தாமரை அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்

Wednesday, September 27, 2017

ஸ்பைடர் விமர்சனம்

ஏ ஆர் முருகதாஸ், மகேஷ்பாபு என்பதாலும், முதல்நாளே பார்த்துவிட நேரமும், வாய்ப்பும், டிக்கெட்டும் கிடைத்தாலும் எதிர்பார்ப்புடனே படம் பார்க்க தொடங்கினேன்.

முதலில் அரை மணி நேரம் நான் விவேகம் இரண்டாம் பாகத்துக்கு தான் வந்து விட்டேனோ என்ற ஜெர்க் வராமல் இல்லை, அத்தனை செலவு செய்து வெளிநாடுகளில் படம் பிடித்த பாடல்கள் ஆரம்பிக்கும் போதே, பெண்கள் கூட வெளியே சென்று தம்மடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

சுடலை என்ற சைக்கோ தான் இதில் வில்லன், எஸ் ஜே சூர்யா என்ற பெரும் சவால் தரக்கூடிய, வசன உச்சரிப்பில் அசத்தகூடிய திருப்புமுனை தரக்கூடிய வில்லனை வைத்துக் கொண்டு, நாலைந்து காட்சிகளில் முடிந்திருக்க கூடிய ஒரு பகுதியை  இடைவேளைக்கு முன்புவரை எதற்காக அந்த பையனை வைத்து தேவையில்லாமல் இழுத்தார் முருகதாஸ் என்றே தெரியவில்லை? பட்ஜெட்டா பாஸ்? அதுவும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?

கதாநாயகி இந்த படத்தில் தேவையே இல்லாத திணிப்பு, R J பாலாஜி உங்களை ஒரு இடத்திலாவது சிரிக்க வைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

எதற்காக இவ்வளவு திட்டு என்றால், முருகதாஸ் ஏறக்குறைய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.. அதுதான்.

நேரடி படம் செய்ய மகேஷ்பாபுவிற்கு ஒரு மார்க்கெட் தமிழ்நாட்டில் உருவாகும்.

சரி படம் ஓடுமா?

கண்டிப்பாக...

ஏனெனில் இடைவேளைக்கு பிறகு எஸ் ஜே சூர்யா என்ற தனி மனிதனின் பிரித்து மேயப்பட்ட நடிப்பில் மொத்த படமும் தலை நிமிர்கிறது, அதன் பின் அமைக்கப்பட்ட புத்திசாலிதன காட்சிகள் நம்மை அசர வைக்கின்றன.   படத்தின் பாடல்கள் மொக்கையாக இருந்தாலும் BGM அட்டகாசம்.

இடைவேளைக்கு பிறகு நம்மை பரபரப்பாக வைக்கும் இசைக்காகவும், படத்தின் வில்லனுக்காகவும், ஆபாசம் இரட்டை வசனங்கள் இல்லாததாலும் பொழுது போக்கு படமாக இதை குடும்பத்துடனே சென்று பார்க்கலாம்.                    

Thursday, June 22, 2017

ரங்கூன் ஒரு பார்வை

நடிப்பில் நன்கு தேறி வருகிறார் கௌதம்கார்த்திக், 
கருப்பு மேக்கப்பில் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு குடியேறிய மக்களில் ஒருவனாக சிறப்பு... சண்டை காட்சிகள் இயல்பாய் இருக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நல்ல ஆரம்பத்தை அவர் குருவே பட தயாரிப்பின் மூலம்  கொடுத்திருக்கிறார். எதிர்பார்க்கும் படங்களின்  இயக்குனராக வருவாரா என்பது அவரின் இரண்டாம் படத்தில் தெரியும்.

"இங்கே நல்லவன் கெட்டவன் யாரும் கிடையாது, அதிஷ்டத்தை தேடி அலையிற துரதிஷ்டசாலிகள்தான்"
"பணம் நிஜமல்ல வெங்கட், நிஜம் மாதிரி "  சில கூர்மையான வசனங்கள் கவர்கிறது,

யாத்ரிகா பாடலில் அந்த பிரிவு, ஆறு, புத்தர் சிலை, மீண்டும் பர்மா பயணம் என பர்மாவை மிக அழகாய் படம் பிடித்திருக்கிறார்கள். 

"உனக்கென்ன கலெக்டர் வேலையா கிடைச்சுச்சு உங்கொப்பன் பெருமைப்படுறதுக்கு?"என இடையிடையே வரும் பாலா பட டைப் கலாய்தல்கள் சிரிப்பை வர வைக்கின்றன. அதேபோல எதிர்பாராத அந்த துரோகமும். 

இந்தியாவில் இருந்து பர்மாவிற்கு கொண்டு செல்லப்படும் தங்க கடத்தல் சீன்கள் சாதாரணமாக இருந்தாலும் பரபரக்க வைக்கிறது. இடைவேளையில் தரப்படும் மிகப் பெரிய ட்விஸ்ட் சரியாத பாதை கிடைக்காமல் தடுமாறி பின் ட்ராக்கில் வந்து சேர்க்கிறது.  ஆங்காங்கே அயன் போன்ற சில  படங்கள் நினைவு வருவதை தடுக்க இயலவில்லை 
கிளைமாக்ஸ்.... 
சரி வேண்டாம், அதை  பற்றி சொல்லி உங்கள் ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை. 

  ஒருமுறை தாராளமாக பார்க்கலாம். 

Friday, October 21, 2016

An Occurrence at Owl Creek Bridge அட்டகாசமான குறும்படம்


An Occurrence at Owl Creek Bridge என்னும் கதையை அம்ப்ரூஸ் பியர்ஸ் என்பவர் 1891லேயே எழுதி  இருந்தார், அது பிற்பாடு குறும்படமாக எடுக்கப்பட்டு பல விருதுகளை அள்ளி குவித்தது.

செர்லாக் ஹோம்ஸ் கதைகள் எப்படி நூற்றாண்டு கடந்த பின்னும் சுவாரஸ்யம் குறையவில்லையோ அதே போல, இதுவும் மிக சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டு youtubeல் காண கிடைக்கிறது.

ஒரு துளி வசனம் கூட இல்லாமல் வெறும் காட்சி அமைப்பில் உருவான கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த கூடிய நல்ல படம். வெறும் பதினோரு நிமிடங்கள் தான் வருகிறது.

இதில் பாடல்களை இணைத்திருக்கிறார்கள்,  இசையும் பாடலும் அந்த படத்திற்க்கு இன்னும் வேகம் சேர்க்கின்றன.

கதை

ஒரு தண்டனை கைதியை, ஒரு பாலத்திற்கு கீழே அழைத்து வந்து, கை, கால்களை கட்டி, கயிறை கழுத்தில் மாட்டி தூக்கில் போட போகிறார்கள் அதிகாரிகள், அதை நிறைவேற்றும் சமயத்தில், அதிர்ஷ்ட வசமாக  அந்த கயிறு அறுந்து அவன் நீருக்குள் வீழ்கிறான், தனது கட்டுகளை அவிழ்த்து, நீருக்கு மேலே வந்து தப்ப முயல்கிறான்,   துப்பாக்கியால் சுட்டு மீண்டும் அவனை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

அம்முயற்சியிலும் அவன் தப்பி, தன் வீடு செல்கிறான். அவனுக்காக அவன் மனைவி காத்திருக்கிறான். கடைசி இரண்டு செகண்ட்கள் காட்சியமைப்பு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறது. ஏன் அத்தனை விருது அதற்க்கு கிடைத்தது என்பது பிறகு உங்களுக்கு புரியும். பட்டென முடிந்து விடும் அந்த காட்சியை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். பொறுமையாக முழுதும் பாருங்கள்.

மொக்கை தமிழ் சினிமாவை பார்பதற்க்கு பதில், இதற்கு தாராளமாக நேரம் செலவழித்து பாருங்கள், அற்புதமான திரைக்காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே உதாரணம் காட்டி இருக்கிறார்கள்.

கீழே இருக்கும் அந்த படத்தின் பெயரை click செய்து பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக இடுங்கள்.                    

An Occurrence at Owl Creek Bridge or dead mans dream

Tuesday, August 9, 2016

சார்லி அற்புதமான ஒரு மலையாள திரைப்படம்.

இயற்கையை, அழகை, பயணங்களை, புத்தகங்களை, வித்யாசமான கதைகளை நேசிப்பவரா நீங்கள் அப்படியெனில் உங்களுக்கு ஒரு நல்ல படம் ரசித்து பார்க்கும் வாய்ப்பை சார்லி கொடுக்கும்.

2015ம் ஆண்டு மார்டின் இயக்கத்தில் வெளிவந்த துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், கல்பனா, சுபின் நடித்த அட்டகாசமான திரைப்படம்.
வண்ணங்கள் நிறைந்த கண்ணுக்கு முழு திருப்தி தரும் படம் இது.
படம் முழுக்க பயணம், வண்ணங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் தான், துல்கர் கதா பாத்திரத்தை ஒரே வரியில் சொல்வதென்றால், மற்றவர்களை  சந்தோஷ படுத்தி பார்த்து விட்டு காணாமல் போகும் மனிதன், அவனை தேடி வரும் பெண் பார்வதி, அபர்ணா தற்கொலை செய்து கொள்ள போகும் டாக்டர், கல்பனா ஒரு எயிட்ஸ் நோயாளி. படத்தில் வரும் சிறிய சிறிய பாத்திரங்கள் கூட மனதை தொட்டு செல்கின்றன.
 ஒரு சிறிய அறையில் எத்தனை வண்ணமயமான பொருட்கள், கலை இயக்குனரின் உழைப்பு மிக அபாரமானது. பாடல்கள் கதையோடு பொருந்தி வருவதால் மிக மிக அழகாகவே இருக்கின்றன. கண்கள் நனைய வைக்கும் காட்சிகள், இதயம் தொடும் உணர்வுகள், கண்ணுக்கு இனிமையான நகரங்கள், பாலைவனங்கள், ஆறுகள், மலைகள், குளிர் பிரதேசங்கள், புது வருட கொண்டாட்டங்கள், கடைசியில் தசரா காட்சிகள், விருந்தோம்பல்கள், விதவிதமான வாகனங்கள், அதிலும் அந்த ஸ்கூட்டர் காட்சிகள்... சொல்லிக்கொண்டே போகலாம் போல ஒரு நினைவில் தங்கும் படம் இது.
தமிழில் இப்படி எப்போது சிந்திப்பார்கள் என்ற பொறாமை வருகிறது. இப்போதைக்கு நமது மொழியில் இது போல் சாத்தியமே இல்லை. காட்சி அமைப்பிலும், கேமரா கோணங்களிலும், மணிரத்னம் படத்திருக்கு அடுத்து ரசித்து பார்த்த படம் இதுதான். இன்னும் இரண்டு மூன்று முறை பார்க்கும் எண்ணம் உள்ளது    
மிக திருப்தி தந்த படங்களுள் இதுவும் ஒன்று.                            
 நிச்சயம் பாருங்கள், இது உங்களை கண்டிப்பாக ஏமாற்றாது.

Friday, June 3, 2016

இறைவி திரைப்பட விமர்சனம்

ஹீரோக்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல், தான் சொல்ல வந்ததை எந்த ஒரு சமரசமும் செய்யாமல், தனது பாதை விலகாமல் இந்த படத்தை கொண்டு சென்றதற்கு கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு பூங்கொத்து.

இந்த படத்தில் நாயகர்கள், நாயகிகள்  இன்னும் மற்றும் பலரெல்லாம் இருக்கிறார்கள், விசேசம் என்னவென்றால் கதையில் இருந்து கொஞ்சம் கூட துருத்தி வெளியே தெரியாமல் இருப்பதே.

பீட்சா, ஜிகர்தண்டா வரிசையில் இப்போது "இறைவி"யும் மிக வித்யாசமான கதைகளம், அதை அழகாகவும் படைத்திருக்கிறார் கார்த்திக்.

எஸ் ஜே சூர்யாவை பாராட்டியே தீர வேண்டும், அவர் தான் மொத்த படத்தையும் தாங்கி கொள்ளும் தூணே. படம் வெளிவராமல் தவிக்கும் இடங்களிலும், குடிக்கு அடிமையாகி டாஸ்மாக் வாசலில் கடை திறக்க காத்திருக்கும் காட்சியிலும், தனது கோபத்தை கட்டு படுத்தத் தெரியாமல் கத்தி விட்டு, பின் சரக்கு ஊற்றி கொடுத்தவுடன் "உன் நல்லதுக்குதான் சொன்னேன் ப்ரோ" என்று குலைவதிலும், உச்ச காட்சியில் அழுகையை அடக்கி கொண்டு அவர் போனில் தன் மனைவியுடன் பேசும் காட்சியிலும் மனிதர் சிக்ஸர்களாக அடித்து தள்ளி இருக்கிறார்.

விஜய் சேதுபதி கன கச்சிதம், கொலைவெறியை காட்டும் காட்சிகளிலும், அஞ்சலிக்காக தவிக்கும் இடங்களிலும்  உடல் மொழி அபாரம். பாபி சிம்ஹா சிறப்பு, பள்ளி உடையிலும், திருமண காட்சிகளிலும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் எப்படி மாற முடிகிறதோ இந்த அஞ்சலியால்!
கமலினியும், விஜய் சேதுபதியின் தோழியாக வரும் பூஜா திவாரியாவின் கதாபாத்திரங்கள் , இன்றைய தலைமுறையின் வேறு ஒரு தளத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக கொஞ்ச நேரமே வரும் பூஜா அதிர்வை ஏற்படுத்துகிறார்.  

சந்தோஷ் நாராயண் பிண்ணனி இசை வழக்கம் போல நன்று, பாடல்களும் கேட்கும்படியே இருக்கின்றன.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு அருமை,  அந்த மைதான காமெடி சண்டை, கேரளா கோவில், சிலை திருடும் இடங்கள்,  பாடல்கள் எல்லாவற்றிலும் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார்.

சின்ன சின்ன கேள்விகள் இருந்தாலும், ஆண்களினால் ஏற்படும், பெண்களின் வலியை, வேதனையை, இயலாமையை, கடும் நெடுக்கடியை சரியான முறையில் பகிர செய்ததில் கார்த்திக் மனம் விட்டு பாராட்ட படவேண்டியவர்.  இது போன்ற முயற்சிகளை வரவேற்றால் மட்டுமே இன்னும் சிறப்பான தமிழ் படங்கள் வரும் என்ற எண்ணத்தினால் எனது கேள்விகளை தள்ளியே வைக்கிறேன்.

தயவுசெய்து திரையரங்குகளில் காணுங்கள், அப்படி காண வேண்டிய படம் இது.
    

Wednesday, January 13, 2016

தற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா?

தற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா?
தயாரிப்பாளர் ஜூ.வி. தற்கொலை செய்துக் கொண்டார்.
ஏவி.எம். ஏன் அமைதியாக இருக்கிறது?
தொண்ணூறுகளின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் எங்கு போனார்?
அசைக்க முடியாத ஆள் என்று பெயரெடுத்த ஆஸ்கர் மூவிஸ் ரவிச்சந்திரனை வங்கிகள் ஏன் மிரட்டுகின்றன?
சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் ரத்தக்கண்ணீர் வடித்த கதையெல்லாம் தெரியுமா?
லஷ்மீ மூவி மேக்கர்ஸ் என்ன ஆயிற்று?
ரோஜா கம்பைன்ஸ் இப்போது எங்கிருக்கிறது?
சத்யஜோதி ஃபிலிம்ஸ் எங்கே?
பிரமிட் சாய்மீரா என்ன ஆனது?
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன்?
அழகன் தமிழ்மணி?
ராஜ் பிலிம்ஸ் ராமநாதன்? கோவைத்தம்பி?
வின்னர்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், இப்போது துணை நடிகராக துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பது ஏன்?
யோசித்துக் கொண்டே போனால் இந்த பட்டியல் செஞ்சுரி அடிக்கும். வடபழனியில் மொட்டை போட்டுக்கொண்டு, வெயிலுக்கு தலையில் துண்டு போட்டுக் கொண்டு கோடம்பாக்கம் தெருக்களில் ஹவாய் செருப்பு தேய நடந்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? நம்ம தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்தான்.
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்காவது மிஞ்சும். சினிமா தொழிலில் அதுகூட கிடைக்காது. ஊரை சுற்றி வட்டிக்கு வாங்கிய கடன்தான் கழுத்தை நெறிக்கும்.
இன்னும் நாலு ஹிட் கூட கொடுக்காத இளம் ஹீரோ ஒருவர் பத்து கோடி சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர் நடித்த கடைசி இரண்டு படங்கள் அட்டர் ஃப்ளாப். ஹீரோவின் கவுரவத்தை காக்க தியேட்டரில் ஆள் வைத்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் வசூல் வரலாற்றில் மறக்க முடியாத படங்களான முரட்டுக்காளையும், ‘சகலகலா வல்லவனும் ரிலீஸ் ஆனபிறகும் ரஜினியும், கமலும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று யாராவது இந்தபுதிய ஸ்டார்களுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
பொள்ளாச்சிக்கு அருகில் அந்த படத்தின் ஷூட்டிங். தயாரிப்பது பாரம்பரியமான நிறுவனம். நம் படத்தின் வேலைகள் எப்படி போய்க் கொண்டிருப்பது என்று பார்க்க சென்னையிலிருந்து தயாரிப்பாளர் கிளம்பிப் போகிறார்.
தயாரிப்பாளரை ஸ்பாட்டில் கண்டதுமே இயக்குநர் பதறிவிட்டாராம். நீங்க எதுக்கு சார் இங்கே வந்தீங்க? ஹீரோ கோச்சிக்கப் போறாரு!என்று விரட்ட ஆரம்பித்தாராம்.
என்னங்க அநியாயமா இருக்கு. பணத்தை போட்டு படமெடுக்குறது நாங்க. ஒழுங்கா எடுக்கறீங்களான்னு பார்க்க வந்தா ஹீரோ எதுக்குங்க கோச்சிக்கணும்? அவங்க அப்பாவையே வெச்சி படமெடுத்தவங்க நாங்க தெரியுமில்லேஎன்று தயாரிப்பாளர் அமைதியாக சொல்லியிருக்கிறார்.
கேரவனிலிருந்து ஹீரோ இறங்கினாராம். தயாரிப்பாளர் அவருக்கு வணக்கம் வைத்திருக்கிறார். தயாரிப்பாளரை பார்த்ததுமே ஹீரோவுக்கு கோபம் (!) வந்து, ‘பேக்கப்சொல்லிவிட்டு மீண்டும் கேரவனுக்குள் போய்விட்டாராம். தயாரிப்பாளர் முன்னிலையில் ஹீரோவுக்கு ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரிஒர்க்கவுட் ஆகாதாம்.
அதிர்ச்சியடைந்துப் போன தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொண்டு, “இந்த தமிழ் சினிமா நாசமாதாண்டா போகப் போவுதுஎன்று மண்ணைத் தூற்றி அப்படியே சென்னைக்கு பஸ் ஏறினார். தியேட்டர்களுக்கு ஒழுங்காக லாபம் வரக்கூடிய படங்களாக வருடா வருடம் மூன்று, நான்கு படங்களை தயாரித்துக் கொண்டிருந்த அந்நிறுவனம் அதன் பிறகு படத் தயாரிப்பையே நிறுத்திக் கொண்டது.
இப்படிதான் தமிழ் திரையுலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இருப்பதே தோராயமாக 1300 திரையரங்குகள்தான். என்னதான் அப்பாடக்கர் படமாக இருந்தாலும் 700 முதல் 800 தியேட்டர்களில் ரிலீஸாவதே பெரிய விஷயம். எந்திரனோ / தசாவதாரமோ பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்.
FMS ஏரியா என்று சொல்லக்கூடிய அயல்நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஐம்பது, அறுபது தியேட்டர்களில் ஒரு தமிழ் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தாலே அதிசயம். தெலுங்கில் மார்க்கெட் / இந்தியில் ஃபேமஸ் என்பதெல்லாம் டுபாக்கூர். ஷாருக்கான், அமீர்கானை எல்லாம் கூடதான் தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரியும். அவர்கள் படங்கள் இங்கே ரிலீஸ் ஆனால் கோடி கோடியாகவா வசூல் ஆகிறது?
ஒரு பக்கா கமர்ஷியல் ஹிட் என்பது இங்கே ரூ.50 கோடிதான் வசூலிக்கும். இது, முன் பின் மாறலாம். நகரங்களில் அதிகபட்சமாக (மல்ட்டிப்ளக்ஸ் அரங்குகளில்) ரூ.120 டிக்கெட் கட்டணம், சாதாரண அரங்குகளில் 50, 60 ரூபாய். சிறுநகரங்களில், போஸ்டரிலேயே இரண்டாவது வாரத்திலிருந்து ரூ.20 கட்டணம் என்று கூவிக்கூவி தியேட்டருக்கு அழைக்க வேண்டியிருக்கிறது.
தயாரிப்பு, விளம்பரம், வினியோகம், தியேட்டர் வாடகை, க்யூப்/யூஎஃப்ஓ கட்டணம் என்றெல்லாம் இதர செலவுகள் போக மிஞ்சுவதுதான் ஒரு படம் கொடுக்கக்கூடிய லாபம்.
உண்மை இப்படியிருக்க, ரூ.40 - 50 கோடியில் ஒரு தமிழ் படத்தை எடுத்தால் எப்படி லாபம் கிடைக்கும்? அட, முதலாவது தேறுமா?
பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று நட்சத்திரங்களுக்கு கோடிகளை தூக்கி கொட்டிவிட்டு வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், கடைசியாக தனக்கு தானேவும் கூட நாமம் போட்டுக் கொள்கிறார்கள் நம் தயாரிப்பாளர்கள்.
இதுவரை சோலோவாக ஒரே ஒரு ஹிட்டு கூட கொடுக்காத ஒரு ஹீரோ கேட்கும் சம்பளம் நாலு கோடியாம். மூன்று வருடங்களாக ஒரு ஹீரோவுக்கு படமே இல்லை. ஆனால், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்என்று சொல்லிக் கொண்டு சம்பளமாக பத்து விரல்களையும் விரித்துக் காட்டுகிறாராம்.
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு வெற்றிப்படத் தயாரிப்பாளர் அடுத்து நான்கு படங்களாவது தயாரிக்கக்கூடிய தெம்பில் இருப்பார். இன்றோ ஒரு தயாரிப்பாளர் தன் வாழ்நாளில் மூன்று படங்களை தயாரித்து விட்டாலே அது சாதனைதான்.
இயக்குநர்களின் ரப்ஸர் இன்னொரு கதை. டபுக்கு டபான் டான்ஸ் ஆடுவதற்கு எதற்கு நியூஸிலாந்து லொகேஷன்? சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்கு போயும் கூட ஹீரோயினின் மத்தியப் பிரதேசத்தை ஹீரோ முகரும் காட்சிகளைதானே படம் பிடித்து வருகிறார்கள். இதை ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ எடுத்துத் தொலைத்தால் என்ன?
ஒரு கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து அத்தனை செலவையும் தயாரிப்பாளர்களுக்கு வைக்கிறார்கள். கேட்ட சம்பளத்தைவிட கெஞ்சிப்பேசி கொஞ்சம் குறைத்து ஒப்புக்கொள்ள வைத்த தயாரிப்பாளரிடம் ஒரு மலை முழுக்க சிகப்பு பெயிண்ட் அடிக்கணும்என்று சாங் ஷூட்டிங்குக்கு ஓர் இயக்குநர் டிமாண்ட் செய்தாராம். அவ்வளவு பெயிண்டுக்கு எங்கே போவது என்று மண்டைகாய்ந்து, கடைசியில் ஒரு பெயிண்ட் கம்பெனியிடம் பெரிய அமவுண்டுக்கு காண்ட்ராக்ட் பேசி (அந்த கம்பெனியில் இருந்து டைரக்டருக்கு கமிஷனாம்) தயாரிப்பாளர் மாதக்கணக்கில் அலைந்துத் திரிந்து, நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டிருக்கிறார். கடைசியில் சுற்றுச்சூழலை காரணம் காட்டி அனுமதி கிடைக்காததால் தயாரிப்பாளரின் கல்லாப்பெட்டிக்கு அவ்வளவு சேதாரமில்லை.
இதன் பிறகு நடந்ததுதான் பகீர். நான் கேட்கிறதை எல்லாம் நீங்க செஞ்சிக் கொடுக்க முடியலை. பிராடக்ட் சுமாராதான் வரும்என்று கைவிரித்து அழவைத்திருக்கிறார் இயக்குநர்.
இதையெல்லாம் கேட்க நல்லாவா இருக்கு?
பதினைந்து ரூபாய் திருட்டு டிவிடிக்கு மக்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்களை இழுத்து மூடி திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸுகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வருடா வருடம் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி மோசமான தரத்தில் மொக்கைப் படங்களை எடுத்து வெளியிடுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லாப் பிரச்னைகளையும் தற்காலிகமாவது மூட்டை கட்டிவிட்டு தயாரிப்பாளர்களும், படைப்பாளிகளும், கலைஞர்களும் ஒன்று சேர்ந்து தாங்கள் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி சினிமாவை காப்பாற்ற வேண்டிய நேரமிது. இல்லாவிட்டால் கோவணமும் மிஞ்சாது.
பெரும் அழிவிலிருந்து ஊரையோ / உலகையோ சினிமாவில் ஒரு ஹீரோ காப்பாற்றுவான்.
இது கற்பனைதான். ஆனால், இதேதான் நிஜத்திலும் இப்போது நடந்தாக வேண்டும். அப்போதுதான் திரையுலகம் பிழைக்கும்.
யெஸ், ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லது தயாரிப்பில் பங்கேற்று லாபத்தையோ நஷ்டத்தையோ எது வந்தாலும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இது ஒன்றும் புதிய யோசனை அல்ல. தெலுங்கு, இந்தியில் தொடங்கி ஹாலிவுட் வரை இப்படித்தான் நடக்கிறது. நம்புங்கள், இந்திக்கு அடுத்தபடி அதிக லாபக் கணக்கு காட்டும் தெலுங்கில், முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நால்வரின் சம்பளம் படம் ஒன்றுக்கு எவ்வளவு தெரியுமா? ரூ.14 கோடிக்குள்தான்.
தமிழிலும் இந்த நடைமுறை வந்தால்தான் இண்டஸ்டிரி பிழைக்கும்.


(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

"போனால் போகட்டும் போடா"

"போனால் போகட்டும் போடா"
டீக்கடை fm பாடுகிறது, மெல்ல சிரிக்கிறார்
வயதான முனுசாமி...
எதற்காகவோ துயரம் கொண்ட அவர் மனம்
சற்று லேசாகி இருக்க கூடும்...
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்"

PB ஸ்ரீனிவாஸ் குரலின் அடுத்த பாடலை
முழுதும் கேட்டு விட்டு,
மடக்கென டீயை குடித்து விட்டு கையை வீசி நடக்கையில்
அவரின் நடை சற்று
உற்சாகமானதாகவே

இருப்பதாய் தோன்றுகிறது

The Way Home இதுவரை பார்க்காமல் இருப்பவர்களுக்காக

அன்பின் முழு பிரியத்தால் கரைந்து போக விரும்புபவர்களுக்கு என்னால் ஒரு கொரிய படத்தை சொல்ல முடியும்.

நமது காக்கா முட்டைதான் தமிழில் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன், அதை விடவும் குறைவான பணத்திலேயே எடுக்க பட்டிருக்க கூடும். 
பெண் இயக்குனர் லீ ஜியாஸ் ஹியாஸ் in 2002ல் வெளிவந்த The way Home படத்தை பற்றிய ஒரு பார்வை, இது உலக அளவுக்கு திரைப்படம் எடுக்க சிறந்த திரைக்கதை போதும் என நிரூபித்த படம். பிரியத்தின் மொழி உலகெங்கும் ஒன்று தானே? அந்த பாட்டியும் பேரனும் உலகில் எங்கோ மூலையில் இருந்தால் என்ன, நாமும் நமது பாட்டியுமாக இருந்தால் என்ன?

பெரிய வசனங்களோ, அறிவுரைகளோ, சண்டை காட்சிகளோ, பிரமாண்டங்களோ, திடீர் திருப்பங்களோ இல்லாமல், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜீடோங்க்மா என்ற குக்கிராமத்தில் வாழும் ஒரு பாட்டியையும் அங்கு குடியிருக்கும் எளிய மனிதர்களையும் மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டது. 
ஒரு நல்ல புத்தகம் போல, இசை போல, பெரு விருந்து போல, கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பார்க்க வேண்டிய படம், அவசரங்களை பதட்டங்களை தூர தள்ளி வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்தீர்கள் எனில் உங்களுக்குள் வேறொரு உலகத்தை இது திறந்து வைக்கும்



கதை:
தென் கொரியாவின் மிக பின் தங்கிய ஒரு கிராமம்

தென் கொரியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு ரயிலிலும், பின்னர் ஒரு பழைய மினி பஸ்சிலும் ஒரு நகரத்து morden அம்மாவும், கிராமம் என்றால் எனவென்றே தெரிந்திறாத ultra morden சிறுவன் சாங் வூவும் செல்கின்றனர்.

அடுத்து அவர்கள் அந்த மலை கிராமத்தில் நடந்து சென்று ஒரு சிறு வீட்டை அடைகிறார்கள். ஒரு சிறு அறை மட்டுமே இருக்கும் குடிசை அது. காது மட்டுமே கேட்கும், வாய் பேச இயலாத தொண்ணூறு வயது பாட்டி அங்கு இருக்கிறாள்.

வேலை தேடிகொண்டிருப்பதால் சாங் வூவை பாட்டியிடம் விட்டு விட்டு தாய் கொரியா நகரத்திற்கு சென்று விடுகிறாள். அவனுக்கு பாட்டியை சுத்தமாக பிடிக்க வில்லை, அவள் தரும் உணவுகளை தொட்டு பார்க்க கூட அருவருப்பு கொண்டு தான் கொண்டுவந்த நொறுக்கு தீனிகளை மட்டுமே உண்கிறான்
எந்த நேரமும் வீடியோ கேம் இல் மூழ்கி இருக்கும் அவன்.. பாட்டியை கிறுக்குஎன்றும் ஊமைஎன்றும் வீட்டு சுவரில் எழுதி வைக்கிறான்.
வயதான பாட்டி துணி தைக்க ஊசியில் நூலை கோர்த்து தர சொல்லி பேரனின் உதவியை நாடுகிறாள். மிகுந்த சலிப்பிற்கு இடையே அவன் கோர்த்து தருகிறான். தான் விளையாடிகொண்டிருந்த வீடியோ கேம் இன் பாட்டரி தீர்ந்து போகிறது, வேறு பாட்டரி வங்கி தரும்படி பாட்டியிடம் கேட்கிறான். பாட்டிக்கு புரியாததால் பைத்தியம் செவிடு என திட்டுகிறான்.

கிராமத்தில் ஒரு மாடு முட்ட வரும்போது ஒரு சிறுமி அவனை காப்பாற்றுகிறாள் அவளை தோழியாக்கி கொள்ள தன்னை அழகாக்கி காட்ட, பாட்டியிடம் முடி வெட்டி விட சொல்கிறான். முடி வெட்டும் போது தூங்கி விடும் அவன், கண் விழித்து பார்க்கும் போது தலையை ஒட்ட வெட்டி விட்டுள்ளது கண்டு அழுதபடி பாட்டியை திட்டுகிறான்.

அவன் கொண்டு வந்த தீனி தீர்ந்ததும், கென்டக்கி ப்ரய்ட் சிக்கன் வேண்டும் என சைகையில் கேட்க மழைக்குள் அந்த தள்ளாத வயதில் மழையில் நடந்து சென்று அவனுக்காக கோழி வாங்கி சமைத்து கொடுக்க, அது கென்டக்கி ப்ரய்ட் சிக்கென் அல்ல என சாப்பிட மறுத்து விடுகிறான். பின்னரவில் பசி எடுக்க அதே சிக்கனை கொஞ்சம் சாப்பிட ஆரம்பிக்க சுவை பிடித்து போய் முழுதும் சாப்பிடும் காட்சிகளில் இருந்து படம் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது

அவனுக்கு விளையாட பாட்டரி தேவையாய் இருப்பதை பற்றி புரிந்து கொள்ளும் பாட்டி, தான் வளர்த்து வந்த செடியில் பறித்த காய்கறிகளை விற்க அருகில் இருக்கும் சந்தைக்கு பேரனையும் கூட்டி கொண்டு பஸ்சில் ஏறி செல்கிறாள். அங்கு அவனுக்கு, பாட்டரியும், காலணியும், வாங்கி தருகிறாள்.
அந்த கிராமத்தில் உள்ள எளிய மனிதர்களையும் அதனூடே சொல்லி இருப்பது அற்புதம், பாட்டி பண்டங்களை வாங்கும் போது, கடைகாரர்கள் பாட்டிக்கு சிறிது சேர்த்தே தருவதுடன், அவளின் நலம் பற்றி அக்கறையாக விசாரிப்பதை பேரன் வியப்புடன் பார்ப்பது காட்சி சுவை

அதன் பின் சாக்லெட் வங்கி தர சொல்கிறான். இருக்கிற பணம் எல்லாம் செலவு செய்து அவனுக்கு வாங்கி தந்து அவனை பஸ்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். பாட்டியின் கிராமத்துக்கு வந்து சேரும் பேரன்.. பாட்டியை காணாது பஸ் நிறுத்தத்திலேயே அமர்ந்து பாட்டி வரும் பஸ் நோக்கி காத்திருக்கிறான். நடந்து வருவதை காண்கிறான்.

தனக்காக செய்த தியாகங்கள் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உரைக்க, அழுகிறான்... பின்னர் பாட்டி மேல் நேசம் கொள்ள தொடங்குகிறான்
அவனுடைய அம்மாவிற்கு வேலை கிடைத்து விட்டதாகவும் அவனை கூட்டி செல்ல வருவதாகவும் கடிதம் வருகிறது.

பாட்டியை பிரிய மனமின்றி அவன் செல்லும் நாளின் முதல் நாள் இரவு.. பாட்டிக்கு ஏகப்பட்ட நூல்களில் ஊசிகள் கோர்த்து வைக்கிறான்.
பாட்டிக்கு அவசரம் அவசரமாக கடிதம் எழுதி பழக்க முயற்சி செய்கிறான், நடுங்கும் விரல்களை கொண்டு எழுத இயலாமல் சோகமாய் அவனை பார்க்கிறாள் பாட்டி

பாட்டிக்காக தானே வாழ்த்து அட்டைகள் செய்து அதில் அனுப்புனர் பகுதியில் பாட்டி என்றும் பெறுநர் பகுதியில் அவன் பெயரை எழுதி ஒவ்வொரு மாதமும் தனக்கு அனுப்புமாறும் அப்போது அவள் நலமாக இருக்கிறாள் என தான் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறான்.

இறுதிக்காட்சி முழுவதும் அன்பால் கரைந்து போகும் படி இருக்கிறது,
அவன் ஊருக்கு புறப்பட்டு செல்லும் நாளில்,பஸ்சில் ஏறிய பேரனையே பார்த்தபடி நிற்கும் பாட்டியும், பார்க்க இயலாமல் தலை குனித்து கொள்ளும் பேரனும், அதன் பின் பஸ்ஸின் பின்புறம் ஓடி வந்து கண்ணாடி வழியே மன்னிப்பு கேட்டபடி அவன் பாட்டியை பிரிவதும்... கூன் போட்டபடி குச்சியை வைத்து மெல்ல மலை மீது ஏறும் பாட்டியும், மனதை கணக்க வைப்பதோடு அன்பின் முழு ஆழத்தையும் உணர்த்தி செல்கிறது

அழுகைக்காக எடுக்கபட்ட படம் இதல்ல, என்றாலும் இறுதி காட்சிகளில் கண்ணீர் துளி வந்து விடுவதேன்னவோ நிஜம்தான். 



புரிந்து கொள்ளப்படாமலேயே போய்விடும் எளிய அன்பே பெரும்துயரம் என படித்திருக்கிறேன். படம் முடிந்த பிறகு நம்முள் மெல்லிய நேசம் அருகில் உள்ளவர்கள் மீது பூக்க துவங்கும்... நம்முள் புதைந்து கிடக்கின்ற மனித தன்மையை வெளிக்கொண்டு வருவதே இந்த படத்தின் வெற்றி . 

இதே பெயரில் ஒரு ஆங்கில படம் ஒன்று வந்திருக்கிறது, அதை தவிர்த்து விட்டு the way home korean movie என கூகுளில் தேடுங்கள். 


தவற விட வேண்டாம் youtubeலேயே subtitle உடன் காண கிடைக்கிறது